Advertisement

நெஞ்சம் பேசுதே 18

                  மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால் ராகவன் இருக்கையில் அமராமல் மகனுடனே நின்று கொண்டார்.

                 பஞ்சாயத்தார் “நீங்க வந்து உட்காருங்க ஐயா.. யாரா இருந்தா என்ன, விசாரிச்சு தானே தீர்ப்பு சொல்லப் போறோம்.. நீங்க உங்க இடத்துல இருங்க..” என்று அழைத்தபோதும், மறுத்து மகனுடன் நின்றுவிட்டார் மனிதர்.

                 பஞ்சாயத்து ஆரம்பிக்க, கலியமூர்த்தியிடம் தான் விசாரணை தொடங்கியது. கலியமூர்த்தி “ஏற்கனவே எங்க ரெண்டு குடும்பத்துக்கும் பகை இருக்கறது ஊருக்கே தெரிஞ்ச விஷயம். என் மகன் விரும்பின பொண்ணை வலுக்கட்டாயமா தாலி கட்டி இழுத்துட்டு போய்ட்டான் இந்த வாசு..” என்று அவர் முடிப்பதற்குள்

                   “யோவ்.. யாரை அவன் இவன்னு பேசற.. உன் பிள்ளை யோக்கியதை என்னன்னு ஊருக்கே தெரியும்.. எங்க வாசுவை பத்தி நீ சொல்றியா.. மரியாதையா பேசல, கழுத்தை திருப்பி கையில கொடுத்திடுவேன்.” என்று ஒற்றைவிரல் நீட்டி மிரட்டினான் சாரதி.

                    “டேய் பொடிப்பைய நீ. என்னை விரல் நீட்டி பேசற அளவுக்கு ஆகிடுச்சா. இளந்தாரி பயலை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறிங்களாய்யா…” என்று பஞ்சாயத்தில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து அவர் சத்தமிட,

                     “அவன் தப்பா எதுவும் பேசலையே கலியமூர்த்தி. சின்னப்பசங்க கிட்ட சரிக்கு சரியா நின்னா, அவன் பேச்சும் இப்படித்தானே வரும். நீ முதல்ல மரியாதையா பேசி பழகுய்யா.. வாசு நாங்க பார்த்து வளர்ந்த பையன். எங்க தலைவர் மகன்.. அவனை நீ மரியாதைக்குறைவா பேசினா, அவன் கூட்டாளி சும்மா இருப்பானா.” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர் கலியமூர்த்தியை அடக்கினார்.

                 “யோவ். அடிவாங்கிட்டு நிற்கிறது என் மகன்யா.. என் பிள்ளையை அடிச்சு கையை உடைச்சு விட்டவனுக்கு நான் மரியாதை வேற கொடுக்கணுமா.”

                 “உன் மவன் கையை உடைக்கிற அளவுக்கு அவன் என்ன செஞ்சானோ.. அதை முதல்ல கேளுய்யா..” என்றான் சாரதி.

                  ராகவன் “சாரதி..” என்று அதட்ட, வாசுதேவகிருஷ்ணன் பார்வையால் நண்பனை அடக்கி வைத்தான்.

                 கலியமூர்த்தி தொடர்ந்து “என் பிள்ளையை எதுக்கு அடிச்சான்னு கேளுங்கய்யா.. என் பிள்ளை கை உடைஞ்சு நிற்கிறான். நானும் இதே ஊர்க்காரன் தான.. எனக்கும் ஜாதி சனமெல்லாம் இருக்கீங்க இல்ல இங்கே.. என்ன சண்டையா வேணா இருக்கட்டும்.. என் மகன் கையை உடைப்பானா இவன்.. அதுக்கு என்னய்யா பதில் சொல்றிங்க நீங்க..” என்று கேட்டார் பஞ்சாயத்தாரிடம்.

                  “இதுக்கு என்ன தம்பி சொல்றிங்க.. ஏன் அவனை அடிச்சீங்க.” என்று பஞ்சாயத்தார் வாசுதேவனிடம் கேள்வியெழுப்ப, அவன் சாரதியைப் பார்த்தான்.

                   “நாங்க ரெண்டு பேரும் ஆலைக்கு போயிட்டு இருக்கும்போது அவன்தான் குறுக்க வந்து வம்பிழுத்தான். எங்களை தப்பா பேசினான்.. கூட ரெண்டு ஆளுங்களை வேற கூட்டிட்டு வந்திருக்கான். நாங்க அடிக்காம விட்டிருந்தா, எங்களை அடிச்சிருப்பாங்க..” என்றான் சாரதி.

                    “யோவ்.. அவன் என்னய்யா பேசறது.. எவன்மேல புகார் கொடுத்து இருக்கேனோ, அவனை பேச சொல்லு.” என்று அவர் எகிறும்போதே, காரில் வந்து இறங்கினான் முரளி.

                   ஒரு சேரில் அவன் அமர்த்தப்பட, அவன் வருகையை எதிர்பார்க்கவில்லை வாசுதேவகிருஷ்ணன். மருத்துவமனையில் தான் இருப்பான் என்று நினைத்திருக்க, அவன் வந்து நிற்கவும் லேசாக யோசனையானான் அவன்.

                    அதுவும் அவன் அமர்ந்திருந்த தோரணையே சொன்னது. நிச்சயம் ஏதோ திட்டமிடுகிறான் என்று. “என்னதான் நடக்கிறது பார்க்கிறேன்.” என்று வாசு அமைதியாக நிற்க,

                     “நீயே சொல்லுப்பா.. என்ன நடந்தது.” என்று முரளியிடம் கேட்டனர் பஞ்சாயத்தார்.

                 அவன் பதில் கூறும்முன்பே “அவன் என்னய்யா சொல்றது.. அதான் நான் சொல்லிட்டேனே..” என்று இடையிட்டான் சாரதி.

                 “என்ன சொன்னிங்க அண்ணா நீங்க.. நேத்து இவர் என்னை அடிச்சப்போ, நீங்க இவரோட இருந்திங்களா.. ” என்றான் முரளி.

                 “ஏன் வாங்கின அடில நடந்ததெல்லாம் மறந்து போய்டுச்சா.. இல்ல, நேத்து வாங்கினது போதலையா..” என்றான் சாரதி.

                 முரளி நக்கலாக சிரித்து “இவர் பொய் சொல்றாரு. நேத்து வாசு என்னை அடிச்சப்ப, இவர் அந்த இடத்துலே இல்ல.. நானும் என் ப்ரெண்ட்ஸும் சும்மாதான் பேசிட்டு இருந்தோம்.. அப்போ வாசு அந்தப்பக்கமா வண்டியில வந்தார்.”

                 “அவரோட அவர் பொண்டாட்டி நாச்சியாவும் இருந்தா.. அவ இவர்கிட்ட ஏதோ சொல்லவும், இவர் எங்களை முறைச்சுட்டு, அடிக்க வந்தார். பதிலுக்கு என் ப்ரெண்ட்ஸ் இவரை அடிக்க ட்ரை பண்ணாங்க, ஆனா, இவர் அவங்களை அடிச்சு விரட்டிட்டு என் கையை உடைச்சுட்டார். நான் சொல்றது எல்லாமே உண்மை.”

                 “உங்களுக்கு சந்தேகம் இருந்தா, என் ப்ரெண்ட்ஸை விசாரிச்சுக்கோங்க.” என்றான் முரளி. கூட்டத்திலிருந்து அவன் நண்பர்களும் அவன் அருகில் வந்து நிற்க, வாசுவை எகத்தாளமாக பார்த்தான் அவன்.

                    வாசு அவனை திரும்பிக்கூட பாராமல், நேர்பார்வையாக காளியம்மன் கோவில் கோபுரத்தை பார்த்து கையை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

                   பஞ்சாயத்தில் “நீ என்னப்பா சொல்ற.” என்று அவனிடம் கேட்க,

                  சாரதி “அதுதான் ஏற்கனவே சொல்லிட்டோம் இல்ல.. நாங்க ரெண்டு பேரும் தான் அடிச்சோம்.” என்றுவிட,

               கலியமூர்த்தியின் ஆதரவாளர் ஒருவர் “தம்பி.. நீ சொல்றதுக்கு என்ன சாட்சி.. அந்த புள்ள அவன் கூட்டாளிங்களை சாட்சிக்கு நிறுத்தியிருக்கான் இல்ல.. உன் பக்கத்துக்கு என்ன சாட்சி இருக்கு. முதல்ல நீ வாசுவோட இருந்ததுக்கு என்ன ஆதாரம்.” என்று சாரதியை அதட்ட

                “யோவ்.. நாந்தான் ஆதாரம்.. நானேதான் சொல்றேனே.. பிறவு என்னய்யா..”

               “அதெப்படிப்பா ஒப்ப முடியும்.. நீ அடிக்கவே இல்லன்னு சொல்றானே அவன்.”

               “அவன் சொல்றதை மட்டும் எப்படி நம்புவீங்க..”

               “அவன் அடிச்சன்னு சொன்னாதான அவனை விசாரிக்க, அவன்தான் உன்மேல தப்பியில்லன்னு சொல்லிட்டானே.. நீ தள்ளி நில்லு..” என்று சாரதியை பஞ்சாயத்தார் தள்ளி நிறுத்த

                ராகவனும் “அமைதியா இரு சாரதி..” என்று அவனை தன்பக்கம் இழுத்து நிறுத்த, அவரை முறைத்துக்கொண்டே விலகி நடந்தவன் திருமகளுக்கு அழைத்துவிட்டான்.

                  எடுத்த எடுப்பில் “என்னமா பண்ற நீ.. இங்கே என்ன நடக்குது.. நீ வீட்ல உக்காந்துட்டு இருப்பியா.. கிளம்பி வா.. உன் புருஷன் வாயைத் திறக்கமாட்டான் போல.” என்று சாரதி பொரிந்து தள்ள,

                “அவர் வரக்கூடாதுன்னு சொல்லிட்டார் அண்ணா..” என்று அப்போதும் தயங்கியவளாகவே கூறினாள் திருமகள்.

                 “உன் புருஷன் ஊர்ஜனத்துக்கிட்ட மன்னிப்பு கேட்டா பரவாயில்லையா உனக்கு.. இங்கே இவனுங்க அதுக்குதான் காய் நகர்த்திட்டு இருக்கானுங்க.. நீ வீட்லேயே இரு..” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டான் சாரதி.

                அவன் பேசி முடிப்பதற்கு முன்பே வாசுவிடம் விசாரணை தொடங்கியிருந்தது. “நீ என்னப்பா சொல்ற.. அடிச்சியா அவனை..” என்று பஞ்சாயத்தார் வினவ

                “ஆம்..” என்பதாக தலையை மட்டுமே அசைத்தான் வாசுதேவன்.

                “எதுக்கு அடிச்ச வாசு..” என்று மீண்டும் கேள்வியெழுப்ப,

                சில நிமிடங்கள் தாமதித்தவன் நிறுத்தி நிதானமாக “ஏன்னை த்த்த்தப்பா ப்ப்ப்ப்பேசினான் ஆட்ட்டிச்சேன்..” என்று அழுத்தமாக கூற,

                 “என்ன பேசினான்ய்யா..” என்றனர் மீண்டும்.

                  வாசு மீண்டும் மௌனம் காத்தவன் சில நிமிடங்களுக்கு பின்பே பேசினான். “அதெல்லாம் ஏஏஏஎதுக்கு.. அவனை ஆட்ட்டிச்சது ன்ன்னான் த்த்தான்.. என்ன்ன இப்ப்போ.. ப்ப்பஞ்சாயத்துக்கு அபராதத்தை ன்ன்னான் க்க்கட்டுறேன்..” என்றான் முடிவாக

                “யோவ்.. இதுல இருந்தே தெரியலையா உங்களுக்கு.. என் பிள்ளையை அடிச்சு கையை உடைச்சுட்டு அபராதம் கட்டுவானா இவன்.. என் பிள்ளைக்கு வைத்தியம் பார்க்க வக்கில்லாமயா இங்கே வந்து நிற்கிறேன் நான்.. வகுந்துடுவேன்..” என்று கலியமூர்த்தி எகிற,

                 “யோவ்.. யாரைப்பார்த்து என்ன பேசற.. அவன் மேல கையை வைய்யா பார்க்கலாம்.. ” என்று எட்டி கலியமூர்த்தியின் சட்டையைப் பிடித்துவிட்டான் சாரதி.

                  ராகவன் “சாரதி..” என்று அதட்டியது, அவன் கையைப் பிடித்திழுக்கப் பார்த்தது என்று எதற்குமே அசையவில்லை அவன்.

                கலியமூர்த்தியை கழுத்தோடு இறுக்கியவனாக பிடித்திருக்க, அவர் பக்கத்துக்கு ஆட்களும் அவருக்கு துணை சேர அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது. பஞ்சாயத்தார் “யோவ் விடுங்கய்யா.. ரெண்டு பெரும் தள்ளி நில்லுங்கய்யா..” என்று அவர்களை பிரித்துவிட பார்க்க, வாசுதேவன் அப்போதுதான் அடக்கினான் நண்பனை.

                 “நில்லுடா..” என்ற வாசுதேவனின் ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டவனாக சாரதி நிற்க, கலியமூர்த்தியை எள்ளலாக பார்த்தான் வாசுதேவன்.

                   “டேய் உன்ன..” என்று கலியமூர்த்தி மீண்டும் முன்னேற “வாடா பார்க்கலாம்.. உன்னை இங்கேயே படுக்க வைக்கிறேன் வாடா..” என்று மரியாதையை கைவிட்டு எகிறினான் சாரதி .

                வாசு “டேய்..” என்று அதட்ட, சாரதி அமைதியாக நிற்கவும், “இதுக்கு என்னய்யா சொல்றிங்க.. என்னய்யா நடக்குது இந்த பஞ்சாயத்துல..” என்று மீண்டும் தொடங்கினார் கலியமூர்த்தி.

               “பேசிட்டு இருக்கும்போதே ஒரு பெரிய மனுஷன் சட்டயைப் பிடிக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு சாரதி.. வாசு மேல தானே புகார் கொடுத்திருக்கு.. அவனே அமைதியா இருக்கான் உனக்கென்ன..”என்று சாரதியை பஞ்சாயத்தார் கண்டிக்க, அவனை கொலைவெறியுடன் பார்த்திருந்தார் கலியமூர்த்தி.

                “நாங்க தான் விசாரிச்சுட்டு இருக்கோம்ல. நீ வேற ஏன்ய்யா வாயை குடுக்கற.. அமைதியா நில்லுய்யா..” என்று கலியமூர்த்தியையும் பஞ்சாயத்தார் அடக்கிவிட, அப்போதும் வாசுவையும், சாரதியையும் முறைத்துக்கொண்டு தான் நின்றிருந்தார் அவர்.

                 ராகவனிடம் “நீங்க சொல்லுங்கய்யா. என்ன செய்யலாம் இப்போ. வாசுத்தம்பி அந்த பையனை அடிச்சதை ஒத்துக்கிட்டார். ஆனா, ஏன்னு கேட்டா பதில் வரல.. இதுக்கு என்ன சொல்றிங்க.” என்று ராகவனிடமே ஒருவர் கேட்க,

                  “அதுதான் அவன் சொல்லிட்டானேய்யா.. அடிச்சதுக்கு என்ன தண்டனையோ அதை சொல்லுங்க. வழக்கமா நடக்கிறது தானே. பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டவும் சம்மதிச்சுட்டான். வேற என்ன செய்ய சொல்றிங்க..” என்று ராகவன் கூறிவிட,

                “அது எப்படி. என் மகனை அடிச்சுட்டு இவங்க அபராதம் கட்டுவாங்களா.. அப்போ நானும் இவனை நாலு சாத்து சாத்திட்டு அபராதம் கட்டட்டுமா..” என்று கலியமூர்த்தி மீண்டும் வாயைவிட

                 “முதல்ல அவன் முன்னாடி நில்லு.. அப்புறம் அவனை சாத்துறதை யோசிக்கலாம். பஞ்சாயத்துன்னு பார்க்கிறேன்.. இல்ல, உன் பேச்சுக்கு நானே முடிச்சு விட்ருவேன் உன்னை.” என்றான் சாரதி.

                   “நீ வாயை மூடுப்பா..” என்று அவனை அதட்டிய ராகவன் “என்னய்யா செய்ய சொல்ற.. சின்னப்பசங்க சண்டை போட்டு இருக்கானுங்க.. உன் பிள்ளைக்கு கை உடைஞ்சிடுச்சு.. என்ன செய்யணும்னு சொல்ற..” என்றார் கலியமூர்த்தியிடம்.

                 கலியமூர்த்தி நிதானமாக “மன்னிப்பு கேட்க சொல்லு.. உன் மகனை என் மகன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு. அவனை அடிச்சது தப்புன்னு சொல்லி மன்னிப்பு கேட்கணும்.” என்றார் கலியமூர்த்தி.

Advertisement