Advertisement

அத்தியாயம் 8

         வீட்டிலிருந்து  அங்குள்ள காரில் டிரைவரை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மருத்துவமனையில் வந்து இறங்கிக்கொண்டு காரை திருப்பி அனுப்பினாள்.

              மருத்துவமனை வாசலுக்கு வந்த பிறகுதான்,  நேரத்தை பார்க்கும் போது மணி காலை ஒன்பது கூட ஆகவில்லை என்று தெரிந்தது.  ‘இவ்வளவு சீக்கிரமாக வந்தால் ஏதும் நினைப்பார்களோ’ என்று மனதில் தோன்றினாலும், ‘யார் என்ன நினைத்தாலும் தனக்கு அதை பற்றி கவலை இல்லை’ என்று வீட்டில் சொன்னதை  இப்பொழுதும் நினைத்துக் கொண்டு நரேன் இருந்த அறைக்கு முன் வந்தாள்.

          உள்ளே ஏதோ சத்தம் கேட்பது கண்டு மெதுவாக முன்னறைக்கு சென்றாள். அங்கு உள்ளறையில் ராஜசேகர் நரேனிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. ராஜசேகர் லலிதா கல்யாண் மூவர் மட்டும் அவனோடு இருந்தார்கள்.

                நரேன் ராஜசேகரிடம் சத்தம் போட்டு பேசுவதும்., பதிலுக்கு ராஜசேகர் பேசுவதுமாக இருந்தது. சற்று நேரம் அமைதியாக நின்று கவனித்துக் கொண்டிருந்தாள்..

             “நரேன் சொன்ன கேளு பா,  கொஞ்ச நேரம்  சாப்பிட்டு தூங்கு..,  அம்மா உனக்காக காபி,  சாப்பாடு எல்லாம் வீட்ல இருந்து எடுத்துட்டு வந்து இருக்கா,  பாரு…  நீ நைட் ஃபுல்லா தூங்கல, இப்பவாவது கொஞ்சம் தூங்கு” என்று ராஜசேகர் சொன்னார்.

               அதற்கு நரேனோ., “தூக்கம் வந்தா தான் தூங்க முடியும்.., தூங்கு தூங்கு னா.,  எப்படி தூங்க” என்று சொன்னான்.

              கல்யாண் “டேய் தூங்குறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டும்,  எப்படிடா தூக்கம் வராம இருக்கும்,  நீ எதையோ யோசித்து உன்னையும் குழப்பி, வீட்டில் உள்ள எல்லாரையும் குழப்பிக் கொண்டிருக்க,  ரொம்ப யோசிக்காத உன் நல்லதுக்கு தான் சொல்றேன்., எல்லாம் நல்லதுக்கு நினைச்சுக்கோ..,  கொஞ்ச நேரம் இப்ப சாப்பிட்டு கொஞ்சம் தூங்கு, நைட் ஃபுல்லா முழிச்சிட்டு இருந்திருக்க, பசிக்காமல் எப்படி இருக்கும்”., என்று கேட்டான்.

     ” யாருமே புரிஞ்சுக்க மாட்டீங்களா,  எனக்கு பசிக்கல, தூக்கம் வரல, எதுவும் செய்யல போதுமா” என்று நரேன் கத்தினான்.

       “தம்பி புரிஞ்சுக்கோடா..,  நேத்து நைட்டு ஒரு இட்லி தான் சாப்பிட்ட.., அதுக்கு மேல பாலும் அரை டம்ளர் தான் குடிச்சிருக்க.,  இப்பவும் சாப்பிடலைன்னா எப்படிப்பா” என்று லலிதா அமைதியாக கெஞ்சிக் கொண்டிருந்தார்.

         “ஏன்மா இப்படி பண்றீங்க.., எனக்கு அப்படி தான் இருக்கு.,  என்ன பண்ண ன்னு, தெரியலை,  அந்த அளவுக்கு டென்ஷனா இருக்கு,  பேசாம இருங்க” என்று சொன்னான்.

       அப்போதே அவன் கை காயத்தில்  இரத்தம் வந்து இருந்ததை கண்டு., அதற்காக ஏற்கனவே போராடி முடித்திருந்தார்கள் போல..,  அதைப் பற்றியும் பேசினார் ராஜசேகர்.

              “தூங்காம உருண்டு உருண்டு உன் கையில் என்ன ஆச்சு ன்னு தெரியல.,  டாக்டர் வந்தால் தான் தெரியும். ரத்தம் வந்து இருக்கு பாரு”.., என்று சொன்னார்.

                 “அப்பா ப்ளீஸ்.., தயவுசெய்து யாரும் எதுவும் பேசாதீங்க”, என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

            ” நீ தூங்கல சரி., இப்ப தூக்கம் வரல சரி.,  அதுக்கு எதுக்கு எல்லாரும் செல்லையும் வாங்கி பக்கத்தில் வைத்திருக்க” என்று கேட்டார்.

            “நீங்க யாரும் யாருக்கும் போன் பேசக்கூடாது. அதுக்காக தான் வாங்கி வச்சிருக்கேன்” என்று சொன்னான்.

              கல்யாண் க்கு  புரிந்ததோ இல்லையோ., வீட்டினருக்கு புரிந்ததோ இல்லையோ.,  அவளுக்கு புரிந்தது.’எங்கே அவளுக்கு போன் செய்து யாரும் வர சொல்லி விடுவார்களோ..,  அல்லது அவன் தூங்காத விஷயத்தை சொல்லிவிடுவார்களோ.,  என்று நினைத்திருப்பான் போல’ என்று எண்ணிக் கொண்டாள்.

            என்னவோ சற்று நேரம் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அபூர்வா மெதுவாக கதவை தட்டிவிட்டு எட்டிப் பார்த்தாள். வாம்மா என்று சேர்ந்தார் போல அழைத்தார்கள்.

         நரேன் முகத்தில் வந்து போன உணர்வு என்னவென்று அபூர்வா விற்க்கு புரியவில்லை.,  மற்றவர்கள் அனைவரும் இவளைப் பார்த்து திரும்பி இருந்ததால்,  அவன் முகம் மாற்றம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இருந்தும் எதையும் கண்டுகொள்ளாமல் சிரித்த முகமாகவே உள்ளே சென்றாள்.

         நரேன் அம்மாவின் கையில் கோயில் பிரசாதத்தை கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு “உங்க பையனுக்கு வச்சுடுங்க” என்று சொன்னவள்.,  என்ன ஆச்சு அண்ணா என்று கல்யாண்னிடம் பேச தொடங்கினாள்.

            நரேன் இரவு முழுவதும் தூங்காததையும்., காலை எழுந்ததிலிருந்து செய்துகொண்டிருக்கும் வேலைகளையும் சொல்லிக்கொண்டிருந்தார்., கல்யாண் சொல்வதை கவனித்தாலும் அவள் பார்வை எல்லாம் நரேன் மேலே இருந்தது. அவளைப் பார்த்தவுடன் முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக இருந்தாலும்., அவன் முகத்தில் வந்து போன  உணர்வுக்குப் பெயர் என்ன என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

          எதுவும் சொல்லாமல் அவன் அருகில் சென்றவள்.,  அவனருகில் வாங்கி வைத்திருந்த அவர்களுடைய போனை எல்லாம் வாங்கி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு., “நான் பார்த்துக்குறேன், நீங்க வீட்டுக்கு போய் ரெப்பிரஷ் ஆகி வாங்க” என்று கல்யாண்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

       அவர்கள் அனைவரும் முன்னறைக்கு சென்ற பிறகு.,  இவள் அவனிடம் “சாப்பிடுகிறீர்களா” என்று கேட்டாள்.

         அவன் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தான். அதே நேரம் அவர்கள் முன்னறையில் நிற்பது தெரிந்தது. இவள் அவர்களை பார்க்கவும்.,  அதேநேரம் கல்யாண் அபூர்வாமா கொஞ்சம் வந்துட்டு போயேன் என்று அழைத்தான்.

                இவளும் எழுந்து அங்கு செல்ல கல்யாண் “அபூர்வா நான் வீட்டுக்கு போய்ட்டு வந்தர்றேன்.,  அம்மா இங்க தான் இருப்பாங்க.., அப்பாவும் நானும் வீட்டுக்கு போறோம்., அம்மா முன்னாடி உட்காந்து இருக்காங்க” என்று சொன்னான்.

           “ஆன்ட்டி உள்ள வந்து உட்காருங்க” என்று சொன்னாள்.

        ” இல்லம்மா, அவன் நேத்து நைட்டு ஒரு இட்லி தான் சாப்பிட்டான்.  அரை டம்ளர் பால் குடித்து இருப்பான், நைட் விடிய விடிய தூங்காமல் இருந்து இருக்கான்,  டேப்லெட் போடாமல் இருக்கான்.,  எனக்கு பயமா இருக்கு”,  என்று ஒரு தாயாய் அவர்  பரிதவித்தார்.

             “ஆண்ட்டி நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே” என்று கேட்டாள்.

        ” என்னம்மா” என்று அவரும் பதிலுக்கு அவளிடம் கேட்டார்.

          “உங்க பையன ஃபுல்லா நான்  பார்த்துக்குறேன்., நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.,  சாப்பாடு கொடுப்பதிலிருந்து., எல்லாமே  பார்த்துக்குறேன். நீங்க எதுவும் ஃபீல் பண்ணுவீங்களா”.,  என்று கேட்டாள்.

      ” இல்லம்மா, அப்படி எல்லாம் நினைக்க மாட்டேன்”., என்று சொன்னார்.

            உடனே அவளும்  “சரி நான் பார்த்துக்குறேன்., நீங்க இங்க இருக்கிறதா இருந்தாலும் இருங்க..,  இல்ல வீட்டுக்கு போயிட்டு வர்றதுனாலும் போயிட்டு வாங்க” என்று சொன்னாள்

        அவள் உள்ளே சென்ற பிறகு கல்யாண்  வெளியே நின்று தன் தாய் தந்தையோடு விவாதிக்க தொடங்கினான். அதேநேரம் லலிதாவின் முகம் சற்று வாடினார் போல இருந்தார்.

         ராஜசேகர் தான் “ஏன் உன் பையனுக்கு அவ உரிமை எடுத்துக்கிறது உனக்கு பிடிக்கலையா”., என்று கேட்டார்.

                “ஐயோ இல்லங்க., நான் அப்படி நினைக்கல, இந்த பையன் இப்படி இருக்கானே அப்படின்னு தான் யோசிச்சேன்” என்று சொன்னார்.

              கல்யாண்   “கண்டிப்பா..,  அவன் நல்ல சாப்பிடுவான்.. நீங்களும் அப்பாவும் வேணும் னா கொஞ்சநேரம் வீட்டுக்கு போய்ட்டு வரதா இருந்தா வாங்க..,  நான் இங்க வெயிட் பண்றேன்” என்று சொன்னான்.

        “இல்லடா நான் இங்கே இருக்கேன்., நீ வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி வா..,  என்று  ராஜசேகர் சொன்னார்.

           ஏன் ப்பா.. என்ற படி  பார்த்தான் கல்யாண்.

              ராஜசேகர் நான் இப்பதான் அம்மாவ  வீட்டில் இருந்து கூட்டிட்டு வந்தேன்.., நீ வீட்டுக்கு போயிட்டு வா டா.., என்றார்.

           அவன் யோசனையோடு நிற்கவும்.,

            “ஒன்னும் பிரச்சனை இல்ல டா., நீ கிளம்பு.. நாங்க இரண்டு பேரும் கீழே போய் கேண்டீன்ல ஒரு காபி சாப்பிட்டு வர்றோம்”.., என்று சொன்னார்.

                “காபி தான் போட்டுக் கொண்டு வந்திருக்கேனே” என்று லலிதா சொன்னார்.

              ” அந்த காபி இருக்கட்டும், அப்புறமா குடிக்கலாம்.., இப்ப நீ வா” என்று அபூர்வாவிற்கு நரேனோடு பேசுவதற்கான தனிமை கொடுத்துவிட்டு அவர்கள் வெளியே சென்றனர்.

          கல்யாண் மறுபடியும் அபூர்வாவை அழைத்து  சொல்லிவிட்டு சென்றுவிட்டான். அங்கு மருத்துவர்கள் தவிர வேறு யாரும் வருவது இல்லை., ராஜசேகரிடம் வேலை பார்க்கும் ஆள்கள் வந்தால் வெளியே தான் நிற்பார்கள். இன்னும் சற்று நேரத்தில் டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வரும் நேரம் என்பதால் அதற்குள் அவனை சாப்பிட வைத்து மாத்திரை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு வேகமாக உள்ளே வந்தாள்.

          அவன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்த வண்ணமே இருக்க.,  ஏற்கனவே கல்யாண் அவனுக்கு அங்கிருந்த ஆண் நர்ஸ் உதவியோடு உடல் துடைத்து., வேறு உடை மாற்றி தான் வைத்திருந்தான்.  அதன் பிறகு தான் இவளும் வந்தது.

            அவள் நேராக சென்றவள் கையை சுத்தம் செய்து கொண்டு வந்து  லலிதா கொண்டு வந்திருந்த உணவை தட்டில் எடுத்து வைத்து விட்டு அவனிடம் சென்றாள். “சாப்பிடுங்க” என்று சொல்லவும் “முடியாது” என்று சொன்னவன்., அவள் பேச்சை கேட்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு இருந்தவனைக் கட்டாயப்படுத்தி அவனை பிடித்து வைத்து ஊட்டாத குறையாக முதல் வாய் உணவை வாயில் திணிக்கவும்.,  அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடி இருந்தான் நரேன்.

      முதல் வாய் உணவை முழுங்கிவிட்டு., “எனக்கு வேண்டாம் சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா” என்று சொன்னான்.

       ” நைட் ஏன் நீங்க தூங்கலை” என்று பேச்சை தொடங்கினாள். அவன் எதுவும் பேசாமல் இருக்க “பேச மாட்டீங்க னா.,  வாயை திறந்து சாப்பாடு வாங்கணும்,  இல்லாட்டி இப்ப எனக்கு ரீசன் சொல்லணும்”..,  என்று சொன்னாள்.

       எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான். அவனிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்தவள்., “வாயைத் திறங்க” என்று சொல்லி அவனிடம் எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் வேகவேகமாக சாப்பாடு ஊட்டினாள்.

                      அவனும் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே., எதுவும் பேசாமல் சாப்பிட தொடங்கியிருந்தான். அவன் மனதிற்குள் நேற்று இரவு தூக்கம் தூரப் போனதற்கு காரணங்கள் வந்துப்போய் கொண்டிருந்தது.

                   மதியத்திற்கு மேல் அவளை கட்டாயப்படுத்தி அனுப்பி இருந்தாலும்.,  அவன் மனம் முழுவதும் ‘அவள் போ என்று சொன்னவுடன் போய் விட்டாளே’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது.

         அதுமட்டுமன்றி இரவு உணவு எடுக்க தொடங்கும்போது அவளைப் பற்றிய பேச்சு அம்மாவிடம் கல்யாண் னிடமும்இருந்ததால் அவனுக்கு சரியாக உணவு எடுக்க முடியவில்லை.

             வீட்டிற்கு சென்றவள் ஒரு அழைப்பு விடுத்து பேசவில்லை., ‘கடமைக்காக பார்க்கிறேன் என்று சொல்லி இருப்பாளோ.,  கடமைக்காக திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி இருப்பாளோ’., என்று பல விதமாக அவன் மனதில் எண்ணங்கள் வந்து போய்க்கொண்டிருந்தது.

         அதன் காரணமாகவே உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் மனம் தவித்தது.  உறக்கத்திற்கு மருந்து செலுத்திய பிறகும் முதலில் கண் மூடி உறங்க தொடங்கியவன் கனவில்., அவள் மதியம் இவன் சொன்னவுடன் போனது மட்டுமே நினைவில் வர., ‘அவள் தான் சொன்னவுடன் போய்விட்டாள் இனி வரமாட்டாள்’., என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.

       அவன் அறியாமல் மனதிற்குள் புகுந்த எண்ணம் அவனை குழப்பியது. அதனாலே அவனுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தான்.  ஏன் தனக்கு இப்படிப்பட்ட எண்ணம் வந்தது, முதலில் யாருமே வேண்டாம் என்று நினைத்தவன், அவள் வந்தவுடன் ஏன் அப்படி தோன்றியது, என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது.

Advertisement