Advertisement

மாலை வேளையில் கோவிலில் பூஜை முடித்து மாகாளி தேரில் ஊரை வலம் வந்து பூக்குழியின் முன்னே இருந்த சிம்ம வாகனத்தின் மீது அமர்த்தப்பட, கோவிலின் பூசாரியின் மீது சாமி அழைக்கப்பட்டு அவர் உத்தரவு கொடுக்கவும், தீமிதி தொடங்கியது.

ஊரின் பெரியவர்கள், கோவில் நிர்வாகிகள், மற்ற ஆண்கள் என்று அத்தனைப் பேரும் வரிசையாக இறங்க, வாசுதேவன் தன் அன்னை மற்றும் மனைவியுடன் தான் நின்றிருந்தான். மற்றவர்கள் அழைத்தபோதும், தலையை அசைத்துவிட்டு நின்ற இடத்திலேயே நின்றிருக்க திருமகள் கூட “நீங்க போங்க மாமா..” என்றாள்.

ஆனால், அவளிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தான் வாசுதேவன். கூட்டம் சிறிது குறையவும், விசாலம் முன்னே வந்தவர் எதிரில் இருந்த காளியம்மனை கண்களில் நிரப்பிக் கொண்டே நிதானமாக நடந்து கடந்துவிட்டார் அந்த தீ கங்குகளை.

வெகு சாதாரணமாக அவர் கடந்துவிட, அவருக்கு பின்னே நின்றிருந்த திருமகளுக்கு அப்போதுதான் லேசாக பயம் வந்தது. கனன்று கொண்டிருந்த தீக்கங்குகளைக் கண்டு சற்று பயத்துடனே அவள் முன்னே வர, அவளை உணர்ந்தவனாக அவள் பின்னிருந்து அவள் கைப்பற்றினான் வாசுதேவகிருஷ்ணன்.

கணவனைத் திரும்பி பார்த்தவள் லேசாக முகம் மலர, “வா..” என்று தலையசைத்து அவள் கையை விடாமல் வெகு கவனமாக அவளுடன் சேர்ந்தே தீயில் இறங்கினான் வாசுதேவன். மனம் முழுவதும் எதிரில் இருந்த அன்னையிடம் லயித்துப் போக, வெகு கவனமாக கடந்து வந்தனர் கணவனும் மனைவியும்.

ஊரே அவர்களை வாயில் கையை வைத்து வேடிக்கைப் பார்க்க, அன்றைய திருவிழாவின் முக்கிய செய்தியே இவர்கள்தான். சுற்றி இருந்த இளைஞர்கள் “வாசுண்ணா..” என்று சத்தமாக கத்தி வாசுதேவனை கலாட்டா செய்ய, திருமகள் கணவனின் செயலில் முகம் சிவந்தவளாக சென்று விசாலத்தின் அருகே நின்றுகொண்டாள்.

அவர் மகனையும், மருமகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்துவிட, உள்ளே கருவறையில் அம்மனை வணங்கி முடித்து கோவிலை வலம் வரவும், இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்துவிட்டார் அவர்.

வீட்டில் விளக்கேற்றி அவர் வேண்டுதலை முடித்த சிறிது நேரத்திற்கெல்லாம் வாசுதேவன் வேலை என்று மீண்டும் கோவிலுக்கு கிளம்பிவிட, இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தனர் வீட்டில்.

காலையில் இருந்து விரதம் இருந்ததால் மருமகளை அமரவைத்து உணவு பரிமாறியவர் அவள் உண்ணாமல் அமர்ந்திருப்பதை கவனித்து “உன் புருஷனை அவன் அப்பா கவனிச்சுப்பாரு.. நீ சாப்பிடு..” என்றார் மருமகளிடம்.

“நானும் கோவிலுக்கே போகவா.. அவரோட சாப்பிட்டுக்கறேன்.” என்று அவள் வழி சொல்ல,

“காலெல்லாம் பொத்துப் போய்டும் நாச்சி.. அடம்பிடிக்காம சாப்பிட்டுட்டு போய் கொஞ்ச நேரம் படு. இன்னைக்கு பெருசா ஒன்னும் வேலையிருக்காது. உன் புருஷன் சீக்கிரம் வந்திடுவான்..” என்று அவளை சமாளித்து அனுப்பி வைப்பதற்குள் ஒருவழி ஆகிவிட்டார் விசாலம்.

அப்போதும் அரைகுறையாகத் தான் உண்டு முடித்து தங்கள்  அறைக்கு சென்றாள் திருமகள்.

காலையிலிருந்து உண்ணாமல் இருந்ததும், பந்தியில் நின்றுகொண்டே இருந்ததும் உடலை சோர்வுறச் செய்திருக்க, படுத்த சில நிமிடங்களில் தன்னை மீறி உறங்கிப் போனாள் திருமகள்.

வாசுதேவன் பதினோரு மணி அளவில் வீடு வர, கோவிலில் உணவை முடித்துக் கொண்டதால் நேரே அறைக்குள் நுழைந்தான் அவன். மனைவி அலண்டு போனவளாக உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, அவள் காலடியில் அமர்ந்து அவள் பாதங்களை முதலில் சோதித்தான் வாசுதேவன்.

காலில் பெரிதாக காயம் என்று எதுவுமில்லாமல் போனாலும், நன்றாக சிவந்து போயிருந்தது. அவனுக்கே காலில் சிறிது எரிச்சல் இன்னும் மீதமிருக்க, அவளுக்கு வலி இருக்காதா என்று எண்ணமிடும்போதே அவள் வலியை உணர்ந்தான் அவன்.

கைகள் லேசாக அவள் பாதங்களை வருடிக் கொடுத்தான். சிறிது நேரம் அப்படியே இருந்தவன் பின் சமையலறை சென்று சிறிது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வந்து அவள் பாதத்தில் இதமாக தேய்த்துவிட தொடங்கினான். அவன் வருடல் தந்த கூச்சத்தில் திருமகள் அசைந்து எழுந்துவிட, காலடியில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் எழுந்து அமர்ந்துவிட்டாள்.

அவன் கையிலிருந்த கிண்ணத்தைக் கண்டதும் “என்ன ஆயில் மசாஜா..” என்றாள் சிரிப்புடன்.

“காலெல்லாம் சிவந்து போச்சு திரு.. உனக்கு விளையாட்டா இருக்கா.. இனி ஏதாவது வேண்டுதல்ன்னு சொல்லிப்பாரு..” என்று வாசுதேவன் மிரட்ட, அவன் மிரட்டலை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனை நெருங்கி மொத்தமாக அட்டையைப் போல் அவனுடன் ஒட்டிக் கொண்டாள் திருமகள்.

வாசுவுக்கும் அவளின் அணைப்பு தேவையாக இருக்க, அவனும் காதலாக அணைத்து கொண்டான் மனைவியை. அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கட்டிலில் கால் நீட்டியபடி அமர்ந்து கொண்டவள் “எவ்ளோ நாளாச்சு மாமா.. என் புருஷனை கட்டிக்க கூட விசாலத்துக்கிட்ட பெர்மிஷன் வாங்கணும்…உப்ப்” என்றபடி அவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட, அவள் மூச்சு ஏறி இறங்கியதில் தகிக்க தொடங்கினான் வாசுதேவ கிருஷ்ணன்.

“அநியாயத்துக்கு பேசறடி..” என்றபடி அவள் இதழ்களை இரண்டு விரல்களால் அவன் சுண்டிவிட,

“வலிக்குது மாமா..” என்றாள் திரு.

“வலிக்கட்டும்… என்னை அடிப்பியா நீ.. ஒரு வாரமா என்னை என்ன பாடு படுத்தின..” என்றவன் மீண்டும் அவள் இதழ்களை அழுத்தமாக  பிடித்துக் கொண்டான்.

“ம்ச்..” என்று அவன் கையைத் தட்டிவிட்டவள் “வலிக்குதுப்பா..” என்று மீண்டும் அவனுடன் ஒட்டிக்கொள்ள, “குளிக்கணும் திரு.. குளிச்சுட்டு வரேன்..” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.

“எனக்கு தூக்கம் வருது..” என்றவள் முகத்தை அழுத்தமாக பதிக்க,

“நீ படுத்துக்கோ.. நான் குளிச்சுட்டு வரேன்..”

“ம்ச்.. காலையில குளிச்சா என்ன.. என்னை தூங்க வைங்க.” என்றவள் அவனை விடுவதாக இல்லை. அவள் அரைத்தூக்கத்தில் இருப்பது வாசுதேவனுக்கும் புரிய, அவளை அணைத்தபடியே அவன் அமர்ந்துவிட, மீண்டும் பத்து நிமிடங்களில் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் அவள்.

வாசுதேவனுக்கும் உடல் அசதியாக இருக்க, அதற்குமேல் எழுந்து சென்று குளிக்க மனம் வராமல் அவளை அணைத்தபடியே தானும் உறங்கிப் போனான் அவன்.

இருவருக்குமே அடுத்தவர் அணைப்பு அப்படி ஒரு இதத்தை கொடுக்க, அந்த அணைப்பே போதுமாக இருந்தது. அத்தனை நாள் பிரிவுக்குப் பின்னும் அந்த ஒற்றை அணைப்பில் இதம் காணத் தெரிந்திருந்தது அந்த காதலர்களுக்கு.

இவர்கள் இருவரும் தங்களை மறந்து உறங்கி கொண்டிருக்க, அதிகாலை மூன்று மணி அளவில் வாசுதேவகிருஷ்ணனின் அலைபேசி அலறியது.

முதல் முறை முழுவதும் அடித்து ஓய்ந்த அலைபேசி இரண்டாம் முறையும் விடாமல் அடிக்க, லேசாக உறக்கம் கலைந்தவன் அலைபேசியின் இடைவிடாத சத்தத்தில் முழுதாக விழித்துக் கொண்டான். திரு உறக்கத்திலேயே இருக்க, வேகமாக அலைபேசியை எடுத்து சத்தத்தை குறைத்தபடியே யார் எனப் பார்க்க, அழைப்பு மனோகரிடம் இருந்து.

நேரத்தைப் பார்த்தவன் உடனே அழைப்பை ஏற்க, “வாசுண்ணா..” என்ற பதட்டமான குரலில் “சொல்லு மனோ..” என்றான் வாசுதேவன்.

“கோதை வலிக்குதுன்னு சொல்றாண்ணா.. பயமா இருக்கு..” என்றவன் குரலில் முழுதாக பயம் பரவியிருந்தது.

வாசுதேவன் அவன் பேச்சில் பதறி, நெஞ்சில் இருந்தவளை தலையணையில் சாய்த்து படுக்க வைத்து அறையை விட்டு வெளியே வந்தான். அவனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை முதலில். பெண்கள் இல்லாமல் ஒன்றும் முடியாது என்பது வரை புரிய, மனைவி மீது இருந்த பயத்தில் அவளை எழுப்பாமல் நேராக சென்று விசாலத்தை எழுப்பினான் வாசுதேவகிருஷ்ணன்.

விசாலம் எழுந்து வரவும், அவரிடம் விஷயத்தைக் கூற, கோதையின் மீது கோபம் இருந்தாலும் யோசிக்கவே இல்லை அவர். உடனே கிளம்பிவிட்டார். அவருக்கும் பதட்டத்தில் மருமகளைப் பற்றி யோசனை வரவில்லை.

அவரும் அவசரமாக கிளம்பி மனோவின் வீடு வர, கோதையைப் பார்த்ததுமே பிள்ளை வலி தான் என்று தெரிந்து போனது விசாலத்திற்கு. அவசரமாக காரில் ஏற்றி மூவரும் மருத்துவமனைக்கு வர, அடுத்த ஒருமணி நேரத்திற்கெல்லாம் மனோவின் மகன் பிறந்துவிட்டான்.

மகனை கையில் வாங்கக்கூட தெம்பில்லாதவனாக ஓய்ந்து போனான் மனோகர். இந்த இரண்டுமணி நேர போராட்டம் வாழ்க்கையைப் புரிய வைத்திருக்க, இன்னுமின்னும் வாசுதேவனுக்கு நன்றியுடையவனான் அவன்.

குழந்தையை வாங்கவே அவன் தடுமாற, விசாலம் தான் வாங்கி கொண்டவர் குழந்தையின் அழகில் தன்னை மறந்து நின்றுவிட்டார். அதன்பின்னும் சில மணி நேரங்கள் அன்னையும் மகனும் மனோகருடன் இருக்க, காலை வழக்கமான நேரத்திற்கு எழுந்து கொண்ட திருமகள் கணவனைக் காணாமல் அவனுக்கு அழைப்பு விடுக்கவும்தான் அவள் நியாபகம் வந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு.

அவள் அழைப்பைப் பார்த்தவன் நொடியும் தாமதிக்காமல் விசாலத்தைக் கூட அழைக்காமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். இனி அவளுடன் சண்டை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது என்ற உறுதியுடன் அவன் வீடு வர, அதற்குள் ராகவன் வழியே விஷயம் தெரிந்துவிட்டது திருமகளுக்கு.

Advertisement