Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

11

தன் தந்தைக்கு திதி கொடுத்துவிட்டு.. எல்லோருக்கும் உணவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு வீடு வந்தவன் மனது.. பத்மநாபன் கேட்ட வார்த்தையிலேயே நின்றது. ‘என்ன செய்வது..’ என எண்ணம். அப்படியே தன்னறையில் வந்து உறங்க முற்பட்டான்.. உறக்கம் வரவில்லை.. செந்திலும் அடிக்கடி அழைத்துக் கொண்டே இருந்தார். எனவே பெரிதாக அவளை பற்றி யோசிக்கவும் முடியவில்லை.. உறக்கமும் வரவில்லை. 

மாலையில்தான் அவளுக்கு அழைத்தான் அவள் ‘விருப்பம் என்ன’ என கேட்பதற்காக. ஏனெனில், அவளுக்கு ஒருவேளை தன்னிடம் விருப்பம் இல்லை எனில்.. தான், தன்மேல்.. பழி வராமல் காத்துக் கொள்ளலாம் என எண்ணம் வந்தது விசுவிற்கு. எனவே அவளை அழைத்தான்.

நிறைய டென்ஷனோடு அவளிடம் பேசத் தொடங்கினான். ஆனாலும். அவள் ‘என்னை பற்றி தெரியும் உங்களுக்கு’ என தானாகவே தன்னை பற்றி அவள் சொன்ன போது..  அவன் மனது என்னமோ செய்து.. ‘அ..அது.. நானாக இருந்தால் இப்படி சொல்லுவேனா’ என ஒரு எண்ணம்.. அப்படி படிக்கும் வயதில்.. எ..எதோ நிகழ்வதுதான்.. என எண்ணம் வர… விசுவிற்கே தன்மீதே கோவம் வந்தது.. ‘நான் ஏன்.. அவளுக்காக யோசிக்கிறேன்’ என தோன்ற.. அப்போதுதான் விசு சொன்னான் “என் விஷயம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என தன்மீதான கோவத்தை.. எரிச்சல் வார்த்தைகளாக அவள் மீது காட்டினான். மேலும், அவள் படிப்பதற்கு சட்டென கேட்டதும்.. அழுகாமல்.. நன்றாக பேசியதும்.. அவனை கொஞ்சம் அசைத்தது.. மீண்டும் அவள்மீது ஒரு உணர்வு வந்தது.. ஈர்ப்பு என அல்ல.. ஒரு சாஃப்ட் கார்நெர் என்பார்களே அதேபோல.. ஒரு சலனம் வந்தது. கொஞ்சம் சரியாகத்தான் இருக்கும் போல.. என எண்ணம் வந்தது. 

எனவே, பவானியின் பேச்சையும்.. அவளின் குரலையும் அசைபோட்டபடி சின்ன மர ஸ்டூலில், அமர்ந்தான்.  எதிரில் பூஜை அறை, அதில் எப்போதும் எரியும் தீபம் இவனின் கண்ணில் பட்டது.. அந்த பூஜை அறையின், வாசலில் இருபுறமும்.. கஜ முகம்.. அதாவது தூக்கிய துதிக்கையுடன் இரண்டு யானை முகம் வரவேற்பது போல.. ஜெய்பூர் வேலைபாடுகள் கொண்ட அழகான சிற்பம் உண்டு. இவனிருக்கும் இடத்தில் இப்படி யானையின் படமோ.. சிற்பமோ.. பொம்மையோ இருக்கும்.. என்னமோ யானை என்றால் அவனுக்கு ஒரு குட் வைப்.. குட் சைன்.. என தோன்றும். எனவே, அதனை இப்போதும் பார்த்தபடி, பவானியின் பேச்சை அக்கு அக்காக சிந்தித்தபடி அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் பக்கவாட்டில் நகர்ந்து தன் தந்தையின் படம் இருக்கும் இடத்தில் அந்த படத்திற்கு நேரே அமர்ந்தான். தொழில் குறித்து முடிவெடுக்க அவனுக்கு தெரியும்.. ஆனால், இந்த உறவு சிக்கலை, உணர்வுபூர்வமான இந்த சிக்கலை கையாளத் தெரியவில்லை அவனுக்கு. 

அன்னை இதற்கு முழு எதிர்ப்பு என தெரியும்.. எனவே அவரிடம் எதையும் பகிரவே முடியாது. அதனால் என்னமோ, தந்தையிடம் கண்மூடி அமர்ந்தான், அவரிடம் கொட்டினான் தன் மனதை. 

அவர் விடை ஏதும் சொல்லவில்லை.. ஆனால், மனதை நிலைகொள்ள செய்தார் அவளிடம். அப்படிதான் போல, அரைமணி நேரம் சென்று கண்விழித்தவனுக்கு, பவானியை வெறுக்க தோன்றவில்லை. ஏதேதோ எண்ணங்கள்.. எல்லாவற்றுக்கும் விடை என ஏதும் வரவில்லை ஆனால், அவளை தாண்டி வேறு பெண் என்பதை அவனால் யோசிக்க முடியவில்லை போல.

விசு, பத்மநாபனிடம் அழைத்து சொல்லிவிட்டான் “அங்கிள்.. நீங்க வீட்டுக்கு வாங்க” என்றான் ஒரே வார்த்தையில். அவரும் சந்தோஷமாக “ஆறரை மணிக்கு வருகிறேன் விசு.. நீ இரு ப்பா, வீட்டில்” என சொல்லி போனை வைத்தார்.

விசுவிற்கு, தன் அன்னையிடம் பேசும் எண்ணம் இப்போது இல்லை போல, முதலில் அங்கிள் முறையாக பேசட்டும் என எண்ணிக் கொண்டான். 

பின்தான் சற்று நேரம் உறங்கினான்.. நல்ல உறக்கம், மனது அமைதியாக இருக்கும் போது வரும் உறக்கம்.

மாலையில் பத்மநாபனும் வாசுகியும் வந்தனர். வேதா வரவேற்று.. குடிப்பதற்கு கொடுத்தது பேசிக் கொண்டிருந்தார். வேதாவின், மனதில் ‘இவர்கள் ஏன் இந்த நேரத்தில்’ என்ற கேள்வி இருந்தே இருந்தது.. அதை காட்டிக் கொள்ளாமல்..பேசிக் கொண்டிருந்தார்.

பத்மநாபன் ‘எப்படி ஆரம்பிப்பது.. இன்னமும் விசுவை காணோமே’ என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தார். பொதுவான விஷயங்கள் பேசி முடித்து, அடுத்து என்ன.. என்ற பார்வையில் வேதா வந்து நின்றார்.

திடமாக பத்மநாபன் “அது ம்மா, பவானி விசு கல்யாணம் விஷயமா பேசலாம்ன்னு வந்தோம்.. இன்னிக்கு வீராவின் திதி.. இப்போ.. இந்த நாள்தான் சரியா இருக்கும்ன்னு எனக்கு தோணிச்சி.. நீ சொல்லும்மா” என்றார்.

வேதா “நான் என்ன சொல்றது.. அ..அது அப்போது, உங்களுக்கு முடியலை அதனால் எதோ விசு ஆர்வத்தில் செய்துட்டான். இந்த காலத்தில் இதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு..” என்றார், ஒட்டாத குரலில்.

பத்து “அ..அப்படி சொல்ல கூடாது வேதா.. வீரா இருந்திருந்தால், இப்படி சொல்லி இருக்கமாட்டான்..” என்றார்.

வேதாவிற்கு, கோவம்.. முகத்திற்கு நேரே பேச முடியாத ஒரு வன்மம் எப்போது உண்டே.. பத்மநாபனின் மேல். எனவே, மனதில் ‘எப்படி அவள் இங்கே வருகிறாள் என பார்க்கிறேன்..’ என்ற எண்ணம் எழுந்தது.  

வேதா அமைதியாக இருந்தார்.. பத்மநாபனின் வார்த்தைகளில். 

பத்மநாபன் “அவன் இடத்தில் இப்போது நீதானே ம்மா இருக்க.. எப்போது பெண் கேட்டு வரீங்க.. இ..இது எப்படி நடந்ததுன்னு புரியலை.. எதோ கடவுள் சித்தம் மாதிரி தோணுது..” என்றார்.

வேதா “ண்ணா.. அப்படி எல்லாம் சட்டுன்னு முடிவு பண்ணாதீங்க.. விசுவிற்கு விருப்பம் இருக்கா இல்லையா தெரியலை.. அவன் சின்ன பையன், நான் பேசிட்டு சொல்றேன்..” என்றார். மகன் தன்னை மீறிவிட்டான் என தெரிந்ததே அவருக்கு. ஆனாலும், விட்டுக் கொடுக்காமல் நான் இன்றி ஏதும் நடக்காது என பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அன்னை.

பத்மநாபனிற்கு, விசு தன் மகளிடம் பேசிவிட்டான் என சொல்வதற்கு நா எழுந்தது.. ஆனாலும், அமைதியாக “விசு அப்படி மறக்கும் ஆள் இல்லையே வேதா. விசு இருக்கானா?” என்றார்.

வேதாவிற்கு என்ன சொல்லுவது என தெரியாமல் “பார்க்கணும்..” என்றார்.

பத்மநாபன் “வேதா, எனக்கு புரியுது உன் நிலைமை. ஆனால், இது நாம் முடிவு செய்தது இல்லை.. கடவுளின் சித்தம். அத்தோடு, நீயும் வீராவும் எனக்கு வேறல்ல.. வீராவின் இடத்தில் இப்போது நீ இருக்கிறாய்.. நீ யோசித்து நல்ல முடிவாக எடுத்து.. இந்த நல்ல நிகழ்வை சீக்கிரம் நடத்தி வைப்பேன்னு நினைக்கிறேன்.” என்றவர் விடைபெறும் விதமாக எழுந்துக் கொண்டார்.

வாசுகியும், வேதாவும் அனிச்சையாய் எழுந்துக் கொண்டனர்.. ஏனோ வேதாவிற்கு, பத்மநாபனை சரியாக புரிந்துக் கொள்ள முடியாமல் போனது ‘எப்படி பேசுகிறார்.. தேன் தடவிய வார்த்ததைகளில் எப்படி பேசுகிறார் மனிதர்’ எனதான் தோன்றியது.

வேதா பத்மநாபனின் வார்த்தைகளுக்கு தலையசைத்தார். வாசுகி வேதாவை ஊன்றி பார்த்தார்.. அதே ஒதுக்கம், அதே காதில் வாங்கிக் கொள்ளாத பாவம்தான் தெரிந்தது. தம்பதிகள் விடைபெறும் விதமாக தலையசைத்து நகர், பத்மநாபன் முன்னால் சென்றார்.

வாசுகி பின் தங்கிக் கொண்டார் “அண்ணி, விசு உங்கிட்ட ஏதும் சொல்லலையா அண்ணி” என்றார் ஆவலான குரலில் சிரித்த முகமாக கேட்டார்.

வேதா, அமைதியாக முகத்தை வைக்க சிரமப்பட்டார் ‘என் மகன் என்ன சொல்லி இருப்பான்..’ உள்ளம் பரபரத்தது. வேதா “எ… அவன் பிஸி இந்த வாரம் புல்லா..” என்றார். பின் “எதை பற்றி…” என்றார்.

வாசுகி “இல்ல, பவானிகிட்ட இங்க இருக்கிற காலேஜ்ஜில் உன்னை MBA சேர்த்துவிடுறேன்னு  சொல்லி இருக்காறாம்.. நாமதான் லேட்.. அதுக்குள்ள கல்யாணத்தை முடித்திடலாம்ன்னுதான், பெண்ணு வீடா இருந்தாலும் பரவாயில்லைன்னு நாங்களே வந்து பேசினோம். என்னமோ போங்க, தம்பிக்கு பிடித்தம் இருக்கு.. நாம்தான் கொஞ்சம் முழிச்சிகனும்.. சரி அண்ணி, நான் கிளம்பறேன்.. போன் பண்ணுங்க.. எல்லா ஏற்பாடும் நாங்கதானே செய்யணும்..“ என்றபடி சிரித்த முகமாக விடைபெற்றார் பெண்ணின் அன்னை.

வேதா அதிர்ந்துதான் போனார். அப்படியே அமர்ந்தவருக்கு கோவமோ கோவம்.. எப்போ நடந்தது இதெல்லாம் வரட்டும் அவன்.. அப்படியே அவரை போல.. எதற்கும் என்னை மதிப்பதே இல்லை, கேட்பதே இல்லை..‘ என கோவத்தில் தொடங்கி அழுகைக்கு வந்து நின்றார், அன்னை.

‘தான் தனி’ என உணர்ந்தார்.. மனது கேட்கவேயில்லை.. எவ்வளவு பெரிய செயல்.. தன் வாழ்கையை தானே முடிவு செய்யும் அளவிற்கு வந்துவிட்டானா.. என்னிடம் பிடித்திருக்கிறது என சொல்லி சம்மதம் கூட கேட்க தோன்றவில்லையா.. நான் யாருக்கு அவனுக்கு..’ என எண்ணம், அழுகையை தந்தது.

Advertisement