Advertisement

வாசுதேவகிருஷ்ணன்- திருமகளின் நிறைவான வாழ்வு ஐந்தாண்டுகளை கடந்திருக்க, அவர்கள் அன்புக்கு சாட்சியாக நான்குவயதில் திருமகளின் மறுஉருவமாக வந்து பிறந்திருந்தான் வம்சி.. வம்சி கிருஷ்ணா.. பேச்சு, செயல், நடவடிக்கைகள் என்று அத்தனையிலும் திருமகள்தான் அவன்.

               அதனால் தானோ என்னவோ விசாலத்திற்கும் அவனுக்கும் ஒத்துபோவதே கிடையாது. எப்போதும் விசாலத்திடம் சரிக்கு சரி நிற்பான் பேரன். “அப்படியே அவளை மாதிரியே ரெட்டை வாலா பெத்து எடுத்திருக்கா பாரு..” என்று விசாலம் அலுத்துக் கொண்டாலும், பேரன் அருகில் இருந்தால் அத்தனையும் மறந்துவிடுவார் அவர்.

             இந்த வயதில் அவனின் எதையும் பட்டென புரிந்து கொள்ளும் அவனின் சாதுர்யமும், கேள்வியாக கேட்டு குடையும் அவன் புத்திக்கூர்மையும் கண்டு ஏகப்பெருமை அவருக்கு. காலையில் ராகவனுடன் சென்று பால்பண்ணை, வயல் என்று சுற்றிவிட்டு எட்டு மணி அளவில் வீடு வந்து நிற்பவனை குளிக்க வைத்து, உணவூட்டி, தயார் செய்து மீண்டும் அவன் தாத்தாவுடன் பள்ளிக்கு அனுப்பி விடுவது என்று அத்தனையும் செய்பவர் விசாலம் தான்.

              அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, தாத்தாவுடன் காலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தான் வம்சி. அவர்களின் சிறிய மாட்டுத்தொழுவம் வாசுதேவகிருஷ்ணனின் தீவிர முயற்சியில் பெரிய பால்பண்ணையாக வளர்ந்திருக்க, அதில் சரிபாதி உரிமையாளன் மனோகர்.

              பால்பண்ணை அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தது மட்டுமே வாசுதேவன். அதற்கான மொத்த வேலைகளையும் மனோகரை வைத்தே செய்ய வைத்தவன் பால்பண்ணையின் சரிபாதி உரிமையை அவனிடம் கொடுக்க, வேண்டவே வேண்டாம் என்று வழக்கம்போல் மறுத்தவனை திருதான் சமாளித்தாள் எப்போதும்போல்.

                பண்ணையில் உரிமை இருந்தாலும், இன்றுவரை அதன் நிர்வாகத்தில் தலையிட்டதே இல்லை வாசுதேவன், அத்தனையும் மனோகர் தான். இதோ இப்போதும் ராகவனுக்கு முன்பே அவனும் வந்து நின்றிருக்க, அவனுடன் வால் பிடித்துக்கொண்டு அவன் மகன் பிரணவ்.

                 வம்சியை பார்த்துவிடவும் பிரணவ் நின்ற இடத்திலிருந்து துள்ளி குதித்தபடியே வேகமாக ஓடிவர, ஏதோ பலநாட்கள் பிரிந்திருந்தவர்கள் போல் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர் இருவரும்.

                 மனோகர் ராகவனின் அருகில் வந்து நிற்க, அவர்கள் இருவரையும் கண்டுகொள்ளாமல் “கருப்பனை பார்க்க போறோம்ப்பா..” என்று ஓடிவிட்டனர் சிறுவர்கள்.

                மனோகர் “நான் பார்த்து கூட்டிட்டு வரேன்ப்பா..” என்று அவர்களின் பின்னால் நடக்க, அங்கு வேலை செய்பவர்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டு நின்றார் ராகவன்.

                இன்றுவரை கருப்பனை நெருங்க லேசான பயம் உண்டு மனோகருக்கு. புது இடமென்பதால் பண்ணைக்கு வந்த புதிதில் ஒருமுறை மனோகரின் கையை கருப்பன் பதம் பார்த்திருக்க, அப்போதிருந்தே பெரிதாக அவனை நெருங்கமாட்டான் மனோகர்.

                ஆனால், பிள்ளைகள் இருவரும் அப்படியே நேரெதிர். இருவருக்கும் அத்தனை நெருக்கம் கருப்பனிடம். இதோ இப்போதும் அவர்கள் உயரத்திற்கு ஏற்றபடி கருப்பனை தடவிக்கொண்டும், அவனுடன் பேசிக்கொண்டும் நிற்க, நாய்க்குட்டியாக அவர்களிடம் குழைந்து கொண்டு நின்றது அந்த பெரிய உருவம்.

                 அந்த வாயில்லா ஜீவனிடம் திருமகள் தன் மக்கள் இருவரையும் அறிமுகம் செய்து விட்டிருக்க, திருமகளைப் போலவே அவள் பிள்ளைகளுக்கும் நெருக்கமாகி இருந்தான் கருப்பன்.

                மனோகர் பிள்ளைகளை அழைக்க, “வரோம்ப்பா..” என்று வாய் சொன்னதே தவிர, அங்கிருந்து அசையவே இல்லை இருவரும்.

                கருப்பனை சுற்றி சுற்றி வந்தவர்கள் அங்கேயே ஓடி விளையாடி களைத்துப் போக, வந்த ஒருமணி நேரத்தில் இருவரும் மண்ணில் புரண்டு எழுந்ததைப் போல் அழுக்காகி இருந்தனர். அப்படியே விட்டால் திருமகள் கையை நீட்டி விடுவாள் என்பதால் இருவரையும் தன்னுடன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக ராகவனிடம் கூறியவன் தனது பைக்கில் இருவரையும் அமர்த்திக்கொண்டு வீடுவர, கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல் பிள்ளைகளை குளிப்பாட்டி, அவர்களை சாப்பிட வைத்து அவர்கள் பின்னால் அலைந்து  கொண்டிருந்தாள் கோதை.

               அன்று மதியம் வரை அங்கேயே விளையாடி முடித்து மாலையில் இருவரும் விசாலத்தின் வீட்டிற்கு கிளம்ப, வீட்டுக்குள் நுழையும்போதே “பாட்டி..” என்று விசாலத்தை அழைத்துக் கொண்டே ஓடினான் கோதையின் மகன் பிரணவ்.

               பிறந்தது முதலே அவரிடம் வளர்ந்ததால் விசாலத்திடம் ஓட்டுதல் அதிகம் அவனுக்கு. மனோகர் மீண்டும் பண்ணைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவசரமாக வாசலுடன் கிளம்பியிருக்க, பிள்ளைகள் இருவரும் நேரே திருவின் அறைக்கு சென்றிருந்தனர்.

              “யார்கூட வந்திங்க ரெண்டுபேரும்.” என்று திரு கேட்க,

              “மனோப்பா கூட்டிட்டு வந்தாங்க..” என்றான் வம்சி.

              “மனோப்பா உள்ளே வரலையா..”

               “ஈவினிங் வருவாங்களாம்.. இப்போ வேலை இருக்கு சொன்னாங்க..” என்று வம்சி பதில் கூற,

              “பாட்டி எங்கே..” என்றான் பிரணவ்.

              “உன் பாட்டி உனக்கு டிரஸ் எடுக்கத்தான் கடைக்கு போயிருக்காங்க பிரணா.. வந்திடுவாங்க..” என்று மகனை கன்னம் பிடித்துக் கொஞ்சியவள் “என்ன சாப்பிட்டிங்க ரெண்டு பேரும்..” என்று விசாரிக்க,

               “கோதையம்மா கீ ரைஸ், பொட்டட்டோ ப்ரை தந்தாளே.. யம்மி..” என்று நாக்கை சப்புக்கொட்டி காண்பித்தான் வம்சி…

                “டேய். அதென்னடா தந்தாளே.. தந்தாங்க சொல்லு..” என்று திரு திருத்த,

                “அம்மா, இட்ஸ் ஓகே சொன்னா..” என்றான் மகன்.

               அன்னை முறைக்க “சரியா போய்டுமா.. நான் அண்ணா போல வளர்ந்தா, கரெக்ட் பண்ணிப்பேன்..” என்று மீண்டும் அழுத்தமாக மகன் உரைக்க

                “இதை யார் சொன்னது..”

               “அம்மாதான் சொன்னா…” என்று மீண்டும் அழுத்தம் கொடுத்தான் மகன்.

               அதற்குள் வாசலில் சத்தம் கேட்கவும், இருவரும் திருமகளை தனித்து விட்டு வாசலுக்கு ஓட, வந்தது வாசுதேவன். திருமகள் தனித்திருப்பதால் அவளைக் காண அவன் வந்திருக்க, வீட்டிற்குள் இருந்து ஓடிவந்த பிள்ளைகளை காணவும், வாசலிலேயே நின்றுவிட்டான் அவன்.

                இருவரும் ஒரே நேரத்தில் அவன் கால்களைக் கட்டிக்கொள்ள, அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டவன் இருவரையும் தூக்கிக்கொண்டு அறைக்கு வர, அதன் பின்னர் வாசுதேவனுடன் ஒட்டிக்கொண்டனர் இருவரும்.

                திருமகள் கணவனையும், பிள்ளைகளையும் நிறைவாக நோக்கியபடி அமர்ந்திருக்க, சட்டென அவளைப் பார்த்து கண்சிமிட்டினான் வாசுதேவன். அதில் லேசாக வெட்கம் கொண்டு அவள் அமர்ந்திருக்க, அவளைக் கண்டும் காணாமல் பிள்ளைகளுடன் அவர்களுக்கு சரியாக ஆடிக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

                அவனின் தனிமையும், மௌனமும் திருவின் வருகையால் தொலைந்து போயிருக்க, அவனது அழுத்தமும், கோபமும் பிள்ளைகளின் வரவால் ஒன்றுமில்லாமல் போயிருந்தது.

                  ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாசுதேவனுடன் ஆடிக் களைத்து போனவர்கள் அந்த அறையிலேயே உறங்கிவிட, அவர்கள் உறங்கிய பின்புதான் வீடு வந்தார் விசாலம்.

             வாசுதேவன் மனைவியை தோளில் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவன் அருகாமையே போதுமாக இருந்தது திருமகளுக்கு. வயிற்றில் இருக்கும் தன் பிள்ளையைக் கொஞ்சிக்கொண்டே அவன் அமர்ந்திருக்க, “ஏற்கனவே உங்க குரல் கேட்டு ஆடிட்டு தான் இருக்கா மாமா.. அமைதியா இருங்க..” என்று அவனை அதட்டினாள் திருமகள்.

           “என் பொண்ணை கொஞ்சக்கூடாதுன்னு சொல்லுவியா நீ.. போடி.. பட்டுக்குட்டி என்னடா பண்றிங்க.. அப்பாவை பார்க்க எப்போ வருவீங்க..” என்று பேச்சு கொடுக்க, அவன் பேச்சுக்குரல் கேட்டதும், தாயின் வயிற்றில் அழகாக ஒரு உதை கொடுத்தாள் மகள்.

              அவள் அசைவில் திரு பாவமாக கணவனைப் பார்க்க “அம்மா பாவம்டா பொம்மு.. அம்மாவை படுத்தாதிங்க..” என, மீண்டும் ஒரு உதை..

                வாசுதேவன் திருவின் வயிற்றில் கையைவைத்து லேசாக வருடிவிட, அவன் ஸ்பரிசம் உணர்ந்தவளாக அமைதியானாள் மகள்.

                திரு இப்போது எட்டாம் மாத முடிவில் இருக்க, இது வாடிக்கையாக நடப்பது தான். திருவை படுத்தி எடுக்கும் அவள் பிள்ளை, வாசுதேவனின் இந்த வருடல்களுக்கு அமைதியாக உறங்கிவிடுவாள். அதன்பின்பு தான் திருவும் சிறிதுநேரம் படுக்கவோ, ஓய்வெடுக்கவோ முடியும்.

               ஏழாம் மாதம் வரையும் அவளை மசக்கை போட்டு படுத்தியிருக்க, இப்போதுதான் கொஞ்சமாக தேறி வர தொடங்கியிருந்தாள் அவள். வாசுதேவன் அவளை கண்களில் வைத்து காத்துக்கொண்டால் விசாலம் மருமகளை உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொள்வார்.

    ராகவன் வெளியே செல்லும் நேரமெல்லாம் மறக்காமல் மருமகளுக்கென பழங்கள், காய்கறிகள், கீரைவகைகள் என்று எதையாவது வாங்கி வந்துவிடுவார்.

        மனோகர் அவனுக்கு தெரிந்த வகையில் திருவுக்கு பிடிக்கும் என்று நினைத்ததை எல்லாம் வாங்கி வந்து கொடுக்க, கோதை அவள் திருப்திக்கு எதையாவது சமைத்து கொண்டு வந்து கொடுப்பாள்.

    இவர்கள் இத்தனைப் பேரும் போதாதென்று சென்னையில் இருந்து மாதத்திற்கு இருமுறை நேரில் வந்து அக்காவை பரிசோதித்து திருப்தி பட்டு கொள்வான் அவளின் பாசமலர்.

     அவன் விருப்பப்படி குழந்தைகள் நல மருத்துவனாக சென்னையின் முக்கிய மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான் ரகுவரன்.

       ஆனால், விடுப்பு கிடைக்கும் நேரங்களெல்லாம் அவன் பொழுதுகள் தன் தமக்கை மக்களுடன் தான். இப்போது திருமகள் கருவுற்று இருப்பதால் அவளும் முக்கியமாகிப் போயிருந்தாள்.

      அவர்கள் ஊரின் பிரசித்திப் பெற்ற திருவிழாவான மாகாளியம்மன் கோயில் திருவிழா தொடங்கியிருக்க, நாளை தீமிதிக்கும் நிகழ்வு நடைபெற இருப்பதால் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு அன்று இரவு வந்து இறங்கினான் ரகுவரன்.

           பிள்ளைகள் இன்னும் உறக்கத்தில் இருந்து விழிக்காமல் இருக்க, விசாலம் நிதானமாக இரவு சமையலை முடிக்கவும், பிள்ளைகள் இருவரையும் எழுப்பி அழைத்து வந்து அமர்த்தினான் வாசுதேவன்.

          அரைத்தூக்கத்தில் இருந்த பிரணவ் விசாலத்தை பார்க்கவும் “பாட்டி..” என்று அவரை அணைத்துக்கொள்ள,

      “சாப்பிடாம ஏன்டா தூங்கினிங்க..” என்று அதட்டிக்கொண்டே இருவரின் வாயிலும் உணவைத் திணித்தார் விசாலம்.

     வம்சிக்கு ஊட்டிவிடுகையில் தெரியாமல் அவன் கன்னத்தில் சாம்பார் பட்டுவிட “அச்சோ பாட்டி..” என்று விரல்களால் கன்னத்தை காண்பித்துக் கொண்டே அவரது புடவையில் வாயைத் துடைத்துவிட்டான் வம்சி.

       “ஏன்டா உன் வாயில தானே ஒட்டியிருக்கு. அதைக்கூட என் புடவையில துடைப்பியா..” என்று விசாலம் கேட்க

        “நீதானே பூசின..” என்று முறைத்தான் பேரன்.

        “பாட்டிக்கு வயசாகிடுச்சுடா.. அதனாலதான் கண்ணு தெரியல..” என்று ராகவன் சிரிக்க, தானும் சிரித்துக்கொண்டே அவருடன் ஹை பை கொடுத்துக் கொண்டான் வம்சி.

       பிரணவ் நல்ல பிள்ளையாக உணவை வாங்கிக்கொள்ள, ஒருவாய் உணவை வாங்குவதற்குள் ஆயிரம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தான் வம்சி.

     வாசுதேவகிருஷ்ணன் திருமகளுக்கு இரவு உணவை எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றிருக்க, அவனிடம் தனியாக மாட்டிக்கொண்டு விசாலம் விழித்துக் கொண்டிருக்கையில் தான் ரகுவரன் வந்தது.

         அவன் உள்ளே நுழைந்த நிமிடமே “அடேய் டாக்டரு.. நல்ல நேரத்துல வந்த. இந்தா நீயே ஊட்டு இவனுக்கு. சாப்பிட மறுத்து அடம் பிடிச்சா ரெண்டு ஊசி போடு இவனுக்கு..” என்று வம்சியைக் காண்பித்தார் விசாலம்.

         அவர் பேசத் தொடங்கும் போதே ரகுவரனின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டிருந்தான் வம்சி. பாட்டி பேசபேச அவரைப் பார்த்து சிரிப்பு வேறு.

          “யாராவது ஒருத்தருக்காவது பயப்பட்றானா பாரேன்..” என்று அவர் அலுத்துகொள்ள

           “வம்சி குட் பாய் தானே.. ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சா, மாமா சாக்லேட் கொடுப்பேன்..” என்று ஆசைகாட்ட,

           “எனக்குதான் சாக்லேட்..” என்று அவன் மடிக்கு தாவினான் வம்சி. இப்போது பிரணவும் அவனுடன் சேர்ந்து கொள்ள, இருவரும் சேர்ந்து ரகுவரனைப் படுத்தி எடுத்தனர்.

          ரகுவரன் இருவரிடமும் பேச்சுக் கொடுத்தபடியே உணவை உண்ணச் செய்ய, பத்து நிமிடங்களில் விசாலத்தின் கையில் இருந்த உணவுகிண்ணம் காலியாகி இருந்தது.

          அதன்பிறகு பிள்ளைகள் இருவரையும் அவன் தனது அறைக்கு அழைத்துச் செல்ல, மாலையில் இருவரும் உறங்கிவிட்டதால் விடிய விடிய மாமனிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

         திருமகளுக்கு இரவு உணவை வாசுதேவன் ஊட்டி விட்டிருக்க, அவன் ஊட்டி முடித்த கணமே அதீத சோர்வில் உறங்கியிருந்தாள் அவள்.

      வாசுதேவனும் அவள் அருகிலேயே படுத்துவிட, இருவருக்கும் ரகுவரன் வந்ததே அடுத்தநாள் காலையில் தான் தெரியவந்தது.

           காலையில் பிள்ளைகள் இருவரும் உறங்கி கொண்டிருக்க, ரகு தன் மாமனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். முன்பு போல் இல்லாமல் அப்படி ஒரு நெருக்கம் வளர்ந்திருந்தது வாசுதேவனுக்கும், ரகுவரனுக்கும் இடையே.

Advertisement