Advertisement

நெஞ்சம் பேசுதே 14

                    சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள, அவன் கையிலிருந்து விடுபட முயன்றாள் அவள்.

                அவள் மறுப்பை அலட்சியம் செய்து வெகு சுலபமாகவே அவளை அறைக்குள் தூக்கி வந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன். அவளைக் கட்டிலில் விட்டவன் முறைத்தபடியே நிற்க, திரு அவன் முகத்தை நிமிர்ந்து பாராமல், கட்டிலில் இருந்து இறங்க முற்பட்டாள் இப்போது.

                   அவள் கைபிடித்து தடுத்தவன் “என்ன நினைச்சு இதெல்லாம் செய்ற நீ.. நீ திண்ணையில படுத்து தூங்குறதை எவனாவது பார்த்துட்டு ஊருக்குள்ள எஎன்னை கேவலமா ப்பேசணுமா… ஏற்கனவே உன் த்த்தம்பி கேவலப்படுத்திட்டு போய்ட்டான்.. இப்போ ஊர்காரங்ககிட்ட ஆஅஅசிங்கபடவா நான்..” என்றான் வெகு நிதானமாக.

             அவனது அடக்கப்பட்ட கோபம் அவன் குரலில் அப்படியே எதிரொலிக்க, ஒரு வார்த்தைகூட அவனை எதிர்த்து பேசவில்லை திருமகள். கட்டிலில் உள்ளே நகர்ந்து அமர்ந்தவள் அப்படியே கண்களை மூடிப் படுத்துக்கொண்டாள்.

               நொடிக்கு பத்து வார்த்தைகள் பேசும் அவன் மனைவி. “பேசு.. பேசு…” என்று அவனை படுத்தி எடுத்த அவன் மனைவி. இன்று மொத்தமாக மௌனித்து இருக்க, அதற்கும் அவள்மீது தான் ஆத்திரம் வந்தது வாசுதேவனுக்கு. “அவ்ளோ திமிரா இவளுக்கு..” என்று அடங்காகோபம் தான்.

                  ஆனால், அவளிடம் நிதானமாக பேசும் பொறுமையும் இல்லாமல் போக, அந்த அறையில் இருந்த நாற்காலியை சத்தம் வரும் அளவு வேகமாக எட்டி உதைத்து இருந்தான். அது கட்டிலின் காலில் பட்டு கீழே விழ, திருமகள் அப்போதும் கண்திறக்கவில்லை.

                 அதற்குமேல் அந்த அறையில் இருக்க மனமில்லாமல் வெளியே சென்றுவிட்டான் வாசுதேவகிருஷ்ணன். அவன் சென்ற பின்பும் வெகுநேரம் கண்களை மூடியபடியே உறங்காமல் படுத்து கிடந்தாள் திருமகள் நாச்சியார்.

                   “அசிங்கத்தைப் பற்றி பேசினானே.. அது இவனுக்கு மட்டும்தானா.. தன்னைவிட சிறியவன் முன் எப்போதும் அடிபட்ட முகத்துடனே நிற்கிறேனே.. எனக்கெல்லாம் அவமானம் என்று எதுவுமே இருக்காதா.. என்று ஆதங்கத்துடன் எண்ணமிட்டவள் அவனிடம் அத்தனை சுலபத்தில் பேசுவதாக இல்லை.

                   இருள் கவியும் நேரம் தொடங்கியிருக்க, எழுந்து குளித்து முடித்து விளக்கை ஏற்றி வைத்தவள் வேறு வேலைகள் எதுவும் இல்லாததால் தனக்கு மட்டும் காஃபி வைத்து கொண்டாள். கையில் காஃபியுடன் வந்து பின்வாசலில் அமர்ந்து கொண்டவள் மெதுமெதுவே ரசித்துப் பருகிக் கொண்டிருந்தாள்.

                   கணவன் காலையிலிருந்து உண்ணவில்லை என்பது மனதில் உதைக்க, அவனை வீட்டிற்கு அழைக்க நினைத்தாலும் மனம் வரவில்லை. அவன் அடித்ததால் உண்டான கோபம் அப்படியே இருக்க, இன்னும் அவனிடம் இறங்கிச் செல்ல முடியாது என்ற எண்ணம் தான்.

                   நேரம் மெல்ல நகர்ந்து செல்ல, இரவு உணவுக்கான வேலைகளைத் தொடங்கியிருந்தாள் அவள். அவள் சாம்பாரைத் தாளித்து இறக்கி, சட்னியை அரைத்தெடுத்து முடிக்கும் நேரம் பெரியவர்கள் இருவரும் வந்து சேர, இருவருக்கும் தோசை வார்த்து கொடுத்து அவர்கள் உண்டு முடிக்கவும் அடுப்பை அணைத்துவிட்டாள்.

                    இம்முறை அவனை விட்டு உண்ண மனம் வரவில்லை. விசாலம் “நான் ஊத்தவா..” என்று கேட்டபோதும், “பசிக்கல அத்த..” என்றவள் தன்னறைக்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

                    அவள் காத்திருப்பு நீண்டு கொண்டே செல்ல, “இரண்டு நாட்களானாலும் உண்ணாமல் கிடப்பான் என்று விசாலம் சொன்னது அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்து தொலைத்தது. இப்படி வீட்டுக்கு வராமல் நேரம்  கடத்துபவன் மீது ஆத்திரம் கொண்டவளாக அவன் அலைபேசி எண்ணுக்கு அழைக்க, ம்ஹூம் பதிலே இல்லை எதிர்முனையில்.

                 “என்ன வேணும் இவருக்கு..” என்று மீண்டும் கோபம் கொண்டவள் விடாமல் அழைக்க, அவள் அழைப்பைத் துண்டிக்கவும் அவள் அலைபேசி அலறியது. யாரென்று பார்க்க, சாரதி…

                 வேகமாக அழைப்பை ஏற்றவள் “அவர் எங்கே அண்ணா..” என்று கேட்டுவிட, அவளையும் மீறி அவள் பதட்டம் வெளிப்பட்டது குரலில்.

                   “இங்கே சர்க்கரை ஆலைல இருக்கோம்மா… மெஷின் ஒன்னு ரிப்பேராகிடுச்சு. வாசு அங்கே இருக்கான்மா..” என்று அவன் சமாளிக்கப் பார்க்க, அவன் பொய் சொல்வதை அவன் குரலிலேயே உணர்ந்துவிட்டாள் திரு.

                   “சாப்பிட்டாரா..” என்று மட்டும் கேட்க,

                  ‘இன்னும் இல்லம்மா.. வேலையை முடிச்சுட்டு சாப்பிடுவோம்..” என்றான் அவன்.

                   “ஓஓ.. உங்க ப்ரெண்ட்க்கிட்ட சொல்லிடுங்க. நான் இன்னும் சாப்பிடல.. எந்நேரம் ஆனாலும் அவர் வீட்டுக்கு வராம சாப்பிட மாட்டேன். அவரை பொறுமையா வேலையை முடிச்சுட்டே வரச் சொல்லுங்க அண்ணா.” என்றவள் அவன் பதிலைக் கேளாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

                   அங்கே இவள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவனோ, சாரதியின் அலைபேசியைத் தூக்கி அடித்திருந்தான். “டேய்.. கொலைகாரப்பாவி.. என் போன் என்ன பண்ணுச்சுடா..” என்று தன் அலைபேசியை கையில் எடுத்துக் கொண்ட சாரதி “போய் உன் பொண்டாட்டி வாயை அடைடா.. அதைவிட்டுட்டு என் போனை உடைக்கிறான்.. பொழப்பெடுத்தவன்..” என்று புலம்பிக் கொண்டே நகர்ந்தான் அவன்.

                வாசுதேவகிருஷ்ணன் அப்போதும் வீடு செல்லும் எண்ணம் இல்லாமல் தான் அமர்ந்திருந்தான். “மதியம் விட்டுட்டு சாப்பிட்டாதானே..” என்று கோபம்தான். ஆனால், பத்து நிமிடத்திற்கு மேல் பொறுக்கவில்லை அவனுக்கு.

                 அங்கே அவள் காத்திருக்கிறாள் என்பதே கொஞ்சமாக அவனை குளிர்விக்க, வேகமாக வீட்டிற்கு கிளம்பினான் அவன். அடுத்த இருபது நிமிடங்களில் அவன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் உண்டு முடித்து அவர்கள் அறைக்கு சென்றிருந்தனர்.

                மனைவியை தேடியவன் அவள் கண்ணில் படாத ஏமாற்றத்துடன் தன்னறைக்குள் நுழைய, ஊசி நூலுடன் கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவன் மனைவி. கையில் அவளின் சேலை ஒன்றை வைத்துக் கொண்டு குட்டி குட்டி மணிகளை அதன் ஓரங்களில் கோர்த்து அழகுபடுத்திக் கொண்டிருந்தாள் அவள்.

                   அவன் வந்ததை பார்த்தும் பார்க்கதவள் போல் அவள் அமர்ந்திருக்க, வாசுதேவனும் அவளைக் கண்டுகொள்ளாமல் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

                   அவன் வெளியே வருவதற்குள் வேகமாக தன் கையில் இருந்த பொருட்களை ஒதுங்க வைத்தவள் எழுந்து சென்று அடுப்பில் கல்லை வைக்க, அவன் குளித்து வரும் நேரம் சுடசுட தோசைகளை பரிமாறினாள் திருமகள் நாச்சியார்.

                  வாசுதேவகிருஷ்ணன் எதுவும் பேசாமல் உணவிலும் கையை வைக்காமல் அமர்ந்திருக்க, அடுத்த தோசை எடுத்து வந்தவள் புரியாமல் பார்த்து நின்றாள் அவனை. அவள் விழிகள் ஏனென்ற கேள்வியைத் தாங்கி நிற்க, தன்னருகில் இருந்த மற்றொரு தட்டை நிமிர்த்தி வைத்தவன் தன் தட்டிலிருந்து ஒரு தோசையை எடுத்து அதில் வைத்து நிமிர, சட்டென்று மலரத் துடித்த மனத்தை வெகுவாக சிரமப்பட்டு இறுக்கிப் பிடித்தாள் திருமகள்.

                  “நான் சாப்பிட உட்கார்ந்தா இவருக்கு யார் சுட்டு கொடுப்பங்களாம்..” என்று மனம் சிணுங்கி கொள்ள, வாயைத் திறக்கவும் ஏதோ தடுத்தது.

                  யார் முதலில் பேசுவது என்ற போரில் வென்றே தீருவேன் என்று முடிவெடுத்தவன் போல் கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு அலைபேசியைப் பார்க்கத் தொடங்கிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

                  அவன் அழுத்தத்தில் கோபம் வந்தாலும், சாப்பிடாமல் அமர்ந்திருப்பது கவலையைக் கொடுக்க, “நீங்க சாப்பிடுங்க.. நான் உங்களுக்கு சுட்டு கொடுத்திட்டு சாப்பிட்டுக்கறேன்.” என்றாள் திருமகள்.

                  வாசுதேவகிருஷ்ணன் அப்போதும் காது கேட்காதவன் போல் அமர்ந்திருக்க, அவன் அசையமாட்டான் என்று புரிந்து போனது திருமகளுக்கு.

                 அவனை முறைத்துக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவள் வேகமாக தோசை வார்த்து எடுத்துவந்து அவன் அருகில் அமர்ந்துவிட்டாள். தன் தட்டில் இருந்ததை அவள் உண்ண தொடங்க, அதன்பிறகே உணவில் கையை வைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                “ஏன் வாயைத் திறந்தா என்னவாம்..” என்ற முனகலுடன் பாத்திரங்களை ஒதுங்க வைத்து அவன்பின்னே அவள் அறைக்குள் நுழைய, இப்போது அவன் அலைபேசியில் மூழ்கி இருந்தான்.

                உறக்கம் வராததால் தானும் மீண்டும் தன் சேலையை கையில் எடுத்துக்கொண்டு திருமகள் தரையில் அமர்ந்துகொள்ள, அதில் எரிச்சலான எரிச்சல் வாசுதேவனுக்கு.

                வேகமாக எழுந்து அறையின் விளக்கை அணைத்துவிட்டு தன்னிடத்தில் படுத்துக்கொண்டான் அவன். திரு இருட்டில் முறைத்ததெல்லாம் அவனுக்கெங்கே தெரிய..

                 இருநிமிடங்கள் இருட்டில் உருட்டியவள் மீண்டும் விளக்கை எரியவிட, அதில் கடுப்பாகி எழுந்து அமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                  “என்னை நிம்மதியா தூங்க கூட விடமாட்டியா..”  என்று அவன் கத்த, அவன் சத்தமே கேட்காதவள் போல் தன் வேலையைத் தொடர்ந்தவள் தன் கையில் இருந்த பொருட்களை அதற்கான இடத்தில் வைத்து, அறையின் விளக்கை அணைத்து தன்னிடத்தில் வந்து படுத்துவிட்டாள்.

                 அவள் மௌனத்தில் கோபம் கொண்டவன் வலிக்கும்படி  அவள் இடையில் கிள்ளி வைக்க, “ஷ்ஷ்ஹ்..” என்ற மெல்லிய சத்தம்தான் வெளிப்பட்டது திருவிடம்.

               ஆனால், அடுத்த நிமிடம் கட்டிலில் இருந்து இறங்கியவள் வெறும் தரையில் தன் போர்வையை விரித்து அதில் படுத்துவிட, இம்முறை வாசுதேவன் எழுந்து அறையின் விளக்கை உயிர்ப்பித்து இருந்தான்.

                திரு அசையாமல் கண்மூடி கிடக்க, அவள் அருகில் சென்று அவளை எழுப்பி அமர்த்தியவன் “என்னதாண்டி வ்வ்வேணும் உனக்கு.. என்னை இம்சை ப்ப்ப்பண்ணவே கல்யாணம் பண்ணி வ்வ்வ்வந்திருக்கியா நீ..” என்றான் ஆத்திரத்துடன்.

                திரு அவன் கேள்விக்கு பதில் கூறாமல் அவனை வெறித்து அமர்ந்திருக்க, “வாயைத் திறந்து ப்ப்ப்ப்பதில் சொல்ல முடியாதா உஉன்னால..” என்று அவள் தாடையைப் பற்றி அவன் அழுத்த, வலி தாங்காமல் அவன் கையை தட்டிவிட்டாள் மனைவி.

                வாசுதேவன் “த்திரு.” என்று அதட்ட, அவிழ்ந்து கிடந்த தன் கூந்தலை கையை உயர்த்தி அள்ளி முடிந்து கொண்டாள் அவள்.

               வாசுதேவன் விழியசைக்காமல் அவளைப் பார்த்திருக்க, “எனக்கு தூக்கம் வருது.” என்றாள் அவனிடம்.

                அவளது எகத்தாளத்தில் அவன் எரிச்சல் ஏகத்திற்கும் கூட, “உன்கூட விளையாடிட்டா இருக்கேன் நான்..” என்றான் நக்கலாக.

                 திரு தீர்க்கமாக அவனை நோக்கியவள் “நான் உங்களை விளையாட கூப்பிட்டேனா..” என்று கேட்டு வைக்க, வாசுதேவ கிருஷ்ணன் முழித்தான் இப்போது.

                 “தள்ளி போங்க.. தூக்கம் வருது எனக்கு..’ என்று அவனை விரட்டுபவளாக அவள் கூறி வைக்க,

                 “மேலே வந்து படு த்திரு..” என்றான் வாசுதேவன்.

                  “வரமாட்டேன்.. தள்ளி போங்க..” என

                  “ஏன்.. என்ன ப்பண்ணிட்டேன் உஉன்னை..” என்றான் வாசுதேவன்.

                  “நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.. எழுந்து போங்க..”

                 “என்னை க்க்கோபப்ப்படுத்தாத த்திரு..”

                  “கோபப்பட்டு என்ன செய்விங்க.. இன்னொருமுறை அடிப்பீங்க அவ்ளோதானே.. பழகிடுச்சு எனக்கு. அடிக்கிறதா இருந்தா அடிச்சுட்டு தள்ளி போங்க.. தூங்கணும் நான்..”

                    “நீ த்தப்பே செய்ய்யலையா..”

                     “நான் அப்படி சொன்னேனா..” என்று கண்களை திரு உருட்ட,

                     “ச்ச்சின்ன ப்பிள்ளைங்க த்தப்பு செஞ்சா என்ன செய்வோம்..”  என்றான் வாசுதேவன்.

                     “நான் சின்னபிள்ளையில்லை.. என்னை அடிச்சது தப்பு..” என்று அழுத்தம்திருத்தமாக திரு கூற,

                     “வாய் பேசின த்த்திரும்பவும் ரெண்டு விழும்.. எழுந்து மேல ப்ப்படு..” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.

                     அவன் பேச்சில் கோபம் கொண்டவள் அசையாமல் அமர்ந்திருக்க, “உயிரைக் குடிக்கிற த்திரு நீ..”என்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                      “இன்னும்  என்னென்ன சொல்விங்க நீங்க.. நான் எது செஞ்சாலும் குத்தம் சொல்விங்களா.. என்னதான் செய்யணும் நான்..” என்றவள் கண்கள் கலங்க,

                      “பேசிட்டு இருக்கும்போதே ஏதுக்கு ஆழற..”

                      “நீங்கதான் அழ வைக்கிறிங்க..” என்றவள் கண்ணீர் கன்னம் தொட்டு வழிய,

                      “அழாம பேசேண்டி.” என்று அதட்டினான் அவன்.

                      திரு கண்களை துடைத்துக் கொண்டே “எனக்கு தூங்கணும்.. நீங்க எழுந்து போங்க..” என்று விட,

                      “அடிச்சேன்னா பல்லு பறந்திடும்..” என்று மீண்டும் கையோங்கியிருந்தான் அவன்.

                      திரு பயத்துடன் கட்டிலில் சாய்ந்து விட, அவள் அருகில் கிடந்த தலையணை, போர்வையை எடுத்து கட்டிலில் போட்டவன் அவளையும் முழங்கையைப் பற்றி எழுப்பி கட்டிலின் மீது தள்ளியிருந்தான்.

                      திரு வாசுதேவகிருஷ்ணனை முறைத்துக்கொண்டே நிற்க, “இஇஇப்போ ந்நீ க்கட்டில்ல படுக்கல.. இஇப்படியே கிளம்பி வெளியே ப்போய்டுவே..” என்றான் அவன்.

                     திரு “நான் வெளியே போறேன்…” என்று முன்னேற, அவள் கைபிடித்து நிறுத்தியவன் கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்து,

                      “நம்ம விஷயங்கள் இந்த ரூமை தாண்டி வெளியே போறதை நான் விரும்பல திரு.. ப்புரிஞ்சிக்கோ..” என்று அவள் முகத்திற்கு நேராக ஒருவிரலை நீட்டி மிரட்ட

                       “என் தம்பி முன்னாடி என்னை இழுத்துட்டு போனது எந்த கணக்குல வரும். அவன் முன்னாடி நீங்க எப்படி நடந்திங்க.. அது எனக்கு அவமானமா இருக்காதா.. இல்ல, எனக்கெல்லாம் வெட்கம், மானம்னு எதுவுமே இருக்கக்கூடாதா… “

                     “நம்ம விஷயத்துல உன் தம்பி வ்வந்ததுக்கான வினை அது. அவன் யயாருடி என் பொண்டாட்டியை கூட்டிட்டுப் போக..”

                      “அவன் என் தம்பி..”

                      “நீ என் பொண்டாட்டி.. நம்ம விஷயத்துல அவன் வரக்கூடாது.” என்றவனை என்ன செய்வது என்று புரியாதவளாக அவள் பார்த்து நிற்க,

                      “போய் தூங்கு. ” என்றான் வாசுதேவகிருஷ்ணன்.

                               திரு அசையாமல் நிற்க “நைட் முழுக்க நின்னாலும் நீ வெளியே போக முடியாது. நான் விடமாட்டேன்.” என்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துவிட, அவனை எதுவும் செய்ய முடியாத இயலாமையில் கட்டிலில் கிடந்த அவன் தலையணையையும், போர்வையும் எடுத்து கீழே வீசியவள் தன்னிடத்தில் படுத்துக்கொண்டாள்.

              வாசுதேவன் அவள் செயல்களை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தவன் அவள் படுத்த ஐந்தாவது நிமிடம் அவள் அருகில் வந்து படுத்துவிட, திரு கோபத்துடன் எழுந்து கொள்ள நினைக்கும் போதே அவளைச்சுற்றி கைகளால் வளைத்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

               “எனக்கு பிடிக்கல. எப்படியோ இருக்கு. என்னைத் தூங்க விடுங்க..” என்று கெஞ்சலான குரலில் திரு உரைக்க,

                “எதுவும் பண்ணமாட்டேன்.. அப்படியே தூங்கு.” என்றான் அவனும்.

                 “இப்படியிருந்தா எனக்கு தூக்கம் வராது..”

                “ந்நீயில்லாம ஏனக்கு ய்த்தூக்கம் வரலையே..” என்றவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அவள் மௌனிக்க, “க்கல்யாணமாகி ஒரு வாரம் தான் ஆகுது.. கட்டிபிடிக்கக்கூட த்தடை போட்டா, நான் பாவம் இல்லையா..” என்றான் வாசுதேவன்.

                  திரு அமைதியாக கண்மூடிக் கொண்டாலும், அவள் உறங்கவில்லை என்று புரிந்தவன் தன் பிடியைத் தளர்த்த, அதன்பிறகே திருவின் உடல் மெல்ல தளர்ந்தது.

                

Advertisement