Advertisement

நெஞ்சம் பேசுதே 15

                  திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக பதில்களையும் வேண்டி நிற்கவில்லை அவள்.

                 அவன் தேவைகளை அழகாக கவனித்துக் கொண்டவள் அவன் முகம் பார்க்க மட்டும் மறுத்தாள். வாசுதேவகிருஷ்ணனும் அவளை முறைத்துக்கொண்டே திரிந்தானே தவிர்த்து, அவளை சரிசெய்யும் வழி தென்படவில்லை அவனுக்கும்.

                   மூன்று நாட்களும் இப்படியே நகர, இதில் ரகுவரன் வேறு இன்னும் கல்லூரிக்கு கிளம்பாமல் அமர்ந்திருந்தான். திரு கேட்டதற்கும் “ஸ்டடி ஹாலிடேஸ். ரெண்டு நாள்ல அவங்களே லீவ் விட்டுடுவாங்க.. அதனாலதான் கிளம்பி வந்தேன்..” என்றான்.

                    திரு அவன் கூறியதை நம்பி அவனை கேள்வி ஏதும் கேட்காமல் விட்டிருக்க, அவன் அடுத்தநாள் காலையில் கோதையின் வீட்டிற்கு சென்று நின்றிருந்தான். அவள் கணவன் அந்த மனோகரனும் வீட்டில் இருக்கையிலேயே, “உனக்கான வாழ்வை நீயே தேர்ந்தெடுத்து, உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துட்டு இருக்கக்கா.. ஆனா, அவ அப்படியில்ல. உன்னால அவ வாழ்க்கையே கையை விட்டு போகிற நிலையில தான் இருந்திருக்கா. அவ மனசுல இருந்த எண்ணங்கள் உனக்கு தெரிய வாய்ப்பில்ல.. ஏன் அவ கூடவே இருந்த எனக்கே தெரியாது.”

                    “அவ அவளோட வாழ்க்கையை நிம்மதியா வாழணும்னு நான் நினைக்கிறேன். நீ எந்த காரணத்துக்காகவும் அவ முன்னாடி போய் நிற்காத. உன் வாழ்க்கையை பத்தி இதுவரைக்கும் நாங்க ஒரு கேள்வியும் கேட்டதில்லை. ஏன் இப்படி செஞ்சேன்னு கூட உன்னை நாங்க கேட்கல..”

                    “நீ அப்படியே இருந்திரு.. அதுதான் எல்லாருக்கும் நல்லது. உனக்கு மூணு வருஷம் கழிச்சு பிறந்த வீட்டு மேல பாசம் பொங்கிருச்சுன்னா, அதுக்காகவெல்லாம் மறுபடியும் அவ வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது.”

                  “நீ இதுவரைக்கும் எங்களுக்காக செஞ்சதே போதும். எங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னு நினைச்சா, எங்க பக்கமே வராம இரு..” என்றவன் வார்த்தைகளில் கோதை கண்ணீர் வடிக்க, மனோகரன் கோபம் கொண்டான்.

                  “என்ன பேசற ரகு நீ. உன்னை கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லைதான். ஆனா, உன்னைவிட வயசுல பெரியவ அவ. உன் கூட பிறந்தவ, மாசமா இருக்கா.. அவகிட்ட இப்படி பேசுவியா நீ..” என்று அவன் ரகுவைக் கண்டிக்க,

                   “என்னை விட வயசுல பெரியவ.. எங்ககூட பிறந்தவ.. எப்பவும் எங்களை பத்தி யோசிச்சதே இல்ல சார். இப்பவும் உங்க வீட்ல இருந்து உங்களை துரத்தி விடவும் தான் இவளுக்கு எங்க நியாபகம் வந்திருக்கு. ஆனா, இன்னும் இவளோட அவசரபுத்தி மாறவே இல்ல.”

               “என் மாமா உங்களுக்கு உதவின்னு செஞ்சதை அவர் பொண்டாட்டிகிட்ட கூட சொல்லல.. ஆனா, இவ திருகிட்ட என்னென்னவோ பேசி வச்சிருக்கா.. இவளால அவங்க ரெண்டு பேருக்கிடையில சண்டை. கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு மாதம் கூட முடியல. அவ அழுதுட்டு இருக்கா அங்கே.” என்று ரகு பேசி முடிக்க, மனோகரனுக்கும் சங்கடமாகிப் போனது மனைவியின் செயலில்.

                 எதுவும் பதில் பேச முடியாமல் அவன் மௌனம் காக்க, “எங்களை விட்டுட்டு போன இவளைவிட, எனக்காகவே வாழ்ந்த திரு முக்கியம் எனக்கு. அவளுக்காகத்தான் இங்கே வந்து பேசிட்டு இருக்கேன். ப்ளீஸ்.. உங்க மனைவிக்கு புரிய வைங்க.. இவளால என் அக்காவோட வாழ்க்கையில எந்த பிரச்சனையும் வர்றதை நான் விரும்பல.” என்று கட்டளையிடும் தொனியில் கூறியவன் அவன் பதிலைக் கேட்க அங்கே நிற்காமல் நகர்ந்து விட்டான்.

                 ரகுவரன் அதோடு நிற்காமல் அவன் வீட்டு வேலையாள் முனியனின் வீட்டிற்கும் சென்று பார்க்க, முனியன் வீட்டில் இல்லை.  வயலுக்கு சென்றிருப்பதாக அவர் மருமகள் கூற, நேரே வயலுக்கே தேடி சென்றான் அவன்.

                  அவரிடமும் “ஏன்ய்யா இப்படி பண்ண.. என்ன குறை வச்சோம் உனக்கு.. என் அக்காவை பத்தி தப்பா சொல்லுவியா நீ..” அதட்டலாக கேட்டவன் அவர் கழுத்தில் போட்டிருந்த துண்டை கொண்டே அவர் கழுத்தை இறுக்க, எங்கிருந்தோ வந்து சேர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                  வந்தவன் “விடுடா அந்தாளை..” என்று ரகுவரனை அதட்டிக்கொண்டே அவன் கையில் இரண்டு தட்டு தட்ட, உடும்பு பிடியாய் பிடித்திருந்தவனோ அசையவே இல்லை.

                  “ரகு.. வ்விடு சொல்றேன்ல..” என்று வாசுதேவகிருஷ்ணன் கடுமையுடன் முறைக்க, அதன்பிறகே ரகுவரனின் கைகள் கொஞ்சமாக தளர்ந்தது.

                   “என்னை மன்னிச்சிடுய்யா..” என்று அந்த முனியன் ரகுவரனின் கால்களில் விழ, “யோவ்.. எழுந்து போய் தொலைய்யா…” என்று அவரை காலால் உதைத்து தள்ளினான் வாசுதேவகிருஷ்ணன். அவர் வயதைக்கூட பொருட்படுத்தவில்லை அவன்.

                    அவன் செயலில் ரகுவரனும் முன்னேற, அவனை இழுத்து பிடித்துக் கொண்டான் விடாமல். அந்த முனியன் உயிர் பிழைத்தால் போதுமென்று வேகமாக நகர்ந்துவிட, “நீங்க ஏன் இப்போ இங்கே வந்திங்க..” என்று மீண்டும் ஒருமுறை மாமனிடம் மல்லுக்கு நின்றான் மச்சான்.

                     “வாடா..” என்று அதட்டலாக உரைத்த வாசுதேவகிருஷ்ணன், ரகுவரன் அசையாமல் நிற்கவும்  “டாக்டருக்கு படிக்கிற ன்னு பார்க்கிறேன்.. இல்ல, கழுத்து மேல ரெண்டு வச்சு இழுத்துட்டு போய் உன் அக்கா முன்னால நிறுத்திடுவேன்..” என்றான் கடினமாக.

                  ரகு அவன் பேச்சில் முகம் திருப்ப, “இதுக்கா உன்னை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்கிறா அவ.. உன் அக்கா உங்கிட்ட கேட்டாளா.. இதெல்லாம் செய்ய சொல்லி.. நீ எதுக்கு ஊருக்கு வந்த.. உன் அக்காவை பார்க்கத்தான.. பார்த்துட்டு கிளம்பாம இன்னும் உனக்கு இங்கே என்ன வேலை..” என்று பெரியவனாக பேசினான் வாசுதேவகிருஷ்ணன்.

                  “என் ஊர் இது.. என்னை வரக்கூடாது சொல்றிங்களா நீங்க.. என் அக்காவை பத்தி அவன் தப்பா பேசுவான்.. நான் வேடிக்கை பார்க்கவா.. அவனையெல்லாம் இத்தனை நாள் விட்டு வச்சதே தப்பு.. என் கண்ல படாம ஒளிஞ்சிட்டு இருந்தவனை நான் தேடிக் கண்டுபிடிச்சா, அவனை அசால்ட்டா அனுப்பி வைக்கிறிங்க நீங்க..”

                  “தேடிக் கண்டுபிடிச்சு அவனை என்ன செய்யுறதா உத்தேசம்.. கொன்னுட்டு ஜெயிலுக்கு போக போறியா.. வெறும் அம்பு இவன். அவன் பின்னாடி இருந்து வேலை பார்த்தவனை என்ன செய்வ.. மரியாதையா சென்னைக்கு கிளம்பு நீ..’

                 “அவன் பேசியதும், அசிங்கப்படுத்தியதும் என் பொண்டாட்டியை.. அவனுங்களை என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.. இவன் செஞ்சதுக்கு தான் பெத்த பிள்ளைங்க காரி துப்பி, வயசான காலத்துல இப்படி வயக்காட்டுல வந்து விழுந்து கிடக்கான்..”

                 “இதுக்கு மேல செய்யவும் எனக்கு தெரியும்.. நீ சென்னைக்கு கிளம்பு..” என்று கண்டிப்புடன் கூறிய வாசுதேவன் “வா.” என அழைத்து முன்னே நடக்க, அவனை மறுக்க மனதில்லாமல் பின்னே நடந்தான் ரகுவரன்.

                  தனது வண்டியில் ரகுவரனை ஏற்றிக் கொண்டவன் தங்கள் வீட்டுக்கே வந்து நிற்க, “இல்ல.. நான் வீட்டுக்கு போறேன். படிக்கிற வேலை இருக்கு..” என்று வாசலோடு புறப்பட நினைத்தான் ரகு.

                  “ஊன் அஅக்காவை க்க்கூப்பிடறேன் சொல்லிட்டு போ..” என்று வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் வாசுதேவன்.

                  “இவர் சொல்றது எல்லாத்துக்கும் தலையாட்டணுமா.” என்று கோபமான கோபம் ரகுவரனுக்கு.

                   அவன் வீட்டிற்குள் செல்லவும் முடியாமல், அங்கிருந்து நகரவும் மனம் வராமல் வாசலில் நிற்க, வீட்டிற்குள் சென்றவனோ “உன் மாமியாரோட தம்பி மகன்  வந்திருக்கான் பாரு..” என்றான் மனைவியிடம்.

                     அவன் வேண்டுமென்றே அப்படி கூறிவைக்க, திரு சமையலில் கவனமாக நின்றிருக்க அவளுக்கு புரியவே இல்லை. அவள் வாசுதேவனைக் கேள்வியாக பார்க்க, “போய் பாருடி..” என்று வாசலைக் கைகாட்டி அறைக்குள் சென்றுவிட்டான் வாசுதேவன்.

                   அவனைத் திரும்பி பார்த்துக்கொண்டே திரு வாசலுக்கு வர, இன்னும் வாசலில்தான் நின்றிருந்தான் ரகுவரன்.

                  அவன் வந்ததே திகைப்பு என்றால், வாசலிலேயே நின்றிருக்க, வாசுதேவன் இன்றும் ஏதாவது பேசிவிட்டானோ என்றுதான் பதறினாள் திருமகள்.

                  “என்னடா.. ஏன் வாசலிலேயே நிற்கிற.. மாமா ஏதாவது சொல்லிட்டாரா திரும்ப.” என்று பரபரத்தாள் திருமகள் நாச்சியார்.

                  “அவர்தான் கூட்டிட்டு வந்தார்..” என்று இன்னும் அவளை திகைக்க வைத்தான் உடன்பிறந்தவன்.

                  திருமகள் “என்னடா நடக்குது இங்கே.” என்று பார்த்திருக்க, ரகுவரன் அவள் கையைப் பிடித்து “நான் வீட்டுக்கு போறேன்கா.. என்னை உள்ளே கூப்பிடாத.” என்று மட்டும் கூற, திருவுக்கு என்ன சொல்வதென புரியவில்லை.

                   “ஒன்னும் ஆகல. முக்கியமா எனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் எந்த சண்டையுமில்ல.. ஆனா, என்னால உள்ளே வர முடியல.. உன் தம்பியா வரவவேண்டாம்ன்னு சொல்லிட்ட பிறகு, இந்த வீட்டுக்குள்ள வர எனக்கென்ன அவசியம் இருக்கு.. என்னை கூப்பிடாதக்கா ப்ளீஸ்.” என்றவன் திருமகளை பாவமாக பார்த்து நிற்க

                “சரி கிளம்பு.” என்றுவிட்டாள் திருமகள் நாச்சியார்.

                  ரகுவரன் அவள் இத்தனை எளிதாக ஒப்புக்கொள்வாள் என்று எதிர்பார்த்து இராததால், ஆச்சரியமாக அவளைப் பார்க்க, சிரித்தவள் “என் தம்பியா வா.. அப்போ கூப்பிடறேன்.” என்றுவிட, ரகுவரனும் சிரிப்புடன் “தேங்க்ஸ் நாச்சியா..” என்றான் நிம்மதியுடன்.

                 தமக்கை தன்னை புரிந்துகொண்டது அத்தனை ஆறுதலாக இருந்தது அவனுக்கு. அந்த இதத்துடனே இன்னும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தவன் தமக்கையிடம் விடைபெற்று தன் வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.

                      அவனை அனுப்பிவைத்து திரு மீண்டும் சமையல் அறைக்குள் நுழைந்துவிட, விசாலம் நின்றிருந்தார் அங்கே. அங்கே அவருடன் சென்று நின்றால் நிச்சயம் கேள்விகளால் துளைத்து எடுப்பார் என்பதால், வந்த தடம் தெரியாமல் வெளியேறியவள் வீட்டின் பின்பக்கம் வந்து அமர்ந்துகொண்டாள்.

              தம்பிக்கும், கணவனுக்கும் இடையில் என்ன நடந்திருக்கும்?? ஏன் அழைத்து வந்தான்.? என்று ஆயிரம் யோசனைகள். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரிடமும் கேட்கும் துணிவில்லை.

              ரகுவரன் வீட்டிற்குள் வராமல் சென்றதை நினைத்து சற்றே வருத்தமிருந்தாலும், “கொஞ்சநாள் போகட்டுமே.. அவரும் மதித்து தான் அழைக்கட்டுமே அவனை.” என்று தேற்றிக் கொண்டாள் தன்னை.

               மனம் வாசுதேவனையும் தொட்டு மீள, “மாமியாரோட தம்பி மகனாம்.. ஏன் என் தம்பி இல்லையா.” என்று மீண்டும் கொஞ்சம் சிணுங்கி கொண்டது மனது.

               அவள் தனக்குள் அசைபோட்டவளாக அமர்ந்திருக்க, வாசுதேவன் வந்து நின்றான் அவள் பின்னே. முன்னே தரையில் விழுந்த அவன் நிழலைக்கொண்டே அவனை கண்டுகொண்டவள் அப்போதும் எதுவும் பேசாமல் நகர்ந்துவிட, அவள் பின்னோடு அறைக்குள் நுழைந்தான் வாசுதேவன்.

                “ஏன் அவன் உள்ளே வரல.?” என்று திருவிடம் அவன் கேட்டு நிற்க,

                “அவனுக்கு கொஞ்சம் மானம், மரியாதை எல்லாம் இருக்கே.. அதனாலதான் வரல. அதோட அவன் வந்தா, என் தம்பியாவே வரட்டும். என் மாமியாரோட தம்பி மகனா இந்த வீட்டுக்குள்ள அவன் வரவேண்டாம்.” என்று நிமிர்வுடன் பதில் கொடுத்தாள் திருமகள் நாச்சியார்.

                 “வாயைப் பாரு.” என்று உள்ளுக்குள் அலுத்து கொண்டாலும், ‘உன் தம்பி’ என்று ஒப்புவதாக இல்லை அவன்.

                  “அவன் வரவே வேண்டாம் விடு.” என்று சாதாரணமாக முடித்து கட்டிலில் அமர்ந்து கொண்டே “உன் மாமியாரோட தம்பி மகன் அவன் அக்க்காவுக்கு ன்நல்லது செய்யுறதா நினைச்சு, வேண்டாத வேலை பார்த்துட்டு இருக்கான்.. சொல்லி வை..”

                  “சிச்சென்னைக்கு கிளம்பச் சொல்லு.” என்றான் அறிவிப்பாக.

                  “அவன் என்ன செய்யணும்ன்னு கூட நீங்களே முடிவு பண்ணுவிங்களா..” என்று அதற்கும் திரு எகிற,

                  “ஏய்.. அவன் என்ன செஞ்சிட்டு இருக்கான் தெரியுமா உனக்கு.. முனியனைத் த்தேடி போய்ட்டான் இன்னைக்கு. நான் அதட்டி இழுத்துட்டு வந்தேன். இங்கே இருந்து எதையாவது இழுத்துக்காம ஊருக்கு போய் படிக்கிற வேலையை பார்க்க சொல்லு.”

                 “அடுத்தவாரம் திருவிழாக்கு காப்பு கட்டறதா பேச்சு போய்கிட்டு இருக்கு.. இவன் இங்கே இருந்து, அந்த முரளியை எதுவும் தொட்டு வச்சா, விஷயம் வேற மாதிரி போய்டும். கிளம்ப சொல்லு உன் தம்பியை.. நான் சொல்ற வரைக்கும் அவன் ஊருக்கு வரவேண்டாம்.” என்று திக்கிக்கொண்டே என்றாலும், அழுத்தத்துடன் கூறி வைத்தான் வாசுதேவன்.

                 அவன் பேச்சில் ரகுவரனை நினைத்து பயந்து போனாள் திருமகள். அவனுக்கும் பதில் கூறாமல் அதிர்ந்தவளாக அவள் நிற்க, “திரு..” என்று அவள் கையைப் பிடித்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                  அவன் தொடுகையில் தெளிந்தவள் அச்சம் தீராதவளாக அவன் முகம் பார்க்க, “அவன் ஒன்னும் பண்ணல இதுவரைக்கும். பயந்து போகாத. அவனை அனுப்பி வை.” என்றான் முடிவாக.

                 திரு அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தலையசைக்க, அவள் பயந்த முகம் பார்த்து “உட்கார் இங்கே..” என்று கட்டிலில் அமர்த்தினான் அவளை.

                 அறையில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுக்க, “கொஞ்சம் பயமாயிருக்கு மாமா.. இவனுக்கு எதுக்கு இந்த வேலை.. என்கிட்ட லீவுன்னு சொன்னான் மாமா.” என்று அவளையும் அறியாமல் “மாமா.” என்றுவிட்டாள் வாசுதேவகிருஷ்ணனை.

                  “முனியனை கழுத்தை பிடிச்சு இறுக்கிட்டான்.. நான் போகலேன்னா முனியன் மேலே போயிருப்பான் .” என்று விளையாட்டாக வாசுதேவன் கூற, அவனை பாவமாக பார்த்தாள் திரு.

                  “அப்படியெல்லாம் விட்டுடுவேனா.. அவன் பேர் எதுலேயும் வெளியே வராது. ஆனா, இப்போ எனக்கு இன்னும் சில முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. இவனைப் பார்த்துட்டே இருக்க முடியாது. அதற்குத்தான் சொல்றேன். ஊருக்கு அனுப்பி வை.” என்றான் மீண்டும்.

                திருமகள் சரியென்பதாய் தலையசைக்க, அவள் முகம் தெளியவில்லை இன்னும்.

               அவள் கன்னம் தொட்டவன் “நீ இவ்ளோ பயப்படற அளவுக்கு உன் தம்பி அப்பாவி இல்ல. அவனை விட்டா முரளியை முடிச்சுட்டு தான் விடுவான். காலையில மனோகர் வீட்டுக்கும் போயிருக்கான். இவன் பேச்சுல வேலையே வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான் அவன்.” என்று மனைவியிடம் தகவல் சொல்ல,

               “அச்சோ..” என்றாள் திரு.

                “இப்படியெல்லாம் நடக்கும்னு தான் உங்கிட்ட கூட சொல்லவே இல்ல நான். இப்போ மனோ என்ன நினைப்பான். அவனை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு, நாம ஊருக்கே சொல்லிட்டு இருக்கோம்.”

                 “சில விஷயங்கள் எல்லாம் வீட்டுக்கு வெளியே நடக்கிறதை அங்கேயே விட்டுட்டு வர்றது தான் நமக்கு நல்லது. அதனாலதான் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன்.”

                 “நீ நினைக்கிற மாதிரி கோதை எனக்கு முக்கியம். அவளுக்காக அவ புருஷனுக்கு உதவி பண்ணேன் அப்படியெல்லாம் இல்ல. மனோ நல்லவன். உன் பிரச்சனையால் தான் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கான். உன் அக்கா மாசமா இருக்கா, இந்த நிலைமையில அவன் தம்பிக்கு ஆதரவா நின்னு மனோ அவளை எதுவும் பேசியிருந்தா என்ன செய்ய முடியும் நம்மால..”

                  “உன் அக்கா வாழ்க்கை எப்படி போனாலும் உனக்கு ஒண்ணுமில்லைன்னு இருப்பியா நீ.. முடியுமா உன்னால..” என்று வாசுதேவன் கேட்க, “முடியாது.” என்றே தோன்றியது திருமகளுக்கு.

                  “அதுக்காகத்தான் செஞ்சேன். கோதை எனக்கு யாருமே இல்ல. நான் வேண்டாம்னு சொன்ன நிமிஷமே அவ எனக்கு வேண்டாம்னு தூக்கி போட்டுட்டேன். ஆனா, நீ அப்படியில்லையே.”

                 “ஒரே வாரமா இருந்தாலும், உன்னைத் தவிர யாரோடவும் இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியாதுன்னு நினைக்க வைக்கிற… உனக்காகத் தான் செஞ்சேன். இதுக்கு மேல விளக்கம் எல்லாம் கொடுக்க தெரியாது எனக்கு.”

                   “உன்னை அடிச்சதெல்லாம் இப்பக்கூட தப்பா தெரியல எனக்கு. என் பொண்டாட்டி அப்படியெல்லாம் பேசக்கூடாது. அதுவும் இன்னொருத்தியோட என்னை… என்னால இன்னும் உன் வார்த்தைகளை ஜீரணிக்க முடியல.”

                  “என்னைக்கும் நீ அப்படி பேசக்கூடாது. உனக்கும் எனக்கும் இடையில யாரும் வரக்கூடாது.” என்று அதிகாரமாக அவன் கூற, அவன் அதிகாரத்தை அசட்டை செய்பவளாக அமர்ந்து கொண்டிருந்தாள் மனைவி.

                    அவன் பேசி முடிக்கவும், அவள் எழுந்து கொள்ள அவளை பிடித்து நிறுத்தியவன் “நிறைய பேசியிருக்கேண்டி.” என,

                    “நான் கேட்கவே இல்லையே மாமா..” என்றவள் விடுவிடுவென வெளியில் நடந்துவிட்டாள்.

              

            

Advertisement