Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!

நல்ல பெரிய வரவேற்பறை.. அதில் வருவோரை வரவேற்பது போல மர வேலைபாடுகள் கொண்ட அழகான பெரிய நிலை கண்ணாடி.. எதிர்சுவரில் நிலைத்திருக்கும் எப்போதும். வருவோரின் மனநிலை எப்படியாக இருந்தாலும்.. கண்ணாடியில் தன்னுருவை பார்த்ததும்.. சட்டென ஒரு சந்தோஷம் அவர்களிடம் பரவுமே.. அது, அந்த நல்ல எண்ணம்.. அவர்களோடு உள்ளே வரும்.. அதற்காக அந்த அமைப்பு.

அழகான பெரிய வரவேற்பறை இருக்கையில்.. மெலிதான பருத்தி புடவையில், அமர்ந்திருந்தார் வேதநாயகி. முதுமை என சொல்ல முடியாத தோற்றத்தில்.. அந்த வீட்டையே தன் கண்காணிப்பால் நேர்த்தியாக நடத்திக் கொண்டிருக்கும் அந்த வீட்டின் அரசிதான் வேதநாயகி.  

கண்ணில் மட்டும் எதோ எதிர்பார்ப்பு, எதையோ.. யாரையோ.. எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். இன்னமும் நேரம் வரவில்லை போல, அவருக்கு. அந்த நேரம் வரும் போது, தான்.. அசந்து இருந்து விட கூடாது என.. இமைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார், கடந்த ஆறுமாதமாக. 

இப்போது யோசனையில் இருந்த அவரின் நினைவை கலைத்தது, அவரின் தவபுதல்வனின் காலடி ஓசை. அவசரமாக எழுந்து உள்ளே வந்தார்.. மகன் இறங்கி வரும் மாடிப்படியின் அருகே வந்தார், அன்னை.

முகத்தை நேராக்கி கொண்டு.. “வா விசு.. என்ன சீக்கிரம் கிளம்பிட்ட இன்னிக்கு” என்றார், முன்னே உணவு மேசை நோக்கி நடந்துக் கொண்டே.

விசு.. விஸ்வநாதன். இந்த வீட்டின் ஒரே வாரிசு.. முகத்தில் ஏதும் காட்டாமல், தன் அன்னையை நிமிர்ந்தும் பார்க்காமல் உணவு மேசை நோக்கி நடந்தான்.

அன்னை மகன் இருவரும் இப்படிதான் கடந்த மூன்று மாதங்களாக முகம் கொடுத்து பேசிக் கொள்வதில்லை.. சகஜமாக இருப்பதாக.. காண்பித்துக் கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசினாலும் இருவரும் ஒதுங்கி நிற்கின்றனர்.

காரணம் அவனின் திருமணம். ஏனோ திருமணம் என பேசினாலே அவன் தன் அன்னையை முறைக்க தொடங்கி விடுகிறான். அதனால் அன்னை இப்போதெல்லாம் அவனிடம் பேசுவதே இல்லை.. ஒதுங்கிக் கொண்டார்.

விசுவிற்கு வயது இருபத்து ஒன்பதை தொட போகிறது, இன்னும் மூன்று மாதத்தில்.. குருபலன் வந்துவிட்டதாக ஜோசியரும் சொல்லிவிட்டார். எனவே, அன்னை மகனின் விருப்பம் இல்லாமல் பெண் பார்க்கிறார். அது தெரிந்ததிலிருந்து மகன் அன்னையோடு பேசுவதில்லை. அதற்காக, அன்னை தன் வேலையை.. அதுதான், மகனுக்கு பெண் பார்ப்பதையோ.. திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதையோ நிறுத்தவில்லை. ‘நான் பார்க்கும் பெண்ணை நீ கட்டிதான் ஆக வேண்டும்’ என பிடிவாதமாக தேடிக் கொண்டிருக்கிறார், அன்னை.

இப்போது, மகன் உணவு மேசையின் முன் அமர்ந்தான்.  அன்னை, ஒரு கிண்ணத்தில், மினிசாம்பார் இட்லியை பரிமாறினார்.. அருகில் கனிவகைகளை நறுக்கி, உப்பும் சாட் மசாலாவும் தூவி என இன்னொரு கிண்ணம். மிதமான சூட்டில் நீர்.. எல்லாம் எடுத்து வைத்து அமர்ந்தார்.

விஸ்வநாதன் பெயருக்கு தக்க உயரமாக.. கோதுமை நிறத்தில்.. ப்ரவுன் நிற விழிகளுடன்..  புதிதாக பார்போரை.. ‘என்ன, எதோ வித்யாசமாக இருக்கானே..’ என யோசித்து மற்றொருமுறை ஊன்றி பார்க்க வைக்கும் கலையில் இருந்தான். 

விசு, கவனமாக உணவினை மென்றுக் கொண்டே.. தன் உதவியாளன் அனுப்பிய வாய்ஸ் மெஸ்சேஜ்க் கேட்டுக் கொண்டிருந்தான். அதில், அன்றைய வேலைகளை அட்டவணையிட்டு சொல்லிக் கொண்டிருந்தார் நடுத்தர வயது மனிதர், செந்தில்நாதன்.

இன்று, மாதத்தில் கடைசி சனிக்கிழமை என்பதால் பெரிதாக வேலையில்லை, அப்படி வேலையை அமைத்துக் கொள்ள மாட்டான் விசு. மாதத்தின் கடைசி சனிகிழமை தன் நண்பர்களோடு நேரம் செலவிடுவான். எனவே, முன்மதியத்தில் கோவையில் ஒரு மீட்டிங்.. அது மட்டுமே இன்று அவனின் வேலை. பின் ஈரோடு வந்து சேர்ந்து விடுவான். 

செந்தில், என்ன மீட்டிங்.. யாரை சந்திப்பது.. என அதன் சாராம்சத்தை சொல்லிக் கொண்டிருந்தார். பொறுமையாக கேட்டுக் கொண்டான் விசு. நேற்று வந்த அழைப்புகள்.. கணினி தகவல்கள்.. என எல்லாம் பகிர்ந்தார். அதற்குள் உண்டு முடித்திருந்தான் விசு.

இப்போது, வீட்டின், இண்டர்காம் அழைத்தது. வேதநாயகி சென்று எடுத்தார். கேட்டிலிருந்து பணியாளர் ‘ஜோதிடர் வந்திருப்பதாக’ சொல்லவும்.. வேதாவும் “உள்ளே அனுப்புங்க” என சொல்லி வைத்தார்.

வேதா, மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனுக்கு தேவையானதை எடுத்து அருகில் வைத்து விட்டு.. நகர்ந்தார் வரவேற்பறை பக்கம்.

ஜோதிடர் வந்தார்.. வேதநாயகி, முறையாக வரவேற்று.. நலம் விசாரித்து அவரின் முகத்தையே கேள்வியாக பார்த்து அமர்ந்துக் கொண்டார்.

ஜோதிடரும் சங்கடமாக “அம்மா, இந்த இரண்டு இடமும்..” என இழுத்து தயக்கமாக பார்த்தார்.

அந்த வீட்டு அரசியின் முகம் வாடியே போனது.. இந்த தயக்கத்தில். இருந்தும் “சொ..சொல்லுங்க..” என்றார்.

ஜோதிடரும் “அவங்க பொண்ணு, மேல படிக்கனும்ன்னு சொல்லிடுச்சாம். இன்னொரு இடம், நா..நாம பெரிய இடம்.. எ..எங்களுக்கு ஒத்து வராதுன்னு வேற இடத்தில் நாலுநாள் முன்புதான், பேசி முடிச்சகாங்களாம்..” என ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். 

இப்போது தன் உதவியாளருக்கு அழைத்தபடியே.. விசு எழுந்து ஹாலுக்கு வந்தான், பார்வையில் ஆராய்ச்சியோடு. வந்திருந்த நபரை அவனால் அடையாளம் காண முடியவில்லை. ஆராய்ந்த படியே.. பேசிக் கொண்டிருந்த போனை வைத்தவன், தன் அன்னையை பார்த்தான் எரிச்சலாக.

அன்னைக்கு, தன் மகன் மேல் கவனம் வரவில்லை.. ஜோதிடர் சொன்ன செய்தி கேட்டு.. எங்கோ வெறித்து பார்த்து அமர்ந்திருந்தார்.

இப்போது ஜோதிடர் “வணக்கம் தம்பி” என, விசுவிற்கு முகமன் சொல்ல.. அந்த சத்தத்தில் வேதா நிமிர்ந்து தன் மகனை பார்த்தார். அந்த பார்வையில் கொஞ்சம் அச்சம் தெரிந்ததோ.. சட்டென சுதாரித்தார் அன்னை.

இப்போது விசு “நீங்க..” என கேள்வியாக நிறுத்தினான், ஜோதிடரை பார்த்து.

ஜோதிடர், தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார்.

விசு “ஓ…“ என தன் அன்னையை பார்த்தவன், நன்றாக வசதியாக அமர்ந்துக் கொண்டு “ம்மா… நான் பேசவா.. இல்ல, நீங்க விஷயத்தை சொல்லி அனுப்பி வைக்கீறீங்களா?” என ஆங்கிலத்தில் தன் அன்னையிடம்  அமைதியான குரலில், சிரித்தபடி கேட்டு.. முறைத்து பார்த்து அமர்ந்திருந்தான். இப்படி, மூவர் இருக்கும் போது, இருவருக்கு மட்டும் பரிச்சையமான மொழியில் பேசிவது அநாகரிகம் என தெரியும் இந்த ஆண்மகனுக்கு, ஆனாலும், தன் அன்னை செய்வது அதை விட பெரிய அநாகரிகம்.. என எண்ணிக் கொண்டு மகன் இப்படி செய்தான்.

அன்னையும் அதே ஆங்கிலத்தில் “இ..இல்ல.. ப்பா, இரு நான் பேசிக்கிறேன்” என்றவர், ஜோதிடரிடம் பேச தொடங்கினார்.

வேதா “சரிங்க, நாம அப்புறம் பேசலாம்.. நான் போன் செய்யறேங்க” என சொல்லி அனுப்பி வைத்தார்.

விசு “ம்மா, நீங்க என்ன சொன்னாலும், எப்படி சொன்னாலும்.. என் முடிவு மாறாது.” என்றவன், எழுந்துக் கொண்டான் “கோயம்புத்தூர் வர போயிட்டு வரேன்.. நைட்தான் வருவேன்.. பை ம்மா” என்றபடி ‘ஒன்றுமே நடக்கவில்லையே’ என்ற பாவனையில் கிளம்பிவிட்டான் விஸ்வநாதன்.

செந்தில், வாசலில் ரெடியாக காரோடு நின்றிருந்தார்.. விஸ்வநாதன் காரில் ஏறவும் வண்டி நகர்ந்தது. விசுவிற்கு மனதெல்லாம்.. என்னமோ செய்தது, தன் அன்னையின் இந்த செயலில். முன்பு, தனக்கு பெண் பார்த்தார் என தெரியும்.. ஆனால், இப்போது நிறுத்தி இருப்பார் என எண்ணி இருந்தான். ஆனால், ‘அப்படி இல்லையே.. இன்னமும் பார்க்கிறாரே..’ என வருத்தமாக இருந்தது மகனுக்கு. தன் நெற்றியை நீவிக் கொண்டே ‘இதை எப்படி நிறுத்துவது’ என யோசனைக்கு சென்றான்.

சற்று நேரத்தில் இவனின் போன் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.. அதில் தன் நினைவை விட்டு, கவனத்தை போனிற்கு திருப்பினான், விசு.  

போனில் யாரென பார்க்க.. ’பத்மநாபன் அங்கிள்’ என ஒளிர்ந்தது. விசு உடனே எடுத்து “ஹலோ அங்கிள்..” என்றான். 

பத்மநாபன் “வேலையா இருக்கியா விசு” என்றார்.

விசு “இல்ல அங்கிள், சொல்லுங்க..” என்றான், பவ்யமாகவோ.. தயக்கமாகவோ இருந்தது அவனின் உடல்மொழி. எதோ ஒரு தயக்கம் சட்டென வந்துவிட்டது அவனுள்.

பத்மநாபன் “ஒண்ணுமில்ல ப்பா, நம்ம பவானி படிப்பு விஷயமா பேசறேன்னு சொன்னியே” என்றார் நினைவூட்டும் விதமாக.

விசு அனிச்சையாய் “புரியலை.. எ.. யார் அங்கிள்..” என்றுவிட்டான்.

அங்கே கேட்டுக் கொண்டிருந்த பத்மநாபனின் மனம் ஒரு நொடி வாடியே போகிற்று. முயன்று சுதாரித்து.. அவர், பேச எத்தனிக்க.. விசு முந்திக் கொண்டான் “அய்யோ, அங்கிள்.. மறந்துட்டேன். இப்போ நீங்க எங்க இருக்கீங்க..” என்றான், எதோ நினைவு வந்தவனாக.

அவர் “வீட்டில்தான் ப்பா, இருக்கேன்” என்றார்.

விசு, இப்போது செந்திலிடம் “செந்தில், பத்து அங்கிள் வீட்டுக்கு போங்க” என்றான். பின் போனில் “அங்கிள், ஏன் இன்னமும் ஆபீஸ் போகலை.. என்னாச்சு அங்கிள், உடம்பு ஏதும் முடியலையா?” என்றான் அக்கறையாக.

பத்மநாபன் “நல்லா இருக்கேன் ப்பா.. நீ வா பேசிக்கலாம்” என்றவர் போனை வைத்தார்.

  

Advertisement