Advertisement

அத்தியாயம் 08
வீட்டில் ஆட்கள் அதிகமிருக்க, அதற்கு தகுந்தார் போல் வேலையும் அதிகமிருந்தது. வீட்டு வேலைக்குப் பழக்கப்படாதவள் மெல்ல தன்னைப் பழக்கிக்கொண்டாள். இப்போது தான் மெல்ல மெல்ல திலகவதியிடம் சமையல் கற்றுக்கொள்ளத் துவங்கியிருந்தாள். 
இரவு உணவிற்கு கார்த்திக் அமர்ந்திருக்க, ஜனனி தோசையைச் சுடச் சுட எடுத்து வந்து பரிமாறினாள். திலகவதியும் சிவநாதனும் ஒருபுறம் தொலைக்காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பிள்ளைகள் ஒருபுறம் அலைபேசியோடு அமர்ந்திருந்தனர். 
ஜனனி அருகே வந்து பரிமாற, ஒரு வாய் பிட்டு வைத்தவன், “என்னதிது சட்டினி உப்பா இருக்கு?” என்றான் முகம் சுளித்தபடி.
“ஷ்ஷ்..” என்றவள் கண்களால் கெஞ்சிவிட்டு மீண்டும் உள்ளே சென்று, சாம்பாரும் சூடான தோசையும் கொண்டு வந்து வைத்தாள். 
அதையும் ஒரு வாய் வைத்தவன், “இதெல்லாம் சம்பாரா? கழனி தண்ணீர் மாதிரி இருக்கு..” என, அவள் பார்வையால் அடக்குவதையும் கண்டு கொள்ளாது, பெரும் குரலில் குறை கூறினான். 
அதுவரையிலும் சீரியலில் இருந்த திலகவதியின் கவனம் விளம்பர இடைவெளியில் இந்தப் பக்கம் திரும்பியிருந்தது. 
“என்னடா சொன்ன? கழனி தண்ணீர் மாதிரி இருக்குன்னா? இந்த தண்ணீரைத் தான் இத்தனை வருஷமும் எருமைமாடு மாதிரி குடிச்சடா! புது பொண்டாட்டி வரவும் பெத்தவ சமையல் உனக்கு மட்டமா போச்சோ? ஏன் இப்போ அவள் போடுற தோசை மட்டும் உனக்குத் தேனா தித்திக்குதோ?” என திலகவதி குரல் கொடுக்க, அத்தனை பேரும் சிரித்தே விட்டனர்.
கார்த்திக் திருட்டு முழி முழித்தான். அப்போ இது உன் சமையல் இல்லையா? என்பது போல் ஜனனியைப் பார்க்க, “இதுக்குத் தான் பேசாதேன்னு சொன்னேன், கேட்டியா?” என்றாள் அடக்கப்பட்ட சிரிப்போடு. 
ரசிக்க வேண்டிய நொடி தான்! கார்த்திக்கு சுறுசுறுவென சினம் ஏறியது. அவன் என்னவோ ஜனனியின் சமையல் என நினைத்துக் குறை கூற, இறுதியில் அவன் தான் கோமாளியாகிப் போனான். 
அடுப்பில் தோசை இருப்பதால் ஜனனி உள்ளே செல்ல, போதும் போதுமென கார்த்திக்கும் எழுந்து கை கழுவச் சென்றான். 
அதைக் கவனித்தவள், இரண்டு தோசையில் எழுந்துவிட்டானே எனப் பதறி, “ஏய் கார்த்திக்…” எனக் குரல் கொடுத்தாள். 
அவள் குரல் சற்று அதிகம் தான், சமையலறைக்குள் இருவர் மட்டுமே இருந்தனர். அவனுக்கு ஏக கடுப்பு! விறுவிறு அவளை நெருங்க, அவள் பதறிப் போய் சுவரோடு சாய, “நீயே மதிக்கலைன்னா பின்ன யார் என்னை மதிப்பா? மனசில இருந்ததால் தானே மரியாதை வார்த்தையில் வரும்..” என்றான் பெரும் குறையாக. 
ஜனனிக்கு ஒரு நொடி தலையும், பூமியும் எதிர் எதிர்த் திசையில் சுற்றுவது போன்றிருந்தது. நான் இப்போது என்ன சொன்னேன்? ஏய் கார்த்திக் என்றதா? ஆண்டாண்டு காலமாக இவ்வாறு தானே, நான் மட்டுமல்லாது அனைவரும் அழைக்கின்றோம். கார்த்திக் என பெயர் சொல்லி அழைத்ததில் என்ன மரியாதை குறைவைக் கண்டுவிட்டான்? அழைப்பதற்குத் தானே பெயர் வைப்பது! 
வெகுவாக யோசித்துக் கொண்டே பால் காய்ச்சி கிளாசில் ஊற்றினாள். வரவேற்பறைக்கு வந்தவள், “மாமா இந்தாங்க..” என்க, அவளின் அழைப்பில் சிவநாதன் தான் திருப்பினார். 
அவருக்குப் பால் சாப்பிடும் பழக்கமெல்லாம் இல்லையே! அவர் புரியாது மருமகளைப்பார்க்க, நொந்து போனவள், “கார்த்திக் மாமா உங்களைத் தான்..” என அழைத்தாள். 
அலைபேசியை நோக்கி தலை குனிந்திருந்தவன், விழுக்கென அதிர்ந்து போய் தலை நிமிர்ந்தான். அவன் அருகில் தான் பிள்ளைகளும் இருக்க, அவள் குரல் அங்கிருந்த அனைவருக்கும் நன்கு கேட்டிருந்தது. 
“ஜனனி உனக்கு என்னடி ஆயிற்று?” என தர்ஷினி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போடு கேட்க, “கார்த்திக்… மாமா.. யூ மீன்.. அங்கிள்..” அஜய் தரையில் உருண்டு சிரித்தான். 
சட்டென எழுந்த நிரஞ்சன், ஜனனியின் முகத்தின் முன் திரை போலே கைகளை விரித்து, “என் இனிய குடும்பத்து மக்களே! பாருங்கள் நன்றாகப் பாருங்கள். மதியம் பார்த்த பழைய படத்திலிருந்து இன்னும் வெளி வராத மார்டன் அருக்காணியைப் பாருங்கள்! கார்த்திக் மாமாவின் மனைவி..” என வசனம் பேசினான். 
விளக்கெண்ணெய்யை விழுங்கியதைப் போல் விழித்த கார்த்திக் உள்ளுக்குள் நொந்து, நூலானான். 
அவர்கள் கேலியில் ஜனனிக்குமே கன்னங்கள் சிவக்க, இதழோரம் சிரிப்பு வெடித்து வரத் துடித்தது. கார்த்திக்கின் முகம் பார்த்தவள், “அத்தான் ஓகேவா..?” என மெல்லிய குரலில் உதட்டசைக்க, அருகிலிருந்த கிஷோர் கவனித்துவிட, “செத்தான் கார்த்திக் இனி..” என கைக்கொட்டிச் சிரித்தான். 
“உஷ்ஷ்..” என அவனை அதட்டியவள், “நான் மட்டுமில்லை நீங்களும் அப்படித் தான் மரியாதையா சொல்லணும்” என்றாள் கட்டளையாக. 
அதற்கும் அங்கே பெரிய சிரிப்பலை எழ, ஹையோ என்றாகிப் போனது கார்த்திக்கு! 
“என்னங்கடா இது? புருஷனும் பொண்டாட்டியும் இன்னைக்கு ஒரு மார்க்கமா தான் சுத்திறீங்க..! மீதி படத்தைப் போய் உங்கள் அறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள்..” என திலகவதி அதட்டல் போலே சிரிப்போடு அனுப்பி வைத்தார். 
உள்ளே வந்தவன் பெரிதும் நொந்து போய் கையெடுத்துக் கூம்பிடாத குறையாய், பழையபடி கார்த்திக் என்றழைத்தால் போதுமானது என வேண்டினான். 
மறுநாள் காலையில், அத்தனை வானரங்களும் ரோகிணியை நடுவில் அமர வைத்து, நடந்த நிகழ்வைக் காட்சியாகவே நடித்துக் காட்ட, கட்டுப்படுத்த இயலாது மேலும் நொந்து கொண்டான் கார்த்திக். 
இப்படித் தான் ஜனனியை ஏதாவது ஒரு வழியில் அவன் குறை கூற, அந்த நிகழ்வு எப்படியாவது பிசிறி இறுதியில் கார்த்திக் தான் கோமாளியாகி நிற்கும் நிலை பலமுறை வந்தது. 
அத்தனை வகையிலும் அவள் முழுமையாக இருப்பதை ஒப்பிடுகையில் அவனை அரைவேக்காடாக காட்டிவிடுமோ எனப் பயந்தான். யாரும் செய்யாத ஒப்பீட்டை இவனே செய்து நொந்து கொண்டிருந்தான். அவனால் தான் தன்னை விடவும் அவள் மேலே இருப்பதை ஏற்க இயலாதே! 
புத்துணர்வோடு எழுந்திருந்தாள் ஜனனி. காலையிலே கார்த்திக் வேலைக்குக் கிளம்ப, அவன் கேளாமலே தேவையானவற்றை எல்லாம் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்தாள், புது மனைவி. 
கார்த்திக்கின் மனதிலிருக்கும் சுணக்கம், அவன் முகத்திலிருக்கும் புன்னகையை களவாடியிருந்தது. அவன் வாடிய முகம் பார்க்க, தன்னை பிரிந்து செல்லும் வருத்தம் தான் போலும் என அவளாகவே கற்பனை செய்து கொண்டாள். 
கற்பனை தான், உள்ளுக்குள் ஜில்லென்ற பனிச்சாரலை தூவியது. ஏதோ பள்ளி செல்லும் குழந்தைக்குச் சமாதானம் சொல்வது போலே, ஏதேதோ சொல்லி அனுப்ப, அதெல்லாம் அவன் செவிகளில் ஏறவேயில்லை. 
அவன் செல்லவும் காலை உணவை உண்டவள், “எங்க அத்தை? யாரையும் காணும்?” என்றாள். 
“பசங்க தூங்குறாங்க, தர்ஷினிக்கு எக்ஸாம் ஹால் டிக்கெட் வாங்கணுமாம், ரோகியோட காலேஜ்க்கு போயிருக்காள்” என்க, சரியெனத் தலையாட்டி வைத்தாள். 
அம்மா வீடுவரை சென்றுவருவதாகச் சொல்லியவள் கிளம்பி விட்டாள். கடைவீதிக்குச் சென்றவள் சில பொருட்களை வாங்கிக் கொண்டு நேராக தன் வீட்டிற்கு வந்தாள். 
வீட்டில் முத்துக்குமார் மட்டுமே இருக்க, மலர்ந்த முகமாக வரவேற்றார். 
உள்ளே வந்தவள் அனைத்தையும் பிரிக்க, அவர் என்னவென்று கேட்க, “நாளைக்கு கார்த்திக் பிறந்தநாள் அப்பா, அதான் சப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான் செய்திருக்கேன். நானே பிறந்தநாள் கேக் தயார் செய்யப் போறேன்..” என்றாள் உற்சாகமாக. 
கேட்டவருக்கு உள்ளம் நிறைந்து உணர்வு. அவள் உற்சாகம் அவரையும் தோற்ற, தானும் உதவுகிறேன் என உடன் இணைந்து கொண்டார்.
இணையத்தில் பார்த்து அவள் செய்ய, மகளோடு உரையாடியபடி தன்னாலான சிறு சிறு உதவிகளைச் செய்தவரும் அங்கே அமர்ந்து கொண்டார். சமையலறை திசை அறியாதவள் இன்று கார்த்திக்கிற்காக விரும்பிச் செய்கிறாள் என்கையில் அவன் மீதான பாசம் அவருக்குப் புரிந்தது. 
“நல்லவேளை ரோகிணி இல்லை அப்பா, இருந்திருந்தால் என் பிளான் எல்லாம் கேட்டுடும்” என்றவள் சிரிக்க, “ம்ம், செய்து முடிக்கும் முன்பே பாதி கேக்கும் காலியாகி இருக்கும்..” என்றார் இதழ் மலர. 
ரோகிணிக்கு எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாது, பட்டென்று பேசிவிடுவாள். அதிலும் தன் மீது தவறில்லை எனில், தன் வாதத்தில் பிடிவாதமாக நிற்பாள். கார்த்திக்கும் அதே ரகமே! 
“முடிந்ததாம்மா..?” அவர் கேட்க, “ஆல் மோஸ்ட், பேக்கிங் மட்டும் தான் அப்பா..” என்றவள் அவர் வெகு நேரம் அமர்ந்திருப்பதைக் கவனித்து, சற்று ஓய்வெடுக்குமாறு அறைக்கு அனுப்பி வைத்தாள். 
இறுதியில் கேக் முழு வடிவம் பெற்று வர, அதன் மேலே அவனுக்கான வாழ்த்தை எழுதியவள் கீழே இருவர் பெயரையும் எழுதி இரு இதயங்கள் இணைத்தது போலும் வரைந்து வைத்தாள். 
இதைக் காணும் போது அவன் முகம் என்ன பாவனைகள் கட்டும், தானே செய்தது என அறியும் போது என்ன வார்த்தைகளில் பாராட்டுவான் என்றெல்லாம் கற்பனை செய்தவள்,  கண் திறந்தே கனவுகள் கண்டாள். 
வேலைகள் அனைத்தும் முடிய, தந்தையிடம் தெரிவித்துவிட்டு மீண்டும் கடை வீதிக்கு வந்திருந்தாள். உற்சாகமாக அவனுக்கென தேடி, உடைகள் எடுத்தாள். வேலைக்குச் செல்கையில் அணிவதற்கு வீட்டில் இருக்கையில் அணிவதற்கு என இரண்டு மூன்று உடைகள் எடுத்தாள். நாள் முழுவதும் அவனை புத்தாடையிலே இருக்க வைக்கும் ஆசை! 
நாள் முழுவதும் சுற்றிக் களைத்த பின்னும் கூட, அவளுக்கு அலுப்பே தெரியவில்லை. அவனுக்காகப் பார்த்து பார்த்து செய்வதும், அந்த நிமிடங்களை எதிர்பார்த்திருப்பதிலும் அவள் உற்சாகம் குறைந்த பாடில்லை. இதென்ன சிறுபிள்ளை போன்ற விளையாட்டுத்தனங்கள் அவளுக்கே தோன்றிய போதும் அத்தனையும் செய்து வைத்தாள். அத்தனையும் எடுத்துக் கொண்டு வீடு வந்தவள் தன் அறையில் அவன் பார்வையில் படாமல் மறைந்து வைத்தாள். 
வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய கார்த்திக்கின் பின்னே சுற்றியவள் தேவைகளை கவனித்துச் செய்தாள். மெல்லிய அணைப்பையும், தன் நினைவோடு இருந்தான் அல்லது தனக்காக ஏங்கியிருந்தான் என்பது மாதிரியான வார்த்தைகளையும் எதிர்பார்த்துச் சுற்றியவளுக்கு ஏமாற்றமே! 
அவள் தந்த தேநீரை உரிஞ்சிக்கொண்டிருந்தவன், வெகுநேரமாக அவள் நிற்பதைக் கவனித்து விட்டு, “என்ன ஜனனி..?” என்றான். 
அருகே வந்து அவன் தோள் சாய்ந்தவள், “மிஸ் யூ கார்த்திக்..” என்றாள் மெல்லிய குரலில் கீதமாக. 
சட்டெனச் சிரித்தவன், “ஏன் ஜனனி? வீட்டுல தான் இத்தனை பேர் இருக்காங்களே.. பிள்ளைகளோடு விளையாடு, இல்லை வெளிய போயிட்டுவாங்க..” எனச் சமாதானமாக முதுகை வருடிக்கொடுத்தான். 
உண்மையில் அவனுக்காக ஏங்கவில்லை, அவன் நினைவோடு பொழுதை கழித்துவிட்டாள் தான் அதே போல் அந்த வார்த்தைகளை அவனிடமும் எதிர்பார்த்தது தான் பரிதாபம்! 
வெளியில் வந்தவன் பிள்ளைகளோடு அமர்ந்துவிட, திலகவதிக்கு உதவிக் கொண்டிருந்தாள் ஜனனி. இரவு உணவிற்குப் பின் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தவனின் அருகே வந்தவள், “உறங்கவில்லையா கார்த்திக்..” என அழைத்தாள். 
“முக்கியமான கிரிக்கெட் மேட்ச் பார்த்திட்டு வாரேன், நீ போய் தூங்கு ஜனனி..” என அனுப்பி வைத்தான். நிரஞ்சனோடு வேறு அமர்ந்திருக்க, அதற்கு மேலும் அவளால் அழுத்தி அழைக்க முடியவில்லை. 
அறைக்கு வந்தவள் சில நிமிடங்கள் காத்திருந்தாள், ஆனாலும் நாள் முழுவதும் அலைந்த களைப்பு கண்கள் சொருக, அவளையும் அறியாமல் உறங்கிவிட்டாள். 
மனதிலிருந்த ஆசை, ஏதோவொரு விசையாய் உலுக்கி எழுப்ப, சரியாக நள்ளிரவை நெருங்கும் நேரம் விழித்துவிட்டாள். திரும்பிப் பார்த்தவள் கார்த்திக் அயர்ந்து உறங்குவதைக் கண்டு மெல்ல எழுந்தாள். 
சத்தமே வராது மெல்ல மேசையில் கேக், மெழுகுவர்த்தி, ரோஜாக்களோடு அனைத்தையும் தயார் செய்தாள். சரியாக நேரம் பனிரெண்டை நெருங்க, படுக்கையை நெருங்கியவள், “கார்த்திக்..கார்த்திக்..” என மெல்லிய குரலில் அழைத்து எழுப்பினாள். 
மேலும் நெருங்கியவள் நெற்றியில் இதழ் பதித்து, “கார்த்திக் எழுந்திரு..” எழுப்ப, உறக்க நிலையிலே அவள் ஸ்பரிசமும் இதழ் ஈரமும் உணர்ந்தவன் அவளை வளைத்து தன்னோடு அணைக்க முயன்றான். 
ஒரு நொடியில் மயங்கினாலும் நேரமாவதை உணர்ந்தவள், விலகி எழ, அந்த அசைவில் அவனும் மெல்லக் கண்களைத் திறந்தான். 
இமைக்காது மயக்க நிலையில் அவன் முகம் பார்த்திருந்தவள், “ஐ லவ் யூ கார்த்திக்..” என வாழ்ந்த நினைத்து, மனதில் இருப்பதை உளறினாள். 
கண்களைக் கசக்கி நன்கு விழித்தவன், “என்ன சொன்ன..?” என மீண்டும் கேட்க, சுதாரித்தவள் பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தாள். 
தலையைப்பற்றியவன் பல்லைக்கடித்தபடி, “அறிவிருக்கா ஜனனி உனக்கு? இந்த வாழ்த்தெல்லாம் காலையில சொன்னால் ஆகாதா? என்னதிது சிறு பிள்ளை போன்ற விளையாட்டுத்தனம்? இப்படியா நல்ல உறக்கத்தில் இருப்பவனை எழுப்புவாய்..?” சுள்ளென எரிந்து விழுந்தான். 
அனலிலிட்ட மலராய் ஜனனிக்கு நொடியில் அகமும் முகமும் வாடிவிட்டது. இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, கண்கள் நிறைய, கண்ணீர் திரளக் கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டுப்போனாள். 
அவள் நிலை கவனிக்காது, “ஏன் ஜனனி தாமதமாகத் தூக்கியது தான் உனக்கே தெரியுமே? இப்போது எழுப்பினால் அது சரியா? இனி என்னால் உறங்கவே இயலாதே, காலையில் தலைவலி வேறு வாட்டியெடுக்கும்..” என அவன் நிலையைப் புலம்பிக் கொண்டிருந்தான். 
அதே நேரம் அறையின் கதவுகள் தட்டப்பட, அவள் சிலையாக அமர்ந்திருக்கவும் எரிச்சலோடு எழுந்து சென்று திறந்தான் கார்த்திக். 
வெகு தாமதமாக விளையாட்டு நிகழ்ச்சி பார்க்கையில் தெரியாதது, அவள் எழுப்புகையில் மட்டும் குற்றமானது. 
தானே முதல் வாழ்த்தாக இருக்க வேண்டுமென, ஆசையாக உரைத்ததை கூட அவன் செவியில் வாங்கவில்லையே என்பதிலே அவள் இதயம் வலித்தது. 
உறக்கம் களைந்த எரிச்சலில் எழுப்பிய வேகத்திற்கு அவளிடம் கத்திவிட்டான். இப்போது தான் அவன் சற்றே நிதானமாக, வெளியிலோ பிள்ளைகளும் கேக்கோடு அவனை அழைத்திருந்தனர். 
“ஜனனி.. இங்க வா..” எனக் குரல் கொடுத்தவன் அவர்களோடு சென்று நின்று கொண்டான். 
அவன் குரலுக்கே களைந்தவள் எழுந்து சென்றாள். வரவேற்பறை முழுவதும் பையன்கள் அலங்காரம் செய்திருக்க, ரோகிணியும் தர்ஷினியின் வெளியில் சென்றிருந்த போது அவனுக்காக கேக் வாங்கி வந்திருந்தனர். 
பெரியவர்களைத் தொந்தரவு செய்து எழுப்பவில்லை. பிள்ளைகள் ஐவர் மட்டுமே, பாட்டுப்பாடி வாழ்ந்த, ஜனனி வந்து நிற்க, கேக் வெட்டினான். அனைவருக்கும் ஊட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்டாடி முடித்தனர். 
அதன் பின்னே அவளோடு அறைக்கு வர, அப்போதே அவள் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளை கவனித்தான். 
“ஹேய்! நீ வேறு தனியாக ஏற்பாடு செய்தாயா..?” என்க, ஏன் அவர்கள் செய்தால் நான் செய்திருக்கக் கூடாதா? அவள் காயம் கொண்ட மனம் கேவியது. 
“இதையும் கட் செய்திடு கார்த்திக்..” அவள் கேட்க, இலகுவாக இருந்தவன் இன்புற்ற போதும், “டயர்ட்டா இருக்கு ஜனனி, காலையிலே பார்த்துக்காலம். எடுத்து வை..” என்றுவிட்டுப் படுக்கையில் கவிழ்ந்து விட்டான். 
அவர்களை விடவும் தான் அவனுக்குத் தனித்துவமானவள் என உணர்த்த நினைத்தாள்! இன்ப அதிர்ச்சி கொடுக்க, நினைத்து அவள் செய்த ஏற்பாடெல்லாம் வீணாய்ப் போன அயர்ச்சி! பெருமூச்சு! அவன் உறங்கியதுமே அவள் கண்களில் மெல்லிய கோடாய் கண்ணீர் இறங்கியது. 
நிதர்சனத்தைப் புரிந்து கொள், அவன் மீது தவறில்லை என்றே காயம் பட்ட மனதிற்கு மருந்திட்டு சமாதானம் செய்தவள், கண்ணீரைத் துடைத்துவிட்டு கட்டிலில் விழுந்தாள். 
மறுநாள் காலையில் இரு வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெற்று, அன்னை செய்து தந்த இனிப்பை உண்டான். கோவிலுக்குக் கிளம்ப, பெரியவர்கள் ஜனனியையும் உடன் அனுப்பி விட்டனர். கோவிலில் தரிசனம் முடிய, ஆட்டோ பிடித்து அவளை அனுப்பிவிட்டு, நேராக அவன் வேலைக்குக் கிளம்பி விட்டான். 
நின்று பேசுவதற்குக் கூட அவனுக்கு நேரமில்லை. இதற்கு வராமலே இருந்திருக்கலாம் என்ற ஆகாசம் அவளுக்கு. மாலை நேரமும் நண்பர்களோடு கொண்டாடிவிட்டு தாமதமாகத் தான் வந்திருந்தான். 
ஏனென்றே தெரியாத விரிசல் இருவருக்குள்ளும். அவனாக அவளை நெருங்குவதில்லை, அவளாக நெருங்கிய போதும் அவனின் ஒட்டாதத்  தன்மையை சரியாகக் கண்டுகொண்டவள் அன்றிலிருந்து விலகிக் கொண்டாள். 
கேக் ஊட்டியதும், புகைப்படம் எடுத்ததும் பிறருக்கு வாங்கி வருவதை போலே அவளுக்கும் என அவனைவரும் போலே தான் தன்னையும் நடத்துகிறான் என்ற எண்ணம் அவள் மனதில் மீண்டும் எழுந்தது, என்னவோ கல்யாண வாழ்க்கை அதற்குள் சுவாரஸ்யமற்றுப் போனது இருவருக்கும். 

Advertisement