Advertisement

வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.

                   “ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம் போட்டுடுவேன். யாரு யார்கிட்ட மன்னிப்பு கேட்கிறது. பஞ்சாயத்துக்கு வரவும் தான் நிதானமா பேசிட்டு இருக்கேன். இல்ல, உன்னையும் உன் மகனையும் முடிச்சுட்டுதான் பேசி இருப்பேன்.” என்று வெளிப்படையாக மிரட்டினார் ராகவன்.

                 “பார்த்திங்களாய்யா.. உங்க முன்னாடியே இப்படி பேசுறாங்க அப்பனும், மகனும்.. இன்னும் யாருமில்லாத இடத்துல என் மகனை இவன் என்னவெல்லாம் பேசி இருப்பான். என் பிள்ளை தப்பு செஞ்சிருக்க மாட்டான். இவன் என் மகன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாகணும்.” என்று அவர் நிற்க,

                 “அதெல்லாம் முடியாது. உன்னால முடிஞ்சதைப் பாரு.” என்று சாரதி கூற, வாசுதேவன் அப்போதும் நெஞ்சை நிமிர்த்தித்தான் நின்றிருந்தான்.

                 “உன்னால் என்னை என்ன செய்துவிட முடியும்..” என்றுதான் நின்றான் அவன்.

                 “மன்னிப்பு கேட்கறது எல்லாம் பகையைத்தான் வளர்க்கும் கலியமூர்த்தி. விட்டுட்டு போ.. இளந்தாரிங்க தகராறை பெரிசு பண்ணாத..” என்று பஞ்சாயத்தார் அறிவுரை கூறியபோதும் கலியமூர்த்தி விடாப்பிடியாக நிற்க, “முடிஞ்சதைப் பாருடா..” என்றுதான் பார்த்துக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

                  “அப்படியெல்லாம் விட்டுட்டு போகமுடியாது. ஒன்னு அவன் மன்னிப்பு கேட்கணும்.. இல்ல, என் மகன் கையை உடைச்சது போல, அவன் கையை உடைச்சு விடணும்.. ரெண்டுல ஒன்னு நடந்தே ஆகணும்..” என்று கலியமூர்த்தி குதிக்கும்போது தான் வந்து சேர்ந்தனர் மாமியாரும், மருமகளும்.

                  கூட்டத்தை விலக்கிகொண்டு அவர்கள் முன்னே வர, வாசுதேவன் அப்போதுதான் பதட்டம் கொண்டான் உண்மையில். அன்று மாமன் பெண்ணாக இருந்தபோதே, அவள் பஞ்சாயத்தில் நின்றதை விரும்பவில்லை அவன்.

               அப்படியிருக்க, இன்று அவன் மனைவி பஞ்சாயத்திற்கு வந்து நிற்க, “இவளை யார் இங்கே வர சொன்னது..” என்று ஆத்திரம் மிகுந்தது அவனுக்கு.

              அவன் கோபம் சரியென்பதைப் போல கலியமூர்த்தியும் “இதோ வந்துட்டா இல்ல.. இவனோட பொண்டாட்டி.. இவளுக்காகத்தானே என் மகனை அடிச்சிருக்கான்.. இவளை கேளுங்கய்யா. இவ பதில் சொல்லட்டும். இல்ல, புருஷனுக்கு பதிலா இவளை என் மகன் கால்ல விழ சொல்லு.” என்றார்.

               விசாலம் “யோவ்.” என்று முன்னேறும்போதே அவர் கையைப் பிடித்துவிட்டாள் திருமகள் நாச்சியார். விசாலம் மருமகள் முகத்தைப் பார்க்க, அவள் பார்வை முழுவதும் வாசுதேவகிருஷ்ணனின் மீதுதான்.

              அவன் வாய்திறக்கக்கூடாது என்று கண்களால் மிரட்டல் விடுக்க, அவனை மீற முடியாமல் திரு நின்ற நொடிகளில் “இதோ தெரிஞ்சு போச்சுல்ல.. அவ மேல தப்பிருக்கவும் தானே, அந்தம்மாவை பேச விடாம நிறுத்தி வச்சிருக்கா.. என் மகன்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுய்யா..” என்று கலியமூர்த்தி மீண்டும் பேச, முழுக்கை சட்டையை மடித்துக் கொண்டே வாசுதேவன் முன்னேற, அதற்குமேல் பொறுக்கவில்லை நாச்சியார்.

               வாசுதேவன் நின்ற இடத்திலிருந்து அவரை நெருங்குவதற்கு முன்பே, அவள் பேச தொடங்கியிருந்தாள். தான் நின்ற இடத்திலிருந்து ஓரடி முன்னே வந்தவள் “எதுக்காக நான் உங்க பிள்ளைக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்..” என்றாள் நேரடியாக

                “உன் புருஷன் என் மகன் கையை உடைச்சிருக்கானே.. அதுக்குதான்.”

                “நான்தான் என் புருஷன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். நேத்தே இந்த நாயை கொன்னு போட்டிருப்பாங்க அவங்க. என் புருஷன் ஜெயிலுக்கு போக வேண்டாமேன்னு நாந்தான் அவரை அடக்கி கூட்டிட்டு வந்தேன். அது தப்புன்னு இப்போதான் புரியுது.” என்றாள் திருமகள்.

                 பஞ்சாயத்தில் அமர்ந்திருந்தவர் “என்னமா சொல்ற. நீயாவது புரியும்படியா சொல்லு. என்ன நடந்தது.?” என்று விசாரிக்க, இப்போது மீண்டும் கணவனின் முகம் பார்த்தாள் திருமகள்.

                 வாசுதேவகிருஷ்ணன் அவள் கண்களை சந்திக்காமல் எங்கோ பார்த்துக்கொண்டே நிற்க, “நீ பேசும்மா..” என்று ஊக்கினான் சாரதி.

                 அவளுக்கு ஆதரவாக அவள் அருகில் வேறு வந்து நின்றுகொள்ள, முரளிக்கு லேசாக பயம் தொற்றிக்கொண்டது அந்த நிமிடம்.

                 திருமகள் “நேத்து நான் அவருக்கு சாப்பாடு எடுத்துட்டு எங்க ஆலைக்கு போகும்போது, இவன்தான் வண்டியை வச்சு என்னை வழி மறிச்சது. தப்பு தப்பா பேசி, என் கையைப் பிடிக்க பார்த்தான்.. நான் பயந்து ஓட நினைக்கும்போது தான் அவங்க எதிர்ல வந்தாங்க.. நான் அழவும், அவங்க இவனை அடிச்சாங்க.”

                 “என்கிட்டே இவன் தப்பா நடக்கவும்தான் என் புருஷன் இவனை அடிச்சார். நான் புகார் கொடுக்கறேன் இவன் மேல. இந்த பஞ்சாயத்துல மட்டும் இல்ல. போலீசுக்கு போறேன். அன்னைக்கு செய்யாம விட்டதை இன்னைக்கு செய்யுறேன்.” என்று அழுத்தமாக அவள் கூறிமுடிக்க, அவள் சொன்னதை செய்வாள் என்று அவள் குரலின் உறுதியே கூறியது.

             “இந்த பொண்ணு சொல்றதை எல்லாம் ஏத்துக்க முடியாது.” என்று கலியமூர்த்தி தொடங்கும்போதே,

             “ஏய்.. மூடிட்டு நில்லுய்யா.” என்று அவரை இடைமறித்தார் விசாலம்.

              “அன்னைக்கு இந்த நாய் சொன்னதை நம்புனீங்கள்ல.. இப்போ என்னய்யா சொல்றிங்க பெரிய மனுஷங்களா.. என் மறுமவ வீட்டுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சன்னைக்கே இவனை அறுத்து போட்டிருந்தா, இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்காது.. டேய் கண்ணா.. வெட்டுடா அவனை. வர்றது வரட்டும்..” என்று சலம்பினார் அவர்.

                “வெட்டுவீங்களா.. கையை வச்சுப்பாரு தெரியும்..” என்று அவர் பேசும்போதே, அவரை கைநீட்டி இருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                “என் வ்வ்வீட்டு ப்ப்ப்ப்பொம்பளைங்களை கைநீட்டி ப்ப்ப்ப்பேசுவியா.. த்த்த்தொலைச்சிருவேன்.” என்றான் ரௌத்திரத்துடன்.

                அவன் அடித்துவிட்டதில் கலியமூர்த்தி ஸ்தம்பித்து நிற்க, “இன்னும் ரெண்டு வைடா அவனை.” என்றான் சாரதி.

                 ராகவன் மகனை தடுத்துப் பிடித்துக் கொண்டே “இப்போ என்னய்யா சொல்ல போறீங்க. என் மகன் தப்பு செஞ்சதா தானே பஞ்சாயத்து. இப்போ தெரிஞ்சு போச்சு இல்ல.. இதுக்கு என்னய்யா பதில் சொல்ல போறீங்க..” என்று பஞ்சாயத்தாரை அதட்ட, அவர்களும் முரளியின் செயலில் கொதித்துதான் போயிருந்தனர்.

                “இதுக்கு என்னய்யா சொல்றிங்க நீயும் உன் மகனும்.. பாதிக்கப்பட்ட பொண்ணு போலீசுக்கு போறேன்னு சொல்லுது. நியாயமா பஞ்சாயத்து அந்தப்பொண்ணு பக்கம்தான் நிற்கணும். நாங்க நடவடிக்கை எடுக்கட்டுமா..” என்று பஞ்சாயத்தில் இருந்தவர்கள் கலியமூர்த்தியை நெருக்க,

                “யோவ். இந்த பொண்ணு பேசறதெல்லாம் எப்படிய்யா நம்ப முடியும். அவ புருஷனுக்கு தானே பேசுவா.” என்று அப்போதும் விடாமல் அவர் வாதிட,

                 “அப்போ நான் சொல்றதை நம்பட்டும் இவங்க..” என்று கூட்டத்தில் ஒருவனாக நின்றிருந்த மனோகர் முன்வந்தான்.

                 “நீ என்னப்பா சொல்ல போற.” என்று பஞ்சாயத்தாரும், “உன்னை யாருடா இங்கே வரச்சொன்னது.” என்று தந்தையும் மிரண்டு நிற்க,

                  “இந்த வழக்குல எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லணும் இல்லையா..” என்றான் மனோகர்.

                   முரளி அண்ணனைப் பாவமாக பார்க்க, அவனை துச்சமாக பார்த்து “திருமகள் நாச்சியார் சொல்றது அத்தனையும் உண்மைதான். நேத்து இந்த சண்டை நடந்ததை நான் கண்ணால பார்த்தேன். தப்பு என் தம்பி மேல இருக்கவும் தான், அடிவாங்கட்டும்ன்னு விட்டுட்டுபோனேன்.”

                 “அதுமட்டுமில்ல.. அன்னைக்கு திருமகளோட வீட்டுக்கு இவன் போனதும், முழுக்க முழுக்க இவனோட திட்டம் தான். அது தெரிய வந்தப்போ நடந்த சண்டையில தான் வீட்டை விட்டு வெளியே வந்து தங்கியிருக்கோம் நானும் என் மனைவியும்.”

                 “இது எல்லாம் தெரிஞ்ச பின்னாடியும் இவரு அவன் ஆட்டத்துக்கு ஆடிட்டு இருக்கார். இவங்க ரெண்டுபேரும் சொல்றது அத்தனையும் பொய்தான்.” என்று குற்றவுணர்வுடன் கூறினான் மனோகர்.

                 “இதுக்கு என்னய்யா சொல்ல போற.. இதுக்குமேல நீ பேச என்ன இருக்கு.. இப்படி ஒரு பிள்ளையை பெத்துட்டு பஞ்சாயத்தை கூட்ட உனக்கு எம்புட்டு தைரியம் இருக்கணும்..” என்று ஆளாளுக்கு கலியமூர்த்தியை பேச, “இப்போ பேசுங்க கலியமூர்த்தி ஐயா..” என்று நக்கலடித்தான் சாரதி.

                  வாசுதேவன் இன்னும் மௌனம் கலையாமல் நிற்க, கலியமூர்த்தி அத்தனை குரோதத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார் அவர்களை. சொந்த மகனே எதிராக நிற்கையில் யாரை பேச முடியும் அவரால்.

                   பஞ்சாயத்தார் அவரையும் அவர் மகனையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததோடு, மாகாளியம்மன் கோவிலுக்கு மூன்று லட்சம் அபராதமும் கட்ட வேண்டும் என்று கூறிவிட்டனர். கூடவே திருமகள் நாச்சியாரிடம் முரளி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறிவிட, திருடனுக்கு தேள் கொட்டிய நிலை தந்தைக்கும் மகனுக்கும்.

                   ராகவன் பெரிய மனிதராக “எங்களுக்கு யாரையும் மன்னிப்பு கேட்க வைக்கிற எண்ணமெல்லாம் இல்லைய்யா. இனி இந்த குடும்பத்தால என் மகனுக்கும், மருமகளுக்கும் எந்த தொந்தரவும் வரக்கூடாது. இவங்க நாங்க இருக்க பக்கமே வரக்கூடாது. இதை மீறி எங்களை தொடணும்ன்னு நினைச்சா, பஞ்சாயத்து தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது. அதையும் பார்த்துக்கிடுங்க..” என்று மிரட்டலாகவே கூறி முடித்தார்.

              அத்துடன் தங்கள் வேலை முடிந்தது என்பதாக “வாம்மா..” என்று மருமகளை அழைத்தவர் மகனையும் ஒரு பார்வை பார்த்து நடக்க, விசாலம், சாரதி, திருமகள், வாசுதேவன் என்று அத்தனைப்பேரும் அவர் பின்னே நடந்துவிட்டனர்.

              முரளியும், கலியமூர்த்தியும் செய்வதறியாமல் நிற்க, மனோகர் அவர்களை நெருங்கி “ஏற்கனவே செஞ்ச பாவத்துக்கு தான் இப்படி நிற்கிறீங்க. இனியாவது ஒழுங்கா பிழைக்கிற வழியை பாருங்க.” என்று வெறுப்புடன் கூறி விலகி நடந்துவிட்டான்.

               இங்கே வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம் வீடு வந்து சேரவுமே, யாரின் முகத்தையும் பாராமல் தன்னறைக்குள் சென்று அமர்ந்துவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

               திருமகளுக்கு “மீண்டும் சண்டையா..” என்று ஆயாசமாக இருந்தது. வாசுதேவகிருஷ்ணனிடம் சண்டையிட தயாராக இல்லை அவள்.

                கடவுளே எங்களுக்குள் சஞ்சலத்தை கொடுக்காதே என்ற வேண்டுதலுடன் அவள் தண்ணீரை எடுத்துக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைய, அவளை திரும்பியும் பாராமல் சுவற்றை வெறித்து அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                திருமகள் தண்ணீரை அவனிடம் நீட்ட, பட்டென அவன் தட்டிவிட்டதில் அறையெங்கும் தண்ணீர்துளிகள். அந்த வெண்கலச்சொம்பு பெருத்த சத்தத்துடன் உருண்டு கீழே கிடக்க, மிரண்டு விழித்தவளை கண்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான் அவன்.

                “வ்வ்வ்வ்வெளியே ப்ப்ப்ப்போ..” என்ற அவன் வார்த்தையில் காயம்பட்டவள் “நான் சொல்றதை..” என்று தொடங்கும்போதே கையை ஓங்கியிருந்தான் மீண்டும்.

                  ஆனால் இந்த முறை அவளை அடித்துவிடாமல் கைகளை மூடிக்கொண்டே “வ்வ்வெளியே பஃப்போ.க்க்க்க்க்கோபப்படுத்த்தாத.” என்றான் ஆத்திரம் குறையாமல்.

                 “எங்கே போக சொல்றிங்க என்னை.” என்று அப்போதும் அவனை விடாமல் திரு நிற்க,

                   “ஏங்கேயோ ப்ப்போடி..” என்று பிடித்து தள்ளியிருந்தான் அவளை.

                   அவன் செயலிலும் அவன் வார்த்தைகளிலும் மொத்தமாக உடைந்து போனாள் பெண்ணவள். கண்ணீரோடு இரு நிமிடங்கள் அங்கேயே நின்று மவன் கண்டுகொள்ளாமல் விட, கண்களைத் துடைத்துக் கொண்டவள் வீட்டிலிருந்த பெரியவர்கள் இருவரிடமும் ஏதும் பேசாமல் நேரே தங்கள் வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தாள்.

Advertisement