Advertisement

நெஞ்சம் பேசுதே 04-1

                   விசாலம் அறைந்ததில் கீழே விழுந்த நாச்சியாளுக்கு “இனி இவர் வார்த்தைகளை வேறு கேட்க வேண்டுமா..” என்ற எண்ணமே துயரத்தைக் கொடுத்தது. எப்போதும் அவளை வலிக்க வைக்கவே பேசுபவர் தானே. இன்று இத்தனை இலகுவாக சந்தர்ப்பம் கிடைத்திருக்க விட்டு விடவா போகிறார் என்று நினைக்கையிலேயே தனது நிலையை மிகவும் கீழாக உணரத் தொடங்கினாள் அவள்.

                 முதல் முறையாக தனது பெற்றோரும் இல்லாமல், உடன் பிறந்தவர்களும் இல்லாமல் தனித்து நிற்கும் தனது நிலையை வெறுக்கத் தொடங்கினாள் திரு. ரகு உடன் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விட்டிருக்கமாட்டானோ, தன் தந்தை இருந்திருந்தால் இவர் தன் மீது கைவைக்க விட்டிருப்பாரோ என்று ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்கள்.

                  வயலில் வேலை செய்து கடினப்பட்டிருந்த விசாலத்தின் கைகள் கன்னத்தில் பதிந்து போயிருக்க, அதுவேறு எரிச்சலைக் கொடுத்தது. தாங்க முடியாத வேதனையில் கன்னத்தை தனது கையால் தாங்கி கொண்டவள் வழியறியாத பிள்ளையைப் போல் தேம்பியழ, இன்னும் உக்கிரமானார் விசாலம்.

                  அவர் மீண்டும் அவளை நெருங்க, இதற்குள் முரளி அவரை சமீபித்து இருந்தான். “இங்கே பாருங்க பெரியம்மா.. ஏதோ நடந்தது நடந்து போச்சு.. அதுக்காக அவளை கை நீட்டுவீங்களா நீங்க… இதெல்லாம் சரியில்ல..” என்று அவன் திருவுக்கு முன்பாக வந்து நிற்க,

               “எடு செருப்ப… எடுபட்ட நாயே.. ஈனப்பயலே.. யாருக்கு யாருடா பெரியம்மா… “என்று தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவர் அவன் சுதாரிக்கும் முன்பே அவனை திண்ணையிலிருந்து கீழே தள்ளியிருந்தார்.

                திரு அதிர்ச்சி நீங்காமல் அவரைப் பார்த்திருக்க, விசாலம் சுற்றும் முற்றும் பார்த்தவர் கண்களில் அங்கிருந்த தென்னந்துடைப்பம் விழுந்து விட, ஒரு முடிவுடன் அதை கையில் எடுத்து கொண்டார் அவர். வலது கையில் துடைப்பத்தை பிடித்துக்கொண்டு, இடதுகையால் அதன் பின்புறம் தட்டியவர் திண்ணையில் இருந்து இறங்கி முரளியை நெருங்க, அவன் இதற்குள் எழுந்து நின்றிருந்தான்.

                “வேண்டாம் பெரியம்மா.. ரொம்ப வருத்தப்படுவீங்க.. இது எங்களுக்குள்ள நடக்கிற விஷயம்.. தேவையில்லாம நீங்க இதுல தலையிடாதிங்க..”என்று ஒற்றைவிரல் நீட்டி அவன் விசயத்தை மிரட்ட, அதில் இன்னும் கடுப்பானார் அவர்.

                 “எங்கே வந்து என்ன காரியம் பண்ணிட்டு, யார்கிட்ட கையை நீட்டி பேசிட்டு இருக்க நாயே… என் வீட்டு பிள்ளை மேல சேத்தை வாரி இறைச்சுட்டு இந்த வீட்டு வாசலைத் தாண்டிடுவியா நீ.. அறுத்து அய்யனாருக்கு படையல் போட்டுடுவேன்..” என்றவர் கையிலிருந்த துடைப்பத்தால் விளாசி எடுத்தார் அவனை.

               முரளி அவரது கையைப் பிடித்து தடுக்க நினைக்க, அதற்கு நேரம் கொடுக்காமல் அவனை மொத்தமாக புரட்டிக் கொண்டிருந்தார் விசாலம். அங்கிருந்த அத்தனைப் பேரும் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க, விசாலத்தை நெருங்கும் தைரியம் யாருக்கும் வரவில்லை.

                 அவரின் வாய் ஒருபுறம் என்றால், கையிலிருக்கும் துடைப்பம் எந்த நேரம் வேண்டுமானாலும் தங்களின் புறம் திரும்பக்கூடும் என்ற அச்சம் மறுபுறம். இதுவரை பேசிய வாய்கள் அத்தனையும் இப்போது ஆவென்று பிளந்து நின்றிருக்க, இங்கே முரளி ஆங்காங்கே உடலில் கீறல்களும், ரத்தமுமாக நிற்க இன்னும் வெறியடங்காமல் அவனை அடித்துக் கொண்டே தான் இருந்தார் விசாலம்.

                அவரை சமாளிக்க முடியாமல் அவன் தொழுவத்தின் பக்கம் நகர, ஈரமாக இருந்த தரையில் வழுக்கி அவன் கீழே விழுவதற்கும் அவனது தாயும், மனோகரும், கோதை நாச்சியாரும் அந்த இடத்திற்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

                கோதை முரளியை அந்த நிலையில் காணவும், “அத்தை..” என்று விசாலத்தை தடுக்க நினைத்து வேகமாக முன்னேறி அவர் கையைப் பிடிக்க, ஒரே உதறலில் அவளை உதறித் தள்ளியவர் “த்தூ.. வாயை மூடு… ஓடுகாலி நாயே.. யாருக்கு யாரடி அத்தை.. விளக்குமாறு பிஞ்சிடும்..” என்று கையிலிருந்த துடைப்பத்தை தூக்கி காட்டினார் அவர்.

                 அவர் பேச்சில் கோபம் கொண்டவள் “அத்தைனு கூப்பிடக்கூடாது சொல்றவங்க எதுக்கு எங்க வீட்ல வந்து நிற்கிறீங்க.. எதுக்காக என் கொழுந்தனை அடிக்கணும்..?” என்று வழக்கம் போல் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசிவைக்க, “ச்ச்சீய்.. தூரப்போடி..” என்று அவளின் நிலையையும் பாராமல் துடைப்பத்தால் அடித்துவிட்டார் விசாலம்.

                 “போதும் நிறுத்துங்கம்மா..” என்று மனோகர் முன்னே வர, “இவளை இழுத்துட்டு ஓடினவன் தானே நீ… நீ யாருடா என்னை நிறுத்த சொல்ல.. இது என் தம்பி வீடு.. அவன் இல்லாம போய்ட்டா, எதுவும் இல்லன்னு ஆகிடுமா.. அதோ நிற்கிறா பாரு.. அவ என் மருமவ.. அவளை இந்த நாய் வீடேறி அசிங்கப்படுத்தும்.. நான் கையை கட்டிட்டு நிற்கணுமா..” என்றவர்

                 “இந்த விசாலத்தோட தம்பி பொண்ணுகிட்டேயே உன் வேலையை காட்டி இருக்கியே.. என்ன திண்ணக்கம் இருக்கணும் உனக்கு..” என்று மீண்டும் இரண்டு போட்டார் முரளிக்கு.

                  “என்ன நடந்தது கொஞ்சம் பொறுமையா சொல்லுங்களேன்மா..” என்று மனோகரின் தாயார் இறைஞ்சுதலாக கேட்க,

                   “பொறுமையா சொல்லனுமா…. இந்த ஈனப்பயலை பெத்தெடுத்த மவராசி, புண்ணியவதி நீதானே.. கேளு.. கேட்டுட்டு மணத்து உன் மகனை..” என்று வெடுக்கென கூறியவர்

                  “இந்த நாய் யாருமில்லாத நேரம் என் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டு, என் தம்பி மகள் கெட்டுபோனவன்னு இந்த ஊரை நம்ப வைக்க திட்டம் போட்டு இருக்கான்… இந்த வேசிமவன் சொன்னதை நம்பி இங்கே இருக்க பத்தினி ரத்தினங்க என் வீட்டு பொண்ணை நாக்கு மேல பல்லு போட்டு பேசி இருக்காளுக…”

                    “எந்த சிறுக்கி மவடி என் மருமகளை பேசினது.. ஒருத்தனுக்கு முந்தி விரிச்சது உண்மையா இருந்தா இந்த நிமிஷம் என் முன்னாடி வந்து நிற்கணும்..” என்று கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தும் கத்தினார் அவர்.

                    “இந்தா பாருங்க சாலாம்மா.. ஏன் எல்லாரையும் சேர்த்து பேசறீங்க.. இந்த மாதிரி வயசுப்பொண்ணு வீட்ல இருந்து திடிர்னு ஒருத்தன் வெளியே வந்தா, என்ன சங்கதி கேட்க மாட்டோமா.. அதுக்கு இந்த பேச்சு பேசுவிகளா…” என்று ஒரு பெண்மணி கேட்க,

                   “வாடி…. வா.. என் வல்லாளப்பட்டணத்துப் பத்தினியே.. வா… என்னன்னு விசாரிச்சீங்க நீங்க.. இவன் மூஞ்சியும் ஆளும்.. இவன்லாம் இரு ஆளுன்னு இந்த நாய் சொன்னதை நம்பி என் வீட்டு பிள்ளையை கலங்கி நிற்க வச்சிருக்கீங்க….. நீங்கல்லாம் மனுஷ ஜென்மமாடி… ஈரமிருக்கா உங்களுக்கெல்லாம்..”

                    “தனியா பொம்பளை பிள்ளை வீட்டுக்குள்ள எப்படி வந்த ன்னு இந்த நாயை நாலு சாத்து சாத்த துப்பில்லை.. பொம்பளையை குறை சொல்ல வந்துட்டாளுங்க…”

                    “ஏண்டி என்னங்கடி உங்க நியாயம்.. பொம்பளைக்கு பொம்பளைங்களே குழி வெட்டுவீங்களா…. என் தம்பி செத்து மூணு வருஷமாச்சு.. இந்த ஊர்ல ஆம்பளைங்களே இல்ல, இதுவரைக்கும் ஒருத்தனை ஏறெடுத்து பார்த்திருப்பாளா அவ.. அவளைப் போய் என்னலாம் பேசுறீங்கடி…”

                     “வாயிருக்குன்னு வார்த்தை வருமா உங்களுக்கெல்லாம்..” என்று ஊரையே தன் சத்தத்தால் அடக்கியவர் “எல்லாம் இந்த முட்டாபைய மகளை சொல்லணும்.. ஏண்டி என்கிட்டே மட்டும் வாய் ஏழுருக்கு கிழியுது இல்ல.. இவனை உன் கால்ல இருக்க செருப்பை கழட்டி ரெண்டு வச்சிருக்க வேணாம்.. அழுதுட்டு மூலையில உட்காரவா என் தம்பி உன்னை ஆம்பளை பிள்ளை போல வளர்த்து ஆளாக்கினான்… “

                    “என் தம்பி மவ எத்தனை துணிச்சலா நிமிர்ந்து நிற்கிறான்னு பூரிச்சுப் போயிருந்தேன்.. அத்தனையும் ஒரே நொடியிலே ஒண்ணுமில்லாம பண்ணிட்டு அழுதுட்டு இருக்கியேடி.. உன்னை வெட்டிப் போட்டாலும் தப்பே இல்ல.. கூறுகெட்ட சிறுக்கி..” என்று திருவுக்கும் வஞ்சனை இல்லாமல் வசவு விழுந்தது..

                     “உன்னை பொறவு கவனிக்கிறேன்..” என்று மீண்டும் முரளியிடம் திரும்பியவர் “சொல்லுடா.. ஏன் இந்த ஈனத்தை செஞ்ச.. என்ன திட்டம் போட்டு என் வீட்டுக்குள்ள குதிச்ச… என் தம்பி வச்சிருந்த அம்பது பவுன் நகையை காணும்ன்னு சொல்றா என் மருமக.. திருட்டுப் பயலா நீ.. ஒழுங்கா உண்மையை சொல்லிடு.. இல்ல.. என் வீட்ல இருந்த நகை, பணத்தை காணும்னு போலீசுக்கு போவேன் நான்..” என்று மிரட்டினார்.

                  அந்த நேரம் ஊரில் சில பெரியவர்களுடன் விசாலத்தின் கணவர் ராகவன் அங்கே வர, முரளியைப் பார்த்து அதிர்ந்து போனார் அவர்.

                  மனைவியின் கையில் இருந்த துடைப்பத்தை பார்க்கவுமே சங்கதி புரிந்துப்போக, “என்ன பண்ணி வச்சிருக்க விசாலம்..” என்று மனைவியை நெருங்கி அதட்டினார் அவர்.

                   “பண்ணியிருக்காங்க பானையும் சட்டியும்.. இந்த தெருப்பொறுக்கி நாயை விசாரிங்க முதல்ல.. என் மருமக மேல சொன்ன பழிக்கு இவன் பதில் சொல்லியாகணும்..” என்று கணவரையும் அதட்டினார் விசாலம்.

                    “அதெல்லாம் ஊர்பெரியவங்க பார்த்துக்குவாங்க.. நீ முதல்ல துடைப்பத்தை கீழே போடு..” என்று மனைவியின் கையில் இருந்த துடைப்பத்தை வாங்கி தூர வீசினார்.

                      “எல்லாரும் காளியம்மா கோயிலுக்கு வாங்க… அங்கே வச்சு பேசிப்போம்..” என்றவர் “நீயும் வாம்மா..” என்று திருமகள் நாச்சியாரையும் அழைக்க,

                     “எதுக்கு.. அவ ஏன் பஞ்சாயத்துக்கு வரணும்.. அவளுக்கு என்ன தலையெழுத்துங்கேன்.. உள்ளே போடி நீ..” என்று திருவை விசாலம் அதட்ட,

                     “வாயை மூடிட்டு பிள்ளையை கூட்டிட்டு வா சாலா..” என்று கோபத்துடன் மனைவியை முறைத்து முன்னே நடந்தார் ராகவன்.

                       அவரின் கோபத்திற்கு சற்று அடங்கியவர் “வா..” என்று மருமகளின் அருகே சென்று நிற்க, “நாச்சியா..” என்று கோதையும் திருமகளை நெருங்கினாள்.

                       திரு தனது ஒரே பார்வையில் தனது மொத்த உணர்வுகளையும் முகத்தில் காண்பித்துவிட, அதற்குமேல் அவளை நெருங்கும் துணிவு வரவில்லை கோதைக்கு.

Advertisement