இப்போதுதான் நன்றாக பார்த்தான் கேஸ். அந்த இருட்டிலும் ஒளியிலும், அந்த சிறு பெண்ணை கொஞ்சமாக அடையாளம் தெரிந்தது கேஸ்க்கு.
தன் நண்பனின் வருத்தம் அவனின் ஒட்டாத பேச்சிலும், வெறித்தப் பார்வையிலும் தெரிகிறதே அவனுக்கு, என்ன செய்ய முடியும் என அமர்ந்திருந்தான் கேஸ்.
இப்போது அந்த பெண்ணை எங்கோ பார்த்தது போல் இருக்கவும், உற்று உற்று பார்த்து அவளை கண்டுக் கொண்டான் நண்பன்.
மெல்லியக் குரலில் அவினாஷை சுரண்டினான் “டேய்… அந்த பெண்ணு யாரு தெரியுமா, அது.. எம்.என் ப்ரோடக்ஷன் நந்தன் சாரோட பொண்ணு. அத்தோட உன் குரு, அவங்க ப்ரோடக்ஷன்லதான் அடுத்த படம் எடுக்கிறார், பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு” என்றான் சத்தமில்லாமல்.
அவினாஷ் “ச்சு… டேய், கடுப்பாக்காத” என்றான்.
கேஸ் “ம்.. உனக்கு வேண்டாம்ன்னா போ.. ஒரு வழி இருக்குன்னு காட்டினேன், அப்புறம் உன் விருப்பம்” என்றான் அமைதியாக.
அவினாஷ்க்கு ஒன்றும் புரியவில்லை. எரிச்சல், வருத்தம்.. என அமர்ந்திருந்தவனுக்கு, நண்பனின் வார்த்தை இன்னும் எரிச்சலை தந்தது. இப்போது வழி, அது.. இதுன்னு.. சொல்லவும், கொஞ்சம் மூளை விழித்துக் கொண்டது, யோசனையோடு அவினாஷ் “அப்படி ஏதும் நியூஸ் வரலையே டா… இன்னும் அவர் எடுத்துட்டு இருக்கிற படமே ரிலீஸ் ஆகலையே” என்றான், அவளையே யோசனையாக பார்த்துக் கொண்டே.
கேஸ் “ச்சு.. இப்போதான் பேச்சு வார்த்தை போயிட்டு இருக்கு. கண்டிப்பா நடந்திடும்… இன்னும் ஒரு மாசத்தில் உங்க குருவோட படம் முடியவுள்ளது, அதன் ரிலீசுக்கு பிறகுதான், இந்த அனௌன்ஸ்மென்ட் வரும்” என்றான் மெல்லியக் குரலில்.
அவினாஷ் முகத்தில் கோடி ஆனந்தம்.. ‘கிடைத்தே விட்டதா வழி.. அமைத்தே விட்டதா என் பாதை’ என ஆனந்தம் அவனுக்கு. மெல்ல அந்த சிறு பெண்ணிடம் சென்றான், யோசிக்கவேயில்லை. ‘வாய்ப்புகள் எந்த ரூபத்தில் வந்தால் என்ன.. எனக்கு தேவை’ என அவளிடம் சென்றான்.
இன்னமும் இந்த பெண் தனியே அமர்ந்து கூட்டத்தில் ஆடும் தன் நண்பர்களை ரசித்துக் கொண்டிருந்தாள். கையில் அதே பீர்.
மெல்ல அருகில் வந்து அமர்ந்தான் “ஹாய், நீங்க திருவான்மியூரா” என்றான் எந்த தயக்கமும் இல்லாமல். ஈசியான உடல்மொழியில் அவளை அணுகினான் அவினாஷ்.
அந்த பெண், அந்த பீரை கண்டு பயந்த அளவுக் கூட அவனை பார்க்கவில்லை, கவணிக்கவில்லை, லேசானப் புன்னைகையோடு ‘ஆம்’ என தலையசைத்தாள் அலட்டாமல்.
இவன் “நானும் அங்கதான்..” என தொடங்க..
இப்போது அவளின் இரண்டு ஆண் நண்பர்கள், அங்கே வந்து நின்றனர்.. “அம்மு.. யார் இது” என்ற கேள்வியோடு வந்து நின்றனர்.
அவினாஷுக்கு தூரத்திலிருந்து பார்க்கும் போது தெரியவில்லை.. இப்போது அருகில் பார்க்க.. நம் படத்தில் வரும் அடியாட்கள் போலவே காட்சி தந்தனர் அந்த இருவரும்.
அந்த அம்மு என்ற அம்ருதா… விழித்தாள் “தெரிலை டா.. “ என்றாள், நண்பர்களை பார்த்து. அவளுக்கு இருக்கும் பிரச்சனையில் இது வேறா என எண்ணம். எனவே அவினாஷை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை.
அவினாஷ், கூலாக “ஹய்ய் கைய்ஸ், நீங்க எல்லாம் இவங்க பிரெண்ட்ஸா.. நான் அவினாஷ், அசிஸ்ட்டன்ட் டைரக்டர்… இவங்க வீட்டு பக்கத்தில்தான் இருக்கேன்..” என்றான், டூப்ளிகேட் சஞ்சய்ராமசாமி போல.
அந்த பையன்கள் பெரிதாக இம்ப்ரெஸ் ஆகவில்லை போல ‘அதுக்கு என்ன இப்போ’ என்ற பார்வை பார்த்து நின்றனர். உண்மையாகவே அவினாஷ்க்கு கொஞ்சம் வலித்தது.
அம்மு என்ற அழைக்கப்பட்ட அம்ருதா “டேய்.. இத குடிக்கனுமா..” என்றாள், கலங்கியக் குரலில்.. வந்த புதியவனை பார்க்காது.
அவினாஷ் அமைதியாக தன் அவமதிப்பை பொறுத்துக் கொண்டு இப்போது வேடிக்கை பார்த்தான் இவர்களை.
அங்கிருந்த பசங்க “ஹேய்… என்ன விளையாடுறியா.. நீ இன்னும் ப்ரூப் பண்ணவேயில்லை.. சீனியருக்கு பதில் சொல்லிட்டு போ” என்றான் அவளின் நண்பன் ரதீஷ்.
அதற்கு அருகில் இருந்த ரதீஸ் “சீனியர்கிட்ட ஏதும் பீலிங் இல்ல தானே அம்மு” என்றான்.
அம்மு “டேய்ய்ய்… “ என்றாள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு.
இவர்கள் மொத்தம் பத்து நபர்கள் வந்திருக்கின்றனர். எல்லாம் இஞ்சினியர் படிக்கும் மாணவர்கள். அதில், ஜூனியர் ஐவர், சீனியர் ஐவர். சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பயில்கின்றனர் இந்த குரூப். ம்… இவள் கல்லூரி இரண்டாம் வருடம்.
முன்பு, இது போன்று ஒரு பார்ட்டிக்கு வந்திருந்தனர், ஒரு சீனியர் மாணவனின் பிறந்தநாள் விழாவிற்காக வந்திருந்தனர்.. அப்போது எல்லோரும் தங்களுக்கு விருப்பமான பானத்தை ருசி பார்க்க தொடங்கினர்.
அதுதான் முதல் பப் அனுபவம் சிலருக்கு. இந்த வயதில் ஒரு கிக்கான செயலாக அது தோன்றியது போல, எனவே ஆளுக்கு ஒன்று என அருந்தி, அதன் சுவை பற்றி பேசிக் கொண்டு இருந்தனர்.
ஆனால், அம்மு.. அங்கு வந்து அமர்ந்திருந்தாள்.. கூடவே நடனமாடினால்.. பேசினாள், சிரித்தாள்.. ஆனால், ஏதும் குடிக்கவில்லை. அவளின் நண்பர்களும் அவளை கட்டாயப்படுத்தவில்லை. அதை அப்போதுதான் சீனியர் ரக்ஷன் கவனித்தான்.
ரக்ஷனும் ‘ஏன், பிடிக்கலையா.. வேற ட்ரை பண்ணு.. கொஞ்சமா ஒயின் கூட ட்ரை பண்ணு.. மிக்ஸ் பண்ணி தர சொல்லவா’ என ஏதேதோ கேட்டு அவளை குடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.
அம்மு, எல்லாவற்றையும் சிரித்தே வேண்டாம் என்றாள். ஒரு கட்டத்தில் அவளின் ஜூனியர் நண்பர்கள் ‘விடுங்க சீனியர், அவளுக்கு பிடிச்சா அவ செய்வா… அத்தோட அவ, வேற மாதிரிதான் எப்போதும்.. நீங்க வாங்க’ என அழைத்து சென்றனர்.
அது முதல் ரக்ஷனுக்கு இந்த அம்ருதா மேல் ஒருகண்.. ‘வந்திருக்கும் அத்தனை பேரும் குடிக்கிறோம், இவள் மட்டும் எப்படி.. அப்படியே இருக்கா’ என ஒரு எண்ணம். அது எந்த விதமானத் தாக்கத்தை அவனுள் விதைத்து என புரியவில்லை.. ஆனால், நாளுக்கு நாள்.. அந்த சிறுபெண்ணை அதிகம் கவனித்தான் சீனியர் ரக்ஷ்ன்.
கல்லூரியில் அவளை தேடினான்.. அவளின் வகுப்பு சென்றான்.. கேண்டீனில் அவள் இருந்தால், இவனும் வந்து அமர்ந்து கொண்டான். அவள் செல்லும் இடங்களுக்கு இவன் செல்லத் தொடங்கினான்.
ஆக, எல்லா நண்பர்களும் அதனை கவனித்து இருவரையும் சேர்த்து வைத்து ஓட்டத் தொடங்கினர். அது இன்னும் ரக்ஷனுக்கு ஆனந்தத்தை தர.. ஒருநாள் அவளிடம் தன் காதலை சொன்னான் சீனியர்.
அம்மு மறுத்துவிட்டாள். காரணமே சொல்லாமல் மறுத்தாள் தைரியமாக… அதை ரக்ஷ்னால் ஏற்க முடியவில்லை. தன்னை மறுப்பாள் என அவன் நினைத்ததே இல்லை எனலாம். அதனால் கொஞ்சம் அவள் மேல் காண்டு.. அந்த வயதிற்கே உண்டான கோவம்.. ஒரு மௌனமான நிராகரிப்பை அவனால் ஏற்க முடியாமல் மீண்டும் விளையாடினான் ‘என்ன பிடிக்கலைன்னு.. இந்த பீர் குடிச்சு ப்ரூப்பண்ணு’ என்றான்.
என்னமோ ஒரு தோற்கடிக்கும் எண்ணம்.. அந்த பெண் எப்படி என்னை பார்க்காமல் இருக்கலாம் என எண்ணம்.. எப்படி இவ்வளோ நல்லவளா இருக்க முடியுமா என எண்ணம்.. வயதின் தாக்கத்தில் எதோ தோன்ற அவளை தோற்கடிக்கும் எண்ணத்துடன் ரக்ஷன் அவளிடம் சவால் விட்டான்.
பெண் தோழிகள் கூட இவ்வளவுதானா என அசாலட்டாக எடுத்துக் கொண்டனர். எனவே அம்மு குடிக்க மாட்டாள் என தெரிந்தும்.. அவளின் சார்பாக அவர்கள் அதை ஏற்று கை தட்டி ‘அவ அப்படி சொல்லிட்டா.. உங்க கூட்டம் எங்கள் பக்கமே வரக் கூடாது, இனி நாங்கதான் கெத்து.. நீங்க வெத்து’ என பதில் சவால் விட்டது.
ஆக, சவால் இப்போது இரு கூட்டத்திற்கும் நடுவில், அதில் அம்மு மாட்டிக் கொண்டாள். இந்த பத்தொன்பது வயது பெண் மனதில் என்னமோ ஒரு அழுத்தம். எனவேதான் வெறித்த அந்த தோற்றம் அம்முவிடம்.
எல்லாம் அவள் வயது பசங்கதான் ஒன்றும் பெரிதாக அவளை பாதிக்காது. அவளின் கிளாஸ் பசங்க கூட ‘முடியலைன்னா விடுடா’ எனதான் அம்முவிடம் சொல்லுகின்றனர். பெண் தோழிகள் ‘என்ன இப்போ ஒருதரம் குடியேன்’ என சொல்லியும் இருந்தனர். ஆக அம்மு இருமனதாக இருந்தாள்.
இப்போது தன் நண்பர்களின் ‘பீலிங்க்ஸ் இல்லைதானே’ என்ற கேள்வியில் ‘பேசாம அவன் சொல்ற மாதிரி கண்ணை மூடிக்கிட்டு இந்த ஒரு தரம் மட்டும் குடிச்சு இல்லைன்னு சொல்லிடலாமா’ என்ற எண்ணம் கூட வந்தது அம்முக்கு.
கடந்த இரண்டு மணி நேரமாக இதே யோசனையில் அம்மு இருக்க, அதை தூரத்திலிருந்து பார்த்த அவினாஷ்க்கு தோன்றியது என்னமோ ‘என்ன சீன்’ எனதான்.
இப்போது அங்கு வந்தான் சீனியர் ஒருவன், இவர்களின் பேச்சை கேட்டுவிட்டு “டேய்.. ரக்ஷன் ” என அந்த சீனியரை அழைத்தான்.
இப்போது அங்கிருந்த வந்த சீனியர்கள் இருவர் “என்ன ரெடியா” என்றனர்.
அம்மு “டேய்… சீனியர், போதும் ப்ளீஸ், எனக்கு இந்த ஸ்மெல் பிடிக்கலை.. எனக்கு அவனையும் பிடிக்கலை” என்றாள் வெடுவெடு என்ற குரலில்.
இப்போது அங்கே வந்த பெண்கள் இருவர் “டேய்.. டைம் இன்னும் இருக்குல்ல, அதுக்குள்ள என்னடா” என்றனர்.
அங்கே நின்றிருந்த அவினாஷ் திரும்ப செல்ல எத்தனித்தான், ஆனால், தன் நண்பன் கேஸ்சின் வார்த்தைகள் அவனை கட்டிதான் போட்டது.
இப்போது அந்த ரக்ஷ்ன் வந்து நின்றான். உடனே அருகில் இருந்த நண்பன் “டேய்.. உனக்கு இன்னும் சான்ஸ் இருக்குடா” என்றான் கிண்டல் குரலில்.
அந்த ரக்ஷ்ன் “டேய்.. மை டால் அவ. கஷ்ட்டப்படுத்தாதீங்க அவள” என தன் நண்பர்களை பார்த்து சொன்னவன், அவளிடம் திரும்பி “நீ வந்து டான்ஸ் போடு பேபி.. வா, எனக்கு தெரியும்” என பொதுவில் அதட்டி, தன்னை அவள் காதலிக்கிறாள் என்ற பொருள் பரப்பி, அவளை எல்லோரிடமிருந்தும் மீட்டான்.
ஆனால், அம்ருதா இன்னும் அழுத்தமாக அமர்ந்து அவனை முறைத்தாள் “சீனியர், எனக்கு பிடிக்காது, இப்படி பேசாதீங்க… “ என்றாள்.
அதற்குள் முன்னிருந்த நண்பன் அந்த மியூசிக் மாறவும்.. மீண்டும் தன் நண்பர்களுடன் சென்று சேர்ந்துக் கொண்டான்.
இப்போது ரக்ஷன் “அதான், அது பிடிக்காது. என்னை பிடிக்கும்ன்னு சொல்றேன்” என்றான் அவளையும் அந்த சின்ன டின் பீரை பார்த்துக் கொண்டே.
அம்மு அப்படியே அமர்ந்திருந்தாள். இப்போது பெண்கள் மட்டும் இருந்தனர்.. மற்ற ஆண்கள் எல்லாரும் நடனமாட சென்றனர்.
அம்ருதா… எம்.என் ப்ரோடக்ஷன் நந்தகோபாலன் அவர்களின் மகள். அவளின் அன்னை லீலாவதி ஒரு விபத்தில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். நந்தன் லீலாவதி தம்பதிக்கு இரு பிள்ளைகள். அம்ருதா.. அடுத்து ஆதித்யா. ஆதி இப்போது ஒரு போர்டிங் ஸ்கூல்லில் படித்து கொண்டிருக்கிறான் பத்தாம் வகுப்பு.
வீட்டில் லீலாவதியின் தந்தை, அம்முவின் தாத்தா வேணுகோபால் இருக்கிறார். அதிலும் அம்முவின் தந்தை நந்தன் எப்போதும் வெளியூரில்தான் இருப்பார். அம்மு முழுக்க முழுக்க.. தாத்தா மற்றும் வேலையாட்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறாள்.
தாத்தா, வயதான காலம்.. மகள் சென்றதும், பாதி உயிர் இல்லை அவரிடம், இழுத்து பிடித்து வைத்திருக்கிறார் பேரப் பிள்ளைகளுக்காக.
எனவே தட்டு தடுமாறி வாழ்கிறார். பெரிதாக நடமாட்டம் இல்லை, வேலையாட்கள் உதவியுடன் தன் வேலையை செய்வார். எனவே பேத்திக்காக உண்டு உயிர் வாழ்கிறார்.
சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்களும் எழுந்து செல்ல… அம்மு தனியே அவினாஷுடன் அமர்ந்திருந்தாள். என்னமோ அவினாஷ் பொறுமையாக இதையெல்லாம் வேடிக்கை பார்க்க.. அவனுக்கு பிடிபட்டது ‘இந்த பெண்ணுக்கு, அந்த பையனை பிடிக்கலை, அதுக்கு இத குடிக்கணும்.. இவளுக்கு இதுவும் பிடிக்கலை’ என்ற செய்திதான் தெரிந்தது.
தனக்கான நேரத்திற்காக காத்திருப்பவனே இந்த கனாகாரன் எனவே அவளிடம் “ஹேய்.. உங்க அப்பா, எம்.என் நந்தன் சார்தானே… என் அப்பா தயானந்த் டிஸ்ட்பியூட்டார். இப்போ தெரியுதா” என்றான் எதையும் பொருட்படுத்தாமல். அய்யோ பாவம் அந்த பெண்ணுக்கு யாரையும் தெரியவில்லை. அம்முவின் முகம் வாடியே இருந்தது.
உடனே அவினாஷ் “ச்சு.. என்ன இப்போ.. உனக்கு.. இரு வரேன்” என்றவன், அவளின் பார்வையும் பொருட்படுத்தாமல் அங்கிருந்த ட்ரங்க் டேபிளுக்கு சென்றான்.
புதிதாக ஒரு பீர் வாங்கி அதை இன்னொரு கிளாஸ்சில் மாற்றி, அந்த டின்னில்.. ஒரு சோடாவை ஊற்றி கொண்டு வந்து அவளின் முன் இருந்த பழைய பீர் பாட்டிலை சத்தமில்லாமல் எடுத்துக் கொண்டு.. இந்த பீர் டின்னை அவளின் முன் வைத்தான். அவர்களின் நண்பர்கள் கவனத்தை ஈர்க்காமல்.
இதெல்லாம் ஐந்து நிமிடத்தில் நடத்துவிட்டது..
அம்முவின் பார்வை இவனை அனிச்சையாய் தொடர்ந்ததில் அவினாஷின் நோக்கம் புரிந்தது.. அவளின் பெரிய விழிகள் ஆச்சிரியத்தில் விரிந்தது.. முகம் சட்டென சந்தோஷத்தை பூசிக் கொண்டது. ஆனந்தமாக சிரித்தாள் அம்மு.
அவளின் சந்தோஷம் பார்த்த அவினாஷ்.. “உஷ்.. ஷ்… அமைதியா இரு… எக்ஸ்சைட் ஆகாத.. அப்படியே சடாவே இரு.” என்றான் மெல்லியக் குரலில்.
அம்முக்கு, சிரிப்பையும் அந்த ஆனதத்தையும் கண்ட்ரோல் பண்ணவே முடியவில்லை.. கீழே குனிந்து தன்னை சமன் செய்துக் கொண்டாள்.. அவினாஷ் “ஹேய்.. உன் பேர் என்ன..” என்றான்.
அவளும் “அம்ருதா…” என்றாள்.
அவினாஷ் “அதான் அம்மு அம்மு கூப்பிடுறாங்களா…” என்றான். அவள் கொஞ்சம் சமாதானம் ஆனாள்.
இப்போது அவினாஷ் “சரி.. அவங்க வரும் போது.. அந்த பையனை பார்த்துக்கிட்டே.. கண்ண மூடிக்கிட்டு குடிச்சிடு.. அவனுக்கு தெரியாது இது பீர் இல்லைன்னு சரியா… “ என்றான்.
அவினாஷ்க்கு, அவளை பார்க்க இப்போது பிடித்தது.. அவளின் நட்பானக் குரலில் அவனும் “காமெடி.. சிரிச்சிடு…” என தன் உதடு மடித்து சிரித்துக் கொண்டே அசடு வழிந்தான். கூடவே “ச்சு.. சாட்.. சாட்(sad).. ஃபேஸ்.. சிரிக்காத,” என்றான்.
அவள் அப்படி தன்னை மாற்றிக் கொள்ளவும்.. அவினாஷ் “சரி, என்ன படிக்கிற” என அவளை பேச வைத்தான். அதற்குள் மீண்டும் ஆட்டம் போட்டு முடித்த நண்பர்கள் ஓரிருவர் வந்து அமர்ந்தனர்.
அவினாஷ் “பை.. அம்ருதா..” என விடைபெற்று, தன் இருக்கையை கைகாட்டி எழுந்து கொண்டு கண் சிமிட்டி.. தன் கட்டை விரல் உயர்த்தி சென்றான்.
அம்முக்கு என்னமோ புதிதாக இருந்தது.. நண்பர்களை ஏமாற்றுகிறோம் என இருந்தாலும்.. யாரென்றே தெரியாத ஒருவன், தன்னை இதிலிருந்து மீட்பது.. அவளை ஆனந்த்மாக்கியது.
தன்னிடம் விடைபெற்று சென்ற அவனையே பார்த்திருந்தாள்.. அவன் அமர்ந்த இடம் கொஞ்சம் இருட்டு.. எனவே.. அவன் முகம் தெரியவில்லை.. உதடுகளில் அந்த புன்னகையும் மாறவில்லை, அப்படியே அவனையே நோக்கிய பார்வையில் இருந்தாள்.
இப்போது மீண்டும் நண்பர்கள் சூழ்ந்தனர்… கொஞ்ச கொஞ்சமாக மீண்டும் அம்மு ரக்ஷன் என பேச்சு வர.. ஆளாளுக்கும் ஓவ்வொன்று பேசிக் கொண்டிருந்தனர்.
இப்போது அம்மு.. “கைஸ்….” என சொல்லியவள்.. தன் முன் இருந்த பீயரை… கண் மூடிக் கொண்டு.. குடித்தாள். அவளுக்குதானே தெரியும் அது சோடா என.. எனவே குடித்துவிட்டாள். நடுவில் நிறுத்தி… மீண்டும் அந்த ரக்ஷனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு.. மீண்டும் குடித்தாள் முழுவதுமாக.
ஜூனியர் ஐவரும்.. கைதட்டி ஆரவாரம் செய்தனர்… ‘அம்மு கேங்க்.. அம்மு கேங்க்… வி ஆர் கெத்து கேங்..’ என ஒரே சத்தம் அங்கு. சிலர் திரும்பி பார்த்து கடந்து சென்றனர்.
அம்மு, ரக்ஷனிடம் “என்ன, எனக்கு இதுவே பெட்டெர்… நீ இல்லை… சரியா” என்றாள் திமிராக. அந்த சீனியர்ஸ்.. அதை கேட்டு கொஞ்சம் தள்ளி சென்றனர். ஒருவன் மட்டும் எகிறினான்.. ‘என்ன டா, மாப்பிளையை ஏமாத்துறீங்களா’ என சண்டைக்கு நின்றான்.
ஜூனியஸ் அவனை கத்தியே துரத்தினர்.. அம்மு சத்தமில்லாமல் அவினாஷ் பக்கம் பார்வையை திருப்பினாள்.. இப்போதுதான் பாய்ந்த led ஒளியில்.. அந்த கள்வனின் மென்மையான சிரித்த முகம் தெரிந்தது அம்ருதாக்கு ‘ச்சு.. என்ன பேருன்னு தெரியலையே’ என எண்ணிக் கொண்டாள். முகம் அப்போது அடக்கிய ஆனந்தத்தை இப்போது வெளிப்படுத்தியது அவளுக்கு, மேலும், கண்கள் முழுவதும் விரிந்தது.. அவனை பார்த்ததில்..
அங்கிருந்தே அதை பார்த்த அவினாஷ் “உஷ்…” என உதட்டில்.. விரல் வைத்து அவளை அமைதியாக்கினான். அம்முவும் தலையை குனிந்து தன்னை சமாளித்துக் கொண்டாள்.