Advertisement

நெஞ்சம் பேசுதே  25

       திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி செய்து கொண்டிருக்கிறாள் திருமகள்.

       இன்னும் அரைமணி நேரத்தில் கோவிலின் வாசலில் தீமிதித்தல் நடைபெற இருக்க, ஊர் மொத்தமும் கோவில் வாசலில் தான் இருந்தது. விசாலம் நான் தீயில் இறங்கியே தீருவேன் என்று நிற்க, அவருக்கு சரியாக “எனக்கும் வேண்டுதல் இருக்கு.. நான் அத்தையோட போறேன்.” என்றாள் மருமகள்.

        “நீங்க ரெண்டு பேருமே தீயில் இறங்க வேண்டாம். இரண்டு பேருக்கும் சேர்த்து நான் இறங்கறேன்..” என்று வாசுதேவன் கூறியது அவர்கள் காதில் ஏறவே இல்லை.

       யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை எனவும், “அந்த அம்மா மேல பாரத்தைப் போட்டு மூணு பேருமே இறங்குங்க…” என்றுவிட்டார் ராகவன்.

       “நீங்களும் எங்களோட வாங்களேன் மாமா.” என்று துடுக்காக மருமகள் அழைக்க,

       “நான் அதுக்கான ஆள் இல்ல மருமகளே… நம்மால இதெல்லாம் முடியாது.. நீ உங்க அத்தையை இழுத்துட்டு போ..” என்றார் சிரிப்புடன்.

       “நீங்க இறங்கிட்டாலும்..” என்று விசாலம் நொடித்துக் கொள்ள,

        “நான் ஏண்டி இறங்கனும்.. என் பொண்டாட்டி தான் எனக்காக வேண்டிட்டு வருஷாவருஷம் தீ மிதிக்கிறாளே… அது போதாது.. அவ வேண்டுதலுக்கே இன்னும் நூறு வருஷம் நல்லா இருக்கணும் நான்..” என்று கர்வமாக கூறியவர் காதலாக மனைவியை ஏறிட, “ம்க்கும்..” என்று தொண்டையைச் செருமினாள் மருமகள்.

           மருமகளின் கிண்டலில் “அங்கே வேலை கிடக்கு.. நாம நின்னாதான் சரியா வரும்… நீங்க பேசிட்டு வாங்க..” என்றபடியே ஓடிவிட்டார் ராகவன்.

       அவர் நகரவும் வாசுதேவன் திருமகளின் காதைப் பற்ற, அப்போதும் விசாலம் அறியாமல் உதட்டைக் குவித்துக் காட்டி அவனை மிரட்டினாள் மனைவி.

      பட்டென அவள் காதிலிருந்து கையை எடுத்துக் கொண்டாலும் “இன்னிக்கு பொழுது முடியட்டும்டி பேசிக்கிறேன்..” என்று அவள் காதோடு கதைப் பேசிவிட்டு நகர்ந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

       அவன் பேச்சில் திருமகள் முகம் சிவந்து நிற்க “என்னடி கூத்தா இருக்கு… பொழுது சாஞ்சதும் பூக்குழி இறங்கப் போறோம்ன்னு ஒரு பயம்மிருக்கா உனக்கு..”

       “அவன் காதுல ஏதோ ஓதிட்டு போறான்.. நீயும் குழைஞ்சிகிட்டே நிற்கிற. என்னவோ சரியாவே இல்ல நீங்க ரெண்டு பேரும். ஏய் நாச்சி.. சுத்தபத்தமா தானே இருக்க.. அத்தைகிட்ட மட்டும் உண்மையைச் சொல்லிடுடி..”

       “நான் ஆத்தாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உனக்கும் சேர்த்து நானே வேண்டிட்டு வரேன்.. நீ பூக்குழி எல்லாம் இறங்க வேண்டாம்.. வீட்டுக்கு போய்டும்மா…” என்று அவர் பதட்டதுடன் பேசிக் கொண்டிருக்க, அவர் பேசி முடிக்கவும்,

       “உனக்கு எதாவது புத்தி இருக்கா.. ஒரு மருமககிட்ட பேசற பேச்சா பேசுற நீ..” என்று வெட்கத்துடன் அதட்டினாள் திருமகள்.

       “அடியேய்.. நீ என்னைக்குடி என்னை மாமியாவா நினைச்சு பேசியிருக்க.. அதெல்லாம் பேச்சில்ல இப்போ… நீ சுத்தபத்தமா தான் இருக்கியா.. உன் முழியே சரியில்லையே..” என்று அப்போதும் அவர் சந்தேகிக்க

        “உன்னால என் ரூமுக்கு கூட போறதில்ல நான்.. இதுக்கு மேல என்ன செய்ய சொல்ற நீ… இன்னும் எப்படி சுத்தபத்தமா இருக்கறதாம்..”

        “நீ ரூமுக்கு போனா என்ன.. போகாட்டா என்ன.. அதுதான் என் பிள்ளையை மாட்டுத் தொழுவத்துக்கு இழுத்துட்டு போயிட்டியே…” என்று அவர் முறைக்க, அவர் பேச்சில் திடுக்கிட்டு நின்றாள் திருமகள் நாச்சியார்.

       “உங்களுக்கு எப்படி தெரியும்..” என்று மாட்டிக் கொண்டவளாக விழிக்க,

        “எப்படியோ தெரியும்.. நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..”

       “என்ன பதில் சொல்லணும்.. அதெல்லாம் சுத்தமா தான் இருக்கேன்..”

      “அப்புறம் ஏண்டி அவனை தொழுவத்துக்கு இழுத்துட்டு போன..”

       “என் மானத்தை வாங்காத அத்தை… எங்களை எப்போ பார்த்த நீ.. நான் திண்ணையிலேயும் அவர் கட்டிலையும் தானே இருந்தோம்.. அதைப் பார்க்கலையா..” என்றவள் கணவனைப் போலவே கண்களை உருட்டி மாமியாரையும் மிரட்ட,

       “பார்த்தேன்தான்.. ஆனாலும் ஒரு சந்தேகம்.. உன் போக்கே சரியில்லையா.. அதான்..” என்று விசாலம் இழுக்க, அவரை கண்டனமாகப் பார்த்தாள் மருமகள்.

       “சரிசரி.. கோவிச்சுக்காத. அத்தை உன் நல்லதுக்கு தானே கேட்டேன்..” என்று விசாலம் இறங்கி வர,

        “நல்லா கேட்ட நீ.. என்னைய பார்த்தா எப்படி தெரியுது உனக்கு..” என்று சண்டைக்கு நின்றாள் திருமகள்.

        “தெரியாம கேட்டுட்டேன்டி..” என்று அவர் சரணடைய, அதன்பின்பும் கூட அவரை முறைத்தபடியே தான் வலம் வந்தாள் அவள்.

         அன்று நடந்த சண்டை மற்றும் சமாதானத்திற்கு பின் திருமகள் நாச்சியாரின் இரவுகள் வீட்டின் பின்கட்டு திண்ணையில் தான் கழிந்தன. இருவருக்குமே மற்றவர் மீதான காதலும், தேடலும் மிகுந்திருக்க, அறையில் இருவரும் தரித்திருப்பதை யோசிக்கவே முடியவில்லை திருமகளால்.

          அதற்காக விசாலத்துடன் படுத்துக்கொள்வதும் சரியாகத் தோன்றவில்லை. ராகவன் இரவில் தினமும் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் மனிதர். அவரை அறையில் தனியே விட்டு விசாலம் தன்னுடன் வந்து படுத்து கொள்வதை ஏற்க முடியாமல் “நீ போ அத்தை.. நான் உள்ளே படுத்துக்கறேன்..” என்று இரண்டாம் நாளே அவரை அறைக்கு அனுப்பிவிட்டாள் திருமகள்.

           விசாலத்திற்கும் கணவரின் உடல்நிலை குறித்த கவலை இருந்ததால், அவரும் பெரிதாக மறுக்காமல் சென்று அறையில் படுத்துவிட, அதன்பின்னான அவளின் இரவுகள் வீட்டின் இரண்டாம் கட்டில் தான். அன்று வாசுதேவன் தூக்கி வந்து திண்ணையில் அமர்த்தியது முதல் பின்கட்டின் திண்ணையில் படுத்து கொள்வதை அவள் வழக்கமாக்கிக் கொள்ள, வாசுதேவன் அவள் தனியே படுத்திருப்பதை விரும்பாமல் தானும் துணைக்கு வந்து படுத்துக்கொண்டான்.

           தொழுவத்தில் இருந்த கயிற்றுக் கட்டிலை அவன் உபயோகித்துக் கொள்ள, அவர்கள் இரவுகளின் நீளம் மிக அதிகம். கையெட்டும் தூரத்தில் படுத்திருந்தாலும், இருவருமே எல்லை மீறியதில்லை. அன்றைய நாளுக்குப் பின் பேச்சில் கூட திரு அத்தனை கவனமாக இருக்க, தங்களின் தனிமையான நேரங்களில் வாசுதேவனை சீண்டவே மாட்டாள்.

          பேச்சுகூட பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றியே இருக்கும். வாசுதேவனுக்கும் அவள் தவிப்பு புரிய, தள்ளியே நின்றான் அவனும். இரவு முழுவதும் நிலவின் வெளிச்சத்தை துணையாக கொண்டு தன்னிலவோடு நடத்தும் அந்த உரையாடல்கள் மட்டுமே போதுமாக இருந்தது வாசுதேவனுக்கு.

           இரவு முழுவதும் அவளுடன் படுத்திருந்தாலும், அதிகாலை விடிவதற்கு முன்பே எழுந்து அறைக்கு சென்றுவிடுவான் அவனும். எப்போதுமே வீணான பேச்சுகளை தவிர்க்க நினைப்பவன்தானே. யாருக்கும் காட்சியாக வேண்டாம் என்றே கவனமாக தான் இருப்பான்.

          ஆனாலும், எப்படியோ விசாலத்தின் கண்களில் இருவரும் பட்டுவிட, அதை வைத்து தான் பதறிவிட்டார் அவர். அதுவும் திருமகளின் நிறைந்த முகமும், காதலான அவள் பார்வைகளும், புன்னகையும் மனதிற்கு இதமாக இருந்தாலும் அவர்களின் வயதை நினைத்து உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே தான் இருந்தது.

           இன்று மாலை தீயில் இறங்குவதாக இருக்கவும், அந்த மாகாளியின் மீது இருந்த பயத்தில் மருமகளை நேரடியாகவே கேட்டு விட்டார். திருமகள் கொடுத்த பதிலில் நிம்மதியாக உணர்ந்தாலும் “ஆத்தா.. என் பிள்ளைங்க தெரியாம எதுவும் தப்பு செஞ்சிருந்தா கூட மன்னிச்சுடும்மா.. தண்டிச்சுடாத..” என்று மனதிற்குள் வேண்டியபடியே அவர் கோவிலை சுற்றிவர, அவர் மருமகள் அன்னதானம் நடைபெறும் இடத்தில் நின்று பொறுப்பாக மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.

               கோவிலுக்கு வெளியே பூக்குழிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, வாசுதேவன் அங்கு நின்றிருந்தான். அவனுடன் இன்னும் சில இளைஞர்கள் நின்றிருக்க, வாசுதேவன், சாரதியின் வழிகாட்டுதலில் அவன் சொன்ன வேலைகளை பொறுப்பாக செய்து கொண்டிருந்தனர் அவர்கள்.

               பூக்குழிக்கான நேரம் நெருங்க, நெருங்க ஒருவித பதட்டத்துடனே சுற்றிக் கொண்டிருந்தான் வாசுதேவன். அவன் அன்னைக்கு இது பழக்கம் தான். என்ன சொன்னாலும் காதில் வாங்கமாட்டார் அவர். ஆனால், திருமகள் அப்படி இல்லையே. திருவிழாவிற்கே பெரிதாக முன்னே வந்து நிற்கமாட்டாள் அவள்.

              பிறகெங்கே, பூக்குழி இறங்குவது. அவள் அன்னையும், தந்தையும் இறந்தது முதலே பெரிதாக ஊருக்குள் வளைய வரமாட்டாள். திருவிழாவின் போதும் வரியை சரியாக கட்டிவிட்டாலும், கோவிலுக்கு பெரிதாக வரமாட்டாள். முதல் நாள் அவள் தம்பியின் பெயரில் ஒரு அர்ச்சனை. அவ்வளவு தான் அவளின் வேண்டுதல்.

             அப்படிப்பட்டவள் இன்று வேண்டுதல் என்று அடம்பிடித்து நிற்கவுமே, இது தன்னை வைத்து தான் என்று உணர முடிந்தது வாசுதேவனால். அவளின் காதல் கர்வமாக உணர வைத்தாலும், இத்தனை கடுமையான வேண்டுதல்கள் தேவையா என்று கோபமும் எழுந்தது மனைவியின் மீது.

            அவள் தீயில் இறங்குவதால் தான் அவனும் இறங்க முடிவெடுத்தான். எப்போதுமே கடவுளிடம் பெரிதாக எதையும் கேட்டு பழக்கம் இல்லை அவனுக்கு. வேண்டுதல் எதுவும் இல்லாமல் நேர்த்திக்கடனுக்கு என்ன வேலை.

           இதோ இப்போதும் மனைவி தீயில் இறங்குகிறேன் என்று நின்றதால் மட்டுமே, அவனும் வேகமாக மாகாளியிடம் வேண்டுதல் வைத்துவிட்டான். “அவளோட காதலுக்கு நான் தகுதியானவனா தெரியலம்மா எனக்கு. எப்பவும் நான் அவளுக்கு துணையா இருக்கணும்.. எங்க வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுக்கொடு காளியம்மா…” என்று காலையில் வேண்டிக் கொண்டவன் மாலையில் தீமிதிக்க தயாராகி விட்டான்.

Advertisement