Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

14

பவானிக்கு, உறக்கமே இல்லை.. என்ன செய்வது என தெரியாமல்,  மூன்று மணிக்கு எழுந்து.. அந்த அறையை கிளீன் செய்ய தொடங்கினாள்.. பூக்களை தனியே எடுத்து வைத்தாள்.. பலூன்களை ஜன்னல் வழியே பறக்கவிட்டாள்.. அந்த இதய வடிவில் இந்த சிவப்பு ரோஜாக்களை மட்டும் தொடவில்லை அவள். அதன் அருகில் சென்று ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள்.. ‘அவர் என்ன செய்கிறார்..’ என தோன்றியது. ஆனாலும், கதவை திறந்து ‘எங்கே’ என தேட மனது வரவில்லை பெண்ணுக்கு.

ஒவ்வொன்றாக, எல்லாவாற்றையும் நேர் செய்து வைத்தாள். தன் போனை எடுத்து சார்ஜ்ஜில் போட்டுவிட்டு.. இருட்டை வேடிக்கை பார்த்தாள்.. ‘காலையில், நானே கேட்டிடனும் காலேஜ் போகணும்ன்னு கேட்டிடனும்’ என சொல்லிக் கொண்டாள், தனக்குள்.

பெண்ணுக்கு, பசித்தது இப்போது. பவானி, சுற்றிலும் பார்க்க.. ட்ரை ஃப்ர்ட்ஸ் இருந்தது.. மேலும் சில பழ வகைகளும் இருந்தது.. அதனை கொறித்தாள். மணி நான்கு என காட்டியது அங்கிருந்த கடிகாரம்.. 

‘அவ்வளவுதானா…’ என பெருமூச்சு விட்டவள், அப்படியே முழு பெட்டிலும் குறுக்காக படுத்துக் கொண்டாள்.. சற்று நேரத்தில் அவளையும் அறியாமல் உறங்கினாள் பெண், அசதியில்.

விசு எப்போதும் போல ஐந்து மணிக்கு எழுந்தவன்.. தன்னறைக்கு வந்தான்.. தன் முழு  பெட் முழுவதும் அவள்.. தன் அறை முழுவதும் அவள் வாசம்.. நகர முடியவில்லை அவனால்.. இடப்பக்கமாக திரும்பி, தன் இடது கையையே தலைக்கு வைத்துக் கொண்டு.. ஓய்யாரமாக உறங்கிக் கொண்டிருந்தாள் அவனின் மனையாள்.

நகர முடியாமல் நின்றான் கணவன் ‘என்னை பார்க்க மாட்ட… என்கிட்டே பேசமாட்ட, ஆனால், இ..இப்படி என்னை வெளியே துரத்திட்டு என் பெட்டில் ஜாலியா படுத்திருக்க.. ம்..’ என கொஞ்சம் பொருமினான் உள்ளுக்குள். 

ஆனால், ஆழ்மனது சத்தமில்லாமல் ‘எது எப்படி இருந்தால் என்ன.. அவளின் கையோடு தன் கையை கோர்த்துக் கொள்ளத்தான்..’ யோசித்துக் கொண்டிருந்தது இவ்வளவு நேரமும்.

யோசனையோடு மெதுவாக அவளை ஆராய்ந்தான்.. கணவனின் கண்வழியே அவளின் வளைவு நெளிவுகளை வேண்டுமென்றே ஊன்றி பார்த்தான் கள்ளன். பார்வையில்.. தன்னுடைய போம் பெட் கொஞ்சமும் அழுந்தாமல்.. மலரென உறங்கிக் கொண்டிருந்தாள்.. ‘ப்பிர்ட்டி..’ எனசொல்லிக் கொண்டான் தனக்குள்.

பெரிய அனலான மூச்சு காற்று ஒன்று அவ்னிடமிருந்து வந்தது இப்போது.. தன் கால்களை முயன்று நகர்த்திக் கொண்டு.. ரெஸ்ட் ரூம் சென்றான். என்னமோ கோவம்.. எதோ வருத்தம்.. ‘படாரென’ வேண்டுமென்றே கதவை அடித்து சாற்றினான்.. விசு.

அந்த சத்தத்தில் பவானியும் விழித்துக் கொண்டாள்.

பவானி எழுந்து அமர்ந்துக் கொண்டாள்.. அறையின் கதவு திறந்திருக்கவும்.. விசு உள்ளே வந்திருப்பார் என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.. உறக்கம் கலைந்த நிலையில்.

விசுவும் வெளியே வந்தான்.. அவள் எழுந்து அமர்ந்திருக்கவும்.. பார்க்கவே பாவமாக இருந்தது இவனுக்கு.. கண்களை கசக்கிக் கொண்டு கலங்கிய கண்களோடு அமர்ந்திருந்தாள். சட்டென ஒரு டிஷர்ட் எடுத்துக் கொண்டு, கிளம்பிவிட்டான்.

பவானி குளித்து கீழே சென்றாள்.

அதன்பின், மறுவிருந்து அழைப்பு, விருந்து என நேரம் சரியாக சென்றது அடுத்த மூன்று நாளும். கணவன் மனைவி இருவரும் அருகிலேயே இருந்தனர். ஆனால், தூரமாக இருந்தனர். பவானி தன் குற்றயுணர்ச்சி காரணமாக விலகி நின்றாள் என்றால்.. விசு, தன் உரிமை காரணமாக உறவு காரணமாக விலகி நின்றான்.

இயல்பாய் அவனுக்கு, அவளை பார்த்தாலே மனையாள் என்கிற எண்ணம் எழுகிறது.. அவள் மீது கோவம் உண்டு.. வருத்தம் உண்டு.. என்றாலும், ஏன் அவளை விட முடியவில்லை என்ற கேள்வியும் அவனிடம் உண்டு. ஆனால், பதிலை அவளிடம் தேடுகிறான் விசு. நான் அவளை கருத்தில் வைத்தது போல.. என்னை அவள் கருத்தில் வைக்க வேண்டும் என எண்ணுகிறான் கணவன். அதற்கு இப்போது நேரமில்லை என புரியவில்லை அவனிற்கு.

அதனாலேயே முதலிரவில் எதையோ எதிர்பார்த்தான் கணவன். எதோ பேசுவாள்.. அன்று கேட்டது போல படிக்கனும்ன்னு கேட்பாள்.. இல்லை, ஏன் என்னை கல்யாணம் செய்துக்கிட்ட என கேள்வியாவது கேட்ப்பாள் என எதிர்பார்த்தான் விசு. ஆனால், அப்படி அவள் ஒன்றுமே கேட்கவில்லை.. பேசவில்லை.. தான் வெளியே சென்றதும் அப்படியே விட்டுவிட்டாள்.. அடுத்து வந்த இரண்டு நாட்களும் ‘ஏன்’ என ஒரு கேள்வி.. ஒரு பார்வை.. பார்க்கவில்லை அவள்.. என வருத்தம் அவனிற்கு.

எனவே அமைதி காத்துக் கொண்டான் கணவன். ‘என் குற்றவுணர்வு போக வேண்டும்.. அங்கிள்க்கு சொன்ன வார்த்தையை காக்க வேண்டும். காத்து விட்டேன்.. இனி, நாங்கள்… எங்கள் வாழ்வு.. அவள் கையில் உள்ளது..’ என முடிவெடுத்துக் கொண்டான் விசு.. திருமணம் முடிந்த நான்காம் நாள்.

அதன்பின் நாட்கள் வேகமாக சென்றது. இருவரும் பார்த்துக் கொள்வதே காலை நேரம் மட்டும்தான். அதுவும் விடிந்தும் விடியாத அந்த நேரம் மட்டும்தான்.. சில நொடிகள் மட்டும்தான். அத்தோடு, அவனுக்கு காலையில் பரிமாறும் நேரம் மட்டும் கீழே இருப்பார்கள், அவ்வளவுதான்.

மற்றபடி இரவுதான் வீடு வருவான்.. அதுவும் விசு வருவதே லேட். எப்போதும் அவன் வரும் நேரம் பதினோரு மணியாகிவிடுகிறது. எனவே, இவள் உணவு பரிமாறுவது இல்லை.. அவனே உண்டுக் கொள்கிறான். அவன் வரும் போது உறங்கியிருப்பாள் பெண்.. உறங்குவது போல, பாவனையில்  இருப்பாள் சில சமயம். இப்படியே அடுத்த ஒருவாரமும் ஓடியது.

அன்று, எதோ யோசனை அவளுக்கு.. ‘கல்லூரியும் இல்லை, இங்கே என்னால் ஒன்றமுடியவும் இல்லை.. என்ன லைப்.. இது..’ என எதோ எண்ணம்.. அதிலேயே இருந்தாள்.

யோசித்துக் கொண்டே இருந்ததில் நேரம் கணக்கிடவில்லை, அவள். எனவே டிவியில் பாட்டு எதோ ஓடிக் கொண்டிருக்க.. இவள் ஜன்னலில் நின்று தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

விசு எப்போதும் போல, கதவை திறக்க.. இன்று தன் மனையாள் பெட்டில் இல்லாதது பார்த்து.. நிமிர.. ஜன்னலோரம் நின்றிருந்தாள். முதல்முறை பார்க்கிறான்.. இப்படி அவளை. ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும் திருமணம் முடிந்து.. இன்னமும் இந்த அறையை அவனால்.. எடுத்துக் கொள்ள முடியவில்லை. எதோ தடுக்கிறதா.. எல்லாமே தடுக்கிறதா தெரியவில்லை.. அவளாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால்.. எல்லாமே தடுக்கிறது போல, அவனை.

இப்போது.. இந்த நேரத்தில் மனையாளின்.. தனிமை கோலம் அவனை என்னமோ செய்தது. 

விசுவிற்கு ‘என்ன ஆச்சு’ என தோன்றினாலும்.. ஏதும் கண்டுக் கொள்ளாமல் தன் வேலைகளை கவனிக்கத் தொடங்கினான், அழுத்தக்காரன். 

ஒரு அரைமணி நேரம் சென்றுதான்  டிரெஸ்ஸிங் அறையிலிருந்து  வெளியே வந்தான், விசு. 

அப்போது பவானி உள்ளே இல்லை.. வெளியே வந்துவிட்டாள். விசு, வெளியே வந்தவன்.. மீண்டும் இவளை இங்கே பார்த்ததும் ‘என்ன டா இது’ என எண்ணிக் கொண்டே உணவு உண்ண சென்றான், கீழே.

விசு, உண்டு மேலே வந்தான். எப்போதும் தான் உறங்கும் சோபாவில் இப்போது பவானி அமர்ந்திருந்தாள். பார்த்தவனுக்கு ‘என்னாச்சு’ என கேள்வி எழுந்தது. எப்போதும் இரவானால், அவனிடம் இடம் இதுதானே.. எனவே, உள்ளிருந்து தலையணையும்.. பெட்ஷீட்டும் எடுத்துக் கொண்டு வந்தான்.

பவானிக்கு சங்கடமாக போனது.. இத்தனைநாள் தெரியும்.. இவன் வெளியே படுக்கிறான் என.. தெரிந்தாலும், இப்படி ஹாலில் படுத்துக் கொள்கிறான் என தெரியாது. அவன் எடுத்து வந்தவைகளை பார்த்து எழுந்து நின்றாள் பெண். பவானி “சாரி…ங்க, நான் யோசிக்கலை.. நீங்க உள்ளே படுத்துக்கங்க, ப்ளீஸ். அது உங்க ரூம்..” என சொல்ல சொல்ல.. கண்ணிலிருந்து நீர் வந்தது.. துடைத்துக் கொண்டாள் பெண்.

மீண்டும் பவானி “சாரி.. நான் இங்க படுத்துக்கிறேன்.. நீ..நீங்க உள்ள படுத்துக்கோங்க ப்ளீஸ்..” என்றவள், அந்த தலையணைகளை எடுத்துக் கொண்டு.. சோபாவில் அமர்ந்தாள்.

விசுவிற்கு கோவமே வந்தது.. ‘இதென்ன பேச்சு, நான் வெளியே படுத்துக்கிறேன்.. நீங்க போங்க.. என இப்படி ஒரு பேச்சு.. ‘ என இவன் எண்ண எண்ண, அவள் அங்கே படுத்துக் கொண்டாள் சோபாவில்.

விசுவிற்கும் என்ன செய்வது என தெரியவில்லை.. ‘படுத்து பார்க்கட்டும் அப்போதுதான் தெரியும்’ என எண்ணிக் கொண்டு அறைக்கு சென்று படுத்துக் கொண்டான்.

அடுத்தடுத்த நாட்கள் பவானி விசு தூரம்தான் அதிகரித்தது. இருவருக்கும் அதிகாலையில் அவன் வெளியே வரும் நேரம்தான் பவானி கண்விழிப்பாள்.. அவளும் பேசமாட்டாள்.. இவனும் பேசமாட்டான். எதோ தெரியாதவர்கள் அங்கே இருப்பது போல எண்ணி.. இவன் உடற்பயிற்சி செய்ய கிளம்பிவிடுவான்.

பின், பவானி கீழே வருவாள். தன் மாமியாரோடு யோக கற்கிறாள் இந்த ஒருவாரமாக. எனவே அங்கே கிரௌண்டில் வந்து நின்றுக் கொள்வாள்.. பயிற்சிக்கு. பின் மாமியார் மருமகள் ராஜ்ஜியம்தான் அங்கு, பேசிக் கொண்டே காலை காபி.. என்ன சமைப்பது என மெனு தயாரிப்பர்.. இப்படியே நேரம் செல்லும். விசு அலுவலக வேலைக்கு என கிளம்பினால்..  பவானி உண்டு.. போனோடு அறையில் அமர்ந்துக் கொள்வாள். இப்படியேதான அவர்களின் இயல்பான நாட்கள் தொடங்கியது.

விசுவிற்கு திருமணமானது ஒரு பெரிய ரிலீஃப் என்றால்.. வேதாவிற்கு ஒரு யாங் கம்பானியன் கிடைத்த சந்தோஷம். அடுத்தடுத்த வந்த நாட்களில் வேதா அப்படிதான் உணர்ந்தார். மகன் மகன் என சுற்றியவர்.. இப்போது தன்னை தேடும் அடுத்த ஜீவனையும் யோசிக்க தொடங்கினார்.

பவானி, எந்த அளவு விசுவிடம் அழுத்தமாக இருக்கிறாளோ.. ‘அதுதான் பேசமாட்டேன்’ என அழுத்தமாக இருக்கிறாளோ.. அதற்கு நேர்மாறாக வேதாவிடம் உருகுகிறாள். “அத்தை.. ஆன்ட்டி” என மாற்றி மாற்றி அழைத்து.. தன் கல்லூரி நாட்களை பேசுகிறாள்.. பொது விஷயம்..  என நிறைய பேசுகிறாள் பெண். அவளிற்கே தெரிகிறது ‘தான்’ அதிகமாக அத்தையிடம் பேசுகிறோம் என, ஆனால், தடுக்க முடியவில்லை அவளால்.. தானே அறியாமல், கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டுக் கொள்கிறாள் பவானி.

இப்படியே அடிக்கடி விசுவின் கதைகளை வேதா சொல்லுவதுண்டு.. அவன் இந்த ஸ்கூல்.. அவ்வளோ பெரிய ஹாஸ்ட்டல், ஸ்கூல்.. அவ்வளோ பெரிய யூனிவர்சிட்டியில் படிப்பு.. இப்படிதான் உண்ணுவான்.. அதிகம் என்கிட்டையே பேசமாட்டான்’ என நிறைய சொல்லுவதுண்டு.. தன் மகனின் பெருமைகளை. அத்தையின் பேச்சை கேட்ப்பாளே தவிர, பதில் பேசமாட்டாள்.. ஆனால், அதெல்லாம் அவளே அறியாமல் மனதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்துக் கொண்டது. அதனால் நெருக்கம் கூடியது மருமகள் மாமியருக்குள்.

அடுத்தடுத்த வாரத்தில் தன் படிப்பு பற்றி பேசத் தொடங்கினாள் பவானி.

வேதாவும் “நானே உன்னை கல்லூரியில் சேர்ந்தது விடுகிறேன், இதென்ன பெரிய ப்ரமாதம்” என்றுவிட்டார், எந்த சிக்கலும் இல்லாமல். பவானிக்கு அத்தனை சந்தோஷம். பெற்றவர்கள் உதவவில்லை.. கட்டியவனும் கண்டு கொள்ளவில்லை.. இப்போது மாமியார் பெரிய விஷயத்தை ஈசியாக ‘நான் செய்கிறேன்’ என்றதும் அப்படி ஒரு சந்தோஷம் அவளிற்கு. “நூறுமுறை தேங்க்ஸ் அத்தை” என சொல்லி இருப்பாள், பவானி. எப்போது போகலாம் எந்த கல்லூரி என பேசிக் கொண்டனர்.. என்று போவது.. எனவும் பேசிக் கொண்டனர்.

நாட்கள் ஓடியது.. இன்று விசு அலுவலகம் கிளம்பிவிட்டான். தன் மருமகளும் மகனும் அதிகம் பேசுவதில்லையோ என எண்ணம் எழுகிறது வேதாவிற்கு.. திருமணம் முடித்த பெண் உடனே படிப்பு பற்றி தன்னிடம் கேட்கவும் கொஞ்சம் நெருட தொடங்கியது வேதாவிற்கு. 

எனவே தன் மகனிடம் இன்று பேச்சை ஆரம்பித்தார் வேதா “பவானியை, எங்கேனும் கூட்டி போ டா.. டெய்லி லேட்டா வர..  ஒரு மாசம் கூட ஆகலை கல்யாணம் ஆகி.. கொஞ்சம் எங்கையாவது போயிட்டு வாங்களேன் ரெண்டு பேரும்” என்றார்.

விசு “வேலை இருக்கும்மா..” என்றவன், பவானியை நிமிர்ந்தும் பாராமல் கிளம்பினான்.

வேதா “பவானிக்கிட்ட சொல்லிட்டு போ.. சாப்பாட்டுக்கு வருவியா.. எப்போது வருவாய்.. என எல்லாம் சொல்லனும். முன்போல இருக்க கூடாது” என்றார், வேறுவிதமாக ஆராய்ந்தார்.. அன்னை.

விசு “அம்மா.. இது டைம் பார்த்து முடியுற வேலை கிடையாது.. என்னால் டைம் எல்லாம் சொல்ல முடியாது.. சும்மா, புதுசா ஏதாவது கிளப்பாதீங்க..” என்றவன் அப்படியே சென்றுவிட்டான்.

செந்தில் வாசலில் சரியாக காரெடுத்து நின்றார்.

பவானி அந்த ஹாலில்தான் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள். காலை உணவை அவள்தான் பரிமாறினாள், விசுவிற்கு. வேதா அப்போது ஹாலில் அமர்ந்திருந்தார். 

இந்த உரையாடல் நடக்கும் போது பவானி நிமிர்ந்து தன் மாமியாரையும் பார்க்கவில்லை, கணவனையும் பார்க்கவில்லை. அப்போதே எதோ இருக்கிறது இருவர்க்குள்ளும் என புரிந்து போனது வேதாவிற்கு. சரி ஏதேனும் ஊடலாக இருக்கும் என எண்ணிக் கொண்டு, “வா பவானி நாம் சாப்பிடலாம்” என அழைத்து சென்றார் மருமகளை, ஒன்றும் அறியாதவர் போல.

 

மறுநாள் பவானியை கூட்டிக் கொண்டு அவள் சொன்ன கல்லூரிக்கு சென்றார் வேதா. கல்லூரியில் சீட் இல்லை என்றார்கள். பவானிக்கு முகமே வாடிபோய்தான் வீடு வந்தாள். ம்.. வேதா பெரிதாக அங்கே ஏதும் பேசவில்லை.. பொதுவாக பேசினாரே தவிர தங்களின் அதிகாரத்தை காட்டாவில்லை, சொல்லவில்லை. அமைதியாக வந்துவிட்டார்.

பவானிக்கு அதையெல்லாம் யோசிக்க தோன்றவில்லை, முக்கியமாக தெரியவில்லை. தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் ‘முன்னாடியே சொன்னேன் அப்பாகிட்ட.. ச்ச.. வேற இடத்தில் கேட்கணும்.. இந்த காலேஜ் அளவுக்கு இருக்குமான்னு தெரியலை’ என எண்ணியபடியே இருந்தாள்.

மாலையில் சிற்றுண்டி உண்ணும் போது.. வேதா, தன் மருமகளிடம்  “விசுவை பேச சொல்லேன் பவானி.. அவன், பேச்சு கொஞ்சம் எடுபடும்.. கேட்டு பார்ப்போமே..” என்றார் அசால்ட்டானக் குரலில், கண்டும் காணாமல் சொன்னார் மாமியார்.

பவானிக்கு ‘ஐயோ.. முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும்.. இப்போது போய் சொன்னால், என்ன ஆகும்.. ஏற்கனவே அந்த கண்ணை வைத்துக் கொண்டு, முறைக்கிறானா!.. எரிக்கிறானா!.. தெரியவில்லை. இதில் இப்போது போய் சொன்னால்.. என்ன செய்வான்..’ என தோன்றியது. எனவே பதிலே சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

வேதா அதன்பின் ஏதும் கல்லூரி பற்றி பேசாமல்.. வேறு பேசினார்.

பவானிக்கு, அவரின் பேச்சில் ஒன்ற முடியவில்லை.. தன் சிந்தனையிலேயே இருந்தாள். சற்று நேரத்தில் மேலே சென்றுவிட்டாள் பெண்.

எதோ பதட்டமாகியது பவானிக்கு.. ‘வேறு கல்லூரி பார்க்கலாமா? தூரமாக இருக்குமே.. விசு வேறு இங்கேயேதான்  சேர்த்து விடுவேன் என்றாரே.. பேசாமல் அவரிடமே கேட்டிருக்கலாம்’ என எண்ணிக் கொண்டே தவித்து போனாள் பெண்.

அதை யோசித்தபடியே  தன் அத்தை உண்ண அழைத்தும் “பசிக்கலை அத்தை, அப்புறம் சாப்பிடுறேன்” என சொல்லி அமர்ந்துக் கொண்டாள்., தங்களின் அறையிலேயே.

சற்று நேரத்தில் விசு, வந்து சேர்ந்தான். தங்களின் அறையில் பவானி இருந்தாள். விசு, ஏதும் கேட்காமல் தன் வேலையை பார்த்தான். இந்த நாட்களில்.. அவள் உள்ளே இருந்ததே இல்லை. எனவே, இப்போது விசுவை பார்த்ததும்.. பவானி வெளியே வந்தாள்.

விசு, குளித்து இலகு உடைக்கு மாறிக் கொண்டு.. கீழே உண்பதற்காக சென்றான்.

பவானி, கணவனை பார்த்தாலே.. நெருப்பு கோழி போல தலையை கீழே போட்டுக் கொள்வாள்.. இப்போது, எதையும் உணராமல் அமர்ந்தே இருந்தாள். விசு யோசனையோடே அவளை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான். மனதெல்லாம் மனையாளிடமே இருந்தது ‘என்னான்னு கேட்கலாமா’ என தோன்றினாலும். கேட்கவில்லை அவன்.. எப்போதும் போல ஒரு பிடிவாதம்.. வரட்டும் அவளே! என்ற பிடிவாதம் வந்து அமர்ந்துக் கொண்டது அவனிடம்.

தன்னறைக்கு சென்று உறங்க முற்பட்டான் விசு. படுக்கவே தோன்றவில்லை அவனுக்கு. ‘அங்கே தனியாக அவள் அமர்ந்திருக்கிறாள்.. என்னவாக இருக்கும்..’ என தோன்றியது.

எழுந்து வெளியே வந்தான் இப்போது. ஏதாவது கேட்போமா என எண்ணித்தான் வந்தான்.. நேராக அந்த கண்ணாடி கதவுகளை திறந்துக் கொண்டு பெரிய பால்கனியில் சென்று நின்றுக் கொண்டான், அவளை கண்டுக் கொள்ளாமல். இப்போதும் அவளின் அருகில் செல்ல எதோ தடுக்கிறது அவனை.

பவானி, கணவனை பார்த்ததும்.. அவசர அவசரமாக நினைவு வந்த நெருப்பு கோழி போல.. தலை வரை இழுத்து மூடிக் கொண்டு தன்னை அந்த சோபாவில் மறைத்துக் கொண்டாள்.. அவன் உற்றவன் என எண்ணாமல்.. மற்றவன் என எண்ணி. சில நிகழ்வுகள் அதுவாக மாறும்.. சிலதை வரிந்துக் கட்டிக் கொண்டு மாற்றினால் அன்றி மாறாது தானே. அப்படிதான் போல இதுவும்.

“தாமரை இலை நீர் நீ.. தானா..

தனியொரு அன்றில் நீ.. தானோ..

புயல்தரும் தென்றல் நீ… தானா..

புதையல் நீதானா..

நீ… 

ஒரு மல்லி சரமே..

மண்ணில்..

இலை சிந்தும் மரமே.. 

மின்னும்..

புது வெள்ளி குடமே..

உன்னை தேடும் கண்கள்…”

Advertisement