Advertisement

ஆனால், அதே மனோகர் எந்த இடத்திலும் அவன் தாய் தந்தையையும் விட்டு கொடுத்தது இல்லை. திருமணம் முடிந்த நிமிடம் நேராக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவன். அவன் வீட்டிலும் ஆயிரம் ஏச்சு பேச்சுக்கள் இருந்தாலும், இவர்களை வெளியே துரத்தாமல் வீட்டிற்குள் அழைத்துக் கொள்ள, புகுந்த வீட்டை நினைத்து பெருமைதான் அந்த நேரம்.

                    அப்போதுகூட பிறந்தவீட்டிற்கு தான் செய்த துரோகத்தை பெரிதாக உணர்ந்ததில்லை அவள். என்னைக் கேட்டா திருமணம் ஏற்பாடு செய்தார்கள் என்ற அர்த்தமில்லா கோபம்தான். அதுவும் வாசுதேவனை நினைத்து பயமும் ஒருபக்கம் இருக்க, திருமணமான புதிதில் மனோகரைத் தவிர்த்து யாரை நினைத்தும் கவலை கொண்டதில்லை அவள்.

                  மாமியார் வீட்டில் தன்னை ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை என்பதை அவள் உணர்ந்து கொள்ளவே முழுதாக ஒருமாதம் தேவைப்பட்டது அவளுக்கு. அதுவும் மாமியார் கடமைக்கென்று ஒருசில வார்த்தைகளில் தன்னிடம் பேச்சை முடித்துக் கொள்கையில் சில சமயங்களில் அழுகையே வரும்.

                  இதுகுறித்து மனோவிடம் தெரிவிக்க, அவனும் “கொஞ்சநாள் போனா சரியாகிடுவாங்க. நம்மளை ஏத்துக்கிட்டதே பெரிய விஷயம். கொஞ்சம் பொறுத்து போடா..” என்று அவளைக் கொஞ்சியே சரிசெய்து விடுவான் அப்போதைக்கு.

                    ஆனால், நாளாக நாளாக இந்த இடைவெளி அதிகமாகத் தான் ஆனதே தவிர, தான் அந்த வீட்டின் மருமகள் என்று உணர்ந்ததே இல்லை கோதை. அவளின் மாமியார் ஈஸ்வரியும் அவளை மருமகளாக நடத்தியதே இல்லை.

               என்ன விஷயம் என்றாலும், மனோகரிடம் நேரடியாகவே சொல்லி வைப்பார். எல்லா இடத்திலும் இந்த வீட்டின் தலைவி நான் என்று உணர்த்திக் கொண்டே இருக்கும் ஜீவன் அவர்.

               கோதையும் ஆரம்பத்தில் அவரை நெருங்க முயற்சித்தவள் அதன்பின்னர் தானே ஒதுங்கிக்கொள்ள, பெரும்பாலும் சண்டைகள் ஏதுமில்லாமல் மூன்று ஆண்டுகளை அந்த வீட்டில் கடந்து வந்திருந்தாள் அவள்.

                  அப்படிப்பட்ட உறவுகளுடன் வாழ்ந்தவளுக்கு நாச்சியார் மற்றும் திருமகளின் இந்த பிணைப்பு ஏக்கத்தை கொடுத்ததில் ஆச்சர்யமேதுமில்லையே.

                  ஆனால், அவர்களை ஏக்கத்துடன் பார்த்தவள் அப்படியே தன் வழியில் சென்றிருக்கலாம். அது அத்தனைப் பேருக்கும் நல்லதாக முடிந்திருக்கும். ஆனால், கோதையின் ஏக்கம் அவளை உந்த, கால்கள் தானாக விசாலத்தை நெருங்கியது.

                     விசாலம் கோதையைப் பார்த்து கோபம் கொண்டாலும், நிறைமாதமாக இருக்கும் அவளிடம் வெளிப்படையாக காண்பிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்துவிட்டார் அவர். திருமகள் அவளிடம் பேச நினைத்தால் தான் தடுக்க முடியாதே என்றுதான் அவர் அமைதிகாத்தது.

                      ஆனால், கோதையைக் கண்ட நிமிடமே “போகலாம் அத்தை.” என்று திருமகள் எழுந்து நிற்க, “நாச்சி..” என்று அவளை அழைத்தபடியே தானும் எழுந்துவிட்டார் விசாலம்.

                 திருமகள் அமைதியாகத் தான் கடந்துவிட நினைத்தாள். ஆனால், கோதை அவளை அப்படி நகர விடாமல் கைபிடித்து நிறுத்த, “மரியாதையா என் கையை விட்டுடு.. அசிங்கமா ஏதாவது பேசிட போறேன்.” என்றிருந்தாள் திருமகள்.

                  “திரு.” என்று விசாலம் அதட்டவும், அவரை பார்வையால் அடக்கியவள் “கையை விடுடி.” என்று அடங்கிய குரலில் கத்த,

                  “என்னை ஏன்டி இப்படி சித்ரவதை பண்ற.. தெரியாம ஒருமுறை தப்பு பண்ணிட்டேண்டி.. என்னை மன்னிக்கமாட்டியா திரு..” என்று கண்ணீருடன் கோதை நிற்க,

                  “தெரியாம பண்ணியா.. அப்போ தெரிஞ்சே உன் கொழுந்தனுக்கு என்னை கூட்டி கொடுக்க நினைச்சியே.. அதை எந்த கணக்குல சேர்க்க..” என்றுவிட்டாள் திரு. அவளின் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எதிரில் இருந்தவளை நிலைகுலைய செய்ய, இந்த சூழலை தவிர்க்கத்தான் அவள் வேகமாக கிளம்பியது.

                  ஆனால், கோதை தானாகவே பேசி வாங்கிக்கட்டிக் கொள்ள, விசாலம் “திரு அமைதியா இரு..” என்று மீண்டும் அதட்டினார்.

                   கோதை அவர் பேச்சை காதில் வாங்காமல் “என்னடி சொல்ற.. நான் முரளியை.. நான் எப்படிடி அந்த பாவத்தை செய்வேன்.. என்னை அப்படிதான் நினைக்க தோணுதா உனக்கு..” என்று கோதை அழ,

                   “நீ அழறதைப் பார்த்து இரக்கமே வரல எனக்கு. உன்னால நான் அனுபவிச்ச வேதனைகள் தான் கண் முன்னாடி வருது. அன்னைக்கு ஓடிப்போனப்பவும் நீ எங்களை யோசிக்கல. கடைசியா என் வீட்டு வாசல்ல வந்து நின்னியே அப்பவும் என்னை யோசிக்கல. உனக்கு உன் கொழுந்தனுக்கு உன் குடும்பமும் தானே பெருசா தெரிஞ்சது.. நீ ஏன் என் முன்னாடி வந்து நிற்கிற.” என்று கத்தினாள் திரு.

                  அதீத கோபத்தில் அவள் விழிகளும் கலங்கி சிவந்துபோயிருக்க, “என்ன பேசுற திரு நீ. நான் ஓடிப்போனதால பாதிக்கப்பட்டது நம்ம குடும்பம்தான். எனக்கு தெரியும். ஆனா, நீ இந்தளவுக்கு கோபப்பட என்ன நியாயம் இருக்குடி. அன்னைக்கு முரளிக்கு நான் பேசியதும் அவன் அடிவாங்கறதை பார்த்ததால் தான். நம்ம ரகுவை யாரும் அடிச்சா கேட்கமாட்டேனா.. அப்படித்தான் திரு. புரிஞ்சிக்கோயேன்.” என்ற கோதையை உறுத்து விழித்தவள் “திரும்பவும் சொல்றேன். ஒழுங்கா போயிடு.” என்றாள் முடிவாக.

                  “ஏன் என் கேள்விக்கு பதில் கொடுக்க முடியலையா..”

                  “பதில் வேணுமா.. சரி சொல்றேன் கேட்டுக்கோ.” என்று கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிட்டாள் திரு.

                   “என்ன சொன்ன.. ரகுன்னு நினைச்சியா.. என் தம்பியோட அந்த பொறுக்கியை கம்பேர் பண்ண பாரு. அங்கே நிற்கிற நீ. என் தம்பியும், உன் வீட்டு பொறுக்கியும் ஒன்னு இல்ல. முதல்ல அதைப் புரிஞ்சிக்கோ.. அதோட என் தம்பி மேல யாரும் கையை வைக்கணும்னு நினைச்சாலே அவன் கையை வெட்டி அடுப்புல வச்சிடுவேன்.”

                     “அடுத்து என்ன உன் குடும்பம் பாதிக்கப்பட்டதா.. நான் பாதிக்கப்பட்டேன். மாலையும், கழுத்துமா நான் நின்னது எனக்குதான் தெரியும். நீ எவன் பின்னாடியே போனதுக்கு தண்டனை அனுபவிச்சது நான். உனக்கு தெரியுமா.. மாமா மட்டும் அன்னைக்கு என் கழுத்துல தாலி கட்டாம போயிருந்தா, ஜென்மத்துக்கும் இன்னொருத்தனை கட்டி இருக்கமாட்டேன் நான்.”

                  “அவரை நினைக்கவும் முடியாம, மறக்கவும் முடியாம இந்த மூணு வருஷமா நான்பட்ட வேதனை உனக்கு தெரியுமா.. பெருசா பேச வந்துட்டா. ஹேய் முதல்ல நீ யாரு.. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.”

                 “குடும்பமே வேண்டாம்ன்னு தானேடி போன. இப்போ என்ன தங்கச்சி மேல அக்கறை..” என்று கத்தி தீர்த்துவிட்டாள் திருமகள்.

                  கோவிலில் அவர்களை கடந்து சென்ற சிலர் அவளை பார்த்துக்கொண்டே சென்றதை எல்லாம் உணரவே இல்லை அவள். விசாலமோ அவள் மகனைப்பற்றி கூறிய வார்த்தைகளில் அவள் மனதை உணர்ந்து அதிர்ந்து நின்றிருந்தார்.

                  “அடி பாதகத்தி.. என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு.” என்று உறைந்து நின்றார் அவர். “அன்று மகன் மட்டும் தாலி கட்டாமல் போயிருந்தால்..” என்று நினைக்கவே பயமாக இருந்தது அவருக்கு.

                    இங்கே கோதையோ “எல்லாமே என் தப்புதான் திரு. என்னை மன்னிச்சிடுடி.. ” என்று மீண்டும் திருவின் கையைப் பிடிக்க,

                  அவள் கையை உடனடியாக விலக்கி கொண்டவள் நகர, “என்னால அதிகம் கஷ்டப்பட்டது வாசுமாமா தான். அவரே எங்களை மன்னிச்சிட்டாரு. நீ ஏண்டி இப்படி பண்ற.” என்று அழ,

                  “இன்னொருமுறை என் புருஷனை மாமான்னு சொன்ன.. கோவில்னு கூட பார்க்காம எதையாவது பேசிடுவேன். ஆமா, இதென்ன புதுக்கதை.. அவர் உன்னை மன்னிச்சிட்டார்ன்னு.. உன்கிட்ட சொன்னாரா..?” என்றாள் நக்கலாக

                  “ஆமா.. அவர்தான் என் வீட்டுக்காரருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கார். நாங்க இப்போ எங்க வீட்ல இல்ல.. வெளியே வந்திட்டோம்.”

                 “வாசு மாமாதான்..” என்றவள் மேலே பேசும்முன்னர் அவள் கழுத்தை பிடித்திருந்தாள் நாச்சியார்.

               கோதை அதிர்ந்து விழிக்க, “அவரை அப்படி கூப்பிடாதன்னு சொல்றேன் இல்ல..” என்று அவள் கத்த. அப்போதுதான் தெளிந்தார் விசாலம்.

               “அடியேய் விடுடி..” என்று கத்தியவர் கோதையிடம் “நீயாவது போய் தொலையேண்டி.. ஏன் இங்கே வந்து எங்க உயிரை வாங்கிட்டு இருக்க..” என்று சத்தமிட, அவரிடம் இருந்த பயத்தில் கோதை கண்ணீருடன் விலகி நடக்க, இங்கே திருமகள் அவளின் வார்த்தைகளில் உக்கிரகாளியாக நின்றிருந்தாள்.

                “பேசமாட்டேன்.. பேசமாட்டேன்னு என்னை சாவடிச்சது என்ன.. கடைசியில அவ புருஷனுக்கு வேலை வாங்கி கொடுப்பாரா.. இவருக்கு எதுக்கு இந்த வேலை.. இதுல இந்த நாய் வேற மாமான்னு சொல்லிட்டு திரியுறா.. கொஞ்சம்கூட வெட்கமே கிடையாதா இதுகளுக்கு..” என்று மனதில் கணவனையும் உடன் பிறந்தவளையும் வறுத்தெடுத்தவள் கொண்டவனை மன்னிப்பதாக இல்லை.

                    வீடு திரும்பும்வரை ஒரு வார்த்தைகூட விசாலத்திடம் பேசாமல் அமைதியாக வீடு வந்து சேர்ந்தவள் கணவனுக்காக காத்திருக்க, அந்த நேரம் ரகுவரன் அழைத்தான். எப்போதும் பேசும் இயல்பான பேச்சுக்கள் தான். இருவருக்கும் ஒருவயது தான் வித்தியாசம் என்பதால் பேச்சுகளும், அரட்டைகளும் எப்போதும் அதிகம் தானே.

                 இப்போதும் அத்தனை கோபத்தில் இருந்தாலும், தம்பி அழைக்கவும் அவன் தூரமாக இருக்கிறான் அவனை சங்கடப்படுத்த வேண்டாம் என்று தன்னை மறைத்துக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்தாள். ஆனால், ரகுவரன் விளையாட்டு பேச்சாக “என்ன சொல்றார் உன் புருஷன்..” என்று கேட்டுவிட, அவ்வளவுதான்.

                 கொதித்துப் போனாள் திருமகள். “என்னோட புருஷன் உனக்கு யார் ரகு.. ” என்று வலித்த குரலில் கேட்டுவிட்டவள் “அவருக்கான மரியாதையை கொடுக்க முடிஞ்சா பேசு.. இல்ல, அவரைபத்தி எப்பவும் ஒருவார்த்தைக்கூட பேசாத.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

                 அவளுக்கே அந்த நேரம் தெரியாது. தன் கோபத்தால் தன் கணவன், தன் உடன்பிறந்தவன் இருவரும் என்ன நிலைக்கு ஆளாகப் போகிறார்கள் என்று.

Advertisement