Advertisement

“நீ முடிவேடு திரு.. என் பொண்டாட்டி எந்த விஷயத்துலயும் தப்பு பண்ணமாட்டா.. நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகே தான்.. ஆனா, என்னை வச்சு முடிவெடுக்காத..”

        “ஒருவிதத்துல உன் அக்கா எனக்கு செஞ்சது நல்லதுதான். அவளாலதான் திரு கிடைச்சிருக்கா எனக்கு. அதுக்காகவே நான் அவளை மன்னிச்சுட்டேன்..”

        “நீயும் எனக்காகன்னு யோசிக்காம, உன் அக்காவை யோசி..” என்றான் அவளுக்கு உணர்த்தும் விதமாக.

        திரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள் பின் தயக்கத்துடன் “நாம போவோமா..” என, மனைவியைக் காதலுடன் அணைத்துக் கொண்டான் வாசுதேவன்.

        “சீக்கிரம் கிளம்புங்க போவோம்..” என்று அவள் விலக,

        “இரு இன்னொரு கடன்காரன் இருக்கானே.. அவனுக்கும் சொல்லிடுவோம்.” என்ற வாசுதேவன் அலைபேசியை எடுத்து ரகுவை அழைக்க,

         “என் தம்பி கடங்காரனா…” என்றாள் திரு.

        “இல்லையா..” என்று சிரித்தவன் மீண்டும் அவளை கையணைப்பில் அமர்த்திக்கொள்ள, அதற்குள் ரகு அழைப்பை ஏற்றிருந்தான்.

         காலையில் இரண்டாம் பாடவேளை ஆசிரியர் வராததால் கல்லூரி கேன்டீனில் அமர்ந்து எதையோ கொறித்துக் கொண்டிருந்தான் அவன். அந்த நேரம் வாசுவின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், யோசனையுடன் தான் ஏற்றிருந்தான்..

      மரியாதையாக “சொல்லுங்க மாமா..” என

     “வாழ்த்துக்கள் ரகு.. உனக்கு மருமகன் பிறந்திருக்கான்..” என நிறுத்தி நிதானமாக வாசுதேவன் கூற, புரையேறி வாயிலிருந்த உணவை வெளியே துப்பியிருந்தான் ரகு..

       இருமிக்கொண்டே “ஒரு மாசத்துல எப்படி..” என்று தனக்குள் சொல்வதாக நினைத்து சத்தமாக சொல்லிவிட,

      “டேய் டாக்டரே..” என்று சிரித்துவிட்டான் வாசுதேவன்.

       “அச்சோ..” என்று மறுமுனையில் ரகுவரன் தலையில் அடித்துக்கொள்ள,

        “உன் கோதை அக்காவுக்கு மகன் பிறந்திருக்கான்..அப்பவும் நீ மாமாதானே..” என்றான் புரியும்படி.

        ரகுவரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், திரு என்ன நினைக்கிறாளோ என்பதும் யோசனையாக இருக்க “சந்தோஷம் மாமா..” என்றதுடன் முடித்துக் கொண்டான் ரகு.

        “என்னடா.. வேண்டாவெறுப்பா சொல்ற மாதிரி இருக்கே..” என்று வாசுதேவன் தொடங்கவுமே, எங்கே முட்டிக் கொள்ள போகிறார்களோ என்ற பயத்தில் அலைபேசியை வாங்கி ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள் திரு.

        ரகுவரன் “அப்படியெல்லாம் இல்ல மாமா.. நிஜமாவே சந்தோஷம் தான்.. ஆனா, அக்காவுக்கு பிடிக்காது. எனக்குமே அவ செஞ்சதெல்லாம் மறக்க முடியல..”

        “என்ன இப்போ.. நல்லாதானே இருக்கா.. அப்படியே இருக்கட்டும்.. நாங்களும் இப்படியே இருந்துட்டு போறோம்..” என்றான் தெளிவாக.

        திரு “ரகு..” என்று நிறுத்த, “நீயும் இருக்கியா பக்கத்துல..” என்று ஆச்சர்யத்துடன் வினவினான் ரகுவரன்.

        “ம்ம்.. நீ கிளம்பி ஊருக்கு வா..” என்றாள் நாச்சியார்.

        “அப்போ துரத்திவிட்ட..”

        “இப்போ நான்தானே கூப்பிடறேன்..”

        “கோதை பாப்பாவை பார்க்க போறோமா..”

        “ஆமா.. இங்கே நிறைய நடந்துடுச்சு ரகு.. இதுக்கு மேல அவளை தனியா விட முடியாது.. அவளுக்கு ஒரு முடிவு பண்ணுவோம். நீ வா..” என்றாள் முடிவாக.

        “நைட் கிளம்புறேன்..” என்று தம்பி கூறவும், “அதுக்குள்ள நான் போய் பாப்பாவை பார்த்துட்டு வரேன்..” என்று தம்பியிடம் கூறியவள் அடுத்த ஒருமணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தாள்.

        கோதை சற்று நேரத்திற்கு முன்பு தான் மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்திருந்தாள். விசாலம் கூடவே இருந்து அவளுக்கு உதவிக் கொண்டிருக்க, ஒரு அன்னை இருந்து மகளுக்கு என்ன செய்வாரோ, அத்தனை உதவிகளையும் செய்தார் அவர்.

       அவரின் மௌனமான உதவிகளில் குறுகிப் போனவளாக அமர்ந்திருந்தவள் இப்போது தங்கையைக் காணவும், தேம்பியழவே தொடங்கிவிட்டாள்.

       திருவுக்கும் அழுகை வரப்பார்க்க, “பிள்ளை பிறந்து ஒருநாள்கூட ஆகல. பச்சை உடம்புக்காரி, எதுக்குடி கண்ணை கசக்கிட்டு இருக்க.. என்ன குடிமுழுகிப் போச்சு இப்ப..” என்று அதட்டி விட்டார் விசாலம்.

       கோதையின் அழுகை அதிகரிக்க “அழாம இரேண்டி… உடம்பு தாங்காது..” என்று பதறியபடி விசாலம் எழுந்து கொள்ள, அழுகையுடன் அவரைக் கட்டிகொண்டாள் கோதை.

        “சரிசரி.. ஒன்னும் இல்ல. என் அம்மா இல்ல.. நடந்ததெல்லாம் போவட்டும்டி.. இப்போ அழாம இரும்மா.. என் ராஜாத்தி இல்ல..” என்று மருமகளை கொஞ்சத் தொடங்கிவிட்டார் அவர்.

     திரு விசாலத்தின் கொஞ்சலில் சிரித்துக்கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டாள். விசாலத்தை நெருங்கியவள் பின்னிருந்து அவரைக் கட்டிக்கொள்ள, இந்தபக்கம் கோதை அணைத்துக் கொண்டாள்.

       “என்னடி பண்றிங்க.. அக்காளும், தங்கச்சியும்..” என்றவர் சுகமாக அலுத்துக்கொள்ள, மருத்துவமனையின் உணவகத்தில் இருந்து உணவை வாங்கிக்கொண்டு அப்போதுதான் உள்ளே நுழைந்தனர் வாசுதேவனும், மனோவும்.

     பெண்களின் நிலையைக்கண்டு சிரித்தபடி இருவரும் அமர்ந்துவிட, விசாலம் “விடுங்கடி..” என்று அதட்டியதில் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து விலகினாள் திருமகள்.

     வாசுதேவன் பார்வை காதலாக அவள்மீது படிய, கோதையின் அருகில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் நெருங்கினாள் அவள். புதிதாக பூத்த ரோஜாவைப் போல் பிங்க் வண்ணத்தில் கண்களை சிமிட்டினான் கோதையின் மகன்.

       மெல்ல அவனைக் கைகளில் தூக்கிக்கொண்டவள் வாசுதேவனின் அருகில் வந்து அமர்ந்துகொள்ள, “தேங்க்ஸ்..” என்றான் மனோ.

       “அவரை ரெண்டு வைங்க மாமா..” என்றாள் சிரிப்புடன்.

        வந்தது முதலே அவளாக கோதையிடம் பேசவே இல்லை திருமகள். கோதை அவ்வபோது அவளை ஏக்கமாகப் பார்த்தாலும், அவள் மகனை தூக்கிக் கொண்டதில் லேசாக மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள்.

        வாசுதேவனும், திருமகளும் பிள்ளையைக் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருந்த நேரத்தில், மனோகரின் தாயும் வந்துவிட, திருமகளின் கையில் தன் பேரனைப் பார்க்கவுமே கொதித்துவிட்டார் ஈஸ்வரி.

      மேலும் வாசுதேவன், அவனின் தாய் என்று அத்தனைப்பேரும் அங்கிருப்பதைக் கண்டவர் “என்னடா புது உறவெல்லாம் கிடைச்சுருச்சு போல.. இதனாலதான் பெத்தவளை மறந்துட்டியா..” என்றார் குத்தலாக.

       “நேத்து ராத்திரி நான் போன் போட்டதுக்கு, விடிஞ்சு பத்து மணிக்கு வந்து நிற்கிறிங்க. இதுல நான் உங்களை மறந்துட்டேனா… ஏன்மா தேவையில்லாத பேச்சு.. பிள்ளையை பார்க்கனுமா பார்த்துட்டு போங்க. இல்ல, சண்டைக்கு தான் கிளம்பி வந்திங்கன்னா, அதுக்கு இது இடம் இல்ல. வெளியே போங்க..” என்றுவிட்டான் நேரடியாக.

          “உன்னை பத்து மாசம் சுமந்து பெத்ததுக்கு நல்ல நன்றியோட இருக்கடா மனோ. நான் வெளியே போகணும். இந்த குடியைக் கெடுத்தவ என் பேரனை கொஞ்சிட்டு இருக்கனுமா…” என்றவர் கோதையிடம் “சும்மா சொல்லகூடாதுடியம்மா.. நல்லா முடிஞ்சு வச்சிருக்க என் மகனை..” என்று வெறுப்புடன் கூற,

       “நல்லதே பேச வராதாம்மா உங்களுக்கு..” என்று மனோ ஒருபுறம் பேச, “உங்க மகனோட சண்டைன்னா, அவரைப் பேசுங்க.. எதுக்கு அவளை இழுக்கறிங்க..” என்று திருவும் குறுக்கிட்டாள்.

        “திரு..” என்று வாசுதேவன் மெல்ல அவளை அடக்கப் பார்க்க,

       “வாயைத் திறந்த..” என்பதுபோல் மிரட்டலாக அவனை ஓர் பார்வை பார்த்தாள் திருமகள். அதற்குமேல் வாசுதேவன் ஏன் வாய் திறக்கிறான்..??

       ஈஸ்வரி “உன்கிட்ட எனக்கென்னடி பேச்சு.. நான் என் பிள்ளைகிட்ட பேசிட்டு இருக்கேன்..” என

       “நானும் அதைத்தான் சொல்றேன்.. உங்க பிள்ளையை மட்டும் பேசுங்க..” என்றாள் அழுத்தமாக.

       “இத்தனை நாள் எங்கேடியம்மா போயிருந்த.. இப்போதான் ஓடிப்போன உன் அக்கா கண்ணு தெரியறாளா..”

        “உங்க மகன் இங்கேதானே நிற்கிறாரு.. கேட்டு பாருங்க.. கண்டிப்பா அவளா ஓடியிருக்க மாட்டா. இவர் இழுத்துட்டு போயிருப்பார். அதோட உங்க சாயமெல்லாம் வெளுக்கட்டும்னு தான் இத்தனை நாளும் காத்திருந்தேன்.” என்று திருவும் சரிக்கு சரியாக திரும்ப கொடுத்தாள்.

        “என்னடி வாய் நீளுது.. எங்கே வந்து யார் அதிகாரம் பண்றது.?”

        “ஏன் இந்த ஹாஸ்பிடலை எதுவும் விலை கொடுத்து வாங்கியிருக்கிங்களா.. அன்னைக்கே கோவில்ல இவரால தப்பிச்சுட்டிங்க.. இங்கே வார்த்தை எதாவது வரம்பு மீறுச்சு.. அப்போ தெரியும் திரு யாருன்னு..”

        “ஏன் என்ன பண்ணிடுவ என்னை..”

        “அம்மா.. சின்னபொண்ணு அவ.. சரிக்கு சரியா பேசி உங்க மரியாதையை நீங்களே கெடுத்துக்காதிங்க.. கிளம்புங்க..” என்று மகனும் விரட்ட, உடனே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ஈஸ்வரிக்கு.

       “உனக்கு பெத்தவ வேண்டாதவளா போயிட்டேன்ல..” என்று மகனை அவர் நெருக்க,

       “நீ என் பிள்ளையைப் பார்க்க வந்த மாதிரி தெரியல.. கிளம்பும்மா..” என்றான் மனோ..

     “பாவி.. என் பிள்ளையை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டியே.. நீ நல்லா..” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்

         “அம்மா..” என்று சத்தமாக அதட்டிவிட்டான் மகன்.

    “மரியாதையா வெளியே போயிடு. உன் உறவே வேணா எங்களுக்கு.. எங்கேயோ கண்காணாம போயிடுறோம்.. எங்களைத் தேடி வராதிங்க..” என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டான் மனோகர்.

     பிள்ளை பெற்று படுத்திருப்பவளை பேசியதை தாங்க முடியவில்லை அவனால். ஈஸ்வரி இன்னும் அவர்கள் முன்பு அசிங்கப்பட விரும்பாமல் “என்னைக்கு இருந்தாலும் எங்ககிட்ட தான் வந்தாகணும்டா.. என் பேரன் அவன்..” என்று கூறி வெளியேறிவிட்டார்.

     அவர் வெளியேறவும், கோதை கண்ணைக் கசக்க “தகுதியே இல்லாதவங்களுக்காக நீ ஏன் அழுதுட்டு இருக்க.. பிள்ளை பெத்தது மறந்து போச்சா உனக்கு..” என்று அக்காவையும் அதட்டி வைத்தாள் அவள்.

      நேரம் செல்ல செல்ல அந்த அறையில் இருந்தவர்கள் மெல்ல இயல்புக்குத் திரும்ப, விசாலத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு தான் இருந்து கொண்டாள் கோதையுடன்.

       மாலையில் மீண்டும் விசாலம் வரவும், அவரை மருத்துவமனையில் விட்டு வீடு வந்தவள் காலையிலிருந்து யோசித்து வைத்திருந்ததை கணவனிடம் கூறி யோசனை கேட்க, அவள் கூறியதில் மகிழ்ந்தவனாக அவளைக் கட்டிக்கொண்டு கொண்டாடி தீர்த்தான் கணவன்.

Advertisement