Advertisement

நெஞ்சம் பேசுதே 28

              திருமகளின் கழுத்தில் முகம் வைத்து, மொத்தமாக அவளை அணைத்தபடி உறங்கிப் போயிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். ஒருமணி நேரத்திற்கும் மேல் அவன் உறங்கி கொண்டிருக்க, இன்னும் அவன் கைப்பிடியில்தான் இருந்தாள் திருமகள்.

              இப்படி தன்னை வளைத்துக் கொண்டிருப்பவன் மீது கோபம் கொண்டாலும், சோர்ந்திருந்த அவன் முகம் கண்டபின் சண்டையிடவும் மனம் வரவில்லை. “அப்படி என்ன தலை போற விஷயம்.. அப்படியே முக்கியமா இருந்தாலும், என்கிட்டே பொய் சொல்லிட்டு போவாரா..” என்பதே மண்டையில் ஓடிக் கொண்டிருக்க, அவளது பொறுமை கற்பூரமாக கரைந்து கொண்டிருக்கும் வேளையில் வாசுதேவகிருஷ்ணனின் அலைபேசி ஓசையெழுப்பியது.

            அவன் அணைப்பில் இருந்து லேசாக விலகியவள் அலைபேசியை எட்டி எடுக்க முற்பட, “திரு..” என்று என்று முனகிக்கொண்டே அவளை தன்னுடன் இறுக்கினான் வாசுதேவன். அவன் கைமீது பட்டென ஒன்று வைத்தவள் “போன் அடிக்குது விடுங்க.” என்றபடி அலைபேசியை எடுக்க, அழைப்பில் காத்திருந்தவன் ரகுவரன்.

          திரு  “இவன் காலேஜ் போகாம இவருக்கு கூப்பிடறான்.. இவங்க போன்ல பேசிக்கிற அளவுக்கு நெருக்கமாகிட்டாங்களா..” என்று சிந்தித்தபடியே அழைப்பை ஏற்க, எதிர்முனையில் இருப்பது யாரென அறியாமல் பேசத் தொடங்கினான் ரகுவரன்.

          “மாமா.. டாக்டர்கிட்ட பேசிட்டேன்.. இன்னைக்கு சிட்டிங் நெஸ்ட்வீக் போஸ்ட்போன் பண்ணியாச்சு. உங்களுக்கான த்ரோட் எக்ஸர்சைஸ், ஸ்பீச் தெரபிக்கான லிங்க் எல்லாமே வாட்சப் பண்ணியிருக்கேன் மாமா.. பாருங்க.. எதுவும் சந்தேகம் இருந்தா கால் பண்ணுங்க..” என்றவன் பேசி முடித்த பின்பே எதிர்முனையில் இருந்த நிசப்தத்தை உணர்ந்தான்.

           “ஹலோ..” என்று மீண்டும் ஒருமுறை அவன் நிச்சயப்படுத்திக் கொள்ள,

           “உன் மாமா தூங்கிட்டு இருக்கார்.. எழுந்ததும் கூப்பிட சொல்றேன்.” என்று அழைப்பை துண்டிக்க நினைத்தாள் திரு.

            ரகுவரன் “திரு..” என்று வேகமாக அழைத்து நிறுத்த,

           “சொல்லு..” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.

           “நாச்சி நான்… மாமாதான் உனக்கு தெரியவேண்டாம்னு சொன்னாரு.. உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான்.. மறைக்கணும்னு நினைக்கலடி…”

             “ரொம்ப சீக்கிரமா சொல்லிட்டடா.. மறைக்கணும்னு நினைக்கலையா.. திட்டம் போட்டு மறைச்சிருக்கீங்க ரெண்டுபேரும்..” என்று திரு கோபம் கொள்ள,

              “லூசு மாதிரி உளறாத.. அவர் சரியா பேசணும்னு நினைச்சதே உனக்காகத்தான். நீ பேசுங்கன்னு சொன்னதால தான் என்னைத் தேடி வந்தார்.. நான் இங்கே ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அவருக்கு இருக்கறது பெரிய பிரச்சனை எல்லாம் இல்ல. ஆனாலும், வலி இருக்கும்..”

             “கொஞ்சம்கூட வெளியே காட்டிக்காம, அவ்ளோ அழகா சமாளிக்கிறார்.. பேசியே ஆகணும்னு ரொம்ப மெனக்கெட்டு பயிற்சி எடுக்கிறார் திரு. அவர்கிட்ட சண்டை எதுவும் போடாத.. அமைதியா பேசு.. அவரையும் பேசவிடு.. அவர் நிறைய பேசணும். நிதானமா, பதட்டமில்லாம பேசிப் பழகணும்…”

             “நீ அவரோட முட்டிட்டு இருந்தா, மொத்தமா வீணாகிடும் பார்த்துக்கோ..” என்று தம்பி மிரட்ட,

             “நான் சண்டைப் போட்டதை பார்த்தியாடா நீ..”

              “என்னையே இந்த பாடு படுத்தற.. மாமாவை என்ன செய்வியோ..?”

              “அவ்ளோ அக்கறை இருந்தா உன்கூடவே கூட்டிட்டுப் போய் வச்சுக்கோ உன் மாமாவை.”

              “அவர்தான் பொண்டாட்டிய விட்டுட்டு இருக்கமாட்டாரே.. இப்போகூட பாரு. பொண்டாட்டி லேசா கண்ணை கசக்கவும் டாக்டர் அப்பாய்ண்ட்மென்டை மறந்து ஓடி வந்துட்டார்.” என்று ரகுவரன் நக்கலடிக்க,

              “போனை வைடா..” என்று அவனை அதட்டி அழைப்பைத் துண்டித்துவிட்டாள் திருமகள். ஆனாலும், முகத்தில் புன்னகை குறையவே இல்லை.

               அதே புன்னகையுடன் வாசுதேவனை அவள் ஏறிட, இன்னமும் உறக்கத்தில் தான் இருந்தான் அவன். அவன் மீது கொண்ட காதல் ஆழிப் பேரலையைப் போல் கடல் கடக்கத் துடிக்க, அவன் அருகில் சாய்ந்து அவன் முகத்திற்கு நேரே தன் முகம் வைத்தவள் மென்மையாக அவன் இதழ்களில் இதழ் பதித்தாள்.

         அவள் தீண்டலை உணராமல் அவன் உறங்கி கொண்டிருக்க, அது பிடிக்கவில்லை திருமகளுக்கு.

        உறங்கி கொண்டிருந்த கணவனின் மீசை அவளை கவர, அதன் நுனியைப் பிடித்து லேசாக இழுத்து விளையாடிக் கொண்டிருந்தவள் ஆர்வத்தில் சற்று வேகமாக இழுத்துவிட, வலி பொறுக்கமுடியாமல் எழுந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

       அவன் கண்களைத் திறக்கவும், திரு விலகப் பார்க்க, வாசுதேவன் அதற்கு இடம் கொடுக்கவில்லை. திருமகளை கைகளால் வளைத்துக் கொண்டவன் வழக்கம்போல் அவன்மீது கிடத்திக் கொண்டான் அவளை.

           “விடுங்க என்னை.” என்று திருமகள் கோபம் போல் காட்டிக்கொள்ள,

           “எதுக்கு விடணும்.. என் பொண்டாட்டி.” என்றான் சட்டமாக.

            “அதுக்குதான் எப்பவும் பொய் சொல்றிங்களா..”

            “எப்போலாம் பொய் சொன்னேன்.. சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக்கூடாது. என்னையும் பேசவிடனும்.”

             “என்ன பேசப் போறீங்க.. திரும்பவும் பொய் சொல்லுவீங்க. இந்த முறை வேணா, உங்க மச்சானையும் கூட சேர்த்துக்கோங்களேன்..”

              “எனக்கு என் பொண்டாட்டி போதும்..” என்று வாசுதேவன் முடிப்பதற்குள்,

              “பொய் பொய்.. வாயைத் திறந்தாலே பொய் தான்..” என்று அவன் வாய்மீதே ஒரு அடி வைத்தாள் திருமகள்.

               “உனக்கு ஒழுங்கா அடிக்கக்கூட தெரியல திரு..” என்று வாசுதேவன் அவளை நெருங்க, “கொன்னுடுவேன் மாமா..” என்று அவன் கழுத்தைப் பிடித்தாள் திரு.

                 “எங்கே போனீங்க..  என்கிட்டே பொய் சொல்லுவீங்களா..”  என்று அவன் கழுத்தை பிடித்தபடியே திரு வினவ,

                  “அதுதான் உன் பாசமலர் சொல்லிட்டான்ல..” என்று வாசுதேவன் சாதாரணமாக உரைத்துவிட,

                 “அடப்பாவி மாமா.. மொத்தத்தையும் கேட்டுட்டுதான் படுத்து இருந்திங்களா..” என்று அதிர்ச்சியானாள் திருமகள்.

                “அது மட்டும் இல்ல.. நீ கொடுத்த பால்கோவா கூட சாப்பிட்டேன் திரும்மா..  செம டேஸ்ட்..” என்று இதழ்களை குவித்தபடி அவன் கூறிவைக்க, “ரொம்ப கெட்டு போய்ட்டிங்க நீங்க..” என்று அவன் கன்னம் கிள்ளினாள் திருமகள்.

            “ம்ம்ம்…” என்றவன் அவள் கன்னத்துடன் கன்னம் வைத்து இழைய,

             “இந்த வேலையே வேண்டாம். ஏன் என்கிட்டே பொய் சொல்லிட்டு போனீங்க..” என்று திருமகள் அதிலேயே நிற்க,

             “நீதானடி சொன்ன.. எனக்காக பேசுங்கன்னு.. அதைத்தான் செஞ்சேன்.”

              “அதை என்கிட்டே சொன்னா என்ன..?”

              “லேசா வலிக்கும்ன்னு சொன்னதுக்கே, அழ ஆரம்பிச்சிட்ட. இதுல ட்ரீட்மெண்ட் எடுக்கபோறேன்னு சொன்னா, கூடவே வந்து அழுதுட்டு நிற்ப. அது வேண்டாம்னு நினைச்சுதான் சொல்லல. சரி உனக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு நினைச்சேன்.” என்றவனைக் கட்டிக்கொள்ளத்தான் தோன்றியது திருமகளுக்கு.

               “எனக்காகவா மாமா..” என்று  நெகிழ்ந்து போனவளாக திரு வினவ,

               “ம்ம்ம்.. என் திருக்காக.. அவளோட காதலுக்காக..” என்றான் வாசுதேவன்.

             வாழ்வில் அதற்குமேல் எதுவும் தேவையிருக்குமா..? என்று தெரியவில்லை திருமகளுக்கு. அந்த நிமிடம் மட்டும் போதும். அங்கேயே உறைந்திட வேண்டும் என்றுதான் வேண்டுதல் கொண்டாள் அவள்.

              மூன்று வருட தவத்திற்கு பலன் கிடைத்துவிட்ட உணர்வு. அவன் வைராக்கியம் உடைந்து அவன் வாய் திறக்க நினைத்ததே அவள் காதலுக்கான பலனாகத் தான் தோன்றியது திருமகளுக்கு.

             எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் அவன் நெஞ்சில் படுத்து அந்த நிமிடங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தவள் அரைமணி நேரத்திற்குப் பின் எழுந்து, குளித்து முடித்து வெளியே வர, அவளை ஆராய்ச்சியாகப் பார்த்து வைத்தார் விசாலம்.

              அவரின் பார்வை உணர்ந்தவள் “என்ன..” என்று புருவம் உயர்த்த,

             “அழுது மூஞ்சியெல்லாம் வீங்கி இருந்ததே..”

             “இப்போ எப்படி இருக்கு..?”

             “என்  மகன் வந்துட்டான்ல.. நல்லாத்தான் இருக்கு. ஏண்டி ஒருநாள் அவன் வெளியூருக்கு போனதுக்கு இப்படி அழிச்சாட்டியம் பண்ணுவியா நீ..” என்று கடிந்து கொண்டார் விசாலம்.

               ‘தப்புதான்.. இனிமே பண்ணமாட்டேன்..” என்று திரு சரணடைய,

               “அறிவு வந்துடுச்சா இப்போ..” என்று அதற்கும் கேள்வி வர, அதற்குமேல் பொறுப்பாளா திரு.

               “என்ன இப்போ.? என் புருஷன்கிட்ட தானே  சண்டை போட்டேன்..” என்றாள் சவாலாக.

               விசாலம் கிண்டலாக சிரிக்க, “ரொம்ப பண்ற அத்தை நீ.” என்று சிணுங்கினாள் திரு.

              “கழுத. வெளியே போறவனை இப்படி போட்டு படுத்தலாமா…” என்று விசாலம் அவள் காதைத் திருக,

             “உங்க மகன் என்கிட்டே சொல்லாம போய்ட்டாங்க.. அதுதான் கோபம். அதுவும் உங்க பிள்ளையைப் பார்க்கவும் சரியா போச்சு.” என்று திருமகள் சிரிக்க, அவளின் சிரிப்பில் உள்ளம் நிறைந்தது விசாலத்திற்கு.

              மருமகள் சிரிப்புடன் வீட்டின் பின்கட்டிற்கு சென்றுவிட, அவளை நிம்மதியாக பார்வையால் தொடர்ந்தார் விசாலம். நெடுநாட்களாக அவர் மனதில் இருந்த குற்றவுணர்வு சமீபகாலமாக வெகுவாக குறைந்திருந்தது.

             மூன்று வருடங்களுக்கு முன்பு திருமண மண்டபத்தில் வைத்து தம்பியை தரக்குறைவாக பேசிவிட்டார் தான். அந்த நிமிடம் பிள்ளை மட்டுமே நினைவில் இருந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் உடன் பிறந்தவனை நினைத்து வெகுவாகத் தவித்துப் போயிருந்தார் விசாலம்.

              அவர் தம்பி இறந்தநேரம் தன்னால்தானோ என்று எத்தனை வேதனை கொண்டார் என்பதெல்லாம் அவர் மட்டுமே அறிந்த ரகசியம். அத்தனை வேதனையிலும் தம்பி மக்கள் தள்ளி நிறுத்தியதில் வெகுவாகத் தளர்ந்து போயிருந்தவர் அதிலிருந்து மீள்வதற்கு முன்பே தம்பி மனைவியின் மறைவு.

              அப்போதும் அவரால் முயன்றவரை திருமகளுக்கு உதவ முயன்றார் விசாலம். ஆனால், “யார் நீ.” என்பதுபோல ஒரே பார்வையில் அத்தனை பேரையும் தூர நிறுத்திவிட்டாளே அவள். அவள் உடன் பிறந்தவளையே மன்னித்து ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையே.

               அப்படிப்பட்டவள் தன்னை ஏற்பாளா.. என்று தயங்கி தவித்துக் கொண்டிருந்தவர் அவர். தம்பி மக்களின் மீது கொள்ளைப்பிரியம் இருந்தாலும், ஒரு நிமிட கோபத்தில் அத்தனையும் மறந்து தவறு செய்துவிட்டு அதற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர்.

              அந்த முரளியின் செயலை கேள்விப்பட்டு கொதித்துப் போய்த்தான் அன்றும் திருமகளின் வீட்டிற்கு சென்றது. துணிச்சலும், தைரியமும் நிறைந்த தன் மருமகள் அழுவதைத் தாளாமல் தான் அவளை அறைந்ததும்.. ஆனால், அப்போதும் உள்ளுக்குள் உதைப்புதான்.

Advertisement