Advertisement

நெஞ்சம் பேசுதே 01

 
மாலை சாற்றினாள்

கோதை மாலை மாற்றினாள்

மாலை சாற்றினாள்

கோதை மாலை மாற்றினாள்

மாலடைந்து மதிலரங்கன்

மாலை அவர்தன் மார்பிலே

மாலை சாற்றினாள்

கோதை மாலை மாற்றினாள்

மாலடைந்து மதிலரங்கன்

மாலை அவர்தன் மார்பிலே

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்

மாலை சாற்றினாள்…..

 

                    என்று வாய் அதன்பாட்டிற்கு முணுமுணுத்துக் கொண்டே இருக்க, எதிரில் இருந்த மேடையில் தம்பதி சமேதராக காட்சி கொடுத்த ஆண்டாள்ரெங்கமன்னாரை முழுவதுமாக மனதில் நிறைத்து அமர்ந்திருந்தாள் திருமகள் நாச்சியார்.

                    என்னவோ அன்னையின் நிம்மதிக்காக என்று எண்ணிக்கொண்டே வாரத்தில் மூன்று நாட்கள் இந்த ஆண்டாளை தரிசிக்க வந்து நின்றுவிடுவாள் அவள். ஆண்டாளின் அழகை மனதில் நிறைத்துக் கொள்பவளுக்கு பெரிதாக எந்த வேண்டுதலும் இருக்காது. அவளுக்கென இருக்கும் ஒரே உறவான அவள் தம்பிக்காக மட்டுமே ஏதாவது வேண்டிக் கொள்வாள் எப்போதும்.

                    இன்றும் பங்குனி தேரோட்டம் என்று காலை முதலே ஸ்ரீவில்லிபுத்தூர் குலுங்கி மீண்டிருக்க, அலட்டிக்கொள்ளாமல் எப்போதும்போல் கோவிலுக்கு வந்திருந்தாள் திருமகள் நாச்சியார்.

                    இவள் தந்தை இருந்த காலத்தில் கோவிலின் உபயதாரர் என்பதால் அவளை ஓரளவு தெரியும் அங்கிருப்பவர்களுக்கு. ஆனால், அவர்களிடம் எப்போதும் போல அளவான புன்னகையோடு ஒதுங்கிக் கொண்டவள் மக்களோடு மக்களாக தானும் ஜனத்திரளில் கலந்திருந்தாள்.

                     தம்பி மூன்றாமாண்டு மருத்துவ படிப்பில் இருக்க, “அவனை மட்டுமாவது எனக்கென விட்டு வை..” என்று ஆண்டாளிடம் சண்டை கட்டிக் கொண்டிருந்தாள் அந்த சண்டைக்காரி.

                    ஆம்.. உண்மையில் வாயும், கையும் சற்று நீளம்தான் அவளுக்கு. அவள் அன்னை தெய்வானை இருந்தவரை எப்போதும் அதட்டிக்கொண்டே இருப்பார். அப்போதெல்லாம்பிள்ளையை எதுவும் சொல்லாத…” என்று அடக்குவது அவளின் தந்தை தான்.

                    வேலுச்சாமி அன்பே வடிவான தந்தை. பாசம் மிகுந்த தம்பிநல்ல கணவன்என்று எங்கும் குறை சொல்ல முடியாத அப்பழுக்கற்ற ஒரு ஆத்மா அவர். ஆனால், அப்படிப்பட்டவர்களைத்தானே விதியும் ஆட்டி வைக்கிறது.

                     இரண்டு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பிள்ளைகள் அவருக்கு. திருமகள் நாச்சியார் இளையமகள். மூத்தவள் கோதை நாச்சியார்கடைசியாக தெய்வானை வரம் வேண்டி பெற்ற மகன் ரகுவரன். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அருகிலேயே இருப்பதாலோ என்னவோ அந்த ஆண்டாளின் மீது அலாதி பிரியம் திருவின் தாயாருக்கு.

                   அதுவும் முதல் குழந்தை பெண்ணாக பிறக்கவும் ஆண்டாளே வந்து பிறந்ததாக எண்ணித்தான் கோதை நாச்சியார் என்று அவள் பெயரையே மகளுக்கு சூட்டினார் அவர். அடுத்தவளும் அவளின் அவதாரமாகவே வந்து அவதரிக்க தேடிப்பிடித்து திருமகள் நாச்சியார் என்று பெயர் வைத்தார் மகளுக்கு.

                   மகனுக்கும் பெருமாளிடம் கொண்ட பக்தியால் அவரின் திருநாமமாகரகுவரன்..” என்றே பெயரிட்டவர் வாழ்ந்த காலம் வரை தன் பிள்ளைகளிடம் எந்த வேற்றுமையும் காட்டியதில்லை. மூன்று பேரையும் சீரும் சிறப்புமாகவே வளர்த்தி இருந்தார்.

                    பிள்ளைகளும் ஒன்றுக்கொன்று பாசமாக ஒற்றுமையாகவே வளர்ந்து வர, ஆண்டாள் அருளால் நிம்மதியாக சென்று கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை.

                    அந்த நிலையில்தான் வேலுச்சாமியின் அக்கா விசாலாட்சி தன் தம்பி மகளை பெண் கேட்டு வந்தது. வேலுச்சாமி அக்காவை மறுக்க முடியாமல் அவர் விருப்பத்திற்கு தலையாட்டி வைக்க, அப்போதே சுருக்கென ஏதோ பட்டது தெய்வானைக்கு.

                     ஆனால், மூத்தவள் சாது என்பதால் விசாலாட்சியின் ஆளுமையான குரலுக்கும், அவரின் குணத்திற்கும் தன் மகள் அடங்கி நடந்து கொள்வாள் என்று கணித்தார் அவர். விசாலாட்சிக்கும் தன் மூத்த மருமகளை பிடிக்கும் என்பதால் பெரிதாக பிரச்சனைகள் இருக்காது என்று நம்பிக் கொண்டார் தெய்வானை.

                     அவரைப் பொறுத்தவரை திருமகள் அப்படியே தன் அத்தையின் நகல். பேச்சும் சரிகுணமும் சரிஅப்படியே விசாலம் தான் அவள். இருவருமே ஒரே குணம் கொண்டவர்கள் என்பதாலோ என்னவோ, எப்போதுமே ஒத்துப்போகாது அவர்களுக்குள்.

                       இவளை அவர் அடக்கி வைக்க நினைக்க, அவரைத் தாண்டிச் சென்று நிற்பாள் அவள்.

                  இவர்களின் இந்த ஓயாத வாய்ச்சண்டையை சிறுவயது முதலே பார்த்து பழக்கப்பட்டவர் என்பதால் தெய்வானை கோதை விஷயத்தில் பெரிதாக அச்சம் கொள்ளவில்லை. கோதை விசாலத்துடன் அனுசரித்துக் கொள்வாள் என்று அவர் முடிவு செய்ய, ஏறத்தாழ மொத்த குடும்பத்திற்குமே இதே நினைப்பு தான்.

                  இவர்கள் இவர்களாகவே முடிவு செய்து கொள்ள, கோதை என்பவளை அத்தனைப் பேரும் மறந்து போயிருந்தனர். அவளும் தாய் தந்தையை எதற்கும் எதிர்த்துப் பேசி பழக்கமில்லாதவள் என்பதால் மனதில் இருந்ததை வெளியே கூறாமல் மௌனம் காத்துக் கொண்டாள்.

                   ஆனால், திருமணம் நெருங்க நெருங்க, அத்தை மகனான வாசுதேவ கிருஷ்ணனை நினைத்து பயம் ஒருபுறம் என்றால், அவளுக்காக காத்திருந்த காதலன் மறுபுறம் நெருக்கிக் கொண்டிருந்தான் அவளை. அந்த பத்தொன்பது வயதில் ஒருவருட காதலே பெரிதாக தெரிய, திருமணம் என்று மண்டபம் செல்லும்வரை பயந்து இருந்தவள், வாசுதேவ கிருஷ்ணனை பார்த்த நிமிடம் அவனின் கலையாத மௌனத்தை வைத்தே அவனுடன் வாழவே முடியாது தன்னால் என்று துணிந்து முடிவெடுத்து தன் காதலனுடன் கம்பி நீட்டியிருந்தாள்.

                   இங்கே மண்டபத்தில் விசாலாட்சி தம்பி என்றும் பாராமல் சபையில் வைத்து வேலுச்சாமியை தன் வசவுகளால் நிறைக்க, கூனிக்குறுகி நின்றார் வேலுச்சாமி. தெய்வானை தன்னையும் மீறி விசாலாட்சியிடம்அவ போனா என்னண்ணி உங்க சின்ன மருமக இருக்காளே.. அவளை உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்.. அவரை பேசாதீங்க..” என்று கையெடுத்துக் கும்பிட்டார் அத்தனைப் பேரின் முன்னிலும்.

                  விசாலாட்சிக்கு திருவைப் பிடிக்காது என்றாலும், அப்போதைக்கு வேறு வழியில்லாமல்என்னமோ செய்ங்க.. என் குடும்பத்தையும் என் மகனையும் சந்தி சிரிக்க வச்சிட்டீங்க..” என்று கத்திக்கொண்டே ஒருபுறம் அமர்ந்துவிட, அதற்குள் அவசரமாக மணமகளாக அலங்கரிக்கப்பட்டாள் திருமகள் நாச்சியார்.

                   கழுத்தில் மாலையுடன் மணமகள் அறையிலிருந்து அவள் வெளிப்பட்ட பின்னரே விசாலாட்சி தன் மகனின் அறைக்குள் நுழைந்தார். ஆனால், அவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவர் பேச்சுக்கு செவி கொடுக்காமல்....ன்ன்னால க்க்..கல்யாணம் ப்ப்ப்..ண்ண முடியாதும்ம்ம்மா…” என்று தொண்டையின் தசைகளை நீவிக்கொண்டே அழுத்தமாக கூறி வெளியேறிவிட்டான் மகன்.

                   அங்கே கழுத்தில் மாலையுடன் நின்ற திருமகள் நாச்சியார் கண்ணில் பட்டாலும், அவளை தள்ளி வைத்து விலகிச் சென்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.

                    தெய்வானை யாரையும் மதிக்காமல் சென்றுவிட்ட மூத்தவளை நினைத்து அழுவதாஅல்லது அலங்கரித்து நிறுத்தியிருக்கும் இளையவளுக்காக அழுவதா என்று புரியாமல் தவிக்க, கண்ணீருடன் அடிவாங்கிய தோற்றத்தில் நின்றிருந்த திரு தான் பெரிதாக தெரிந்தாள்.

                   “அம்மு…” என்று அவளை அணைத்துக் கொண்டவர் கத்தி கதறியழ, தன் மணமகன் அறையிலிருந்து வந்த விசாலாட்சி இந்த காட்சியைப் பார்த்தாலும் பெரிதாக கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார்.

                   அவருக்கு திருமணமே வேண்டாம் என்று நடந்துவிட்ட மகனின் கவலையே பெரிதாக தெரிந்தது அப்போது. தனது பேச்சைக் காரணம் காட்டி திருமணத்தை தள்ளி வைத்தவனிடம் எப்படியோ போராடி, சம்மதம் வாங்கியிருந்தார் அவர்.

                 அதுவும் கோதை அமைதியான பெண்.. உனக்கேற்றவள் என்று கோதையைப் பற்றிய ஆசைவிதையை அவன் மனதில் விதைத்து, “உன் மாமன் மகள்..” என்று உரிமையாக அவனிடம் பேச்சுக் கொடுத்து, எப்படியோ ஒருவழியாக அவனை சம்மதிக்க வைத்திருந்தார் அவர்.

                 ஆனால், இன்று அத்தனையும் வீணாகியிருக்க, அந்த நிமிடம் மகன் மட்டுமே அவர் சிந்தையில் நிறைந்திருக்க, தன் தம்பியும், அவன் குடும்பமும் கண்ணில்பட்டாலும் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட்டார் அவர்.

             அதன்பின்னான நாட்களில் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்ற நிலை தானாகவே உருவாகிவிட, தாயக இருந்து வளர்த்த தமக்கையின் கோபத்திலும், சீராட்டி வளர்த்த மகள் தன்னை விட்டு சென்ற துக்கத்திலும் தனது உடலை மொத்தமாக கெடுத்துக் கொண்டார் வேலுச்சாமி.

               திருமணம் நின்றுபோன அடுத்த எட்டாவது மாதம் அவர் தன் உயிரைவிட, அவரைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களில் கணவரைத் தேடித் தானும் சென்றுவிட்டார் தெய்வானை.

               வேலுச்சாமியின் இறப்புக்கு கோதை வந்து நிற்க, கணவரின் முகத்தைக்கூட பார்க்கவிடாமல் அவரை விரட்டிவிட்டார் தெய்வானை. விசாலாட்சி தம்பியின் இறப்புக்கு வந்து நிற்க, அவரை வெறுமையாக நோக்கியதோடு சரி..

                 மகளையும், மகனையும் கையில் பிடித்துக்கொண்டு நிராதரவாக அமர்ந்துவிட்டவர் அப்போதிருந்தே தங்களை குறித்து கவலை கொள்ள தொடங்கிவிட்டார். அந்த கவலையே கொஞ்சம் கொஞ்சமாக அவர் உயிரைக் குடித்துவிடும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார் அவர்.

                 தந்தையின் இறப்பில் தளர்ந்து அமர்ந்துவிட்ட திரு தாயின் இறப்பில் சுதாரித்துக் கொள்ள, விசாலம், கோதை இருவரையுமே தூர நிறுத்திவிட்டாள் அவள். இருவரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் புறக்கணித்து விட்டவள் அவர்களிடம் இருந்து மொத்தமாக ஒதுங்கி வாழ பழகிக் கொண்டாள்.

                 அவளுக்கு துணையாக அவள் தம்பி உடன் நிற்க, அவனை கட்டாயப்படுத்தியே படிப்புக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தாள். பன்னிரண்டாம் வகுப்பில் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க, அவன் கனவும் தெரிந்தவள் என்பதால் தங்களுக்கென இருந்த நிலத்தை மொத்தமாக விற்று தம்பியை படிக்க அனுப்பிவிட்டு, தாயின் தொழிலான பால் வியாபாரத்தை தான் கையிலெடுத்துக் கொண்டாள்.

               அவர்களிடம் பதினைந்து மாடுகள் இருக்க, அவற்றின் மூலம் வரும் வருமானம் அவள் ஒருத்திக்கே அதிகப்படிதான். அதுவும் பெரிதாக எதுவும் செலவுகளை இழுத்துக் கொள்ளாமல், சத்தான ஆகாரத்துடன் தன் தேவையை அவள் சுருக்கிக்கொள்ள, இந்த மூன்று ஆண்டுகளில் ஓரளவுக்கு பணம் சேர்த்திருந்தாள்.

           ரகுவரனும் தமக்கையை உணர்ந்தவனாக முழுக்கவனத்துடன் படிக்க, அவன் கல்லூரியில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பான் எப்போதும்.

           அத்தனையும் இழந்து நின்றாலும், எப்படியோ தங்களை மீட்டுக்கொண்டு இருவரும் நிம்மதியான ஒரு வாழ்வை வாழ்ந்து வர, சமீபமாக அதற்கும் இடையூறு வரத் தொடங்கியிருந்தது.

           

ஆனால், திருமகள் நாச்சியார் எப்போதும் போலவே அதைப் பெரிதாக எடுக்காமல் தன் போக்கில் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.

                  இதோ இதற்குள் ஆண்டாள் சூடிய மாலை அரங்கனின் கழுத்தில் ஏறியிருக்க, கண்களை மூடி ஒரு முழுநிமிடம் வேண்டிக் கொண்டவள் அமைதியாக எழுந்து கொண்டாள். கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கவும், கவனமாகவே நடந்து வந்தாள் திரு.

                  ஆனால், அவளை இடித்தே ஆக வேண்டும் என்று ஒருவன் வேகமாக வருகையில் அவள் ஒதுங்கி நடந்து என்ன பலன்எதிரில் வந்தவன் அவன் வந்த வேகத்திற்கு அவள் மீது மோதியிருந்தால் நிச்சயம் கீழே விழுந்திருப்பாள் அவள்.

                  அவன் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. கீழே விழும் அவளை கைகளில் ஏந்தி கொள்ளும் எண்ணத்துடன் அவன் நெருங்கியிருக்க, கடைசி நொடியில் வேகமாக அவள் நகர்த்தப்பட்டிருக்க, அவளுக்கு பதிலாக மத்திய வயதில் இருந்த திருமணமான ஒரு பெண்ணின் மீது விழுந்திருந்தான் அவன்.

                 அந்த பெண்ணின் கணவர் கையில் சிக்கியவனை நையப்புடைக்க, சற்று தள்ளி நின்று அவனை முறைத்து கொண்டிருந்தான் வாசுதேவகிருஷ்ணன். திருமகள் நாச்சியாரின் வலது கை இப்போது அவன் கைகளில் சிக்கியிருந்தது.

                  திருவுக்கு அந்த முரளியின் செயல் அதிர்ச்சி என்றால், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிர்ச்சியாக இருந்தது அருகில் நின்றிருந்தவன் செயல். பற்களை கடித்துக்கொண்டு அவன் நின்றவிதம் அவர்களின் குலதெய்வத்தை நினைவுபடுத்தினாலும், அவன் அருகில் நிற்க மனமில்லை.

                  என்றோ மணமேடையில் மாலையும், கழுத்துமாக தனித்து நின்றது நினைவில் வர, பட்டென அவன் கையில் இருந்த தன் கையை விலக்கி கொண்டவள் ஒருநொடிக்கூட அங்கு நிற்காமல் விறுவிறுவென நடந்துவிட்டாள்.

                  இங்கு வாசுதேவகிருஷ்ணனோ பெயருக்கு தக்கபடி புன்னகைத்து நின்றான்.

வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா வருமா வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல…..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement