Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!

2

விசு, இப்போதுதான் பவானியை பார்க்கிறான்.. அதைவிட பவானியின் நிலை மோசம். ம்.. விசுவிற்காவது தான் ஒரு பெண்ணின் கழுத்தில் செயின் அனுவித்திருக்கிறேன்.. ‘அவளை’ நான் திருமணம் செய்துக் கொள்கிறேன் என உறுதியை கொடுத்தேன் என் அங்கிளிற்கு’ என தெரியும். 

ஆனால், பவானிக்கு ஏதும் தெரியாது அப்போது. அரை மயக்கத்தில் இருக்கும் போது லேசாக கண்விழித்தும், உணர்வு வந்தும் வராத நிலையில்.. இருக்கும் போது, எதோ தன்னை சுற்றி நடக்கிறது என மங்கிய அறிவுக்கு தெரிய.. அப்போதுதான் நடந்திருக்கும்.. என அவளாக எண்ணிக் கொண்டதுதான். அதன்பின் அவளின் அன்னை சொல்லி தெரிந்ததுதான் இந்த சங்கிலி தன் கழுத்தில் வந்த வரலாறு. ஆக, பவானிக்கு விசுவை தெரியாது இப்போது வரை. 

ஆனால், இப்போது, சற்று முன்.. தன் அன்னை சொன்ன வார்த்தையில் வந்திருப்பது ‘தன் கழுத்தில் செயின் அணிவித்தவன்தான்..’ என தெரிந்துக் கொண்டது பெண்மனம். ஆனால், பெரிதாக எந்த உணர்வும் தாக்கவில்லை அவளை. ஏன்! ‘யாரது’ என கூட பார்க்கத் தோன்றவில்லை பெண்ணுக்கு. அவளுக்கு, அவள் இழந்த சொர்க்கத்தின் சோகம் மட்டுமே தெரிந்தது. அது சொர்க்கமா! நரகமா! என கேள்வி இருந்தாலும்.. அந்த வலி!!.. எப்போதும் ஒன்றுதானே, அவளுக்கு அது மட்டுமே.. தெரிந்தது, அவளின் கண்ணில். வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.. ஆசையும் இல்லை. தன் தந்தை அழைக்கவும் வந்து நின்றாள் அமைதியாக.

விசு, தான் செயின் அணிவித்த பெண்ணின் முகத்தை பார்த்தவனுக்கு.. முதலில் தெரிந்தது அவளின் சோக ஜாடைதான். அப்படிதான் தோன்றியது அவனுக்கு. ‘சற்றுமுன் வரை.. தன் நினைவிலேயே வராதவள் முகத்தை கொஞ்சம் நன்றாக பார்க்க வேண்டும்.. மனதில் அவளை இருத்திக் கொள்ள வேண்டும்’  என எண்ணி.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் அவள் வந்து சட்டென அமரவில்லை.. ஈர்க்கவில்லை. எதோ  சோக முகமாக இருப்பதாகத்தான் தோன்றியது அவனுக்கு.

ஓரிரு நிமிடம் தனியாக இருந்த இருவருக்கும் ஏதும் புரியவில்லை. திருமணம் செய்ய போகிறவர்களுக்கு இருக்கும் ஒரு குறுகுறுப்பு இல்லை.. மனதில் பல குழப்பங்கள் இருவருக்குமே.. ஈர்ப்பில்லா நிலையில், கட்டாயத்தில் இருவரும்.. அதனால், ஒரு அமைதிதான் அங்கு.

எத்தனை நேரம் இப்படியே இருப்பது.. தனக்கு எதிரே நிற்பவள் பேசும் வழியை காணோம் என உணர்ந்த விசு “உட்காருங்க ப்ளீஸ்..” என்றான் தன்மையான குரலில்.

பவானி, உயிர் வந்த சிலையாக “அஹ… இ…இல்ல, சொல்லுங்க.. எ..என்ன பேசணும் என்.. என்கிட்ட” என்றாள் மழலையாக, குரல் அத்தனை இனிமையாக இருந்தது. ஆனால், அதை ரசிக்க முடியவில்லை அவனால், அந்த குரலில் ஏன் இத்தனை தடுமாற்றம்.. ஏன் இவ்வளவு தயக்கம்.. எனதான் எண்ணம் ஓடியது.

விசு “இல்ல.. எனக்கு டைம் ஆச்சு, அல்ரெடி நான் லேட்.. எனக்கு சீக்கிரம் போகனும். ஒரு ஐந்து நிமிஷம், நீங்க என்ன படிக்கிறீங்க என்னான்னு.. உங்க டிட்டைல் கேட்கணும்.. உட்காருங்க ப்ளீஸ்” என்றான் இப்போது அழுத்தமானக் குரலில்.

பவானி “ஒரு நிமிஷம்” என சொல்லி விருட்டென மேலே சென்றாள் பெண்.

விசுவிற்கு, சட்டென அவள் தன்னை அவமதிப்பதாக தோன்றிவிட்டது.. ‘எனக்கு எவ்வளவு அவசர வேலை இருக்கு.. இவளின் வரவிற்காகவாக நான் நிற்க வேண்டும்.. என்னை யாரென தெரியாமல் இவள் பேசுகிறாள்..’ என தோன்றியவிட்டது. ‘நான் அங்கிள்க்கு செய்ய கடமைபட்டிருக்கிறேன்.. ஆனா, இவள்..’ என எண்ணிக் கொண்டே கோவம் தலைக்கும் கழுத்துக்கும் இடையே பயணிக்க, அமர்ந்திருந்தான்.

பவானி, தன்னுடைய காலேஜ் id கார்டு எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.. அவனின் முன் இருந்த டீபாய் மேல் வைத்தாள்.. “இதுல என் டிட்டைல் இருக்கு.. இன்னும் ஹால்டிக்கெட் வாங்கணும்.. வெட்னேசஸ் டே எக்ஸாம்..” என்றாள் சின்னக் குரலில்.

இப்போது விசு அவளையே பார்த்தான்.. அந்த id கார்டை இன்னமும் பார்க்காமல். மெல்லிய தேகமாக இருந்தாள்.. முகம் சோகமாக இருந்ததே தவிர.. வேறு பாவனையை காட்டாவேயில்லை.. முக்கியமாக அலட்சியபாவம் அதில் இல்லை.. என தோன்றிய பின்புதான், விசு அந்த id கார்டை பார்த்தான்.

அந்த id கார்டை பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்தான்.. அதில் இருந்த அவளின் புகைப்படத்தில் அவள், சிரித்த முகமாக,  கண்ணில் உயிர்ப்புடன்.. கன்னத்து குழியுடன்.. அவளின் முகம் மலர்ந்து.. அவளின், மனம் குழந்தை.. என சொல்லிக் கொண்டிருந்தது, அந்த சின்ன புகைப்படம்.

தன் வலக்கையை நீட்டி.. மெதுவாக அந்த கார்டை எடுத்தான் விசு.. ‘இது நீயா’ என அனிச்சையாக கேட்க தோன்றிவிட்டது அவனிற்கு. தன்னைத்தானே அமைதியாக்கிக் கொண்டு..  தன் போனெடுத்து போட்டோ எடுத்துக் கொண்டான் முன்னும் பின்னும். பின் அந்த id கார்டை, அவள் புறமாக சற்று நகர்த்தி வைத்தான்.

பின் எழுந்துக் கொண்டான் “இப்போவே பேசிட்டு, அங்கிள் கிட்ட சொல்றேன்.. நீங்க போயிட்டு வந்துடுங்க..” என்றவன் “அங்கிள்” என அழைத்தான்.

பவானி உள்ளே செல்ல எத்தனிக்க.. விசு “எ..எப்போ எக்ஸாம் முடியுது..” என்றான்.

பவானி பதில் சொல்லாமல் திரும்பி அவனை இப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.. அதில் ‘ஏன்?’ என்ற கேள்வி இருந்தது.

விசு அழுத்தமாக அவளை பார்த்துக் கொண்டே நின்றான், பதில் சொல்லாமல்.

பவானிக்கு, அவனின் அழுத்தமான பார்வை.. அவளின் குற்றரயுணர்வை அதிகமாக்கியது.. அந்த பார்வையை அலட்சியம் செய்ய  முடியாமல் தேதியை சொன்னாள்.

விசு “தேங்க்ஸ்” என்றான்.

பவானி தலையசைத்து.. உள்ளே சென்றாள். 

பத்மநாபன் வந்து சேர்ந்தார். விசு “அங்கிள், இப்போ பேசிடறேன்.. கோவைதான் போறேன்.. நேரில் போய்கூட பேசிடறேன். நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க. இன்னும் ஒருமணி நேரத்தில் கால் பண்றேன் உங்களுக்கு..” என்றான்.

செந்திலும் பத்மநாபனும் இந்த நேரத்தில் கல்லூரியில் பேசி இருந்தனர். பத்மநாபனுக்கு கல்லூரி முதல்வரை தெரியும். மேலும் அன்று நடந்தவைகளில் பெண்ணிற்கு களங்கம் வரமால பார்த்துக் கொண்டார்,கல்லூரி முதல்வர். பத்மநாபனும், காலேஜ் பெயரை வெளிவிடாமல் பார்த்துக் கொண்டார். அதனால், இருவருக்கும் அறிமுகமே.. எனவே, தன் எண்ணிலிருந்து அழைத்து பேசி இருந்தார் பத்மநாபன்.

மேலும், தன் மகள் சம்மந்தப்பட்ட விஷயம்.. எனவே பொறுப்பாகதான் இருப்பார்.. இப்போதும் அந்த நினைப்பில்தான் விசுவை இங்கே வர வைத்ததும். 

போன் பேசி முடித்ததும் செந்தில் ஆர்வமாக தன்னை பார்ப்பதை உணர்ந்தார் பத்மநாபன். செந்தில் இங்கே வருவதற்கு முன் ஒரு ப்ரைவேட் டிடக்டிவ்வாக இருந்தவர்.. அவரை.. இங்கே விசுவிற்கு என பேசி.. அவரின் வேலையை விட செய்து, இங்கே சேர்த்தவர் பத்மநாபன். 

அதனால், செந்திலால் ஓரளவு பத்மநாபனின் நடவடிக்கையை புரிந்துக் கொள்ள முடிகிறது. செந்தில் “பத்து அண்ணா, விசுவிற்கு.. அந்த புது ப்ரண்ட் வேலையே அதிகம். இப்போது கூட அந்த மீட்டீங்தான் போய்கிட்டு இருக்கோம்.. அதனால அவருக்கு, நேரம் இல்ல அண்ணா, நீங்க.. பாவம் அவரை தப்பா நினைக்காதீங்க அண்ணா, நான் சொல்ல வேண்டியது இல்லை உங்களுக்கு..“ என சொல்லி நிறுத்திக் கொண்டார்.

பத்மநாபன் யோசித்தார். ‘காலையில் ஒரு கோவத்தில்.. அவசரத்தில் சற்று பிசகிவிட்டேன் என எண்ணிக் கொண்டார். ஆனால், ஒருபக்கம் இத்தனைநாள் சென்று, இதை சாக்காக வைத்துக் கொண்டு.. அவனின் நிலையை தெரிந்துக் கொள்ள எண்ணுகிறேன்’ என யோசனை ஓடியது அவருள். இப்போது செந்தில் சொல்லுவதும் ஓரளவு புரிய அமைதியாக நின்றார்.

விசு அழைக்கும் சத்தம் கேட்கவும், பத்மநாபன் உள்ளே வந்தார். செந்தில் பேப்பரெடுத்து.. அமர்ந்துக் கொண்டார்.

பத்மநாபன், ஹாலில் விசுவின் அருகில் வந்து, விசுவை ஆராய்ச்சியாய் ஓரிரு நிமிடம் பார்த்தார். பெண்ணை பெற்றவர் என அந்த பார்வை காட்டிக் கொடுத்தவர்.

விசுவிற்கு, தன் அங்கிளிடம் என்ன சொல்லுவது என தெரியவில்லை.. அவரின் ஆதங்கம் தெரியும்.. ஆனால், இன்னமும் ஏதும் உறுதியாக சொல்ல முடியவில்லை அவனால். தங்களிடமிருந்து நட்பை பெற்ற ஒரே காரணத்திற்காக இத்தனை வருடங்கள் எங்கள் குடும்பத்துடனேயே.. உறுதுணையாக நிற்பவர், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என தன்னை பொருட்படுத்தாமல், எங்களுக்கு துணையாக நின்றவர்.. இப்படி என்னை எதிர்பார்ப்பாய் பார்ப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை’ என எண்ணிக் கொண்டு நின்றான் விசு.

விசு “அ..அவங்க எக்ஸாம் முடியட்டும்,  நா..நான் எப்படி சொல்றது, உங்க வீராவோட பையன்.. நான்..” என எதோ சொல்ல வந்து தடுமாறி நின்றான். 

Advertisement