Advertisement

அத்தியாயம் 2

 

                   சென்னையில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்., விபத்தில் சிக்கியவர் பேச்சு மூச்சு எதுவும் இல்லாமல் இருந்தாலும் மருத்துவர்கள் அவசர சிகிச்சையை முதலில் மேற்கொள்ள தொடங்கியிருந்தனர்.  அவனை பற்றிய தகவல் அறிந்த காவல் துறையினர் அவனது வீட்டிற்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்..,

                  அவர்களுடைய மேலதிகாரி வேண்டாம் “யார் வீடு என்று தெரிந்தபிறகு போன் செய்து சொல்ல வேண்டாம்.., யாராவது நேரில் சென்று தெரிவித்து விட்டு வாருங்கள்” என சொல்லி உத்தரவு பிறப்பித்து இருந்ததால் வேறு வழியின்றி காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் அவர்கள் வீட்டின் முன்னே போய் நின்றனர் நடு இரவிலும்.,

               வீட்டில் காவல்துறையினர் வந்து நிற்பதைப் பார்த்து இருந்த செக்யூரிட்டி ராஜசேகருக்கு அழைத்து காவல் துறையிலிருந்து ஆள்கள் வந்திருப்பதாக சொன்னார்.

         இந்நேரத்தில் என்ன விஷயம் என்று யோசித்துக் கொண்டே வெளியே வர அந்த நேரத்தில் போன் வந்த சத்தம் கேட்டதால் கல்யாண் எழுந்திருந்தான்.., “என்னப்பா” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.

      “தெரியலடா…, இந்த நேரத்தில் போலீஸ் எதுக்கு வந்திருக்காங்க” என்று பேசிக்கொண்டே வெளியே செல்ல லதாவும்., லலிதாவும் பின்னே சென்றனர்.

       காவல் துறையினரை பார்த்தவுடன் “என்ன விஷயம்” என்று கேட்டார். காவல்துறையினர் பெண்களை பார்த்துவிட்டு ராஜசேகரும் வயதில் மூத்தவர் என்பதால் கல்யாணை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தினர்.

        அங்கு அடிபட்டு மருத்துவமனையில் கிடப்பது ராஜசேகரின் இரண்டாவது மகனான நரேன்., கேட்டவுடன் அதிர்ச்சியில் குடும்பமே ஸ்தம்பித்தது போல இருந்தது. கல்யாணுக்கு நரேன் மேல் அதிக பாசம் ராஜசேகரும் அப்படித்தான் பிள்ளைகளை இரவில் எந்நேரம் ஆனாலும் பார்க்காமல் தூங்க மாட்டார்., எப்பொழுதும் வந்தவுடன் பிள்ளைகளை அழைத்து பேசி விடுவார் ஓரிரு வார்த்தைகளாவது., ஆனால் இதை கேட்டவுடன் அவருக்கும் ஏதோ பயம் வந்து தொற்றிக் கொண்டது. போலீஸ் நேரில் வருவது என்றால் வேறு ஏதும் என்று  அவர் கேட்க தொடங்க…, போலீஸ் தான் அவர் எண்ணுவதே புரிந்துகொண்டு “இல்லைங்க சார் வேற எதுவும் இல்ல.., ஹாஸ்பிடலில் இருந்து தான் வர்றோம்.., அட்மிட் பண்ணி இருக்கோம்” என்று ஆஸ்பத்திரியின் பெயரை சொல்ல குடும்பத்தோடு கிளம்ப தயாராகினர்…,

          லதா பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்ப.., அவளை வர வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காமல் கிளம்ப.,  பின்பு வேறு வழியின்றி குடும்பத்தோடு அனைவரும் கிளம்பினர் மருத்துவமனைக்கு., அப்போது தான் லலிதா சொன்னார்., “இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு கல்யாணத்திற்கு” என்றார்.

      “கடவுள் என்ன வச்சிருக்கானோ., அதுபடி நடக்கட்டும். நமக்கு நம்ம புள்ள நல்லபடியா வந்தா போதும்”.., என்று ராஜசேகர் சொன்னார்.

    கல்யாண் தான் “அவங்க வீட்டுக்கு ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லிருங்க மா” என்று சொன்னான் …

          ராஜசேகர் தான்  “காலையில் சொல்லிக்கொள்ளலாம்.., இப்போது எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டார். மருத்துவமனையை நோக்கி கார் விரைந்து சென்று கொண்டிருந்தது…

                   அதேநேரம் வினோதா விற்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது…  ஆஸ்பத்திரி விவரம் முதற்கொண்டு.,  அதற்குள் இவர்கள் அப்பெரிய மருத்துவமனையை நெருங்கி இருக்க அனைவரும் ஒரு படபடப்பு உடனே அங்கு சென்றனர்.,

     அப்போது அவசரச் சிகிச்சை பகுதியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் நிறைய மருத்துவர்கள் புடைசூழ அவனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது…

    அவனின் நிலையை கண்டு அனைவரும்  உயிரை கையில் பிடித்த வண்ணம் தான் இருந்தனர்., அவனுக்கு நினைவு போவதும் வருவதுமாக இருந்தது.  மயக்கத்தில் தான் இருத்தான்., அவனது நிலை என்ன என்று உணரமுடியவில்லை..,

      அனைவரும் மருத்துவரின் பதிலுக்காக காத்திருந்தனர்… அதற்குள் வினோதா அவள் கணவனோடு வந்து சேர்ந்திருக்க., பெண்கள் சத்தமின்றி கண்ணீர் வடித்தாலும்., அவர்களின் வேதனையை அங்குள்ளவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது..,

        சற்று நேரத்திற்கெல்லாம்  போலீஸ் மேலதிகாரி அனைவரும் அங்கு வந்திருந்தனர்..,  எவ்வாறு விபத்து நடந்தது என்பதை கண்டறிய முடியாமல் காத்திருந்தனர்., எப்படியும் அவன் கண்விழித்த பிறகுதான் விஷயம் அறிந்து கொள்ள முடியும் என்று காத்திருந்தனர்…

        மருத்துவர்கள் பரிசோதனை முடித்து வெளியே வர.., வீட்டினர் நரேனை பார்க்க அனுமதி கேட்க.,  மருத்துவர்களும் சரி என்றனர்..

            ராஜசேகர்  மருத்துவரிடம்  நரேன் உடல் நலம் பற்றி விசாரிக்க..,  எப்பொழுதும் சொல்லும் “காட் இஸ் கிரேட்” என்ற வார்த்தையோடு விஷயத்தை சொல்லத் தொடங்கினார்., “சார் கடவுள் உங்கள ஒரு வகையில ரொம்ப ஆசீர்வாதம் பண்ணி இருக்காரு நினைச்சுக்கோங்க…,  ரைட் சைடு கை  மட்டும் நல்லா அடி பட்டிருக்கு., அது மட்டுமல்ல நெற்றி கன்னம் எல்லாம் ரைட் சைடு எல்லாம் கொஞ்சம் காயம் இருக்கு… இரத்தம் வெளியே போனதால வந்த மயக்கமா கூட இருக்கலாம்… இப்ப ஒகே வா இருக்காரு… மயக்கம் தெளிஞ்சிருச்சி…,  காலையில் எல்லா பரிசோதனைகளும் செய்து விடுவோம்”…  என்று கூறிக்கொண்டிருந்தார் மருத்துவர்…

     சற்றே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.., பிறகு போலீஸ் அவர்களது முறையாக சிறு விசாரணையை நரேனிடம் மேற்கொள்ள அவனும் “சரியாக தெரியவில்லை., லாரி போல் இருந்தது” என்று மட்டும்தான் சொன்னான்.. “எதிர்புறம் இருந்து எப்படி வந்தது என்று தெரியவில்லை, ஆனால் வந்த வேகத்தில் மோதி விட்டு சென்று விட்டது” என்று மட்டுமே தெரியப்படுத்தினான்.

       அந்த நேரத்தில் வலி தெரியாமலிருக்க மருந்துகளும் மாத்திரையும் கொடுத்திருக்க அது மட்டுமன்றி வலி தெரியாமல் அவன் உறங்குவதற்கு மருந்தையும் சேர்த்தே அவனுக்கு இறங்கிக்கொண்டிருந்த ட்ரிப்ஸ் வழியாக மருத்துவர் செலுத்திவிட்டு சென்றிருந்ததால் அவனது உறக்கம் நடு இரவுக்குப் பிறகு தொடங்கியது.., ஆனாலும் சரியாக உறக்கம் இல்லாமல் இருந்தான்..,

     வீட்டில் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி இருந்தனர் மறுநாள் அறைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று மருத்துவர் சொல்லவும்..,

       மருத்துவமனையின் சகல வசதிகளுடன் கூடிய பெரிய அறையை மருத்துவரிடம் தரும்படி ராஜசேகர் கேட்டுக்கொண்டிருந்தார்.., அதற்கான ஏற்பாடுகள் செய்வதாக சொல்லிவிட்டு மருத்துவரும் அங்கிருந்து சென்றார். விடியல் அவர்களுக்கான வெடிகுண்டை வைத்து இருப்பது தெரியாமல்…

           நடு இரவை தாண்டி நேரத்திலும் அவ்வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது… வீட்டின் முன் இருந்த பெயர் பலகையில் பெயர் அவர்களது படிப்பு உத்தியோகம் என இருந்தது அவ்வீட்டில் அனைவருமே ஆபீஸர் ரேங்கில் இருப்பவர்கள் என்பது தெரிந்தது..,

              அது நிர்மலாவின் அம்மா வீடு டெல்லியில்., நிர்மலாவின் அண்ணன் பெரிய பதவியில் இருப்பவர்., பிள்ளைகள் இருவரும் தூங்கி இருக்க தாத்தா பாட்டியோடு.,  அபர்ணாவின் மாமா அத்தையும் விழித்திருந்தனர்…,  பெண்கள் இருவரும் முகத்தில் கோபத்தை சுமந்தபடி நிர்மலாவின் அண்ணனை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.. நிர்மலாவின் தந்தையோ அமைதியாக அவரது பதிலை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.., காரணம் அபூர்வா இன்னும் வீட்டிற்கு வராதது தான்…

      “எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் எவ்வளவு பெரிய  பதவியில் இருந்தாலும் பொம்பள பிள்ளை நேரம் காலத்தில் வீட்டுக்கு வர வேண்டாமா” என்று கோபமாக நிர்மலாவின் அண்ணி கேள்வி கேட்டார்..

      அவரோ “என்னமா இது அவளுக்கு செக்யூரிட்டி  இருக்காங்க.,  பத்திரமா வீட்டுக்கு வருவா., அவ என்ன தனியாவா போயிருக்கா,  வேலைன்னு இருந்தா அப்படித்தான் இருக்கும், முடிச்சுட்டு வருவா., இன்னைக்கு வேற வழி கிடையாது. மத்த நாளெல்லாம் என்ன இப்படியா லேட்டாகும்.,  வேற வழி இல்லாம தானே என் ட்ட  போன் பண்ணி சொல்லிட்டு  போனா அப்புறம் ஏன் இவ்வளவு படபடப்பாக ஆகுற”… என்றார்.

        அவரின் அம்மாவோ., “ஏண்டா சொல்ல மாட்டே., பொம்பள புள்ள காலம் கிடக்குற கிடப்புல  எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்., கூட எத்தனை பேர் செக்யூரிட்டி இருந்தாலும்., அவ  பத்திரமா வீடு வந்து சேர்ற வரைக்கும், இங்கே நமக்கு வயித்துல புளியைக் கரைக்கும்.., உனக்கு எப்படி புரியும்…, அவ அம்மா என்ன னா, அந்த பிள்ளைய கைக்குள்ள வைத்து வளர்க்குறா… நாளைக்கு நம்ம சொல்லி காட்டவா”…  என்றார்…

       “அவ கைல பிள்ள இருந்திருந்தால் என்ன லட்சணத்தில் வைத்திருப்பா தெரியாதா… இந்த அபர்ணா வ அவ எப்படி வளர்த்து வச்சிருக்கா னு பாருங்க…  எது சொன்னாலும்.,  நம்ம சொல்றது எதையாவது காதுல வாங்குறாளா…, வாங்க மாட்டா.,  அம்மா சொல்லுவாங்க மாமா.., அம்மா திட்டுவாங்க மாமா..,  அம்மா அம்மா  ன்னு இப்படியே வளர்த்தால் கல்யாணம் பண்ணி கொடுக்கப் போற புள்ள போற இடத்துல  நல்லபடியா வாழமுடியும்.., அப்படி பார்த்தால் அபூர்வா யாரையும் எதிர்பார்த்து நிக்க மாட்டா.., சுயமா செய்ய வேண்டியத செய்வ… எல்லாத்தையும்  யோசிச்சு பாக்க மாட்டீங்களா நீங்க எல்லாம்”… என்றார்.

       “அது சரி டா.. நாங்க யோசிச்சி பார்க்கிறது இருக்கட்டும். நீ உன் மருமகள தலைக்கு மேலே தூக்கி வைக்கிறது எல்லாம் சரிதான்., அவளுக்கு எப்ப கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பார்க்க போற., காலாகாலத்துல கல்யாணம் பண்ணி., ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கனும்.., இந்த வேலையெல்லாம் வேண்டாம்.., வேலை பார்த்து தான் இவ ஜீவனம்  பண்ணனும் ன்னு கட்டாயமா., என்ன” என்று நிர்மலா  அம்மா  கோபமாக பேசினார்..,

     “புரியுது மா..,  அவளுமே என்ன சொன்னா., கொஞ்ச நாள் என்னோட சொந்தகால் ல நிக்கனும்., அதுக்காக வேலைக்கு போகனும் ன்னு.,  படிச்சு முடிச்சு  எக்ஸாம் எழுதுனா வேலை கிடைச்சிடுச்சு..,  அவ ஆசைப்பட்ட மாதிரி போஸ்டிங் ஒட உட்கார்ந்தா…,  இப்ப என்ன ஒன்னும் இல்ல..,  கல்யாணம் பண்ணிக்கும் போது  வேலையை விட்டுருவா., போதுமா., அதுக்கு நான் பொறுப்பு” என்று நிர்மலாவின் அண்ணன் பதில் கூற

       நிர்மலாவின் அப்பா தான் “ஆமாடா நினைச்ச உடனே வேலைக்கு போறதுக்கும்.,  நினைத்த உடனே வேலை விடுறதுக்கும்.,  அது சாதாரண வேலை பாத்தியா”., என்று கோபமாக  கேட்டார்..,

        “அப்பா எந்த வேலை என்றாலும் நம்ம இஷ்டப்பட்டா  தான் பார்க்க முடியும்..,  அது எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி..,  எவ்வளவு பெரிய வேலையா இருந்தாலும் சரி..,  அவளே என்ன சொன்னா., கொஞ்ச நாள் நான் சர்வீஸ் மாதிரி பண்ணிக்கிறேன். அதுக்கப்புறம் வேலைய விட்டுட்டு வரேன் அப்படின்னு சொல்லி இருக்கா..,  அவளை பொறுத்த வரைக்கும் பெரிய பதவில உட்கார்ந்தாள் தான் கஷ்டப்படுறவங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்.., இல்லாதவங்களுக்கு செய்யமுடியும் அப்படிங்கிற எண்ணம் அதுக்காக தான் அவ இந்த வேலைக்கு வந்தது”…..

Advertisement