Advertisement

நெஞ்சம் பேசுதே 03

               முரளியின் வார்த்தைகளில் நாச்சியார் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான். வாசுதேவனின் பார்வை முரளியிடம் இருந்து தன்னிடம் வரவும் சுயம் தெளிந்தாள் அவள். என்னவோ வாசுதேவன் பார்வையில் கடுமையைக் கண்ட நொடி வேகமாக தலையை மறுப்பாக அசைத்துவிட்டாள்.

               அவளது பதட்டம் அத்தை மகனுக்கு அத்தனை உவப்பாக இருக்க, நிதானமாக மீண்டும் தன் பார்வையை முரளியிடம் செலுத்தியவன் அருகில் நின்ற தன் நண்பனிடம் தலையசைத்தான்.

               சாரதி “என்ன சொல்லிட்டு இருக்க புரியுதா முரளி. எங்க வீட்டு பொண்ணு அது.. எங்ககிட்டேயே அவளைப்பத்தி சொல்லிட்டு இருக்க நீ..” என்று முறைப்புடன் கூற,

                “ஏன் உங்க வீட்டு பொண்ணா இருந்தா என்ன.. அவ அக்கா எங்க வீட்ல தானே வாழ்ந்துட்டு இருக்காங்க.. அப்போ அவளும் அங்கேயே வர ஆசைப்படலாம் இல்லையா.. நான் லவ் பண்றதுல என்ன தப்பு..” என்று அவன் அழுத்தமாக கேட்க, அடுத்த நிமிடம் அவன் வாயிலிருந்து பொல பொல வென்று ரத்தம் கொட்டியது.

                  சாரதி “டேய் என்னடா பண்ற.. பஞ்சாயத்தாகி போகும்டா..” என்று நண்பனை அடக்கப்பார்க்க, அசராமல் ஒரே கையால் சாரதியை தட்டி விட்டவன் மீண்டும் அவன் மூக்கில் குத்தியிருந்தான். அதுவும் போதாமல் காதோடு சேர்த்து ஒரு அரை கொடுத்தவன் இப்போது மீண்டும் நண்பனிடம் திரும்ப “அடி வாங்கி சாகாதடா.. ஒழுங்கா உண்மையை சொல்லு.. எதுக்கு நாச்சியார் பின்னாடி சுத்திட்டு இருக்க..” என்றான் சாரதி.

                  “நீங்க என்ன மிரட்டினாலும், நான் நாச்சியை லவ் பண்ணுவேன். அவளும் என்னைத்தான் விரும்புறா..” என்று முரளி உளறி வைக்க, மீண்டும் அவனது கன்னம் எரிந்தது.

                    வாசுதேவகிருஷ்ணன் அவனை கீழே தள்ளி காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்க, “விட்டுடுங்க மாமா.. விடுங்க அவனை..” என்று அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள் திரு.

                     வாசுதேவ கிருஷ்ணன் சினம் குறையாமல் திருவை உறுத்து விழிக்க, இதற்குள் முரளி எழுந்து நின்றிருந்தான். அப்போதும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் “பார்த்தீங்களா… என்னை அடிச்சா நாச்சிக்கு கோபம் வருது.. இப்போ கூட உங்களுக்கு புரியலையா..” என்றவன் பேச்சில் வாசுதேவன் மீண்டும் முன்னேற, அவனுக்கு வேலை வைக்காமல்  திருமகள் நாச்சியார் ஓங்கி அறைந்திருந்தாள் முரளியை.

                     “மரியாதை கெட்டுப் போகும்.. யாரு யாரை விரும்புறது.. ஒருமுறை சொன்னா புரிஞ்சிக்கற அளவுக்கு அறிவில்ல… ஏன்டா என் உயிரை வாங்கிட்டு இருக்க…” என்று ஏகத்திற்கும் அவள் சத்தமிட, முரளி உள்ளுக்குள் கனன்ற கோபத்துடன் பார்த்திருந்தான் அவளை.

                     வாசுதேவ கிருஷ்ணனின் கண்ணசைவில் “அதுதான் சொல்லியாச்சு இல்ல.. கிளம்பு.. இனி எங்க கண்லேயே படக்கூடாது நீ.. ஓடறா..” என்று முரளியை விரட்டினான் சாரதி.

                  அந்த நிமிடம் முரளிக்கு திருமகள் நாச்சியார் சவாலாகிப் போனாள். காதல் பின்னால் சென்று அந்த இடத்தை காழ்ப்பு நிறைத்துக் கொள்ள, “எப்படியும் அவளை வீழ்த்தி, தனக்கு அடிமையாக நிறுத்தியே தீர வேண்டும்..” என்று வெறியே எழுந்தது அவனுக்குள்.

                   அதே வெறியுடன் அவன் அங்கிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட, ஓய்ந்து போயிருந்தாள் திருமகள் நாச்சியார். சோர்வுடன் அவள் தன் வண்டியை நோக்கி நடக்க, சாரதியின் கையில் வலிக்கும்படி தட்டினான் வாசுதேவ கிருஷ்ணன்.

                    “ஏன்டா..” என்று அவனை திட்டிக்கொண்டே, “நாச்சி நில்லும்மா.. “என்று சாரதி கூற, அப்படியே திரும்பாமல் நின்றாள் அவள்.

                    வாசுதேவ கிருஷ்ணன் மீண்டும் சாரதியிடம் ஏதோ சைகை செய்ய “என்னம்மா… ஏன் இப்படி தனியா வரணும்.. வெளி வேலைக்கு யாரையாச்சும் ஏற்பாடு பண்ணவா.. இந்தமாதிரி சங்கடமெல்லாம் வராம இருக்குமே..” என்று அக்கறையுடன் கேட்டான் சாரதி.

                    திரு “வேலைக்கு ஆளா.. வேற என்னவெல்லாம் செய்து கொடுப்பிங்க..” என்று வாசுதேவகிருஷ்ணனை நேரடியாகப் பார்த்து கேட்க, அவன் சாரதியை முறைத்தான்.

                   “ஏன்மா வாசு உன் நல்லதுக்கு தானே கேட்கிறான்..?” என,

                   “அவர் வாயை உங்ககிட்ட கடன் கொடுத்திட்டாரா..” என்று சாரதியிடம் திரு கேட்க, இப்போது வாசுவின் பார்வையில் ரசனை கூடியது.

                    சாரதி பாவமாக வாசுதேவனைப் பார்க்க “எனக்கும் இவருக்கும் இடையில எப்பவும் நீங்க வராதீங்க அண்ணா.. உங்க ப்ரெண்டுக்கு என்மேல எந்த அளவு அக்கறைன்னு எனக்கு தெரியும்… வீட்டை குப்பையா விட்டுட்டு வாசலுக்கு மட்டும் சாணம் தெளிச்சு மெழுகி என்ன பிரயோஜனம்…”

                     “என்னை என்னால பார்த்துக்க முடியும்… இப்பவும் நீங்க வராம போயிருந்தாலும், நானே அவனை சமாளிச்சு துரத்தி விட்டிருப்பேன்.. ஊடால வந்து பிரச்சனையை பெருசாக்கி விட்டவரைக்கும் போதும்.. “

                   “இதை யாரவது பார்த்து, ஒண்ணுக்கு ரெண்டா பேசி வைச்சா அந்த தலைவலியையும் நாந்தான் கவனிக்கணும்.. அதுக்காகத் தான் சொல்றேன்.. என் வழியில வராதீங்க…” என்று அழுத்தம் திருத்தமாக அவள் தெரிவிக்க, வாசு இன்னும் கடினமாக மாறியிருந்தான்.

                  “ஏம்மா இப்படி பேசற.. உனக்கு நல்லதுதானே நினைச்சான் அவன்.. அவன் அத்தைப்பொண்ணு நீ.. உனக்காக இதைக்கூட செய்யக்கூடாதா..” என்று சாரதி ஆதங்கத்துடன் கேட்டுவிட,

                   “எதையும் செய்யக்கூடாதுண்ணா… பாதியில கரைஞ்சு ஓடிப்போற மண்குதிரையை நம்பி ஆத்துல இறங்கக்கூடாது..ரொம்ப பெரிய விலை கொடுத்து அந்த பாடத்தை படிச்சிருக்கேன் நான்.. அது படி நடக்கணும் இல்ல..” என்று எகத்தாளமாக கூறினாள் அவள்.

                 “உன் வலி புரியுதும்மா.. ஆனா..” என்று சாரதி மீண்டும் இழுக்க,

                 “என் வலி உங்களுக்கு புரியாதுண்ணா.. இதோ கல்லுப்பிள்ளையார் மாதிரி நிற்கிறாரே உங்க தோழர்.. அவருக்கே புரியல.. உங்களுக்கு புரிஞ்சிடுமா.. ” என்று ஏமாற்றத்துடன் கேள்வியெழுப்பியவள் வேகமாக தன் வண்டியை நோக்கி நடந்தாள்.

                  அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கன்னம்தொட, “இவனுக்காக நான் அழுவதா..” என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டு ஒரு உறுதியுடன் கண்களைத் துடைத்துக் கொண்டே வண்டியை கிளப்பிக் கொண்டு சென்று புள்ளியாய் மறைந்து போனாள் அவள்.

                    ஆனால், வாசுதேவ கிருஷ்ணன் இன்னமும் அசையாமல் அவளையே வெறித்துக் கொண்டிருந்தான். முதல்முறையாக ஏதோ ஆட்டம் கண்டது அவனுள். “என்ன நினைக்கிறாள் இவள்..” என்று அந்தநொடி முதல் அவளை நினைக்கத் தொடங்கிவிட்டான் வாசுதேவகிருஷ்ணன்.

                    சாரதி அவன் தோளில் தட்டி அவனை நிகழ்வுக்கு திருப்ப, எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தான் அவன்.

                    அடுத்த இரண்டு நாட்கள் எப்போதும்போல அமைதியுடன் கழிய, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஆண்டாளை தரிசிக்க ஆலயம் வந்திருந்தாள் திருமகள்.

                    அவளுக்கு முன்பே விசாலாட்சி மகனுடன் ஆண்டாளை காண வந்திருக்க, திருமகள் சென்ற நேரம் சன்னதியில் தான் நின்றிருந்தனர் இருவரும்.

                     திருமகள் எப்போதும் போல, அவர்களை கண்டுகொள்ளாமல் கண்மூடி வேண்டிக் கொண்டிருக்க, விசாலத்தின் பார்வை மொத்தமும் அவள்மீது தான்.

                   அன்று சிறுபெண்ணாக பார்த்தது…. இன்றும் அப்படி ஒன்றும் வயதாகிவிடவில்லை என்றாலும், முகம் தெளிவைக் காட்டியது. சிறுபிள்ளை முகமும், அவளின் துடுக்குத்தனமும் மறைந்து போயிருந்தது.

                  தன் தம்பி மகளுக்கு நியாயம் செய்யாமல் விட்டு விட்டோமோ..? என் உடன் பிறந்தவனது பிள்ளைகள் இப்படி யாருமில்லாமல் நிற்க நானும் காரணமாகி விட்டேனோ..” என்ற எண்ணம் வண்டாக குடைந்தது அவரை.

                   முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சோகாப்பதுமையாக நின்றிருந்த திருவின் முகம் வாட்டியது அவரை. இப்படி இறுக்கத்துடன் வலம் வருபவளா அவள் என்று அவர் எண்ணமிட்டுக் கொண்டிருக்க, அவரது  எண்ணத்தின் போக்கை அறியாதவள் ஐயரிடம் “அம்பாள் பெருக்கே பண்ணிடுங்க…” என்று அர்ச்சனைத் தட்டை நீட்டிக் கொண்டிருந்தாள்.

                   தீபாராதனை முடியவும் தாமதிக்காமல் அங்கிருந்து அவள் நகர்ந்து  சென்றுவிட, விசாலாட்சி செல்லும் அவளைத்தான் பார்த்திருந்தார். “எப்படி இப்படி இருக்க முடிகிறது இவளால்..” என்று அதுவேறு கோபம் ஒருபுறம்.

                முகத்தை திருப்பிக் கொண்டு ஒரு தூணின் அருகில் அவர் அமர்ந்துகொள்ள, மகன் கோவிலின் பிரசாத கடையில் இருந்து ஒரு திரட்டுப்பால் பொட்டலத்தை வாங்கி வந்து அவரிடம் நீட்டினான். வேண்டாத நினைவாக திருவுக்கு இது மிகவும் பிடிக்குமே என்று தான் தோன்றியது விசாலாட்சிக்கு.

                 கோவிலில் அமர்ந்திருக்கவே சங்கடமாக இருக்க, திருமகள் நாச்சியார் வருத்தினாள் அவரை. மகனை அழைத்துக் கொண்டு அவர் அவசரமாக வெளியே வர, அவருக்கு முன்பாக கோவில் வாசலில் இருந்த கடையில் இருந்து தனது காலனியை எடுத்துக் கொண்டு தன் வண்டியில் ஏறிக் கிளம்பிட்டாள் அவர் மருமகள்.

                 விசாலாட்சி திருவைப் பார்த்துக் கொண்டே நின்றுவிட, “என்னம்மா..” என்று வண்டியெடுக்கச் சென்ற வாசுதேவன் மீண்டும் அவரிடம் வந்து நிற்க, “ஒன்னுமில்ல கண்ணா.. கிளம்புவோம்..” என்று மகனுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் நாச்சியார்.

                 ஆனால், என்னவோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தது அவரை. ஏதோ நடக்கப்போகிறது என்று அவரது அடிமனம் அடித்துக் கொண்டே இருந்தது.

                     அவர் எண்ணத்தை மெய்ப்பிப்பது போல அடுத்தடுத்த காட்சிகளும் அரங்கேற, சென்றமுறை போலில்லாமல் துணிந்து இம்முறை பொறுப்பெடுத்துக் கொண்டார் விசாலாட்சி.

           அந்த விடிந்தும் விடியாத காலை வேளையில் திருமகளின் வீட்டிற்கு முன்னர் ஊரின் மொத்த ஜனமும் கூடியிருக்க, தன் வீட்டு வாசலில் நிலைகுலைந்து நின்றிருந்தாள் அவள்.

            அன்று காலை வழக்கமான நாளாகத்தான் விடிந்தது அவளுக்கு. எழுந்து வீட்டின் முற்றத்தில் அவள் முகம் கழுவி வெளியே பின்வாசலுக்கு வரும் வரை அனைத்தும் சரியாகத்தான் நடந்தது.

             பின்வாசலில் பால் கறக்கவும், பால் வாங்கவும் ஆட்கள் வந்து நின்றிருக்க, திண்ணையில் அமர்ந்தவள் தனது கணக்கு நோட்டை எடுக்கையில் வீட்டின் உள்ளிருந்து “நாச்சியா..” என்று உரிமையாக அழைத்தான் முரளி.

              அவன் குரல் வீட்டிற்குள் இருந்து வந்ததில் குழம்பிப் போனவள் அதிர்ச்சியுடன் நிமிர, அவளுக்கு முன்பே அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை வீட்டிற்குள் சல்லடையாக சலிக்கத் தொடங்கியிருந்தது. நாச்சியார் அதிர்ச்சியுடன் எழுந்து வீட்டிற்குள் எட்டிப்பார்க்க, அவள் அறையில் இருந்தே வெளியே வந்தான் முரளி.

              சட்டையில்லாமல்கையில்லாத ஒரு பனியனுடன் அவன் வந்து நிற்க, பின்வாசலில் இருந்த அத்தனைப் பேரின் கவனமும் அந்த நொடியில் அவன்மீது பதிந்தது. திரு சிலையாக சமைந்து நிற்க, “அச்சோ.. லேட் ஆகிடுச்சா.. சாரி நாச்சியா.. “என்று வாசலில் இருந்தவர்களை சங்கடமாக பார்த்துக்கொண்டே அவன் கூறி வைக்க, இப்போது அங்கிருந்தவர்கள் பார்வை நாச்சியாளை நோக்கியது.

              அங்கு நின்றிருந்தவர்களில் ஒரு மத்திய வயதுபெண் “என்னடிம்மா நடக்குது இங்கே.. தனியா இருக்கேன்.. தனியா இருக்கேன்னு சொல்லிட்டு இவன்கூட இப்படித்தான் தினமும் கூத்தடிச்சுட்டு இருக்கியா..” என்று எதையும் விசாரிக்காமல் அவளைக் குற்றவாளியாக்கிவிட, நெருப்பில் எரிபவள் போல் துடித்து நின்றாள் அவள்.

               பல் கறப்பதற்க்காக வந்திருந்த ஒரு பெரியவர் “என்ன கண்ணு… என்ன நடந்ததும்மா.. ஏன் இந்த தம்பி வீட்டுக்கு வந்திருக்கு..” என்று தன்மையாக அவளிடம் விசாரிக்க, அவரின் அந்த குரலில் சற்றே மீண்டவள் “எனக்கு தெரியாது தாத்தா..” என்று சட்டென அவருக்கு பதில் உரைத்தாள்.

               கூடவே, “எப்படிடா நீ என் வீட்டுக்குள்ள வந்த.. கேடுகெட்ட நாயே… ” என்று முரளியை அவள் நெருங்க,

              “ஏய்.. என்ன நாச்சி நீதானே நைட் கதவைத் திறந்து வச்ச… முனியன் இன்னைக்கு காவலுக்கு வரல.. பாண்டியம்மாளும் மகளைப் பார்க்க போயிருக்காங்க.. நீங்க வாங்க ன்னு நீதானே கூப்பிட்ட.. எதுக்கு இப்படி பயந்து நிற்கிற… இப்போ என்ன நடந்து போச்சு இங்கே.. கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே நாம…”

              “சந்திச்சு பேசிக்கிறது ஒரு குத்தமா..” என்று சட்டமாக பேசியவன் “என்னய்யா வேடிக்கை இங்கே.. பால் வாங்க வந்திங்களா.. அதை மட்டும் பாருங்க… வீட்டுக்குள்ள என்ன நடந்தா உங்களுக்கென்ன..” என்று அவர்களையும் மரியாதைக்குறைவாக பேசி வைக்க, அதில் கொதித்துப் போனது ஊர்ஜனம்.

                 பேச்சு சலசலவென்று வளர்ந்து கொண்டே செல்ல, இதற்குள் ஊரின் மொத்த கூட்டமும் நாச்சியின் வீட்டிற்குமுன் கூடியிருந்தது. முரளி விடாமல் தான் தவறு செய்யவில்லை என்று வாதிட்டுக் கொண்டிருக்க, ஆயிரம் வசவுகள் திருமகளுக்கு.

                  மேலும் அவள் ஊரிலேயே இருக்கக்கூடாது.. இப்போதே திருமணம் முடித்து துரத்திவிட்டு வேண்டும் என்று ஏகப்பட்ட ஆலோசனைகள் வேறு.. அத்தனைப் பேரும் வாய்க்கு வந்ததை எல்லாம் வார்த்தைகளாக்கிக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவள் “என்னவும் செய்து கொள்ளுங்கள்..” என்று நினைத்தாளோ, என்னவோ அசையாமல் அவள் வீட்டின் நிலைப்படியில் அமர்ந்துவிட்டிருந்தாள்.

                  முரளிக்கு அவளின் அந்த தோற்றம் ஏகத் திருப்தியைக் கொடுத்திருக்க, எப்படியும் திருமணத்தில் தானே முடியும் என்று இறுமாந்து நின்றிருந்தான் அவன்.

                  அவன் வீட்டிற்கும் தாக்கல் சொல்ல ஆட்கள் சென்றிருக்க, அவன் கனவில் மிதக்கத் தொடங்கிய நேரம் அத்தனையும் தவிடு பொடியாக்குபவராக வந்து நின்றார் விசாலாட்சி.

                   வந்தவர் அங்கிருந்த யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் தன் மருமகளைத் தான் நெருங்கியிருந்தார். அவளை நெருங்கிய வேகத்தில் அவளது முழங்கையைப் பற்றி எழுப்பியவர் அவள் காதோடு சேர்த்து ஒரு அறைவிட, வீட்டின் திண்ணையில் நிலைதடுமாறி விழுந்தாள் திருமகள் நாச்சியார்.

Advertisement