Advertisement

பவானிக்கு புதிதாக ஏதும் தோன்றவில்லை.. தன் தந்தை அருகில் இருப்பதை போலவே இருந்தது.. அவனை அவ்வபோது ஓர கண்ணால் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

எல்லாம் முடித்து, இருவரும் கிளம்பினர்.. மீண்டும் சிறிது தூரம் நடை.. பாவனிக்கு மனதில் அவனிடம் கேட்க வேண்டும் ‘எப்படி என்னை பற்றி சரியா சொன்னீங்க..’ என வினவ வேண்டும் என ஆசை.. ஆனால், எப்படி ஆரம்பிப்பது என அமைதியாக வந்தாள்.

காரில் ஏறினர்.. அமைதியான பயணம், ஒரு பாட்டு.. பேச்சு.. என ஏதும் இல்லை இருவரின் நடுவிலும். புதுமண தம்பதிகளுக்கு உண்டான வெட்கம்.. ஜாடை பேச்சுகள்.. காதல் இப்படி கூட ஏதும் இல்லை அவர்களின் நடுவில். அமைதியான பயணம்.

சற்று தூரம் செல்ல.. பாதை மாறியதை கவனித்தாள் பெண். கணவனை கேட்கவும் தயக்கம்.. எனவே அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். 

இப்போது பவானிக்கு காரின் ஏசியில் அவனின் ப்ர்ஃபெயூம் மணம் அவளை தாக்கியது.. மிக மென்மையாக ஒரு அஃக்வா மணம்.. அவளின் நாசி புகுந்தது.. இப்போது கணவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள் பெண்.. ‘எப்படி  என்னை பற்றி எல்லாம் தெரிந்தது இவருக்கு..’ என எண்ணம் ஓட ஒரு நொடி.. அவனிடம் அவளின் பார்வை நிலைத்து விட்டது.

விசு, அவளை பார்த்து திரும்பினான்.. புருவம் உயர்த்தி ‘என்ன..’ என்பதாக வினவினான்.. வாய் திறக்காமல்.

அவனின் அந்த கண்ணும் புருவமும்.. இளகியிருந்த பவானியை மீண்டும் மிரள வைத்தது.. ;என்ன கண்ணுடா சாமி..’ என நினைத்துக் கொண்டாள். சுதாரித்துக் கொண்ட பவானியும் ‘ஒன்றுமில்லை’ என தலையசைத்து நேரே அமர்ந்துக் கொண்டாள்.

விசுவிற்கு அவளின் இந்த பார்வை போதுமானதாக இருந்தது போல “லஞ்ச்க்கு போலாமா” என்றான்.

பவானி, கணவனை பார்க்கவில்லை.. நேரே சாலையை பார்த்துக் கொண்டே “இல்ல, வீட்டில் சமையல் செய்ய சொல்லிட்டேன்.. அத்தை திட்டுவாங்க” என்றாள்.

ம்.. வேதா, அப்படிதான் சில விஷயங்களில் கண்டிப்புதான். உணவு வேண்டுமென்றால் சமைக்கலாம்.. உணவை வீணாக்கக் கூடாது அவருக்கு.  அதை சொல்லி இருக்கிறார் இவளிடம்.. எனவே அப்படியே சொன்னாள் அவள்.

விசு “பரவாயில்லை, உனக்கு மட்டும்தானே சொல்லி இருக்க.. அந்த அக்காவை எடுத்து போக சொல்லலாம்.. வா போலாம்” என சட்டென அழைத்தான்.

பவானி அமைதியாகவே இருந்தாள்.

விசு “உங்க அத்தைகிட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ போன் செய்து அந்த அக்காகிட்ட சொல்லிடு.. அங்க சாப்பிட்டு வீட்டுக்கு போயிட்டு வருவாங்க..” என சொன்னான்.

பவானி, ஒன்றும் சொல்லாமல்.. தன் அத்தைக்கு அழைத்து முதலில் பேசினாள்.. வேதா “சரி ம்மா.. நீ போயிட்டு வா… நான் எல்லாம் சொல்லிக்கிறேன்..” என்றார்.

பவானி சொல்லிவிட்டு, தன் கணவனை பார்த்தாள்.

விசு, மனதில் ‘பெர்பக்ட் மருமகள்தான் போ..’ என எண்ணிக் கொண்டவன் “போலாமா?” என்றான்.

அழகான ஒரு பாமிலி ரெஸ்ட்டாரண்டில் வண்டி நின்றது.. முன்புறம், நீண்ட பார்க்கிங்.. குழந்தைகள் விளையாட இடம்..  செயற்கை நீருற்று.. அதை அடுத்து.. ஆங்காங்கே சின்ன சின்ன குடில்கள் போன்ற அமைப்பில் இருந்தது, உண்ணும் இடம்.. பொறுமையாக எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டே வந்தாள் பவானி.

வேலை செய்பவர் வந்து இவர்களுக்கான இடம் காட்ட அதில் அமர்ந்தனர், இருவரும். சின்ன குடில் நான்கு நபர்கள் அமர கூடிய இடம்தான்.. மெனு பார்த்து பொறுமையாக ஆர்டர் செய்தனர்.

‘அடுத்து என்ன பேசுவது’ என தெரியவில்லை இருவருக்கும்.. இயல்பாய் உரையாட வரவில்லை அவர்களுக்கு.. எதோ காரணம் தேவைப்படுகிறது.. விசு அமைதியாகிவிட்டான்.. பவானி வேடிக்கை பார்க்கக் தொடங்கினாள். அவளிற்கு அவனை பார்க்கவே முடியவில்லை, அதிலும் அவனின் கண்கள் அவளுக்கு இன்னும் பழகவில்லை.. எனவே அவனை பார்த்து பழகிக் கொள்ள வேண்டும் என எண்ணி.. தானாக அவனை ஏறிட்டு பார்க்க.. ம்கூம்.. முடியவில்லை அவளாள்.. எனவே, வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

ஒன்றன்பின் ஒன்றாக உணவுகள் வந்தது.. இருவரும் பேசுவதற்கு காரணம் கிடைத்தது என எண்ணி ‘தண்ணீர், நல்லா இருக்குல்ல.. ‘ என ஓரிரு வார்த்தைகள் பேச தொடங்கினர். உண்பதிலேயே கவனம் போல நேரம் கடத்தினர் இருவரும்.

தம்பதிகள் காதலர்களாய், தங்களை பகிர்ந்துக் கொள்ள எண்ணும் போது வரும் தயக்கம் போல இது. நிமிர்ந்து பார்க்க கூச்சப்பட்டு.. அளந்து பேசி.. அக்கறையாக ஒரு உணவை முன்னே நகர்த்தி ‘போட்டுக்கோ..’ என மென் குரலில் சொல்லி.. என ஒருமாதிரி தனிமையை.. தள்ளி வைத்து, வார்த்தைகளை கோர்க்க தொடங்கிய நேரம்.. உணவு தீர்ந்து போனது. அஹ.. எப்போது இவர்களின் தயக்கம் தீரும் நேரமோ.. என காதல் எண்ணிக் கொண்டது.  

முடித்து கடைசியாக விசு “ஐஸ்கிரீம் சாப்பிடுறீயா” என்றான், அவனாக அவளை நோக்கி முன் வைத்த ஒரு உரையாடல் இது.

பவானிக்கு வயிறு நிரம்பி இருந்தது.. ஆனாலும், ஐஸ்கிரீம்  என்றால் உருகும் பெண்.. ஆசையாக கணவன் கேட்க வேண்டாம் என்பாளா என்ன!.. “ஒன் பை டூ…” என்றாள், அவன் கண்களை பார்க்க எத்தனித்து.. பேசினாள்.. ‘ம்கூம்..’ இன்னும் அனாயாசமாய் அவன் கண்களை பார்க்க முடியவில்லை அவளால். தடுமாறி தாழ்ந்தது பெண்ணின் பார்வை.. விசு இந்த நொடியை ‘என்ன’ என்பதாக உணர முடியாமல்,  லேசாக தலையை மட்டும் அசைத்தான் அவளை பார்த்து.

ஆர்டர் செய்தான்..

இந்த சர்வருக்கு புரியாது போல.. இரண்டு கிண்ணங்களில் ஐஸ்கிரீம் கொண்டு வந்தார். விசு, கொஞ்சம் ஏமாந்து போனான். லேசாக.. ஒரு வரி.. அவனின் நெற்றி சுருங்கியது.. இயல்பாக்கிக் கொண்டு “ம்..” என்றான் மனையாளை பார்த்து.

“என் உயிரின் உயிரே…

என் இரவின் நிலவே..

உன் அருகில் வரவே..

நீ தருவாய் வரமே…”

உண்டு முடித்து இருவரும் நல்ல மனநிலையிலேயே வீடு வந்தனர்.

விசு உடனேயே அலுவலகம் சென்றுவிட்டான்.. அவனிற்கு நேரம் இல்லைதான், ஆனாலும் அவளோடு இருக்கும் நேரத்தை இழக்க கூடாது என பிடிவாதமாக இந்த நேரத்தை எடுத்துக் கொண்டான். எனவே உடனேயே கிளம்பிவிட்டான் விசு.

பவானிக்கு இன்று எதோ நல்ல நாள் போல.. எல்லாம் சுமூகமாக நடந்தது.. மாலையில் தன் அத்தையிடம் எல்லாம் சொன்னாள். ‘அடுத்த வாரத்தில் கல்லூரிக்கு போகணும் அத்தை.. அம்மா வீட்டுக்கு போய் இதை சொல்லிட்டு வந்திடுறேன்..’ என சொல்லிக் கொண்டுக் கிளம்பினாள் பெண்.

வேதா அதிகமாக அவளை, அங்கே அனுப்புவதில்லை.. திருமணம் முடிந்து வந்த இந்த ஒரு மாதத்தில் இதுதான் இரண்டாம் முறை. வேதா முன்பே சொல்லி இருக்கிறார் ‘அங்கே போக்கு வரத்து மாதத்திற்கு ஒருமுறை இரண்டுமுறை என பார்த்துக்கோ பவானி.. அங்கே சாப்பிடுறேன்.. இங்கே எடுத்து வரேன் இதெல்லாம் கூடாது. அடுத்த தெரு என்றாலும் இதுதான் உன் வீடு..’ என கண்டிப்புடன் சொல்லி இருந்தார்.

எனவே பவானியும் கேட்டுக் கொண்டாள்.

இப்போது தவிர்க்க முடியாத காரணம் என்பதால்.. வேதா ‘சீக்கிரம் வந்திடனும்’ என அனுப்பி வைத்தார் மருமகளை.

தன் ஸ்கூட்டியில் சென்றாள் பெண்.

வாசுகி பெண்ணை பார்த்ததும் அழுதேவிட்டார்.. ‘என்ன டா, எங்க ஞாபகமே இல்லையா.. இங்க வரவே மாட்டேங்கிற’ என அழுகைதான் முதலில்.

அதன்பின் பவானி தன் அன்னையை சமாதானம் செய்யவும்தான்.. கொஞ்சம் தெளிந்தார். தன் கணவருக்கு அழைத்து சொல்லிவிட்டார். எனவே, அவரும் வந்து சேர்ந்தார்.. பத்மநாபன் “மாப்பிள்ளையை கூட்டி வரலையாம்மா..” என்றார்.

பவானி “இல்ல ப்பா… அவர் இன்னிக்கு என்னை காலேஜ் சேர்த்து விட்டுவிட்டு.. மதியம்தான் ஆபீஸ்க்கு போனார்.. லேட் ஆகும்ன்னு நினைக்கிறேன்..”  என பொறுப்பாக பெண் பதில் சொல்லவும் சந்தோஷமோ சந்தோஷம் பெற்றோருக்கு. ‘ஆண்டவா.. இப்படியே பொண்ணும் மாப்பிளையும் நல்லா இருக்கணும்’ என வேண்டிக் கொண்டனர்.

பத்மநாபன் “நைட் இங்கதான் டின்னெர்.. மாப்பிளையை நான் கூப்பிடுறேன்.. வாசுகி தயார் செய்..” என சொல்லி விசுவை அழைக்க தொடங்கினார் போனில்.

பவானி “ப்பா.. எனக்கு தெரியாது.. நான் சாப்பிட்டுதான் போவேன்.. அவர் பற்றி அவர்கிட்ட கேட்டுக்கோங்க..” என்றாள் சந்தோஷமாக.

வாசுகிக்கு கொஞ்சம் நெருடியது.. ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் “என்ன டா செய்ய..” என கேட்டார் ஆசையாக.

விசு, பத்மநாபன் அழைக்கவும் எப்படி தட்ட முடியும்.. அதுவும் அங்கே மனையாள் இருக்கிறாள்.. தட்ட முடியாமல் வருகிறேன் என்றான்.

ஆனால், கணவன் மனைவி இருவரும் வேதாவை மறந்தனர் இப்போது.

 

Advertisement