Advertisement

 

அத்தியாயம் 7

              மதியம் வரை மருத்துவமனையில் இருந்தவள்.,  மாலை நேரம் அவளுக்கு தேவையான சில துணிகள் மற்றும் பொருள்களோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஷாப்பிங் சென்று வந்திருப்பாள் என்பது நன்றாகவே தெரிந்தது. ஆனால் எதுவும் சொல்லாமல் அனைத்தையும் அவள் அறையில் வைத்து விட்டு குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவள். அவளுக்கு தேவையான காபியை அவளே கலந்து கொண்டு வந்து அமர்ந்தாள்.

          பாட்டி தான் “ஏதாவது சாப்பிடுகிறாயா” என்று கேட்டார்.

      ” இல்லை வேண்டாம்” என்று சொல்லிவிட்டாள்.

           பின்பு ராமநாதன் தான் “அந்த தம்பி போய் பாக்க போறேன்னு போன,  என்ன விஷயம்” என்று கேட்டார்.

          ” சொல்றேன் உன்கிட்ட சொல்லாம எதுவும் பண்ண போறது இல்ல..,  சொல்றேன்” என்று சொல்லி விட்டு அனைவரையும் ஹாலில்  வந்து அமர சொன்னாள்.

              அனைவரும் வந்தமர்ந்த பிறகு  தான் எடுத்த முடிவுகளை விலாவாரியாக சொல்லவும்., அனைவருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவள் இதுபோல ஏதாவது முடிவெடுப்பாள் என்பதை  ஓரளவுக்கு யோசிதிருந்த மாமாவிற்கும் தாத்தாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

       “நல்ல யோசிச்சுகிட்டேயா மா” என்று மாமா கேட்டார்.

         “ஆமா மாமா இது  இவங்க பிரச்சனை தொடங்கினதா தெரிஞ்ச அந்த நிமிடத்தில் இருந்து., நான் யோசித்து எடுத்த முடிவு தான்.  ஏதாவது செய்யணும்னு தோணுச்சு.,  அப்போ ஏன் நாமளே பாத்துட்டா என்ன அப்படி ன்னு தான் பஸ்ட் தோணுச்சு..,  ஆனால் யாரும் எதுவும் சொல்லுவாங்களோ அப்படிங்கற நிலைல தான்., மேரேஜ் ன்னு ஒரு கான்சப்ட் யோசிச்சேன்.   என்னை பத்தி உங்களுக்கு தெரியும் ., ஆனா இதுல நரேனுக்கு இஷ்டம் இல்ல., அவங்கள  பொறுத்தவரைக்கும் வாழ்க்கை வேற.., இது பரிதாபம் அப்படி ன்னு நினைக்கிறாங்க”.,  என்றாள்.

        அத்தை குறுக்கே பேசினார். “எனக்கும் அப்படி தான் தோணுது”.,

            “இல்ல அத்தை., இப்போ நான் அவர் கூட இருக்க போறேன் னு சொல்றதே.,  பரிதாபத்திற்கும்., வாழ்க்கை க்கும் என்ன வித்தியாசம் ன்னு புரிய வைக்க தான்” என்று அவள் சொன்னாள்.

           அத்தையோ “அபூர்வா மா நல்ல யோசிச்சிக்கோ.., வேலையை லீவு போட்டுட்டு அவருக்கு குணமாக வரைக்கும் நீ இங்கே இருக்கணுமா”.., என்று கேட்டார்.

           ” நான் யாருக்கும் பிடிக்காத பொண்ணா இருப்பேன் னு யோசிக்கிறீங்களா” என்று அவள் கேட்டாள்.

     ” அப்படி சொல்லல அபூர்வா மா  ஒன்ன போயி யாருக்காவது பிடிக்காது ன்னு நான் சொல்லுவேனா.., ஆனா இது என்னமோ நீ உன்னோட தகுதி..,  உன்னோட  கௌரவம் எல்லாத்தையும் விட்டு இறங்கி வர மாதிரி ஒரு பீல் ஆகுது., நீ இப்படி இறங்கி வந்து நான்  எந்த இடத்திலும் பார்த்ததில்லை” என்று சொன்னார்.

           “உண்மைதான் எல்லா இடத்திலேயும்  நம்மளோட கெத்த காமிக்க முடியாது.,  நான் வந்து இப்படி தான் அப்படின்னு அதிகாரமா நிற்கமுடியாது.,  நமக்கு எந்த இடம் முக்கியம் தோணுதோ அந்த இடத்தில நம்மளால அப்படி அதிகாரத்தை காமிச்சிட்டு  இருக்க முடியாது.., என்ன பொருத்த வரைக்கும் இப்போ நான் அப்படி ஒரு நிலைமையில் தான் இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன்.,  சோ என் முடிவு நல்லபடியா இருக்கணும்னு பிரேயர் பண்ணுங்க.,  அதுக்காக நான் டெல்லிக்கு வராமல் இருக்க மாட்டேன்., டெல்லிக்கு கண்டிப்பா வருவேன்,  இப்பவும் அங்க பேசிட்டு இருக்கும்போது நான் சொன்னது என்ன பொருத்த வரைக்கும்.., எங்க அம்மா வீடு னு சொன்னால்., அது டெல்லி தான் அப்படின்னு சொல்லி இருக்கேன்,  சோ நான் டெல்லிக்கு தான் வருவேன் நீங்க ஃபீல் பண்ணாதீங்க”..,  என்று சொன்னாள்.

      அவள் அருகே அமர்ந்திருந்த அத்தை பெருமூச்சோடு அபூர்வா வை அணைத்து கொண்டாள்.

          தாத்தா “ஏம்மா..,  அபர்ணா கல்யாணத்துக்கு இங்க தான இருப்ப” என்று கேட்டார்.

           “கண்டிப்பா., இங்க தான் இருப்பேன் முதல்ல நரேனை பொருத்தவரைக்கும் கையில் புண்ணு ஆறனும்.,  தையல் பிரிக்கிற வரைக்கும் ஹாஸ்பிட்டல் ல தான் இருக்கனும் ன்னு… சொல்லிட்டு இருந்தாங்க..,  டென்ஷன் ல சரியான தூக்கம் இல்ல.., இந்த ப்ராப்ளம் எல்லாம் க்யூர் ஆனது அப்புறம் தான் வீட்டிற்கு போவாங்க.., அவங்க வீட்டுக்கு போற வரைக்கும் நான் பகல்ல  ஹாஸ்பிடல் போயிட்டு..,  நைட் நம்ம வீட்டுக்கு வந்து விடுவேன்” என்று சொன்னாள்.

        அதுவரை பேசாமல் இருந்த நிர்மலா அப்பொழுது பேசத் தொடங்கினார்., “ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா.., அவதான் அறிவு கெட்ட தனமாக பேசுறானா நீங்க எல்லாரும் சேர்ந்துட்டு அவர் எடுத்த முடிவுக்கு சப்போட் பண்ணி பேசிட்டு இருக்கீங்க..,  என்னமோ நான் வளர்த்த லட்சணம் சரி இல்ல..,  சரி இல்ல ன்னு.,  அபர்ணாவை திட்டுவீங்க..,  இப்ப நீங்க மட்டும் என்ன அழகில் வளர்த்து இருக்கீங்க” என்று கேட்டார்.

                  அபூர்வா சத்தம் போட்டு பேச தொடங்கினாள். “வளர்த்த விஷயத்தை பத்தி நீங்க பேசவே கூடாது.., உங்களுக்கு அந்த தகுதியே இல்ல., பிள்ளையை எப்படி வளர்க்கணும்.,  இப்போ உள்ள காலத்தில் பெண் பிள்ளை  எப்படி  இருக்கணும்..,  எவ்வளவு தைரியமா இருக்கணும்., ன்னு மாமா , அத்தை வளர்ப்பிலிருந்து கத்துக்கோங்க..,  நீங்க இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க அவளை”., என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…,

       “எப்படி வளர்த்துருக்கேன்”…

        “எப்பவும் உங்க பின்னாடி மறஞ்சிட்டு வாழ்ந்துட  முடியுமா…. இன்னும் எவ்வளவோ இருக்கு வெளியே எவ்வளவோ பார்க்க வேண்டியது இருக்கு… அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே…

          “நீ என்னைய  பார்த்து மட்டம் தட்டி பேசுற., நான் ஒன்னும் பயந்தவ கிடையாது”., என்று அபர்ணா கத்தி பேசிய படி அபூர்வா விடம் சண்டைக்கு வந்தாள்.

          அபூர்வா வோ  பதிலுக்கு “அடிச்சா பல்லு எல்லாம் கலண்டு டும் வாய மூடு..,  எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசினால் நீ தைரியமான  பொண்ணா ஆக முடியாது.  எப்பவுமே எடுக்குற முடிவு உள்ள தெளிவாக இருக்க தெரியணும்., தெளிவா யோசிக்க தெரியணும்., எடுத்த முடிவில் தெளிவாக இருக்க தெரியணும்., அதை விட்டுவிட்டு இதுவா அதுவா என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டே இருக்கக்கூடாது. தெளிவாக முடிவெடுக்க கத்துக்கோ..,  அதுமட்டுமில்லாம நீ எடுத்த முடிவில் உறுதியாக நிற்கவும் கத்துக்கோ..,

சும்மாச் சும்மா கத்தி பேசினா அதுக்கு பேரு பிடிவாதம்..,  இது இப்பவே முடிய போற ஒரு விஷயம் கிடையாது…,  கல்யாணம் வரைக்கும்.,  நீ அம்மாவோட டிசீஸான ஓகே ஓகே சொல்லலாம்.,  கல்யாணத்துக்கு அப்புறமும் அம்மாட்ட தான் கேப்பேன் அப்படிங்கற மாதிரி இருந்தா.,  ரொம்ப கஷ்டப் படுவ ன்னு தோணுது., அப்புறம் உன் இஷ்டம் அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்”.., என்றாள்.

             “இங்க பாரு., அவளை குறை சொல்ற வேலை நீ வெச்சுகாதே..,  நீ பண்றது தப்பு நாங்க சொன்னா,  நீ அவளை குறை சொல்லிக்கிட்டு இருக்கியா”., என்று நிர்மலா அதிகாரமாக சத்தம் போட்டார்.

         “யார் தப்பு பண்ணா…, யார் தப்பான முடிவு எடுத்தா…,  நீங்க தப்பான முடிவு எடுக்க போய் தான்.,  நான் சரியான முடிவெடுத்து இருக்கிறேன். நீங்க மட்டும் கரெக்டா இருந்தால் நான் எதுக்கு இந்த முடிவு எடுக்க போறேன்.  கல்யாணத்துக்கு வந்தோமா போனமா ன்னு இருந்திருப்பேன்.., நீங்க தான் இப்ப தேவையில்லாத வேலை பார்த்து வச்சிருக்கீங்க.., போனமா வந்தமா ன்னு இருந்திருந்தா..,  அவங்களை கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்க…,  தேவை இல்லாமல் நீங்களாகவே  உங்க இமேஜை கெடுத்து..,  எதுக்கு இதெல்லாம் தேவையா உங்களுக்கு..,  அவங்களுக்கு திருப்பி தெரியாதா..,    இதெல்லாம் உங்களுக்கு தேவையா”.., என்றாள்.

        “அப்போ இப்போ நீ பண்றதெல்லாம் சரின்னு சொல்றியா..,  நான் பண்றதெல்லாம் தப்பும் சொல்லுறியா”., என்றார்.

          “ஆமா நீங்க பண்றது தப்பு தான்., நான் பண்றது சரி தான்., தெரிஞ்சோ தெரியாமலோ உங்க வீட்டுல பொறந்தேன் இல்ல..,  அப்ப நீங்க பண்ற பாவ-புண்ணியத்தில் எல்லாம் பங்கு எனக்கும் உண்டு இல்ல.., புண்ணியத்தில் பங்கு வாங்குற நான் பாவத்தில் பங்கு வாங்கித்தான் ஆக வேண்டியது இருக்கு.,  இப்ப அந்த பாவத்தை  யாருக்குமே அண்ட விடாம பண்றதுக்கு தான்”.., என்றாள்.

       “பரிதாபத்தில் தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற இல்ல”..,

            “கண்டிப்பா இல்ல.., இதுக்கு பேர் பரிதாபம் கிடையாது., நான் கல்யாணம் பண்ணலாம் ன்னு சொல்லியும், நரேன் தான் வேண்டாம் ன்னு சொல்லுறாங்களே”… என்றாள்.

          “இத சொல்றதுக்கு உனக்கு அசிங்கமா தெரியலையா..,  வயசு பொண்ணு  ஒரு வீட்ல போய் இருந்தா ஊருல என்ன சொல்லுவாங்க ன்னு யோசிக்க மாட்டியா”., என்றார் நிர்மலா.

           ” யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.,  சொல்றதா இருந்தா நீங்க தான் சொல்லணும்., அவங்க சொல்றதா இருந்தா அவங்க அம்மா பண்ண தப்புக்கு பிள்ளை பரிகாரம் பண்ணிட்டு இருக்கா ன்னு தான் சொல்லுவாங்க.., வேற ஒன்னும் சொல்ல மாட்டாங்க.,  யாருக்கும்  நான்  அவங்க வீட்ல போவ இருக்கப் போறது தெரியாது.,  நீங்களா சொன்னால் தான் உண்டு.., ஏன் நீங்க போய் எல்லாத்தையும் சொல்ல போறீங்களா”., என்றாள்.

        “எப்படி பேசுறா பாத்திங்களா., நீங்களும் பார்த்துகிட்டு இருக்கிங்க யாராவது ஒரு வார்த்தை அவளை  கேட்கிறீர்களா.,  வாய்க்கு வந்தபடி பேசுகிறா., நான் போய் சொல்லுவேனாம்.,  இதுல அவளுக்கு தான் எல்லாம் தெரியும் என்று எல்லாரும் தலைக்கு மேலே தூக்கி வச்சு ஆடுறீங்க..,  யாராவது சொல்றத புரிஞ்சுக்கிறீங்களா.,  வயசுப் பிள்ளையை எப்படி இன்னொரு வீட்டில் போய் தங்க அனுமதிக்க முடியும்”., என்றார் நிர்மலா.

Advertisement