Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

16

பத்மநாபன், மாப்பிள்ளைக்காக காத்திருந்தார்.

விசு, வருவதற்கு தாமதம்தான் ஆனது.. ஆனாலும் தினமும் வீடு வரும் நேரத்தை விட சற்று சீக்கிரமாகவே வந்திருந்தான் மாமனார் வீட்டிற்கு. 

பவானியையும் உண்ண விடவில்லை வாசுகி. பெண்ணையும் காக்க வைத்துக் கொண்டிருந்தார்.. பவானி அதற்கே புலம்பினாள் ‘என்ன மா, நீயி என் அத்தை என்னை சாப்பிட சொல்லிடுவாங்க தெரியுமா.. நீதான் என்னோ ரொம்ப பண்ற.. உன் மாப்பிளைக்காக’ என்றாள்.

வாசுகி சிரித்துக் கொண்டே  கேட்டுக் கொண்டிருந்தார்.. அத்தோடு பெண் அவளின் அத்தை புராணம் பாடுவதையும் கேட்டுக் கொண்டார்.

பத்மநாபன், தன்னறையில் இருந்தார், ஹரீஷ் அங்கேதான் இருந்தான். ஆக குடும்பமே விசுவிற்காக காத்திருந்தது.

விசு, வந்து சேர்ந்தான்.. ஹரீஷு ஹாலிலேயே இருக்க “வாங்க மாமா..” என வரவேற்றான்.. அந்த குரலோடு ஒரு குரல் மெலிசாக அவன் காதுகளை வந்து சேர்ந்தது “வாங்க விசு..” என. விசு, அதிர்ந்து போனான் முதலில்.

பின், இந்த குரல் தன் மனைவியின் குரல் என தெரிந்து  அதே அதிர்ச்சியில் அவளை பார்க்க.. உள்ளே சென்றுக் கொண்டிருந்தாள் அவள். காலையில் பார்த்த உடையில்லை இது.. இப்போது சிவப்பு வண்ண அனார்கலி டாப்.. அவள் திரும்பி சென்றதும் காற்றில்.. சுழன்று அவன்முன் பறந்து விரிந்தது அழகாக.. சின்ன சரமாக அவளின் கூந்தலில் பூ தெரிந்தது.. எப்போதும் நடக்கும், அமைதியான நடையில்லை இது.. என அவன் மனம் சொல்ல.. அது உண்மையென “அம்மா..” என அழைத்துக் கொண்டே துள்ளலாக சென்றாள் உள்ளே பவானி.

விசு, பார்த்தும் பாராதது போல மனையாளை கவனித்துவிட்டு ஹரீஷுடன் பேச தொடங்கினான்.. பின் பத்மநாபன் வந்தார்.. வாசுகி வந்தார்.. இந்த பவானியை மட்டும்தானே அவன் கண்கள் தேடியது, அவள் வரவேயில்லை. விசு எல்லாருடம் பேசிக் கொண்டிருந்தான்.

வாசுகி, சற்று நேரத்தில் உண்ண அழைத்தார்.. எல்லோரையும். இப்போதுதான் விசுவின் கண்களுக்கு தெரிந்தாள் பவானி. பெண் மாப்பிள்ளையை அருகருகே அமர வைத்து பரிமாறினார் வாசுகி. பேச்சு ஹரீஷின் படிப்பில் தொடங்கி.. எங்கெங்கோ சென்றது.

பவானி, கணவனிடம் ஏதும் பேசவில்லை என்றாலும்.. கணவனை அடுத்து அமர்ந்திருந்த தம்பியிடம்  இயல்பாக பேசினாள்.. கணவனை தாண்டி. விசு நடுவில் மாட்டிக் கொண்டான். 

ஆனால், அப்படி மனையாளின் பேச்சும் ஒன்றும் தொந்திரவாக இல்லை போல அவனுக்கு.. அமைதியாக அவளின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தான்.

தன் வீட்டில் கேட்காத குரலாக.. பவானியின் பேச்சு சத்தம் அவனை என்னமோ செய்தது. பவானி, ஹரீஷிடம் “ஃபஸ்ட் இயர் கண்டிப்பா ஹாஸ்ட்டல் போய்க்கோ டா.. நெக்ஸ்ட் இயர் பார்க்கலாம்.. எப்படி என்னான்னு” என தொடங்கி மற்றொரு கையின் விரல்களை அசைத்து அசைத்து யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தாள், அக்கா என்ற தோரணையில். அதைதான் அமைதியாக உண்டபடி கேட்டுக் கொண்டிருந்தான் கணவன். 

சற்று நேரத்தில் பத்மநாபனும்.. விசுவும் பேச தொடங்கினர்.. நேரம் சென்றது.  உண்டு முடித்து, ஹாலில் அமர்ந்தனர் எல்லோரும். 

வாசுகி, எல்லோருக்கும் லெமன் ஜூஸ் கொடுக்க.. பவானிக்கு மட்டும் ஐஸ்கிரீம் வந்தது. அதை பார்த்ததும் அவளின் கண்கள் அழகாக விரிந்தது.. குழந்தையென குதூக்கலாமானால் பவானி.

விசுவிற்கு, மனைவியின் எல்லா பாவங்களும் ஆச்சர்யமாக இருந்தது ‘இதென்ன அவ்வளவு பிடிக்குமா..’ என உள்ளே ஓடிக் கொண்டே இருந்தது, அவளின் குதூகலத்தை பார்த்து. சின்ன கப்பில் பழங்கள் நிறைத்து.. அதில் ஐஸ்கிரீம் இட்டு நிரப்பி தந்திருந்தார்.. வாசுகி.

பவானியும் என்னமோ அந்த ஐஸ்கிரீம்மோடு கரைந்தபடி உண்டுக் கொண்டிருந்தாள்.

உண்டு முடித்து கிளம்பினர் இருவரும். மணி பதினொன்று.

விசு காரில் ஏதும் பேசவில்லை, பவானிக்கு காரில் ஏறியதும் என்ன ஆகிற்று என தெரியவில்லை.. அவளின் முகமே மாறி போகிற்று.. இத்தனை நேரமிருந்த ஒரு கலகலப்பை காணோம், அந்த குழந்தை தனத்தை காணோம் அந்த முகத்தில்.. அமைதியாக இருந்தாள். விசு இதனையும் கவனித்துக் கொண்டான். ஏதும் கேட்க தோன்றவில்லை.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். பவானிக்கு அப்போதுதான் நினைவே வந்தது.. அத்தைக்கு ‘தான்’ வர லேட் ஆகும் என சொல்லவில்லை என. எனவே கிட்சென் சென்று பார்த்தாள்.. எப்போதும் போல விசுவிற்கான உணவு தயாராக டேபிள் மேலே இருந்தது. பொறுப்பாக அதை எடுத்து உள்ளே வைத்துவிட்டு வந்தாள்.

விசு, தன் அறைக்கு சென்றுவிட்டான். உடை மாற்றிக் கொண்டு பவானியின் வரவிற்காக காத்திருந்தான். ‘அவ்வளவு உயிர்ப்பாக இருக்கிறாள்.. இங்கு மட்டும் ஏன் ஒதுக்கம்..’ என யோசனைதான் ஓடியது அவனுள்.

பவானி மேலே வந்தாள். 

உடை மாற்றும் அறைக்கு சென்றாள்.. கணவனை கவனிக்காமல். உடை மாற்றிக் கொண்டு.. உறங்கும் அறைக்கு வந்தாள். எப்போதும் போல தனக்காக பொருட்களை எடுத்துக் கொண்டு.. வெளியே செல்ல சென்றாள்.. விசு “பவானி..” என்றான்.

வெளியே சென்றவள், உள்ளே வந்து அழைத்த தன் கணவனை பார்த்தாள்.. ‘என்ன’ என்பதாக. விசு எழுந்து நின்றிருந்தான் இப்போது.. அவள் என்னவென பார்க்கவும் தன் நெற்றியை நீவிக் கொண்டே “வா.. பவானி, இ..இங்கேயே தூங்கலாம்” என்றான், குரலில் தெளிவு இருந்தது, மனதில்தான் தயக்கமெல்லாம் அவனுக்கு. எனவே திடமாகவே அழைத்தான்.

பவானி, அப்படியே வெளியே சென்றபடி “பரவாயில்லங்க.. நா..நான் இங்கேயே தூங்கறேன்.. குட் நைட்..” என்றாள்.

விசு, இப்போது அங்கே, வெளியே சென்றான். அவள் எடுத்து சென்ற தலையணை பெட்ஷீட் என எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்.. என்னவென பார்த்திருந்த தன் மனையாளையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டவன் அறைக்கு வந்தான்.. எல்லாவற்றையும் கட்டிலில் போட்டவன் “இனி இங்கதான் இருக்கணும்..” என்றவன் ஏதும் சொல்லாமல் மறுபுறம் சென்று அமர்ந்துக் கொண்டான்.

பவானி, அப்படியே நின்று பார்த்திருந்தாள் இரண்டு நிமிடம். கணவன் கவனிக்கவே இல்லை.. விசு இப்போது அமைதியாக விளக்கை நிறுத்தினான்.. வந்து கட்டிளில்படுத்துக் கொண்டான்.

பவானியின் கண்கள்.. விசு அமர்ந்திருந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. அவளுக்கும் என்ன செய்வது என தெரியவில்லை.. அடம் பிடித்து முறுக்கிக் கொள்ள முடியவில்லை அவளால்.. ஏனெனில் இப்போதுதான் அவளை பார்க்கிறான் கண் எடுத்து.. அப்படிதான் தோன்றியது பவானிக்கு.

பவானிக்கு, ‘திருமணம் ஆனதிலிருந்து  நானாவது ‘சாப்பிடுங்க.. வாங்க.. இல்லை, சரி’ என எதோ வார்த்தைகள் பேசி இருக்கிறேன். ஆனால், அவர் என்னை மதித்து நிமிர்ந்துக் கூட பார்த்ததில்லை.. ஒரு வார்த்தை இன்னமும் என்னிடம் பேசியதில்லை.. இப்போதுதான் ‘பவானி’ என அழைத்திருக்கிறார்.. காலையிலிருந்து உடன் வந்து எதோ பேசினார்.. இப்போதும் நான் முறைத்துக் கொண்டே செல்லுவதா..’ என எண்ணிக் கொண்டே நின்றிருத்தாள் பெண். 

விசு “என்ன யோசனை” என்றான் இவள்புறம் திரும்பி பார்த்து.

பவானி “சும்மாதான்” என்றவள் ஏதும் சொல்லாமல் உறங்க ஆயுத்தமானாள். 

விசு “எப்போது உனக்கு காலேஜ்..” என்றான்.

பவானி அடுத்த வாரத்தில் ஒரு தேதியை சொன்னாள்.. விசு அமைதியாக இருந்தான். 

பவானிக்கு, விசுவின் இந்த திடீர் பேச்சும் செய்கையும் ஏன் என புரிவைல்லையே.. யோசனையோடவே இருந்தாள் ‘எல்லாவற்றுக்கும் வளைபவன் போலவும் இல்லை.. எதற்கும் வளையாதவன் போலவும் இல்லை..’ என பார்த்துக் கொண்டிருந்தாள், கணவனை.

விசுவிற்கும் யோசனை ‘இயல்பாகிவிட்டாளோ.. வீட்டில் நன்றாகத்தானே பேசினாள், ஏன் இங்கு மட்டுமே பேசுவதேயில்லை.. நான் அவளை கவனிக்க வேண்டுமோ..’ என எண்ணிக் கொண்டே அவளையே பார்த்தபடி.. அந்த இருட்டில் அவளை துலாவியபடி படுத்திருந்தான்.

பெரிதாக வெளிச்சமில்லை அந்த அறையில்.. டிவியின் சிவப்பு பட்டன் ஒளி மட்டும்தான் அந்த அறையின் வெளிச்சம் இப்போது.. அந்த ஒளியில் இருவரும் ஒருவரை ஒருவர் அந்த இருட்டில்.. தேடிக் கொண்டிருந்தனர் மன கண்களில்.

ஒரு பத்து நிமிடம் சென்று விசு “உனக்கு ஏதாவது வாங்கனும்மா” என்றான், அந்த இருட்டில் அவனின் குரல் கொஞ்சம் சத்தமாகத்தான் ஒலித்தது.

பவானி “ம்… என்ன” என்றாள். அவளிற்கு புரியவில்லை.. கணவனை பற்றிய யோசனையில் இருந்தாள். அதனால், அவன் கேட்டதை கவனிக்கவில்லை பெண்.

விசு “இல்ல, நெக்ஸ்ட் வீக் உனக்கு காலேஜ் போக, திங்க்ஸ் ஏதாவது வாங்கனும்மா” என்றான்.

பவானி “இல்லை ங்க..” என்றாள் அவசரமாக. 

மீண்டும் ஒரு அமைதி இருவரிடமும்.

சற்று நேரம் சென்று விசு “ம்.. நான் நெக்ஸ்ட் வீக் ஜெர்மன் போனாலும் போவேன்.. இந்த சண்டே கொஞ்சம் ஷாப்பிங் பண்ணும்.. போயிட்டு வரலாம்” என்றான்.

பவானி “ம்..” என்றாள்.

விசுவிற்கு திருப்தியில்லை அந்த பதிலில். ‘என்னமோ, ஹரீஷுக்கு, அத்தனை சொன்னாள்.. எனக்கு ஏதும் சொல்லவில்லை’ என தோன்றியது, அவளின் ஓரெழுத்து பதிலில்.  

விசு, ஏதும் பேசவில்லை அதன்பின்.. அவளின் பிங் நிற.. உடையை பார்த்தபடி கண்களை மூடிக் கொண்டான்.

பவானிக்கு, கணவன் தன்னை மதித்து பேசியது.. இங்கே உறங்க சொன்னது எல்லாம் சந்தோஷமே எனவே, அமைதியாக உறங்கத் தொடங்கினாள்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

மறுநாள் காலையில் பவானி எழ கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.. இல்லை, மிகவும் தாமதமாகிவிட்டது. ம்.. விசு உடற்பயிற்சி முடித்து தன் அறைக்கு வரும் போதுதான் பவானி குளித்து முடித்து வெளியே வந்தாள்.

விசு, அவசர அவசரமாக தயாராகிக் கொண்டிருந்தவளை பார்த்து “குட் மோர்னிங்” என்றான், முழு பாட்டில் தண்ணீரை குடித்து முடித்து.

பவானியும் நேற்று இரவு வந்திருந்த நெருக்கத்தில் “குட் மோர்னிங்க” என்றாள்.

 

Advertisement