Advertisement

நெஞ்சம் பேசுதே 20

                திருமகளை அவள் வீட்டில் விட்டு வாசுதேவகிருஷ்ணன் தன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் விழித்தே இருந்தனர். மகன் வீட்டிற்குள் நுழையவும் “கண்ணா… நாச்சியா எங்கே? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?” என்றார் ராகவன்.

                விசாலம் அதே கேள்வியை விழிகளில் தாங்கி மகனைப் பார்த்திருக்க, “அவ்வ வ்வ்வீட்ல இருக்காப்பா.. ஆஅங்கே இஇஇஇருக்கட்டும்..” என்றான் மகன்.

               “அவ வீடா. அது எங்கே இருக்கு. இந்த வீட்டு மருமக அவ. அங்கே எப்படி இருப்பா.” என்று விசாலம் அவசரமாக இடையிட,

                “அப்போ அவகிட்டேயே க்க்க்க்க்கேட்டுக்க்க்க்கொங்க..” என்று விட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

               அவனுக்குமே எப்படியாவது விசாலம் மனைவியை அழைத்து வந்து விட மாட்டாரா என்று தான் இருந்தது. ஆனால், வெளிப்படையாக அவரிடம் உதவி கேட்க மனமில்லை.

              ஆனால், விசாலம் மகனுக்கு கொஞ்சமும் குறையாமல் காயப்பட்டிருக்க, மருமகளை சென்று அழைப்பதாக இல்லை அவர்.

               இருவருக்கும் இடையில் என்ன நடந்ததென்பது இந்த நிமிடம் வரை முழுமையாக தெரியாது அவருக்கு. வாசுதேவகிருஷ்ணன் அவரிடம் கூறியது மட்டும்தான். ஆனால், வீட்டில் ஒரு சச்சரவு என்றால் என் மருமகள் என்னிடம் கூற முடியாதா.. என்று ஒரு மனத்தாங்கல் வந்து அமர்ந்து கொண்டது அவருக்குள்.

              திருமகள் யாரிடமும் சொல்லாமல் இப்படி தன் போக்கில் வீட்டை விட்டு வெளியேறியதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. சென்ற மருமகளின் பின்னே சென்று அவளை அழைத்து வரவும் மனமில்லை. என்னவோ தான் அவசரப்பட்டு இருவரின் வாழ்வையும் வீணாக்கியது போல் ஒரு சஞ்சலம் விசாலத்திற்கு.

              திருவின் செயலை ஏற்கமுடியாமல் அமர்ந்திருந்தவர் இனி மகன் மருமகளின் வாழ்வில் தலையிடுவதாக இல்லை. “அவன்தானே துரத்தினான், அவனே அழைத்து வரட்டும்.. இல்ல, அவளுக்கா எப்போ வர எண்ணம் இருக்கோ, அப்போ வரட்டும்.” என்று தனக்குள் முடிவெடுத்து கொண்டு கணவரை சாப்பிட அழைத்தார்.

               ராகவன் “பாவம் சாலா.. மருமக எப்படி அங்கே தனியா இருப்பா.. நீ வா, நாம போய் கூட்டிட்டு வந்திடுவோம்.” என்றார்.

              “ஏன் அவளுக்கு சூடு சொரணையே இருக்கக்கூடாதா..”

             “விசாலம்…”

             “உங்க மகன் தானே துரத்தி விட்டான்.. அவனாச்சு, அவன் பொண்டாட்டி ஆச்சு.. நீங்க சாப்பிட்டுட்டு போய் படுங்க.” என்றார் முடிவாக.

               “ராத்திரி நேரத்துல எப்படி தனியா விட முடியும் விசாலம். அவங்கதான் சின்னப்பசங்க தெரியாம பண்ணா, நாமளும் அதையே செய்வோமா..”

              “இங்கே யார் சின்னப்பசங்க.. உங்க பிள்ளையும் மருமகளுமா.. நல்லா ஏதாவது சொல்லிட போறேன்.. போய் தூங்குங்க.” என்றார் விசாலம்.

             ராகவன் பதில் கூறாமல் மனைவியை பார்க்க, “அவன் பொண்டாட்டியை பத்தி அவனுக்கே கவலை இல்ல. உங்களுக்கென்ன… சாப்பிட்டுட்டு போய் படுங்க.” என்று வேகமாக கணவருக்கு உணவை எடுத்து வைத்தார் அவர்.

             மனைவியின்  எண்ணம் ஓரளவு பிடிபட, அவர் கூறியது போலவே உணவை முடித்து அறைக்குள் நுழைந்துவிட்டார் ராகவன். விசாலமும் கூடத்தின் விளக்குகளை அணைத்து, தங்கள் அறைக்கு சென்றுவிட, இங்கே வாசுதேவகிருஷ்ணன் அன்னையின் பேச்சிலும், செயலிலும் ஆத்திரத்தோடு அமர்ந்திருந்தான்.

            விசாலம் இப்படி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லையே அவன்.என்ன செய்வது என்று சில நிமிடங்கள் யோசித்தபடி அறைக்குள் நடை பயின்றவன் யோசிக்காமல் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டான்.

            அன்னை இட்லியும், சாம்பாரும் மீதம் வைத்திருக்க, அங்கிருந்த தூக்கில் எடுத்து அடுக்கி கொண்டவன் சமையலறையின் விளக்கை அணைத்து வெளியேறி இருந்தான். “எப்படியும் சாப்பிட்டு இருக்கமாட்டாள்.” என்று நினைத்தவனாக அவன் உணவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, இருட்டில் நின்று அவன் செயல்களைப் பார்த்திருந்த விசாலம் மெல்ல தலையசைத்தபடி சிரித்துக் கொண்டு மீண்டும் சென்று படுத்துவிட்டார்.

             இங்கே திருமகள் நாச்சியார் வாசுதேவகிருஷ்ணன் நினைத்தது போல் தான் இருந்தாள். உணவைப் பற்றிய அக்கறையில்லாதவளாக தனது அறைக்குள் முடங்கி இருந்தாள் அவள். கையில் இருந்த அலைபேசியில் வாசுதேவகிருஷ்ணன் சிரித்துக் கொண்டிருக்க, அவனைக் கண்களில் நிறைத்துக் கொண்டதே போதுமென அவள் அமர்ந்திருக்கையில் தான் வாசல்கதவு தட்டும் சத்தம் கேட்டது.

             நேரம் பத்தை தாண்டி வெகுநேரம் கடந்து போயிருக்க, “யாராக இருக்கும்.?” என்று சிறுபயத்துடனே அவள் வாசலுக்கு வர, அவள் கொலுசொலியை உணர்ந்த வாசுதேவகிரிஷ்ணன் “த்திரு..” என்றான் காதலாக.

             அவன் குரல் கேட்கவும், வேகமாக கதவைத் திறந்தவளுக்கு எதற்கு வந்திருக்கிறான் என்று கேட்கும் தைரியமில்லை. அதிர்ச்சி நீங்காமல் அவள் நின்ற கணத்தை பயன்படுத்திக் கொண்டவன் ஒருகையால் அவளை நகர்த்தி வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.

              திருமகள் ஒன்றும் விளங்காமல் நிற்க, கூடத்தில் இருந்த ஒற்றை இருக்கையில் தான் கொண்டு வந்திருந்த தூக்குச்சட்டியை வைத்தவன் அலட்டிக் கொள்ளாமல் திருமகளின் அறைக்குள் நுழைந்துவிட, உயிர் வந்த சிலையாக அவன் பின்னே அறைக்கு சென்றாள் திருமகள்.

              வாசுதேவகிருஷ்ணன் தன் சட்டையின் பொத்தான்களை விடுவித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்திருக்க, அவனை கேள்வியாக பார்த்து நின்றாள் திரு.

               அவளுக்கு பதில் கூறும் எண்ணமில்லாதவன் போல் சட்டையை கழட்டி அங்கிருந்த ஆணியில் மாட்டியவன் கையில் ஒரு தலையணையும், பாயும் எடுத்துக் கொண்டு வீட்டின் கூடத்தில் சென்று படுத்துவிட்டான்.

               திரு அதுவரையும் பொருள் விளங்கா ஒரு பார்வையுடன் நிதானிக்க, “உஉஉனக்கு இஇஇஇட்லி இஇஇருக்கு.. சாப்ப்பூட்டு தூங்கு..” என்றான் வாசுதேவன்.

               திரு இன்னமும் நின்ற இடத்தில இருந்து நகராமல் நிற்க, அவளை ஆயாசமாகப் பார்த்தவன் “உஉன்னை த்த்த்தனியா வ்வ்விட ம்ம்ம்முடியாது த்த்த்திரு.. அஅஅஅஅதுக்காக ம்ம்மட்டும் த்தான் வந்தேன்…சாப்பிட்ட்டு தூங்கு..” என்றவன் கண்களை மூடிக்கொண்டான்.

               “என்னை என்ன காக்காவா தூக்கிட்டுப் போகும்..” என்று கேள்வி எழுந்தாலும், அதை விடுத்து “நீங்க சாப்பிட்டீங்களா..” என்றாள் திரு.

              “ஏஏஏஏஏஏஏனக்கு சோறு போட என் ப்ப்பொண்டாட்டியா இஇஇஇஇஇருக்கா..” என்று அவன் ராகமிழுத்ததில் “ஐயோம்ம்மா..” என்று நொடித்துக் கொண்டாள் மனைவி.

             ‘இத்தனை வருஷமா நான் எடுத்து போட்டு தான் சாப்பிட்டுட்டு இருந்தாரா..” என்று கடுப்பானாலும், “வந்து சாப்பிடுங்க..” என்றவள் சமையலறையை நோக்கி நடக்க, “உனக்கு ம்மட்டட்டும் த்த்தான் இருக்கு..” என்றான் மீண்டும்.

              “இவரை..” என்று கால்களை தரையில் உதைத்துக் கொண்டவள் திரும்பி வாசுதேவனை முறைக்க, “அவ்ளோதான் இஇஇருந்தது.” என்றான் பாவமாக.

              அவனிடம் எதுவும் பேசாமல் வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தவள் அவசரகதியில் ஒரு ரவை உப்புமாவை கிண்டி, தேங்காய் சட்னியோடு எடுத்து வர, அதன் வாசத்தில் எழுந்து அமர்ந்தான் வாசுதேவன்.

              அவன் எடுத்து வந்த தூக்கையும் எடுத்து வந்து வைத்தவள் அவனுக்கு சுடச்சுட பரிமாற, வேகமாக கையில் வாங்கி கொண்டவன் ஒருவாய் உணவெடுத்து திருவின் வாய்க்கு நேராக நீட்ட, “நீங்க சாப்பிடுங்க..” என்று மறுத்தாள் திரு.

               வாசுதேவகிருஷ்ணனின் முகம் சட்டென சோர்வுற, அதை தாங்காமல் “நீங்க பண்றதெல்லாம் பண்ணுவீங்க.. ஆனா, நான் மட்டும் எப்பவும் நீங்க சொல்றபடியெல்லாம் ஆடணுமா மாமா..?” என்று முறைத்துவிட்டாள் திரு.

               வாசுதேவன் பதில்கூறாமல் மௌனம் சாதிக்க, “சாப்பிடுங்க..” என்றாள் மீண்டும். வாசுதேவன் “பசிக்கல.” என்று உணவுத்தட்டை கீழே வைத்து எழுந்துவிட, “இது தீரவே தீராது..” என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

               அதற்குமேல் அவள் மட்டுமாக எங்கே சாப்பிடுவது..? மனம் கோபத்திலும், வருத்தத்திலும் கசந்து வழிய, எதுவும் பேசி மேலும் வருந்த விரும்பாதவளாக வீட்டின் பின்வாசல் கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்.

                பின்பக்கம் இருந்த திண்ணையில் அவள் அமர்ந்துவிட, இங்கு வாசுதேவன் நிலைமைதான் மோசமாகிப் போனது.

          “என்னடா பண்ணிட்டு இருக்க நீ..” என்று அவன் மனமே அவனை வசைபாடியது. “அவளா இருக்கவும் பொறுத்து போறா..” என்று தன்னையே கடிந்து கொண்டவன் உணவுத்தட்டை கையில் எடுத்துக்கொண்டு அவள் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கினான்.

            வாசுதேவகிருஷ்ணன் திருமகளின் அருகில் அமர, அவன் முகம் பார்க்கவில்லை அவள்.

             அவள் தாடையைப் பிடித்து தன்னைப் பார்க்க செய்தவன் “ப்பசிக்குது.” என,

             “நான் உங்களை சாப்பிட வேண்டாம் சொன்னேனா.. ஏன் இப்படி என் உயிரை வாங்குறீங்க. தெரியாம உங்களை லவ் பண்ணிட்டேன் நான்..” என்று கண்ணீருடன் அவன் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

               அவள் கண்ணீரைக் கண்டுகொள்ளாமல் கையிலிருந்த தட்டை அவள் கையில் திணித்தவன் “ஊட்டு..” என்றான் உத்தரவாக

               திரு “உங்களுக்கு மனசாட்சியே இல்லையா..” என்று கத்த

               “ப்ப்ப்ப்பசிக்குது..” என்றான் மீண்டும்.

               அவள் பலவீனம் தெரிந்து அவன் அடிப்பதில் இன்னும் அழுகை பெருக, புறங்கையால் கண்களை துடைத்துக் கொண்டே அவன் முகம் பாராமல் உணவை அள்ளி நீட்டினாள் அவள்.

                கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, நீட்டிய அவள் கரத்தை தன் கரத்தால் பற்றியவன் அந்த உணவை அவள் வாயிலேயே திணிக்க, அவனைக் கண்டனமாக பார்த்தாள் திரு.

            “சாப்பிடு.. ஸ்ஸ்ஸ்ஸ்சண்டை போடுவோம்..” என்று மிக நிதானமாக வாசுதேவன் கூறிட, அதற்கும் கண்ணீர்தான் பதில்.

             அவள் உண்ணமாட்டாள் என்று தெரிந்தவனாக, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி கொண்டவன் “பசிக்குது.. ண்ண்ண்ன்நீ ஸ்ஸ்ஸ்ஸ்சாப்பிட்டால் நானும்..” என்று பேசும்போதே தொண்டையை கையால் வருடிவிட்டு கொள்ள, மனம் கேட்காமல் வாயைத் திறந்தாள் திரு.

              தட்டில் இருந்த மொத்தத்தையும் ஊட்டி முடித்தவன் எழுந்து கொள்ள, அவன் கையிலிருந்த தட்டை வாங்கி கொண்டவள் உள்ளே சென்று அவனுக்கான உணவை எடுத்து வந்தாள்.

             தனக்கு முன் அவள் நீட்டிய உணவை பார்த்துக் கொண்டே அவன் அமர்ந்திருக்க, மனதிற்குள் அவனைத் திட்டிக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் திரு.

              “என்னால ஊட்டிவிட முடியாது. நீங்களே சாப்பிடுங்க..” என்று அதட்ட, அவள் மனநிலை புரிந்தவனாக அவளை வற்புறுத்தாமல் உண்டு முடித்தான் அவன்.

               அங்கேயே கையை கழுவிக்கொண்டு இருவரும் அமர்ந்துவிட, நிச்சயம் உறக்கம் வராது என்று புரிந்து போனது வாசுதேவனுக்கு. வீட்டிற்குள் செல்லும் எண்ணமில்லாமல் அப்படியே திண்ணையில் சாய்ந்தான் அவன்.

                கைகளை தலைக்கு கொடுத்து அவன் கண்மூடிக் கொள்ள, அடுத்த சில நிமிடங்களில் அவன் அருகில் கிடந்தாள் திரு. “அம்மா..” என்று மெல்லிய அலறலுடன் அவன்மீது விழுந்து, அருகில் புரண்டிருந்தாள் அவள்.

                “என்ன பண்றிங்க மாமா.. எல்லாமே உங்க இஷ்டமா.. காப்பு கட்டியிருக்கு, நினைப்பிருக்கா..” என்று அவள் கடிய,

                “நினைப்பில்லாம என்ன செஞ்சிட்டேன்.” என்றான் கணவன்.

                “என்னை விடுங்க.” என்று எழுந்து கொண்டவள் வீட்டிற்குள் நுழைந்து தனது அறையை அடைய, அங்கும் வந்தவன் அவளை பிடிப்பவன் போல் நெருங்க, “தள்ளி போங்க..” என்றாள் மனைவி.

                 “ஒன்னும் ப்ப்பண்ண மாட்டேன்.” என்று அவளை நெருங்கியவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

                “இந்த முத்தம் எதையும் மாத்திடாது.. உங்களை மாத்தவே முடியாது.” என்றவள் அவனைத் தள்ளிவிட,

               “ஏஏஏஏஏன் ம்ம்ம்மாத்தனும்… இஇஇப்படித்தான் நான்.. நீ ம்ம்ம்மாறிக்க்க்கோ.” என்றான் வாசுதேவன்.

               அவன் வார்த்தைகளில் எரிச்சலானவள் “வெளியே போய்யா.” என்று அறைக்கு வெளியே தள்ளியிருந்தாள் அவனை.

               முறைப்புடன் அவள் அறையின் கதவை சாற்றிவிட, சிரிப்புடன் அந்த அறையின் வாசலில் நின்றிருந்தான் வாசுதேவன்.

Advertisement