Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

1௦

பவானியின் அருகில் நண்பர்கள் மூவரும் வந்து நின்றனர்..  ராகவ், ஏதும் பேசாமல் அவளின் கையில் ஒரு பாட்டில் தண்ணீரை கொடுத்தான், பவானி வெறிக்க வெறிக்க நண்பனையே பார்த்தாள், ராகவ் “குடி” என்றான்.

பவானி, கண்களை துடைத்துக் கொண்டாள், நீரை அருந்தினாள்.. ராகவ் “என்ன பவானி, என்ன சொல்றான்..” என்றான்.

பவானி, அமைதியாக இருந்தாள் கேவல் வந்துக் கொண்டிருந்தது அவளிடம். ராகவ் “அவன் முன்போல இல்லை பவானி, கண்ணடிப்ப ஏதாவது தப்பாதான் சொல்லி இருப்பான். விட்டுடு பவானி. சிலது நம்மை விட்டு போகறதும் நல்லதுதான்.. இதுக்காக கடவுளுக்கு, நீ நன்றி கூட சொல்லலாம், தப்பே இல்லை..” என்றான்.

இன்னொரு தோழி “அவன் சரியில்லை.. விட்டுடு.. இன்னும் ஒரே எக்ஸாம்தான் இருக்கு, நல்லா படி.. இதையே போட்டு குழப்பிட்டு இருக்காத.. அங்க விசு சர் வெயிட் பண்றார்..” என்றாள்.

பவானிக்கு அதெல்லாம் மண்டையில் ஏறவில்லை.. ‘நீயாகத்தான் வந்தாய், ஒரு சின்ன மேட்டர்..’ என்ற வார்த்தைகளில்தான் ஓடிக் கொண்டே இருந்தது. தோழி சொன்ன ஒரு எக்ஸாம் என்ற வார்த்தைதான் அவளை நிகழ்காலத்திற்கு கூட்டி வந்தது. 

பவானி, தன் தோழியை கட்டிக் கொண்டாள் இப்போது. மற்ற இரு ஆண்களும் ஏதும் பேசவில்லை.. சற்று நேரம் கண்ணீர் பெருக அழுதாள். போதும் போதும் என மூவரும், ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லினர்.

பத்து நிமிடம் சென்று தானே சமாதானம் ஆகி எழுந்தாள்.. முகம் கழுவிக் கொண்டாள்.. பவானி “ராகவ், அப்பாகிட்ட ஏதும் சொல்லிடாத.. அவன் இப்படி பேசினான் அப்படி இப்படின்னு ஏதும் சொல்லிடாத.. ஏதாவது ஆகிட போகுது அவனுக்கு..” என்றாள்.

ராகவ் “திருந்தவே மாட்டியா..” என்றான், பின் அவனே “நான் எல்லாத்தையும் சொல்லிடுவேன்.. சும்மா அழுதுட்டே இரு.. வோர்த்தே இல்லை டி அவன்.” என்றான், காண்டானக் குரலில்.

பவானி “அ.. அது இந்த மனசுக்கு புரியலையே.. புரிஞ்சிடும்.. ராகவ். அதுக்கு சொல்லல, அவன்தான் அப்ராட் போறானாமே விடு அவனை, சந்தோஷமா இருக்கட்டும். அது.. அப்பா.. உடனே கல்யாணம்னு ஆரம்பிச்சிடுவார் டா.. ப்ளீஸ், கொஞ்சம் படிக்கிறேனே.. நா..நானும் பாவம்தானே.. கொஞ்சம் டை..டைம் கொடுக்க சொல்லுடா..” என்றாள் பாவமான குரலில், சொல்ல.. சொல்ல.. அழுகை வரும் போலிருந்தது, அவளுக்கு.. முயன்று  அதனை கட்டுப்படுத்திக் கொண்டாள் பெண்.

ராகவ் “ஹேய்.. சொல்லல.. நீ தெளிவாகிட்டயில்ல, அது போதும் பவானி. கஷ்ட்டம்தான், ஆனால், கொஞ்சம் பழசை மறக்க ட்ரை பண்ணு. விசு சர்..” என எதோ சொல்ல வந்தான்.. பவானியின் முகம் மீண்டும் அழுகைக்கு செல்ல தயாராகவும்.

ராகவ் “கூல்.. கூல்..  பவானி. டேக் கேர்.. எங்கையாவது.. ஏதாவது பிரச்சனைன்னா.. இல்ல, குழம்பம்ன்னாலும் ப்ளீஸ் கால் பான்னு.. எதையும் எங்ககிட்ட பேசலாம்.. மனசில் போட்டு குழப்பிக்காத.. அவன் சரியில்லை, அதை மட்டும் நினைவு வைச்சிக்கோ.. மறந்திடு. உன் மேல் அக்கறை உள்ள இத்தனைபேர் சொல்றோம், மறந்திடு..” என்றான் நண்பனாக, அவளின் நலம் விரும்பியாக.

பவானி மீண்டும் தன் தோழியை கட்டிக் கொண்டாள்.. பின் எல்லோரிடமும் விடைபெற்றாள்.. நண்பர்கள் எல்லோரும்,  அவளை கார் இருக்குமிடம் வரை வந்து வழியனுப்பி வைத்தனர்.

முகம் சோர்ந்து.. கண்கள் வீங்கி.. காலையில் இருந்த அளவு கூட இல்லை அவள்.. வாடி போய் வந்து காரில் அமர்ந்தாள். 

விசு, திரும்பியும் பார்க்கவில்லை அவளை. அவள், அவனின்(ஸ்ரீயின்) கையை பற்ற எத்தனித்த போதே.. இங்கே வந்து விட்டான். ‘தான்’ யார் இங்கே? என எண்ணம்தான் அவனுக்கு. தன்னை குறித்தே ஒரு யோசனை ‘ஏன் நான் இவளைத்தான் திருமணம் செய்யனுமா.. ச்ச… கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாம்.. ‘ என அவனுள்ளே ஓடிக் கொண்டே இருக்கிறது.

அமைதியாக எதையும் முகத்தில் காட்டாமல் கார் செலுத்திக் கொண்டிருந்தான், விசு. ‘அவளின் மனதில் வேறு ஒருவன்.. எ..எப்படி விசு, இது தேவையா உனக்கு..’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவனால்.

அவனின் கைகளில் கார் பறந்தது.. அந்த வேகம் சிறிதும் காரினுள் தெரியவில்லை.. எங்கும் உணவிற்கு நிறுத்தவில்லை.. காலையில் இரண்டுமணி நேரம் எடுத்த பயணம், ஒருமணி நேரம் பதினைந்து நிமிடத்தில், அவளின் வீட்டை அடைந்தது.

அவளை இறக்கிவிட்டவன் நேரே வீட்டிற்கு வந்து, தன்னறைக்கு சென்றுவிட்டான். 

வேதா, வீட்டில் இல்லை. தன் தோழியின் மருமகள் வளைகாப்பு என சென்றிருந்தார். எனவே, இவன் மதியம் உணவிற்கு வரவில்லை என சொன்னானே.. என எண்ணி வேலையாட்களிடம் ஏதும் சொல்லவில்லை, வேதா. 

விசு, வந்ததும் வேலையாட்கள்.. தன் முதலாளியம்மாவிற்கு அழைத்து.. என்ன சமைப்பது என கேட்டு சமைத்தனர்.

விசு, மேலே சென்றவன்.. நேரே ஷேவரின் அடியில் நின்றான். மனதில் முழுவதும் தன்னை குறித்த ஆராய்ச்சிதான் இன்னமும், அந்த நீர் போல தீரவேயில்லை.  ஒருமணி நேரம் சென்று.. வேலையாட்கள் வந்து கதவை தட்டவும்தான் வெளியே வந்தான்.

உணவு தயார் என கூறி சென்றனர்.

அமைதியாக வந்து உண்டான்.. செந்திலுக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான். பின் எதோ படத்தை போட்டு அமர்ந்துக் கொண்டான்.

உள்ளே குடைகிறது.. இன்றைய நிகழ்வுகள். ஆசை.. அன்பு.. நேசம்.. என ஏதும் இல்லை.. ஆனால், அதை தனக்கு தானே புகுத்திக் கொண்டானே.. இந்த விசு. எதோ அவளை பார்த்தவுடன்தான் இது நடந்தது.. அப்படி ஆனது.. என எதோ கற்பிதம் கொண்டு தனக்கு தானே.. அவளை ஏற்றுக் கொண்டான். 

ம்.. திருமணம் என ஒன்று நிகழப் போகிறது.. எனவே அவளை தன் வாழ்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மெதுவாக தன் உணர்வுகளோடு அவளை பிணைத்துக் கொள்ள எண்ணினான். அதனாலேயே, இயல்பாய் நடந்தது எல்லாம் அவனுக்கு, அவளின் லக் என தோன்றியது அன்று. 

ஆனால், அதெல்லாம் உடைந்துவிட்டது அவளை காரில் ஏற்றிக் கொண்டு புறப்படும் போதே. ‘இப்படி ஒரு பெண் உனக்கு தேவையா!’ என்ற எண்ணம்தான் அவனுள். ‘எப்படி அவளை தள்ளி வைப்பது.. என்ன சொல்ல முடியும்.. அங்கிளிடம்’ என எண்ணிக் கொண்டே இருக்கிறான். 

ஆனாலும், முழுதாக ‘போ..’ என அவனால் உதற முடியவில்லை.. இவளின் இந்த நினைவை விட்டு வேறு யோசிக்க முடியவில்லை அவனால்.. இப்போதும் அவனின், ஒரு உள்ளுணர்வு ஓடுகிறது அவளை நோக்கி.. அதை தடுத்து நிறுத்தி கட்டி வைக்க முடியவில்லை அவனால்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

பாவனிக்கு, புரிகிறது ஆனால்.. இன்னும் ஏற்க முடியவில்லை. அவனின் உடல்மொழி, பல்லைக் கடித்துக் கொண்டு ‘என்னை அவமானப்படுத்திட்டாங்க’ என சொன்னது எல்லாம் நினைக்க நினைக்க அழுகைதான் வந்தது. 

மதியம் உணவு இன்னும் எடுத்துக் கொள்ளவில்லை அவள். வேலையாட்கள் இரண்டு முறை சொல்லியும் அவள் கீழே இறங்கி வரவில்லை. மாலையில்தான் காபியும், மெதுவடையும் வந்தது அவளின் அறைக்கே. 

நிகழ்காலம் என்பது எப்போதேனும் புரிய வேண்டுமே.. அது யாராக இருந்தாலும்.. இவளுக்கும் கொஞ்சம் புரிந்தது போல.. ‘அடுத்த பரிட்சைக்கு படிக்க வேண்டுமே..’ என புரிந்தே விட்டது. 

எனவே முகத்தை கழுவிக் கொண்டு அந்த காபி, வடையை விழுங்கினாள். நேரே பூஜை அறைக்கு சென்று அமர்ந்தாள்.. கண்களை மூடிக் கொண்டு “படிக்கணும் படிக்கணும்..” என சிறுபிள்ளை போல கொஞ்சம் சத்தமாக சொல்லி த்யானம் என்ற பெயரில் எதோ செய்ய.. ஒரு நிமிடத்தில் சத்தம் அடங்கி.. கண்ணில் கண்ணீர் வழிந்தது பெண்ணுக்கு.

தவறானவன் மேல் கொண்ட கண்மூடித்தனமான நேசத்திற்கு பதில்.. இந்த கண்ணீர்தான்.. எப்போது தீரும் என தெரியவில்லை அவளிற்கு.

அடுத்த ஒரு வாரமும் ஒன்றும் புரியவில்லை பெண்ணுக்கு,  குழம்பித் தீர்த்தாள்.. தவித்தாள். யாரிடமும் அவன் கதை பேச முடியாதே.. இப்போதெல்லாம் பேசவும் பிடிக்கவில்லை. ராத்திரி பகல் யோசித்ததில்.. ‘விலகிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களை.. நெருங்க நினைப்பது அபத்தம்’ என புரிந்தது பெண்ணுக்கு. ‘அவனுக்கே அவ்வளவு திமிர் இருந்தால்.. காயம் பட்ட எனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்..’ ஒரு எண்ணம் வரவழைத்துக் கொண்டாள். அது போதுமானதாக இருந்தது அவளுக்கு.. தேறிக் கொண்டாள் பெண்.

எதோ எக்ஸாம் எழுதினாள்.. தோழிகளிடம் விடைபெற்று வந்தாள். 

ராகவ் இரண்டுநாள் சென்று அவளின் வீட்டிற்கு வந்தான்.. எல்லோருடனும் மதியம் லஞ்ச் முடித்து.. இங்கிருந்தபடி ஹுப்ளி கிளம்பினான். அவனின் சொந்த ஊர் அது. பவானிக்கு ஆயிரம் நல்வார்த்தைகள் சொல்லிதான் கிளம்பினான், அந்த நண்பன்.

விசு, ‘எதையும் யோசிக்க கூடாது பார்ப்போம் எப்படி அடுத்த கட்டம் அமைகிறது என. என எண்ணிக் கொண்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்.

அடுத்த  இரண்டு மாதமும் சென்றது. பவானி இப்போது பரவாயில்லை. தோழிகளிடம், நண்பர்களிடம் ஸ்ரீ என்பவனை விடுத்து வேறு பேச கற்றுக் கொண்டாள். அவளின் ஒரே ஆசை ‘மேலே படிக்கணும்.. இப்போது திருமணம் என கமிட்டாக கூடாது’ என எண்ணம்.

தான் முன்பு படித்த கல்லூரியில் விண்ணபிக்க எண்ணினாள். எனவே தன் தந்தையிடம் கேட்டாள். பத்மநாபன் ஒரே சத்தம் ‘என் பேச்சை கேட்க கூடாது என எண்ணமா.. எப்படி நிச்சியம் ஆகிய பெண்ணை வீட்டில் வைத்திருப்பது, அதிலும், கல்லூரி அனுப்புவது.. அதெல்லாம் சரிவராது. இதுவே லேட். நீ கல்யாணம் செய்துக்க, அப்புறம் படி.. இல்ல, வேலைக்கு போ, பிசினஸ் செய்.. அது உன் விருப்பம்.. உன்னை கட்டிக்கிறவன் பாடு.. இந்த மாசம் முடிந்ததும் விசு கிட்ட பேசிடுவேன்.. நிச்சயம் அடுத்து, கல்யாண்ம்தான் உனக்கு.. அதுவரை அமைதியாக இரு’ என சத்தமிட தொடங்கினார்

பத்மநாபனுக்கு ‘எப்படி விசுவிடம் கேட்பது திருமணம் குறித்து’ என யோசனை. யோசனைதான் அவருக்கு. பெண்ணிடமும் மனைவியிடமும் அடிக்கடி கல்யாணம் கல்யாணம் என பேசிக் கொண்டே இருந்தார். பவானி மேற்படிப்புக்கு அப்ளே செய்கிறேன் என சொல்லும் போதெல்லாம் அவருக்கு ‘விசுவிடம் எப்படி சொல்லுவது’ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. இதில் இவளும் சண்டையிட.. பத்மநாபன் என்ன செய்துவது என தெரியாமல் நின்றார்.

எனவே, தினமும், இருவரும் சண்டையிடுவது தொடர் கதையானது ‘படிப்பை முடித்து விட்டுதான் திருமணம் செய்வேன்..’ ‘ஏன், எனக்கு வேறு மாப்பிளையே கிடைக்காதா?’ என அவள் பேச, இவர்  மீண்டும் ‘விசு விசு..’ என வந்து நிற்க.. 

  

 

Advertisement