Advertisement

நெஞ்சம் பேசுதே 23

              திருமகள் வாசுதேவனின் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு நாட்களும் பெரிதாக எந்த மாற்றத்தையும் விதைத்து விடவில்லை. எப்போதும் போலவே தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டும், வாசுதேவனை அவ்வபோது வம்பிழுத்துக் கொண்டும் தன்னியல்பு மாறாமல் சுற்றி வந்து கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.

             அதுவும் அன்று வாசுதேவன் “உன்னையே உன்னை கேட்டு எடுத்துக்கல..” என்ற நிமிடம் தொட்டு என்னவோ, அவன் மீதான மையல் இன்னும் அதிகரித்த உணர்வு. பார்க்கும் பார்வையே அவனை விழுங்கிக் கொள்வதை போலத்தான் இருக்கும்.

            இவளின் இந்த உரிமையான பார்வைகளில் பெரிதும் தவித்துப் போவதே வாசுதேவகிருஷ்ணனின் பிழைப்பாகி இருந்தது. கண்களில் நிறைந்த மையலுடன் அவள் பார்த்து நிற்கையில் அவளை எட்டி நிற்பது பெரும் சங்கடமாக இருந்தது அவனுக்கு.

             “இப்படி பார்த்து வைக்காதடி..” என்று பலமுறை கூறிவிட்டான் அவளிடம். ஆனால், திருமகள் மாறவே இல்லை. சொல்லப்போனால், திக்கி திணறி அவன் கூறி முடிக்கையில் அவள் பார்வையில் இன்னுமே காதல் கூடியிருக்கும். “த்திரு..” என்று அழுத்தமாக அவள் பெயரை அவன் கடித்து துப்புகையில், “எனக்கு பார்க்க எல்லா உரிமையும் இருக்கு மாமா..” என்று கண்ணடித்துச் சென்றாள் அவன் அழகி.

              “படுத்துறாளே..” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொள்பவன் பெரும்பாலும் அவள் கண்ணில் படுவதே இல்லை. திருவிழா வேலைகள், விவசாயம், மில் என்று அலைந்து கொண்டே தான் இருந்தான். இதோ இப்போதும் காளியம்மனின் பூப்பல்லக்கிற்க்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, இரவு ஊர்வலத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பூரதத்தில் பவனிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள் அம்பாள்.

               மாலை ஆறு மணி அளவில் கோவிலின் முன்பு பெண்கள் கூடி, தங்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை வைத்து பாடல்கள் பாடி கும்மி கொட்ட, எட்டு மணி அளவில் பூப்பல்லக்கில் அன்னையின் வீதியுலா தொடங்கும்.

               முளைப்பாரிகளை சுமந்த பெண்கள் முன்னே நடந்து வர, அந்த ஊரில் இருந்த மொத்த தெருக்களையும் சுற்றி முடித்து அம்மன் மீண்டும் கோவில் வாயிலை அடையும் நேரம் கிட்டத்தட்ட நேரம் இரவு பன்னிரண்டை தொட்டு விடும்.

                 வீதியுலாவிற்கான ஏற்பாடுகளை திருவிழாக் குழுவினருடன் நின்ற வாசுதேவகிருஷ்ணன் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, சாரதியும் அவனுடன் தான் நின்றிருந்தான். அன்று இரவு ஊர்வலத்திற்கான செலவுகள் எப்போதும் ராகவனுடையது தான்.

                அவர் கோவிலின் உள்ளே ஊர் பெரியவர்களுடன் அமர்ந்துவிட, இவன் வெளியே பல்லக்கு அலங்காரம் நடக்கும் இடத்தில் நின்று அவர்களின் தேவையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

                வாசுதேவகிருஷ்ணன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தோரணையாக நின்றிருந்த விதம் காண்போரை கவருவதாக இருக்க, அவனைப் பார்வையால் விழுங்கி கொண்டே தான் கோவில் வாயிலை அடைந்தாள் அவன் மனைவி.

                அவள் தூரத்தில் வரும்போதே வாசுதேவனும் அவளை பார்த்துவிட, தலையில் முளைப்பாரி சுமந்து, அழகாக பட்டு கட்டி, நெருக்கமாக கட்டியிருந்த முல்லைச்சரம் சூடிக் கொண்டு மெல்ல அசைந்தாடி நடந்து வந்தாள் அவன் திரு.

                வாசுதேவகிருஷ்ணன் அவளைக் கவனிக்காதது போல் காட்டிக்கொண்டாலும், அவனது மொத்த கவனமும் அவள் மீது தான். திருவுக்கோ சொல்லவே வேண்டாம். “யார் பார்க்கிறார்கள்…” என்றெல்லாம் எந்த கவலையும் இல்லை அவளுக்கு. எப்போதும் போல அவனை பார்வையால் சீண்டிக் கொண்டே கோவிலை அடைந்தாள் அவள்.

               விசாலம் மருமகளுடன் நடந்து வந்தவர் “அடியே.. எங்கே வந்து என்ன வேலை பார்த்துட்டு இருக்கடி.. ஊர் கண்ணு மொத்தமும் உங்கமேல தான் இருக்கு.. ஒழுங்கா வழியைப் பார்த்து நட..” என்று மருமகளின் கையை சுரண்ட, அதன்பின் அவர் பேச்சை தட்டாமல் அவருடனே நடந்தாள் மருமகள்.

               முளைப்பாரியை அதற்கான இடத்தில் வைத்து உள்ளே சென்று அவர்கள் அம்மனை தரிசிக்க, சரியாக வாசுதேவன் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.  கண்மூடி நின்ற மனைவியின் அருகில் வந்து அவன் நிற்க, கண்களை மூடி இருந்தாலும் அவன் வாசம் நிறைத்துக் கொண்டது திருமகளை.

             முகத்தில் விரிந்த புன்னகையுடன் அவள் கண்களைத் திறக்க, கண்களால் கருவறையைக் காண்பித்தான் வாசுதேவன். அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து முடிக்கவும், “வெளியே வேலை இருக்கு.. நீ அம்மாவோட இரு..” என்று நகர்ந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

             அவனது வேலைகளுக்கு நடுவே அவன் வந்து நின்றதே பெரிதென புரிந்ததால் திருவும் புன்னகையுடனே அவனை அனுப்பி வைத்தாள். இவர்களின் இந்த மௌன நாடகத்தை அந்த நேரம் சன்னதியில் இருந்த பலர் பார்த்திருக்க, சில நல்ல உள்ளங்கள் மகிழ்ந்தாலும், ஒன்றிரண்டு குரூர மனம் படைத்தவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..

              கோதையின் மாமியார் அப்படிப்பட்ட ஒரு நல்லவராக இருக்க, அவர் கண்ணில் தான் விழுந்து தொலைத்திருந்தனர் கணவனும் மனைவியும். ஏற்கனவே முரளியை பஞ்சாயத்தில் வைத்து அசிங்கப்படுத்தி விட்டாள் என்று திருமகளின் மீது தீராக்கோபத்தில் இருந்தவருக்கு கணவன் மனைவியின் இந்த மௌன பரிபாஷையும், சிரிப்புகளும் நெருப்பை வாரி இறைத்தது போல் கொதித்தது.

            என் மகன் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியிருக்க, இவள் இப்படி மினுக்குவாளா என்று தகுதியற்ற ஒரு ஆதங்கம். அதுவும் முரளியைக் கட்டிக்கொள்ள மறுத்தவள் இப்போது வாசுதேவனுடன் இழைந்து கொண்டிருக்க, அப்படியென்ன என் பிள்ளையை விட இவன் உசத்தி.. ஒழுங்கா வாய் பேசவே முடியாது இவனால..

            இவனைக் கட்டிக்கிட்டதுக்கே இத்தனை மிதப்பா இவளுக்கு… என்று அர்த்தமற்ற ஆத்திரம் அப்போதே சூழ்ந்து கொண்டது அவரை. தனது ஆத்திரத்தை மனதோடு அடக்கிக் கொண்டவர் உடன் வந்திருந்த தனது உறவுக்கார பெண்மணியை அழைத்துக் கொண்டு வெளியே நடந்துவிட்டார்.

           என்னதான் ஒதுங்கிச் செல்ல நினைத்தாலும், பிறவிக்குணம் என்று ஒன்று உள்ளதே.. யாரால் மாற்ற முடியும்.. அவர் கோவிலை வலம் வருகையில் மீண்டும் திருமகள் நாச்சியார் அவர் கண்ணில்பட, திருமணமாகி வேறு ஊரில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த அவளது பள்ளிப்பருவ தோழி ஒருத்தியுடன் பேசிக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.

          சற்று தூரத்தில் வாசுதேவகிருஷ்ணன் நின்றிருக்க, அவனை காண்பித்து திருமகளை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள் அந்த பெண் சத்யா. “என்னடி.. அண்ணா எங்கே நின்னாலும் பார்வை இங்கேயே மொய்க்குதே.. பிடிக்காத கல்யாணம் போல தெரியலையே..” என்று அவள் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்க,

             “அதே சந்தேகம் தான் எனக்கும்..” என்றபடியே அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கினார் ஈஸ்வரி.

               திரு அவர் பேச்சு புரியாமல் நிற்க, சத்யா “என்னம்மா பேசறீங்க..” என்றாள் அதட்டலாக.

             ஈஸ்வரி அவளைக் கண்டுகொள்ளாமல் திருவிடம் “அப்படி என்னடி என் மகனைவிட இவன் உசத்தியா போய்ட்டான். என் பிள்ளையை பஞ்சாயத்துல நிறுத்தி அசிங்கப்படுத்திட்டு இவனோட ஜோடி போட்டுட்டு சுத்தி வர்றியே வெட்கமா இல்ல உனக்கு..”

             “கல்யாணமாகி  முழுசா ஒரு மாசம் கூட முடியல, அவனோட குழையுற.. இந்த கருமத்துக்கு தான் என் மகனை வேண்டாம்ன்னு சொன்னியா.. இவனோட தான் குடும்பம் நடத்திட்டு இருந்தியா.. இதுதான் காரணம்ன்னு என் மகன்கிட்ட சொல்லியிருந்தா, நீ இருந்த திசைப்பக்கமே திரும்பியிருக்கமாட்டானே… என் பிள்ளை வாழ்க்கையை ஏண்டி நாசம் பண்ண..”

             “இந்த வாய் பேச வக்கில்லாதவனுக்காக என் மகனை அசிங்கப்படுத்துவியா… இந்த ஊமையனுக்கு..” என்றவர் அடுத்த வார்த்தைப் பேசும் முன்பே “ஏய்..” என்று கையை உயர்த்தியிருந்தாள் திருமகள் நாச்சியார்.

             ஆனால், அவள் கைகள் அந்தரத்திலேயே வாசுதேவனால் தடுக்கப்பட, “கையை விடுங்க மாமா..” என்று வார்த்தைகளை கிட்டத்தட்ட கடித்து குதறினாள் அவள்.

               அவள் கையை ஓங்கியதிலேயே ஈஸ்வரி அதிர்ந்து நிற்க, அவர் பேசிய கடைசி வார்த்தைகள் வாசுதேவனின் காதுகளிலும் விழுந்திருந்தது. “தனியாத்தானே நிற்கிறா..” என்ற அலட்சியத்தில் தான் ஈஸ்வரி வாயை விட்டதும்.

               இப்படி அவள் அடிக்க கையோங்குவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை அவர். அதுவும் வாசுதேவனும் வந்து நிற்க, இன்னும் ஆத்திரம் எல்லை மீறியது ஈஸ்வரிக்கு. “இவளுக்கு இப்படி ஒரு வாழ்வா..” என்று இன்னுமின்னும் வயிற்றெரிச்சல் கூடியது தான் மிச்சம்.

                வாசுதேவன் அசையாமல் ஈஸ்வரியை முறைக்க, அவன் வலது கையில் இருந்த தனது கையை விடுவிக்க விடாமல் போராடிக் கொண்டிருந்தாள் திருமகள் நாச்சியார்.

                “கையை விடுங்க..” என்றவள் வாசுதேவனை கண்டிப்புடன் நோக்க, அவள் பார்வையை உணராமல் “வயசுக்கு தகுந்தபடி பேசி பழகுங்க… அவ கையை நீட்டியிருந்தா, யாருக்கு அசிங்கம்.?” என்று ஈஸ்வரியிடம் அதட்டலாக பேசிக் கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

               திருமகளின் பொறுமை மீற, “இதெல்லாம் ஒரு ஆளுன்னு இதுகிட்ட பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கீங்களா.. வாயை உடைச்சு விட்டதா தான், அடுத்து பேசுறப்போ ஞாபகம் வரும்…” என்று வாசுதேவனை முந்திக் கொண்டு முன்னேறினாள் திருமகள் நாச்சியார்.

             இதற்குள் அங்கு நின்றிருந்த சிலரின் கவனம் இவர்கள் மீது திரும்ப, அதற்குமேல் தாமதிக்காமல் மனைவியின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றான் வாசுதேவகிருஷ்ணன். அத்தனைப் பேர் கூடியிருக்கும் பொது இடத்தில் அவனை மீற விரும்பாதவளாக அவனுடன் நடந்தாலும், அவனும் பேசாமல் தன்னையும் பேசவிடாமல் இழுத்துச் செல்பவன் மீது ஆத்திரமான ஆத்திரம்.

            கையை விடுவித்துக் கொள்ளலாம் என்று பார்த்தாலும், அத்தனை வலுவாகப் பிடித்திருந்தான். கோவிலுக்கு வெளியே இருந்த குளத்தின் அருகே வரவும் அவள் கையை வாசுதேவன் விடுவிக்க, அவன் செயலில் கோபம் கொண்டிருந்தவளோ “எதுக்கு இப்படி இழுத்துட்டு வந்திங்க என்னை… அந்த பொம்பளை என்ன பேச்சு பேசுச்சு தெரியுமா..?” என்று கத்த,

           “நீ பேசுறது எனக்கு கேட்டா போதும். எதுக்கு கத்துற.” என்று அடிக்குரலில் அழுத்தமாக அதட்டினான் வாசுதேவன்.

            “நான் பேசுறதே கத்துற மாதிரி இருக்கா.. அவ எவ்வளவு அசிங்கமா பேசினா தெரியுமா..” என்று கண்களில் கண்ணீர் கரை தட்டியவளாக திரு வினவ, அதற்குமேல் அவளை அதட்ட முடியவில்லை வாசுதேவனால்.

             “த்திரு.” என்று மீண்டும் அவள் கைகளை பிடிக்க முயல, “தொடாதிங்க மாமா.” என்று  பின்னால் நகர்ந்து நின்றாள் அவள்.

              “த்திரு என்னடி..” என்றவன் மீண்டும் நெருங்க, இதற்குள் விசாலம் வந்துவிட்டார் அந்த இடத்திற்கு.

             “நாச்சியா..” என்று வேகமாக திருமகளை அவர் நெருங்க, அவளுக்கு இருந்த அழுத்தத்தில் அவரின் தோள் சாய்ந்து கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள் திருமகள்.

              அத்தனை பூரிப்புடன் கிளம்பி வந்தவள் இப்படி தேம்பியழ, ஒன்றும் புரியவில்லை விசாலத்திற்கு.

            “கண்ணா.. ஏண்டா அழறா..” என்று அவர் மகனைக் கேட்க,

            “எனக்கு வீட்டுக்கு போகணும் அத்தை..” என்று அழுகையினூடே திக்கினாள் திருமகள்.

            “போகலாம்.. போகலாம்.. முதல்ல அழாம இருடா..” என்று விசாலம் அவளை இயல்பாக்க போராட, திரு தெளியவே இல்லை.

              “நாம போவோம்..” என்றவள் அழுகையை நிறுத்தாமல் போக, “சரி.. போகலாம் வா..” என்று விசாலம்  கிளம்பிவிட்டார்.

             “அம்மா..” என்று அவரை அதட்டி வாசுதேவகிருஷ்ணன் திருமகளை அவரிடம் இருந்து பிரித்து நிறுத்தினான். திரு அவன் முகம் பார்க்க மறுக்க, “நீங்க கிளம்புங்க.. நான் அவளை கூட்டிட்டு வரேன்.” என்று விசாலத்தை அவன் கிளப்ப பார்க்க,

               “அவளை அழ வைக்காத கண்ணா நீ..” என்று மகனை அதட்டினார் விசாலம்.

               “நீங்க போங்கம்மா.. நான் கூட்டிட்டு வரேன்..” என்று அப்போதும் மகன் அசையாமல் நிற்க, மருமகளை ஒரு பார்வை பார்த்து சற்று தள்ளிச் சென்று நின்று கொண்டார் அவர்.

                திரு இன்னமும் அவன் முகம் பார்க்காமல் நிற்க, “என்னை பாரு த்திரு..” என்றவன் அவளைப் பிடித்திருந்த கையில் அழுத்தம் கொடுக்க, அவன் அழுத்தத்தில் நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

               “என்னால இங்கே இருக்க முடியாது.. என்னை விட்டுடுங்க. யார் என்ன பேசினாலும், அமைதியா போக நான் ஆளில்ல.” என்று திரு கண்களைத் துடைத்துக் கொண்டே நிற்க,

                 “இன்னைக்கு நம்மோட பூஜை நடக்குது.. நீ எடுத்துட்டு வந்த முளைப்பாரி இன்னும் கோவில்லதான் இருக்கு. உன் அத்தை நீ எதுக்கு அழுதுட்டு இருக்கேன்னு தவிச்சு போய் நிற்கிறாங்க. இது அத்தனையும் விட, தகுதியில்லாத ஒருத்தர் பேசின வார்த்தைகள் தான் உனக்கு முக்கியமா இருக்கா..” என்றான் வாசுதேவன்.

                 திருமகள் பதில் கூறாமல் அவனை வெறித்து நோக்க, “சாக்கடைன்னு தெரிஞ்சா ஒதுங்கித்தான் போகணும்.. அதுல கல்லெடுத்து எறிஞ்சா நமக்குத்தான் அசிங்கம்..” என்று வியாக்கியானம் பேசியவனை என்ன செய்தால் தகும் என்ற கோபம் தான் அவளுக்கு.

                 அவளை என்ன சொல்லியிருந்தாலும், நிச்சயம் பொறுத்திருப்பாள். வாசுதேவகிருஷ்ணனை பேசியது தான் அவள் கோபமே . ஆனால், அவன் அதை சட்டை செய்யாமல், பேசியவரையும் ஒன்றும் சொல்லாமல் இப்படி நிற்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவளால்.

               “நான் ஒரு விஷயம் கேட்டா செய்விங்களா..” என்றவளை வாசுதேவன் புரியாமல் பார்க்க,

               “நான் வாசுதேவகிருஷ்ணன் இல்ல. யார் என்ன பேசினாலும், வாயைத் திறக்கவே மாட்டேன்னு என்னால நிற்க முடியாது.. என் புருஷனை யாரும் பேசினா, நான் கேட்பேன்.. கண்டிப்பா நிறைய பேசுவேன். அப்படி நான் பேசக்கூடாதுன்னு நீங்க நினைச்சா, நீங்க என்கிட்டே பேசாதீங்க.. எப்போ எனக்காக நீங்க பேசுவீங்களோ, அப்போ என்கிட்ட பேசுங்க.” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் கண்களைத் துடைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டாள்.

                அதன்பின்னர் நடந்த அத்தனை நிகழ்வுகளிலும் அப்படி ஒரு சாத்வீகமான முகத்துடன் அவள் பங்கெடுத்துக் கொள்ள, வாசுதேவன் தான் இயல்பைத் தொலைத்திருந்தான்.

Advertisement