Advertisement

அத்தியாயம் 07
ஜனனிக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல், ஒவ்வாமை! கார்த்திக்கோடு மகிழ்வாக இருந்தாலும், இந்த மகிழ்வு எத்தகையது என்ற குழப்பம். தனக்கு கார்த்திக்கை பிடிக்குமே, அந்த அளவிற்கு அவனுக்கும் என் மீது நேசமிருக்கிறதா? என்ற கேள்வி! 
அவ்வாறெல்லாம் இல்லையென்று சொல்லிவிட்டானே இன்னும் என்ன சந்தேகம்? புத்தி கேட்டாலும் மனது முரண்டியது. அது எப்படி அவர்களும் நானும் அவனுக்கு ஒன்றாவோம்? எங்கள் உறவுக்கு என்ன அர்த்தம்? நான் அவனின் பாதியில்லையா? எப்படி அவன் அவ்வாறு சொல்லலாம்? ஆற்றாமையில் விம்மியது நெஞ்சம்! 
பசி கண்ட பூனைக்குட்டியாகப் பல உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள் ஜனனி. 
அனைவரிடமும் எதிர்பார்மில்லாத அன்பை அள்ளித் தருபவள், கார்த்திக்கிடம் மட்டும் அதை எதிர்பார்த்தாள். தன் மீதான நேசத்தை அவன் வெளிப்படுத்த வேண்டும், தனித்துவமாகத் தன்னைக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசை அலைகள் எழுந்தது. 
அவ்வாறு இல்லை எனும் பட்சத்தில் தன் மீது நேசமில்லையோ என்ற குழப்பமும், தன்னை எவ்வாறு நடத்துகிறான் என்ற ஆராட்சியும் தான். இறுதியில் வெகு தூரம் பயணித்து வந்ததை போன்ற மனச்சோர்வு! 
இந்த பிரச்சனை எல்லாம் காலையில் ரோகிணி கேட்ட கேள்விகளுக்குப் பின் வந்த குழப்பம். 
நேற்று வேணி வந்திருந்த போதே மறுவீட்டு விருந்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். ஆகையால் அனைவருமே சென்றிருந்தனர். முழுதாக ஒரு நாளுக்குப் பின் தந்தையைக் காண்பதிலும் தன் வீடு செல்வதிலும் அவளுக்கு ஏக உற்சாகம்! 
விருந்து சிறப்பாக நடந்து முடிய, கார்த்திக்கை பார்த்து பார்த்துக் கவனித்தாள் ஜனனி. பெற்றோர்களுக்கு மனம் நிறைந்து போனது. 
அனைவரும் பேசிக்கொண்டிருக்க, தன்னறை நோக்கிச் சென்ற ஜனனியை வாசலிலே இடை மறித்தாள் ரோகிணி. 
“இனி, இது உன் அறையில்லை..” என்க, ஜனனியின் முகமே நொடியில் வாடிவிட்டது. 
முறைப்பாள், அல்லது உரிமையோடு சண்டையிடுவாள் என்றெண்ணியே ரோகிணி அவளை சீண்ட, அவள் வாடிய முகம் கண்டதும் பதறிப் போனாள். 
என்ன தான் உறவென்ற போதும், அருகருகே இருந்த போதும் தன் வீட்டுக்கும், தாய் மடிக்கும் ஏங்கியிருந்தாள் ஜனனி. இதில் ரோகிணி கூறியது நெஞ்சைத் தைக்க, சட்டென வாடிவிட்டாள். 
“ஹே.. ஹேய்.. உங்களுக்கு மேல அறை ஏற்பாடு செய்திருக்கேன்னு சொல்ல வந்தேன்.. என்ன ஜனனி நீ..?” எனச் சமாதானம் பேசியவாறு உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தாள் தங்கை. 
சற்று தெளிந்த ஜனனி, “அதெல்லாம் முடியாது இது தான் என் அறை..” என உரிமை கொண்டாட, “அப்போ கார்த்திக்..? அப்போன்னு விட்டுடுவ போலே இருக்குகே..” எனக் கேலி செய்தாள் சின்னவள். 
“ம்ம், உன்னை வேண்டுமெனில் விரட்டிவிட்டு நாங்கள் இருந்து கொள்கிறோம்..” 
“ஆஹா.. இது தான் உங்கள் திட்டமா..?” என பொய்க்கோபத்தோடு கேட்டவள், வேணி வருவதைக் கவனித்து விட்டு, “கேளும்மா உன் பொண்ணோட திட்டத்தை..” எனச் சலுகையாகச் சிணுங்கினாள். 
இவ்வாறாக ஆரம்பித்த உரையாடல் வெகுநேரம் நீள, பெற்றவளோ, “நீ சந்தோஷமாக இருக்கிறாயா ஜனனி..?” என இடையில் கேட்க, அந்த விசாரணையில் தன் மீதான அக்கறையைப் புரிந்து கொண்டாள் ஜனனி. 
மகிழ்வாய் இருப்பதாகப் பதிலுரைக்க, இருவருக்கும் மனம் நிறைய, ரோகிணியோ, “கார்த்திக் ஏதாவது ஸ்பெஷலா கிப்ட் வாங்கிக் கொடுத்தானா? ஹனிமூன் எங்கே பிளான்?” என்றாள்.
அவள் கேட்கவும் தான் ஜனனிக்கு உள்ளுக்குள் பெரும் யோசனை! 
அப்படியே உரையாடலைத் திசைமாற்றிவிட்டாள், சிறிது நேரம் பேசி அனுப்பி வைத்தவள், சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அப்போது ஆரம்பித்தது இப்போது வரையிலும் பெரும் யோசனையாக, புயல் காற்றாக அவளை சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது. 
இது என்ன? இருவருக்கும் பேசிக்கொள்வதற்குக் கூட தனிமையான நிமிடங்கள் அமையவில்லை. பகலெல்லாம் பிள்ளைகளும் உறவுகளும் சூழ்ந்திருக்க, இரவெல்லாம் இளமையின் இன்ப மொழி ஆக்கிரமித்திருந்தது இருவரையும். 
தன்னை ஆள்கிறானே தவிர, தன் மீது அன்பைக் காட்டுவதில்லையோ என்ற யோசனையிலே வெளியில் வந்து அமர்ந்தாள். 
ரோகிணி தான் செய்த இனிப்பை ருசிப்பார்த்துச் சொல் என ஒருபுறம் கார்த்திக்கை உலுக்க, தர்ஷினி உண்ணக் கூடாது என கைகளைப் பற்றிக் கொண்டாள். இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அவன் முழிக்கும் நிலைப் பார்த்து, கிஷோர், நிரஞ்சன் வரை அனைவரும் சிரிக்க, ஜனனிக்குமே மெல்லிய புன்னகை இதழில் அரும்பியது. 
“என்ன கார்த்திக் நான் சமைத்ததை உண்ண மாட்டாயா? நான் கேட்டால் செய்ய மாட்டாயா..?” 
“வேண்டாம் கார்த்திக், நான் சொல்வதைக் கேள்.. உன் உயிர் முக்கியம்..” 
இருபுறம் அவனை நெருக்கியவர்கள் இறுதியில் நான் முக்கியமாக அவள் முக்கியமா என்ற கேள்வியில் வந்து நிறுத்திருந்தனர். 
சற்று அழுத்தத்தில் இருந்தவன் சட்டென, “ரோகிணி, ஜனனி, தர்ஷினி.. எல்லாம் எனக்கு ஒன்று தான், எல்லாரும் சமம் தான்..” என உரைத்து விட்டான். 
அதுவரையிலும் புன்னகை முகமாக அவர்கள் விளையாட்டைப் பார்த்திருந்த ஜனனியின் முகம் நொடியில் விழுந்து விட்டது. எதார்த்தமாகச் சொன்னாலும் மனதில் இருப்பது தானே வெளிப்படும்? 
அதெப்படி அவர்களோடு நானும் ஒன்றாவேன்? அப்படித் தான் என்னை நினைத்திருக்கிறானா? மாமன் மகள் என்று தான் நினைக்கிறானா? மனைவி என நினைக்கவில்லை? இன்னும் அவன் மனதில் நான் பதியவில்லையோ? 
அவர்கள் இருவரும் தானே கேட்டார்கள், இதில் என்னை ஏன் இணைத்துச் சொன்னான் மடையன்! சிறு கடுப்பும், அதீத வருத்தமும் அவளை அழுத்தியது. 
மாமன் மகளும் அக்காள் மகளும் இருபுறமும் அவனைப் பாடாய்ப்படுத்த நொந்தவன், கைகளை உதறிவிட்டு, “உங்களுக்கு இப்போ என்ன வேணும் ராட்ஷசிகளா?” என்றான். 
ஒன்றாகச் சிரித்த இருவரும், “வேறென்ன ஷாப்பிங் தான்..” என்றனர் ஒரே குரலில். 
“கூட்டுக் களவாணிகளா.. கேடிங்களா..” என முனங்கியபடியே தன் பர்சிலிருந்து கார்ட்டை எடுத்து வைத்தான்.
சிரிப்போடு, உடனடியாக எடுத்துக் கொண்டவர்கள், ஒன்றாக கிளம்பியும் விட்டனர். அவர்கள் செல்ல, சிரிப்போடு அருகில் வந்த அஜய், கிஷோர், நிரஞ்சன், “இந்த வாட்ச் பாரேன் கார்த்திக்…” என அலைப்பேசியைக் காட்டினர். 
“அடுத்து நீங்களாடா..?” எனச் சலித்துக்கொண்டான். 
என்ன தான் சலித்துக்கொண்டாலும், அவர்கள் கேட்டு எதையும் அவன் மறுப்பதில்லை. அதனாலே அத்தனை பேருக்கும் கார்த்திக்கைப் பிடிக்கும். 
இத்தனைக்கு நடுவிலும் எதிரே இருக்கும் மனைவின்புறம் ஒரு நொடி கூடத் திரும்பவில்லை. அதுவே ஜனனியை வாடச் செய்தது! 
மறுநாள் சிவகாமியின் வீட்டில் விருந்து. இருவர் மட்டுமே, காரில் வந்தனர். அப்போது தான் சற்று பேசுவதற்கு இருவருக்கும் நேரம் கிடைத்தது. கார்த்திக் பேசினான், நாளையிலிருந்து வேலைக்குச் செல்ல வேண்டும், விடுமுறை முடிந்தது என்றான். இனி வேலை சற்று அதிகமாகவே இருக்கும், அதிக விடுப்பு எடுக்க முடியாது என்றான். 
ஆக தன்னை தேன்நிலவு என வெளியில் எங்கும் அழைத்துச் செல்ல இயலாது எனக் குறிப்பிடுவது புரிந்தது ஜனனிக்கு. அதொன்றும் அவளுக்குக் குறையாகத் தெரியவில்லை, அவன் அருகிலிருந்தால் போதுமென்ற எண்ணம் தான்! 
சிவகாமியின் வீட்டிற்கு வந்திருக்க, மதிய விருந்து சிறப்பாக நடந்தது. பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“இந்த பில்டிங்கு லோன் எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்? ஹோட்டல்லை கொஞ்சம் விரிவுபடுத்தலாம்னு நினைக்கிறேன்..” என பழனிவேல் ஆரம்பித்தார். 
தன்னிடமோ எனக் கார்த்திக் நினைக்க, கேள்வி ஜனனியிடம் தான் சென்றது. அவளும் தனியார் நிதி நிறுவனம், வங்கிக் கடன், அதன் வட்டி விகிதம் என அறிந்த தகவல்களையும் ஆலோசனையும் சொல்லிக் கொண்டிருந்தாள். 
குடும்பம் மொத்தமும் அவளிடம் சந்தேகம் கேட்டு, ஆலோசித்துக் கொண்டிருக்க, மௌனமாக அமர்ந்திருந்தது என்னவோ கார்த்திக் மட்டும் தான்!  
செலவு செய்ய மட்டுமே தெரிந்த தனக்குச் சேமிப்பு, முதலீடு பற்றித் தெரியவில்லையோ என யோசிக்காது, தன்னை விடவும் அவளைத் தான் பெரிதாக மதிக்கின்றனரே என நொடிந்தான். தன்னை விடவும் அவளை மதிப்பாக நடத்துவதை ஏற்க முடியவில்லை. 
அவள் முன் தன்னைக் குறைவாக காட்டுவதாக நினைத்தான்! மனைவியின் முன் கீழிறங்க மனம் வரவில்லை. 
இறுதியில் சிவகாமி, “காலம் போன காலத்துல கடன்பட்டு சரிகட்ட முடியுமா? இதெல்லாம் வேண்டாம்னு சொல்கிறேன், கேட்டால் தானே..” எனக் கணவரைச் சாடுவது போல் முகம் திருப்பினார். 
“ஏன் அத்தை? பெரிய வீதியில் இருக்கும் கடை, விரிவுபடுத்தினால் இன்னும் நன்றாக இலாபம் தருமே..?” என ஆறுதலாய் ஜனனி கேட்க, “இல்லை எதுக்கு? எங்க வயசுக்கு இதையே கவனித்துக் கொள்ள இயலவில்லை, இனி விரிவுபடுத்துவது வீண் தானே? எங்கள் காலத்திற்குப் பின் இதை யார் கவனிப்பார்கள்?” என்றார் பொறுக்க முடியாமல். 
சுரேஷும், காயத்திரியும் அமைதியாக இருக்க, அப்போது தான் பெரியத்தையின் மனத்தாங்கல் மருமகளின் மீது என்பது ஜனனிக்குப் புரிந்தது. இனி அதற்கு மேலும் ஆதரவாகப் பேசினால் இவர்களுக்கு எதிராகப் பேசுவதாக தோன்றும் என்பதால் மௌனமாகினாள் ஜனனி. 
எல்லாம் அறிந்த விஷயம் தான், படித்ததற்குப் பிடித்த வேலைக்குத் தான் செல்வேன் என காயத்திரி சென்றிட, அதில் சிவகாமிக்கு விருப்பமில்லை. தங்களோடு இணைத்து தொழிலைக் கவனிக்க வேண்டும், அதைக் கற்றுக் கொண்டு, தங்களுக்குப் பின்னும் எடுத்து நடத்த வேண்டுமென்ற ஆசை மாமியாருக்கு. 
ஆகையால் வாய்ப்புக்கிடைக்கும் நேரமெல்லாம் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் செல்கிறாள் என ஜாடையாகக் குறைவாகப் பேசுவது அல்லது வயோதிகம் காரணமாகத் தன்னால் இயலவில்லை எனக் காட்டுவதுமாக இருப்பார் சிவகாமி. 
ஆனால் என்ன காயத்திரிக்கு வேலையாள் போன்று கடையில் இறங்கி வேலைப் பார்த்ததில் சிறிதும் விருப்பமில்லை. அவர்கள் காலத்திற்குப் பின் கூட தொழிலைக் கையில் எடுத்துக் கொள்ளலாம், அவர்களோடு வேண்டாமென ஒதுங்கிக் கொண்டாள். அவர்கள் பேச்சுக்களில் மாமியாரும் நாத்தனாரும் தன்னை மதிப்பதில்லை என்ற மனக்குறை காயத்ரிக்கு! 
சுரேஷ் தான் யார் பக்கமும் பேச இயலாது அல்லல் படுகிறான். பல வருடங்களாக நடக்கும் இழுபறி என்பதால் குடும்பத்தில் அனைவரும் அறிந்ததே! 
மாலை பூஜை நேரம், காயத்திரி தம்பதிகளை ரெங்கநாதனர் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தாள். அங்கும் காயத்திரி தன் அன்னை வீட்டுப்பக்கம் சில சொத்துகளை விற்க இருப்பதால், அதைத் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? அல்லது வேறு வகையில் என்ன செய்யலாம் என்று ஜனனியிடம் ஆலோசனை தான். 
இதில் நான் சொல்ல என்ன இருக்கிறதென நினைத்த கார்த்திக் மௌனமானான், வீடு வரும் வரையிலும் அவன் அமைதி நீண்டது.  
தங்கள் அறைக்குள் வந்ததும் ஜனனி குளிக்கச் சென்றிட, கட்டிலில் விழுந்தவன் அப்படியே உறங்கிப் போனான். நாளையிலிருந்து வேலைக்குச் செல்ல இருக்கிறான், சிறிது ஓய்வெடுக்கட்டும், என நினைத்தவள் வெளியில் வந்தாள்.  
அனைவரோடும் சிறிது நேரம் அமர்ந்து பேசியவள் பின் அறைக்கு வந்து கார்த்திக்கு தேவையான உடையை இஸ்திரி செய்து வைத்துவிட்டு பின்னரே படுக்கைக்குச் சென்றாள். 
என்ன முயன்றாலும் அவள் விழிகளை உறக்கம் சிறிதும் தழுவவில்லை. அலையாய் கொதித்துக் கொண்டிருந்த ஆதங்கம் அடக்கவில்லை, நான் இவனுக்குச் சிறப்பு இல்லையா? எப்படி அவர்களில் ஒன்றாவேன்?
இப்போது தான் ஆரம்பித்திருக்கும் மண வாழ்கையில் இதை வைத்து பிரச்சனைகளைத் தருவிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள், ஆகையாலே அவள் மனக்குமுறலை கார்த்திக்கிடம் வெளிப்படுத்தவில்லை. 
பிரச்சனை என்றால் பயமல்ல, ஜனனிக்கு சண்டை, சச்சரவுகள், குத்தும்படியான வார்த்தைகள் இதெல்லாம் ஆகாது. யாரையும் காயப்படுத்தும்படி பேசி விடக்கூடாது என்பதில் எப்போதும் கவனமாக இருப்பாள். 
வெகு நேரம் யோசித்தவளுக்கு தன்னைச் சிறப்பாக, தனித்துவமாக அவன் உணரவில்லை எனில் நாம் தான் அதை உணர்த்திட வேண்டும் என்பது புரிந்தது. உறுதியாக முடிவெடுத்த பிறகே மெல்ல கண்கள் அயர்ந்தது. 

Advertisement