Advertisement

அத்தியாயம் 04
வீட்டிற்கு வந்த பின் கார்த்திக்கிடம் திலகவதி விஷயத்தை தெரிவிக்க, எதிர்பாராது அதிர்ந்தான். அப்போது தான் சுகந்தி, காயத்திரியின் கிண்டலும் அதற்கு ஜனனி கொண்ட மௌனத்திற்குமான அர்த்தம் புரிந்தது. 
“ஏன்மா ஜனனிக்கு நல்ல வரன் வந்திருந்தால் செய்யட்டுமே, நீங்க ஏன் தடுக்குறீங்க..?” 
“அடேய்! நான் என்ன கெடுதலா செய்தேன்? நல்லதிற்கு தானே செய்தேன்..!”
சலிப்புற்றவன், “ப்ச்.. எனக்கு இப்போ என்னம்மா கல்யாணத்திற்கு அவசரம்?” என்றான். 
திருமண ஆசை உண்டு தான், ஆனால் இப்போதே திருமணம் என்பதற்குத் தான் அவன் வெகுவாக தயங்கினான்.  
“அதெல்லாம் கல்யாண வயது தான்! இப்போதெல்லாம் பின் எப்போது செய்வாய்?”  என்றவர் கேட்க, “அம்மா…” என குரல் உயர்த்தினான்.  
“இங்கு பார்டா, எனக்கு என் தம்பி வீட்டினரோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை மட்டும் தான். இப்போது உனக்குக் கல்யாணம் வேண்டாம், ஜனனி பிடிக்கவில்லை என்றால் சொல், இரண்டு வருடம் பின் ரோகிணியோடு திருமணம் பேசுகிறேன்” என்றார் அழுத்தமான குரலில் முடிவாக. 
“அம்மா என்ன பேசுகிறீர்கள், ரோகிணி சிறு பிள்ளை..” என்றான் அதட்டலாக. 
“ஜனனி பொறுப்பான பிள்ளை..” என்று தான் பதில் வந்தது. 
கார்த்திக் ஒரு நொடி நின்று யோசித்தான். 
“நீயே ஜனனியை அறிவாயே! எத்தனை பக்குவமான பிள்ளை, எல்லோரிடத்திலும் அன்பானவள்..” 
திலகவதி வாசித்துக் கொண்டிருந்த பாராட்டுரைகள் எல்லாம் அவன் செவி சேரவில்லை. அன்னை கொடுத்த இரு தேர்வான ரோகிணியா ஜனனியா என்பதைத் தான் மனதில் அளந்து பார்த்துக் கொண்டிருந்தான். 
ரோகிணியோடு அவன் மனம் ஒட்டவில்லை, இப்போதும் அவன் பார்வையில் அவள் சிறு பெண் தான்! அதிகம் நேரம் தேவையில்லை, ஒரு நொடி தான்! அவன் பாதி ஜனனி என்றாகிப்போனாள். 
அவன் சம்மதம் சொல்லிப்போக, முகம் மலர்ந்த திலகவதிக்கு அளவில்லா ஆனந்தம்! 
அத்தனை நேரமும் அங்கு அமர்ந்திருந்த சிவநாதன் அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தார். அவர்களாகப் பேசிக்கொள்வதும் முடிவெடுப்பதுமாக இருப்பதில் வருத்தமிருந்த போதும், ஜனனி மருமகளாக வருகிறாள் என நினைக்க, உள்ளம் நிறைந்தது! 
திலகவதியால் மூன்று வீட்டிற்கும் செய்தி பகிரப்பட, அனைவருக்கும் மகிழ்ச்சியே! தங்கள் வீட்டில் ஒரு திருமணம், கொண்டாட்டம் என்று வர, பிள்ளைகளுக்குத் தான் ஏக குஷி! 
அன்று மாலையே சிவநாதனோடு தம்பி வீட்டிற்குச் சென்ற திலகவதி திருமணத்திற்குச் சம்மதம் உரைத்தார். 
அதில் மகிழ்வுற்ற முத்துக்குமார், மெல்லிய குரலில் தயக்கமாக, “அக்கா உனக்கே என் வீட்டின் நிலைமை தெரியும். நான் தொழிலில் நஷ்டமடைந்து பட்ட கடனிலிருந்து இப்போது தான் சற்றே தேறி வருகிறேன். என் மகளுக்கென சேமிப்பு எதையும் நான் வைக்கவில்லை. கார்த்திக் அரசு வேலையில் இருப்பவன், உங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் தானே? இப்போது கடன் பெற்றுச் செய்தாலும் ரோகிணிக்கும் அவ்வளவு செய்ய வேண்டிய நிலை வரும். பின் எங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் என்றல்ல யார் பெண் கேட்டு வந்திருந்தாலும் இதைத் தான் சொல்லியிருப்பேன், எங்கள் கைக்குத் தகுந்த அளவிற்குத் தான் எங்களால் செய்ய இயலும்..” என்றார். 
அவர் உரைக்கும் போதே இடையிட்ட சிவநாதன், “அடே! ஏன் மாப்பிள்ளை, என் மருமகளுக்கு நான் செய்து கொள்ள மாட்டேனா? நீ செய்ய வேண்டிய அவசியமென்ன? இது பற்றியெல்லாம் நீ எதுவும் பேச வேண்டாம்” என்றார் முடிவாக. 
திலகவதி எதுவும் சொல்லவில்லை எனினும் நிலைமை நன்கு அறிந்தவர். இப்போது செய்யவில்லை எனினும் பின்னர் இந்த வீடு ஜனனிக்கு வரும் தானே என்பது அவர் எதிர்பார்ப்பு!  
அடுத்ததாய் திருமணம் பற்றி பேச்சுகளை ஆரம்பிக்க, பெரியக்கா என்ற முறையில் சிவகாமியையும் அழைத்தனர்.  
இப்போது பேரப்பிள்ளைகளுக்குத் தேர்வுகள் ஆரம்பிக்கும் நேரம், பிள்ளைகளும் மருமக்களுமே வேலைப்பளுவில் இருக்கின்றனர். ஆகையால் நிச்சியகார்த்தம் தனியாக வைக்காது நேரடியாகத் திருமணத்திற்கு நாள் பார்க்கச் சொல்லிவிட்டார். 
மறுநாளே முத்துக்குமார் குடும்ப ஜோதிடரை அழைத்து திருமணத்திற்கு நாள் குறித்து வாங்கிக் கொண்டார். ஒரு மாதத்தில் திருமணநாள் குறிக்கப்பட, அனைவருக்கும் தேதி சொல்லப்பட்டது. முதல் நாள் மாலை நிச்சியகார்த்தமும் வரவேற்பும் மறுநாள் காலை காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணமும் என முடிவு செய்தனர். 
உடனடியாக திருமண வேலைகளும் துவங்கப்பட, சிவநாதனின் பாடு தான் திண்டாட்டம் என்றாகிப் போனது. திருமணப்பொறுப்பை கார்த்திக் வீட்டில் ஏற்றுக் கொள்ள, மூச்சு விடுவதற்குக் கூட சிறிதும் அவரை அனுமதிக்காது முடுக்கிக் கொண்டிருந்தார் திலகவதி. 
முத்துக்குமாருக்கு வேலைகளை எடுத்துச் செய்ய இயலாது போக, வேணிக்கு அவர் வீட்டையும் தொழிலையும் தாண்டி எதையும் செய்யும் நேரமில்லை. அவர்கள் அழைக்காமலே சிவகாமியின் மகன் சுரேஷ் வந்து எடுத்துச் செய்தான். அதில் இருவரும் மனம் நிறைந்து போனர். ஜனனி, ரோகிணிக்குக் கூட உடன் பிறந்த அண்ணன் என்ற ஒருவன் இல்லாமல் போனானே என்ற ஏக்கம் தீர்த்தது. 
வேணியின் சேமிப்பில் அவர்கள் பக்க திருமண வேலைகள் துவங்கியது. பெரிய வீட்டிற்கு புது வர்ணம் பூசப்பட்டுப் பொலிவு கூடியிருந்தது. உறவுகள், நண்பர்கள் வட்டம் பட்டியலிட்டு வாங்கிக் கொண்டு அழைப்பிதழ் கொடுக்கும் வேலையை துவங்கியிருந்தான் சுரேஷ். 
கல்யாண வீடாயினும் கலகலப்பு குறைவது போல் கார்த்திக்குத் தோன்ற, என்னென்ன என்று யோசித்தான். திருமண வேலைகள் ஆரம்பித்த நாளிலிருந்து கார்த்திக்கின் வீட்டுப் பக்கம் பெரும்பாலும் ஜனனி வருவதில்லை. கார்த்திக் இதை நன்கு உணர்ந்திருந்தான். ஒருவேளை தன் அன்னையைப் போல் அவள் வீட்டிலும் யாரேனும் அவளை வற்புறுத்தியிருப்பரோ என்ற சந்தேகம் தோன்றியது. ஆனாலும் அவனுக்கு முன்பே ஜனனி சம்மதம் சொல்லி விட்டதாக திலகவதி சொல்லியதும் நினைவில் வர, அப்படியே விட்டுவிட்டான். 
மாலை நேரம் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவன் பேருந்து நிறுத்தத்தில் வாடிய வடிவமாக ஜனனி நிற்பதைக் கண்டு கொண்டான். 
அருகில் சென்றவன், “ஹேய் ஜனனி! ஏன் இங்க நிக்கிற? உன் வண்டி என்னாச்சு?” என்றான் வந்ததும் விசாரணையாக. 
“காலையிலே சுரேஷ் மாமா வாங்கிட்டுப் போயிட்டார், ஏதோ முக்கிய வேலையாம் ஆனால் அவர் வண்டி பஞ்சர் போல..”
முறைத்தவன், “அதுக்கு இப்படி நிற்கணும்னு வேண்டுதலா? காலையிலே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல? அல்லது போன் செய்தாவது அழைத்திருக்கலாம்ல..” எனக் கடிந்தான். அவன் குரல் உயர்ந்ததில் சுற்றியிருப்போர் ஒரு நொடி அவர்களைப் பார்க்க, அவளுக்கு என்னவோ போல் இருந்தது. 
ஜனனிக்கு எப்போதும் யாரையுமே எதிர்பார்த்து நின்று பழக்கமில்லை, ஆகையால் அவனை அழைக்கும் யோசனை கூட வரவில்லை. 
ஏற்கனவே வயிற்றைக் கிள்ளும் பசியையும் முகத்தில் அறையும் வெயிலையும் தாங்கிக் கொண்டு வெகு நேரமாக பேருந்திருக்குக் காத்திருந்தாள். இதில் இவன் வேறு காய, அவள் களைத்த முகம் மேலும் வாடிப் போனது.  
“சரி வா, வண்டியில் ஏறு..” என்றவன் அழைக்க, மௌனமாக வந்து ஏறிக்கொண்டாள். கண்ணாடியில் ஒரு முறை அவள் முகம் பார்த்தவன், நேராகச் சென்று சிறு உணவகத்தில் வண்டியை நிறுத்தினான். 
உள்ளே அழைத்துச் சென்றவன் ஒரு இருக்கையில் அமர்த்திவிட்டு, சூடான தேநீரும் சிற்றுண்டியும் வாங்கி வந்தான். அவள் முன் வைக்க, மறுப்பேதுமின்றி உண்ண, அவனும் தேநீரை உறிஞ்சினான். 
வயிறு பசியாறியதில் மனமும் குளிர, அவன் திட்டியபோதும் அதிலிருக்கும் அக்கறை அப்போது தான் உரைத்தது. 
பானிபூரியை கூட தெருவில் நின்று உண்ணவிடாது பார்சல் வாங்கிவருபவன் தானே இவன்! என மனதில் நினைத்தவனின் இதழோரம் தானாய் சிறு சிரிப்பு வந்தது. 
“என்ன சிரிப்பு..?” என்றவன் அதட்ட, கண்டு கொண்ட போதும் கவலை கொள்ளாது, “தேங்க்ஸ்..” என்றாள் மெல்லிய குரலில். 
அதில் அடங்கியவன், “கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு வாரம் தானே இருக்கு? இன்னும் ஏன் வேலைக்குப் போறே?” என்றான். 
அவன் தங்கை திவ்யா எல்லாம் பெயருக்கு ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடம் வீட்டிலிருந்துவிட்டு, பின் திருமணம் செய்து சென்றுவிட்டாள். 
ஜனனியோ குடும்பத்திற்கு என்று வேலைக்குச் செல்லத் துவங்கிக் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகக் கடுமையாக உழைக்கிறாள். இத்தனை நாட்கள் உழைத்தது போதாதா இன்னும் ஏன் செல்ல வேண்டும்? என்ற ஆதங்கம் அவனிற்கு! 
“ரிசைன் செய்துட்டேன், இன்னும் இரண்டு நாளோட வேலை முடியுது..” என்றவள் பின் மெல்லத் தயங்கி, “ஏன் நான் கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்குப் போகக் கூடாதா கார்த்திக்?” என்றாள். 
பொறுமையாக அவள் பதில் சொல்லியது ஒரு திகைப்பு! அதை விடவும் அவள் கேட்டு நிற்கும் ரகமில்லையே என ஆராய்ச்சியாய் பார்த்தான். 
அவன் எண்ணம் அறியும் ஆவல் அவளுக்கு! தற்போது வங்கித் தேர்வில் தேர்வாகி, நேர்முகத் தேர்வையும் முடித்திருந்தாள், பயிற்சி அழைப்பிற்காக காத்திருக்கிறாள். அந்த தைரியத்தில் தான் பார்க்கும் வேலையையும் விட்டுவிட்டாள், இடையில் திருமணம் வேறு! 
சிறிய நிதி நிறுவனம் ஒன்றில் குறைந்த சம்பளத்தில் சாதாரண வேலையில் சேர்ந்தவள் தற்போது துணை கிளை மேலாளர் பதவி வரை உயர்ந்திருந்தாள். அவளிடம் ஆர்வமும் வேகமும் இருந்தது. வேலையைக் கற்றுக்கொள்ளும் போதே மேலும் மேலும் அவள் திறமையை வளர்த்திருந்தாள். 
அனைத்தையும் அறிந்தவன், “அது உன் விருப்பம்..” என்றான். 
எங்கே அதற்கும் அவனிடம் போராட வேண்டியிருக்குமோ என நினைத்தவளுக்கு அவன் பதிலில் ஒரு ஆசுவாசம் பிறக்க, நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். 
அதற்குள் பணம் செலுத்திவிட்டு, கையில் ஒரு சிற்றுண்டி பார்சலோடு வந்தவன், “கிளம்பலாமா..?” என்க, தன் கைப்பையை மாட்டிக்கொண்டு எழுந்தாள். 
அவள் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்த இறங்கிக் கொண்டவளிடம் பார்சலை நீட்டியவன், “ரோகிணிகிட்ட கொடு..” என்றான். 
வாங்கிக் கொண்டவள், “உள்ளே வா.. காபி சாப்பிட்டுப் போகலாம்..” என அழைக்க, “இப்போ தானே சாப்பிட்டோம்..” என்றதும் அமைதியானாள். 
அவன் விடைபெற்றுக் கிளம்ப, மேலிருந்து அவர்களைப் பார்த்துவிட்ட ரோகிணி கீழே வந்தாள். 
“என்ன ஜனனி கல்யாணத்துக்கு முன்னே ஊர்வலம் போறீங்க போலே..?” என கிண்டல் செய்தவள் கையிலிருந்த பையையும் வாங்கிக் கொண்டாள். 
தங்கையின் முதுகில் ஒரு அடி வைத்தவள் உள்ளே சென்றாள். பிரித்துப் பார்த்த ரோகிணி தனக்குப் பிடித்த இனிப்பு பதார்த்தம் இருப்பதைக் கண்டு கொண்டு, “இதுக்குத் தான் கார்த்திக்கை பிடிக்குது..” எனத் துள்ளலோடு உள்ளே சென்றாள்.  
திருமண வேலைகள் அனைத்தும் முடித்திருக்க, திருமண நாள் நெருங்கியிருந்தது. ஜனனியும் ரோகிணியும் துணிக்கடைகள், அழகுநிலையம் எனச் சுற்றி ஓய்ந்து விட்டனர். சுரேஷ் பதிவு செய்திருந்த ஸ்டூடியோவிலிருந்து அழைத்திருந்தனர். ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் வைத்து ஆல்பம் செய்து தருவதாகக் கேட்டனர். 
அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு விருப்பம் தான், அவள் மட்டுமெனில் யாரையும் கேட்கத் தேவையில்லை, அவளே செய்து கொள்வாள். இதில் கார்த்திக்கும் வேண்டுமே..!
“என்ன ஜனனி நீ? எவ்வளவு ஒரு ஹேப்பி மொமென்ட்! இதெல்லாம் திரும்பக் கிடைக்குமா சொல்லு? நீ தயாராக நான் உதவி செய்கிறேன். கார்த்திக்கிடம் கேள்..” எனச் சந்தோஷத்தில் ரோகிணி வேறு அவளை முடுக்க, அவனுக்கு அழைத்தாள். 
“ஸ்டூடியோல இருந்து பேசுனாங்க கார்த்திக், அவுட் டோர், ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் கூட வைப்பார்களாம். நம்ம இரண்டு பேருக்குமான ஆல்பம் ஒன்னு ரெடி பண்ணித் தருவார்களாம்..” 
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். ஏன் ஜனனி உனக்குத் தெரியாதா? நம்ம வீட்டுகள்ல இப்படி எல்லாம் செய்ற பழக்கமில்லைன்னு, ஏன் திவ்யாவிற்கு எல்லாம் இப்படியா எடுத்தோம்? நீ பார்த்த தானே? கல்யாண நாள் நெருங்கிடுச்சு இனி எல்லாம் அவுட் டோர், லாங் ட்ரிப் எல்லாம் போக முடியாதுன்னு தெரியாதா ஜனனி? நீயே பதில் சொல்லிருக்க வேண்டிய தானே? எல்லாத்துக்கும் எங்கிட்ட கேட்டு நிற்பியா?” 
அவன் குற்றம் சொல்லினானா? கடிந்து கொண்டானா? அறிவுரை அள்ளித் தெளித்தானா என்ற பேதம் ஆராயாது அவன் பதிலில் ஒருவித ஏமாற்றத்திலிருந்தாள் ஜனனி. 
“இது வரைக்கும் செய்ததில்லை தான், இனி செய்யலாமே? ஏன் இப்போ நாம செய்றதுல என்ன தவறு? கார்த்திக் பழைய பஞ்சாமிர்ந்தமா இருக்கான் ஜனனி” 
ரோகிணிக்கு இருந்த ஏமாற்றத்தில் கார்த்திக்கை விமர்சித்துவிட்டுச் சென்றாள். 
நவீன தலைமுறையினரோடு ஒத்துப் போகாவிடினும் தன் விருப்பத்திற்கு என ஒரு முறை யோசித்திருக்கக் கூடாதா? ஆற்றாமையில் விம்மிய ஜனனியின் மனம் ஆறவில்லை! அவன் மறுப்பான் என ஒரு சதவிகிதம் கூட அவள் நினைக்கவில்லை, பெரும் ஏமாற்றம் அவளிற்கு. 
முதல் கோணல் முற்றிலும் கோணலாகும் முன் சுதாரித்துக் கொள்ள வேண்டுமே! 
ஜனனி ஒரு தவறைச் செய்திருந்தாள். ஸ்டூடியோவில் கேட்டனர் என சொல்லிருந்தாளே தவிர, தன் விருப்பம் என்பதை நேரடியாகச் சொல்லவில்லை. கார்த்திக்கும் அது புரியவில்லை. அறிந்திருந்தால் சற்று யோசித்திருப்பான்! 

Advertisement