Advertisement

நிலவை தேடும் பால்வெளி இவன்!..

19

அடுத்த ஒருவாரம் முழுவதும் பவானி, மாலையில் மில்லிற்கு சென்றாள். பெரிதாக வேலையை பழகினாள் என சொல்ல முடியாது.. வேடிக்கை பார்த்துக் கொண்டாள். ஒவ்வொரு யூனிட்டாக சென்று பார்த்துக் கொண்டாள்.. அதற்கே ஒருவாரம் ஆனது அவளிற்கு.

பவானி, மில்லிற்குச் செல்லத் தொடங்கி.. நான்கு நாட்கள் சென்றுதான் செந்தில் வந்தார். எனவே, முறையாக பவானியை அறிமுகம் செய்தார் ஊழியர்களுக்கு. அங்கிருக்கும் எல்லா ஊழியர்களுக்கும் சின்னதாக ஒரு  மீட்டிங் போட்டு, பவானியை அறிமுகம் செய்து வைத்தார். அது ஒரு சின்ன விழாவாகவே நடத்திவிட்டார் செந்தில். விசு, கூட ‘இப்போது வேண்டாம்.. செந்தில்’ என்றான்.. ஆனால், செந்தில் விடாமல்.. ‘அப்படி எல்லாம் விட முடியாது. நான் வேதாம்மாவை வைத்து, சின்னதாக அறிமுகம் செய்துவிடுகிறேன்.. அவங்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்திடனும் விசு..’ என அந்த நிகழ்வை செய்து முடித்தார்.

அதனால், பவானிக்கு சந்தேகங்கள் கேட்க.. வேலைகள் பற்றி முறையாக கேட்டு, தெரிந்துக் கொள்ள வசதியாக இருந்தது. பவானி இப்போது இன்வெண்டரி கவனிக்கத் தொடங்கி இருக்கிறாள், இந்த பத்து நாட்களில்.

!@!@!@!@@!@!@!@!@!@!@!@!

வாசுகியும் பத்மநாபனும், பெண்ணைப் பார்க்க வந்திருந்தனர் இன்று. அவர்களிடம் ‘விசு, இரண்டு வாரம் ஆகும்.. வருவதற்கு’ என சொல்லி இருந்தாள், பெண். எனவே, நலம் விசாரிக்க வந்திருந்தனர்.

இரவு எட்டு மணிக்கு வந்து சேர்ந்தனர். அப்போதுதான் வேதாவும் வீட்டில் இருப்பார். பொதுவான பேச்சிற்கு பிறகு வாசுகி, வேதாவிடம் ‘தாலி பெருக்கு விழா’ பற்றி பேச தொடங்கினார்.

வேதாவிற்கும் நினைவு இருந்தது, எனவே, “நாள் பாருங்க.. அடுத்த வாரத்தில் உங்கள் மாப்பிள்ளை வந்திடுவான். அதன்பிறகு உண்டான நாளாக பார்த்து செய்திடலாம்” என்றார் தன்மையாக.

இப்படியாக பேச்சுகள் முடிந்தது. சம்பந்தி வீட்டாரை உண்ண வைத்தே அனுப்பினார் வேதா. 

பவானிக்கு, சற்று இதமாக இருந்தது இந்த இரவு. நீண்ட நாட்கள் சென்று தன் பெற்றோரை பார்த்தாள் பெண். வாசுகி “நல்லா சாப்பிடு.. நிறைய ஜூஸ் குடி.. இளைச்சி போயிட்ட..” என பெண்ணிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அதுவும் அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

வாசுகிக்கு, தன் பெண்ணை இரண்டு நாட்கள்.. தங்கள் வீட்டிற்கு கூட்டி செல்ல வேண்டும் என எண்ணம். ஆனால், வேதாவும் தனியாக இருப்பார் என தோன்றவும் அமைதியாக இருந்துக் கொண்டார் வாசுகி. ஆனாலும், மனது கேட்கவேயில்லை வாசுகிக்கு, தன் பெண்ணின் நிலை பார்த்து.

அன்னைகளின் கண்ணிற்கு எப்போதும் பிள்ளைகள் நிறைவாக தெரிவது என்பதே.. அதிசியம். அப்படிதான், வாசுகிக்கு இப்போது ஆனது. பவானிக்கு, அலைச்சல்தான் மற்றபடி ஆரோக்கியமாகதான் இருக்கிறாள் பெண். ஆனாலும், அன்னையின் கண்களுக்கு நிறைவாக இல்லை. எனவே வாசுகிக்கு பயம் பிடித்துக் கொண்டது. வீடு வந்தும் புலம்பிக் கொண்டே இருந்தார் வாசுகி, தன் கணவரிடம்.

!@@!@!@!@!@!@!@

பவானிக்கு, தன்னை யார் தொடர்ந்து வந்தனர் என்பதே மறந்து போனது. அதை பற்றி அவளும் நினைக்கவில்லை இந்த ஒரு மாதத்தில். அவளிற்கு கணவன் நினைவை தவிர வேறு, நினைவு எழுவதில்லை இப்போதெல்லாம். அதனாலோ என்னமோ, அன்று விசு பேசிய பின் நகரும் நாட்கள் எல்லாம் மெதுவாக நகர்வது போல தோன்றியது, பெண்ணுக்கு. நான்கு ஐந்து.. எண்ணிக் கொண்டிருந்தாள் நாட்களை, பவானி. 

அதோ இதோ என விசு வரும் நாளும் உறுதியானது.

எல்லோருமாக விசு பவானி தாலி பெருக்கு வைபவத்திற்கு நாள் பார்த்திருந்தனர். விசு, இன்று இரவு கொச்சின் வந்துவிடுவான். ஒருநாள் இடைவெளி விட்டு, அடுத்த நாள், தாலி முடியும் வைபவத்திற்கு நாள் பார்த்திருந்தனர் பெரியவர்கள்.

எனவே, பவானியின் குடும்பம், அவளிற்கு செயின் வாங்குவதற்காக, நகை கடை சென்றது. பவானியின் பெற்றோர், வேதா, பவானி என நால்வர் கோவை சென்றனர்.

இன்று பவானி கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.. அடுத்த வந்த இரண்டு நாட்களும் விடுப்புதான் அவள். அதேபோல, கோவையில் இருக்கும் தன் தோழிகளை சந்திக்க வருவதாக சொல்லி அவர்களையும் விடுப்பு எடுக்க வைத்திருந்தாள், இன்று.

காலையில், குடும்பத்துடன் கிளம்பி சென்றனர். முகப்பு வைத்தது போல, பவானிக்கு பிடித்தார் போல, செயின் எடுத்துக் கொண்டனர். பின் வேதா மருமகளுக்கு என ஒரு பட்டுபுடவை எடுத்தார். பின் மதியம் உண்டு, வேதாவின் காரை அவளிற்கு கொடுத்துவிட்டு, பத்மநாபனின் காரில் எல்லோரும் ஈரோடு சென்றனர்.

பவானியை, ஏற்றிக் கொண்டு டிரைவர் அவள் சொன்னது போல.. மாலிற்கு சென்றார். பவானிக்கு, தன் பழைய தோழிகளோடு நேரம் சென்றது அவளிற்கு. நீண்ட நாட்கள் சென்று.. சிரித்து.. கதை பேசி.. என சிறுபெண்ணாக மாறி விளையாடிக் கொண்டிருந்தாள் பவானி.

செந்தில், விசுவை அழைத்து வருவதற்காக கொச்சின் கிளம்பினார் ஈரோட்டிலிருந்து. 

இரவு மணி எட்டு.

அப்போதுதான், பவானியும் கிளம்பினாள், ஈரோட்டிற்கு. செந்தில் அழைத்தார், பவானியின் கார் ஓட்டும் டிரைவருக்கு. ‘கிளம்பிவிட்டோம்’ என தகவலும் சொன்னார் அவர்.

செந்தில், பவானிக்கும் அழைத்து பேசினார் “எங்கும் நிறுத்த வேண்டாம் ம்மா.. பத்து மணிக்கு ரீச் ஆகிட்டு எனக்கு மெசேஜ் செய்துடுங்க..” என்றார், சாதரணமாக.

பவானியும் “சரி அண்ணா..” என்றாள்.

பவானிக்கு, அதை தொடந்து வேதா.. தன் தந்தை.. என எல்லோரும் அழைத்தனர். எல்லோருடனும்.. பேசி வைப்பதற்குள் அரைமணி நேரம் கடந்துவிட்டது. எனவே போனில் தான் எடுத்த, போட்டோஸ்.. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தாள்.. சிலதை ஸ்டேட்ஸ் வைத்தாள். இப்படியாக அவளின் பயணம் தொடர்ந்தது. 

அடுத்த அரைமணி நேரத்தில்.. ஹைவேயில்.. இவர்களின் காரின் மேல் ஒரு கார் உராய்ந்துக் கொண்டு சென்றது. இரு கார்களும் நல்ல வேகம் என்பதால்.. இவர்கள் காரின் பின்புற விளக்கு.. லேசாக உடைந்தது.. இடித்துக் கொண்டு.. இவர்களை தாண்டிய வண்டி, இருபது மீட்டர் சென்று நிறுத்தினார்கள்.. பவானியின் வண்டியையும் நிறுத்தினார் ஓட்டுனர்.

இடித்த வண்டியின் ஓட்டுனர், வந்து மன்னிப்பு கேட்டார் இவர்களிடம்.. பவானி கீழிறங்கி நின்றிருந்தாள். ‘நல்லவேளை பெரிதாக எந்த அசம்பாவிதமும் இல்லை.. உயிர் பிழைத்தோம்’ என எண்ணிக் கொண்டு.. பேசிக் கொண்டிருந்தனர்.

அடுத்த நிமிடம்.. என்ன நடந்தது.. எப்படி நடந்தது.. என ஏதும் தெரியாமல்.. டிரைவர், பவானி.. என இருவரின் மேலும் எதோ ஸ்ப்ரே செய்யப்பட்டது.. அதுவரைதான் தெரியும் அதன்பின் ஏதும் தெரியவில்லை இவருக்கும். சில நொடிகளில்.. எல்லாம் மாறிற்று. 

மீண்டும் அதேபோல.. இல்லை, அதைவிட கொடுமையான ஒரு நிகழ்வு.. இப்போது பெண்ணை குறிவைத்து நடந்திருக்கிறது.. எத்தனை துணிச்சல்.. எத்தனை வன்மம்.. இருக்க வேண்டும் அவர்களுக்கு. இருக்கும், பழி வெறி கொண்டவர்களுக்கு மட்டும் அந்த தாகம் அவ்வளவு எளிதில் தீராது.. போல.

பத்து மணி வரை, வீட்டார் யாருக்கும் ஏதும் தெரியவில்லை. எல்லோரும் அவள் வந்துக் கொண்டிருப்பாள்.. இப்போது தானே பேசினோம்.. என எண்ணி அமைதியாக இருந்தனர்.

வேதா, விழித்துக் கொண்டே இருந்தார், மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். மணி பத்துக்கு, மேல் ஆகியும் இன்னமும் வரவில்லை, பவானி. 

வேதா, வாசுகிக்கு அழைத்து.. ‘பவானி ஏதாவது தகவல் சொன்னாளா’ என்றார். 

வாசுகி “அண்ணி, இன்னும் வந்து சேரவில்லையா.. இருங்க, நான் போன் செய்து பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன்..” என பதறினார்.

இப்படியாக இவர்களுக்கு பவானிக்கு என்னமோ ஆகிற்று என புரியவே மணி பதினொன்றுக்கு மேல். 

பத்மநாபனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஹரீஷும் இல்லை. என்ன செய்வதென்றே புரியாமல் நின்றார். வாசுகிக்கு போலீசில் சொல்லவே பயம். இப்படியாக நேரம் கடந்தது.

வேதாவிற்கு லேசான மயக்கம் வந்தேவிட்டது. வேலையாட்கள் என்னவென பதறி போகி.. அவரை கவனித்தனர்.

பத்மநாபனும் சுதாரித்து.. காவல்துறை, மேலதிகாரிக்கு அழைத்தார். அவர்கள் விவரம் கேட்டு, பின் அது கோவைக்கு சொல்லி.. என நேரம் நடுநிசி பனிரெண்டை தாண்டிவிட்டது. 

பாமநாபன், ஓய்ந்து போகினார்.. மனது நிலையில்லாமல் தவித்துக் கொண்டிக்கிறது, வீட்டார் எல்லோருக்கும்.

                                                                                                                                                                                                 

Advertisement