Advertisement

நெஞ்சம் பேசுதே 13

                மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த தூணில் சாய்ந்து அமர்ந்திருக்க, வாசுதேவகிருஷ்ணன் அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

                காலையில் திருமகளின் வீட்டிற்கு சென்றிருந்த ராகவன் அப்போதுதான் வீடு திரும்ப, சோர்ந்து அமர்ந்திருந்த மனைவியின் கோலம் கண்டு பதறிவிட்டார் மனிதர்.

                 வேகமாக மனைவியை நெருங்கியவர் “விசாலம் என்ன செய்யுது உனக்கு.. உடம்புக்கு முடியலையா..” என்று பதட்டத்துடன் வினவ,கணவரை காணவும் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெருக்கெடுத்தது விசாலத்தின் விழிகளில்.

                   காலைமுதல் நடந்தது மொத்தத்தையும் கணவரிடம் கூறிவிட்டார் அவர். “இவனுகெங்கிருந்துங்க இம்புட்டு தைரியம் வந்தது.. கட்டின பொண்டாட்டியை எப்படி கையைநீட்டி அடிக்கலாம். ஜென்மத்துக்கும் மறக்காதபடி கேட்டுட்டு போய்ட்டான் என் தம்பி மவன்..”

                    “ஆம்பளைப்பிள்ளை.. மலங்க மலங்க கண்ணீரோட போய்ட்டாங்க… நம்ம கண்ணனா இப்படின்னு மனசே வெறுத்து போச்சு எனக்கு.. இவன் எப்படி நாச்சியை கைநீட்டலாம்.. கேட்கவந்த ரகுவையும் அடிக்க பாயுறான்..” என்று அவர் ஆதங்கத்தில் விடாமல் புலம்ப, அத்தனையும் அறைக்குள் அமர்ந்திருந்த வாசுதேவனுக்கும் கேட்டது.

                   தன் அன்னையே தனக்கெதிராக இத்தனை பேசுகையில் சம்பந்தப்பட்டவள் எத்தனைப் பேசுவாளோ என்று குன்றியவனாக அமர்ந்திருந்தான் அவன். ரகுவரன் திருமகளின் கையைப் பிடித்து நிற்பதைக் காணவும், என்னவோ திருமகளை தடுத்துவிட வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டுமே.

                  ரகுவரன் விடாமல் வம்புக்கு நிற்கவும் தான் அவன் வாய் திறந்தது. அதுவும் தன்னைவிட வயதில் சிறியவன் தன்னை மரியாதைக்குறைவாக பேசுவதா என்ற கோபத்தில் தான் கையை உயர்த்தியதும். அவன் பேசியதைக் கேட்டு மனைவி வாயைத்திறக்காமல் நின்றதே கோபம் தான்.

                 இதில் இருவருக்கும் இடையில் வேறு வந்து நிற்கவும்தான் அவன் ஆத்திரம் எல்லை மீறியது. அதன் வெளிப்பாடு தான் அவளை அறையில் வைத்து பூட்டியது எல்லாம்.

                   இப்போது நினைக்கையில் சற்றே அவமானமாக இருந்தது. அதுவும் மனைவி என்று வந்தவளை திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டுமுறை கைநீட்டி அடித்து இருக்கிறான் என்பதெல்லாம் ஏற்கவே முடியவில்லை.

                   “வாசுதேவனா… என் பொறுமை எங்கே போனது.. என்ன செய்கிறேன் நான்.” என்று நொந்தவனாக அமர்ந்து இருந்தான் அவன். ஆனால், அதே சமயம் மனைவியின் மீது தவறே இல்லை என்றும் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

                   நான் அடித்தது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால், அவள் பேசிய வார்த்தைகள் அத்தனையும் சரியானவை இல்லையே. அவள் பேசிய பேச்சிற்கு தான் வாங்கி கொண்டாள் என்று உள்ளிருந்து ஒலித்தது ஒரு குரல்.

                    அவனது ஆண் மனம் அவள் பேசிய பேச்சுக்களை அத்தனை எளிதில் ஏற்க மறுக்க, இயல்பாகவே அவனுள் இருக்கும் அந்த தலைக்கனம் அந்த நிமிடம் தலைதூக்கியது. என்ன பேச்சு பேசிவிட்டாள் என்பதே முன்னிற்க, அவன் செயல்கள் அத்தனையும் அங்கே பின்னால் போனது.

                   இவன் மொத்தமும் திருமகளையே சிந்தித்து அமர்ந்திருக்க, அவளோ பாற்கடலை விட்டு நீங்கிய திருமகளாகவே தன் பொலிவை இழந்து அமர்ந்திருந்தாள். அந்த நிமிடம் வாசுதேவகிருஷ்ணனை குறித்த எந்த சிந்தனையும் இல்லை அவளிடம்.

                   அவளின் மனம் கண்ணீரோடு பேசிச் சென்ற தன் தம்பியிடமே நிலைபெற்று இருந்தது. எங்கோ தூரத்தில் யாருமில்லாமல் தனித்து நிற்பவனுக்கு தனது இன்றைய நிலை எத்தனை கவலை கொடுத்திருக்கும் என்று யோசிக்கையிலேயே உள்ளம் கலங்கிப் போனது.

                   அதுவும் அவனது பேச்சுகள், அவனது பதட்டம் மேலோங்கிய அந்த குரல், கண்ணீர் முகம் என்று எதுவுமே மறக்க முடியவில்லை. எப்போதுமே அவர்களிடம் நெருக்கம் அதிகம் தானே. அதுவும் தாயும், தந்தையும் இல்லாமல் போனதில் இருந்து இருவருமே அடுத்தவரைக் குறித்துதான் முதலில் யோசிப்பது.

                  இளையவனாக இருந்தாலும் ரகுவரனின் பெரும்பாலான முடிவுகள் திருமகளை மனதில் வைத்து தான் இருக்கும். தன் தமக்கைக்கு எது சரியாக இருக்குமோ அதையே யோசித்து அதையே செயல்படுத்தி பழகிவிட்டான் அவன்.

                    அப்படிப்பட்டவனுக்கு அவளின் திடீர் திருமணம் அதிர்ச்சி தான் என்றாலும் கூட, அவளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் விலகி சென்றானே. அதன்பின் என்றுமே அவள் வாழ்வை அவன் விமர்சித்தது இல்லையே.

                     நேற்று அவன் பேசியது கூட சாதாரண ஒரு விளையாட்டு பேச்சு. அதற்கும் திருமகள் அத்தனை தூரம் கோபம் கொள்ள, அவள் மனநிலை சரியில்லை என்பதை உணர்ந்தவனாக தான் கிளம்பி வந்திருக்கிறான் என்று நினைக்கையிலேயே அவன் பாசத்தை எண்ணி கனிந்தது திருமகளின் உள்ளம்.

                     தனக்காக வந்தவனை என்ன மனநிலையில் திருப்பி அனுப்பியிருக்கிறோம் என்ற எண்ணமே கண்ணீர் வடிக்க வைக்க, அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அமர்ந்திருக்க, ராகவன் அவள் எதிரில் வந்து நின்றார்.

                     திருமகள் நேராக நிமிர்ந்து அமர, “வாசு இப்படி பண்ணுவான்னு எனக்கும் தெரியாதும்மா.. மன்னிச்சுடு எங்களை.. நான் அவனை கண்டிக்கிறேன்டா.. இப்படி அழாதம்மா..” என்று அவரும் பாசமாக எடுத்துக் கூற, “நான் ரகுவைப் பார்க்கணும் மாமா.. அழுதுட்டே போயிருக்கான்… “என்றாள் திருமகள்.

                  “நீ வாம்மா.. நான் கூட்டிட்டு போறேன். என்னை என்ன செய்வான் உன் புருஷன்.. நீ வா..” என்று மருமகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார் ராகவன்.

                 கிணற்றடியில் இருந்த நீரில் முகத்தை கழுவிக்கொண்டு திரு அவருடன் செல்ல, அவள் சென்றதே தெரியாமல் அறையில் அமர்ந்திருந்தான் வாசுதேவன்.

                   இங்கே திருமகளின் வீட்டில் ரகுவரன் தலையை கைகளில் தாங்கிக் கொண்டு வாசலின் நிலைப்படியிலேயே அமர்ந்திருந்தான். எங்கே செல்வது எனத் தெரியாமல் தன் வீட்டிற்கே வந்து சேர்ந்திருந்தான் அவன். வீடு பூட்டியிருக்க, சாவியைக்கூட தேடும் எண்ணமில்லாமல் படியில் அமர்ந்து இருந்தான்.

                      யாருமற்றவன் போல் அவன் அமர்ந்திருக்க, ராகவனோடு வந்து இறங்கிய திருமகளுக்கு மனது ஆறவே இல்லை. “ரகு.” என்ற அழைப்புடன் அவள் தம்பியை நெருங்க, “நாச்சி..” என்று அவளை அணைத்திருந்தான் தம்பி.

                    அப்போதும் “நீ இப்படியே என்னோட வந்திடு..  நமக்கு இந்த ஊரே வேண்டாம். நாம சென்னைக்கு போயிடுவோம்..” என்று தமக்கையின் கையைப் பிடித்து அவன் இழுக்க, கண்ணீருடன் அவன் கன்னம் தொட்டாள் திருமகள்.

                  “ஏன்டா இப்படி இருக்க நீ.. என்னால எங்கேயும் வர முடியாது. நீயும் என்னை கூப்பிடக் கூடாது.” என்றாள் அழுத்தமாக.

                   “இதெல்லாம் எதுக்காக நாச்சி.. இப்படி அடிச்சு கொடுமைப்படுத்துற புருஷனோட வாழ்ந்தே ஆகணும்னு என்ன கட்டாயம் உனக்கு..”

                   “ஏன்னா, எனக்கு அவரைப் பிடிச்சிருக்கே…” என்று அவனை அதிர வைத்தாள் திருமகள்.

                  அவனை அமைதியாக்க வேறு எதுவும் வழி இருப்பதாக தோன்றவில்லை அவளுக்கு. எதை சொன்னால் அவன் சிந்திப்பானோ, அதை சொல்லி அவனை அமைதிப்படுத்தினாள்.

                    ரகுவரன் “பைத்தியம் மாதிரி உளறாத க்கா.. உனக்கு அவரைப் பிடிச்சு ஒன்னும் ஆகப் போறது இல்ல. அவருக்கும் உன்னைப் பிடிக்கணும் இல்லையா. உனக்கே இந்த ஒருவாரமா தானே தெரியும் அவரை. அதுக்குள்ள எப்படி பிடிக்கும்னு சொல்ற.” என்று மிரட்ட,

                    “இப்போ இல்ல.. மூணு வருஷமாவே பிடிக்கும். எப்போ அவரோட கல்யாணம் நின்னுச்சோ, அப்போ இருந்து அவரை மட்டும்தான் நினைச்சிருக்கேன் ரகு. அவருக்கும் என்னைப் பிடிக்கும்.”

                    “பிடிக்கிறவர் தான் இப்படி செய்வாரா..” என்று தம்பி முறைக்க,

                    “அதிகமா பிடித்தம் இருந்தா கூட இதெல்லாம் நடக்கும்தான்.. உனக்கு புரியாது.” என்று அவனை குழப்பினாள் திரு.

                     “புரியுற மாதிரி பேசுடி..” என்று கடுப்பாகி அவன் கத்த,

                     “நேத்து கோதையை வச்சு எங்களுக்குள்ள சண்டை. கோபத்துல  என்னென்னவோ பேசிட்டேன். கோதையை வச்சு, காதலி அது இதுன்னு… அந்த கோபத்துல தான் சண்டையே வந்துச்சு. நேத்து நடந்த சண்டைக்கு அவர் எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவுக்கு நானும் காரணம் தான்.” என்று தெளிவுடன் அவள் பேச,

                     “உனக்கும் உன் புருஷனுக்கும் நடுவுல கோதை எங்கேயிருந்து வந்தா..” என்று சந்தேகத்துடன் ரகுவரன் கேட்க, நேற்று கோவிலில் நடந்ததை அப்படியே அவனிடம் கூறி வைத்தாள் திருமகள்.

                   முழுவதுமாக கேட்டவன் “உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா.. ” என்று திருவை கடிய, தவறு தன்மீது என்பதால் அமைதியாக நின்றாள் அவள்.

                   “நீ கோதைகிட்ட சண்டை போட்டதெல்லாம் தப்பே இல்ல.. ஆனா, அதை வச்சு அவர்கிட்ட ஏன் சண்டை போடற.. அவர் யாருக்கு வேலை வாங்கி கொடுத்தா உனக்கென்ன.. தெரிஞ்சவங்கன்னு கூட செஞ்சு இருக்கலாம்.. இல்ல, கோதையே கூட ஏதாவது தப்பா புரிஞ்சிட்டு உளறி இருக்கலாம்..”

                    “மூணு வருஷமா அவரை நினைச்சுட்டு இருக்கேன்னு கதை சொல்ல தெரியுது இல்ல.. நீ சொல்ற வார்த்தை அவருக்கு எந்த அளவுக்கு கஷ்டமா இருக்கும்னு யோசிக்கமாட்டாயா நீ… அப்படி அறிவு இல்லாமலா உன்னை வளர்த்து வச்சிருக்காங்க நம்ம வீட்ல..”

                    “தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பெருசாக்கி உன் வாழ்க்கையை நீயே சிக்கலாக்கிக்காத.. அதோட உன் புருஷனுக்கும் சொல்லி வை. நீ என்ன செஞ்சாலும் இனி அந்த ஆள் உன்னை கையொங்க கூடாது. இனி ஒருமுறை அவர் உன்னை கையைநீட்டி அடிச்சாரு.. அப்பவே உன்னை இழுத்துட்டு போயிட்டே இருப்பேன்..”

                    “உன்னால கூட என்னை தடுக்க முடியாது..” என்றவனை திரு முறைத்துக் கொண்டு நிற்க,

                   ‘முதல்ல கட்டின பொண்டாட்டிக்கு மரியாதை கொடுக்க சொல்லு உன் புருஷனை. அப்புறமா அவருக்கு மரியாதை கொடுக்கலாம்..” என்றான் ரகு.

                     “ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகாது. இதுல நீ செஞ்சி வச்ச வேலையால, இன்னிக்கு அடிக்கவும் வந்துட்டார். நான் வேற வாயை வச்சுட்டு சும்மா இல்லாம, கண்டதை பேசி வச்சுட்டு வந்திருக்கேன். எல்லாம் உன்னால திரு.”

                      “எனக்கு உன்னோட உறவு ரொம்ப முக்கியம்.. நீ இல்லன்னா அனாதை நான். தனியா எதுவுமே செய்ய தெரியாது எனக்கு. ஒழுங்கா, உன் புருஷனோட வாழற வழியைப் பாரு.. நீ அவரோட சண்டைக்கு நின்னு, எங்களை பகையாளி ஆக்காத..” என்ற ரகுவரனின் பேச்சில் அத்தனை தெளிவு.

                       திருவிற்கு தன் தம்பியை நினைத்து அத்தனைப் பெருமையாக இருந்தது. தூர நின்று இவர்களை கவனித்திருந்த ராகவனுக்கும் அவர்களின் பேச்சு காதில் விழுந்திருக்க, ரகுவரனை நெருங்கி அவன் தோளில் தட்டிக் கொடுத்து அவனை அணைத்து கொண்டார் அவர்.

                    ரகுவரன் “சாரி மாமா.. கோபத்துல அத்தைகிட்ட மரியாதையில்லாம பேசிட்டேன்.” என்றுவிட,

                     “உன் அத்தைகிட்ட நீ பேச உனக்கு எல்லா உரிமையும் இருக்கு ரகு.. நாங்க யார் இடையில வர. அது உன் அத்தை வீடு தான் எப்போதும். இப்போ உன் அக்கா வீடும் கூட.. இன்னைக்கு நடந்ததை யோசிச்சு அங்கே வராம எல்லாம் இருக்கக்கூடாது.. ” என்று அவர் அறிவுறுத்த,

                    “இவளை பார்க்காம எல்லாம் என்னால இருக்க முடியாது மாமா.. இவ இருக்க வரைக்கும் என்ன நடந்தாலும், அந்த வீட்டுக்கு வருவேன். நீங்க அதையெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க.” என்று புன்னகைத்தான் ரகுவரன்.

                     ராகவன் அவனை கட்டியணைத்து விடுவித்தவர் “கதவைத் திறம்மா..” என்று வீட்டுசாவியை மருமகளிடம் நீட்டினார்.

                     ரகுவரனிடமும் “ஆளுங்க ரெண்டு பேர் இருக்காங்க ரகு. பின்பக்கம் வேலையா இருப்பாங்க.” என்று கூற,

                    “நான் வந்து அப்படியே உக்கார்ந்திட்டேன் மாமா..” என்று பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர் இருவரும்.

                      திருமகள் வேலையாட்களிடம் இருந்து பாலை வாங்கி இருவருக்கும் தேநீர் வைத்து கொடுக்க, காலை நிகழ்வுகளின் கனம் முற்றிலுமாக தொலைந்திருந்தது அங்கே.

                      ரகுவரனும் என்ன நினைத்தானோ, தமக்கையை அதிக நேரம் தன்னுடன் நிறுத்தாமல் ராகவனோடே அவளை அனுப்பி வைத்து விட்டான்.

———

              திருமகள் நிம்மதியான மனதுடன் தன் வீட்டிற்கு வந்து சேர, விசாலம் அப்போதும் சோர்வுடன் தான் காணப்பட்டார். அவரைப் பார்க்க பாவமாக இருக்க “நீ ஏன் அத்தை முகத்தை தூக்கி வச்சிருக்க.. உன் புள்ள என் மூஞ்சியைத்தானே அடிச்சு உடைச்சு விட்டுருக்காரு.. நாந்தான் சோகமா இருக்கணும்.. நீ எதுக்கு சோகம் பிடிக்கிறேன்னு புரியவே இல்ல எனக்கு..’ என்று நக்கலடிக்க,

                “போடி.. மனசே ஆறல எனக்கு.. எப்படி அடிச்சுட்டு என்ன திமிரா உட்கார்ந்துட்டு இருக்கான் பாரேன். இப்போவரைக்கும் ஒரு வார்த்தை தப்புன்னு அவன் வாயில இருந்து வரலையே.” என்றார் ஆதங்கத்துடன்.

                  “தப்பில்லன்னு நினைச்சிருப்பார் அத்தை.. ” என்று மருமகள் உரைக்க, விசாலம் அப்படியும் இருக்குமோ என்று பார்த்தார் மருமகளை.

                   கூடவே, “பொண்டாட்டியை கையை நீட்டி அடிக்கிறது தப்பில்லையா..” என்றும் கேட்க,

                   “பொண்டாட்டி வகை தொகையில்லாம பேசினா, வாங்கி கட்டிக்க வேண்டியது தான் அத்தை. இது எனக்கும் உன் பிள்ளைக்கும் இடையில நடக்கிறது.. நீ இதை யோசிச்சு உடம்பை கெடுக்காத..’

                  “இப்போதான் ஒருத்தன்கிட்ட பேசி சரிக்கட்டிட்டு வந்திருக்கேன். திரும்ப நீ தொடங்காத. உன் மகனை என்ன செய்யணும்னு நான் பார்த்துக்கறேன்..நீ விடு..” என்றாள் இலகுவாக

                 காலையில் தன்னை கட்டிக்கொண்டு அப்படி அழுதவளா என்று அதிசயித்துப் பார்த்தார் விசாலம்.

                  “அப்போ கொஞ்சம் மூளை குழம்பி இருந்தது.. இப்போ தெளிவா இருக்கேன்..” என்று சிரித்தவள் “பசிக்குது அத்தை.” என, வேகமாக எழுந்து கொண்டார் விசாலம்.

                  ஐந்து நிமிடங்களில் காஃபி தயாரித்துக் கொடுத்தவர் அடுத்த ஒருமணி நேரத்தில் சமைத்து உணவு பரிமாறினார் மருமகளுக்கு.

                   திருமகளுக்கு கணவனின் நினைவு உறுத்தினாலும், வீம்புக்காக அரைகுறையாக உண்டு முடித்து மீண்டும் பின்கட்டில் சென்று அமர்ந்துகொண்டாள்.

                    ராகவன் ரகு கூறியதையெல்லாம் விசாலத்திடம் தெரிவிக்க, அதற்குமேல் தாங்கமுடியாமல் மதிய உணவை ஒரு தூக்கில் போட்டு எடுத்துக் கொண்டவர் கணவருடன் மருமகனைக் காண சென்றுவிட்டார்.

                       இதில் மொத்தமாக தனித்து விடப்பட்டவன் வாசுதேவகிருஷ்ணன் தான். மாலை வரை எதையும் சிந்திக்க பிடிக்காமல் மௌனித்து  அமர்ந்திருந்தவன் திரு அறைக்குள் வருவாள் என்று வெகுவாக எதிர்பார்த்திருந்தான். ஆனால், மனைவி வரும் அறிகுறியே இல்லாமல் போக, அதற்குமேல் பொறுக்க முடியாமல் எழுந்து அவன் அறையை விட்டு வெளியே வர, யாருமில்லாமல் வெறுமையாக இருந்தது வீடு.

               பின்பக்கம் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் அவன் வீட்டின் பின்புறம் வர, அங்கேயிருந்த திண்ணையில் தன் சேலையால் தன்னை மூடிக் கொண்டு உறங்கி கொண்டிருந்தாள் திரு.

                 பார்த்த நிமிடம் “இவளுக்கென்ன தலையெழுத்தா..” என்று மீண்டும் கோபம் பொங்கியது அவனுக்கு.

             

Advertisement