Advertisement

அத்தியாயம் 1

              நிசப்தமான அந்த இரவில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் சத்தமும் போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது.., ஆம்புலன்ஸ்க்கும்.,  போலீஸ் வண்டிக்கும் இடைப்பட்ட இடத்தில் ஒரு விலை உயர்ந்த கார் முக்கால்வாசி நசுங்கிய நிலையில் கிடந்தது .., அதில் உள்ளிருக்கையில் இருந்தவன் உயிரோடு தான் இருக்கிறானா., இல்லை அவனும் சேர்ந்து காரோடு நசுங்கி விட்டானா என்று தெரியாத அளவிற்கு இருந்த வண்டியை  உடைத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.., விலை உயர்ந்த கார் என்பதால் ஏர்பேக் முழுவதுமாக மூடி இருந்தாலும்., ரத்தம் வடிந்து தான் இருந்தது.., எப்பகுதியில் அடிபட்டு ரத்தம் வருகிறது., என்று தெரியாத அளவில் இருட்டு நேரம் என்பதால் அவசரமாக காரை உடைத்து வெளியே தூக்கி கொண்டிருந்தனர்….

         அதற்குள் இங்கிருந்த போலீசின் தகவல்படி கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு., காரின் நம்பரும் தெரிவிக்கப்பட்டது., காரின் நம்பரை கொண்டு யார் எவர் என விசாரித்து அங்கு தகவல் கொடுக்கும்படி அங்கிருந்தவர்கள் ஆணையிட்டுக் கொண்டிருந்தனர்..,

       எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் அடிபட்டுக் கிடப்பவன் வீட்டிற்கு தகவல் போய்விடும் என்ற நம்பிக்கை அங்கிருந்தவர்களுக்கு இருந்தாலும்.,  எந்த நேரத்தில் எப்படி வந்திருப்பான் என்று யோசித்தாலும் ஒருவேளை குடிபோதையில் வண்டி ஓட்டி இருக்கிறானா இல்லை.., என்ன நடந்தது என்று தெரியவில்லை. விபத்து நடந்து சற்று நேரம் கடந்திருக்கலாம்… இரத்தம் உறைந்து இருந்தது..,

      அது புறநகர் பகுதி ஆகையால் அருகில் ஏதும் சிசி கேமரா இருந்தால் மட்டுமே காரை தொடர்ந்து ஏதும் வாகனம் வந்ததா.., இல்லை எந்த வண்டி மீது மோதியது என தெரிந்துகொள்ள முடியும்…, ஆனால் அருகில் எங்கும் இருப்பது போல தெரியவில்லை.., மோதிய வேகத்தில் பயந்து போய் விட்டு விட்டு போனானா என்றும் தெரியவில்லை.., வேகமாக மோதி இருக்க வேண்டும் என்பது மட்டும் காரின் நிலையை பார்த்து அறிந்து கொண்டனர். அதற்குள் ஓரளவு காரின் கதவு வெட்டி எடுக்கப்பட., முன் பகுதியும் ஓரளவு வெட்டி எடுக்கப்பட உள்ளிருந்த அவனை வெளியே தூக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.., விலை உயர்ந்த கார் என்பது இது ஒன்றில் தான் பாதுகாப்பு போல., கையை வெளியே விட்டிருந்ததால்  கையில் காயம் ஏற்பட்டு வலது கையில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்க…, மற்றபடி உடம்பின் மேல் பகுதியில் எந்த அடியும் இல்லாமல் ஆனால் மயங்கிய நிலையில் கிடந்தான்.

                     மயக்கத்தில் இருக்க கால்கள் மட்டும் தொய்ந்து விழுந்தது…, ஆனால் உயிர் இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.., ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பார்த்தா பெரிய வீட்டுப் பையன் மாதிரி இருக்குப்பா நல்ல ஹாஸ்பிடலில் கொண்டு போய் சேர்த்து விடு., எப்படி இன்னும் கொஞ்ச நேரத்துல தகவல் போயிரும்.., போயிட்டு எந்த ஆஸ்பத்திரி ன்னு  சொல்லு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் கிளம்ப.., தொடர்ந்து ஒரு காவல்துறை வாகனம் மட்டும் பின்னே சென்றது…, மற்றவர்கள் இங்கு இருக்கும் விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தனர்…..

               அதே சமயத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்.., டெல்லி வரை அரசியல் பலம் வாய்ந்த ராஜசேகர் வீட்டின் முன்பு ., கார்கள் வரிசையாக வந்து நின்றது கட்சி கொடி ஏற்றப்பட்ட கார்கள் அதிலிருந்து அவர்  இறங்கியவர்.., உடன் இருந்தவர்களை “காலையில் பார்க்கலாம்” என்று அனுப்ப.., அவருக்காக காத்திருந்த  10 பேர் வீட்டு வாசலில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.., அவரும் நேரத்தை பார்த்துவிட்டு “இந்த நேரத்துக்கு என்னத்தை பேச போறீங்க.., எல்லாரும் போய்ட்டு காலைல வாங்க காலையில பேசுவோம்” என்று சொல்ல…,

                  “ஐயா இடைத்தேர்தல்” என்று சொல்ல  “அதெல்லாம் பார்த்துக்கலாம் சிஎம் ட்ட பேசுகிறேன் கிளம்புங்க” என்று சொல்லி அனைவரையும் அனுப்பி வைத்துவிட்டார்..,

       ஒருவர் தயங்கி நிற்க.., “நான் சொன்னா பேசுவேன்…, ஆனால் எனக்கு சரியா ஒழுங்கா இருக்கணும்…, அதுதான் முக்கியம்” என்று சொல்லி வந்தவரை பேசி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவர்…, அவர் மனைவி லலிதாவிடம் “எங்க உன் பிள்ளைங்க இன்னும் வரலையா” என்று அதட்டலாக கேட்டார்.

     “நீங்களே இப்பத் தான் வந்திருக்கீங்க…, அப்போ உங்க பிள்ளை இனிமேல் தான் வருவாங்க” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே மூத்த மகன் கல்யாணின் மனைவி உள்ளிருந்து வெளியே வந்தாள்…,

         “என்னம்மா நீ சொல்லக் கூடாதா.., என்று அவர் கேட்க  “இல்ல மாமா நான் எப்படி சொல்றது.., நீங்களே சொல்லிடுங்க” என்று சொல்லிக்கொண்டு சாப்பாடு எடுத்து வைப்பதற்காக மாமியாரின் பின்னே சென்றாள்..,

        அவரும் தன் அறைக்கு சென்று குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவர்…  “ஏன் லலிதா நீ எதுவும் சொல்ல மாட்டீயா…, நான் கோபப்பட்டா ஏழு கழுத வயசு வந்த பின்னும் உன் பின்னாடி தான் வந்து நிற்கான் இரண்டு பேரும்.., இதுக்கு மட்டும் நீங்க சொல்லுங்க ன்னு சொல்ற.., என்ன தான் பிள்ளையை வளர்த்து வச்சிருக்கே” என்று கேட்டார்…

        “இப்படியே சொல்லாதீங்க., நாம மூன்று பிள்ளைகளை ஒழுங்கா தான் வளர்த்தோம்., இந்தா கல்யாணம் கட்டிக் கொடுத்திருக்கோமே., உங்க மக வினோதா அவளை கேளுங்க., அவ நல்லாத்தான் இருக்கா…, இந்த இங்க மூத்தவன் கல்யாண் இருக்கானே., அவன் உங்க பின்னாடி தான் அரசியல் அரசியல் ன்னு சுத்துறான்., நீங்க தான் எல்லாம் கவனிக்கணும் அதை விட்டுட்டு., ஏன் ட்ட வந்து கேட்குறீங்க”.. என்று அவர் சொன்னார்.

      “சரி சரி ராத்திரி நேரத்துல சண்டை பிடிக்காத போ., சாப்டாச்சு இல்ல போய் தூங்குங்க போங்க” என்று சொன்னார்.

        “நீங்க சாப்பிடுங்க” என்று சொன்னாள்.,

“பிள்ளைங்கவரட்டும்” னுசொல்ல., “நீங்க சாப்பிடுங்க பிள்ளைங்க எல்லாம் சாப்பிட்டு தான் வருவாங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

             மருமகளை பார்த்தவர் என்னமா.., “அவன் தூங்கிட்டானா” என்று பேரனை கேட்டுக் கொண்டிருந்தார்…, பேத்தி சீக்கிரம் தூங்கி விடுவாள் என்று தெரியும்…

              “தூங்கிட்டான் மாமா” என்று சொல்லி விட்டு அவள் மாமனாருக்கு பரிமாறுவதை பார்க்க., மாமியார் அருகில் அமர்ந்து கதை பேசத் தொடங்கியிருந்தார்.

       அதே நேரத்தில் வெளியே கார் சத்தம் கேட்கவும்.., “இதோ பெரியவன் வந்தாச்சு”… என்று மாமியார் மாமனாரிடம் சொல்வதைப் பார்த்து சிரித்துக் கொண்டு சற்று நேரத்தில் உள்ளே வந்த அவனைப் பார்த்தாள்.., அவனும் அவளை கண்ணால் பார்த்து சிரித்துக் கொண்டே வந்தான்..,

        “என்னடா இவ்வளவு நேரம்., நான் தான் இந்த மீட்டிங் முடிச்சிட்டனே., நீ எங்க போயிருந்த” என்று கேட்டார்.

            அவன் ஒரு அரசியல் பிரமுகரை பற்றி சொல்லி “அவர் வீட்ல இன்னைக்கு பங்க்ஷன் இருந்துச்சு., நீங்க வர முடியாதுன்னு சொல்லி இருந்தீங்க.., அதான் அங்க போயிட்டு அப்படியே இன்னொரு இடத்துக்கும் போய் நீங்க  சொல்லிருந்த எல்லாத்தையும் முடிச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தான்..,

      “சரி சரி.., சீக்கிரம் போய் படுத்து தூங்கு லேட் ஆகுது”.. என்று சொல்லிக் கொண்டிருந்தவர்., மருமகளைப் பார்த்து “நீயும் போ மா அவனுக்கு என்ன வேணும்னு பாரு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..,

       தன் அறை வரை சென்றவன் திரும்பி வந்து “அப்பா நரேன் வந்துட்டானா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்..,

     “அவன் என்னைக்கு கால காலத்தில் வந்தான்” என்று கேட்டார்.

      “இல்லப்பா அவனுக்கு பிசினஸ் மீட்டிங் அன்ட் டின்னர் முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுவேன்னு சொன்னான்.  நான் கேக்கும்போது 10 மணிக்கு டின்னர் ல இருக்கேன்.., சீக்கிரம் வந்துவிடுவேன் என்று சொன்னானே” என்று சொன்னான்..,

      “சரிடா வருவான்.., நீயே இப்ப தானே வந்து இருக்க.., உன் தம்பி பின்ன என்ன செய்வான்.., அவன் உன்னை மாதிரி தான் இருப்பான்” என்று சொன்னார்.

    “ அப்பா எனக்கு நீங்க தான் வேலை கொடுத்து அனுப்புனிங்க.., சும்மா சும்மா என்னையே சொல்லக்கூடாது.., அவன் பிசினஸ் பண்றான்.., தனியே  பார்க்கனும் இல்ல”…,என்றான் தம்பியை விட்டு கொடுக்காதவனாக…,

        “அரசியல் பக்கம் வர மாட்டேன்னு சொல்லிட்டான்…, அதுக்காக அவன் ஆசை பட்ட பிசினஸ் வச்சு கொடுத்தாச்சி., அவனுக்கும் இவ்வளவு லேட் ஆகும்னு, யாருக்கு தெரியும்” என்று சொன்னார்.

         “அப்படி சொல்லாதீங்க பா.., அவனும் அவன் பிசினஸ்ல எப்படி வந்து இருக்கான் தெரியுமா.., வெளியே போய் கேட்டுப் பாருங்க.., அவன பத்தி பிசினஸ்ல புலி ன்னு சொல்றாங்க தெரியுமா.., அப்படி  கொண்டு போறவன நீங்க எப்படி குறை சொல்லுவீங்க”.., என்றான்.

         “சரி சரி நீயே உன் தம்பி பெருமை வைச்சிக்கோ போ போ.., போய் தூங்குற வழியை பாரு”.., என்று சொல்லிக்கொண்டு இருந்தார்….

         வெளியே கோபம் போல காட்டிக் கொண்டாலும்…, மனதிற்க்குள் மகிழும் சராசரி தந்தை தான்…, தன் பிள்ளைகள் மேல் அதீத பாசம் கொண்டவர்…,

      “ஏங்க நீங்களும் சாப்பிட்டீங்கனா.., போய் படுக்க வேண்டியது தானே” என்று லலிதா சொன்னார்.

            “சின்னவன்  வந்துட்டான் னா., அவனை பார்த்துட்டு தூங்க போறேன்” என்று சொல்லவும்…

      “சின்ன பிள்ளைங்க பாருங்க வந்தா  போய் படுத்து தூங்குவான்., நீங்க போங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார் லலிதா…

Advertisement