Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

13

விஸ்வநாதன் பவானியின் திருமணம் காலை ஆறு மணிக்கே தொடங்கியது.. அளவான சொந்தங்களோடு தொடங்கியது திருமண விழா. சபையின் நடுவில் வீராவின் படம் ஒரு டேபிளில் வைத்திருந்தனர். விசு மணமேடையில் அமரும் முன், தன் தந்தை தாயின் அருகில் வந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மேடையில் அமர்ந்தான்.

அழகாக ஜெல் வைத்து வாரிய சிகை.. வெண்பட்டு வேட்டி.. அதில் லேசான தங்கநிற ஜரிகை, தன் தோளின் மேலே அங்கவஸ்த்திரம் மெரூன் வண்ணத்தில், கையில்.. காப்பர் நிற வாட்ச்.. கழுத்தில்  யானை டாலருடன் கூடிய சின்ன செயின், அதை மறைத்து, மல்லிகை மாலையும் சமங்கி மாலையும் அணிந்திருந்தான். நெற்றியில் திருநீறும் சந்தனமும்.. மணந்தது. முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து லேசான புன்னகையை பூசிக் கொண்டே.. எல்லோரையும் வரவேற்றுக் கொண்டே.. அய்யார் சொன்னதையும் செய்துக் கொண்டிருந்தான் மாப்பிள்ளை.

சற்று நேரத்தில் பெண் பவானி.. பவனி வந்தாள் மணமேடைக்கு. அழகான மிளகாய் சிவப்பில் பட்டுடுத்தி.. குடை ஜிமிக்கைகள் அசைய.. மென்னடையோடு வந்து அமர்ந்தாள் விசுவின் அருகில். அவளின் பதட்டம் அவளிற்கே, அதிகபடியாக தெரிகிறது.. அவளையும் மீறி உள்ளங்கைகள் வேர்க்க.. நெற்றியில் பனித்துளி போல வேர்வை துளிர்விட, இதயம் என்பதே துடிப்பதற்கு அல்ல அதிர்வதற்கு என மென்னடையோடு.. வந்து அமர்ந்தாள். உரசும் தூரத்தில் அவனும் இருக்க.. அமைதியாக இருக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள் பவானி.

விசுவிற்கு, திரும்பிப்பார்க்க தோன்றியது அவளை.. ‘எப்படி இருக்கிறது அவள் முகம்.. எல்லாம் ஓகேவாக இருக்குமா.. அவளின் கண்ணில் ஏதேனும் கலக்கம் தெரிகிறதா..’ என பார்க்கத் தோன்றியது அவனிற்கு. யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் திரும்பி அவளை பார்த்தான்.. ஆனால், அவளின் ஒப்பணையில் ஏதும் தெரியவில்லை.. மைதீட்டி அழகாக பெரிதாக தெரிந்த அவளின் கண்ணில் ஏதும் தெரியவில்லை அவனிற்கு. 

அதற்குமேல் அவளை பார்க்க நேரமில்லை விசுவிற்கு, பெரியவர்கள் சொல்லுவதை செய்யவும்.. அய்யர் சொல்லும் பூஜையை செய்யவும் சரியாக இருந்தது, அவனிற்கு.  

நிமிடங்கள் கடக்க.. மங்களநாணில் பொன்கோர்த்து.. அவனின் கையில் கொடுத்தார் அய்யர்.. சபைக்கு அதை தூக்கி காட்டியவன்.. தன்னவளின் முகத்தை பார்த்தான். நிமிரவேயில்லை அவள்.. 

அய்யர் “நேரம் ஆர்துப்பா..”என்றவர் “மாங்கல்யம் தந்துனாநேனா..” என மந்திரம் முழங்க தொடங்கவும்.. விசு, மெதுவாக அவளின், மாலைகளை விரல்களால் விலக்கி.. பொறுமையாக அவளை பார்த்துக் கொண்டே ‘மனம் ஒத்து வாழ வேண்டும் இறைவா’ என வேண்டிக் கொண்டே முடியிட்டான்.. மூன்றாம் முடியிட அவர்களின் வழியில் சின்ன பெண் ஒன்று வந்து நின்றது.. ஆறாம் வகுப்பு படிக்கும் போல.. அழகாக பாவாடை உடுத்தி.. நின்றாள் அருகில். வேதா எதோ சொல்ல.. பாவனியின் கழுத்தில் தெரிந்த மஞ்சள் கயிரை தொட்டு தந்தது அந்த குட்டி பெண்.. மீண்டும் விசுவே மூன்றாம்  முடியிட்டான். 

அட்சதைக்களும்.. மலர்களும்.. வாழ்த்துகளும்.. குவிந்தது இவர்களின் இடம் நோக்கி. எழுந்து நின்று சபையை வணங்கினர் இருவரும். விசு இப்போதுதாவது பார்ப்பாளா! என பார்த்தான். ம்கூம்.. திரும்பவில்லை பவானி. 

மீண்டும் அய்யர் குங்குமத்தை அவளின் நெற்றியில் வைக்க சொன்னார் விசுவை. பரபரப்பில் விசு, லேசாக அவளை அணைத்தவாறு அவளை நன்றாக தன்னை நோக்கி இழுத்தபடி தன் மோதிர விரலால் அவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான்.

இது நேரம் வரை அழாதவள், அவனின் இந்த செய்கையில் அவளின் கண்ணில் நீர் கசிந்தது.. இப்போது மாங்கல்யத்தில் குங்குமம் வைத்தவனின் விரல்களில் அவளின் கண்ணீர் துளி விழுந்தது.

விசு அதை கண்டு, அவளை பார்க்க.. இப்போதுதான் பவானி, அவனை பார்த்தாள்.. பார்த்தவள்.. கண்களை லேசாக துடைத்துக் கொண்டு.. ஒரு அனிச்சையான புன்னகையுடன் ‘ஒண்ணுமில்லை’ என்பதாக அவனை பார்த்து இடவலமாக தலையசைத்தாள் பெண். விசுவிற்கு அதுவே போதுமானதாக இருந்தது.. பாதை மூடிய இருளில்.. அவளின் அனிச்சம் புன்னகை எதோ விடிவெள்ளியாக அவனுக்கு தோன்றியது.

அய்யர் அதற்குள் அக்னியை வலம்வர.. சொல்லி, பெண்ணின் கையை பிடிக்க சொன்னார் விசுவை. அவன் கையை நீட்டினான் அவள்புறம்.. பெண்ணும் கையை நீட்டினாள் அவன்புறம்.. அவன்தான் பற்றிக் கொண்டான் அவள் கையை.. பற்றிய கைகளில், அவள் உணர்ந்தது ஒரு குளிர்ச்சியை. மெதுவாக அவனை பின்தொடந்து சென்றாள் பெண். அடுத்து மெட்டி அணிவித்தான் விசு.. அருந்ததி பார்த்தனர் இருவரும்.

இப்படி ஒவ்வொன்றாக முறையாக நடந்தது. இருவீட்டிற்கும் சென்று வந்தனர் மணமக்கள். நேரமே இல்லை.. பெரியவர்களும்.. சடங்குகளும் இருவரையும் அமரவிடவில்லை. 

மதியம் உண்டு.. அரைமணி நேரம் உறங்கி எழுந்து, மேக்கப்பிறகு கிளம்பினாள் பவானி. மாலையில் ஆறுமணிக்கு ஹோட்டலில் வரவேற்பு. 

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் மணமக்கள் நின்றனர். பவானி ஓட்ட வைத்த புன்னகையோடு நின்றாள்.. உறவினர்கள் யாரும் அருகில் வரவில்லை. விசு, முக்கியமானவர்களை அறிமுகம் செய்தான்.. அவளிற்கு. கரம் குவித்தாள் பெண். மற்றபடி அதிகம் பேச்சு இல்லை இருவருக்குள்ளும். இயல்பாக, சென்றது.. 

அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்று.. அவர்களோடு பேசி நின்றனர். பவானியின் நண்பர்கள் பத்து பேர் வந்திருந்தனர்.. இப்போது. அவர்கள் மேடையேறவும் பவானிக்கு கண்ணீரை நிறுத்தவே முடியவில்லை.. அழுகையாக வந்தது.. கூடவே சிரிப்பும் வந்தது. எல்லோருக்கும் அப்படியே ஒரு கலவையான உணர்வு. 

விசு அந்த நண்பர்களிடம் தன் மனைவியை விட்டுவிட்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டான் சிரித்தபடியே.  அதை பார்க்கவே நன்றாக இருந்தது. 

நண்பர்கள் ஆண் பெண் பேதமின்றி மேடையில் எல்லோரும் பவானியை கட்டிக் கொண்டு சின்ன அழுகை.. ஏனென்றே தெரியவில்லை.. ஒரு இரண்டு நிமிடம் அந்த மேடை நண்பர்கள் வசம் வந்தது.

மெதுவாக எல்லோரும் விலகினர்.. பின் கிண்டல் செய்ய தொடங்கினர். ராகவ் “இப்போவே விசு ஓரமா நிக்கறார்.. வாங்க விசு.. வாங்க” என அவனையும் அழைத்து எல்லோருமாக நின்று பூங்கொத்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர், சிரித்த முகமாக. அந்த சிரிப்பில் பவானியின் முகம் மலர்ந்து இருந்தது.

அடுத்து விசுவின் நண்பர்கள் வந்தனர்.. எல்லோரும் குடும்பத்துடன் வந்தனர். எல்லோரையும் அறிமுகப்படுத்தினான் விசு. பவானி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். விசு, எப்படி தன் நண்பர்களை மதித்தான் என பார்த்தவள், தானாகவே இரண்டொரு வார்த்தை.. அவர்களின் குழந்தைகள், மனைவிகளிடம் அக்கறையாக பேசினாள் பவானி. விசுவிற்கு இது பிடித்திருந்தது. அவள் பேசுவதை கவனித்தபடி நின்றுக் கொண்டான்.

வரவேற்ப்பு இனிதாக முடிந்தது. உண்டு முடித்து, ஹோட்டலின் அறையில் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள் பவானி. விசு வேறொரு அறையில் இருந்தான். தன் அன்னை தந்தை இருக்கும் அறைக்கு சென்றாள் பெண்.. அப்போதுதான் அங்கு வந்த வேதா ‘மணமக்களை தான் அழைத்து செல்லுவதாக’ சொல்லிக் கொண்டிருந்தார். 

அதை கேட்டதும் பவானி ஒரே அழுகை, சத்தமில்லாமல். இது முன்னரே முடிவு செய்யப்பட்டதுதான், பவானிக்கு தெரியாது. இப்போது வேதா மருமகளின் கன்னம் வருடி.. “ரெடியா டா..” என கேட்டார்.

பவானி தன் தந்தையை கண்களால் தேடினாள். அவரின் அருகே சென்று நின்றுக் கொண்டாள்.. அவரின் தோளில் சாய்ந்தவள் அழ தொடங்கினாள்.

வாசுகிக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது ‘அண்ணி ஏதாவது சொல்லிட போறாங்க..’ என எண்ணி “இதோ வந்திடுவா அண்ணி.. அப்பா செல்லம், அதான்.. இதோ அனுப்பி வைக்கிறேன்” என்றார் அவசரமாக.

வேதா “பரவாயில்லை.. இருக்கட்டும், நானும் எங்க உறவுகளும் முன்னே போறோம்.. நீங்க விசுவையும் என் மருமகளையும் கூட்டிட்டு வந்திடுங்க..” என்றவர் விடைபெற்று சென்றார்.

வாசுகி, திட்ட தொடங்கிவிட்டார் மகளை ‘அறிவிருக்க.. உன் மாமியார் அவங்க. எப்படி ஆசையாக கேட்கிறாங்க.. அப்பாகிட்ட வந்து நிக்கிற.. வாங்க அத்தை, அப்படின்னு சொல்லி.. அவங்க பக்கத்தில் போய் நிக்கணும், இதெல்லாமா சொல்லி தர முடியும்.. போ.. முகத்தை கழுவிட்டு வா.. அப்பா போய் மாப்பிளையை கூட்டிட்டு வரட்டம்” என பொறிந்தார்.

பத்மநாபன் “ஆமாம் டா..” என்றார்.

பவானி “அப்பா.. இப்போவே அங்க போகணும்மா ப்பா, பயமா இருக்கு ப்பா..” என சொல்லி ஒரே அழுகை, தந்தையின் கையை விடவேயில்லை பெண்.. பத்மநாபனும் அமர்ந்துக் கொண்டு தன் பெண்ணை தோளில் சாய்த்துக் கொண்டார் “இல்ல டா, நாளைக்கு, அங்க வந்திடுவ டா.. இதென்னா வேற இடமா.. ஊரா.. அடுத்த தெரு, தினமும் பார்க்கலாம்..” என ஏதேதோ சமாதானம் செய்துக் கொண்டிருக்கிறார்.

பவானிக்கு,  இது நேரம் வரை ஏதும் தெரியவில்லை.. ஆனால், இப்போதே போக வேண்டுமா? என எண்ணிக் கொண்டே அழுகை. மேலும் அடுத்து நடக்க போகும் சடங்கை நினைத்து சொல்ல முடியாத அழுகை வந்தது பெண்ணுக்கு. எல்லாம் தெரியும்தான், திருமணம் என்றால்.. அடுத்து என யோசிக்க முடியும்தான்.. அவளால். ஆனால் அது நெருங்க நெருங்க.. பயம் அழுகை.. தயக்கம்… என எல்லாம் சேர்ந்துக் கொண்டது.. கைகள் நடுங்க.. தன் தந்தையின் கைகளை பிடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

Advertisement