Advertisement

கோதைக்கு வீட்டை கொடுத்த நாள் முதலாக, ரகு ஊருக்கு வரும் நாட்களில் இங்கே வாசுதேவனின் வீட்டில்தான் தங்கிக் கொள்வது.

        அதேபோல எது செய்வதாக இருந்தாலும் மாமனிடம் ஒரு வார்த்தை கூறிவிடுவான். அவனின் மேல்படிப்புக்கான ஆலோசனையைக் கூட மாமனிடம் தான் கேட்டான் ரகுவரன்.

       “பணமெல்லாம் ஒரு விஷயம் இல்லை ரகு. உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதைப் படி..” என்று வாசுதேவன் ஊக்கம் கொடுத்ததில் யோசிக்காமல் அவனுக்கு பிடித்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தான் ரகுவரன்.

     மனோகரை கடைசி வரையில் விட்டு விடாமல் வாசுதேவன் அவனையும் முன்னேற்றிக் கொண்டு வந்ததில் அலாதி மதிப்பு அவன் மீது.

     வாசுதேவனின் மீதான அந்த மதிப்பும், அவன் தன் தமக்கையின் மீது கொண்ட காதலும் ரகுவரனை வாசுதேவனுக்கு ரசிகனாக மாற்றியிருக்க, ஊருக்கு வரும் நேரமெல்லாம் அவனுடன் தான் சுற்றிக் கொண்டிருப்பான் மருத்துவன்.

       இதோ இன்றும் அப்படிதான். வாசுதேவனுக்கு திருவிழா வேலைகள் ஏகப்பட்டது இருக்க, அவனுக்கு உதவியாக காலையிலேயே அவனுடன் கிளம்பிவிட்டான் ரகுவரன்.

     அவன் கிளம்பும் நேரம் திருமகள் உறங்கிக் கொண்டிருக்க, அவளை எழுப்ப மனமில்லாமல் கோவிலுக்கு கிளம்பிவிட்டனர் அவர்கள்.

      மாலைவரை வெளியில் சுற்றியவர்கள் தீமிதிக்கு முன் குளிப்பதற்காக வீடு வர, கோவிலுக்குச் செல்ல தயாராகி அமர்ந்திருந்தாள் திருமகள்.

    ரகுவரன் அவள் அருகில் அமர, “இப்போதான் தெரியுறேனாடா நான்.” என்று கோபம் கொண்டாள் திருமகள்.

    “நீ தூங்கிட்டு இருந்த நாச்சி. மாமா தனியா எல்லா வேலையும் பார்ப்பாரா.. அதனால தான் அவரோட கிளம்பிட்டேன்.” என்று அக்காவை சமாதனம் செய்தவன் தனது அக்காவையும், அவள் பிள்ளைகளையும் தானே கோவிலுக்கு அழைத்துச் சென்றதோடு அருகில் இருந்தும் கவனித்துக் கொண்டான்.

        வாசுதேவக்ரிஷ்ணன் திருவிழா கமிட்டியின் தலைவராக பொறுப்பேற்று இருப்பதால் ஏகப்பட்ட வேலைகள் அவனுக்கு. வாசுதேவனுக்கு அதற்கே நேரம் சரியாக இருக்க, தனது அக்காவை கவனித்துக் கொண்டு அவள் அருகில் நின்றுகொண்டான் ரகுவரன்.

         திரு கருவுற்று இருப்பதால் வாசுதேவன் இந்தமுறை தீமிதிக்க முடியாமல் போக, வழக்கம் போல் விசாலம் ஈர உடையுடன் வரிசையில் நின்றிருந்தார். அவரின் அருகில் அவருக்கு துணையாக கோதையும், மனோகரும் நிற்க, எப்போதும்போல் பயபக்தியுடன் தீயில் இறங்கினார் விசாலம்.

         வேண்டுதலை முடித்து அவர் கோவிலுக்குள் செல்லும் நேரம் ரகுவரன் திருமகள், பிள்ளைகள் என்று அத்தனைப் பேரும் அவருடன் இணைந்துகொள்ள, திருமகளின் கண்கள் வாசுதேவனைத் தான் தேடியது.

        அவன் பொறுப்புகள் புரிந்தாலும், மனம் பழைய நினைவில் அவனைத் தேடிக் கொண்டிருக்க, சரியாக கருவறையில் சென்று நிற்கும் நேரம், அவள் அருகில் வந்து நின்றுவிட்டான் வாசுதேவன்.

       அன்னையை பிரார்த்தித்து முடித்தவளின் கண்கள் கணவனைக் காணவும், பிரகாசமாக விரிய, அன்று போலவே இன்றும் ஈஸ்வரியின் கண்களில் பட்டனர் இருவரும்.

        ஆனால், அன்று எகத்தாளமாக பேசிச் சென்றவர் இன்று வாய் திறக்க வழியில்லாமல் தலையைக் குனிந்தபடியே வேகமாக விலகிச் சென்றுவிட்டார்.

       முரளி குடிபோதையில் அவன் உடனிருந்த நண்பன் ஒருவனையே வெட்டிய வழக்கில் சிறையில் இருக்க, கலியமூர்த்தி இதயத்தில் ஏதோ கோளாறு என்று மருத்துவமனைக்கும், வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்தார்.

        ஆனால், இதுவரையில் திருமகளுக்கு செய்தது அநியாயம் என்பதை முரளி உணராமலே சுற்றிக் கொண்டிருக்க, அதன் பலனைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ…..

கலியமூர்த்தி உடல்நலன் குன்றி மருத்துவமனையில் இருந்த நேரம் அவருக்கு துணையாக இருந்து கவனித்துக் கொண்டது  மனோகர் தான். அவர் உடல் தேறும் வரை மகனாக அருகில் இருந்து கவனித்துக் கொண்டவன் மனைவியையும், மகனையும் தன்னுடன் எப்போதும் அழைத்து செல்லமாட்டான்.

        ஈஸ்வரியும், கலியமூர்த்தியும் வெகுவாக வருத்தப்பட்டுப் பேசவும், பிரணாவை மட்டும் ஒருமுறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்திருக்க, அப்போதும் ஈஸ்வரி கோதையைப் பற்றி குறை படித்ததில் “பேட் பாட்டி..” என்று தந்தையிடமே கூறிவிட்டான் பிரணவ்.

        அதன்பின் பிள்ளையையும் அவர்கள் கண்ணில் காண்பிக்கவில்லை மனோகர். ஈஸ்வரி அழுதே கரைந்தபோதும் கூட,அவர்களுடன் வர முடியாது என்பதில் உறுதியாக நின்றுவிட்டான் அவன்.

        கலியமூர்த்திக்கும், ஈஸ்வரிக்கும் முதுமை பல விஷயங்களை உணர்த்தியிருக்க, இப்போது உணர்ந்து கொண்டாலும் முழுமையாக திருந்தியிருக்கிறார்களா என்பது கேள்விக்குறி தான்.

        கோதைக்கு அவர்களை நினைத்து பாவமாக இருந்தாலும், அடுத்த நிமிடமே அவர்கள் செய்தது மொத்தமும் நினைவுக்கு வந்து அவளை கலங்கச் செய்துவிடும். மனோகர் முழுதாக ஒதுங்கி கொள்ளாமல் தன் கடமைகளை சரியாகத் தானே செய்து கொண்டிருக்கிறான் என்று தன்னை தேற்றிக் கொள்வாள் அவள்.

         இங்கே கோவிலில் பூஜை முடியவும் திருமகளை அழைத்துக்கொண்டு அவள் குடும்பத்தினர் அனைவரும் வீடு வந்து சேர, வாசுதேவன் மட்டும் கோவிலில் இருந்தான்.

         கோதை பிள்ளைகளை தான் கவனித்து கொள்வதாக கூறி, இருவரையும் அழைத்துச் சென்றிருக்க, ரகுவரன்  திருமகளின் பின்னே அலைந்து கொண்டிருந்தான்.

         விசாலம் காலையிலிருந்து விரதம் மேற்கொண்டதால் மிகவும் சோர்ந்து போயிருக்க, ரகுவரன் அவரை ஓய்வெடுக்க சொல்லி, திருவின் தேவைகளை தானே கவனித்து, அறைக்கு அனுப்பிய பின் ஹாலில் படுத்துவிட்டான்.

       அவள் அழைத்தால் கேட்கும் தொலைவில் படுத்திருந்தவன் வாசுதேவன் வீடு வந்து சேரவும், எழுந்து தன்னறைக்குச் செல்ல, இங்கே உறங்காமல் விழித்திருந்தாள் வாசுதேவனின் மனைவி.

      “இந்த நேரம் வரைக்கும் தூங்காம என்ன செய்யுற..” என்று வாசுதேவன் கோபம் கொள்ள,

       “உங்களால தான் தூங்கல.. நீங்க இல்லாம தூக்கம் வரல..” என்றாள் மனைவி.

        “அப்படியா.. சரி தூங்க வச்சிடுவோம் திரு பாப்பாவை..” என்றவன் மனைவியின் அருகில் அமர,

        “கால் வலிக்குது மாமா..” என்றாள் மனைவி. மனைவியின் பாதங்களை மென்மையாக பிடித்துவிட்டவன் அவளைத் தன் மடியில் சாய்த்து உறங்க வைக்க பார்க்க, வெகுநேரம் கடந்தபின்னும் ஏனோ உறக்கம் வரவில்லை திருமகளுக்கு.

           “என்னடா..” என்று வாசுதேவன் மீண்டும் அவளை எழுப்பி அமர்த்த, பதில்கூறாமல் அவன் தோள் சாய்ந்து கொண்டவள் “சந்தோஷமா இருக்கேன் மாமா.. அதான் தூக்கம் வரல போல..” என்று சிரிக்க,

         “தூக்கம் மறந்து போற அளவு சந்தோஷமா திரும்மா..” என்று பரிவுடன் கேட்டுக்கொண்டே அவள் விரல்களுக்கு சொடுக்கெடுத்து விட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

           “ம்ம்ம்.. இன்னைக்கு கோவில்ல அவங்களைப் பார்த்தீங்களா..”

           “யாரை..?”

            “முரளியோட அம்மா..”

            “உன் மனோ மாமாவுக்கும் அவங்கதான் அம்மா..”

            “ஞாபகம் இருக்கு.. ஆனா, மனோ மாமா நல்லவங்க..” என்று வாதிட்டாள் மனைவி.

            “அவங்களோட எல்லா குணமும் அப்படியே அந்த முரளிக்கு தான் வந்திருக்கு. அப்போ அவனோட அம்மாதானே அவங்க..” என்றவள் கோபத்தில் மூச்சு வாங்க,

            “இப்போ ஏன் இப்படி மூச்சு வாங்க பேசிட்டு இருக்க.. அவங்களைப் பத்தி பேச என்ன இருக்கு. அமைதியா இரு..” என்று அதட்டினான் வாசுதேவன்.

             அவன் அதட்டலில் திரு அமைதியாக, அவளைத் தோளோடு அணைத்து கொண்டான் வாசுதேவன்.

             “கடவுள் இருக்கார் இல்ல மாமா..” என்று மீண்டும் அவள் துவங்க,

              “இப்படியெல்லாம் யோசிக்காத திரு. அவங்க செஞ்சதுக்கான பலனை அனுபவிக்கிறாங்க..  அதோட போகட்டும். அவங்க பேச்சை நாம ஏன் பேசணும்.. நீ இப்படி நினைக்கிறதே கூட மனோகரை காயப்படுத்தும்.. அதோட உன் நிலைமைக்கு நீ இப்படி  யோசிக்கிறதும், பேசறதும் எனக்கும் பிடிக்கல..” என்று அழுத்தமாக வாசுதேவன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க,

               “நீங்க நல்லவரா இருக்கறதெல்லாம் சரி. என்கிட்டேயும் அதையே எதிர்பார்க்காதீங்க.. நான் கொஞ்சம் கெட்டவ தான்…” என்று முகத்தை சுருக்கியபடி பேசினாள் திருமகள்.

                “கொஞ்சம் தானா திரும்மா..” என்று சிரிப்புடன் வாசுதேவன் வினவ,

               “ஓ.. அவ்ளோ கெட்டவளா நான்..”

                “நான் சொன்னேனா..”

                “நாந்தான் சொன்னேன்..

               ஆனா, நீங்க இல்லன்னு சொல்லணும் இல்ல..”

          “நீயே உண்மையை பேசும்போது நான் ஏண்டி இல்லன்னு சொல்லணும்..” என்று வாசுதேவன் சிரித்துவிட,

          “ரொம்ப பேசறீங்க மாமா..” என்று அவன் வாய் மீதே திரு அடிக்க,

           “பேசுறது ஒரு குத்தமா ஆண்டவா..” என்று வாசுதேவன் மேலே விட்டத்தைப் பார்த்து அலற, அவன் எதிர்பாராத நிமிடம் எட்டி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள் மனைவி.

            “ஏய்.. பார்த்து பார்த்து.. என் பொண்ணு இருக்காடி..” என்று உண்மையாகவே அலறிப்போனான் வாசுதேவன்.

             திரு நிதானமாக விலகி, அவனை மிரட்டலாக ஒரு பார்வை பார்க்க “இல்ல திரும்மா.. உனக்கும் எங்கேயாவது பிடிச்சுகிட்டா வலிக்கும் இல்ல.. ” என்றான் சமாளிப்பாக

             திரு அவனை முறைத்தபடியே சட்டமாக அவன் மடியில் அமர்ந்து கொள்ள, மெல்ல அவள் வயிற்றைத் தடவி கொடுக்க தொடங்கினான் வாசுதேவகிருஷ்ணன்..

              திரு  தானாக அவன் கன்னத்தில் இதழ்பதிக்க, ” என்ன கேட்காமலே கொடுக்கற..” என்றான் வாசுதேவன்.

              “வேண்டாம்ன்னா திருப்பி கொடுங்க..”

              “திரும்மா.. என்ன வேணும்..”

              “எனக்கு பால்கோவா வேணும்..” என்று மனைவி ராகமிழுக்க,

              “அதெல்லாம் வாய்ப்பே இல்ல.. முதல்ல சுகர் குறையட்டும்..” என்றான் கணவன்.

              “பொண்டாட்டி ஆசையா கேட்கிறாளேன்னு கொஞ்சமாச்சும் தோணுதா உங்களுக்கு.. அவனோட சேர்ந்து சுகர், பிபி ன்னு டார்ச்சர் பண்றிங்க..” என்று திரு கோபம் கொள்ள, விழி பிதுங்கினான் வாசுதேவன்.

           திருவுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சற்று கூடுதலாக இருக்க, இனிப்பு வகைகள் அறவே கூடாது என்று கடுமையாக எச்சரித்திருந்தான் ரகுவரன்.

           அன்றுமுதல் திருவின் பால்கோவாவுக்கு தடை போட்டுவிட்டான் வாசுதேவன். ஆறாம் மாதத்திலிருந்தே இது நடந்து கொண்டிருக்க, அவ்வபோது கணவன், தம்பி என்று இருவரையும் ஏய்த்து விடுவாள் திரு.

           பிரணவ், வம்சியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு, அவர்களிடம் இருந்து திருட்டுத்தனமாக வாங்கி உண்பதும் கூட நடக்கும். இது எப்படியோ வாசுதேவனுக்கு தெரிந்து போக, பிள்ளைகளிடமும் கனிவாக எடுத்து கூறியிருந்தான் அவன்.

             சிறுவர்களும் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு கட்சி மாறிவிட, வாசுதேவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் திருமகள் நாச்சியார்.

              வாசுதேவன் அப்போதும் பொறுமையாக “பாப்பா வரட்டும்.. அதுவரைக்கும் நோ தான்..” என, அவன் மாடியிலிருந்து வேகமாக இறங்க முயன்றாள் திரு.

                “திரு..” என்று வேகமாக வாசுதேவன் அதட்டிவிட, அதற்கே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது திருமகளுக்கு.

                அவள் கண்களைத் துடைத்துவிட்டவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து “நாளைக்கு வாங்கித் தரேன்.. இப்போ அமைதியா இரு.. ” என,

                “வம்சிக்கு அத்தை வாங்கிட்டு வந்தாங்க.. எனக்கு மட்டும் கொடுக்கவே இல்ல..” என்று மூக்கை உறிஞ்சினாள் அவள்.

                 “வம்சியை விட மோசம்டி நீ..” என்று வாசுதேவன் அலுக்க,

                 “போய் எடுத்துட்டு வாங்க..” என்று அவனை விரட்டிவிட்டாள் திரு.

                வாசுதேவனும் அந்த அர்த்தராத்திரியில் பால்கோவாவைத் தேடி சமையலறைக்குள் நுழைய, அரைமணி நேரத்திற்கு மேலாக தேடியும் கிடைக்கவே இல்லை. இவன் சமையலறையில் உருட்டிய சத்தம் கேட்டு விசாலம் எழுந்து வந்தவர் “என்ன கண்ணா  வேணும்..” என்று மகனிடம் கேட்க,

                “பால்கோவா வாங்கிட்டு வந்திங்களாம்மா..” என்றான் மகன்.

                விசாலத்தின் தூக்கம் தெளிந்து போக, “டேய்..” என்று அதிர்ச்சியானார் அவர்.

                “எடுத்து கொடுங்கம்மா.. தூங்காம உட்கார்ந்திருக்கா..” என்று மகன் உணவுமேசையில் அமர்ந்துவிட, வேகமாக மேல்தட்டில் ஒரு டப்பாவில் இருந்த பால்கோவாவை எடுத்து பிள்ளையிடம் கொடுத்தார் விசாலம்.

              என்ன முயன்றும் அவரால் சிரிப்பை அடக்க முடியாமல் போக, அவரை முறைத்தபடியே தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் வாசுதேவன்.

               கையிலிருந்த டப்பாவை கட்டிலில் போட்டவன் கோபத்துடன் அமர்ந்துவிட, அவனை கண்டுகொள்ளாமல் பால்கோவாவின் மீதே கவனம் செலுத்தினாள் திருமகள்.

               திருவின் கையிலிருந்த டப்பாவை பிடுங்கி ஓரமாக வைத்து “உன்னால என் மானம் போச்சு.. உன் அத்தை நக்கல் பண்ணிட்டு போறங்கடி..” என்று வாசுதேவன் கத்த,

               “அத்தையை ஏன் எழுப்பினீங்க..” என்றாள் திரு.

               “நான் எங்கே எழுப்பினேன்.. நான் போட்ட சத்தத்துல அவங்களே எழுந்து வந்துட்டாங்க..” என்று வாசுதேவன் சோகத்துடன் கூறியதில், பக்கென சிரித்துவிட்டாள் திருமகள்.

               “ஒரு பால்கோவாவை கூட சத்தம் போடாம எடுத்துட்டு வர தெரியல..  இதுல பேச்சு மட்டும் பெருசா பேச வேண்டியது…” என்றவள் மீண்டும் பால்கோவா கிண்ணத்தை கையில் எடுத்துக்கொள்ள,

                “என் மானத்தை வாங்கிட்டு வாய் பேசிட்டு இருக்க நீ.. உனக்கு ஸ்வீட் கிடையாது போடி..” என்று மீண்டும் வாசுதேவன் கிண்ணத்தை பிடுங்கி கொள்ள,

                “ப்ளீஸ் மாமா..” என்றபடி மீண்டும் அவன் மடியில் ஏறி அமர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் கிண்ணத்தை கையில் வாங்கி கொண்டு உண்ண ஆரம்பித்துவிட்டாள்.

                வாசுதேவன் அதட்டிக்கொண்டே இருக்க, அவனைக் கண்டு கொள்ளாமல் “கொஞ்சம் .. கொஞ்சம்” என்று கூறியபடியே கிண்ணத்தை காலி செய்யும் வேலையில் இறங்கியிருந்தாள் திருமகள்.

              வாசுதேவன் பொறுத்துப் பார்த்தவன் அவள் கேட்பதாக இல்லை எனவும், “எனக்கும் என் பால்கோவா வேணும்..” என்றபடி அவள் முகத்தை திருப்பியவன் எப்போதும் போல் அவள் வாயிலிருந்த இனிப்பை தான் எடுத்துக் கொள்ள, “மாமா..” என்ற முனகலுடன் கையில் இருந்த கிண்ணத்தை தவறவிட்டாள் திருமகள்நாச்சியார்.

               திருமகளை வேறெதுவும் யோசிக்கவிடாமல் வாசுதேவன் முழுமையாக அவளைத் தன் கைகளுக்குள் அடக்கிக்கொள்ள, அவன் எதிர்பார்த்ததைப் போலவே அவனுக்குள் மூழ்கிப் போனாள் அவனது திரு.

              தன் கையில் தொய்ந்தவளை கட்டிலில் கிடத்தி அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளை லேசாக அணைத்தபடி படுத்துவிட, “ஒரு சின்னப்பிள்ளையை எப்படி  எல்லாம் ஏமாத்துறீங்க மாமா நீங்க..” என்று சிரிப்புடன் கேட்டபடியே அவனை நெருங்கி ஒட்டிக்கொண்டாள் திரு.

              “நீயா சின்னப்பிள்ளை.. அடாவடி..” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டவன் “உன் பிளான் எல்லாம் புரியுது.. ஆனா, எல்லாமே என் பொண்ணு வந்தபிறகு தான்..” என்றான் உறுதியாக.

                “எனக்கென்ன… உங்க பொண்ணு வந்த பிறகும் உங்களுக்கு பால்கோவா கிடையாது.. இப்படியே கிடங்க..” என்று அவன் நெஞ்சில் அடித்தவள் கண்களை மூடிக்கொள்ள, அவள் இதழ்களின் லேசாக முத்தமிட்டு “அமைதியா தூங்கு திரு.. ரொம்ப அறிவாளியா யோசிக்காத..” என்றவனை கண்களில் பொங்கிய காதலுடன் நோக்கியவள் “என்னை கட்டிக்கோங்க மாமா..” என்றாள் பேராவலுடன்.

           திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் காதல் குறையவே இல்லை அவள் குரலில். திருமகளின் வயிற்றை இடிக்காமல் கவனமாக அவளை கட்டிக்கொண்டவன் முகத்திலும் அவளுக்கு இணையாக உணர்வுகள் பெருக்கெடுத்து இருக்க, அது திருமகளின் காதலுக்கான எதிர்வினை.

            காமமில்லாத காதல் மட்டுமே நிறைந்த அந்த ஒற்றை அணைப்பு அவர்களை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement