Advertisement

அத்தியாயம் 05
அன்று திருமணத்திற்கு உடை எடுக்கக் கடைக்கு வந்திருந்தனர். ஜனனியின் வீட்டினர் மட்டுமல்லாது சிவகாமியின் வீட்டில் பிள்ளைகளையும் குடும்பத்தோடு அழைத்திருந்தனர். 
“கார்த்திக் உனக்கு இருக்கிற ஒரே மச்சினி நான், எனக்கு இரண்டு ட்ரெஸ் வேண்டும்..” என ரோகிணி உரிமையாகக் கேட்க, “அப்போ எனக்கு மூன்று வேண்டும்..” என தர்ஷினி இடையில் கேட்டாள். 
முகம் மலர, சின்னச் சிரிப்போடு, “எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக்கோங்க தாய்                                                குலங்களா..” என்றவன் கரம் குவித்துவிட, “இது தான் கல்யாண மாப்பிள்ளைக்கு அழகு..” என அவன் தாடையைப் பற்றிக் கொஞ்சிவிட்டு உள்ளே சென்றாள் தர்ஷினி. 
பெண்கள் சூழ, முதலில் ஜனனிக்கு முகூர்த்தப்பட்டு தேர்வு செய்தனர். கார்த்திக்கை அழைத்துக் காட்ட, அவனுக்கு இதெல்லாம் தெரியாது, ஜனனிக்கு பிடித்தாக இருக்கட்டும் எனச் சென்றிருந்தான். 
ஆனால் தர்ஷினியோ அவனை பிடிவாதமாக பிடித்து வைத்து அவளுக்கான உடையைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை கவனித்த ரோகிணி, “உன்னை விடவும் கார்த்திக் தர்ஷினிக்கு அதிக இடம் கொடுக்கிறான், கவனித்துக்கொள்..” என காதில் கிசுகிசுத்தான். 
ஆனால் அவளுக்குத் தெரியும் கார்த்திக் மட்டுமே எவ்வளவு விலையென்றாலும் வாங்கித் தருவான், இதுவோ பெரியோர்களிடம் என்றால் இந்த உடையா? இந்தனை விலையா என்ற அதட்டல் தான் வரும்! 
சின்னச் சிரிப்போடு, “நீயும் போய் உனக்குப் பிடித்ததை தேர்வு செய் ரோகி..” என அனுப்பி வைத்துவிட்டு புடவைகளின் பக்கம் பார்வைப் பதித்தாள் ஜனனி. 
பணத்தைத் தான் செலுத்தி விடுவதாக சொல்லிவிட்டு, கார்த்திக் மெல்ல அவ்விடம் விட்டு நழுவியிருந்தான். பெண்கள் உடைகளை எல்லாம் நின்று கவனித்ததில்லை. அன்னை, தங்கை என யார் கேட்டாலும் பணம் தருவானே தவிர, அவனாகப் பார்த்து வாங்கித் தந்ததில்லை. 
எலுமிச்சை மஞ்சளோடு தளிர் பச்சையும் கலந்த நிறத்தில் கற்கள், முத்துகள், பாசிகள் பதித்த அதீத வேலைப்பாட்டுகள் கொண்ட லெகாங்கா ஜோலியை ரோகிணி தேர்வு செய்ய, மறுபுறம் தர்ஷினியும் அது தான் வேண்டுமென்று நின்றாள். 
வயதில் குறைவாகினும் நெடுநெடுவென ரோகிணியின் உயரத்திற்கு இருப்பாள் தர்ஷினி. சிவகாமி ஒற்றைப் பேத்தி என ஆதித செல்லம் கொடுக்க, அவரைத் தொட்டு அத்தனைப்பேருக்கும் செல்லப்பிள்ளையாகிப் போனாள். 
“ரோகி எனக்கு இது தான் பிடித்துள்ளது, நீ வேறு பாரேன்..” 
“தர்ஷி, நான் தானே இதை முதலில் தேர்வு செய்தேன்?”
இருவரும் வாதிட்டு நிற்பதைப் பார்த்த வேணி அருகில் வந்தாள். 
“சின்ன பிள்ளையோடு என்ன பிடிவாதம், நீ வேற புடைவையை பாரேன்..” என வேணி அதட்ட, தங்கள் வீட்டு விழாவில் தனக்கு பிடித்ததைக் கூட அணிவதற்கு உரிமையில்லையா? ரோகிணி முகம் வாடினாள். 
“நாம இரண்டு பேரும் ஒரே போல எடுத்துக்கலாம் ரோகி, நான் வேணா வேற கலர்ல எடுத்துக்கிறேன்..” என தர்ஷினி மனதே இல்லாமல் விட்டுக் கொடுக்க வர, “ஏய்.. ரோகி இங்கே வா..” எனச் சற்று தொலைவிலிருந்த ஜனனி அழைத்திருந்தாள். 
எதிலும் தன்னை தனித்துவமாகக் காட்டிக்கொள்ள நினைக்கும் ரோகிணிக்குத் தன்னை மாதிரியே பிறர் பயன்படுத்துவது சுத்தமாகப் பிடிக்காது. ஜனனியாக இருந்தாலுமே ஒரு போதும் அனுமதிக்க மாட்டாள். 
அருகில் வந்தவளின் தோளில் ஒரு புடைவையைப் போட்டுப் பார்த்த ஜனனி, “உனக்குப் பொருத்தமாக உள்ளது ரோகி, என் புடவை நிறமும் இது போல தான்..” என்க, ஏற்றுக்கொள்வதாகத் தலையாட்டினாள்.
அவளைத் தோளோடு ஜனனி அணைக்க, “ம்ம், போதும் இதெல்லாம் கார்த்திக்கிட்ட வைத்துக்கோள்” என்ற கேலியோடு விலகினாள் ரோகிணி. 
ஜனனிக்காக அறை மனதோடு அவள் ஏற்க, தங்கைக்குப் பிடித்ததைச் செய்ய முடியவில்லையே என ஜனனியும் உள்ளுக்குள் வருந்தினாள். 
தர்ஷினியே விட்டுக்கொடுத்தாலும் பெரியவள் தான் பிடிக்கிக் கொண்டாள் என்ற பெயர் தானே வரும்? அதிலும் அவள் அன்னை சுகந்தியும் அங்கிருக்கும் போது. வேணியும் ஜனனியும் அதைத் தான் யோசித்தனர். ஆனால் ரோகிணிக்குப் புரியவில்லை, தன்னை விட அவளுக்கே செல்லம் தருவதாக நினைத்தவள் மனதிற்குள் குமைந்து கொண்டாள்.
இது எதுவும் கார்த்திக்குத் தெரியாது, அவன் ஆண்களுக்கான உடைப் பிரிவில் இருந்தான். அனைவரும் எடுத்து முடிய, கிளம்பினர். 
சுகந்தியையும் காயத்திரியையும் தனியாக அழைத்துக்கொண்டு அருகே இருக்கும் நகைக் கடைக்கு வந்திருந்தாள் ஜனனி. 
“ஏன் ஜனனி உனக்கே வீட்டுல குறைவாக தான் நகைப் போடுறாங்க, உன் சேமிப்புல உனக்கு எடுத்துக்க வேண்டிய தானே?” சுகந்தி கேட்க, “கார்த்திக்கு இப்போ எடுக்கணும்ன்னு என்ன அவசியம், அவனிடம் இல்லாத நகையா?” என்றாள் காயத்திரி. 
அவர்களுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து, “இங்க வாங்க, இந்த டிசைன் பாருங்க..” என அழைத்தாள். 
“கல்யாணத்துக்கு முன்னவே கார்த்திக் மேல பாசம் தான் போ..” என்ற கேலியோடு அவர்களும் இணைத்துக் கொண்டனர். 
சம்பளத்தில் மாதாமாதம் சிறுக சிறுக ஒதுக்கிச் சேர்த்த அவள் சேமிப்பு! அவனுக்கு என்று செய்யத் தான் தோன்றியது. ஏதோ ஒரு வகையில் அவனைப் பிடிக்கத் தொடங்கியிருந்தது அவளுக்கு. 
திருமணத்திற்கு இரு நாட்கள் இருக்க, அனைத்து உறவுகளும் வந்து சேர்ந்தனர். திவ்யாவும் அவள் கணவனோடு வந்திருந்தாள். சுகந்தி அவள் குடும்பத்தோடு கார்த்திக் வீட்டில் தங்கி விட, காயத்திரி, சுரேஷ், பிள்ளைகளோடு ஜனனியின் வீட்டில் தங்கினாள். 
இரவு ரோகிணி அறைக்குள் வர, ஜனனி அவள் உடைகளை பேக் செய்து கொண்டிருந்தாள். அருகே சென்றவள் அவள் கட்டில் விழுந்தபடி, புரண்டு, “ஏன் ஜனனி நீ போய்விட்டால் இந்த கட்டில் எனக்கு தானே?” என்றவள் சிரிப்போடு கேட்க, மூத்தவள் முறைத்தாள். 
“கட்டில் மட்டுமில்லை, இந்த பீரோ, இந்த ரூம், அப்புறம் அப்பாம்மா.. எல்லாம்.. எல்லாம்.. எனக்குத் தான்..” என்றவள் சீண்டினாள். சீறிய ஜனனியும் அவளை அடிக்க வர, ரோகிணி சிரிப்போடு எழுந்து ஓட, விரட்டிப் பிடித்தாள். 
அக்காளுக்கும் தங்கைக்குமான பொழுதுகள் இந்த அறையில் ஏராளமிருக்க, இந்த வீட்டோடு அவள் நினைவுகள் இன்னும் ஏராளமிருந்தது. 
நாளையிலிருந்து கார்த்திக்கின் வீட்டில், கார்த்திக்கின் மனைவியாக.. அவ்வளவு தானே? இனி எதுவும் தனக்கு இங்கு உரிமையில்லையா? தன் பெற்றோர்கள் தனக்கில்லையா..? ஒரு நொடியில் உள்ளம் வாடினாள். 
நிதர்சனம் புரிந்த பக்குவமான பெண்! இதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அறிவாள் ஆனாலும் சில உணர்வுகள் பெண்களுக்கானது! கனமாகத் தாக்கியது. 
வெகு சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது கார்த்திக், ஜனனியின் திருமணம். பெரும் பொருட்செலவில் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர். ஜனனியே இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு செய்தும் ஒரு போட்டோ சூட்டை ஏற்காது போனானே என்ற வருத்தம் அவளுக்கு இப்போதுமிருந்தது. 
திவ்யாவின் திருமணம் எளிமையாக நடந்தது. நாள் குறித்து, அழைப்பிதழ் அச்சிட்ட பின் வசந்த்தின் பாட்டி தவறி விட, முப்பது நாள் சடங்கு முடித்துவிட்ட, கையோடு எளிமையாக நடத்திக் கொண்டனர். குறித்த நேரத்திக்கு நெருங்கிய உறவுகளை அழைத்து, கோவிலில் நிகழ்த்தினர். கார்த்திக்கின் வீட்டில் வருத்தம் ஆனாலும் துக்கத்தில் இருப்பவர்களால் எவ்வாறு கொண்டாட இயலும்? எனப் புரிந்தவர்கள் அமைதியாகி விட்டனர். 
அதற்கும் சேர்ந்து தற்போது கார்த்திக்கின் திருமணத்தை வெகு சிறப்பாச் செய்தனர், உறவுகளாலும் சுற்றத்தாலும் நட்புகளாலும் நிறைந்தது மண்டபம். வந்தவர்கள் எல்லாம் வாழ்த்தி விருந்துண்டு செல்ல, பிள்ளைகளை மணக்கோலத்தில் பார்த்ததிலே உள்ளம் நிறைந்து போனார் முத்துக்குமார். 
மணமக்கள் கார்த்திக்கின் இல்லம் அழைத்து வரப்பட்டனர். ஜனனி பூஜை அறையில் குத்துவிளக்கேற்றி வணக்க, அதன் பின் அமர வைத்து பால் பழம் கொடுத்தாள் திவ்யா. நேற்றிலிருந்து ரோகிணியும் தர்ஷினியும் இவர்களோடு தான். அத்தனை பேரின் கேலி, கிண்டலையும் சின்னச் சிரிப்பில் கார்த்திக் ஏற்க, ஜனனி முகம் சிவந்து போனாள். 
அதன் பின் ஜனனியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆழம் சுற்றி வரவேற்று, ரோகிணியின் கையால் பால் பழம் கொடுக்கப்பட்டது. இரவு விருந்தும் சடங்கும் கார்த்திக்கின் வீட்டில் ஏற்பாடானது. 
அத்தனையும் முடிய, இரவு பின்புறம் தம்பதிகளை நிற்க வைத்து, “எத்தனை பேர் கண் பட்டதோ, அத்தனையும் பொசுங்கி விட வேண்டும்..” எனச் சுற்றிப் போட்டார் சிவகாமி. 
அதன் பின்னே அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஜனனிக்கு திக்கென்ற உணர்வு! கார்த்திக் புதியவன் கிடையாது தான், ஆனால் இதெல்லாம் புதிது தானே! உள்ளுக்குள் ஒரு பய அதிர்வு, மெல்லிய நடுக்கம். அதை வெளிபடுத்தி விடக் கூடாது எனத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
கார்த்திக்கும் தடுமாற்றமாக இருந்தான். இன்று காலையில் வரையிலும் பார்த்த முகம் தான், ஆனால் இப்போது புதிதாய் அழகாய் தெரிந்தாள், மாயமோகினியோ? யட்சினியோ? உருமாறி வந்துவிட்டாளோ என்ற ஐயம் கொள்ளும் அளவிற்கு. தனிமையும் மல்லிகையின் வாசமுமா? இளைமையும் செழுமையுமா? இல்லை மாங்கல்யமும் மனைவி என்ற உறவுமா? ஏதோ ஒன்று அவனைக் கட்டிப்போட்டது போலிருந்தது. 
அருகே வந்தமர்ந்தவன் மெல்ல அவள் கன்னம் தடவ, கூச்சத்தோடு நிமிர்ந்தவளிடம், “என்ன ஜனனி இன்னைக்கு இவ்வளவு அழகா தெரியுற? எத்தனை இன்ச் மேக்கப்..?” என்றான் கேலியாக. 
திருமணத்தின் போது ஒப்பணையிட்டார்கள், ஆனால் இப்போது எதுவும் வேண்டாமென்று தான் வந்திருந்தாள். ஆனாலும் இயற்கையிலே முகத்தில் ஒரு பொழிவும் மினுமினுப்பும் கூடியிருந்தது. அவள் அறியாதது, அவனுக்குப் புதிதானது. 
அவ்வளவு தான் பொங்கியவள், தலையணையைத் தூக்கிக்கொண்டு மொத்தினாள். 
சின்னச் சிரிப்போடு தடுத்தபடியே, “உண்மை தானே ஜனனி, இத்தனை நாளும் மங்கிய நிறத்தில் டீசர்ட், எண்ணெய் வழியும் தலை, அழுக்கு முகமாகத் தானே பார்த்திருக்கிறேன்..?” என்றான். 
அவன் தடுத்து கைகளைப் பிடித்துக் கொள்ளவும் பெருமூச்சோடு முறைத்தவள், “உனக்குக் காணக் கிடைத்தது அவ்வளவு தான்..” என உளறியவள் உதடுகளையும் சுளித்துக் கொண்டாள்.
அவனிடம் ஒரு கள்ளச்சிரிப்பு. உள்ளுக்குள் ஏதோ ஓர் உறுதி உடையும் உணர்வு. முகம் இலக அமர்ந்திருந்தவனை ஓரப் விழி முறைப்போடு வெடுக்கென கைகளை பிடிக்கிக் கொண்டாள். 
“ஏன் சாப்பாடு பிடிக்கலையா என்ன? நீ சரியா சாப்பிடலையே?” என்றவன் ஆரம்பிக்க, “இல்லையே மெனு எல்லாம் பிரமாதமா இருந்தது. எல்லாத்தையும் டேஸ்ட் பார்த்ததிலே என் வயிறு நிறைந்து விட்டதே..” என அவளும் பதிலளித்தாள். 
ஜனனி சகஜமாகப் பேசத் துவங்கியிருக்க, கல்யாணம், வந்திருந்த உறவுகள் நண்பர்கள் என அதைச் சுற்றியே அவர்கள் உரையாடலும் நீண்டு கொண்டிருந்தது. 
பேச்சின் இடையிலே கார்த்திக் படுத்திருக்க, ஜனனி வெகு நேரமாக அமர்ந்தே இருந்தாள். அதை கவனித்தவன், “படு ஜனனி, நீயும் ரொம்ப களைப்பாகத் தெரிகிறாய்..” என்றான்.
காத்திருந்தது போலே அருகில் படுத்தவள் விழி மூட, மறுநொடி உறங்கிப் போயிருந்தாள். சில நிமிடம் பார்த்தபடி அவனும் கண் மூடினான். 
அமர்ந்திருக்கும் போதே ஜனனிக்குக் கண்கள் சொக்க ஆரம்பித்திருந்தது. நேற்று மாலை வரவேற்பில் நிற்கத் துவங்கியது, அதிக நேரம் நின்றிருக்க, நேற்றைய இரவு இல்லாத உறக்கம், திருமண அலைச்சல் என அதிகமாக அசதியுற்றிருந்தாள். அவனுக்கும் அதே சோர்வு தான். 
நள்ளிரவிற்கு மேல் பாதி உறக்க நிலையில் விழித்த ஜனனி, “என்னாகிற்று கார்த்திக்? தூக்கவில்லையா?” என அவன்புறம் திரும்பினாள். 
தங்கத்தில் பதித்த வைரம் போலே அவள் மீது அவன் பார்வை பதிந்திருந்தது. 
அதே பார்வையில், “நீ என்னைத் தூங்க விட மாடிக்க ஜனனி..” என்றான் உள்ளார்ந்த மெல்லிய மயக்கக் குரலில்.  
என்னவோ என நினைத்து, அவன் நெஞ்சில் கையூன்றி எழுந்தவள் மணியைப் பார்க்க, இரவு இரண்டு! அவன் இதயமோ படபடவெனத் துடித்தது. 
ஏன்? கை கால் போடும் பழக்கமோ? உருண்டு புரண்டு படுக்கும் பழக்கமோ தனக்கில்லையே? எனச் சிந்தனையிலிருந்தாள். 
மெல்லிய வெளிச்சத்தில் யோசனையாய் அவள் முகம் காட்டும் பாவனை, சற்று களைத்த தலையும், பாதி உறக்கம் சுமந்த விழியும் அவளை அழகோவியமாகக் காட்டியது! 
அழகுக் காட்சியோ இல்லை காட்சிப் பிழையோ? ஏதோ ஒற்று அவனைத் தடுமாற வைக்க, அள்ளி அணைக்கு அவா பெருகியது. நேற்று வரையிலும் மாமன் மகளாக இருந்த வரைத் தோன்ற உணர்வு மனைவி என்றான பின் புதிதாய் தோன்றியது. அவளை நோக்கி ஈர்த்தது.
தன் நெஞ்சிலிருக்கும் அவள் பஞ்சுக் கரங்களைப் பற்றியவன் ஒவ்வொரு பிஞ்சு விரல்களாகப் பிரித்து இதழ் ஒற்றியபடியே, “அப்போது காணக் கிடைக்காத உன் அழகு இப்போது காணக் கிடைக்குமா ஜனனி..?” என்றான் மையலாக. 
ஜனனிக்கு குப்பென்று கன்னக் கதுப்புகளில் கனல் பரவும் உணர்வு! நொடியில் தேகம் தகிக்க, அவன் விரல்களில் இட்ட முத்தம் இதயம் வரை சிலிர்த்தது. 
ஜனனிக்கு மறுக்கும் உணரவில்லை, ஒரு வகையில் எதிர்பார்த்தது தான். ஆனால் அதைத் தெரிவிக்க வார்த்தை தான் தொண்டை தாண்டி வரவில்லை. மெல்லிய தலையசைப்போடு, “ம்ம்ம்..” என்ற அவள் முனங்கல் அவன் இதழ்களுக்குள் கரையும் நிலையாகிப் போனது. 
அவள் உடுக்கை இடை, அவன் உடும்புப் பிடிக்குள் சிறைப்பட்டுப் போக, இதழோடு இதழ் பதித்திருந்தான். மெல்லிய அதிர்வோடு அவள் இசைந்தாள், நெகிழ்ந்தாள். “ம்கூம்.. ம்ம்ம்ம்…” என்ற சிணுங்கல் எல்லாம் மெல்ல ஓசையற்றுப் போனது. 
மெல்லினமாய், இன்னிசையாய் அவர்களுக்குள் முதல் உறவு அழகாக அரும்பியது! இளமையின் தேடல் இருவருக்குள்ளும் இருந்தது, மோகங்கள் முடியவில்லை, நேரங்கள் போதவில்லை. இருவரும் இணைத்தே இன்பத்தை நுகர்ந்தனர், புது இன்பம் தன்னிலை மறந்த மயக்கமாய், அவர்களை அமிழ்ந்திருக்கச் செய்தது! 

Advertisement