Advertisement

விசு “நேத்து நீதானே என்னை பேர் சொல்லி கூப்பிட்ட.. இப்போ என்ன திடீர் மரியாதை..” என்றான், குரல் கொஞ்சம் விசாரணையாக வந்தது.

பவானிக்கு, அந்த குரலில் கொஞ்சம் பயம் வர.. தன் தலைமுடியை உதறிக் கொண்டே.. லேசாக அவனின் கண்களை பார்க்க எத்தனித்தாள்.. ‘சும்மா சொல்றாரா.. இல்லை, உண்மையாகவே கோவப்படுறாரா..’ என பார்க்க எத்தனித்தாள்.

அவன் உடல்மொழி இளகி இல்லை.. அதனால் கண்களை பார்க்க முயன்றாள்.. ஆனால், என்ன முயன்றும் அவனின் கண்களை காண முடியவில்லை அவளால். எனவே, அமைதியாக “சாரி” என சொல்லியவள்.. அவனின் பதிலை எதிர்பாராமல் கீழே வந்துவிட்டாள்.

வேதா, காலையிலேயே யோகா செய்வதற்கே மருமகளை காணோமே என எண்ணிக் கொண்டு, தன் உடற்பயிற்சியை முடித்து, குளித்து.. கிட்செனில் சென்று காலை உணவுக்கு என்ன.. என வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

பவானி அவசரவசரமாக வந்தாள் “குட் மோர்னிங் அத்தை” என்றாள்.

வேதா மருமகளை ஆராய்ந்தாலும் “குட் மோர்னிங் டா ம்மா.. என்ன அம்மா வீட்டிலிருந்து கிளம்ப லேட் ஆகிடுச்சா..” என்றார்.

பவானி “ஆமாம் அத்தை, அவரும் வந்தார், அதனால் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி” என்றாள்.

வேதா “ம்.. சொல்லவேயில்ல, இங்க டின்னெர் செய்ய சொல்லி இருந்தேனே.. விசு இங்க சாப்பிடலையா” என்றார், கேள்வியாக.

பவானி பதறவேயில்லை.. “ஆமாம் அத்தை, நைட் வந்து நான் பிரிட்ஜ்ஜில் எடுத்து வைத்துவிட்டேன்.. இப்போது கொஞ்சமாக சட்னி மட்டும் செய்துக்கலாம்.. சப்பாத்தி எனக்கு போதும்.. உங்களுக்கு வெஜ்டபில் போட்ட ராகி அடை செய்துக்கலாம் அத்தை.. சரிதானே..” என்றாள் பரபரப்பாக.

வேதா, மனதுள் மருமகளை மெச்சிக் கொண்டார்.. இருந்தும் “எங்க அவன், சாப்பிட வரலைன்னா.. சொல்ல வேண்டாமா” என்றார், அதட்டலாக.

விசு, இறங்கி வந்தான் இப்போது.. எப்போதும் அவன் கீழே வரும் போது வாயே திறக்கமாட்டேன், இன்று “பவானி..” என்றான்.

அவள் கிட்செனிலிருந்து வெளியே வரவும் “கஞ்சி ப்ளீஸ்” என்றான்.

வேதா அமைதியாக பேப்பரை கையில் வைத்துக் கொண்டு பார்த்திருந்தார் இவனை. 

பவானி, கஞ்சியை கொண்டு வந்து கொடுத்தாள்.. இப்போது அவளும் அத்தையோடு அமர்ந்துக் கொண்டாள்.

வேதா “ஏன் டா, நைட் சாப்பிட வரலைன்னா சொல்ல வேண்டாமா” என்றார் கோவமாக.

விசு “என்ன ம்மா.. இப்போ” என்றான், சலித்தபடி.

வேதா “சாப்பாட்டை வேஸ்ட் பண்ணாதீங்க ரெண்டு பேரும்.. மாமனார் வீட்டுக்கு போகணும்ன்னா, எங்கிட்ட சொல்லி இருக்கலாமில்ல.. அதென்ன சொல்லாமல் போறது..” என இருவருக்கும் பொதுவாக ஒரு கொட்டு வைத்தார் வேதா.

விசு “ம்மா.. எதோ கூப்பிட்டாங்க, எனக்கு என்ன தெரியும், நீ சொல்லலையா பவானி” என அவளையும் சேர்த்தான் இதில்.

அப்போதுதான் அமர்ந்த பவானி “இல்லைங்க.. எ.. எனக்கு, நீ.. நீங்க சொல்லுவீங்கன்னு.. இருந்துட்டேன்” என்றாள், தயங்கியபடியே.

விசு, மனைவியின் பக்கம் திரும்பி “மாமியார் மேல பயமில்லாமல் போச்சு..” என்றான் விளையாட்டு மிரட்டல் குரலில். 

பவானி ‘ஐயோ!..’ என பாவமாக பார்த்திருந்தாள்.

வேதா “டேய், உன்னைத்தான் டா நான் சொல்றேன்.. நீதான் சொல்லலை” என்றார் மருமகளை சமாதானம் செய்யும் விதமாக.

விசு “விடும்மா” என்றான் அசால்ட்டாக.

வேதா ஒன்றும் சொல்லாமல் பேப்பர் பார்க்க தொடங்கினார்.

விசு “அம்மா.. நானும் பவானியும் சனிக் கிழமை பெங்களூர் போறோம்.. பர்சேஸ்க்கு..” என்றான்.

பவானிக்கு அதிர்ச்சி ‘என்னது பெங்களூரா’ என.

வேதா “ம்.. போயிட்டு வாங்க, அப்படியே பெரியம்மா வீட்டுக்கு போயிட்டு வந்திடுங்க.. செந்தில் வருவாரில்ல..” என்றார் கேள்வியாக,

விசு “இல்ல, நாங்க மட்டும்தான்..” என்றான்.

வேதா “செந்திலை கூட்டிட்டு போ ப்பா.. தனியாக போக வேண்டாம்.” என்றார்.

விசு “நாங்க போகவேயில்லை..” என்றவன் சிறு பிள்ளை போல எழுந்து மேலே சென்றுவிட்டான்.

வேதாவும், அமைதியாகிவிட்டார்.. ஏதும் பேசவில்லை. பவானிக்குதான் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.

அங்கே பேச்சே இல்லை.

விசு, தயாராகி வந்தான் கீழே. வேதா எழுந்து உள்ளே சென்றுவிட்டார், மகனை பார்த்ததும்.

பவானி “சாப்பிடுறீங்களா?..” என்றாள்.

விசு “இல்ல, இரு வரேன்..” என்றவன் போன் பேசிக் கொண்டே இருந்தான்.

சற்று நேரத்தில் அவனாகவே எழுந்து வந்தான்.. பவானி பரிமாற உண்டான். அப்போதும் அன்னை வரவில்லை வெளியே. எனவே தன் மனையாளிடம் தலையசைத்து விடைபெற்றான், விசு.

அதன்பின் வேதாவை அழைத்து வந்தாள் பவானி, இருவரும் உண்டனர். வேதா மருமகளிடம் “பவானி, தனியா காரெடுத்து போக கூடாது. ப்ளைட்டில் போங்க.. அங்க, அக்கா வீட்டில் டிரைவர் இருப்பார் பார்த்துக்கலாம். தனியா போக வேண்டாம்..” என்றார் வேறு ஏதும் பேசாமல் தன் எண்ணத்தை மட்டும் சொல்லிவிட்டு.

பவானிக்கு, ‘என்ன ஆச்சு ஏன் போக கூடாது..’ என தோன்ற “ஏன் அத்தை..” என்றாள்.

வேதா “உங்க மாமனார் பற்றி தெரியுமா” என்றார். பவானி தெரியும் என்றாள். வேதா நடந்ததை சொல்லினார்.. “அதனால, எப்போதும் அவன் விஷயத்தில் கவனமாக இரு.. இன்னமும் அப்படி ஏதும் நடக்காது என என் அறிவுக்கு தெரிந்தாலும், மனது கேட்பதில்லை.. அவனை தனியாக அனுப்பாதே, நண்பர்களை நம்பியும் அனுப்பாதே.. நீயும் தனியாக போகாதே..” என்றவர் எழுந்து உள்ளே சென்றார், மனது என்னமோ செய்தது அவருக்கு.

பவானிக்கு வீராவின் நிலை தெரியும் என்றாலும்.. இப்படியாக ஒன்று நடந்தது என தெரியாது அவளிற்கு. எனவே, பவானி அதே யோசனையில் இருந்தாள் அன்று முழுவதும்.

நடுவில் தோழிகள் அழைத்தனர் எல்லோரிடமும் பேசினாள் தானும் கல்லூரியில் சேர்ந்துவிட்டதாக பகிர்ந்துக் கொண்டாள். நேரம் இனிமையாகவே சென்றது பவானிக்கு.

விசு எப்போதும் போல மதியம் உண்பதற்கு வரவில்லை. 

வேதாவும் தன் மருமகளை அழைத்துக் கொண்டு மாலையில் ஒரு நிச்சய விழாவிற்கு சென்று வந்தார். அசதியில் உறங்க சென்றுவிட்டார் வேதா.

பவானி, இரவு விசுவிற்காக காத்திருந்தாள் இன்று. காலையில் சென்றது இன்னுமும் போன் கூட பேசவில்லை கணவன். மேலும் நேற்று முழுவதும் அவனோடு இருந்ததில் ஒரு கண்ணுக்கு தெரியாத நெருக்கம் வளர்ந்திருந்திருந்தே இருவருக்குள்ளும்.. எனவே, இன்று காத்திருந்தாள் பெண்.

ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.. பெண். விசு, கதவை திறந்துக் கொண்டே வந்தவனுக்கு.. விளக்குகள் ஒளிர மனையாள் அமர்ந்திருப்பதுதான் தெரிந்தது. அனிச்சையாய் அவனின் முகம் சட்டென ஒளிர்ந்துவிட்டது. ஒரு சின்ன புன்னகையை உதடுகள் சிந்தியேவிட்டது நொடியில்.

விசு, அவளிடம் ஏதும் கேட்டாமல் வாயில் விசில் சத்தம் செய்துக் கொண்டே மேலே சென்றான் அவளை கண்டுக் கொள்ளாமல்.. ஆனாலும் கண்டுக் கொண்டேன் என விசிலடித்து மேலே சென்றான்.

பவானிக்கு, வெட்கமாக போனது.. அவள் ‘ஏதாவது கேட்பான்.. கிண்டல் செய்வான் என எதிர்பார்த்திருந்தாள்.. இப்படி பேசாமலே கிண்டல் செல்வான்’ என எதிர்பாக்கவில்லை அவள். எனவே முகத்தில் வெட்கம் வர லேசாக சிரித்தபடி டிவியில் பாட்டின் சத்தத்தை குறைத்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

விசு, குளித்து ஒரு ஷாட்ஸ், கையில்லா டி-ஷர்ட் அணிந்து இறங்கி வந்தான் அதே விசில் சத்தத்துடன்..

பவானி, டைனிங் டேபில் சென்று எல்லாம் எடுத்து வைத்தாள்.. விசு அமர்ந்து “என்ன அதிசயம்.. எல்லாம் எனக்கு பிடிச்சா மாதிரி இருக்கு” என்றான், காரணமாக சொன்னான்.

பவானி “இது வரகரிசி இட்லி!  பிடிக்குமா!” என்றாள் கிண்டலாக.

விசுவின் முகம் ஒரு ஒவ்வாமையை காட்டியபடியே அமைதியானது.

இட்லி வைத்தாள்.. விசு “ச்ச, இதுதான் இன்னிக்கா.. இந்த அம்மாவை” என பல்லை கடித்தான்.

பவானி, இப்போது புலாவ் வைத்தாள் அவனின் தட்டில், கூடவே ஒரு சப்பாத்தி வைத்தாள்.. விசு “இது சாப்பாடு..” என்றபடி உண்டான்.

பவானி அமைதியாகவே பரிமாறினாள். கொஞ்சம் பசி அடங்கவும் “அம்மாக்கு தெரியுமா.. இப்படி பண்ணின்னேன்னு.. அம்மா, பயங்கர ஸ்ரிக்ட். “ என்றான்.

பவானி “ம்.. சொல்லிட்டேன்.. அத்தை சப்பாத்தியும் சாப்பிட்டாங்க” என்றாள்.

விசு “ம்.. சூப்பர்.. நீ சாப்பிட்டியா” என்றான்.

பவானி “ம்..” என்றாள்.

விசு நிமிர்ந்து பார்த்து “வெயிட் பண்ணமாட்ட” என்றான்.

அவனின் கண்களை அனிச்சையாய் பார்த்தாள் பவானி.. கூடவே அவனின் கேள்வியும் அவளை திணறடித்தது.. பவானி “அ..அது” என்றபடி அவனை பார்க்காமல் தண்ணீர் நிரப்பினாள் குவளையில்.

விசுவிற்கு, அவளின் இந்த தடுமாற்றம்.. சின்ன பதட்டம்.. எல்லாம் பிடித்திருந்தது.. உண்டவன் எழுந்துக் கொண்டான், இப்போது விசு “என்னை பாரேன்..” என்றான், குரல் தாழ்ந்து கனிந்து.. ஆனால், கட்டளையாக வந்தது. 

பவானி அவனின் கண்களை பார்க்க அஞ்சிக் கொண்டே “எ..என்ன” என்றாள் கீழே பார்த்துக் கொண்டு.

ஒருவிரல் கொண்டு, அவளின் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தான்.. பவானிக்கு கொஞ்சம் பயம் இருந்தாலும்.. கண் சிமிட்டி சிமிட்டி அவனை பார்த்தாள்.. விசு “வெயிட் பண்ணுவியா, தினமும்..” என்றான்.

பவானி, கண்களை மூடி திறந்தாள்.. அதுதான் பதில் என்பதாக. விசு அதில் தன் இதழ் பதிக்க நினைக்க.. பவானி, இப்போது.. அவனிடமிருந்து  விலகிக் கொண்டாள்.. ஒன்றும் சொல்லாமல் எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினாள்.

விசு ‘ம்.. புரியுது எல்லாம் வாய் திறக்க மாட்டாளாமா’ என எண்ணிக் கொண்டே.. சிரித்த முகமாக கைகழுவ சென்றான்.

“பார்வைகள் புது வார்த்தை 

பரிமாறுதே..

இதயங்கள் இடம் மாறுதே..”

Advertisement