Advertisement

நெஞ்சம் பேசுதே 06

 

                   வீட்டின் முற்றத்தில் காலை நீட்டி திருமகள் அமர்ந்திருக்க, அவள் கால்களில் தலைசாய்த்து படுத்திருந்தான் ரகுவரன். திருமகள் காலையில் முரளி தன் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், விசாலத்தின் எதிர்வினை, தனது திடீர் திருமணம் வரை ஒன்றுவிடாமல் நிதானமாக கூறி முடித்தாள்.

                   முழுதாக கேட்டு முடித்தவன் “இப்பவும் இது அத்தையோட முடிவுதான். அவர் முழுமனசா உனக்கு தாலி கட்டல.. அவரை நம்பி நீ எப்படி அந்தவீட்ல இருக்க முடியும்..?” என்றான் திருவிடம்.

                   “எனக்கு எப்படி இந்த கல்யாணம் அதிர்ச்சியா இருக்கோ, அப்படித்தான் அவருக்கும் இருக்கும். ஏன், என்னைவிட பலமடங்கு அதிகமா அதிர்ச்சி இருந்திருக்கும் அவருக்கு. முரளி சொன்னதை ஊரே நம்புச்சே.. விசாலம் அத்தை ஏன் நம்பல.. அவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு எனக்கு தெரியல.. ஆனா, அவங்க என்மேல வச்ச அந்த நம்பிக்கை அது ரொம்ப பெரிய விஷயம் ரகு..”

                   “அவங்க மட்டுமா… மாமாவை நினைச்சு பாரு.. முரளி வார்த்தையை நம்பி அவர் என்னை அப்படியே விட்டிருந்தா, என்ன செஞ்சிருக்க முடியும் என்னால. நான் சென்னைக்கு வர்றது, உன்னோட இருக்கறதெல்லாம் அடுத்த விஷயம். நம்ம ஊர்பஞ்சாயத்தை மீறி இந்த வீட்டுக்கு கூட திரும்பி வந்திருக்க முடியாது. அத்தனையும் எனக்கெதிரா இருக்கு. கலியமூர்த்தி அவனை பெரிய மனுஷனா காண்பிக்க, என்னை மருமகளா ஏத்துக்கறேன்னு சொல்றான். முரளி நம்ம முனியனையே எனக்கெதிரா சாட்சியா நிறுத்திட்டான்..”

                  “இன்னும் கொஞ்ச நேரம் அவங்களுக்கு அவகாசம் கிடைச்சிருந்தா, என் கழுத்துல கட்டாயத்தாலி கட்டக்கூட தயங்கியிருக்கமாட்டாங்க முரளியும், அவன் குடும்பமும்.”

                   “அப்படி ஒரு நேரத்துல, என் வார்த்தையை மட்டுமே நம்பி என் கழுத்துல தாலி கட்டினவரை நான் எப்படி மறுக்க முடியும்..?”

                     “எனக்கும் மாமா மேல தீராத கோபம், ஆதங்கம், வருத்தம் எல்லாமே இருக்கு. ஆனா, அதையெல்லாம் பேசி தீர்க்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் என்மேல வச்ச நம்பிக்கையில ஒரு துளியாவது நான் அவர் மேல வைக்கணும் இல்லையா..?” என்று கேள்வி கேட்டு நிறுத்தினாள் திருமகள்.

                   “நீ பேசித் தீர்க்கணும்னு நினைச்சாகூட, அவர் உன்கிட்ட பேசணும். அதை யோசி முதல்ல.” என்று தம்பி எடுத்துரைக்க,

                   “அது என்னோட விஷயம் ரகு. எனக்கும் அவருக்குமானது. நீ அதைப்பத்தி கவலைப்படாத.” என்று நாச்சியார் முடிக்க,

                   “அவர் உனக்கு சப்போர்ட் பண்ணதால மொத்தமா அவருக்கு பேசிட்டு இருக்க நீ.. இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது.. அவரோட வாழறதும் அத்தனை சுலபமான விஷயமில்லை.” என்று மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றான் ரகுவரன்.

                   “போதும் ரகு. நாம இதைப்பத்தி நிறைய பேசிட்டோம்.. எனக்கு தலைவலியா இருக்கு. சாப்பிட என்ன வேணும் சொல்லு. சமைச்சுத் தரேன். சாப்பிட்டு தூங்குவோம்.” என்றாள் திரு.

                   “நீ என்கிட்ட பேசாம இருந்தாலும் பரவாயில்ல. அவரோட பேச முடியுமா யோசிச்சுக்க.” என்று அப்போதும் சற்று நக்கலாக தம்பி உரைத்துவிட,

                   “அவர் பேசாமலே போனாலும், எனக்கு கவலையில்ல.. என்னோட கூடப் பிறந்த அக்கா எனக்காக ஒரு வார்த்தைகூட பேசல. நீயும் என்னோட பிறந்தவன் தான். ஆனா, எல்லாம் முடிஞ்சு தான் வந்து நிற்க முடிஞ்சிருக்கு உன்னால.”

                   “நீங்க ரெண்டு பேரும் நல்லாவே வாய் பேசுறவங்க தானே.. உங்க பேச்சால என்ன செய்ய முடிஞ்சுது உங்களால.. இனி உன் வாயிலிருந்து அவரைப்பத்தி குறையா ஒரு வார்த்தைகூட வரக்கூடாது.. மீறினா, நீ என்னை மறந்திட வேண்டி இருக்கும்.” என்று அழுத்தமாக கூறியவள் சமைக்கும் எண்ணம் கூட இல்லாமல் சென்று அறையில் முடங்கிவிட்டாள்.

                   அவள் அறைக்கு சென்ற பதினைந்து நிமிடங்களில் வாசற்கதவை தட்டும் ஒலி கேட்க, பயத்தில் உடல் தூக்கிவாரிப் போட்டது திருவுக்கு.

                   ரகு வெளியே இருப்பதால், பதட்டத்துடன் அவள் எழுந்து வெளியே வர, ரகு இதற்குள் வாசல் கதவை திறந்திருந்தான். திருமகள் “ரகு” என்ற அழைப்புடன் வேகமாக அவனை நெருங்க, வாசலில் நின்றது வாசுதேவ கிருஷ்ணன்.

                  ரகு சட்டென வார்த்தை வராமல் நின்றுவிட, “உள்ளே வாங்க..” என்று அழைத்து அவனை ஆசுவாசப்படுத்தினாள் திருமகள்.

                  வாசுதேவன் ஆமோதிப்பக தலையசைத்து உள்ளே வந்தவன் கையிலிருந்த உணவுக்கூடையை அவளிடம் நீட்ட, யோசனையுடன் வாங்கி கொண்டாள் அவள்.

                   வாசுதேவன் அவள் ஏதாவது கேட்பாள் என்று ஒருநிமிடம் நிதானிக்க, ம்ஹூம்.. வாயைத் திறக்கவில்லை மனையாள்.

                   “உடன் வருகிறாயா..” என்று கேட்க நினைத்தாலும், வாசுதேவனுக்கும் சட்டென வாய் வரவில்லை. அவள் தன்னுடன் புறப்படுவாள் என்று நினைத்தானோ என்னவோ, முழுதாக ஒருநிமிடம் அவளைப் பார்த்தே நின்றான் வாசுதேவன்.

                   திருவிற்கு இன்னும் அவன் விழியின் மொழிகள் புரியும் அளவிற்கு புரிதல் இல்லையே.

                   திரு திணறி நின்ற அந்த சில நொடிகளிலேயே மெல்ல தலையசைத்து கிளம்பிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன். ஏன் நின்றான்.. எதற்கு கிளம்பினான்.. என்று எதுவும் புரியாமல் திரு நிற்க, “சாப்பிடக்கூட சொல்லமாட்டாளா..” என்று மனத் தாங்கலுடன் கிளம்பியிருந்தான் வாசுதேவன். கூடவே “இனி இங்கேதான் இருப்பாளோ..” என்ற கேள்வியும் எழ, அதற்கு விடைதேட பிடிக்காமல் அப்படியே விட்டுவிட்டான் அவன்.

                   அன்றைய தினம் கழிந்து அடுத்தநாளும் கூட, திரு வாசுதேவனின் வீட்டிற்கு வரவில்லை எனவும், இனி அவள் வரமாட்டாள் என்று முடிவே செய்துவிட்டான் வாசுதேவன். ஆனால், அவன் நினைப்பை பொய்யாக்குபவளாக மூன்றாம் நாள் காலையில் அவன் வீடு வந்து நின்றாள் திருமகள் நாச்சியார்.

                   ரகு அன்று காலை ரயிலில் சென்னைக்கு கிளம்பியிருக்க, தனது இருசக்கர வாகனத்தில் வாசுதேவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் திரு. கையில் ஒரு ட்ராவல் பேக்குடன் அவள் வாசுதேவனின் அறைக்கு வர, அப்போதுதான் குளியலறையில் இருந்து வெளியே வந்தான் அவன்.

                  இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு மேலாடை இன்றி அவன் வந்து நிற்க, தடுமாற்றம் இருந்தாலும் பழகிக் கொள்ள வேண்டியவன் தானே என்று தன்னை சமன்படுத்திக் கொண்டு தன் கையிலிருந்த பையை நிதானமாக அந்த அறையில் வைத்து வெளியேறினாள் அவள்.

                    விசாலம் பின்வாசலில் இருக்க, இன்னும் மருமகள் வந்தது தெரியவில்லை அவருக்கு. இப்போது நாச்சியார் எங்கே செல்வது என்று தெரியாமல் அவர் அருகிலேயே சென்று நிற்க, “வாடியம்மா.. மாமியார் வீட்டுக்கு வர இப்போதான் வழி தெரிஞ்சுதா..” என்று நொடித்துக்கொண்டார் அவர்.

                    கூடவே அங்கிருந்த பால் பாத்திரத்தையும் எடுத்து அவள் கையில் கொடுத்தவர் “போய் காஃபி போட்டுக் கொடு உன் வீட்டுக்காரனுக்கு.” என்று அதட்டலாக கூறியவர் சட்டமாக பின்கட்டிலேயே அமர்ந்து கொண்டார்.

                     திரு பால்காய்ச்சி காஃபி கலந்து எடுத்துக்கொண்டு அறைக்கு செல்ல, அலைபேசியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் வாசுதேவகிருஷ்ணன். திரு காஃபியை நீட்டவும், சிறு தடுமாற்றத்துடன் எடுத்துக் கொண்டவனுக்கு அவளை எதிர்கொள்ள முடியவில்லை.

                    காலையில் அதிரடியாக அறைக்குள் வந்து நின்றதே அதிர்ச்சி என்றால், அவள்முன் அரைகுறையாக நின்றது வேறு சற்று கலவரப்படுத்தியது அவனை. திரு அமைதியாகவே இருக்க, கேட்க வேண்டுமே என்பதற்காக “உன் தம்பி கிளம்பிட்டானா..” என்று சைகையில் அவளிடம் கேட்டு வைத்தான் அவன்.

                    அவன் கேள்விக்கு பதில் கூறாமல் “நீங்க ஊமையா மாமா..” என்று கேள்வி எழுப்பினாள் மனைவி.

                  வாசுதேவனுக்கு பட்டென கோபம் எட்டிப்பார்க்க, கையில் இருந்த காஃபியை சுவற்றில் அடித்திருந்தான் அவன். அவன் செயலில் ஒரு நொடி திகைத்தாலும், நிமிர்ந்து நின்றாள் திருமகள்.

                  வாசுதேவன் கோபம் குறையாமல் வெளியே செல்ல பார்க்க, துணிந்து அவன் இடக்கையின் மணிக்கட்டைப் பிடித்திருந்தாள் திருமகள்.

                    வாசுதேவன் முறைப்புடன் திரும்ப, “இன்னும் உங்களோட பார்வையை புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு பக்குவம் வரல.. அதனால எதுவா இருந்தாலும் வாயைத் திறந்தே என்கிட்டே சொல்லிடுங்க..” என்றாள் மீண்டும்.

                    வாசுதேவன் கோபத்துடன் அவள் கையை உதறி, கட்டிலுக்கு அருகில் இருந்த டைரியை எடுத்தான். அதில் “ஊமைன்னு தெரிஞ்சுதானே தாலி கட்டிக்கிட்ட..” என்று கிறுக்கலாக அவன் கிறுக்கிக்காட்ட,

                    அந்த குறிப்பேட்டை கையில் வாங்கியவள் பட்டென சத்தத்துடன் மூடினாள் அதை. “நமக்கு இடையில இது எதுக்குமே வேலையில்ல மாமா. எப்பவும் உங்க சைகைகளுக்கோ, உங்களோட இந்த குறிப்புகளுக்கோ பதில் கொடுக்க மாட்டேன்.” என்றாள் அழுத்தமாக.

                    “அப்போ நீ என்னோட பேசவே வேண்டாம்..” என்று அவனும் கோபத்துடன் சைகை செய்ய,

                   “அதை நீங்க முடிவு பண்ண முடியாது. பேசவே மாட்டேன்னு சொல்றது உங்க விருப்பம். ஆனா, நான் பேசுவேன்.. நீங்க பேசுற வரைக்கும் உங்ககிட்ட பேசிக்கிட்டே இருப்பேன்..” என்று திரு உறுதி கூற, ஏளனமாக சிரித்தான் வாசுதேவன்.

                 “ஏன் சிரிக்கிறீங்க.. என்னால முடியாதுன்னு நினைக்கறீங்களா.” என்றதற்கு மௌனம் மட்டுமே பதிலானது.

                   திரு அவன் மௌனத்தையும், சிரிப்பையும் பொறுக்க முடியாமல் “என்ன.. ஓடிப்போனவளோட என்னை ஒப்பிட்டு பார்க்கறீங்களா.. இல்ல, அவளோட தங்கைதானேன்னு அலட்சியமா..” என்றாள் சிறு கோபத்துடன்.

                   வாசுதேவனின் முகம் கடுமையைப் பூசிக்கொள்ள, திருமகளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்வதாக இல்லை அவன்.

                    ஆனால், பதில் கூறாமல் உன்னை விடுவதில்லை என்று முடிவுடன் நின்றிருந்தாள் திரு. அவன் கோபத்தை பொருட்படுத்தாமல் “எத்தனை கோபமிருந்தாலும் வாயைத் திறந்து பேச மாட்டிங்க இல்ல. அப்படி என்ன அலட்சியம் உங்களுக்கு.. எப்பவும் நான் இளப்பம் தான் இல்ல உங்களுக்கு.. இப்போ வேற வாழவே கதியில்லாம இன்னொருத்தனோட சேர்ந்து கெட்டு போனவளுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கீங்க..” என்று அவள் கூறிய நிமிடம் அவள் கழுத்தை இரண்டு கைகளாலும் பிடித்து இறுக்கியிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                    திருமகள் அவன் கோபத்தில் உவகை கொண்டு நிற்க, ஒற்றை விரலை நீட்டி அவளை எச்சரித்தவன் அவளுக்கு அருகில் இருந்த சுவற்றில் கைமுஷ்டியை இறுக்கி குத்தினான் கோபம் குறையாமல்.

                    திரு பயந்தவளாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்ள, அவள் முகத்தை கையால் தொட்டு தன்புறம் திருப்பியவன் ‘உன் வேலை என்னவோ, அதை மட்டும் பாரு..” என்று சைகை செய்து அவசரமாக வெளியேறி இருந்தான்.

                 திரு செல்லும் அவனை சிறு புன்னகையுடன் பார்த்தவள் “இதுக்கெல்லாம் பயந்தா உன்னோட நான் எப்படி மாமா குடும்பம் நடத்த முடியும்..?” என்று தன்னையே கேட்டுக்கொண்டாள்.

                   மகன் கோபத்துடன் செல்வதைக் கண்ட விசாலம் பதறியவராக, வீட்டிற்குள் வர சாவகாசமாக அறையில் இருந்து வெளியே வந்தாள் மருமகள்.

                    “என்னடி. ஏன் கோபமா போறான். எதுவும் திட்டிட்டானா..” என்று பதட்டத்துடன் அவர் கேட்க,

                    “உங்க மகனா. திட்டுறதுக்கு முதல்ல என்கிட்டே பேசணும் இல்ல.” என்றாள் திருமகள்.

                    “அவனைப்பத்தி தெரிஞ்சுது தானே. நீ ஏன் அவனை கோபப்படுத்துற.”

                    “கோபப்பட்டு என்ன செய்வார் உங்க மகன்..” என்று கேள்வி கேட்டவளிடம் என்ன பதில் கூறுவது என்று புரியாமல் நின்றார் விசாலம்.

                     திரு மேலும் “சொல்லுங்க என்ன செய்வார் என்னை.” என்று கேட்டு நிற்க,

                     “உன்னை எதுவும் சொல்லமாட்டான். ஆனா, அவன் கஷ்டப்படுவான். என் மகனை வருத்தப்படவிடாத.” என்று அவர் உத்தரவிட,

                        “ஆமா பச்சப்புள்ள உங்க மகன். உடனே வருத்தப்பட்டுடுவார்.”

                        “கண்டிப்பா அவன் வருத்தப்படுவான் நாச்சியா.. சின்னப்பிள்ளை மாதிரிதான் அவனும்.” என்று விசாலம் வாயைவிட

                         “சின்னப்பிள்ளையை எதுக்கு எனக்கு கட்டி வைச்சீங்க.. இடுப்புல உட்காரவைச்சி சாப்பாடு ஊட்ட வேண்டியதுதானே.” என்று இடைக்காக கேட்டு நகர்ந்துவிட்டாள் மருமகள்.

                        செல்லும் அவளை வாயில் கைவைத்து ஆவென்று பார்த்திருந்தார் விசாலம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement