Advertisement

நெஞ்சம் பேசுதே 07

 

                      மூன்று நாட்களுக்கு முன்பாக ஊர்சபையில் நடந்ததை முற்றிலும் மறந்தவளாக திருமகள் நாச்சியார் வலம்வர, நடந்த எதையும் மறக்க முடியாமல் அறைக்குள் அடைந்திருந்தான் முரளி. மூன்று நாட்களுக்கு முன் பஞ்சாயத்து முடிந்து வீடு வந்த நிமிடமே அவன் அண்ணி அவளது பஞ்சாயத்தை ஆரம்பித்திருந்தாள்.

                 இந்த மூன்று ஆண்டுகளாக பரமசாது என்று பெயர் எடுத்திருந்த கோதை அன்று தன் விஸ்வரூப தரிசனத்தை பரிசளித்திருந்தாள் அந்த குடும்பத்திற்கு. அதுவும் அவள் பேசிய பேச்சுக்கள். இந்த நிமிடம் யோசிக்கும் போதும் கண்முன் நடப்பது போல் காட்சிகள் விரிந்தது முரளிக்கு.

                 அன்றைய தினம் வீட்டிற்குள் நுழைந்த நிமிடமே தன் பெட்டியை கட்டிவிட்டாள் கோதை. மனோகர் அவளைத் தடுக்க முற்பட, ” இனி ஒரு நிமிஷம் கூட என்னால இந்த வீட்ல இருக்க முடியாது மனோ. அப்படியே நான் இங்கே இருந்தாலும், ஏதோ ஒரு நிமிஷம் இவன் உயிரை எடுத்திடுவேன் நான். நிச்சயமா செய்வேன். தினமும் நான்தானே சமைக்கிறேன். ஒருதுளி விஷத்தை கலந்திட்டேனா.. என்ன செய்ய முடியும் உங்களால.?”

              “அதுக்காகத் தான் சொல்றேன். நான் இந்த வீட்டை விட்டு போறேன். என்னால இனி எப்போதும் இங்கே வாழ முடியாது. எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்.” என்றாள் அழுத்தம் திருத்தமாக

              “அண்ணி..” என்று முரளி அவளை நெருங்க,

              “செருப்பு பிஞ்சிடும்..” என்றாள் நிர்தாட்சண்யமாக.

              தம்பி, நீங்க, போங்க, வாங்க என்றே பேசி பழக்கப்பட்டவள் “செருப்பு பிஞ்சிடும்.” என்றதே நிஜத்தில் செருப்பால் அடித்ததைப் போல் தான் இருந்தது முரளிக்கு.

              அவளிடம் பேசவே முடியாமல் அவன் தலைகுனிய, “இந்தாம்மா.. என்ன பேசற நீ. உன் கொழுந்தன் அவன் நியாபகம் இருக்கா..” என்று கலியமூர்த்தி அதட்ட

              “வாழ்க்கையே வேண்டாம்ன்னு நிற்கிறவளுக்கு கொழுந்தன் என்ன.. குடும்பம் என்ன.. உங்க மகன் தான் வேணும்ன்னு வந்தவ தான். ஆனா, என்கூட பிறந்தவங்க வேண்டாம்ன்னு வரல.”

                “ஏற்கனவே என்னாலதான் என் அப்பா செத்துட்டாங்கன்னு ஒவ்வொரு நாளும் குற்ற உணர்ச்சியில் செத்துட்டு இருக்கேன். இன்னைக்கு என் குடும்பத்தை அசிங்கப்படுத்தி மொத்தமா என்னை கொன்னுட்டீங்க நீங்களும் உங்க மகனும்..”

                  “எவ்ளோ பெரிய காரியம் பண்ணி இருக்கான் இவன். ஏன்டா இப்படி செய்தேன்னு அவனை ஒரு வார்த்தை கேட்காம, அவன் தப்புக்கு துணை போறீங்க நீங்க. நீங்க நல்ல அப்பான்னு இப்படியா நிரூபிக்கணும்.”

               “எப்படி வாழ்ந்தவர் தெரியுமா என்னோட அப்பா.. என் தங்கை எப்படிப்பட்டவை தெரியுமாடா உனக்கு. நான் ஓடி வந்ததால என்னை வச்சு அவளை எடை போட்டியா நீ.. உன் அம்மா மேல ஆணையா சொல்லு.. என்னைக்காவது உன்கிட்ட நின்று பேசியிருப்பாளா அவ..?”

                “உனக்கு எங்கேயிருந்து இந்த தைர்யம் வந்துச்சு. இவ ஓடி வந்தவ தானே, இவளுக்கு போக்கிடம் இல்லன்னு நினைச்சு என் தங்கச்சிகிட்ட இப்படி நடந்தியா. எங்க வீட்டுக்கு வந்த நிமிஷம் கூட, என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்கன்னு பதறி ஓடி வந்தேனே.. அதுக்கு என்ன கைம்மாறு செஞ்சிருக்க தெரியுமா நீ…”

                 “உன்னை எங்க ரகுவைப் போலத்தான் நினைச்சேன் நான். ஆனா, நீ அந்த அன்புக்கு தகுதியே இல்லாதவன். கேவலமான பிறவி நீ. நீயும், உன் அப்பாவும் இருக்க இந்த வீட்ல நான் இருக்கமாட்டேன். நாளைக்கே இவளுக்கு கேட்க யார் இருக்கான்னு இதே மாதிரி என் ரூமுக்கு வரமாட்டன்னு என்ன நிச்சயம்..”

               “ஆனா, நீ அப்படி செய்தாலும் உன் பொண்டாட்டிதான் வர சொல்லியிருப்பான்னு உன் அண்ணன்கிட்ட சொல்வார் உங்க அப்பா.. ச்சீ..ச்ச்சீ..” என்று அருவருப்புடன் அவள் முகத்தை சுழித்த விதத்தில் அவள் காலிலேயே விழுந்திருந்தான் முரளி.

                 அவன் செயலை ஊகித்து இரண்டடி தள்ளி நின்றவள் “மன்னிப்பா.. நீ ஏன்பா என்கிட்டே மன்னிப்பு கேட்கணும். இன்னும் எந்த குடியை கெடுக்கலாம்னு திட்டம் போடுங்க அப்பனும் மகனும்.” என்று அடிவயிற்றில் இருந்து கத்தியவள் அவனைத் தாண்டி நடக்க,

                “கோதை..” என்று அவளின் கையைப் பிடித்தான் மனோகர்.

                 “என்னை மன்னிச்சிடுங்க. உங்களோட ஓடி வந்தவ நான். என்னை இவங்க எதுவும் பேசினா பொறுத்து போகணும்னு சொல்லி இருந்திங்க. இதுவரைக்கும் உங்க பேச்சை மீறினதே இல்ல நான். எத்தனையோ வார்த்தைகள் வலி கொடுத்தப்பவும், என் மனோவுக்காகன்னு நினைச்சுப்பேன்.”

                “ஆனால், என் குடும்பத்தை இவங்க அசிங்கப்படுத்தினதை பார்த்த பிறகும் நான் அமைதியா இருந்தா, நானெல்லாம் மனுஷ ஜென்மமே கிடையாது. இந்த சாக்கடையில என்னால வாழ முடியாது.” என்று அவனிடமும் கண்களைப் பார்த்து கூறிவிட்டாள் கோதை.

                  “நானும் உன்னை இங்கே இருக்க சொல்லி கேட்கமாட்டேன் கோதை. பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை இதுவரைக்கும் சரியா செய்திருக்கேன். இனி நானும் என் பொண்டாட்டி என் பிள்ளைன்னு யோசிக்கணும். அவங்களுக்கான கடமையை செய்யணும் இல்லையா.”

                   “நீ இந்த வீட்ல இருக்க வேண்டாம். நான் உன்னோட வர்றேன்.” என்றவன் அடுத்த சில நிமிடங்களில் பெற்றவர்களும் தம்பியும் கெஞ்சியதை எல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காமல் மனைவியுடன் கிளம்பியிருந்தான்.

                 ஆனால், அவனும் கிளம்பும் முன் “என் மகன்.. அவன் குடும்பம்னு நினைச்சிருந்தா, இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பீங்களா நீங்க. தாய் தகப்பன் இல்லாத பிள்ளைங்கப்பா. ஒரு விதத்துல தகப்பன் ஸ்தானத்துல நிற்க வேண்டியவன் நான். ஆனா, என் குடும்பம் அந்த பொண்ணை பஞ்சாயத்துல நிறுத்தி அசிங்கப்படுத்தி இருக்கு. இனி என்னைக்காவது ஒருநாள் அவளை குற்றவுணர்ச்சி இல்லாம பார்க்க முடியுமா என்னால..” என்று நொந்து பேசிவிட்டு சென்றிருக்க, அப்போதுதான் தான் செய்த தவறின் அளவு ஓரளவு புரிய வந்தது முரளிக்கு.

                  அவர்கள் சென்ற நிமிடம் தொட்டு அவன் அன்னையும் அவனிடம் பேசாமல் அவனை புறக்கணித்துவிட, மொத்தமாக தனித்து நின்ற உணர்வு முரளிக்கு.

                 இத்தனைக்கு இடையிலும் அவனது குறுக்குபுத்தி வேலை செய்ய, திருமகள் மட்டும் தன் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால், தனக்கு இந்த நிலை வந்திருக்காதா என்றுதான் யோசித்தான் அவன். நடந்தது மொத்தத்திற்கும் திருமகள் தான் காரணம் என்று அவன் மதிகெட்ட சிந்தை அவனை வழிநடத்த, மீண்டும் திருவிடமே வந்து நின்றான் அவன்.

                  நடந்த விஷயத்தால் அவளுக்கு என்ன பாதிப்பு வந்துவிட்டது.. என் வாழ்க்கை அல்லவா சூனியமாகி இருக்கிறது. அப்படி என்ன ஏற்றம் அவளுக்கு என்று திருவைத்தான் குற்றம் சுமத்திக் கொண்டிருந்தான் முரளி.

                   இத்தனைக்கு பிறகும் அடங்காதவனாக மீண்டும் திருவாய் எப்படியும் பழிவாங்கியே தீருவது என்ற எண்ணத்துடன் தன் நண்பர்களை சந்திக்க புறப்பட்டான் அவன்.

                   ————-

                   இங்கு திருமகள் நாச்சியார் தனது மாமியாரை சமையல் அறைக்குள் நுழைய விடாமல் தானே சமைத்து முடித்து அமர்ந்திருக்க, இன்னும் அவள் கணவன் வீடு வந்திருக்கவில்லை. நேரம் மதியம் மூன்று மணியைக் கடந்திருக்க, “இதுக்குதான் சொன்னேன். அவனைக் கோபப்படுத்தாதேன்னு. இரண்டு நாள் ஆனாலும் சாப்பிடாமலே இருப்பான்.. நாமதான் கிடந்து அழணும்.” என்று கவலையுடன் விசாலம் புலம்பிக் கொண்டிருந்தார்.

                   அவர் பேச்சைக் கேட்டவள் “இப்படி பேசி பேசியே தான் யாருக்கும் அடங்காம வளர்த்து வச்சிருக்க உன் பிள்ளையை. உன் மகன் வீடு வராம போனா, யார் விட்டது அவரை..?” என்று எழுந்து கொண்டவள் தன் அலைபேசியை எடுத்து வந்து அமர்ந்தாள்.

                   விசாலத்திடம் வாசுதேவனின் அலைபேசி எண்ணை வாங்கியவள் அவனுக்கு அழைக்க, சாரதிதான் அழைப்பை ஏற்றான். அது அவனின் வழக்கம் தானே. எப்போதும் அவனுக்கு வரும் அழைப்புகளுக்கு சாரதிதானே பதில் சொல்வான்.

                    இன்றும் அதே பழக்கத்தில் அவன் அழைப்பை ஏற்க, “என் புருஷன்கிட்ட கொடுங்க..” என்றாள் திருமகள் நாச்சியார். அவள் குரலே கட்டளையாக ஒலிக்க, ஒன்றும் பேசாமல் அலைபேசியை வாசுதேவகிருஷ்ணனிடம் நீட்டினான் சாரதி.

                     திருமகளிடம் வாசுதேவனின் அலைபேசி எண் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாசுதேவனுக்கு திருவின் எண் தெரிந்து தான் இருந்தது. திருமகள் என்றே அவன் சேமித்தும் வைத்திருக்க, இப்போது அலைபேசியைப் பார்க்கவும், “என்ன.” என்று கேட்கும்படிக் கூறினான் சாரதியிடம்.

                     சாரதி தயங்கியவனாக “அந்தப்பொண்ணு உன்கிட்ட பேசியே ஆகணும்னு நிற்குதுடா.. நீயே பேசிடேன்.” என்றான்.

                    வாசுதேவன் “பேசு.” என்று தலையசைக்க, “என்னன்னு கேட்கிறான்மா.” என்று சிறிய குரலில் திருமகளிடம் கூற,

                     “பேசமாட்டாராம்ம்மா…. சரி. நான் என் புருஷனுக்கு அவசரமா ஒரு முத்தம் கொடுக்கணும்.. அவர் வீட்டுக்கு வர்றாரா.. இல்ல, நான் அவர் இருக்க இடத்துக்கு வரணுமா கேளுங்க.” என்று பட்டென அவள் பேசிவிட, “அடியேய்..” என்று அவள் முதுகில் ஒன்று வைத்தார் விசாலம்.

                     அங்கே சாரதியோ, அவள் பேச்சில் அதிர்ந்தவனாக “இரும்மா.. இரும்மா..” என்று அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு வாசுதேவனின் கையில் திணித்துவிட்டான்.

                      “போனை உன் புருஷங்கிட்டே கொடுத்துட்டேன்மா. நானும் கிளம்பிட்டேன் இதோ. நீ உன் புருஷன்கிட்ட பேசிக்கோ..” என்று ஓடியே விட்டான் அவன்.

                        திருமகள் சிறு சிரிப்புடன் “எங்கே இருக்கீங்க மாமா..” என்றாள் அதிகாரக்குரலில்.

                      வாசுதேவகிருஷ்ணனுக்கு இன்னும் காலை நிகழ்வுகளினால் ஏற்பட்ட கோபம் மீதமிருக்க, சட்டமாக மௌனம் சாதித்தான் அவன். இப்போது சாரதி வேறு அடித்துப் பிடித்து ஓடியிருக்க, அவனிடம் என்ன சொல்லி வைத்தாளோ என்று கோபமான கோபம்.

                     இருநிமிடங்களுக்கும் மேலாக அவன் மௌனம் தொடர, “ஓ.. நீங்க பேச மாட்டிங்க இல்ல. அதை மறந்துட்டேன் பாருங்க. சரி சொல்லுங்க. எப்போ சாப்பிட வர்றிங்க. ஸ்ஸ்ஸ்ஸ்.. அதுக்கும் பதில் வராது இல்ல. ஓகே. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு வந்திடுங்க மாமா..”

                      “சாப்பாடு ரெடியா இருக்கு. அதுக்குள்ள நீங்க வரலைன்னா, நான் சாப்பாடு எடுத்துட்டு மில்லுக்கு வாறேன்.. அதோட சாரதி அண்ணன்கிட்ட என்ன பேசினேன்னு சொல்லவே இல்லையே உங்ககிட்ட…”

                       “நான் என் புருஷனுக்கு அவசரமா ஒரு முத்தம் கொடுக்கணும்ன்னு சொன்னேன். இப்போ நீங்க வீட்டுக்கு வராம போனால், நீங்க இருக்க இடத்துக்கு வந்து கொடுப்பேன்…அதையும் யோசிச்சுக்கோங்க..” என்றவள் அழைப்பைத் துண்டிக்கும் முன்

                       “கடைசியா ஒரு விஷயம். இனி நான் என் புருஷனுக்கு போன் போட்டா, அவர்தான் எடுக்கணும். அடுத்தவங்க எடுத்தால் என்  பேச்சும் இப்படித்தான் இருக்கும்.” என்றாள் தீர்மானமாக.

                       வாசுதேவகிருஷ்ணனுக்கு கோபமான கோபம். அதுவும் சாரதியிடம் அவள் பேசி வைத்ததில் இன்னும் ஆத்திரம் மிகுந்து போக, அடுத்த நிமிடம் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

              வீட்டிற்கு வந்தவனின் முகத்தை வைத்தே அவன் சரியில்லை என்பது விசாலத்திற்கு புரிந்துவிட்டது. மருமகள் பேசும்போது அருகில்தானே அமர்ந்திருந்தார் அவர். அவன் கோபத்தை தணிக்க நினைத்தவர் அவன்முன் தண்ணீரை எடுத்துவந்து நீட்ட, அவன் கோபத்துடன் தட்டிவிட்டதில் வீட்டின் முற்றத்தில் சென்று விழுந்திருந்தது அந்த குவளை.

              “கண்ணா..” என்று அன்னை அழைக்க, கண்டிப்புடன் வாயின் மீது ஒற்றைவிரலை வைத்து அவர் பேச்சை தடைசெய்து தன்னறைக்குள் நுழைந்தான் வாசுதேவகிருஷ்ணன். திருமகளின் கெட்ட நேரமோ என்னவோ, வீட்டின் பின்புறம் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அப்போதுதான் மடித்து வைக்கிறேன் என்று அறைக்குள் எடுத்துச் சென்றிருந்தாள்.

                 கட்டிலில் அமர்ந்து உடைகளை மடித்துக் கொண்டிருந்தவள் வாசுதேவனைப் பார்க்கவும், “பரவாயில்லையே மாமா வந்துட்டிங்க. நான்கூட வரமாட்டிங்கன்னு நினைச்சேன். வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என்று எதுவுமே நடக்காததைப் போல் பேசிவைக்க, அந்த நிமிடம் ஆத்திரத்தில் அறிவிழந்தவன் பளாரென்று அறைந்திருந்தான் அவளை.

                 அவன் அடியில் கட்டிலின் அருகே நின்றிருந்தவள் கட்டிலில் பொத்தென விழுந்திருக்க, அடுத்தவனுக்கு கைகள் எரிந்தது. அந்த எரிச்சலில் தான் செய்த காரியம் அறிவுக்கு உரைக்க, அப்போதுதான் வருந்த தொடங்கினான்.

                   ஆனால், அவன் வருத்தம் கொண்டது தவறு என்று அடுத்த நிமிடமே அவனுக்கு உணர்த்தினாள் அவன் மனைவி.

                    “ரெண்டு நாள் முன்னாடி அம்மா, இப்போ பிள்ளையா.. ஆனா, எங்கத்தை அடிச்சதை விட அதிகமா வலிக்குது மாமா..” என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்க்க பாவமாக இருந்தாலும், அவள் பேச்சில் அசையாதவனாக நின்றான் வாசுதேவன்.

                  திருவின் வாய் அடங்குமா..”இதெல்லாம் வேண்டாம் மாமா. இனிமே அடிக்காதிங்க. ஏன்னா நீங்க பத்துமுறை அடிச்சாலும், பதினோராவது முறையும் நான் செய்யுறதை செஞ்சிட்டே தான் இருப்பேன். என்னை அடிக்கிறதால உங்க கை தான் புண்ணாகிப் போகும்.” என்று நிதானமாக அவள்கூற, அவள் பேச்சுக்கே இன்னும் ஒருமுறை கையை ஓங்கியிருந்தான் அவன்.

                கால்களை மடித்து அமர்ந்திருந்தவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள, அந்தநிமிடம் அவளை அடிக்க மனம் வரவில்லை வாசுதேவனுக்கு. பார்க்கவே பாவமாக இருந்தாள். ஏற்கனவே அவன் அன்னை அடித்திருந்ததில் வீக்கம் கண்டிருந்த கன்னம் இப்போதுதான் வற்ற தொடங்கியிருக்க, அதே கன்னத்தில் வாசுதேவனும் அடித்து வைத்ததில் அவனது ஐந்து விரல்களும் அச்சாகப் பதிந்து போயிருந்தது.

                கன்னம் சிவந்து மொத்த ரத்தமும் முகத்தில் பாய்ந்தது போல் சிவந்து போயிருக்க, சட்டென கைகளை கீழே இறக்கி கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

                மெல்ல ஒற்றைக்கண்ணை திறந்து பார்த்தவள் “ஹப்பா.. மனசு மாறிடுச்சா. என்னைப் பார்த்து பரிதாபப்படறீங்களோ.” என்றாள் யோசனையாக

                 வாசுதேவன் மௌனம் காக்க “உங்க பரிதாபத்துக்கெல்லாம் அவசியமே இல்ல. நான் இப்போ சொல்றதுதான் எப்பவும். நீங்க என்கிட்டே பேசியே ஆகணும். திருன்னு என்னை பேர் சொல்லி கூப்பிடனும். கூப்பிட்டே ஆகணும். அதுவரைக்கும் தினம் ஏதோ ஒன்னு இப்படி பண்ணிட்டே தான் இருப்பேன்.” என்று சூளுரைத்தாள் மனைவி.

                 வாசுதேவன் மீண்டும் அவளை முறைக்க “அதென்ன நான் போன் பண்றது தெரிஞ்சும் அவரை எடுக்க சொல்றிங்க. உங்களுக்கு என் நம்பர் தெரியாது… தெரிஞ்சும் கொடுத்தா, என்ன அர்த்தம் அதுக்கு. என் புருஷன்கிட்ட நான் பேச அவர்கிட்டே நான் அனுமதி வாங்கணுமா… இல்ல என் புருஷன்கிட்ட சொல்ல வேண்டியதை அவர்கிட்ட சொல்லி பதில் வாங்கிக்கணுமா…” என்று பொட்டில் அடிப்பவள் போல் அவள் கேள்வி கேட்க, பதிலில்லாமல் நின்றான் வாசுதேவகிருஷ்ணன்.

                “உங்க பொண்டாட்டி நான். உங்களுக்கும் எனக்கும் இடையில யாருக்கும் இடம் கிடையாது. இனி என் போனை அவர் எடுக்ககூடாது. நீங்க பதில் சொல்லுங்க, சொல்லாம போங்க அது நம்ம விஷயம். நான் பேசுவேன். நான் பேசறதை கேட்கணும் நீங்க. என் போனை எடுக்கணும்..” என்று விரல் நீட்டி அவள் பேச, அதில் கடுப்பானவன் பட்டென தட்டிவிட்டான் அவள் விரல்களை.

                  அவன் முரட்டு கரங்களின் தீண்டலில் அவள் மென்மையான விரல்கள் வலிக்க, அவள் கையை உதறும்போதே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் வாசுதேவகிருஷ்ணன்.

“ராசாவே… உன்னை விட மாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
கூடாமலே மனம் வாடலாம்…
நீங்காதய்யா உன் யோசனை….”

என்று திருவின் குரல் அங்கேயும் துரத்தியது அவனை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement