Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

17

கணவனின் பார்வையும் இந்த பேச்சும் பவானியை குழப்பத்திலிருந்து காத்தது எனலாம்.

ம்.. பவானிக்கு, இந்த நாட்களில் கொஞ்சம் மனதை உறுத்திய விஷயம் ‘ஏன் என்கிட்டே ஏதும் கேட்க்கலை அவர்.. எப்படி, என்னை திருமணம் செய்துக் கொண்டார்.. என் அப்பாவிற்காகவா?.. ம்.. அப்படிதான். நான் சங்கடப்படுத்துகிறேனா? அதுதான் எங்களின் இந்த ஒட்டா தன்மைக்கு காரணமோ.. இருக்கும்.. அவருக்கு விருப்பம் இருந்திருக்காது.. எ..என்னை பற்றி எல்லாம் தெரியும் என்றாரே.. நான் கேட்ட போது கூட பதில் சொல்லாமல் தானே இருந்தார்.. ஆக, இந்த திருமணம் ஒரு கமிட்மென்ட்..’ என எண்ணிக் கொண்டிருந்தவளின் மனதிற்கு கணவனின் பேச்சு.. இந்த குழப்பங்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்தது, இந்த ஒரே இரவில். 

இரவு முழுவதும் பவானிக்கு மனதில் ஒரு குறுகுறுப்பு.. புதிதான ஒரு உணர்வு. அதிகாரம் கொண்டவன்.. அன்பு காட்டும் போது ஒரு நம்பிக்கை வருமே.. அதுதான் ஸ்ரீ சொல்லுவானே ‘டிரஸ்ட் மீ.. வனி..’ என்பானே.. அது எப்படி இருக்கும் என முழுதாக உணர்ந்தாள் பவானி.

பெண் முதலில் தேடுவது.. உணர்வது..  இதமான பாதுகாப்பைதான். அதை கணவனாக சத்தமில்லாமல் உணர்த்தினான் விசு. இந்த நேசக்கரம் அவளை கொஞ்சம் அழகாக்கியது. முன்பு விசுவை கவனிக்காமல் இருக்கும் பவானியில்லை இவள். சொடக்கிடும் நேரத்தில் நாடகத்தில் காட்சி மாறுமே அப்படி மாறியது அவளின் காட்சிகள்.

இரவில், தானே உணவை சமைக்க தொடங்கினாள்.. கணவனுக்காக. காலையில் எழுந்து.. என்ன உடற்பயிற்சி செய்கிறான் என ஓர கண்ணில் கணவனை பார்க்கவும் தொடங்கி இருக்கிறாள். அவ்வபோது அவனின் கண்களையும் இவளின் கண்கள் முகாமிடுகிறது இந்த ஒரு பத்து நாட்களில். ஆக, பயம் என்ற நிலை தாண்டி அந்த கண்களில் எதையோ தேடவும்.. ஆராயவும்.. தொடங்கினாள் பெண்.

(ஓஷோவின் ஒரு கவிதை.. (கருத்து)

“முழுமையை ருசிக்க வேண்டுமா! 

அன்பை ரசித்து பார்!..

முமுமையான அன்பை பெற – 

ஒரு ரோஜா மலரிடம் போ!..

ரோஜா மலர்கிறது!.. அன்பை போல.. 

முழுமையாக மலர்கிறது!.. அன்பை போல..

அன்பு முழுமையானது!… ரோஜாவை போல..

அதில் நிரந்தரத்தை தேடாதே!..

அதில் நிரந்தரத்தை தேடாதே!..

நிரந்தரம் வேண்டுமென்றால் நீ! 

காகித பூக்களைத்தான் நாட வேண்டும்..”

அன்பு அப்படிதான் முழுமையாக வசப்படும்.. வசப்படுத்தும். அன்று அவள் கொண்டதும் முழுமையான அன்புதான், அதில் சந்தேகமே இல்லை.. இப்போது அவள் இதயம் திறந்து காத்திருப்பதும் கணவனின் முழுமையான அன்பிற்காகதான்.

நாம் தான் அன்பு என்பதை உடலின் வேதியளோடு தொடர்புப்படுத்தி காதல் என சொல்லி.. இது சரி.. இது தவறு.. என நம் லௌவ்கீக உலகுக்கு தக்க பிரித்துக் கொள்கிறோம். அன்பு என்பது இயக்க சக்தி.. ஒரு பெண்ணுக்கு முதலில் பெற்றோர் மீது வரும்.. அடுத்து தம்பி மீது.. தங்கை மீது வரும்.. அடுத்து கணவன் மீது வரும்! அடுத்து குழந்தை! அதற்கு அடுத்த, அடுத்த  குழந்தை.. தான் செய்யம் வேலை.. அடுத்து கடவுள்.. அடுத்து எதிர்வீட்டு குழந்தை.. இன்னும் நாட்கள் செல்ல செல்ல  பேர குழந்தை என அன்பு முழுமையாக எல்லோரையும் வசப்படுத்தும்.. வசப்படும்.

எனவே முன்பு பவானி, ஸ்ரீயை அன்பு செய்ததும் முழுமையானதே.. அதை அவள் இழுக்காக எண்ண தேவையில்லை தானே.

அடுத்தடுத்த  நாட்கள் இருவருக்கும் இதமாக சென்றது.  இரவில் உணவு பரிமாற பவானி காத்திருந்தாள்.. தினமும்.  விசுவிற்கு என்னமோ அவளை தன்பக்கம், அதாவது மற்றைய சிந்தனையிலிருந்து தன்னை நினைக்க வைத்து விட்டதாக.. பார்க்க.. வைத்துவிட்டதாக எண்ணம். 

ம்.. காலைவிஷ், இரவில் சாப்பிட்டியா என்பதும்.. அவள் கல்லூரி செல்ல தொடங்கி இருந்ததால்.. இரண்டு வார்த்தை ‘எப்படி போகுது காலேஜ்..’ என விசாரிப்பதும்.. என விசு அவளை தன் பார்வை வட்டத்துள் கொண்டு வந்துக் கொண்டான்.

இப்படி சின்ன சிரிப்பு, காலை வாழ்த்து.. அவ்வபோது அவளை பார்வையால் தொடர்வது.. ஆராய்வது என விசுவும் பவானியிடம் தன்னை உணர்ந்த்திக் கொண்டிருந்தான்.

விசு, தன் அம்மாவின் கெடுபிடியால் பெங்களூர் செல்லவில்லை.. ‘இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பேன்.. என் மனைவியோடு கூட தனியாக வெளியே போக முடியாதா? என்னால். எத்தனை நாட்கள் பார்க்கிறேன்’ என தன் அம்மாவிடம் மனதுக்குள் சண்டை இட்டுக் கொண்டான். அதனால் பிடிவாதமாக தன் பயணத்தை நிறுத்திக் கொண்டான் விசு.

வேதா கூட “ஏன் டா.. இரண்டு பேரும் ஃப்ளைட்டில் போயிட்டு வாங்களேன்.. கார் வேண்டாம் டா..” என்றார் தன்மையானக் குரலில்.

மகன் “இல்ல, பரவாயில்லை, நான் பார்த்துக்கிறேன்..” என்றவன். அப்படியே இருந்தும் கொண்டான். கணவன் மனைவி இருவரும் ஷாப்பிங் என எங்கும் செல்லவில்லை. பாவம் வேதாவிற்கு கொஞ்சம் சங்கடமாக போனது.. தன்னால் பிள்ளைகள் வெளியே போகவில்லையோ என தோன்றியது.

தன் ஆற்றாமையை மருமகளிடம் கொட்டினார் வேதா. பவானி “அப்படி எல்லாம் இல்லை அத்தை. எனக்கும் காலேஜ் ஆரம்பிச்சிடுச்சு, அதான் அவர் போக வேண்டாம்ன்னு விட்டுட்டார்.. இன்னொரு தரம் கண்டிப்பா நாங்க போவோம்.. நீங்க பீல் பண்ணாதீங்க” என சமாதானம் செய்தாள்.

வேதாவிற்கு கொஞ்சம் மனது அமைதியானது, மருமகளின் சமாதானமான பேச்சில்.

பவானிக்கு, கல்லூரியும் தொடங்கி ஒரு வாரம் ஆகியிருந்தது. அவளே தன் ஸ்கூட்டியில் பயணிக்கிறாள்.. ஒன்றிரண்டு நட்புகளும் கிடைத்திருந்தது. தினபடி வேலைகளை நேர் செய்துக் கொண்டிருக்கிறாள் பெண்.

கொஞ்சம் அதிகாலையில் எழ பழகியிருக்கிறாள்.. மாமியாரோடு பழகிய யோகாவை முயன்று செய்துக் கொண்டிருக்கிறாள்.. அதன்பின் அவள் குளித்து கிளம்பவே நேரம் சரியாக இருந்தது, அதனால் டிபன் வேலையில் அவளால் நிற்க முடியாமல் போனது, வேதாதான் பார்க்கிறார் இப்போது. 

எனவே பழையபடி, அந்த வேலையை தான் செய்ய.. தன்னை தானே நேர் செய்துக் கொண்டிருக்கிறாள் பெண்.

இன்றும் அப்படியே, எப்படி.. என்ன.. செய்தாலும் அவளால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக கீழே வரமுடிவதில்லை. எனவே, இன்றும் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

விசு, இன்று மதியம் கோவை செல்லுகிறான்.. அவனின் வெளிநாட்டு பயணம் இன்று. எனவே, எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் செய்துக் கொண்டு தன் அறையிலேயே இருந்தான் விசு. 

காலையிலிருந்து விசு, அவளை பார்த்த மயம்.. கண் சிமிட்ட கூட மறந்திருப்பான் போல.. அப்படி பார்வையால் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

பவானி, அமைதியாகத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள்.. ஆனால், விசுவின் பார்வையில் நிதானம் தப்பிக் கொண்டிருந்தது மனையாளுக்கு.

விசு, உடற்பயிற்சி செய்யவில்லை.. குளிக்கவில்லை.. இன்று இன்னமும் கிளம்பவில்லை. எப்போதும்  எட்டரை மணிதான் அவனின் நேரம்.. இன்று, இவனிற்கு அலுவலகம் செல்ல தேவையில்லை.. மதியமாக கிளம்புவதால். அதனாலோ என்னமோ அவசரமாக கிளம்பும் மனையாளை பார்த்துக் கொண்டே அந்த அறையையே சுற்றிக் கொண்டிருந்தான்.

பவானி “சரிங்க, நான் கீழ போறேன்.. பை” என்றாள்.. அவளிற்கு, அத்தை கீழே இருப்பார்களே என எண்ணம். எனவே கிளம்பினாள்.

விசுவிற்கு, ‘என்ன ஏதும் சொல்லாமல் போறா.. கண்டுக்கவே இல்லை, நான் இன்னிக்கு ஊருக்கு போறேன்..’ என ஏதும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.. தன் கைகளை கட்டிக் கொண்டு.

பவானிக்கு, தன் கணவன் எப்போதும் பதில் சொல்லுபவன் இன்று.. ஏதும் சொல்லாமல் இருக்கவும், திரும்பி பார்த்தாள் கணவனை. 

அவனின் முகம் ‘ஒன்றுமில்லை’ என்ற பாவத்தை காட்டினாலும்.. அவனின் அந்த கண்கள்.. இந்த நாட்களில் பழகியதில்.. இப்போது, அவளின் ஆக சிறந்த அடிமையாக இருக்கிறதே.. அந்த கண்கள் அவளை ஊடுருவியது.. சாந்தமாக.. காந்தமாக.

அந்த பார்வைக்குத்தான் எத்தனை சக்தி, பவானி தடுமாறினாள்.. ‘என்ன’ என நெற்றி தட்டிக் கொண்டாள்.. விரல்களில் வியர்வை துளிகள் ஒட்டிக் கொண்டது.. அதை இரு விரலால் தேய்த்துக் கொண்டே.. தன் புருவம் உயர்த்தினாள் ‘என்ன..’ என்பதாக, கணவனிடம்.

அடிமையான அவனின் கண்கள் இப்போது.. திமிறிக் கொண்டு அரசனானது ‘கண்டுக்காமல் போற..’ என ராஜ தர்பாரை கூட்டியது போல. பவானிக்கு வார்த்தைகள் வரவில்லை.. பார்வை புரிந்ததில்.. அமைதியாக நின்றாள்.

விசு, வாயே திறக்கவில்லை.. அவளின் அமைதி பார்த்து.. ராஜபார்வை கொண்ட அவளின் கொண்டவன்.. திரும்பிக் கொண்டான் ஜன்னலை பார்த்து.

பவானிக்கு மனது கேட்க்குமா “என்னங்க.. டைம் ஆச்சு..” என்றாள் பரபரப்பான குரலில்.

விசு ஏதும் சொல்லவில்லை.

பவானி “நான் கீழ போறேன்.. நீங்க சீக்கிரம் வாங்க என்னை ட்ரோப் பண்ண..” என்றாள், அவசரமாக கீழே இறங்கியபடி.

விசு, இப்போது புன்னைகைத்த படியே திரும்பி, அவள் செல்லுவதையே பார்த்துக் கொண்டு நின்றான். விசுவிற்கு, அவள் வாய்மொழியில் அதிகாரமாக சொல்லும் இந்த வார்த்தையும் பிடித்தே இருந்தது.

கடகடவென குளித்து ஒரு ஆம்கட் டி-ஷர்ட்.. ஜீனில் வந்து நின்றான், கீழே. அவன் வரும் போதே.. பவானி  உண்டு முடிந்த்திருந்தாள்.

மகனை பார்த்த வேதா “வா டா, நீயும் சாப்பிடுறீயா..” என்றார்.

விசு “இல்ல ம்மா, டைம் ஆச்சு, அவளை காலேஜ்ஜில் ட்ரோப் செய்ய போறேன் ம்மா” என்றான், அவரிடம் மரியாதைக்காக சொன்னான்.

வேதா “சரி டா.. சாப்பிட்டு போ…” என்றார்.

விசு “டைம் ஆச்சு ம்மா..” என்றான்.

பவானி “டைம் இருக்கும் ங்க, நீங்க சாப்பிடுங்க.. நான் தனியாக போகணும்ன்னா லேட் ஆகும். நீங்க தானே ட்ராப் பண்ண போறீங்க.. நீங்க சாப்பிட்டு வாங்க” என்றாள் பொறுமையான குரலில்.. சொன்னதோடு மட்டுமல்லாமல் அவனிற்கு பரிமாற வந்து நின்றாள்.

விசு “ம்…” என சலித்தாலும் வந்து அமர்ந்தான் உண்பதற்கு.

வேதாவிற்கு கோவம்தான். என்ன இருந்தாலும் மகன், ‘நான் சொல்லி கேட்கவில்லை’ என இயல்பான கோவம் வந்தே வந்தது. சென்று ஹாலில் அமர்ந்துக் கொண்டார், ஏதும் பேசாமல். மனதில் ‘ஒன்னும் செய்ய முடியாது.. இனி இப்படிதான்’ என எண்ணியது. தன்னை, தானே சமாதானம் செய்துக் கொண்டு பேப்பர் படிக்க தொடங்கினார்.

விசு, அவசர அவசரமாக உண்டான். கிளம்பினர் இருவரும் விசு “அம்மா, இவளை  ட்ரோப் செய்துட்டு வந்திடுறேன்..” என்றபடி விடைபெற்று கிளம்பினான். பவானியும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.

நேரம் சரியாக இருந்தது.. விசு மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.. வீட்டில் இருந்த வரை தெரியவில்லை.. நிகழவிருக்கும் பிரிவின் அளவு.. ஆனால், இந்த தனிமையில் புரிந்தது இருவருக்கும்.. மனம் அழுந்திக் கொண்டிருந்தது அதை நினைத்து. 

இவர்கள் இன்னமும் நெருங்கவில்லை.. அப்படியும் சொல்ல முடியாது.. கை நீட்டினால் மற்றொரு கையும் சேர்ந்துக் கொள்ளும் தூரம்தான். ஆனால், படிப்பை நினைத்தும்.. கடந்து வந்ததை நினைத்தும்.. கொஞ்சம்.. நிதானிக்கிறது இருவரின் மனதும். எனவே, வார்த்தைகளில் கூட பெரிதாக பகிர்ந்துக் கொள்ளவில்லை தங்களின் நிலையை.. அதனால், இப்போதும் அதே அமைதிதான் இருவருக்குள்ளும்.

கல்லூரி வந்து விட்டது.. இவர்கள் வந்து விட்டனர்.. தயங்கி யோசித்த நேரத்தில்.. விசு “ஜாக்கிரதை அம்மாவை பார்த்துக்கோ.. பார்த்து வண்டி ஓட்டி போ..” என்றான். 

இன்னும் இறங்கவில்லை பவானி. கணவனின் பேச்சிற்கு தலையசைத்தாள்.. வாய் மொழி சொல்லாமல்.

இருவருக்கும் நடுவில் அமைதி அழுத்தமாக வந்து அமர்ந்துக் கொண்டது. விசுவிற்கு நிறைய ஆசைகள்.. அதைவிட நிறைய பொறுப்புகள். எனவே பொறுமை காத்தான் விசு “பை..” என்றான்.

பவானியும் “பை ங்க…” என்றபடி இறங்கி சென்றாள் கல்லூரிக்கு.. லேசாக கண்ணின் ஓரம் கரித்தது அவளுக்கு.. செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்த விசுவிற்கும் அப்படியே.. மனதில் சின்ன பிரிவின் சாயல்.

“அருகினிலே வருகையிலே

துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்..

முதல்முறை இன்று நிகழ்கிறதென்று..

நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே..”

நாட்கள் வேகமாக சென்றது.

விசு வெளிநாடு சென்று இன்றோடு ஒரு வாரம் முடிந்தது. செந்தில்தான் வந்து தினமும் வேதாவை மில்லிற்கு அழைத்து செல்லுகிறார்.

எப்போதும் அப்படிதான் விசு, இல்லாத நாட்களில் வேதா மில்லிற்கு சென்று பழக்கம்தான். எனவே அப்படியே இப்போதும் நடந்தது.

காலையில் மருமகள் கல்லூரிக்கு சென்றதும்.. வேதா மில்லிற்கு கிளம்பிவிடுவார். விசு தினமும் இரவில் இருவருடனும் பேசுவான்.. ஆனாலும் இங்கே மாமியார் மருமகள் இருவருக்கும் பொழுது போகவில்லை விசு இல்லாமல்.

இன்று, கல்லூரி முடித்து வீடு வந்தாள் பவானி. ஆனால், முகத்தில் என்னமோ பதட்டம்.. செக்யூரிட்டியிடம்  “யார் வந்தாலும் உள்ளே விடாதே..” என சொல்லி வீட்டிற்குள் சென்றாள்.

ஆனால், இவளின் பட்டத்திற்கு தேவையே இல்லாதது போல.. யாரும் உள்ளே வரவேயில்லை.

வேதா வீட்டிலில்லை. எனவே, பவானிக்கு என்ன செய்வது என தெரியவில்லை.. தனது செப்பலை பார்த்தாள்.. அத சொன்னது நடந்த நிகழ்வை.

கல்லூரி முடித்து வரும் வழியில்.. இவளை ஒரு டுஸ்ட்டர் ப்பாலொவ் செய்தது. முதலில் கவணிக்கவில்லை.. பின்தான், கவனித்தான்.. நீண்ட தூரமாக அந்த கார் தன்னை பாலோ செய்வதை.

இவள் வீட்டிற்கு திரும்பும் திருப்பத்தில் இவளை அந்த கார் ஓவர் டேக் செய்ய.. வண்டியை நிறுத்தாமல்.. கண்மண் தெரியாமல் அந்த காரை தாண்டிக் கொண்டு.. சின்ன கேப்பில் தாண்டி வந்துவிட்டாள்.

அதன்பின் அந்த கார் எங்கே சென்றது என தெரியவில்லை.. இருபது மீட்டர் தூரத்தில் வீடு என்பதால் நேரே உள்ளே வந்துவிட்டாள் பெண். ஆனால், என்ன செய்தாள் எப்படி வண்டியை திருப்பினாள் என தெரியாததால்.. அவளின் செப்பல் எல்லாம் அவள், காலை ஊனி வண்டி வேகத்தில் நகர்ந்ததில் பிய்ந்து போனது.. மற்றபடி, இவளிற்கு ஏதும் அடி இல்லை.

பவானி என்ன செய்வது.. ஏன் தெரியாமல் தன் படபடப்பு அடங்க அமர்ந்திருந்தாள், சற்று நேரம். யோசனை தன் மாமியார் சொல்லி விஷயத்திற்கு சென்றது.. அத்தோடு, ஸ்ரீ எனவும் ஆராய்ந்தது.

 

Advertisement