Advertisement

அத்தியாயம் 09
மாலை நேரம், அப்போது தான் வேலை முடிந்து வந்திருந்தவன் தன்னறையில் உடை மாற்றிக் கொண்டிருக்க, “ஜனனி..” என அழைத்தார் சிவநாதன். 
ஜனனி வெளியே வர, அவள் பின்னே கார்த்திக்கும் வந்தான். 
“என்ன விஷயம் மாமா..” என விசாரித்தவள் நிற்க, கார்த்திக் எதிரே அமர்ந்தான். 
கையில் பஞ்சாங்கத்துடன் அமர்ந்திருந்த திலகவதி, “அதுமா, திவ்யாவுக்குச் சீமந்தம் செய்து அழைத்து வரலாம் என நினைக்கிறேன்..” என்றார். 
அவர் சொல்லும் போதே முகம் மலர்ந்த ஜனனி, “நல்ல விஷயம் தானே அத்தை..” என்றாள் உற்சாகமாக. 
“அது என்னனா, பிள்ளைகள் எல்லாம் இங்க இருக்கவும் திவ்யாவுக்கும் இங்கே வந்து இருக்கணும்னு ஆசை போலே, எங்கிட்ட சொன்னாள். சரி, அது தான் ஏழாம் மாதம் பிறந்து விட்டதே எளிமையாகச் சீமந்தத்தை முடித்து அழைத்து வந்துவிடலாம்னு நினைத்து அவள் மாமியாரிடம் பேசினேன். அவர் என்னவென்றால் கல்யாணம் தான் எளிதாக முடிந்து விட்டது, சொந்த பந்தங்களைக் கூட்டிச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்கிறார்.. இப்போது என்ன செய்வது?” 
திலகவதி கேட்க, அவள் மாமாவைப் பார்த்தாள். சிவநாதனோ, “இப்போது தான் உங்கள் திருமணத்தை எடுத்துச் செய்திருக்கிறோம், இரண்டு நாள் முன்பு இடம் வேறு ஒன்று பதிவு செய்திருக்கோம்.. சிறப்பாகச் செய்யும் அளவிற்குக் கையில் இருப்பு இல்லை.. ஒன்பதாவது மாதம் என்றால் செய்யலாம்னு சொல்கிறேன் நான்..” என்றார். 
முகத்தைச் சிலுப்பிக் கொண்டு அமர்ந்திருந்த திலகவதியோ, “பிள்ளை ஆசையாக வாய்விட்டுக் கேட்ட பின் செய்யாமல் இருப்பதா? கடன் பட்டாவது செய்திவிட்டு பின்னர் சரி செய்யலாம் தானே? நீயே சொல் ஜனனி..” என்றார். 
ஜனனியின் முகம் ஒரு நொடி யோசனைக்குச் சென்று வர, அங்கிருந்த கார்த்திக்கை யாரும் கவனிப்பதாய் இல்லை. 
தங்கைக்கு என்கையில் கார்த்திக் மறுக்கமாட்டான் என்ற எண்ணமும், ஜனனி முடிவெடுத்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணமும் தான். 
ஆனால் இச்செயல் கார்த்திக்கின் சினத்தை மேலும் தூண்டிவிட்டிருந்தது, உள்ளுக்குள் வெடிக்க இருக்கும் எரிமலைக்கு நிகராக கொதித்துக் கொண்டிருந்தான். குடும்பத்தில் ஒரு முடிவெடுக்கையில் நேற்று வந்த ஜனனியிடம் கூட கேட்கின்றனர், தன்னிடம் கேட்கவில்லையே என்ற ஆத்திரம்!
பெரியம்மா வீட்டில் மட்டுமல்ல தன் வீட்டில் கூட ஜனனியைத் தான் தன்னை விடவும் உயர்வாக நடத்துகின்றனர் என வெம்பினான். தன் உரிமைகள் அவள் கைகளுக்கு இடமாறியதாகத் தோன்றியது. அவளுக்குத் தரும் மதிப்பு அவனை மதிப்பிழக்கச் செய்வதாகத் தோன்றியது. தன் சொந்த வீட்டிலே மனைவியை தன்னைவிடவும் மேலாக நடத்துவதை அவனால் ஏற்க முடியவில்லை. ஆணென்ற ஆணவமும், நானென்ற கர்வமும் சீறிக் கொண்டிருந்தது. 
“அத்தை சொல்லறபடியே செய்யலாம் மாமா. திவ்யா இந்த நேரம் ஆசையா கேட்டு நாம மறுக்கக் கூடாது இல்லையா? அதுவும் போக, அவள் கல்யாணத்தை எளிமையா தானே செய்தீங்க, இப்போ சிறப்பா செய்தால் நம்ம பக்க சொந்த பந்தத்துக்கும் தெரியும். திவ்யாவும் சந்தோஷப்படுவாள்..” 
ஜனனி தெரிவிக்க, சிவநாதன் சரியெனத் தலையாட்ட, இதைத் தானே நானும் சொல்லினேன் அப்போது கேட்கவில்லையே நினைத்தார் திலகவதி.
“சொல்றவுங்க சொன்னா தான் கேட்பார் போல இருக்கே, இனி எல்லாத்துக்கும் மருமகள் தான் வரணும்..” என திலவதி பொய் கோபமாக நொடிந்து கொள்ள, அதுவரைக்கும் பொறுமையாக பார்த்திருந்த கார்த்திக் வெடித்தான். 
“அதெல்லாம் முடியாது, கல்யாணம் அவங்க செலவுல செய்தாங்க, அவங்களே முடிவெடுத்து எளிமையா செய்துகிட்டாங்க. இப்போ சீமந்தம் மட்டும் பிரமாண்டமா செய்யணும்னு கேட்டால் என்ன அர்த்தம்? சீமந்தம் செய்றது நம்ம முறை தானே அப்போ நம்ம விருப்பபடி தான் செய்யணும்..” 
“அதனால இப்போ என்ன கார்த்திக்? எப்படி இருந்தாலும் நம்ம பொண்ணுக்குத் தானே செய்றோம்?” ஜனனி இடையிட, “என்ன பேசுற நீ? சம்பந்தி வீட்டினர் என்றால் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டுமா? சீமந்தம் எளிமையாகத் தான் நடக்கும், அப்படிச் சிறப்பாக வேண்டுமென்றால் அவர்களையே செய்து கொள்ளச் சொல்..” என்றான் முடிவாக. 
ஜனனி சொன்னால் என மறுப்பாகச் சொல்லிவிட்டானே தவிர, தங்கைக்குச் செய்யக் கூடாது என்ற எண்ணமில்லை. 
அவன் பேசிய தொனியே அவளால் தாங்க முடியாது போக, முகம் வாடினாள். அந்த இடமே ஒரு நொடி பெரும் அமைதியிலிருக்க, சிவநாதன் கொதித்துப் போனார். 
“உங்கிட்ட இப்போ யாருடா முடிவு கேட்கா? என் பொண்ணுக்கு எப்படிச் செய்யணும்னு எனக்குத் தெரியும், நீ அமைதியா போ..” 
அவ்வளவு தான் கார்த்திக்கு மிளகாய் அரைத்துப் பூசியது போல் எரிந்தது. உதறிக்கொண்டு விறுவிறுவென அறை நோக்கிச் சென்றுவிட, ஜனனி கைகளைப் பிசைந்து கொண்டு நின்றாள். 
சிறிது நிமிடங்களுக்குப் பின், ஜனனி அறைக்குள் வந்ததுமே, நேராக முன் வந்து இடுப்பில் கை வைத்தபடி நின்றவன், “இப்போ சந்தோஷமா உனக்கு? நல்லா குளுகுளுன்னு இருக்கா? எங்க அப்பா விரட்டியதைப் பார்த்தாயே..!” என எகிறினான். 
ஜனனிக்கு நெஞ்சில் சுருக்கென்ற வலி, இதில் தனக்கு என்ன சந்தோஷம் இருக்கப் போகிறது? ஏன் தங்களை வேறுபடுத்திப் பார்க்கிறான்?
பொறுக்காது ஆற்றாமையில், “நான் என்ன கார்த்திக் செய்தேன்..?” எனக் கேட்டுவிட்டாள். 
அவன் உக்கிரம் கூட, “ஏன் ஜனனி நான் ஒரு விஷயம் சொல்லும் போது மறுத்துப் பேசுற? அப்போ நீ தான் என்னை டாமினேட் பண்ற, கண்ட்ரோல் பண்றேன்னு எல்லார் முன்ன காட்டணும்னு ஆசை அதானே..?” என்றான். 
தவளை தன் வாயாலே கெடும் என்பது போல் அவன் மனதிலிருந்தது தான் வெளிவந்திருந்தது. 
ஜனனிக்கு ஒரு நொடி எதுவுமே புரியவில்லை. அவன் கருத்தை அவன் சொன்னது போல் தானே தானும் சொல்லினேன். இதில் எங்கே இதெல்லாம்? அதுவுமின்றி இவனைக் கேட்காது போதும் இவன் ஏன் மூக்கை நுழைத்துப் பேச வேண்டும்? 
“அப்படியில்லை கார்த்திக், நீ தப்பா கற்பனை செய்துக்காதே.. நான் திவ்யாவுக்காக மட்டும் தான் பேசினேன்..”
“அது சரி, அதுக்குன்னு நான் சிறப்பா செய்ய முடியாதுன்னு சொல்லிட்ட பிறகும் நீ என்னை எதிர்த்துப் பேசினால் என்ன அர்த்தம்?” 
கிட்டத்தட்ட அடிக்குரலில் கத்த, அவனின் புதிய பரிமாணத்தை முதல் முறை கண்டவcள் அதிர்ந்து, காதுகளை மூடிக் கொண்டாள். கார்த்திக் இப்படியெல்லாம் பேசுபவன் இல்லையே? இப்போது, தன்னிடம் மட்டும் ஏன் இப்படி? செலவு செய்யதயங்காதவனிடம் இந்த முரண்பாடு ஏன்?
“திவ்யா தான் காரணம்! கல்யாணம் எளிமையா நடந்த போதே ரொம்ப வருத்தப்பட்டாள். இப்போது சீமந்தமாவது நல்லா செய்தால் சந்தோஷப்படுவாள்.. அதுக்காகத் தான் சொன்னேன்” 
என்ன தான் அவன் சீற்றமாகக் கத்திக் கொண்டிருந்த போதும், வார்த்தைகளைக் கோர்த்து, பொறுமையாக தன் பக்க நியாயத்தை விளக்கிக் கொண்டிருந்தாள் ஜனனி. 
“ஏன் கார்த்திக் திவ்யாவுக்கு செய்றதுல உனக்கு என்ன கஷ்டம்? நீ நம்ம கல்யாண மொய்ப் பணத்தை எடுத்துக் கொடுப்பே, முன்ன வருவேன்னு எதிர்பார்த்தேன். இப்படி சொல்லுவேன்னு நினைக்கவே இல்லை. எத்தனையோ விஷயத்தில வீண் செலவு செய்றவன், உன் தங்கை விஷயத்தில மட்டும் ஏன் கணக்குப் பார்க்கிறாய்?” 
திவ்யாவிற்காகப் பேசுவதாக நினைத்து அவள் கேட்டுவிட, அவன் ஆணவம் இன்னும் அடிபட்டுப் போக, மேலும் சினம் பொங்கியது. அத்தனை வார்த்தைகளுக்கும் அவனாக வேறொரு அர்த்தம் கற்பித்துக் கொண்டான். 
பொறுப்பான பெண் என்றே திருமணம் செய்து கொண்டவனுக்கு இப்போது அவள் பொறுப்புணர்வு கசந்தது!
“இப்போ என்ன சொன்ன? நான் வீண் செலவு செய்கிறேனா? எப்படி செலவு செய்யணும்னு நீ எனக்குக் கற்றுத்தரப் போறீயா? சரி தான், இந்த பணக் கணக்கு விஷயத்தில தலையிட்டு நீ அறிவாளின்னு காட்டுகிற வேலையெல்லாம் மத்தவுங்ககிட்ட வைத்துக்கொள், என்னிடம் வேண்டாம். மனைவி என்றாலும் உனக்கு அந்த உரிமையை நான் தரவில்லை. என் சம்பாத்தியத்தை எவ்வாறு செலவு செய்யணும்னு எனக்குத் தெரியும்..”
என்ன பேசுகிறான் இவன்? ஜனனி வார்த்தை வராது வாயடைத்து போனாள். நெஞ்சம் விம்மியது, கண்களில் நீர் கோர்க்க, மடிந்து அமர்ந்தாள். 
“உன் எல்லை எதுவோ அத்தோடு நின்று கொள்..” என்றவன் அவ்வளவு தான் என்பது போல் சென்றுவிட்டான். 
ஜனனி வெடித்தே விட்டாள். இத்தனை நாளும் அவனை உயிரின் பாதியாக நினைக்க, அதை உருவிப் போன வலி! ஒரு வார்த்தையில் நீ வேறு நான் வேறு என்றவன் சொல்லிச் சென்றதை அவளால் தாங்க இயலவில்லை. 
அப்போது தான் அவளுக்கு நினைவில் வந்தது. பிறந்தநாள் அன்று, திருமணத்திற்கு முன்பே அவனுக்காக வாங்கிய தங்கச்சங்கிலியையும் புத்தாடையையும் பரிசாகக் கொடுத்தாள். ஆனால் அவனோ நகையை ஏற்காது நீயே வைத்துக்கொள் என்று புத்தாடையை மட்டும் வாங்கிக் கொண்டான். ஆனால் அதையும் அன்று அவன் அணியவில்லை. அத்தனை பேரை விடவும் தன்னை தள்ளி வைத்து விட்டான் என்பது புரிந்தது. 
வாயடைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். ஏற்கனவே அவனிடம் தன் மீதான நேசம் எவ்வளவு எனத் தேடத் துவங்கி, குழம்பியிருந்தவளை, அவன் வார்த்தை கண்ணாடியில் பட்ட கல்லாய் மொத்தமாக நொறுக்கியிருந்தது. அவன் பேசியதை விடவும், யாரோ போல் வேறுபடுத்திப் பேசியதை தான் தாங்க முடியவில்லை. 
“ஜனனி..” என்ற அழைப்போடு உள்ளே வந்தாள் ரோகிணி. 
தங்கையைக் கண்டவள் வேகவேகமாக கண்களைத் துடைக்க, அருகே அமர்ந்தவள் தன் தோள் சாய்த்துக் கொண்டாள்
அறைநோக்கி வருகையிலே கார்த்திக் கத்திவிட்டுச் சென்றது கேட்டது. ஆனால் என்ன விஷயத்திற்குச் சண்டை என்று தெரியாது. ஆனால் தன் அக்காளின் மீது தவறு இருக்காது என்பதில் மட்டும் ஆழமான நம்பிக்கை. 
முன்பிருந்ததை போல் கார்த்திக் மீதிருந்த அபிமானம் குறைந்திருக்க, தனக்கில்லை என்றான கார்த்திக் இப்போது அத்தனை விதத்திலும் குறைந்தவனாகத் தெரிந்தான். 
ஜனனிக்கு, ரோகிணி தங்கை மட்டுமின்றி முதல் தோழியும் அவளே! பிறந்ததிலிருந்து பிரிந்திருந்ததே இல்லை. இத்தனை வருடங்களில் எந்த விஷயமானாலும் அவர்களுக்குள் தான் முதலில் பகிர்ந்து கொள்வர். 
ஆறுதலான தோள் கிடைக்கவும் மீண்டும் ஜனனியிடம் மெல்லிய கேவல், “என்னாயிற்று ஜனனி? நீ அழுது நான் பார்த்தே இல்லை..” என்றாள். 
என்னவென்று சொல்வது? ஜனனிக்கு உள்ளம் துடித்து.
“இந்த கல்யாணம் நடக்காமலே இருந்திருக்கலாம்..” மெல்லிய குரலில் முனங்கியவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவளிடமிருந்து விலகினாள். 
மாமன் மகள் என்றிருந்த போது கூட நன்றாக நடத்தினான். மனைவி என்றான பின் தான் ஏனோ இத்தனை வேறுபாடு காட்டுகிறான். இந்த திருமணத்தின் பின் தானே அவன் மீது நேசம் வந்தது, எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் அதன் கொடுத்த வலிகளும் நிகழாமலே இருந்திருக்கலாம் என்ற எண்ணம்!
ஆனால் அவள் மனதிலிருப்பதை எங்கே ரோகிணி புரிந்து கொள்ள? அக்கா அழுவதற்கும், திருமணம் நிகழாமலே இருந்திருக்கலாம் என்றதற்கும் கார்த்திக் தான் குற்றவாளியானான்! 
சற்று தேறி இருந்தவள், விழ நீரைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். அத்தனையும் தாங்கிக் கொள்ள வேண்டும், தன் மீது தவறில்லை என்னும் போது நின்று புரிய வைக்க வேண்டும் என மனதில் உறுதி வந்திருந்தது. ஆக, இந்த உறவை இன்னும் பற்றிக் கொள்ள தான் அவள் நினைத்தாள். 
கண்ணாடி முன் அமர்ந்தவள் நீண்ட கேசத்தை விரித்து, தலை வாரினாள். அவள் பின்னே எழுந்து வந்த ரோகிணி, “ஏன் ஜனனி? நீ சந்தோஷமா இல்லையா..?” எனக் கேட்டாள். 
கையிலிருந்த சீப்பால் தங்கை ஓரு அடிப் போட்டவள், “நீங்க தான்டி எங்களை சந்தோஷமா இருக்க விட மாட்டிக்கீங்க..” என்றாள் குறையாக. 
அவள் சொல்வதும் கேலிக்கு என்பது புரிய, “ஏன் சொல்ல மாட்டே..? இந்த சிடுமூச்சி மேக்ஸ்கு என் அக்காவையே தூக்கிக் கொடுத்திருக்கேனே, அது மட்டுமில்லை அவ்வளவு செலவு செய்து பிறந்தநாள் வேற கொண்டாடி இருக்கோம்ல..” என்றவள் எகிறினாள். 
மெல்லச் சிரித்த ஜனனி, “பிறந்தநாள் மட்டும் தான் அவனுக்கு.. கொண்டாட்டம் எல்லாம் உங்களுக்குத் தானே? அவன் கார்ட்டைப் பிடுங்கிவிட்டுப் போய் அவனுக்குச் செலவு செய்றேன்னு கேக், பிரியாணி, ஹோட்டல் சாப்பாடுன்னு யார் கொண்டாடினா?” என்றாள். 
அவள் இதழ் விரிந்திருந்த போதும் அந்த சிரிப்பு கண்களை எட்டவில்லை. ரோகிணிக்கும் நன்கு தெரிந்தது. 
“தர்ஷி.. கிஷோர்.. இங்க வாங்கடா..” எனக் குரல் கொடுத்தவள், ஜனனியின் கன்னம் பிடித்துக் கொண்டு, “எப்படி எப்படி? கார்த்திக் வெய்ப் ஆனாதும் எங்க கேங்ல இருந்து கழண்டுகிட்டது மட்டுமில்லாம எங்களையே வேற கேள்வி கேட்குற..? எங்க பவர் என்னனு தெரியலையா உனக்கு? இரு காட்டுறோம்..” என்றாள் கேலியாக. 
அவர்களும் வந்து சேர, அத்தனை பேரும் ஜனனியைச் சூழ்ந்து கேள்வி, கேலி, கிண்டல் என அவளைச் சீண்டி கவலையின் சுவடு மறைய, சிரிக்க வைத்தனர். 
சில மணி நேரத்திற்கு பிறகே அறைக்குள் வந்தான் கார்த்திக். வாடிய முகமாய், சுருண்ட பூங்கொடியாய் கட்டிலில் கிடந்தாள் ஜனனி. அவனுக்குமே நெரிஞ்சி முள் குத்துவது போன்று ஓர் உறுத்தல் இருந்து கொண்டிருந்தது. அவன் இயல்பும் இது அல்லவே ஆக, தவறு செய்த குற்றவுணர்வு. 
மெல்ல ஜனனியின் கன்னம் வருட, அவன் ஸ்பரிசம் உறக்கத்திலிருந்தவளைத் தட்டி எழுப்பியிருக்க, விழி திறந்தாள். அந்த ஜீவனற்ற விழிப்பார்வை மேலும் அவனைச் சிதைந்தது. 
“இவ்வளவு கோபமா பேசியிருக்கக் கூடாது தான்… சாரி..” 
“ம்ம்..” 
மெல்லிய குரலில் ஒரு முணுமுணுப்பு தான் அவளிடம். ஏதாவது பேசுவாள் என எதிர்பார்த்தான். 
“என் வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, என் நாய்க்கு பிஸ்கட் போட்டுட்டுன்னு முன்ன கேட்கிற மாதிரி உரிமையா என்ன வேணாலும் கேள் ஜனனி. ஆனால் என் வரவு, செலவு கணக்கு மட்டும் கேட்காதே என்ன..? என்னை யாரும் கேள்வி கேட்டதில்லை..” 
படுத்த வாக்கிலே இருந்தவள் அவனையே அழுத்தமாகப் பார்த்தாள். அவன் மன்னிப்புக் கேட்டது கோபமாகப் பேசியதற்காக மட்டுமே, பேசிய விஷயத்திற்காக அல்ல! அவளுக்குப் புரிந்தது. யாரும் அவளும் ஒன்றா? மாமன் மகளாக இரு, மனைவியாக இருக்காதே என்றால் என்ன சொல்வாள்?
அப்போது அதே விஷயம் தான் ஆனால் சொல்லும் தொனி தான் மாறி இருக்கிறது வேறென்ன? அவன் கொஞ்சிப் பேசினாலும் கோபமாகப் பேசினாலும் அவளால் தாங்க இயலும். அவளை யாரோ போல் தள்ளி வைத்துப் பேசியதை தான் தாங்க முடியவில்லை. 
அவளிடம் பதிலில்லாது போக, அவள் நிலையான பார்வையில் அசைவுற்றவன், “என்ன..?” என்றான். 
“ஹக் பண்ணிக்கட்டுமா..?” என அனுமதியாகக் கேட்டாள், உள்ளார்ந்த குரலில். அவனும் படுத்த வாக்கிலே கைகளை விரிக்க, நகர்ந்து வந்து கைக்குள் அடைந்து கொள்ள, அணைத்துக் கொண்டான். 
சிக்குக் கோலத்திற்குள் சிறைப்பட்டுப் போன புள்ளி போலே அவனுடன் அவள்! 
அவள் மனதிலும் ஆதங்கமிருந்தது! என்ன கணக்குக் கேட்டேன்? அவன் தங்கைக்கு சீமந்தம் செய்யக் கேட்டதா? கேட்கக் கூடாது என்கிறானே பின் மனைவியென என் பொறுப்பு என்ன? 
கடந்த வருடம் தான் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறான். மாதாமாதம் சம்பளத்தை வீட்டில் கொடுப்பதில்லை, பிள்ளைகளுக்கு அத்தியாவசியம் மீறிய அனாவசிய செலவுகள் செய்கிறான், நண்பர்களோடு கொண்டாடுகிறான் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியும். முன்போலே நீயும் அனுபவித்துக் கொள், இதைக் கேட்கக் கூடாதென்றால் எப்படி? ஏற்கனவே தந்தையால் ஒருமுறை வாழ்வில் பெரும் கஷ்டத்தைப் பார்த்து மீண்டு வந்தது நினைவில் இருக்கிறது தானே? பின் எவ்வாறு அவள் கேளாமல் இருப்பாள்? 
இப்போது கேட்கவில்லையே தவிர, எப்போதும் அவளால் கேட்காமல் இருக்க முடியாது. இப்போது எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளும் நிலையில் அவனில்லை என்பதாலே மௌனமாக இருந்தாள். 
கார்த்திக்கும் செலவு போக, சேமிப்பு என வைக்கும் பழக்கம் உண்டு, கேட்டால் சொல்ல இயலும். ஆனால் எல்லாரும் கொண்டாடும் மனைவி அவனைக் கேள்வி கேட்பதைத் தான் அவனால் அனுமதிக்க முடியவில்லை! 

Advertisement