Advertisement

                       வந்தவுடன் “என் கொழுந்தனை ஏன் அடிக்கிறீங்க..” என்று அவள் கேட்டதை மறக்க முடியவில்லை திருமகளால். அந்த ஒரு வார்த்தையிலேயே மொத்தமாக கோதையை ஒதுக்கியிருந்தது அவள் மனம்.

                       அவள் அமைதியாக விசாலத்தின் அருகில் வந்து நிற்க, விசயத்திற்கு ஏகத் திருப்தி அவளது செயல். கோதையை பார்த்து நொடித்துக் கொண்டவர் “வா..” என்று மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

                    ஊர்மக்களும், ஊர் முக்கியஸ்தர்களும் மாகாளியம்மன் கோவில் மண்டபத்தில் கூடியிருக்க, பஞ்சாயத்து ஆரம்பித்திருந்தது. இதுவரை தன் வாழ்வில் ஒருமுறைக்கூட பஞ்சாயத்து பக்கம் எட்டிப் பார்த்திராத வாசுதேவகிருஷ்ணன் விஷயம் கேள்விப்பட்டு அரக்கப்பரக்க வந்து நின்றிருந்தான் அங்கே.

                    வந்தவன் விழிகள் கூட்டத்தை விலக்கி சுழன்று திருவிடம் வந்து நிலைத்தது. அவளின் முகம் ஒருபக்கமாக வீக்கம் கண்டு இருக்க, காய்ந்து போன கண்ணீர்த்தடங்கள் வேறு முகத்தில்.

                    அவன் குலதெய்வமான அய்யனாரின் மொத்த அங்காரமும், ஆத்திரமும் அவன் முகத்தில் இறங்கிவிட்டதோ என்று எண்ணும்படி சிவந்து நின்றான் வாசுதேவகிருஷ்ணன். சாரதி அவன் கையை விடாமல் இறுக்கமாக பற்றியிருக்க, அத்தனை இறுக்கமாக இறுகி இருந்தது அவன் முஷ்டி.

                    பார்வை முரளியை மட்டுமே சுட்டெரிக்க, முரளிக்கும் புரிந்தது வாசுதேவனின் உக்கிரம். ஆனால், எந்த காரணத்தை முன்னிட்டும் திருவை விட்டு விலகுவதாக இல்லை அவன்.

                     பஞ்சாயத்தார் அவனை விசாரிக்க, “நானும் திருவும் காதலிக்கிறோம்… திரு தான் என்னை வர சொன்னா..” என்று கிளிப்பிள்ளையாக காலையில் சொன்னதையே அவன் திருப்பிச் சொல்ல, விசாலத்தின் பொறுமை பறிபோனது.

                     “அடேய்..” என்று கத்தியவர் “பாவிபயலே… எங்க சாமி முன்னாடி நின்னுட்டா பொய் சொல்ற.. புழுத்து போய் சாவடா… உன் வாயில புழு தள்ளிடும்.. நல்ல கதிக்கே போகமாட்டாடா நீ..” என்று குனிந்து கீழே இருந்த மண்ணை அள்ளி அவன் முகத்தில் கொட்டினார் அவர்.

                       ராகவன் பஞ்சாயத்தில் அமர்ந்திருக்க, மனைவியை ஏதும் சொல்ல முடியாத நிலை. “இங்கே பாரு சாலா.. பஞ்சாயத்தை மதிச்சு ஒழுங்கா இருக்கறதுன்னா இங்கே இரு.. இல்ல, கிளம்பிடு..” என்று கடுமையாக எச்சரித்தார் அவர்.

                  அவரே திருவிடம் “நீ சொல்லும்மா… இவன் புகாருக்கு நீ என்ன சொல்ற..” என்று கேட்க,

                  “நான் கும்பிடற அந்த ஆண்டாள் நாச்சியார் மேல சத்தியம்.. நான் எந்த  தப்பும் செய்யல.. இவன்கிட்ட நான் அதிகமா பேசினதுக்கூட கிடையாது. இவன் எப்படி என் வீட்டுக்குள்ளே வந்தான்னும் எனக்கு தெரியாது. காலையில தான் இவனை நான் பார்க்கவே செஞ்சேன்..” என்று அவள் தன் பக்கத்தை கூறி முடிக்க,

                   “அதெப்படிம்மா… உன் வீட்டுக்குள்ள தான் இருந்திருக்கான்.. உனக்கு தெரியாம எப்படி வந்திருப்பான்..” என்று இடக்காக ஒருவர் கேட்க,

                   “எல்லாம் தெரிஞ்சுதான் விட்டிருப்பா… அக்கா வளமா வாழறாளே.. தானும் அவளோடவே போய் இருந்துக்குவோம்னு நினைச்சிருப்பா..” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

                    விசாலம் “அடச்சீ.. வாயை மூடுங்கய்யா… நேரா நின்னு பேச துப்பில்லை.. கூட்டத்திலிருந்து கல் எறிய வந்துட்டானுங்க.. நீங்கல்லாம் பெரிய மனுஷன்ன்னு நம்பி வந்து நின்னோம் இல்ல. எங்களை சொல்லணும்.. நீ வாடி, நாம போலீசுக்கு போவோம்.. அடேய்… உன்னை உள்ள தள்ளி உன் தோலை உரிச்சு தொங்க விடல.. நான் விசாலம் இல்லடா..” என்று சூளுரைத்து அவர் கிளம்ப, “நீ என்னம்மா இத்தனை ஆம்பளைங்க இருக்க சபையில இப்படி பேச்சுக்கு பேச்சு பேசிட்டு இருக்க.. பஞ்சாயம் பண்றதை நாங்க ஆம்பளைங்க பார்த்துக்கறோம்.. நீ கொஞ்சம் அமைதியா நில்லும்மா..” என்று அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த முரளியின் தந்தை பேச, வாசுதேவன் இப்போது தன் அன்னையின் அருகில் வந்து நின்றான்.

                  அவன் பார்வையே முரளியின் தந்தை கலியமூர்த்தியை அமைதியாக்க, “வாசு..” என்று அமர்ந்தபடியே குரல் கொடுத்த தந்தையின் பார்வையில் அடங்கி நின்றான் அவன்.

                   “இந்த ஊர்ல ஆம்பளை பொம்பளை எல்லாருக்கும் ஒரே நியாயம் தான் கலியமூர்த்தி.. என் வீட்டம்மாவை நீ வா போ ன்னு சபையில பேசுறதே தப்பு. அவங்கவங்க கௌரவத்தை அவங்கவங்க காப்பாத்திக்கறது நல்லது..” என்று ராகவன் முரளியின் தந்தையை எச்சரிக்க,

                   “உங்க வீட்டம்மா என் மகனை இப்படி அடிச்சு வைச்சிருக்காங்களே… அதுக்கு என்ன சொல்ல போகுது இந்த பஞ்சாயத்து..ஏன் எங்களுக்கெல்லாம் கௌரவம் இல்லையா..” என்று அப்போதும் சற்று ஏற்றத்துடன் தான் பேசினார் கலியமூர்த்தி.

                   “உன் மகன் செஞ்ச வேலைக்கு என் பொண்டாட்டி அவனை உசுரோட விட்டதே பெருசுன்னு நினைச்சுக்கோ.. அப்பனா மகன் செஞ்ச தப்பை தட்டிக் கேட்காம அவனுக்கு வக்காலத்து வாங்கிட்டு இருக்க..”

                   ‘என்னய்யா பண்ணிட்டான் என் மகன்.. பொட்டச்சி அவ வரச்சொல்லி கேட்டா, அவன் வராம என்ன செய்வான்.. நீ விசாரிக்கறதுன்னா முதல்ல உன் ஊர்ப்பொண்ணை விசாரி.. எதுக்கு என் மகனை வர சொன்னான்னு கேளு..”

                    “அவ வர சொன்னதுக்கு என்ன ஆதாரம்..”

                    “அவ இடம் கொடுக்காம என் மகன் எப்படி அவ வீட்டுக்குள்ள நுழைய முடியும்.. அந்த ஒன்னு போதாதா..” என்று கலியமூர்த்தி மடக்க, “பார்த்துக்கொள் உன் குடும்ப லட்சணத்தை..” என்று கோதையைத் தான் வெறித்தாள் திரு.

                       ராகவன் “போதாது.. பஞ்சாயத்துக்கு சாட்சியம் தான் வேணும்.. எங்க பொண்ணு வர சொல்லியிருந்தா, அதை நிரூபிக்க சொல்லு உன் மகனை..” என்று கண்டிப்புடன் கூற,

                      “நிரூபிச்சுட்டா..” என்று இடக்காக கேட்டான் முரளி..

                      “அதுக்கான தண்டனையை யோசிக்கலாம்..” என்றார் ராகவன்.

                     “பாண்டியம்மா அவங்க மக வீட்டுக்கு கிளம்பவும், இவ தான் முனியன் தாத்தாவுக்கு லீவு கொடுத்தது… அவர் போன்ல இருந்து தான் எனக்கு சேதி அனுப்பினா..” என்று அடித்துக் கூறினான் முரளி.

                      “முனியன் அழைத்துவரப்பட அவரும் முரளிக்கேற்பவே பேசி வைத்தார். திரு குழப்பத்துடன் அவரை ஏறிட “நான்கூட சொன்னேன் ஐயா.. பாண்டியும் இல்ல, நான் உனக்கு கவலை இருக்கேன்னு சொன்னேன்.. நாச்சியா தான் என்னை வலுக்கட்டாயமா அனுப்பி வச்சது.. என் போனை வாங்கி ஏதோ பண்ணுச்சு…” என்று அவர் கூறிவிட,

                       “இல்ல… “என்று கண்களை மூடிக்கொண்டு கத்தினாள் திரு.

                       “பொய்.. பொய் சொல்றாங்க..” என்று கதற, அவள் பேச்சை அதற்குமேல் அங்கே யாரும் நம்புவதாக இல்லை.

                        கலியமூர்த்தி பெரிய மனிதராக “இந்தாம்மா.. இங்கே யாருக்கும் பயப்பட வேணா… நீ வரசொன்னதை ஒத்துக்கோ.. இங்கேயே என் மகனை உன் கழுத்துல தாலி கட்ட சொல்றேன்..” என்று அறிவுரை வழங்கினார் திருமகளுக்கு.

                         திரு யாரிடமும் எதுவும் பேசாமல் தரையில் அமர்ந்துவிட்டவள் முகத்தை மூடிக்கொண்டு கதறியழ, விசாலம் செய்வதறியாமல் தானும் கலங்கி நின்றார்.

                      திருமகள் தவறு செய்திருக்கமாட்டாள் என்பதில் இன்னும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், அத்தனையும் அவளுக்கு எதிராக இருக்க, என்ன செய்வது என்று புரியவில்லை.

                     கண்ணனுக்கு முன்னே இருந்த மாகாளியம்மன் கோவில் கோபுரத்தைப் பார்த்து “ஏன் தாயி எங்களை இப்படி கலங்க வைக்கிற..” என்று அவர் கண்ணீருடன் வேண்டிக் கொண்ட சமயம் தான் கலியமூர்த்தி “தாலி கட்ட சொல்றேன்..” என்று வாயை விட்டது.

                      அவர் கண்ணீருக்கு அந்த காளியே வாக்கு சொன்னதாகத் தான் தோன்றியது அவருக்கு. யோசிக்காமல் கூட்டத்தை விலக்கி கொண்டு நடந்தவர் கோவிலுக்கு அருகில் இருந்த மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் பஞ்சாயத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

                    அங்கிருந்த யாரையும் ஏறெடுத்தும் பாராமல் மகனின் முன்னே வந்து நின்றவர் தன் கையில் இருந்த தாலியை அவனுக்கு முன்னே கையை விரித்து காண்பித்தார். வாசுதேவன் ஆதரிசியாக தன் அன்னையைப் பார்க்க “உன் அம்மா உயிரோட இருக்கணும்ன்னா, என் தம்பி மக மேல விழுந்த பழி ஒன்னுமில்லாம போகணும்.. அதுக்கு ஒரே வழி இதுதான்..” என்று கூறி நின்றார் அவர்.

                    வாசுதேவகிருஷ்ணன் மறுப்பாக தலையசைக்கப் போக, அவன் முகத்திலிருந்தே அவன் செயலை ஊகித்து விட்டவர் “இது நடக்காம போனா, இங்கே ரெண்டு உசுரு போய்டும் கண்ணா… இந்த பிணந்திண்ணி நாய்கள்கிட்ட அவளை ஒப்படைக்கிறதுக்கு அவளை கொன்னுடலாம்.. அவளையும் கொன்னுட்டு நானும் போய் சேர்ந்திடறேன்… அது உனக்கு சம்மதமா..” என்று அவனை இக்கட்டில் நிறுத்தினார் விசாலம்.

                   அன்னையின் பேச்சில் கோபம் வந்தாலும், கீழே நடப்பதை உணரக்கூட முடியாமல் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள் கண்ணில்பட, “நடப்பது நடக்கட்டும்..” என்று தாலியைக் கையில் வாங்கிக் கொண்டான் வாசுதேவ கிருஷ்ணன்.

                    விசாலம் துளி கர்வத்துடன் அங்கிருந்தவர்களை நிமிர்ந்து பார்க்க, திருமகளை நிமிரக்கூட சொல்லாமல் முகத்தை மூடியிருந்த அவள் கைகளை விலக்கி, அவள் என்னவென உணரும் முன்பே அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான்.

                    திருமகள் மலங்க விழித்தபடி அழுகையை மறந்து அவனை வெறிக்க, விசாலம் அவள் அருகில் அமர்ந்து அவள் கண்களைத் துடைத்து உச்சியில் முத்தமிட்டு தன்னுடன் அணைத்துக் கொண்டார்.

                    அவரே சபையைப் பார்த்து “கேனைப்பய ஊருல கிறுக்குப்பைய ராஜாங்கம்ன்னு ஆகிப்போச்சு இந்த ஊரோட நிலைமை.. ஊரு எப்படியோ நாசமா போகட்டும்.. என் பிள்ளை பொழைச்சது… அதுவே போதும் எனக்கு.. இங்கே பாருங்கய்யா பெரிய மனுஷங்களா என் தம்பி மக.. என் வீட்டு மருமக இந்த திருமகள் நாச்சியார்… எந்த நாயாவது இனி என் மருமகளை பத்தி ஒரு வார்த்தை குறைவா பேசினாலும், அவன் குடலை உருவி இந்த காளிக்கு மாலையா போட்டுட்டுப் போய்டுவேன்.. இது நான் பிறந்த இந்த மண்ணு மேல சத்தியம்… எந்த கொம்பனும் என்னை எதுவும் செய்ய முடியாது..” என்று பெண்சிங்கமாக கர்ஜித்து, தன் மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்துவிட்டார் விசாலாட்சி.

                 ராகவன் தன் மனைவியை பெருமையுடன் பார்த்தவர் கலியமூர்த்தியை ஏளனமாக ஒரு பார்வை பார்த்து மனைவியின் பின்னே நடக்க, வாசுதேவகிருஷ்ணன் தந்தையுடன் வீட்டை நோக்கி நடந்தான்.

                அன்று திரௌபதிக்கு சீலை கொடுத்தவன் இன்று திருமகளுக்கு தாலி தந்திருந்தான்.

Advertisement