Advertisement

நெஞ்சம் பேசுதே 02

                    திருமகள் நாச்சியார் வீடு வந்தபோது நேரம் இரவு ஒன்பது மணியை நெருங்கியிருக்க, அவசரமாக தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இறங்கியவள் வேகமாக வீட்டின் பின்புறம் சென்றாள். அங்கே சற்று விஸ்தாரமாக விரிந்திருந்தது அந்த மாட்டுத் தொழுவம். அவள் வந்த வேகத்தைப் பார்த்து “நாந்தேன் இருக்கேன்ல.. நீ ஏன் தாயி இப்படி பதறிக்கிட்டு ஓடி வர்ற..” என்று உரிமையாக அதட்டினார் பாண்டியம்மாள்.

                    “வாயில்லாத ஜீவனுங்களை விட்டுட்டு போயிருக்கேனே.. பதறாம என்ன  செய்ய சொல்ற ஆயா…. யார் இருந்தாலும், இப்படித்தான் பதறுவேன்.. நம்மை மாதிரி பசிக்குதுன்னு வாயைத் திறந்து  சொல்ல முடியுமா அதுகளால…” என்றுவிட்டு கட்டிவைக்கப்பட்டிருந்த மாடுகளை நெருங்கினாள் அவள்.

                   அங்கிருந்த பசுமாடுகள் அவளைக் காணவும், குரல் எழுப்பி தங்கள் பாசத்தை வெளிப்படுத்த “வந்துட்டேண்டி கண்ணுகளா… சாப்பிடுங்க.. சாப்பிடுங்க…” என்று அவற்றை தட்டியும், தடவியும் கொடுத்துக் கொண்டே அருகில் நின்றாள் திரு.

                    இதற்குள் சற்று தள்ளி தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காளை கோபத்துடன் குரலெழுப்ப, “வர்றேன் இருடா..” என்று கத்திக்கொண்டே அந்த காளையை நெருங்கினாள் திரு.

                   “அவன்கிட்டே போகாத நாச்சியா… பொழுது சாஞ்சதுல இருந்தே கோபமா முறுக்கிட்டே தான் நிற்கிறான்… தீனி போடக்கூட விடல என்னை..” என்று முகத்தை சுருக்கி குறை படித்தார் அந்த பெரியவர்.

                 “நீ பிள்ளையை குறை சொல்லாத.. நீ அவனை ஏதாவது திட்டியிருப்ப. அதான் உன்னை அண்ட விடாம நின்று இருப்பான்..” என்று பேசிக்கொண்டே அந்த காளையின் கழுத்தை தடவிக்கொண்டு அவள் நிற்க, அவள் பேச்சுக்கு ஆமென்பதாக தலையசைத்தது அந்த வாயில்லா ஜீவன்.

                  திரு “பார்த்தியா..” என்பதுபோல் அந்த மூதாட்டியை முறைக்க, “ஹ்க்கும் ரொம்பத்தான்டி பண்றிங்க.. அக்காளும், தம்பியும்… நான் ஆத்தமாட்டாம எதையோ சொல்லி வைச்சா, அதுக்கு தீனி எடுக்கமாட்டானா இவன்.. இதுல உன்கிட்ட பஞ்சாயத்து வேற… நீயே தீனி வை உன் தம்பிக்கு..” என்று முறைத்துக்கொண்டே பின்வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து கொண்டார் அந்த பெரியவர்.

              அவரை சிரிப்புடன் பார்த்தவள் “ஏன்டா கருப்பா அவரை கத்த விடற.. ஒழுங்கா சாப்பிட வேண்டியது தானே..” என்று அந்த காளையிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தாள் அவள்.

               அவளைவிட உயரமான திமிலுடன் நின்றிருந்த அந்த காளை கொஞ்சலான குரலில் ஏதோ சத்தமிட, “அக்கா ஆண்டாள் கோயிலுக்கு போயிருந்தேன்டா தங்கம்..” என்று அந்த கருப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு அதற்கு திருமகள் உணவை எடுத்து வைக்க, பாண்டியம்மாளிடம் அத்தனை ஆட்டம் காட்டிய கருப்பன் இப்போது சமத்துப்பிள்ளையாக உணவை உண்ண தொடங்கியது.

                மேலும் சிறிதுநேரம் அங்கேயே நின்றவள் அங்கிருந்த மாடுகளை மேலோட்டமாக பார்வையிட்டு முடிக்கும் நேரம்தான் வந்தார் முனியன். அந்த சிறிய தொழுவத்தின் இரவு நேர காவலாளி அவர்.

                இது ரகுவரனின் ஏற்பாடு. அக்கா தனித்து இருப்பதால் அவளின் துணைக்காக பாண்டியம்மாளை வீட்டு உதவிக்கென்று அவளுடன் தங்க வைத்தவன், வேலையேதும் இல்லாமல் முதுமையில் வாடிக் கொண்டிருந்த முனியனுக்கு ஒரு சிறிய தொகையை சம்பளமாக கொடுத்து இரவு நேரங்களில் வீட்டின் பின்கட்டில் படுத்துக் கொள்ளும்படி ஏற்பாடு செய்திருந்தான்.

                திரு எத்தனை சொல்லியும் ரகுவரன் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருக்க, அவளும் அவன் போக்கிற்கே விட்டிருந்தாள்.

                பின்கட்டில் அவரைவிட்டு திருமகள் வீட்டிற்குள் வர, அதற்குள் அவளுக்கு உணவை எடுத்து வைத்திருந்தார் பாண்டியம்மாள். “வா நாச்சியா… சாப்பிடலாம்..” என்று அவர் அழைக்க,

                 “உன்னை யாரு சோறு வைக்க சொன்னது.. நான் வந்து சமைக்கமாட்டேனா..” என்று அதற்கும் வாங்கினாள் திரு.

                  “ஆமா.. நீ வந்து உன் மாட்டுக்கெல்லாம் சோறு வச்சு முடிச்சு அதுக்கு பின்ன வடிச்சு,  நாம உண்டு முடிக்ககுள்ள விடிஞ்சு கோழி கூவிடும்… வந்து சாப்பிடு..” என்று அவரும் அவளுக்கு சரியாக திருப்பிக் கொடுக்க, அவரை லேசாக முறைத்து கொண்டே கையை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள் திருமகள்.

                   வயதானவர் என்பதால் பெரும்பாலும் அவரை எதற்கும் வேலை ஏவமாட்டாள் அவள். எப்போதாவது அவர் இப்படி ஏதாவது  வைக்கையில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்துவிடுவாள்.

                   இப்போதும் உர்ரென்ற முகத்துடனே அமர்ந்திருந்தவள் தட்டில் வாய்த்த உணவை உண்டு எழ, அவளை விடாமல் பிடித்து அமர்த்தியவர் “என்ன சாப்பிட்ட நீ… வர வர சாப்பாடு குறைஞ்சிட்டே போகுது.. இப்படியே போச்சு, சின்னவனுக்கு போனை போட்டு சொல்லிடுவேன்.. ஒழுங்கா சாப்பிட்டுட்டு போ..” என்று மீண்டும் அவள் தட்டில் உணவை நிரப்பினார்.

                  மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கையில் உணவெங்கே உள்ளே இறங்கும். ஆனால், தம்பியிடம் சொல்லிவிடுவேன் என்ற அவர் மிரட்டலும் கொஞ்சமாக வேலை செய்ய, கடினப்பட்டு தட்டில் வைத்த உணவை விழுங்கியவள் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று படுத்துவிட்டாள்.

                  கோவிலில் வாசுதேவகிருஷ்ணன் கையைப் பிடித்தது காட்சியாக விரிய, தனது வலக்கையை முகத்திற்கு முன்பாக நீட்டியவள் வெகுநேரம் தன் கைகளையே வெறித்து கொண்டிருந்தாள்.

                  தன் நீண்ட விரல்கள் அவன் கையில் மொத்தமாக அடங்கியிருந்தது கண்ணில் தோன்ற, உடல் சிலிர்த்தது. தனது எண்ணம் செல்லும் பாதை தவறானது என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவள் எழுந்து அமர்ந்துவிட, கோவிலில் முரளி தன்மீது மோத வந்தது அப்போதுதான் நினைவிற்கு வந்தது.

                    அந்த நிமிடம் கோபத்தில் முகம் சிவக்க, நேரத்தைப் பார்த்தவள் பட்டென தன் அக்காவின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்தாள்.

                 மூன்று வருடங்களாக ஒதுக்கி வைத்த தங்கை அந்தநேரம் அழைக்கவும் பதறிவிட்டாள் கோதை. அவளுக்கு என்னவோ என்று துடித்துப் போனவள் உடனடியாக அழைப்பை ஏற்க, “என் நிம்மதியை பறிக்கவே வந்து பிறந்திருக்கியா நீ..” என்று அவளைப் பேசவிடாமல் அழுத்தமாக கத்தினாள் திருமகள்.

              அந்த வார்த்தைக்கே கோதையின் கண்கள் கலங்கிப் போனது. இருந்தும் தங்கையின் கோபத்திற்கான காரணம் புரியாமல் “என்ன நாச்சியா.. ஏன் இப்படி பேசற.. உன் போன் வரவும் எத்தனை சந்தோஷப்பட்டேன் தெரியுமா..?” என்று பெரியவள் துடிக்க,

               “நீ சந்தோஷமா இருந்தா போதுமாடி உனக்கு.. எப்பவும் உன்னைத்தாண்டி யோசிக்கவே மாட்டியா.. அதுதான் நீ போனதுமே உன்னை தலைமுழுகி விட்டாச்சு இல்ல.. இன்னும் ஏன் எங்களை வதைச்சுட்டு இருக்க…” என்று திருமகள் வார்த்தைகளால் நோகடிக்க,

                “என்னடி விட்டா பேசிட்டே போற.. நீ இன்னும் என்ன விஷயம்னே சொல்லல எனக்கு.. உனக்கு என்னை பார்க்க பிடிக்கலன்னு தான் உன் முன்னாடி வராம ஒதுங்கி இருக்கேன்.. அப்பாவும் நீ இப்படி பேசினா, நான் என்ன நினைக்கட்டும்..?” என்று பெரும் சோகத்துடன் அவள் வினவ,

               “நீ பின்னாடி ஒளிஞ்சிகிட்டு உன் கொழுந்தனை என் முன்னாடி அனுப்பி வச்சிருக்கியே அது போதாது…” என்று ஏளனமாக கேட்டாள் திருமகள்.

                  “யார் முரளி தம்பியா… அவர் என்ன செய்தார்.. அவர் ரொம்ப நல்லவர் திரு.. அவரை எதுவும் பேசாத..” என்று கோதை பேசும்போதே,

                  “மண்ணாங்கட்டி..” என்று வெடித்தாள் சிறியவள்.

                   “நாச்சியா..” என்று கோதை அதிர,

                  “என்னடி நாச்சியா… இப்படித்தான் முடிவு பண்ணியா உன் வாழ்க்கையை.. அவனே ஒரு பொம்பளை பொருக்கி.. அவனைப் போய் நல்லவன்னு சொல்லிட்டு திரியுறா… இங்கே பார்… நீ என்ன வேணா சொல்லிட்டுப் போ… ஆனா, அந்த வெண்ணெய்வெட்டி இனி என் முன்னாடி வரக்கூடாது..” என்று மீண்டும் அவள் மிரட்ட,

                   “என்ன ஆச்சு சொல்லேன் எனக்கு..” என்று பரிதாபமாக பெரியவள் கேட்க,

                   “ஹான் காதலிக்கிறானாம் என்னை.. என்னைதான் கட்டிக்குவானாம்.. நான் இல்லாம போனா, செத்துடுவேன்னு சொல்லிட்டு திரியுறான்.. அப்படியாவது செத்து தொலைய சொல்லு.. எனக்கு தொல்லை ஒழியும்..” என்று கத்தியவள் அவள் பேசுவதை கேட்க விரும்பாமல் அழைப்பைத் துண்டித்தாள்.

                    அலைபேசியை கட்டிலின் ஓரம் வீசியவள் கோபத்தில் சிவந்த முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டு தன் அறையில் இருந்த சாளரத்தின் அருகாமையில் வந்து நின்று கொண்டாள்.

                     அவள் வீட்டின் பக்கவாட்டில் இருந்த தென்னை மரங்களின் கீற்று வழியே  அவள் அறைக்குள்ளும் மெல்லிய தன் கதிர்களால் புள்ளியாய் ஒளி பரப்பியது வெண்ணிலா. அந்த வெள்ளி நிலவை ரசித்துக் கொண்டே சாளரத்திண்டில் அமர்ந்து கொண்டவள் அந்த இடுக்கமான இடத்தில் கால்களை மடித்து வைத்து அமர்ந்து கொண்டாள்.

                     வெகுநேரம் நிலவை வெறித்திருந்தவள் சாளரத்தின் மீதே தலையை சாய்த்து மெல்ல கண்களை மூட, மூடிய விழிகளில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டு ஆட்டம் காட்டினான் வாசுதேவ கிருஷ்ணன்.

                    அவனை விரட்ட முயன்று முடியாமல் தோற்றவள் இறுதியில் மனதை  போக்கில் விட்டு அப்படியே உறங்கிப்போனாள்.

                      இவள்கதை இப்படியிருக்க, அங்கே கணவனின் தோள் சாய்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கோதை நாச்சியார். அவள் கணவன் மனோகர் “என்னம்மா.. என்னடா..” என்று  இருந்தும் அவனுக்கு பதில் கூறாமல் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.

                      இறுதியில் “கோதை..” என்று மனோகரன் அதட்ட, அழுகையை நிறுத்தி அவனை முறைத்தாள் கோதை.

                      “என்னடி நடந்தது இப்போ.. எதுக்கு இப்படி அழுது கரையுற.. சொல்லிட்டு அழு..” என்று அவன் கோபத்துடன் கேட்க,

                       “என்ன நினைச்சுட்டு இருக்கார் உங்க தம்பி… நாச்சியா கிட்ட அவருக்கு என்ன பேச்சு.. அவகிட்ட எதையோ உளறி வச்சு இருக்காரு.. என்ன நினைக்கறீங்க நீங்க.. எனக்கு பிறந்தவீடுன்னு ஒன்னு இல்லாமலே போகணுமா…”  என்று அவளிப்பாட்டிற்கு கத்தி தீர்த்தாள் கோதை.

                       மனைவி கூறியதில் இருந்து ஓரளவு விஷயம் விளங்க “என்ன பேசினான்.. என்ன சொல்றா உன் தங்கச்சி..” என்று அதட்டல் தொனியிலேயே கேட்டான் மனோகர்.

                “உங்க தம்பி நாச்சியாளை விரும்புறேன்னு அவகிட்ட சொல்லி இருக்கார். அவகிட்ட இன்னும் ஏதோ வம்பு பண்ணியிருப்பார் போல.. ரொம்ப கோபமா பேசுறா.. அவ தனியா இருக்காங்க.. கூட துணைக்கு கூட யாருமில்ல.. அழுதுட்டு இருப்பாங்க..” என்று சொல்லும்போதே அழுதாள் கோதை.

                “சும்மா அழுதுட்டு இருக்காத கோதை.. அழறதால எந்த பிரச்சனையும் சரியாகாது. இப்போ என்ன முரளி உன் தங்கச்சியை விரும்புறதா சொல்லி இருக்கான் அவ்ளோதானே.. நான் பேசறேன் அவன்கிட்ட.. இனி அவன் கோதை பக்கமே போகமாட்டான்.. போதுமா.. நீ நம்ம குழந்தையைப் பத்தி மட்டும் யோசி… வீணா கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காத..” என்று கருவில் இருக்கும் பிள்ளையை நினைவூட்டி மனைவியைத் தேற்றினான் மனோகர்.

                  அடுத்தநாள் காலையில் அவன் தனது தம்பியிடம் பேச, “எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு மனோ.. நீயும் அண்ணியை காதலிச்சு தானே கல்யாணம் செய்துகிட்ட… அப்போ நான் ஏன் காதலிக்கக்கூடாது..?” என்று அண்ணனை மடக்கினான் முரளி.

              “நான் உங்க அண்ணனை காதலிச்சேன்.. அவர் கூப்பிட்டதும் எதுவும் பேசாம அவரோட கிளம்பி வந்தேன்.. ஆனா, என் தங்கை அப்படி கிடையாது.. செத்தாலும் அவ உங்களை திரும்பிக் கூட பார்க்கமாட்டா.. நீங்க அவளை தொந்தரவு பண்ணாதீங்க..” என்று முரளியிடம் அழுத்தமாக கோதை தெரிவிக்க,

               “ஏன் திரும்பி பார்க்கமாட்டா.. நான் அவளை என் வழிக்கு கொண்டு வருவேன்.. உங்களால தான் இப்பவும் அவ தயங்குறா.. நீங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிப்போனதால தான் என் நிலைமை இப்படி இருக்கு.. நீங்க என் விஷயத்துல தலையிடாதிங்க..  நாச்சியார் தான் என் பொண்டாட்டி.. இதை யாராலும் மாத்த முடியாது.. எப்படி நடத்திக்கணும்ன்னு எனக்கு தெரியும்..” என்று அண்ணன் அண்ணியை எடுத்தெறிந்து பேசியவன் வேகமாக வீட்டைவிட்டும் வெளியேறி  இருந்தான்.

அந்த காலை வேளையில் தனக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் நின்றிருந்தான் வாசுதேவ கிருஷ்ணன். இது ஒன்றுதான் என்று இல்லாமல் ஊருக்குள் பல தொழில்கள் இருந்தது அவர்கள் குடும்பத்திற்கு. அவனது தந்தை ராகவன் பரம்பரை பணக்காரர் இல்லை என்றாலும் மூதாதையர் கொடுத்து சென்றதை தனக்கு  பெருக்கி இருந்தார்.

                இதோ இப்போது வாசுதேவ கிருஷ்ணன் தலையெடுத்து அவனும் தொழிலைக் கையில் எடுக்க, நாளுக்குநாள் முன்னேற்றம்  தான். ஆனால், எங்கேயும் தன்னை பெரிதாக வெளிகாட்டிக் கொள்ளமாட்டான் அவன்.

               அவனுக்கு சரளமாக பேசுவதில் சிறிய அளவில் ஒரு தடங்கல் இருக்க, வார்த்தைகள் அவ்வபோது திக்கியே வரும். பிறப்பில் இருந்து வாய்க்கு வாய் பேசியே விசாலத்தை ஓய்ந்து போகச் செய்தவன் தான். ஆனால், பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் கண்முன்னே வாகன விபத்தில் தோழன் ஒருவன் உயிரிழந்திருக்க, இவன் சில காயங்களோடு உயிர் பிழைத்திருந்தான்.

                 ஆனால், அந்த பயத்திலும், அதிர்ச்சியிலும் வார்த்தைகள் எப்போதும் திக்கிவிட, விசாலாட்சி சரியாக பேசும்படி எவ்வளவோ எடுத்துக் கூறியவர் கடைசியில் அடித்தும் விட்டார் தனது செல்ல மகனை. மனம் பொறுக்காமல் மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் செல்ல, காலப்போக்கில் சரியாகிவிடும் என்றே முடித்தனர் அவர்கள்.

                 இவனுக்கும் சில பயிற்சிகளை சொல்லிக் கொடுக்க, அந்த வயதில் தொண்டை வலியெடுக்க அவற்றை பின்பற்ற முடியாமல் விட்டுவிட்டான் வாசுதேவன்.

                   பள்ளியில் சில மாணவர்கள் அவன் பேச்சை கிண்டலடிக்க, அப்போது முதலே மொத்தமாக ஊமையாகி இருந்தான் அவன். தவிர்க்க முடியாத வெகு சில சமயங்கள் தவிர்த்து பிற நேரங்களில் வாயைத் திறக்கவே மாட்டான்.

                    ஊரில்  அவன் தந்தை முக்கியஸ்தராக இருந்தாலும், எந்த பஞ்சாயத்திலும் சரி,சங்ககூட்டங்களிலும் சரி . வாசுதேவனை பார்க்கவே முடியாது. பெரும்பாலும் ஒதுங்கி வாழ்ந்தே பழகிப் போனவன் அன்னை துணையாக கோதையைக் காட்டவும் தான் தன் கூட்டிலிருந்து வெளிவர நினைத்தான் முதல் முறையாக.

                  ஆனால், அதுவும் கானல் நீராக மாறிவிட, அதன்பின்னான இந்த மூன்று வருடங்களில் அவன் வாய்திறந்து பேசிய தருணங்களை வாய்விட்டு எண்ணி விடலாம். அவன் அன்னை அழுதே கரைந்தபோதும் கூட ஆறுதலாக ஒரு வார்த்தை கூறாதவன் அவன்.

                   இப்போதும் நடக்கும் வேலைகளை மேற்பார்வை  பார்த்து நின்றவன் திருத்தங்களை உடன் நின்றிருந்த தன் நண்பன் சாரதிக்கு கண்ஜாடையில் காண்பிக்க, அவனும் வாசுதேவனின் குறிப்பறிந்து குரல் கொடுத்து கொண்டிருந்தான்.

                 அங்கு வேலையை முடித்துக் கொண்டவர்கள் அடுத்ததாக தங்கள் தென்னந்தோப்புக்கு கிளம்ப, அவர்களுக்கு எதிரே இருசக்கர வாகனத்தில் அவர்களை கடந்து சென்றாள் திருமகள் நாச்சியார். அவள் பார்வை ஒருநொடிக்கூட தன் புறம் திரும்பவில்லை என்று உணர்ந்தே இருந்தான் வாசுதேவ கிருஷ்ணன்.

                   அவனுக்கும் அவளது பார்வைகள் தேவையாக இருக்கவில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பிருந்த  அதே நிலைப்பாட்டில் தான் இப்போதும் இருந்தான் அவன். திருமகள் நாச்சியார் தனக்கு வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தான் அவன்.

                    வாழ வேண்டியவள் என்ற எண்ணமும் நிரம்ப இருக்க, மாமன் மகளாக அக்கறை இருந்ததே தவிர, ஆசையேதும் இல்லை இதுவரை.

                    அன்றும் பெரியவர்களின் கட்டாயத்தில் மேடையேறியவள் தானே.. நிம்மதியாக இருக்கட்டும் என்றுதான் விட்டுச் சென்றிருந்தான். அதன்பின்பு அவள் கண்முன் வருவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுபவன் தான்.

                   ஆனால், நேற்று கோயிலில் தானாக பார்வை அவள்மீது பதிந்திருக்க, எதேச்சையாக அவள் பின்னால் வந்த முரளியையும் கவனித்து இருந்தான். அவர்களை தொடர்ந்து கொண்டே இருந்ததால் தானோ என்னவோ, முரளி அவளை நெருங்கவும், அனிச்சை செயலாக அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டான்.

                    திருமகள் அதிர்ந்த அதே அளவுக்கு அவனும் அதிர்ந்து இருந்தாலும், திருமகளின் விலகலில் தானாகவே புன்னகை வந்துவிட்டது அப்போது.

                     இதோ இப்போதும் சரியாக திருமகள் அவனைக் கடந்த அடுத்த ஐந்தாவது நிமிடம் முரளியின் வாகனமும் அவனைக் கடந்து செல்ல, ஏதோ தவறாகப்பட்டது வாசுதேவனுக்கு.

                     ஒருநொடிக்கூட யோசிக்காமல் அவன் வண்டியை திருப்பி அவர்களைத் தொடர, அவன் நினைத்தது போலவே ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு வயல்வெளிக்கு அருகில் அவளை நெருங்கி, திருமகளின் வண்டியை மறித்திருந்தான் முரளி.

வாசுதேவ கிருஷ்ணனின் முகம் செந்தணலாக சிவந்துவிட்டது அவன் செயலில். நேற்றே அவனை நான்கு மிதி மிதித்திருக்க வேண்டுமோ என்று எண்ணிக் கொண்டவன் நிதானமாக தன் வண்டியை அவர்கள் அருகே நகர்த்த, முரளி வாசுதேவனை எதிர்பார்க்கவில்லை.

                 திருவுக்கு அவனுடன் திருமணம் நடக்கவிருந்ததையும் முன்பே அறிந்தவன் தானே. வாசுதேவனின் இடையீட்டை விரும்பவில்லை அவன்.

                 அவனை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் “நீங்க என்னன்னா இங்கே.. நாங்க லவ்வர்ஸ் ஏதோ பேசிக்க நினைச்சு இங்கே வந்தோம்.. நீங்க  பின்னாடியே வந்து நிற்கிறீங்களே..” என்று சரளமாக அவன் பேச, திருமகளுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.

               

                 

Advertisement