Advertisement

அத்தியாயம்14

 

             அழகான இயற்கை சூழலில் அமைந்திருந்தது வைத்தியசாலை., ஆங்காங்கு சிறு குடில்கள் போல இருந்த தங்கும்   அறையோடு, நல்ல விஸ்தாரமான இடமாக அமைந்திருந்தது. தங்கும் அறைகள் வாடகை அவர்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தைப் பொறுத்தே நிர்ணயம் செய்திருந்தார்கள். நாலைந்து பேர் சேர்ந்து தங்கும் அறைகளும்., குடில் போன்ற அமைப்புடைய தனி வீடுகள் போன்ற அமைப்புடைய இடங்களும்.., என விதவிதமாக இருந்த அவ்விடத்தில் இவர்கள் ஏற்கனவே பேசி இருந்ததால், குடில் போன்ற அமைப்பு உடைய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அதுவும் அவனுக்கு நடக்க முடியாது என்ற சூழலில் ஆயில் மசாஜ் மற்றும் உடற்பயிற்சி கூடம் அனைத்திற்கும் அருகில் இருக்குமாறு தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

          குடில் போன்ற அமைப்புடைய இடத்தில் உள்ளேயே அனைத்து வசதிகளும் இருக்கும். “உணவு மட்டும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு என பத்திய சாப்பாடு நேரத்திற்கு நேரம் தரப்படும்., அதே வகையான உணவு தான் உடன் இருப்பவர்களுக்கும் கிடைக்கும், தனிப்பட்ட உணவு வேண்டும் என்றால் அருகில் உள்ள உணவகத்தில் சொல்லி வாங்கிக் கொள்ளலாம்” என்று அங்கிருந்தவர் சொன்னார்.

           “இவள் அப்படி எதுவும் தேவையில்லை., அவங்க சாப்பிடுவதே நானும் சாப்பிடுகிறேன்” என்று சொல்லி மறுத்துவிட்டாள்.

          முதலில் அவனுக்கு சிகிச்சை பலன் அளிக்குமா, அளிக்காதா, என்பதை பார்க்க ஒரு சிறிய சோதனை செய்ய வேண்டும். என்று சொல்லி அழைத்து சென்றார்கள்.

                  அப்போது வைத்தியம் செய்யும் நேரத்தில் மட்டும் போடுவதற்கு என்று ஒரு தனி உடை அங்கு அணிவது போல கொடுத்தார்கள். அதை ஆயில் மசாஜ் க்கும் வைத்தியரிடம் மூலிகை மருந்து எடுத்துக்கொள்ள வரும்போதும் அந்த உடையை போட்டுக்கொள்ள வேண்டும். மற்றபடி அவரவர் இடத்தில் இருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்கள்.

        ஏனெனில் அது எண்ணை, தண்ணீர், போன்றவை ஒட்டாத வண்ணம் இருக்கும்படி இருந்தது. அங்கு அவர்களுக்கு புது உடை கொடுக்கப்பட்டது. பழைய உடை என்று எதுவும் கிடையாது, அவர்கள் முடிந்து கிளம்பும் போது அவர்களுடையதை எடுத்து செல்லலாம் என்பது போல தான்..

        முதலில் முதுகுப்பக்கம் தெரியுமாறு., அவனை குப்புறப் படுக்க வைக்க சொன்னார். வைத்தியர் அதற்கு அபூர்வா உதவி செய்தாள்.

           “தம்பி நல்லா கேட்டுக்கோங்க., நான் இப்போ உங்க முதுகுப் பக்கத்தில் மேலிருந்து ஒவ்வொரு குறிப்பிட்ட இடமா அமுக்கி விட்டுட்டு வருவேன்., எந்த இடம் வந்தவுடன் உங்களுக்கு இடுப்புக்கு கீழே வலி தெரியுதுன்னு சரியா சொல்லணும்”., என்றபடி வைத்தியர் ஒவ்வொரு இடமாக அழுத்திக்கொண்டே வந்தார்.

             இடுப்பின் கீழ் பகுதியில் முதுகு தண்டுவடம் அருகே குறிப்பிட்ட பகுதிக்கு வரும்போது, நரேன் தாங்க முடியாத அளவிற்கு அவன் கால் வலிக்கிறது என்று சொன்னான்.

         வலியை அதிகமாக உணர்ந்ததாக சொன்னான். அந்த நொடிகளில் நரேனின் கண்களில் கண்ணீர் தேங்கி விட்டது. அவர் மறுபடியும் அவ்விடத்தை தொடும் போது காலில் லேசாக உதறல் எடுப்பது போல கால் துடித்தது.

         அப்போதே வைத்தியர் சொல்லிவிட்டார். “குறிப்பிட்ட பகுதியில் ஊமைக்காயம் பட்டிருப்பதாகவும்., அதனால்தான் இந்த பிரச்சனை என்றும் சொன்னதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே அவன் எழுந்து நடந்து விடுவான் என்றும்., வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கால்களுக்கு பலம் கிடைக்கும்., அதுமட்டுமல்லாமல் சில மூலிகை மருந்துகளை உட்கொள்ள வேண்டியது வரும்” என்று சொன்னார்.

        “ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் இங்கு இருக்க வேண்டும்” என்று மட்டும் சொல்லிவிட்டார். அதன்பிறகு அவனுக்கு உணர்வு இல்லை., வைத்தியரிடம் கேட்டார்கள்.

         “ஒரே நாளில் சரி செய்ய முடியாது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் செய்ய வேண்டும்., ஒரே நாளில் தடவி எடுத்தோம் என்றால் வலி தாங்க முடியாத அளவிற்கு இருக்கும்., அது மட்டும் இல்லாமல் வேறு எதுவும் பிரச்சனை ஆகி விடக்கூடாது. எனவே சிறிது சிறிதாக சரி செய்வோம்” என்று சொன்னார்.

         அவர்கள் வந்து சேர்ந்த நேரம் மாலை நேரமாக இருந்ததால் மறுநாள் அதிகாலையில் இருந்து மருத்துவத்தை தொடங்கலாம் என்று சொல்லியிருந்தார். வைத்தியர் குறிப்பிட்ட கால நேரங்கள்., வைத்தியத்திற்கு உகந்ததாக நேரம் என்று சொல்லிக் கொடுத்திருந்தார்.

        “காலையில் ஆறு மணியிலிருந்து 8 மணிக்குள் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். மற்றும் ஆயில் மசாஜ் செய்வதற்கு முன் வெறும் வயிற்றில் பச்சை மருந்து குடிக்க கொடுப்பார்கள் அதை குடித்து விடவேண்டும்” என்று சொல்லியிருந்தார். எனவே ஐந்து மணிக்கே எழுந்து தயாராக இருக்க வேண்டும் என்றும் 6 மணிக்குள் மருந்து குடித்து விட்டு மசாஜ் செய்யும் இடத்திற்கு வரவேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

   மீதி மருத்துவமுறைகளை நாளை சொல்வார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள். அதன்படி நரேனின் வைத்தியம் வர்ம வைத்தியசாலையில் தொடங்கியது…

      காலையில் வைத்தியம் தொடங்கும்போதே கஷ்டத்தை காணத் தொடங்கியிருந்தான். முதலில் வெறும் வயிற்றில் அவனுக்கு கொடுக்கப்பட்ட மருந்து கொடுத்தவுடன் மருந்து கொடுத்தவர் அருகிலேயே நின்றிருந்தார்.

       “ஏன் எதற்கு என்று கேட்டதற்கு சற்று நேரத்தில் சொல்கிறேன்” என்று காத்திருந்தார்.

         கையில் மற்றொரு மருந்து குவளையோடு பார்த்திருந்தார். மருந்து கொடுத்த அடுத்த 5 நிமிடத்திற்குள்ளாக கொடுத்த மருந்து அவ்வளவும் வாந்தியாக வெளியேறியது. அவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அவனால் எழுந்து செல்ல முடியாததால் அனைத்தும் அருகிலிருந்த அபூர்வாவின் மேல் தான் எடுத்தான். ஆனாலும் அபூர்வா எதுவும் சொல்லாமல் அனைத்தையும் தன்மேல் வாங்கிக் கொண்டு.., மீதியை கையிலும் வாங்கிக் கொண்டாள்.

      பின்பு அவள் உள்ளே இருந்த வாஷ் ரூமில் கழுவி விட்டு, மீண்டும் அவர்களிடம் கேட்டதற்கு “அடுத்து கொடுக்கும் மருந்து வாந்தி வராது” என்று சொன்னார்கள்.

      அவனுக்கு ஈர துணி கொண்டு துடைத்து மறுபடியும் மருந்து கொடுக்க உடன் நின்றாள். அந்த மருந்து கொடுத்தவுடன் சற்று என்னமோ போல் அவன் உணர்ந்தாலும்., முதல் மருந்தை போல வாந்தியாக வெளிவரவில்லை அதன்பிறகு மருந்து கொடுத்தவர் சென்றுவிட ஈரமாக இருந்ததால் குளித்து உடை மாற்றிக் கொண்டு இவனை மசாஜ்க்கு அழைத்து சென்றாள்.

           அதன் பிறகு அவனுடைய வலிகளை., அவன் உணர்ந்தாலும் மெதுவாகத் தான் கால் நடக்க வரும் என்று சொன்னதால் பொறுத்துக் கொண்டான்.  அங்குள்ள உணவு முறைகளும்., மூலிகை மருந்து கலந்த உணவுகளாகவே  இருந்ததால், அவனே அதை சகித்துக்கொண்டு தான் சாப்பிட்டான். ஆனால் அபூர்வா எதுவும் சொல்லாமல் சாப்பிடுவதை கண்டவன். “உனக்கு டேஸ்ட் ப்ட், இருக்கா., இல்லையா., இந்த மாதிரி சாப்பாடை எப்படி சாப்பிடுற” என்று கேட்டான்.

               இவளோ “எதுவா இருந்தாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல., ஏதோ ஹெல்த்காகத் தான் கொடுக்குறாங்க.,  சாப்பிடுங்க” என்று சொன்னாள்.

       “உன்னால் இந்த புட் எல்லாம் சாப்பிட முடியுதா” என்று கேட்டான்.

            “அப்படி எல்லாம் இல்ல., எந்த ஃபுட் கிடைச்சாலும் எங்க கிடைச்சாலும் சாப்பிட்டு பழகிடும்., டிரைனிங் ப்ரீயட் ல பழகிருச்சி”., என்றாள்.

      “ரொம்ப கஷ்டமா இருக்கு”., என்றான்.

       “இந்த சாப்பாடு கூட கிடைக்காமல் எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா., அப்படி யோசிங்க., இது உங்களுக்காக உங்களோட உடல் நலத்திற்காக கொடுக்கிற சாப்பாடு.., அப்படி யோசிச்சிட்டு சாப்பிடுங்க”.., என்று சொல்லி அவனை சாப்பிட வைத்தாள்

                         அதன் பிறகான நாட்கள் அவனுடைய தினசரி நடைமுறையாக காலை மருந்து., ஆயில் மசாஜ்., அதன் பிறகு மூலிகை வெந்நீர் குளியல்., மறுபடியும் உணவிற்கு முன் மருந்து., மாலையில் ஒரு சிறு சிறு உடற்பயிற்சிகள் என்று சென்று கொண்டிருந்தது. 12 நாள் சென்ற நிலையில்  அவனை வைத்தியர் ஆள்கள் துணையோடு காலை ஊன்றி தரையில் நிற்க செய்தார். அதன் பிறகு அவனால் காலூன்ற முடிந்தது., சிறு சிறு அளவில் நன்றாக உணர்வுகள் தெரிய தொடங்கி இருந்தது., ஆனால் ஒவ்வொரு முறை மசாஜ் செய்து வந்த பிறகும் வலியின் காரணமாக அபூர்வாவை தான் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான்.

                    அந்த அளவிற்கு வலியோடு கஷ்டப்படும் சில நேரங்களில் வலி தாங்காமல் பேசமாட்டான்., கோபப்படுவான்., அவனுடைய மனநிலை தன்னுடைய வலியை பல மடங்காக உயர்த்தி காட்டிக்கொண்டிருந்தது.

         தன்னால் முடியவில்லை என்ற எண்ணமே அவனுக்கு வலியை பலமடங்காக ஆக்கியது போல உணர்ந்தான். அதைப் புரிந்து கொண்டது போல அபூர்வா அவனை சிறு குழந்தையை கவனிப்பது போலவே பார்த்துக் கொண்டாள்.

            அவனது கோபம்., அவனது முகம் திருப்புதல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். எவ்வளவு கோபம் வந்தாலும் சற்று நேரத்திலேயே “சாரிடா, அபூ” என்று பேசிடுவான்., அவனாலும் ‘அபூர்வாவிடம் அதிகமான கோபத்தை காட்ட முடியாது. ஏனென்றால் இது தனக்கான சிகிச்சை இதில் அவள் என்ன செய்வாள்., என்ற எண்ணமே அவனை அவளிடம் அடிக்கடி சாரி கேட்க வைத்தது’. ஆனாலும் வலி என்று வரும் போது அவனறியாமல் அவளிடம் கோபப்படும் சூழ்நிலையும் அவன் உடல்நிலை கொடுத்திருந்தது…

                  வீட்டிற்கு தினமும் பேசி விடுவார்கள். அவன் கால் ஊன்றி ஆட்களின் துணையோடு நிற்கக் கூடிய அளவிற்கு வந்ததே வீட்டில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கட்டும் என்று அன்று வீடியோ காலில் அழைத்து அவன் ஆள் உதவியோடு நிற்க தொடங்கியதையும்., அவனது முகத்தில் வந்திருந்த தெளிவையும் காட்டினாள். அதில் இருந்து ஐந்து நாள்களுக்குள் கல்யாண் மட்டும் வந்து ஒருமுறை பார்த்து விட்டு சென்றான்.

Advertisement