Advertisement

நெஞ்சம் பேசுதே 11 

                  

                வாசுதேவகிருஷ்ணனும் திருமகள் நாச்சியாரும் இருவர் ஒருவராக கலந்து ஒரு வாரம் கடந்திருக்க,  வழக்கம் போல் ஒரு அவசரமான காலை வேளை தான் அது. முதல் நாளுக்கு பிறகு காலையில் தாமதமாக எழுவதை தவிர்த்து விட்டிருந்தாள் திரு. தனது வழக்கமான வேலைகளை முடித்துவிட்டவள் வாசுதேவகிருஷ்ணனுக்கு அலைபேசியியில் அழைக்க, எடுக்கவே இல்லை அவன்.

                ஏதாவது வேலையாக இருப்பான் என்று திருமகள் மதிய உணவுக்காக காய்கறிகளை வெட்டிக்கொண்டு அமர்ந்திருக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் கணவன் அழைத்துவிட்டான்.

                 திரு அழைப்பை ஏற்கவும், “ம்ம்..” என்று வாசுதேவனின் குரல் கேட்க, “என்ன பண்றிங்க.” என்றாள் மனைவி.

                  “இதை கேட்கவா அழைத்தாள்.?” என்று கடுப்பனாலும், “என்ன வ்விஷயம்.” என்றான் அமைதியாக.

                 “கோவிலுக்கு போகணும். சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வாங்க.” என்றவள் “மதியம் நானே சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா..” என்றாள் சிரிப்புடன்.

                   வாசுதேவனுக்கும் அவளது மெல்லிய சிரிப்பொலி கேட்க, “வீட்ல வேலை எதுவும் இஇல்லையா..” என்றான் கிண்டலாக

                    “நான் என்ன கேட்டா நீங்க என்ன கேட்கறீங்க.” என்று திரு சிலிர்க்க,

                    “எதுக்குடி போனை போட்ட.” என்று அதட்டினான் வாசுதேவன்.

                     “சும்மா பண்ணேன்.. ஏன் பண்ணகூடாதா..”

                     “வேலையிருக்கு த்திரு.”

                     “உங்களுக்கு இப்போதான் வேலையில்லாம இருக்கு.. சாப்பிடவும் தூங்கவும்தான் வீட்டுக்கு வர்றிங்க. மத்த எல்லா நேரமும் வேலை தானே செய்யறீங்க.. கொஞ்ச நேரம் என்னோட பேசுங்க.” என்றாள் சட்டமாக

                       “படுத்துற திரு நீ..” என்று வாசு கண்டிக்க,

                       “எப்போ கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்க.. “

                       “ஏன் எப்பவும் உன் அத்தையும் நீயும்தானே போவீங்க..” என்று வாசு கேட்டுவிட,

                        “சரி நான் அத்தையோடவே போறேன். உங்ககிட்ட கேட்டேன்ல என்னை சொல்லணும்..” என்று சடைத்துக் கொண்டாள் அவள்.

                        “கொஞ்சம் வ்வேலையிற்ருக்கு திரு.. ச்சொன்னா ப்புரிஞ்சிக்கிக்கோ..” என்று அவன் அவசரத்தில் அதிகமாக திக்க,

                         “சரி என்னவோ பண்ணுங்க.. நான் அத்தையோட போறேன்.” என்று ஒப்புக்கொண்டாள் திரு.

                       அப்போதும் “கோபமா..” என்று வாசு கேட்டுவிட,

                       “இல்லையே.. குளுகுளுன்னு இருக்கேன்..” என்று நக்கலடித்தாள் அவள்.

                       “அப்படியே இரு.. ராத்திரி பேசிக்குவோம்..” என்று கணவன் சிரிக்க,

                       “ராத்திரி பேச்சே கிடையாது உங்களோட..” என்று சூளுரைத்தாள் திரு.

                       “சூப்பர் திரு.. எதுக்கு பேசி நேரத்தை வீணாக்கிட்டு.. பேசவே வேணாம்.” என்றான்

   தெளிவாக.

                          திருமகளின் முகம் சிவந்து விட, “நைட் கண்டிப்பா நோ தான் வாங்க.. நீங்க வர்றதுக்குள்ள படுத்து தூங்கிடறேன்.” என்றாள் மிரட்டலாக.

                          “அதுவும் ன்நல்லது தான். ஓவர் டைம் பார்த்துக்கலாம். த்தூங்கிக்கோ..”

                         “வாய் வாய் வாய்.. இதுல பேசவே மாட்டேன்னு பெருசா பேச்சு வேற..நேர்ல வாங்க பேசிக்கறேன்.” என்றவள் அழைப்பைத் துண்டிக்க நினைக்க,

                         “ஓய்.. ” என்று நிறுத்தினான் வாசுதேவகிருஷ்ணன். திரு என்னவென்பதாக மௌனமாக “கோவில்ல பிரசாதம் ம்மறந்திடாத..” என்றான் கள்ளன்.

                       “மாமா..” என்று திரு பல்லை கடிக்க, வாசுதேவன் பெரும் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்துக் கொண்டான்.

                          இங்கே அலைபேசியில் சமையல் மேடையில் வைத்துவிட்டவளும் முகம் கொள்ளாத புன்னகையுடன் தான் நின்றிருந்தாள்.

                          இந்த ஒருவாரமாகவே அவ்வபோது “கோவா..” என்று வாயசைத்து கிண்டலடித்துக் கொண்டே தான் இருந்தான் வாசுதேவகிருஷ்ணன். அதோடு மறவாமல் இரவில் அவன் வரும் நேரத்திற்கு பால்கோவா வாங்கி வந்து அவள் கையில் கொடுத்துவிடுவதை வழக்கமாக்கி கொண்டிருந்தான்.

                     ஆனால், அந்த நேரங்களில் திருவுக்கு தான் அவன் முகத்தைக் கூட பார்க்க முடியாதபடி வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ளும். “தினம் ஏன் வாங்கிட்டு வர்றிங்க.” என்று திட்டினாலும், அலுக்கவே செய்யாது அவளுக்கு.

                     அதுவும் முதல்வாய் எடுத்து வைப்பது மட்டுமே தெரியும் அவளுக்கு. என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அவள் உண்ட மறுநிமிடம் கோவாவின் சுவை வாசுதேவனின் வாயில் இறங்கி இருக்கும்.

                      “எனக்கு வாங்கிட்டு வர்றிங்களா.. நீங்க சாப்பிட வாங்கிட்டு வர்றிங்களா..” என்று திரு செல்லமாக சண்டையிட்டபோதும் சிரிப்புடன் அவள் பேச்சை நிறுத்திவிடுவான் வாசுதேவகிருஷ்ணன்.

                       கணவனின் நினைப்பில் புன்னகையுடன் அவள் வேலைகளைத் தொடர, “என்னடி தனியா சிரிச்சுட்டு இருக்க..” என்று அதட்டிக்கொண்டே உள்ளே நுழைந்தார் விசாலம்.

                     அவரை முறைத்து “என்ன வேலையெல்லாம் முடிஞ்சுதா.” என்றாள் நக்கலாக.

                     “அதெல்லாம் முடிஞ்சுது.. ஒரு டீ போடு, குடிப்போம்.” என்றார் பாசமாக..

                    “காலையில கோட்டா முடிஞ்சுது. இதோட சாயங்காலம் ஒருவேளை தான் டீ. இப்போ வேணா சுக்கு தட்டிப்போட்டு பால் கொடுக்கவா.”  என்று கறாராக கேட்டாள் திரு.

                     “ஏன்டி ஒரு டீ கொடுக்கவா இந்த பேச்சு.. ஒருமுறை போட்டு கொடுடி. இல்லை வழியை விடு. நான் போட்டுக்கறேன்.” என்று விசாலம் முன்னேற

                      “நீ ஒன்னும் செய்ய வேண்டாம். தள்ளி நில்லு. வீட்ல உன்னை நம்பி விட்டுட்டுப் போனா, உன் இஷ்டத்துக்கு டீயைப் போட்டு குடிச்சு, அதிலேயே உசுரு வாழ்ந்துட்டு இருக்க நீ. ஒருநாளைக்கு ரெண்டு டீ தான் உனக்கு. சாப்பாட்டு வேலையை முடிச்சிட்டேன் பாரு. வா வந்து சாப்பிடு.” என்றாள் மருமகள்

                       “எனக்கு படிக்கவே இல்லடி. தலைவலிக்குது.” என்று பாவமாக விசாலம் பார்க்க, அவரை முறைத்துக்கொண்டே, பாலைக் காய்ச்சியவள் கணவனிடம் சொல்லி வாங்கி வைத்திருந்த ப்ரோட்டீன் பவுடரை அதில் கலந்து விசாலத்தின் கையில் கொடுத்துவிட்டாள்.

                        “இது ஒரே முட்டாய் வாடை வருதுடி. எனக்கு பிடிக்கவே இல்ல.”

                        “நீ குடிக்கிற டீயோட வாடை எனக்கு ஆகல. ஒழுங்கா குடி அத்தை.” என்று மிரட்டி அவரை திரு முறைக்க, முகத்தை சுருக்கிக்கொண்டு வெளியேறினார் விசாலம்.

                         கடைசி மூன்று நாட்களாக இருவருக்கும் இதே வாதம் தான். விசாலம் வீட்டில் தனியே இருப்பதால் நினைத்த நேரத்திற்கு தேனீர் வைத்து குடிப்பதை பழக்கமாகவே மாற்றிக் கொண்டிருக்க, ஒருநாளைக்கு பத்து முறைக்கும் மேல் நீண்டது அவரின் தேநீர் இடைவேளை.

                        பெரும்பாலான நாட்கள் காலை உணவைத் தவிர்த்து விடுபவர் எப்போது பசிக்கிறதோ, அப்போது மதிய உணவை சாப்பிட்டு பழகியிருந்தார். அவருடன் இருந்த மூன்று நாட்களில் அவரின் பழக்கங்களை கணித்துவிட்ட திரு, கணவன் கிளம்பும் நேரமே அவனோடு உணவுண்ண அமர்த்திவிடுவாள் விசாலத்தை.

                 திரு முதல்நாள் அன்னையை அதிசயமாக பார்க்க, அவனிடமும் அவர் செய்யும் வேலையைப் பற்றி போட்டுக் கொடுத்துவிட்டாள் மருமகள். அன்னையை முறைத்தவன் அன்று மாலையே சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த ப்ரோட்டீன் பவுடர் டின் ஒன்றை வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்திருந்தான்.

                   திருவும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது விசாலத்திடம் அதை நீட்டிட, அவ்வபோது முகத்தை தூக்கி கொண்டு அமர்ந்துவிடுவார் அவர்.

                        அவரின் ஆரோக்கியம் முதன்மையானதாகத் தோன்ற, அவரின் கோபங்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை நாச்சியார். விசாலமும் அடுத்த அரைமணி நேரத்தில் பெரும்பாலும் இயல்பாகி விடுவார். அவருக்கும் மருமகளின் அக்கறை புரிந்தாலும், இத்தனை வருட பழக்கத்தை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது அவருக்கு.

                ஆனாலும், மருமகள் தன்னையும் தன் கணவரையும் பார்த்து பார்த்து கவனிப்பதில் அத்தனைப் பெருமிதம். ராகவன் வெளியிடங்களில் மருமகளின் பெருமையைப் பாடிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வரும் உறவுகளிடம் மருமகளின் புகழ் பாடத் தொடங்கியிருந்தார் விசாலம்.

                 வாழ்வு இயல்பாக மாறியிருக்க, அன்று மாலையில் விசாலத்துடன் மாகாளி கோவிலுக்கு சென்றிருந்தாள் திருமகள்.

                   அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க, காளியம்மனை வணங்கி முடித்து கோவிலில் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டனர் மாமியாரும் மருமகளும்.

                  கோதை அதே நேரம் தன் வீட்டின் அருகில் இருக்கும் பெண்ணோடு கோவிலுக்கு வந்திருக்க, நாச்சியாரும், விசாலமும் அப்போதுதான் அவள் கண்ணில்பட்டனர்.

                   விசாலம் அன்று அடித்துவிட்டதில் லேசாக அச்சம் கொண்டாலும், நாச்சியாரும், விசாலமும் பேசிக் கொண்டிருந்ததைக் காணவும் மெல்லிய ஏக்கம் எழுந்தது அவளுள்.

                   அன்று இவரையும்,இவர் மகனையும் கண்டு அஞ்சித்தான் தான் விலகினோம் என்று நினைக்க, அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

                     அவளின் காதல் தவறென்று இன்றுவரை நினைத்ததே இல்லை கோதை. மனோகரும் மனைவியை எங்கும் விட்டுக் கொடுத்திடாத கணவன் தான். உண்மையில் அப்படி ஒரு கணவன் கிடைத்தது அவளின் நல்லநேரம் தான்.

Advertisement