Advertisement

பத்மநாபன் “விசு ரொம்ப அமைதியானவன் டா.. நல்ல அறிவு.. குணமானவன்.. உன்னை கண்டிப்பா நல்லா பார்த்துப்பான் டா.. இப்படி அழுதா நல்லா இல்லை டா.. நீ தைரியமான பெண்.. எதுக்கு இப்படி அழற..” என பேசிக் கொண்டிருக்க.. பெண் அவரின் தோள் சாய்ந்து கேட்டுக் கொண்டே இருந்தாள்.

வாசுகியும் “என்ன பவானி இது.. அழாத, விசு மாப்பிள்ளை வந்தால், என்ன நினைப்பார்.. வா.. மணியாச்சு பாரு.. முகத்தை துடை..” என சமாதானம் செய்தார். பவானி எதற்கும் அசையாமல் இருந்தாள்.

வாசுகி தன் கணவரிடம் “ஏங்க.. நீங்க மாப்பிள்ளையை போய் பாருங்க..” என சொல்ல.. அவரை எழவே விடவில்லை மகள்.

அங்கே விசுவிடம் சொல்லிக் கொண்டு எல்லோரும் கிளம்பியிருந்தனர் வேதாவின் வீட்டிற்கு.. புதுமண தம்பதியை வரவேற்க கிளம்பியிருந்தனர். விசு தன் அறையிலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தான்.. 

அங்கே இப்போது ஹரீஷ் வந்தான், பவானியின் தம்பி. இப்போதுதான் கல்லூரி சேர்ந்திருக்கிறான்.. அக்ரிகல்சர் படிப்பில் சேர்ந்திருக்கிறான். காலையிலிருந்து கூடவே இருந்ததனால்.. அங்கே அக்கா அழவும்.. வாசுகி அனுப்பி வைத்தார் இவனை இங்கே.

எனவே வந்து “மாமா.. காபி ஏதாவது குடிக்கிறீங்களா.. அம்மா கேட்க சொன்னாங்க” என்றான்.. முகத்தில் கண்ணாடி அணிந்துக் கொண்டு, அதை ஒரு விரலால் தூக்கி விட்டபடி பவ்யமாக கேட்டான் மைத்துனான்.

விசு இப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான் “வா ஹீரிஷ்.. உட்கார்..” என்றான்.

ஹரீஷும் இயல்பாய் அருகில் அமர்ந்தான்.. “மாமா காபி..” என்றான்.

விசு “ம்.. லைம் ஜூஸ் குடிக்கலாமா?” என்றான்.

ஹரீஷ் “ம்..” என்றவன் தானே இண்டர்காம் எடுத்து ஆர்டர் செய்தான்.

ஹரீஷ் “மாமா உங்க நம்பர் சொல்லுங்க” என கேட்டான்.

விசு சொல்ல “இரண்டு முறை ‘டபிள் செவென்..’ “ என மீண்டும் மீண்டும் கேட்டான் ஹரீஷ். விசு “என்ன டா…” என்றான்.

ஹரீஷ் “இல்ல, கன்ப்ஃயூஸ் ஆகிடுச்சி..” என்றான்.

விசு “ம்.. “ என திரும்பவும் சொன்னான்.

ஹரீஷ் சரியாக நோட் செய்துக் கொண்டான்.. அவனே “அது மாமா கண்ணாடி போட்டிருக்கேன்ல்ல.. அதனால காது அடிக்கடி கேட்கமாட்டேங்கிது” என்றான் விளையாட்டாய்.

விசுவிற்கு முற்றிலும் வேறு யோசனை.. ‘இவன் இங்கே வந்திருக்கிறான்.. பவானியை காணோமே..’ என எண்ணிக் கொண்டிருந்தவன் இந்த வார்த்தையில் சிரித்தான் “மூக்கு மேல இருக்கிறதால.. மூச்சு விட முடியுதா” என்றான் அவனின் தோளை அழுத்தி பிடித்து.

ஹரீஷ் சிரித்தான் “இல்ல.. டென்ஷனா இருக்கீங்கன்னு சும்மா ஒரு மொக்கை ஜோக் மாமா ” என்றான்.

இப்போது ஜூஸ் வர.. இருவரும் பருகினர். பின் விசு “வா.. மாமாவை பார்த்துட்டு வரலாம்” என கூட்டிக் கொண்டு சென்றான் அவர்களின் அறைக்கு.

கதவை தட்டிவிட்டு.. உள்ளே வந்தனர் இருவரும். விசுவை யாரும் எதிர்பார்க்கவில்லை இங்கே.. என எல்லோர் முகத்தில் தெரிந்தது. 

விசு, உள்ளே வந்ததும்.. பத்மநாபன் “வா ப்பா..” என்றார்.

பவானி தன் தந்தையின் கையை இறுக பற்றிக் கொண்டே எழுந்தாள்.. விசு அவளின் கையும் முகத்தையும் பார்த்தான் ஒரு நொடி.. பின், தானே அமர்ந்துக் கொண்டான் ஒரு சேரில். பவானி கண்களை துடைத்துக் கொண்டே அமர்ந்தாள்.

பத்மநாபன் “போலாம்மா ப்பா.. வாசுகி, கிளம்பலாம்” என்றார்.

பவானியை, விசு பார்த்தான் அர்த்தமாய். இப்போது அதை பார்த்த பத்மநாபன் “அது.. சும்மா.. என்னமோ கல்யாணம் ஆகி வேற ஊர் போகிறா போல அழறா.. நீ வா விசு.. உன் காரில் நீங்க ரெண்டு பேரும் வந்திடுங்க.. பவானிம்மா.. முகம் கழுவி வா..” என்றார் அதட்டலாக.

தன் தந்தை சொல்லவும் பவானிக்கு இன்னும் மளுக்கென கண்ணீர் எழுந்தது.. அதை துடைத்துக் கொண்டே ரெஸ்ட் ரூம் உள் சென்றாள் பெண்.

விசுவும் பத்மநாபனும் வெளியே வந்தனர். ஹரீஷ் தன் தந்தையிடம் வந்து “ப்பா.. சாவி கொடுங்க.. பார்க்கிங் போய் எடுத்து வரேன் காரை” என்றான். பத்மநாபன் “மாமாவிடம் முதலில் கேளுடா..” என்றார்.

ஹரீஷ் “அவர் கார் டெக்கேரெட் செய்து ஹோட்டல் வாசலில் நிற்குது ப்பா” என்றான்.

பத்மநாபன் சாவியை கொடுத்தார் மகனிடம். விசுவும் பத்மநாபனும் எதோ பேசியபடியே வராண்டாவில் நின்றனர்.

சற்று நேரத்தில் வாசுகியும் பவானியும் வெளியே வந்தானர். வாசுகி “நீங்க முன்னே போங்க மாப்பிள்ளை” என சொல்லி மணமக்களை ஜோடியாக அனுப்பி வைத்தார் முன்னே. பவானி தன் தந்தையை பார்த்துக் கொண்டே தயங்கியபடியே விசுவின் கூடவே சென்றாள்.

விசு ஏதும் கேட்கவில்லை.. அவளை பார்க்கவும் இல்லை.. முன்னே நடந்தான்.. லிப்டில் இருவரும் அமைதியாக இறங்கினர். அடுத்த லிப்டில் பத்மநாபனும் வாசுகியும் வந்து சேர்ந்தனர்.

பெண் மாப்பிளையை வழியனுப்பி வைத்துவிட்டு, தாங்கள் தங்கள் காரில் ஏறி, அவர்களை பின் தொடர்ந்தனர்.

பவானிக்கு காரிலும் ஒரு அன்ஈஸி பீலிங்.. அழுது தீர்த்துவிட்டாள். எனவே கண்ணீர் வரவில்லை இப்போது, பயம்தான் இருந்தது. ‘சொல்லி விடலாமா.. நான் படிக்கணும்.. அப்புறமா நம்ம வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்..’ என பேசிவிடலாம். ஆனால், எப்படி ஒத்துக்குவாங்க.. ச்ச.. MBA சேர்த்து விடுறேன்னு சொன்னதால்தானே.. கல்யாணத்திற்கு ஒத்துகிட்டேன்.. எப்படியோ.. நானும்  வேஸ்ட்.. கல்யாணம், குழந்தை, குடும்பம்.. அப்படிதான் என் வாழ்க்கை..’ என எதேதோ எண்ண ஓட்டத்தோடு தன் கைவிரல்களை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

விசுவிற்கு நல்ல மனநிலை.. ஆனால், இவளின் அழுது வடியும் முகம்.. அந்த மனநிலையை மாற்றியது. கணவனான அவனிற்கு ஆயிரம் கற்பனைகள்.. கனவுகள்.. இயல்புதானே எல்லாம். கலகலவென பேசிக் கொண்டே காதல் வழியும் கண்களால் மனையாள் தன்னை பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே ஓரபார்வையாக அவளை பார்க்க.. ஏமாற்றமே மிஞ்சியது அவனிற்கு.

புது மாப்பிள்ளைக்கு யோசனை.. கல்யாணம் இயல்பாய் நடந்துவிட்டது, ஆனால், இனி ‘எங்களுக்கு’ என தொடங்க இருக்கும் வாழ்க்கை.. அது தொடங்குமா!.. காலையிலிருந்து உடனிருக்கிறேன்.. தாலியும் கட்டியிருக்கிறேன்.. கொஞ்சமும் கண்மலர்ந்து என்னை பார்க்கவேயில்லை என் மனையாள்.. ம்.. இப்படியே நீண்டு விடுமோ என் காலம்..’ என எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

தன் வீடு வர.. தானாக கைகள் காரை நிறுத்தியது. மெதுவாக இறங்கினான். பவானியும் இறங்கினாள். பத்மநாபன் குடும்பமும் வந்து சேர்ந்தது.

முறையாக பெண்மாப்பிள்ளையை ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். முக்கிய உறவுகள் மட்டுமே இருந்தனர். விசுவின் அறை.. இரவு சடங்கிற்கு என ரெடியாகி இருந்தது. நேரம் சென்றதால்.. யாரும் ஏதும் பேச்சை வளர்க்காமல்.. விசுவையும் பவானியையும் ஆசீர்வாதம் செய்து மேலே அனுப்பினர்.

பவானிக்கு, முகமே மாறி போகிற்று பயத்தில்.. தன் தந்தையின் கையை பிடித்தாள்.. வாசுகி அமைதியாக யார் கண்ணிலும் படாமல் அதை எடுத்துவிட்டு.. அவளை மேலே அனுப்பினார்.

விசு முதலில் சென்றுவிட்டான். பின்னாடியே வந்தாள் மனையாள். விசு வந்தவன்.. உடைமாற்றும் அறைக்கு சென்றான். அது தனியாக இருந்தது.. ரெஸ்ட் ரூமோடு சேர்ந்தார் போல இருந்தது. 

பவானி வந்தவள் அந்த அறையின் அலங்காரத்தை பார்த்து அதிர்ந்துவிட்டாள்.

எதோ அதற்கென வேலையாட்களை கொண்டு அந்த அறையை டெக்கேரெட் செய்திருப்பார் போல.. பெரிய இதயவடிய ரோஜா பூங்கொத்து சுவரில் இருந்தது, பெட்டில்.. முல்லை மலர் தூவி கிடந்ததது.. அறையில் முழு ஏசி.. லேவண்டேர் மணத்தோடு மென் தென்றலாக வீசிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே பிங் பலூன்கள்.. அரோமா கேண்ட்லஸ் என அறை தேவலோகமாக இருந்தது.

பவானி அந்த அறையில் எதையும் தொடாமல் ஒரு ஓரமாக நின்றாள்.. எல்லாவற்றையும் வெறித்து பார்த்துக் கொண்டு.

விசு வந்தான் உடை மாற்றிக் கொண்டு. ஓரமாக நின்றிருந்த பவானியை பார்த்தான்..  ப்பர்ப்பிள் வண்ண மென்பட்டில் அந்த அறையில் ஒரு பூவாக மலர்ந்து இருந்தாள் அவன் கண்களுக்கு. 

ஆனால், அவள் முகத்தை பார்த்தாளே.. அவளின் அருகில் செல்ல தோன்றவில்லை அவனிற்கு. ஒரு பெருமூச்சோடு வந்து அமர்ந்தான் கட்டிலில்.

பவானி, என்ன செய்வது என தெரியாமல் அப்படியே நின்றாள். விசுவிற்கு சங்கடமாக இருந்தது.. “உன் டிரஸ் எல்லாம் அங்க டிரெஸ்ஸிங் ரூமில் இருக்கு.. சேன்ஜ் செய்துக்கிறீய..” என்றான்.

பவானி ஏதும் சொல்லாமல் கடகடவென உள்ளே சென்றுவிட்டாள். எதோ காட்டன் சுடி இருந்தது.. எடுத்து அணிந்துக் கொண்டாள்.. முகம் கழுவி வந்தாள் வெளியே.

விசு, பெட்டில் இருந்த முல்லை பூக்களை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். இவள் வரவும் கண்ணில் ஆசையோடு ஒரு நொடி அவளை பார்த்தான்.. ஆனால், அப்படி பார்ப்பது அவனுக்கே அபத்தமாக தெரிய.. ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

பவானி அதுவே போதுமென தன் பக்கம் இருந்த பூக்களை.. தள்ளி விட்டு, போர்வையை எடுத்து தலைவரை போர்த்திக் கொண்டு உறங்க தொடங்கினாள். மனசாட்சியே இல்லாமல் உறங்க தொடங்கினாள். உரிமை கொண்டவனை சற்றும் நினைக்காமல் உறங்க தொடங்கினாள் பெண். அப்படி எல்லாம் உறக்கம் வந்துவிடுமா என்ன? உறக்கமே.. வரவில்லை அவளிற்கு.

விசுவிற்கும் உறக்கம் வரவில்லை.. அறைக்கும் வர மனதில்லை.. அந்த  பெரிய பால்கனியில் பாதி நிலவை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.. புதுகணவன்.

“பால்வெளியை கடல் ஆக்கவா..

வளர்பிறையை படகாகக்கவா..

நிலவொளியை வலையாக்கவா…

உன் நிழலை சிலையாக்கவா..

என்ன நான் செய்வேன்…

உன்கூட சேர…

என்ன நான் செய்வேன் 

உன் கூட சேர..”

Advertisement