Advertisement

நெஞ்சம் பேசுதே 24

                  கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பியிருந்தது வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம். ராகவனும், விசாலமும் கிளம்புகையிலேயே, அவர்களுடன் தானும் வீடு திரும்பிவிட்டாள் திருமகள் நாச்சியார். கடைசி சில மணி நேரங்களாக வாசுதேவகிரிஷ்ணனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவள்.

                 கோபம் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது. இத்தனை நாள் அவனது சமாதானங்களையும், சமாளிப்புகளையும் ஏற்றுக் கொண்டவளால் அன்று மாலை நிகழ்வுகளை ஏற்கமுடியவில்லை.

                 “என்ன பேசிவிட்டார்.” என்று ஈஸ்வரியின் மீது கோபமிருந்தாலும், குடும்பத்திற்கே இந்த குணம்தான் என்று அவரை இப்போது தவிர்க்க முடிந்தது. ஆனால், அந்த இடத்தில் கூட அளந்து தான் பேசுவேன் என்று அடம்பிடித்து நிற்பவனை எந்த வகையிலும் அவளால் விட்டுவிட முடியவில்லை.

                அவன் அளவு பொறுமை கைவர வில்லையா… இல்லை தனது எதிர்பார்ப்புகள் எல்லைகள் விரிந்து கிடக்கிறதா.. என்று புரியவே இல்லை அவளுக்கு. இதோ இப்போதும் “பேசாதே..” என்று அவன் முகம் பார்த்து கூறிவிட்டாலும், சொன்ன கணம் முதலாகவே அவளது தவிப்பு தொடங்கிவிட்டது.

               யாருக்காகவும் வாயைத் திறந்து பேசாதவன் அவன். ஏன் அவளிடமே கூட மௌனவிரதம் காத்தவன் தானே.. அப்படிப்பட்டவன் ஓரளவு இயல்பாக இருப்பதே திருமகளின் அருகாமையில் தான். இயல்பாக அவனை மீறி வார்த்தைகள் வெளிப்படுவதும் அவளிடம் தான்.

             அப்படியிருக்க, “பேசாதே..” என்ற தன்னுடைய வார்த்தைகள் எத்தனை வலி கொடுக்கும் அவனுக்கு என்று சிந்திக்கையில் உள்ளம் தானாகவே உருகியது. இதோ நேரம் நள்ளிரவைக் கடந்தபின்பும் வீடு வந்து சேராமல், கோவிலில் தவம் இருப்பவனை தான் வேறு தன் பங்கிற்கு வருத்திவிட்டு வந்தோமே என்று உள்ளம் கிடந்து தவித்தது.

              எப்போதும் யாருக்காகவோ சண்டையிட்டு நிற்கும் தங்கள் நிலை பெரிதும் வருத்தியது பெண்ணவளை. “உனக்கு அவனைத் தெரியாதா..” என்று உள்ளிருந்து உள்ளம் கேள்வியெழுப்ப, “இல்லை..” என்று மறுக்க முடியவில்லை அவளால். அவன் இப்படித்தானே… தெரிந்ததுதானே விருப்பம் கொண்டாய், இப்போது ஏன் வீம்பு என்று நெஞ்சம் அடித்துக் கொள்ள, கண்கள் வாசலையே நோக்க தொடங்கியிருந்தது.

               அவன் இன்னும் வீடு வந்து சேராததற்கும் தன்னையே காரணமாக்கிக் கொண்டவள் நொந்து அமர்ந்திருக்க, இரவு முடியும் நேரம்தான் வீடு வந்தான் வாசுதேவன்.

                விசாலம் பொறுமையாக சொல்லிப் பார்த்தார் தான். ஆனால், திருமகள் பிடிவாதமாக அமர்ந்திருக்க, அவளை அவள் வழியில் விட்டு தான் சென்று உறங்கியிருந்தார்.

                  இதோ வாசுதேவகிருஷ்ணன் வாயில்கதவைத் திறந்து உள்ளே நுழைய, சோர்ந்த முகத்துடன் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த அவன் மனைவி நிமிர்ந்து எழுந்து நின்றாள்.

             வாசுதேவன் “தூங்காம என்ன பண்றா..” என்று விழித்து நிற்க, “திரும்பவும் சண்டையா..” என்றும் கவலையாக உணர்ந்தது உள்ளம். அவளின் முகமும் மொத்தமாக சோர்ந்து காணப்பட, அப்படியே அவளை விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை.

             “என்ன திட்டினாலும் வாங்கிக் கொள்வோம்..” என்று தன்னை திடப்படுத்திக் கொண்டு அவன் திருமகளை நெருங்க, அசையாமல் அவனை விழிகளில் நிறைத்திருந்தாள் அவள். வாசுதேவன் திருமகளை சமீபிக்கவும், பேசுவதா வேண்டாமா என்று தயங்கி நிற்க, தான் நின்ற இடத்தில இருந்து ஓரடி முன்னே வந்தவள் தானாகவே அவனைக் கட்டிக்கொண்டாள்.

               வாசுதேவன் இனிதாக அதிர்ந்தவனாக நின்றுவிட, இதழ்களில் உதிக்கவா, வேண்டாவா என்று ஒளிந்து விளையாடியது புன்னகை. கைகள் மெல்ல எழுந்து திருமகளை தழுவிக் கொள்ள, அவன் தீண்டலில் இன்னுமின்னும் அவனுள் புதைந்தாள் திருமகள்.

               அவன் நெஞ்சில் முகம் பதித்துக் கொண்டிருந்தவள் தன் கண்ணீரை அங்கேயே கரை சேர்க்க, உடல் உணர்ந்த ஈரத்தில் அவளின் காதோரம் “த்திரு..” என்று அழுத்தினான் வாசுதேவன்.

                “சாரி மாமா..” என்றவளது கண்ணீர் இப்போது கரையுடைக்க, அவளைக் கைகளில் ஏந்தி கொண்டான் வாசுதேவன். திரு அப்போதும் அவனுக்கு முகம் காட்டாமல் அவன் கழுத்தைக் கட்டிக்கொள்ள, முகம் நிறைந்த சிரிப்புடன் வீட்டின் பின்வாசலை நெருங்கினான் வாசுதேவன்.

                  வீட்டின் பின்பக்கம் இருந்த திண்ணையில் அமர்ந்தவன் திருமகளை மடியில் அமர்த்திக் கொள்ள, அவன் முகம்  பெண்ணுக்கு. “த்திரு..” என்று மீண்டும் வாசுதேவன் அழைக்க, அவன் கழுத்தை சுற்றி படர்ந்திருந்த கைகளில் அழுத்தம் கூடியது.

              “பேச வேண்டாமா..” என்றவன் பேச்சோடு பேச்சாக அவள் செவிமடல்களைத் தீண்ட, அசைவே இல்லை அவளிடம்.

               “த்திரு..” என்று மீண்டும் தீண்டியவன் “எனக்கு உன் முகம் காட்டுடி.. அழறியா..” என்று அதட்ட, இல்லையென வேகமாக அவள் தலை அசைத்ததில் அவள் காதுகளில் அணிந்திருந்த ஜிமிக்கிகள் அழகாக அசைந்தாட, அதன் அசைவுக்கேற்ப இசை மீட்டினான் வாசுதேவன்.

                அவள் ஜிமிக்கிகள், காதுமடல்கள், கழுத்தின் வளைவுகள் என்று தன்னை மறந்து அவன் கீழிறங்க, சட்டென அவனிடம் இருந்து விலகி எழுந்தாள்.. இல்லை எழ முயன்றாள் திருமகள்.

                 வாசுதேவன்தான் அவளை விட்டுவிடாமல் கெட்டியாக பற்றியிருந்தானே. திருவின் முகம் இப்போது அவனுக்கு நேரெதிரே இருக்க, நீங்காத அவனின் பார்வை வீச்சில் அவஸ்தையாக உணர்ந்தாள் திருமகள்.

                  அவன் பார்வையின் மாற்றம் உணர்ந்தவளாக “விடுங்க மாமா.. காலையில கோவிலுக்கு போகணும்..” என்று அவள் நினைவூட்ட, அவள் வார்த்தைகளை காதில் வாங்காதவனாக அவளை மீண்டும் தன் கைகளில் தூக்கியவன் அப்படியே தன்னருகில் அமர்த்திக் கொண்டான் பெண்ணவளை.

                  அப்போதும் பெரிதாக விலகவெல்லாம் இல்லை. அருகில் அமர்ந்திருந்தவளை தோளோடு அணைத்துக் கொண்டவன் இன்னும் நெருக்கமாக அவளை உரசிக்கொண்டு அமர்ந்து கொள்ள, “இதுக்கு உங்க மடியிலேயே இருந்திருக்கலாம்..” என்று திரு வாயைவிட,

                   “எனக்கு ஓகே தான்.. வா..” என்று மீண்டும் அவன் கைகள் அவளை நெருங்க, “சாமி காரியம் விளையாடாதீங்க மாமா..” என்று அவன் கையில் பட்டென அடித்து விலகி அமர்ந்தாள் திரு.

                   “எங்கே விளையாட விடற நீ..பக்கத்துல வரவே தடை போடற..” என்று சலித்துக் கொண்டான் வாசுதேவன்.

                 “ஆமா.. தடை போட்டதும் அப்படியே தள்ளி நிற்கிறீங்க நீங்க…”

                 “என்ன செய்ய… எனக்கு த்திருவை திருடத் தோணுதே..”

                 “ஹான்…” என்றவள் முகம் வாய்கொள்ளா சிரிப்பில் விரிய, அவள் கை பற்றி அவளைக் கைப்பற்றிக் கொண்டவன் “நிஜமா.. திருவை மொத்தமா திருடிக்கணும்.. எனக்குள்ள ஒளிச்சிக்கணும்..” என்றான் கண்களில் பெருகிய காதலுடன்.

                  திரு விழிவிரிக்க, அமர்த்தலான புன்னகை மட்டுமே வாசுதேவனிடம்.

                 திருவின் விழிகள் மெல்ல கலங்க, வாசுதேவன் மீண்டும் அவளை தொட்டணைக்க துடிக்க, அமர்ந்த இடத்தில் இருந்தே அவன் தோள் சாய்ந்தாள் திருமகள்.

                  “எல்லாத்துக்கும் அழுவியா அழுமூஞ்சி..” என்றவன் உடல் சிரிப்பில் குலுங்க,

                   வழக்கம்போலவே சிலிர்த்து விலகினாள் திருமகள். முறைப்புடன் அவன் முழங்கைக்கு மேலாக கிள்ளி வைத்தவள் “மூணு வருஷ தவம்… இந்த மண்ணுமூட்டையை இப்படி பேசவைக்க என்ன பாடு பட்டிருக்கேன் தெரியுமா.. நான் மண்ணுக்குள்ளே போனாலும், என் ஆசையெல்லாம் அப்படியே என்னோட போய்டுமோன்னு எத்தனை முறை அழுதிருக்கேன் தெரியுமா..”

                 “அழுமூஞ்சியாம்.. போய்யா..” என்றவள் சிலுப்பிக்கொண்டு எழ, “த்திரு.” என்று மீண்டும் அவள் கைபிடித்து தனக்கு முன்னே நிறுத்தினான் வாசுதேவன்.

                 “கையை விடுங்க..” என அவள் சினுங்க, “கோவம் போய்டுச்சா..” என்றான் இப்போது.

                 திரு அவன் முகம் பார்க்கும்படி நன்றாக அவன் புறம் திரும்பி நிற்க, “நல்லா இருக்கேனா..” என்றான் சட்டையின் காலரை உயர்த்தி.

                   அவன் செய்கையில் சிரித்தவள் “நல்லாவே இல்ல…” என, “போடி..” என சத்தம் வராமல் வாயசைத்தான் வாசுதேவன்.

                 “போகட்டுமா..” என்றவள் ஓரடி பின்னே வைக்க, அவள் இடையில் கைகொடுத்து முன்பைவிட நெருக்கமாக நிறுத்திக் கொண்டான் இப்போது.

                திரு அவன் கைப்பிடியில் நிற்க, “ரொம்ப கோபமோ…” என்றான் மீண்டும்.

                திரு ஆமென தலையசைக்க, “ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல.” என்றான் கசந்த குரலில்.

                இப்போது மறுப்பாக தலையசைத்தாள் திருமகள் நாச்சியார். கூடவே, “சாரி..” என்று மனதார மன்னிப்புக் கோரினாள் அவனிடம்.

                 வாசுதேவகிருஷ்ணன் “இது தேவையா..” என்று முறைக்க, அதில் சிரித்தவள் “என்னோட எதிர்பார்ப்புகள் கூடிப்போச்சு மாமா.. நீங்க இப்படித்தான்னு தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணேன்… ஆனா, இப்போ உங்களை நானே கட்டாயப்படுத்திட்டு இருக்கேன். ஏதோ ஒரு வகையில நானும் அழுத்தம் கொடுக்கறேன் இல்ல மாமா.. எனக்கே தெரியுது..”

                “ஆனா, என்னால சட்டுன்னு மாற முடியல. அதுவும் உங்க விஷயங்கள்ல ரொம்ப உணர்ச்சிவசப்படறேன்.. உங்களை யாரும் எதுவும் பேசினா, அந்த நிமிஷமே பதில் கொடுக்கனும்.. அவங்க அடுத்து பேசவே முடியாதபடி செய்யணும்னு தான் புத்தி போகுது.”

                “உங்களை மாதிரி அமைதியா பொறுமையா பதில் கொடுக்க முடியல… நான் என்ன பண்ணட்டும்…” என்றவள் முகம் சுருக்கி நிற்க, அவள் பாவனை அள்ளிக்கொள்ள தூண்டியது அவனை.

                “எதுவும் பண்ண வேண்டாம். இப்படி சண்டைக்கோழியாவே இரு.” என்றவன் அவள் இடையில் அழுத்தம் கூட்ட, “மாமா..” என்று பல்லைக் கடித்தவள் “விடுங்க என்னை..” என்று அவன் கைகளை விலக்க போராட, “ஒண்ணுமே பண்ணலடி நான்..” என்று பாவமாக பார்த்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                             திரு “நீங்க ஒன்னும் பண்ணவேண்டாம்.. என்னை விடுங்க..” என்று அவன் கைகளில் இருந்து விலகி அமர, அவள் மடியில் தலைசாய்த்து படுத்துக்கொண்டான் வாசுதேவன்.

              திரு “மாமா..” என, “ஏன்மா…” என்றான் கிண்டலாக.

              “ரொம்ப பேசறீங்க நீங்க..” என்றவள் அவனை அதிசயமாக பார்க்க,

              “நிறைய பேசுவேன் திரு… அப்புறம் என்னவோ பேசற ஆசையே விட்டுப் போச்சு. நான் என்ன பேச நினைக்கிறேன்னு எனக்கு முன்னாடியே அடுத்தவங்க கணிச்சு பதில் சொல்லிடுவாங்க. அதுக்கு நான் ஏன் பேசணும்.? எனக்கும் சேர்த்து நீங்களே பேசிடுங்கன்னு தோணும்.”

              “குரல்வளைல அடிபட்டு இருந்த வலி ஒருபக்கம். பேசினாதானே வலிக்குதுன்னு அது ஒருபக்கம். பேசவே கூடாதுன்னு விட்டுட்டேன். பேசி என்ன செய்ய போறேன்னு ஒரு அலட்சியம். இப்பவும் ரொம்ப வேகமா, இல்ல கோபமா பேச நினைச்சா ரொம்ப வலிக்கும். சரியா பேசவும் முடியாது திக்கும்..”

              “அதுக்காகவே ரொம்ப கோபமா இருக்க நேரங்கள்ல வாயைத் திறக்கவே மாட்டேன். பேச பயிற்சி எடுத்தால் சரியாகிடும்… சின்ன சின்ன பயிற்சி எல்லாம் சொல்லி தர்றோம்னு சொன்னாங்க.. அப்படி பயிற்சி எடுத்து பேச வேண்டாம் போங்கடான்னு விட்டாச்சு..” என்றவன் திருவின் முகம் பார்க்க,

               “இப்போ தடுமாறவே இல்லையே மாமா..” என்றாள் அதுதான் முக்கியம் போல்.

               “அதுதான் சொன்னேனே.. நிதானமா பேசினா ஓரளவுக்கு பேச முடியும்..”

                  என்றவனிடம் அதற்குமேல் என்ன கேட்பது என்று புரியாமல் மௌனமாகிவிட்டாள் திருமகள் நாச்சியார்.

            “என்ன குடையுது உன் மண்டையில..” என்று வாசுதேவன் விசாரிக்க,

            “தெரியல மாமா… கஷ்டமா இருக்கு.. எவ்ளோ வலிச்சிருந்தா, பேசவே கூடாதுன்னு நினைச்சிருப்பிங்க. ஆனா, அதெல்லாம் புரிஞ்சிக்காம சின்னப்பிள்ளை போல அடம்பிடிச்சிருக்கேனே..” என்றவள் குரல் கலங்கியது.

             “அழுது வைக்காத திரு. கல்யாணத்துக்கு முன்னாடி நீ அழுது பார்த்த ஞாபகமே இல்ல.. ஆஅஆனா ஏன்னை க்கல்யாணம் கட்டின ன்னாள அழுத்துட்டே இருக்க..” என்று வேகமாக பேசியவன் மீண்டும் திக்கி நிற்க,

             “இப்போ எந்த கோட்டையை பிடிக்க இப்படி பறக்கறிங்க.. பொறுமையா பேசினா என்ன..” என்று அதட்டியவளிடம் கோபம் வந்து ஒட்டிக் கொண்டது இப்போது.

              அவள் பேச்சில் வாசுதேவன் சிரிக்க, “சிரிக்காதிங்க மாமா.. இப்படித்தான் பண்றிங்க எப்பவும். யார் சொல்றதையும் கேட்கக்கூடாது.. அப்படியென்ன அடம் உங்களுக்கு..”

              “யார் சொல்லி கேட்கல..”

              “யார் சொன்னதை கேட்கறீங்க நீங்க.. அப்பா அம்மா ரெண்டு பேரும் பிள்ளைக்கு பயந்துக்கறாங்க.. அப்புறம் உங்களை சொல்லி என்ன புண்ணியம்..?” என்ற திருமகளின் பேச்சில் வாசுதேவன் சிரிக்க,

              “சிரிச்சீங்க.. வாயிலேயே அடிப்பேன்..” என்று கையுயர்த்தி மிரட்டினாள் திரு.

             “அவங்க அப்படியே பழகிட்டாங்கடி. நான் சொன்னா சரியா இருக்கும்னு நினைக்கிறாங்க. மத்தபடி பயம் எல்லாம் இல்ல. அன்னைக்கு கூட அடி வாங்கினேன் இல்ல.” என்றவன் சிரிப்புடனே பார்க்க,

              “அதை முதலிலேயே பண்ணி இருக்கணும் இந்த அத்தை..”

              “ஏன் நீ போய் சொல்லி கொடேன்..”

              “அவங்ககிட்ட ஏன் சொல்லணும்.. நானே அடிப்பேன்..”

              “உன் புருஷன்டி நானு.. என்னை அடிப்பியா நீ…இந்த விசாலம் என்னை எப்படி கோர்த்து விட்டு இருக்கு பார்த்தியா..” என்றவன் போலியாக அலற,

              “அதென்ன புருஷன் நான்னு சொல்றிங்க… நீங்க என்னை அடிச்சீங்க இல்ல. நான் இப்படி ஏதாவது சொன்னேனா.. அப்படித்தான் நீங்களும் நான் அடிச்சா அமைதியா வாங்கிக்கணும்..” என்றவள் கண்களை பெரிதாக்கி முறைக்க,

               “சரிங்க பொண்டாட்டி..” என்றவனுக்கு திரு அப்போதே இரண்டு அடி வைக்க, “ஐயோ அம்மா..” என்று சத்தமாக அலறினான் வாசுதேவகிருஷ்ணன்.

               “அச்சோ.. கத்தாதீங்க மாமா..” என்றவள் அவன் வாயை மூட முயன்றதையும் மீறி அவன் மீண்டும் சத்தமிட முயல, அவன் வாயை கையை வைத்து மூடியவள் “கத்தாதீங்க மாமா..” என்று தன் விரல்களின் மீதே முத்தமிட, “அடிப்பாவி.. சாமி விரதம் போச்சா…” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.

                “என் கையில தானே கொடுத்தேன்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல..”

               “உன் கை என் வாயில தானே இருந்தது.. அப்போ என் வாய்க்கு தானே கொடுத்த..”

               “அதெல்லாம் கிடையாது.. என் கைக்குதான் கொடுத்தேன்.”

               “அதெல்லாம் கிடையாது.. உன் கை என் வாய் மேல தான் இருந்துச்சு.. கெட்டு போன விரதத்தை நாம மொத்தமா முடிச்சுக்குவோம்..” என்றவன் விளையாட்டாக நெருங்க,

                “கொலை விழும்.. தள்ளி போங்க..” என்று விரல் நீட்டி மிரட்டினாள் மனைவி.

                 “ரொம்ப பண்றடி..” என்று வாசுதேவகிருஷ்ணன் மீண்டும் சரியாக அவள் மடியில் படுத்துக்கொள்ள,

                “விரதம் முடியட்டும் மாமா.. அப்போ கொடுக்கறேன்..”

                 “என்னை அடிக்கிறேன்னு சொன்ன..”

                 “இப்படியும் அடிக்கலாம் மாமா..” என்று சிரித்தவள் உடனே “இது நல்லா இருக்குல்ல மாமா..” என்றாள் அவனிடமே.

                   “எது..”

                  “இப்படி அடிக்கிறது.. நீங்க என்னை திட்டினாலோ, கோபப்பட்டாலோ இனிமே நானும் இப்படி உங்களை அடிச்சுடறேன்.. ச்சே.. அப்போவே இது தோணாம போச்சு எனக்கு…” என்று அவள் மண்டையில் தட்டிக் கொள்ள,

                   “எப்போ..” என்றான் வாசுதேவன்.

                   “அதுதான்.. ஈவினிங் கோவில்ல.. அந்த பொம்பளை முன்னாடி இப்படி அடிச்சிருந்தா சூப்பரா இருந்திருக்கும் இல்ல..” என்று இலகுவாக அவள் கூறிய விதத்தில் “ஆத்தாடி..” என்று எழுந்து அமர்ந்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

                    திரு வாய்க்குள் சிரிப்பை அடக்க, “என்ன நேக்கா திட்டம் போடறடி நீ.. என் மானத்தை வாங்க பார்த்தியே கொலைகாரி..” என்று அவன் பதற,

                   “இதுதான் சரி மாமா.. இப்படியே அடிச்சுடறேன்.. கையால அடிச்சா, கட்டின புருஷனை கைநீட்டி அடிச்சுட்டான்னு ஊர் தப்பா பேசும்.. இப்படி அடிச்சா, என் புருஷன்னு சமாளிச்சிடுவேன்..” என்று தீவிரமாக அவள் திட்டமிட

                   “திரும்மா..” என்று அவள் கையைப் பிடித்துவிட்டான் வாசுதேவன்.

                  “மாமா பாவம்டி.. இப்படியெல்லாம் யோசிக்காத தங்கம்..” என்று அவள் தாடையைப் பிடித்து அவன் செல்லம் கொஞ்ச,

                  “உங்களுக்கு இதுதான் சரி.. இன்னைக்கு அந்த பொம்பளை என் கண்ல படட்டும்.. கண்டிப்பா செய்வேன்.” என்றவள் “விடிய ஆரம்பிச்சுடுச்சு.. சீக்கிரம் போய் குளிச்சு கிளம்புங்க.. கோவிலுக்கு போகணும்..” என்றபடியே எழுந்து கொள்ள, “அடியேய்…” என்று அவள் பின்னால் வாசுதேவனும் எழுந்து கொள்ள,

                  “என்ன மாமா..” என்றவள் இதழ்களை குவித்தபடி அவனை நெருங்க, “ஏய்..” என்று அலறியபடி பின்னடைந்தான் வாசுதேவன்.

                   திருமகள் சிரித்தபடி மீண்டும் முன்னேற, “எனக்கு வேலையிருக்கு போடி..” என்று சிரித்துக்கொண்டவனாக திருமகளைத் தாண்டி நடந்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்… அவள் பேச்சில் அவனுக்கு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, வெட்கப்பட வேண்டியவளோ அவன் ஓட்டத்தை கண்டு ரசித்தபடி நின்றாள்.

              

  

Advertisement