Advertisement

நெஞ்சம் பேசுதே 12

             

                     அளவுகடந்த கோபத்தில் இருந்தாள் திருமகள் நாச்சியார். அதீதமான கோபம். கோதை கூறிய செய்தியின் தாக்கம் கொஞ்சமும் குறையவே இல்லை இந்த நிமிடம் வரை. வாசுதேவகிருஷ்ணன் என்ன நினைத்து உதவினானோ, திருமகளைப் பொறுத்தவரை அது பெருங்குற்றமாகிப் போனது.

                  அதுவும் தன்னிடம் அதைப்பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டது இன்னும் வேதனை கொடுக்க, அப்படியென்ன அவள் முக்கியமாகிப் போனாள். என்னிடம் மறைத்து அவள் கணவனுக்கு உதவ வேண்டிய தேவை என்ன? என்று தான் கேள்வி எழுந்தது அவளுள்.

                 விசாலம் வீட்டிற்குள் நுழைந்த நிமிடமே அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க, “கோவில்ல நடந்த எதையும் உன் மகன்கிட்ட நீ சொல்லக்கூடாது அத்தை. உன் மகன் எவ்வளவு தூரம் போவார்ன்னு நான் பார்க்கணும்.” என்று முடிவாக கூறியவள் தன் அறைக்கு வந்து அமர்ந்து கொண்டாள்.

                  இதில் ரகுவரன் வேறு அவன்பங்குக்கு பேசி வைத்திருக்க, அதுவேறு அவள் ஆத்திரத்தை இன்னும் கிளறிவிட்டிருந்தது. அவனையும் ஒருவழி செய்தே அலைபேசியை அணைத்திருக்க, இதுவரை பன்னிரண்டு முறைக்கும் மேலாக அழைத்திருந்தான் தம்பி. அவன் விடாமல் அழைக்கவும், வந்த கோபத்திற்கு அலைபேசியை அணைத்து தூர எறிந்திருந்தாள்.

                அவளை வெகுநேரம் காக்க வைத்து, அவள் பொறுமையை முழுவதுமாக வடிய வைத்த பின்பே வீடு வந்து சேர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன். அவனைக் கண்ட நிமிடம் கோதை உரிமையாக “வாசு மாமா..” என்றதுதான் நினைவில் வந்து நின்றது திருமகளுக்கு.

                    வாசுதேவன் எப்போதும் போல இயல்பாக தன் கையிலிருந்த பாலிதீன் கவரை திருமகளிடம் நீட்ட, திருமகளுக்கு தான் பேய் பிடித்திருந்ததே. அந்த நொடியில் என்னவோ அவன் தன்னை ஏமாற்றுவதாக ஒரு வேண்டாத எண்ணம் வந்து அமர்ந்து கொண்டது அவளுக்குள்.

                   பட்டென அவன் நீட்டிய அந்த கவரை தட்டி விட்டிருந்தாள் அவள். விளையாட்டாக அவன் கையை தட்டிவிட்டாலே பொறுத்துக் கொள்ளாதவன் அவன். அப்படிப்பட்டவன் ஆசையாக வாங்கி வந்திருந்ததை அவள் தட்டிவிட, வாசுதேவனும் கொதித்துதான் நின்றான்.

                   இருநொடிகள் அவளை அசையாமல் நோக்கியவன் கோபம் மீதுறவும், அவளிடம் எதுவும் பேசாமல் தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். அவன் தனது சினத்தை தாங்கமாட்டாள் என்று விலக, தான் வேண்டாதவள் என்பதால் விலகுகிறானோ என்று தோன்றிவிட்டது திருமகளுக்கு.

               அவன் அப்படி கண்டுகொள்ளாமல் சென்றது இமாலயத் தவறாக தெரிய, என்னவோ மொத்தமாக சோர்ந்து போனாள் திருமகள். தன்னை எப்போதுமே ஒரு பொருட்டாக மதித்ததில்லையே இவன். இந்த ஒருவார வாழ்வு கூட தானே வலியச் சென்று வாழ்ந்தது தானே. அவனாக என்னை எங்கும் தேடியதே இல்லையே..

                 எப்போதும் அப்படித்தானே. ஏன், அத்தனைப் பேர் கூடியிருந்த சபையில் தன்னை தனியாக விட்டுச் சென்றவன் தானே. அப்போதும் சரி, இப்போதும் சரி அவன் அதே நிலையில் தான் நிற்கிறான். நான்தான் பைத்தியக்காரியாகவே இருக்கிறேன் என்று தன்னைக் குறித்தே ஏகப்பட்ட குறைகள்.

                 கண்களில் வடிந்த கண்ணீரைப் பிடிவாதத்துடன் துடைத்துக் கொண்டவள் கல்லென அசையாமல் அமர்ந்து கொள்ள, “ஏன் இப்படி இருக்கிறாள்..” என்று அவளைக் குறித்து சிந்தித்துக் கொண்டே தான் குளித்து முடித்து வந்தமர்ந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                 கட்டிலில் அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டவன் அவள் செய்கையை மறந்து தோளோடு அவளை அணைக்க முற்பட, “என்கிட்டே எதையாவது மறைக்கிறீங்களா..” என்றாள் திரு.

                “என்ன கேட்க நினைக்கிற. நேராவே க்கேளு.” என்று அவள் முகம் பார்த்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                அவன் அப்படி கூறிவிடவும் திருவும் தயங்காமல் “கோதையோட புருஷனுக்கு வேலை வாங்கி கொடுத்தீங்களா…” என்றாள் அழுத்தமாக

                வாசுதேவகிருஷ்ணன் லேசாக அதிர்ந்தாலும், சமாளித்து தானே ஆக வேண்டும் என்று நினைத்தவனாக “ஆம்..” என்று தலையசைத்தான்.

                  திருவுக்கு அதற்குமேல் அவன் வார்த்தைகளை கேட்கும் பொறுமையில்லை. இல்லை என மறுத்துவிடமாட்டானா என்று அவள் உயிரின் ஒவ்வொரு அணுவும் காத்திருக்க, அவன் ஆமென தலையசைத்ததில் பட்டென அவனை விட்டு விலகி எழுந்து கொண்டாள் திரு.

                  வாசுதேவன் அவளை முறைக்க, கண்களில் தேங்கிய கண்ணீரை அப்படியே உள்ளிழுத்துக் கொண்டவள் “ஏன் பழைய பாசம் ரொம்ப இழுக்குதா..” என்று ஒரு முடிவுடன் கேட்க, பதிலில்லாமல் அவளை முறைத்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                    திருமகள் அவனை அசராமல் எதிர்கொண்டு நிற்க, “உனக்கு அறிவிருக்கா.. என்ன பேசுற புரியுதா..” என்று அதட்டலான குரலில் பிசிறில்லாமல் வாசுதேவன் கேட்க,

                     “அறிவிருந்தா நான் ஏன் இப்படி இருக்க போறேன். என் புருஷன் அடுத்தவளுக்கு செய்றதை என்கிட்டே இருந்து மறைக்கிறதைக் கூட தெரிஞ்சிக்காம அவரோட குடும்பம் நடத்திட்டு இருக்கேனே. எனக்கு எப்படி அறிவிருக்க முடியும்..”

                     “உனக்கு புரியல திரு… நான் சொல்றதை.”

                     “எனக்கு நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். நான் கேட்டு எதையும் நீங்க சொல்ல வேண்டாம். ஏன் என்கிட்ட இருந்து மறைச்சிங்க நீங்க.. தினமும் என்னோட தானே இருக்கீங்க. ஒருமுறை கூட என்கிட்டே சொல்லணும்னு தோணவே இல்லையா உங்களுக்கு..”

                      “அப்படி என்ன என்னைவிட அவ உங்களுக்கு முக்கியமா போயிட்டா.. ஏன் உங்க பழைய காதலி கண்ணீர் விடறதை பார்க்க முடியலையா..” என்ற நிமிடம் திருவின் கன்னம் திகுதிகுவென எரிய ஆரம்பித்து இருந்தது.

                    ஆனால், அன்று போல அமைதியடையாமல் “ஏன் உண்மையை சொன்னா கசக்குதா.. என் கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா, என்னை அடிப்பீங்களா நீங்க.. என்னை அடிக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தா.. ஏன் அடிச்சீங்க என்னை.” என்று கண்களை துடைத்துக்கொண்டே சண்டைக்கு நின்றவளை பார்த்து எரிச்சலாக இருந்தாலும், அவள் கண்ணீரைக் காணவும் பாவமாக இருந்தது வாசுதேவகிருஷ்ணனுக்கு.

                     அவளை எபப்டியும் சரிசெய்ய வேண்டும் என, அவள் கன்னத்தை தொட அவன் முயற்சிக்க “என்னை தொடாதிங்க..” என்று கண்ணீருடன் விலகிச் சென்றாள் மனைவி.

                     “த்திரு..” என்று வாசுதேவன் அதட்ட,

                     “என் பேரைச் சொல்லாதீங்க..” என்று காதுகளை மூடிக் கொண்டாள் அவள்.

                   வாசுதேவன் அவளை அப்படியே விட மனமற்றவனாக “திரும்மா..” என்று அவளை நெருங்க,

                     “என் பக்கத்துல வராதீங்க சொல்லிட்டேன்.” என்று கடுமையாக எச்சரித்தாள் மனைவி.

                     அவள் செயலில் அவனுக்கும் கோபம் துளிர்க்க, “என்னை ப்பேசவே விடமாட்டியா நீ..” என்று வாசுதேவன் கத்த

                     “என்கிட்டே பேசவே வேண்டாம் நீங்க.. போங்க இங்கேயிருந்து. உங்க மாமன் மகளும் வாசு மாமான்னு ரொம்ப பாசமா காத்துட்டு இருக்கா.. போங்க..” என்றுவிட, மீண்டும் கையை ஓங்கியிருந்தான் வாசுதேவன்.

                      ஆனால், அவளை அடிக்க மனம் வராமல் அவள் கழுத்தைப் பிடித்து இறுக்கியிருந்தான் இம்முறை. “உனக்கும் எனக்கும் இஇடையில க்க்கோதையை கொண்டு வராத.. ன்னான் மனுஷனா இருக்கமாட்டேன். இனி அவளோட பேர் கூட உன் வாயில இருந்து வரக்கூடாது..” என்று கடுமையாக அவன் எச்சரிக்கை செய்ய,

                       “நீங்க என்ன எனக்கு உத்தரவு போடறது.. நீங்க என்கிட்டே சொல்லிட்டுத்தான் எல்லாம் செய்யறீங்களா.. என்கிட்டே சொல்லிட்டுதான் அவ புருஷனுக்கு வேலை வாங்கி கொடுத்தீங்களா.” என்று கத்தினாள் மனைவி.

                      “வாயை மூடறியா, இல்லையா நீ..” என்று வாசுதேவன் அதட்ட

                       “நான் பேசுறதுகூட கஷ்டமா இருக்கா உங்களுக்கு.”

                       “இந்த நிமிஷம் நீ வாயை மூடாம போனால், இந்த ஜென்மத்துக்கும் என் வாயில இருந்து வர்ற கடைசி வார்த்தை இதுவாதான் இருக்கும். உனக்கு விருப்பம்ன்னா கத்திட்டே இரு. ” என்று அலட்சியமாக அவளை பிடித்து தள்ளியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                      அவன் தள்ளிவிட்டதில் திருமகள் குளியலறைக் கதவின் மீது விழுந்திருக்க, உடலின் வலியை விட, அவனது அலட்சியமும், வார்த்தைகளும் அதிகமாக அவளை சுட்டது.

                       எப்போதும் சரிக்கு சரி நிற்பவள் அவள். அவள் மீது தவறு இல்லை எனும்பட்சத்தில் ஏகத்திற்கும் கோபம் வரும். ஆனால், முதல்முறையாக பெரிதாக அடி வாங்கிய உணர்வு. நிதானமாக சிந்தித்து நியாய அநியாயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பவள் தான்.

                  ஆனால், இந்த நிமிடம் அனைத்தையும் மீறிக்கொண்டு அவளின் காதல் கொண்ட மனம் முன்னே நிற்க, பொறுமையை முற்றிலுமாக இழந்துவிட்ட ஒரு இதயத்தின் அறைகூவல் தான் அவள் வார்த்தைகள்.

                  மூன்று ஆண்டுகளாக கத்தியின் மீது தவமிருப்பதைப் போல் அவனை மனதில் வைத்து காத்திட்டவள் அவள். அவன் வேண்டாம் என்று மறுத்துச் சென்ற பின்னும் கூட அவனை மறந்ததே இல்லையே. ஆயிரம் காரணங்கள் கூறிக் கொண்டாலும், அவனை ஏமாற்றிச் சென்றவள் என்பது முக்கிய காரணமாகிப் போகவும்தான் கோதையை அவள் முற்றிலுமாக தவிர்த்தது.

                    ஆனால், இன்று அதே கோதைக்காக வாசுதேவன் கைநீட்டி தன்னை அடித்துவிட்டான் என்பதை ஏற்க முடியவில்லை. அதற்காக அவனிடம் சண்டையிடவும் மனம் வராமல் அப்படியே அமர்ந்து கொண்டாள். வாசுதேவன் அறையை விட்டு வெளியேறி இருந்தாலும், அந்த அறையின் கட்டிலிலோ, இருக்கைகளிலோ எழுந்து அமரும் எண்ணம் வரவில்லை.

                 இடிந்து போனவளாக அவள் அமர்ந்திருக்க, காலை விடியல் வரை அவள் நிலையில் மாற்றமில்லை. வாசுதேவகிருஷ்ணனும் இரவு வெளியே சென்றவன் அதன்பின்னர் வீடு வராமல் போயிருக்க, திருமகளின் எண்ணங்களும், அவளின் உணர்வுகளும் அவனுக்கு புரியாமலே போனது.

Advertisement