Advertisement

நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா
அத்தியாயம் 03
வேலைப்பளுவில் சற்று அசதியுற்று வந்த போதும் அவள் முகத்திலிருந்த புன்னகைக்குச் சிறிதும் குறைவில்லை. ஜனனியின் வருகையைக் கண்டதும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட ரோகிணி, சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள். 
குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவள் நீண்ட நீண்ட மூச்சுகளை எடுத்து தன் மனதை சரிப்படுத்திக் கொள்ள முயன்றாள். கார்த்திக்கிற்குத் தான் ஜனனி எனச் சிறுவயதிலிருந்து இப்போது வரை யாரும் பேசி வைத்திருக்கவில்லை. 
கார்த்திக் ஜனனியை விட இரண்டு வயது பெரியவன், தன்னை விட நான்கு வயது பெரியவன். அவனுக்குக் கல்யாண வயது வருகையில், கல்யாணம் பேசுகையில் தன் வயது பொருந்திப்போகும். தன்னை தான் தேர்வு செய்வர் என அசட்டுத்தனமான கற்பனையிலிருந்தாள். 
கார்த்திக்கின் மீது நேசம் என்றில்லை, ஆனால் அவனை பிடிக்கும். எது கேட்டாலும் வாங்கித் தந்திடுவான், ரோகிணிக்கு மட்டுமல்ல பெரியத்தையின் பேரப்பிள்ளைகளுக்கும் தான்! உடை, அழகு சாதனப்பொருட்கள், படிப்பு சம்பந்தமான தேவைகள் என பெரும்பாலும் அவள் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு பணம் செலுத்துபவன் அவன்! அதில் வந்தது தான் இப்படியொரு சிறுபிள்ளைத் தனமான ஆசை! 
அதே நேரம் வெளியில் முத்துக்குமாரும் மகளிடம் விஷயத்தைச் சொல்லி, யோசித்து பதில் சொல்லுமாறு கேட்டிருந்தார். சரியெனத் தலையாட்டிவிட்டு உள்ளே வந்த ஜனனி, “என்னடி ரூம் உள்ளே நடை பழகுறீயா?” என்றபடி தனக்கான மாற்றுடையை எடுத்தாள். 
சட்டென முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்ட ரோகிணி, “இல்லை இங்கிருந்தே அம்மா சமையல் என்னன்னு மோப்பம் பிடிக்கிறேன்” என்றாள் வாசம் இழுத்தபடி கிண்டலாக. 
சிறுநகையோடு தாண்டிச் சென்ற ஜனனி, குளித்து உடை மாற்றி வர, குடும்பமாக அமர்ந்து இரவு உணவினை உண்டனர். அதன் பின் இருவரும் அறைக்குள் வந்துவிட, ரோகிணி தனக்கு சில குறிப்புகள் எடுக்க வேண்டியுள்ளது எனப் புத்தகங்களோடு அமர்ந்து கொண்டாள். 
இருவருக்கும் ஒரே அறை, தனித்தனி ஒற்றை கட்டில்கள். பரம்பரை வீடு, சற்று பெரிய வீடு தான். ஆனாலும் பழையது, தேவைக்குச் சிறிது நவீனப்படுத்திருயிந்தனர். 
யோசனையோடு நடந்த ஜனனி, தன் படுக்கையில் படுத்துக் கொண்டும் யோசித்தாள். மின்விளக்கை அணைத்துவிட்டு ரோகிணி அவள் படுக்கையில் விழ, “ரோகி.. நம்ம கார்த்திக் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என மெல்லிய குரலில் வினவினாள் ஜனனி. 
இனி நான் நினைக்க என்ன உள்ளது? அவள் கேள்வியிலே அக்காளின் இணையாக அவனை ஏற்க, அந்த சில மணி நேரங்களின் தன் மனதை வலுப்படுத்தியிருந்தாள். 
“அவனுக்கென்ன? அமூல் பேபி, மை மினி பேன்ங், அப்புறம் ரொம்ப ரொம்ப நல்ல பையன்! இத்தனை வருஷத்துல ஒரு பொண்ணை கூட லவ் பண்ணாத முரட்டு சிங்கிள், பாதிச் சாமியார், பாம்பைக் கண்டால் மட்டும் பயந்து ஓடும் வீராதி வீரன்! புன்னகையரசன், புலிகேசி மன்னன்..” என்றவள் பட்டியலிட்டுக் கொண்டே போக, சிறுவயதிலிருந்து பார்த்த, அந்த அந்த காட்சிகள் அப்படியே ஜனனியின் மனதில் படமாக ஓடியது. 
இறுதியில், “அவ்வளவு தான், இனி நான் புகழ்றதுக்கு எதுவுமில்லை. நீ தான் யோசித்து முடிவெடுக்கணும் ஜனனி” என்றவள் திரும்பிப் படுத்து விழிகளையும் மூடிக்கொண்டாள். 
ஜனனி மீண்டும் பெரும் யோசனைக்குள் ஆழ்ந்தாள்! 
அதே நேரம் வீட்டிற்கு வந்த திலகவதி, இருவரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளாது இரவு உணவினை செய்தார். 
ஜனனி பொறுப்பான பெண்! எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தை தாங்கி நடத்தும் தைரியம் பெற்றவள்! யாரோ பெண் கேட்கிறார்கள் எனவும் சட்டென விட்டுவிட மனமில்லை. அதே போல் தனக்கு வெளியே இருந்து வரும் பெண் எப்படி இருப்பாளோ? அதுவே ஜனனி மருமகளாக வந்தால் எப்போதும் தன் அதிகாரம் குறையாமல் இருக்கலாம். அதுமட்டுமின்றி தம்பியுடனான உறவும் நீடிக்கும்! இவ்வாறான கணக்கீடுகள் தான் அவர் மனதில். 
அவர்கள் வீட்டிலிருந்து முடிவு சொல்லவும் மகனிடம் சொல்லிக்கொள்ளலாம் என இருந்தார். ஒருவேளை அவர்கள் மறுத்தால் விஷயத்தை அப்படியே விட்டுவிடலாம், தேவையில்லாது மகனைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை என்ற எண்ணம்! 
இரவு உணவு முடிய, குடும்பமாக மகள் திவ்யாவிடம் பேசினார். அதன் பின் இருவரும் அறைக்குள் சென்றுவிட, திலகவதி அமர்ந்திருந்தார். 
திலகவதியின் கணவர் சிவநாதன் முன்னாள் கவுன்சிலர். நேர்மையான அரசியல்வாதி ஆனால் பதவிக்கு வந்த பின் சுற்றியிருப்போர் அவரை அழுத்த, சிலர் அவர் பெயரைத் தவறாகப் பயன்படுத்த, அவரால் தாங்க முடியவில்லை. இங்கு நேர்மையாக இருக்க விடமாட்டார்கள் என்பது புரிய, எந்த சூழலிலும் தன் நேர்மையும் மாண்பையும் கை விட விரும்பாதவர் அரசியல் வாழ்வைக் கைவிட்டார். 
பக்கத்து வீதியில் சில வீடுகள், கடை வீதியில் சில கடைகள் இருக்க, மாதாமாதம் அதன் வாடகையே வீட்டுச் செலவு போக, ஏக மிச்சம்! மூத்தவன் கார்த்திக், தமிழ்நாடு மண்டல மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிகிறான். கடந்த ஆண்டு தான் அவனுக்கு வேலை கிடைக்க, அப்போதே இளைய மகள் திவ்யாவின் திருமணத்தை  நடத்தியிருந்தனர். 
இரவு பத்துமணிக்கு மேலே அக்கா சிவகாமிக்கு அலைபேசியில் அழைத்தார். திலகவதி, முத்துக்குமார் இருவருக்கும் மூத்தவர் சிவகாமி. ஸ்ரீரங்கத்தில் உணவகம் ஒன்று நடத்திக் கொண்டிருக்க, அவர்கள் குடியிருப்பும் அங்கு தான். மற்றும் சிவகாமியின் கணவர் பழனிவேலுவும் சிவநாதனும் உடன் பிறப்புகள்! 
முன்பே இது குறித்த பேச்சுகள் இருவருக்கும் இருந்தது. இப்போது நடந்ததை தெரிவிக்க, “சரியாகத் தான் செய்திருக்கிறாய் திலகா, இங்கு என் நிலைமையைப் பார்! வெளியிலிருந்து வந்தவள் என் மருமகள், அதனால் என்னோடு ஒத்துப்போவதே இல்லை, மகனும் கண்டுகொள்வதில்லை. மகளுக்கு நேரமே கிடையாது” என தன் பாட்டை புலம்பினார். 
பின் சுதாரித்து, “நீயேனும் நம் தம்பி மகளையே மருமகளாக்கிக் கொள், இருவரும் நம் பிள்ளைகள் தானே, அவர்கள் இணைத்தால் நமக்குச் சந்தோஷமும் நம் பிறந்த வீட்டுடனான உறவும் நீடிக்கும்” என்றார் உள்ளம் மகிழ. 
“அதற்காகப் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தவில்லை அக்கா, அவர்கள் முடிவு தான்” 
“சரி தான், வளர்ந்த, பக்குவமான பிள்ளைகள் அவர்கள் புரிந்து கொள்வார்கள்! நாளைக்கு வருவோம் தானே, ஜனனியிடம் எடுத்துச் சொல்கிறேன்” என்றார்.
“சரிக்கா..” என்றவர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டார். 
இரவு அறையில். “உனக்கு இதில் விருப்பம் தானே வேணி..?” என மனைவியிடம் விசாரித்தார் முத்துக்குமார். அவர் வீட்டுப் பக்கமிருந்து வந்த வரனைத் தவிர்த்து, தன் அக்கா வீட்டில் சம்பந்தம் பேசுகிறோமே என்றிருந்தது. 
“ஜனனிக்கு விருப்பம்னா எனக்குச் சம்மதம் தாங்க, கார்த்திக் மாதிரி ஒரு நல்ல பையன் அமையும் போது, நான் ஏன் தடுக்கப் போறேன்.?.” என்றார். 
உறவுகளோடு எவ்வித மனக் கசுப்புமில்லை. அனைத்தையும் விட கார்த்திக்கை நன்கு அறிவார், அவன் மீது தான் பெரும் நம்பிக்கை! 
மாதத்திற்கு இருமுறையாவது, வார இறுதிநாளில் மொத்த குடும்பத்தோடு திருச்சிக்கு வந்துவிடுவார் சிவகாமி. பெரும்பாலும் முத்துக்குமார் வீட்டில் தான், தங்குவதென்றால் மட்டும் திலகாவின் வீட்டிற்குச் செல்வது. அந்த வார ஞாயிறு அன்றும் வந்திருந்தனர், வேணி ஒரு போதும் முகம் சுணங்குதில்லை, நன்றாகக் கவனித்துக் கொள்வார். 
விடுமுறை நாள் ஆகையால் தலையில் எண்ணெய் வைத்து மொத்த முடியையும் தூக்கிக் கட்டி, உச்சியில் கிளிப் மாட்டியிருந்தாள் ஜனனி. வாசலில் வண்டியை நிறுத்தித் துடைத்துக் கொண்டிருந்தாள். 
சிவகாமியின் மகள் வழிப் பேரன் நிரஞ்சனும் கார்த்திக்கும் கையில் சில பைகளோடு உள்ளே வர, வண்டியின் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டிருந்தவள் அதில் தான் அவனைக் கண்டாள். 
அப்போது தான் நேற்றைய இரவு தன் கனவில் கூட வருகை தந்தான் என்பதும் நினைவில் வந்தது. அவனைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் விளைவு போலே என நினைத்தாள். 
முதல் முறையாக அவனைப் புதிதாகப் பார்த்தவள் இன்னும் அதில் கூர்மையாய் பார்வையை பதித்தாள். சிவந்த தேகம், கழுத்தில் ஒற்றை மெல்லிய சங்கிலி, கிள்ளிக் கொஞ்சத் தோன்றும் கொழுக்மொழுக் கன்னம், அதிலும் அரை இன்ச் தாடி எனக் கொஞ்சம் மலையாளி சாயலில் இருந்தான். அழகு தான்! உள்ளாக மூச்சிழுத்துக்கொண்டால் மட்டும் காணாமல் போகும் குட்டித் தொந்தி, தான் வாகாக அணைத்துப்படுக்கத் தோதான உடல் அமைப்பு தான்! 
ஐயோ! என்னடி இது ஜொள்ளு! மனசாட்சி வேறு கேலி செய்ய, அதிலும் அவன் தன்னருகே வருவதையும் கண்ணாடியில் கண்டுகொண்டவள், குப்பென்று முகம் சிவந்து போனாள். அவள் தங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை யூகிக்காது பூனை நடையில் அருகில் வந்தான் கார்த்திக்.  
வந்தவன் சட்டென அவள் தலையிலிருந்த கிளிப்பைக் கழட்டி விட, மொத்த குழலும் அவிழ்ந்து குனிந்திருந்தவளின் முகத்தில் விழுந்தது. அவள் நிமிர, அதற்குள் தன் அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்தவன், அதை நிரஞ்சனிடம் காட்டி, “பார்த்துக்கோடா மார்டன் சந்திரமுகி” என்றான் கேலியாக. 
சிரித்தபடியே, “ஏன் கார்த்திக் உன் உசுருக்கு விலை பேசுற?” என்ற நிரஞ்சன் கவனமாக எட்டி நின்று கொள்ள, ஜனனி பெரிதாக மூச்சு வாங்கினாள். அதை எதிர்பார்த்தவள் தடுக்கவில்லை. அவன் செயல் தன் சிவந்த முகத்தை மறைத்ததில் மிகுந்த ஆசுவாசம்!
“அடேய் காளி, பத்திரகாளியா மாறுது! வா ஓடிடுவோம்..” எனக் கார்த்திக்கை இழுத்துக் கொண்டு ஓடினான். 
இத்தனை நேரத்திற்கு அவள் அமைதியாக, அவர்களை விட்டதே வியப்பு தான்! 
“என்னடா இன்னைக்கு மங்கம்மா மௌன விரதமா?” என கார்த்திக் கேட்க, “வா ரோகிட்ட கேட்டுக்கலாம்” என்றபடி உள்ளே சென்றனர். 
விடிந்ததுமே தந்தையிடம் சென்று சம்மதம் சொல்லியிருந்தாள் ஜனனி. அவனை தனக்குப் பிடிக்குமா என்ற ஆராய்ட்சி எல்லாமில்லை. இயலாத தந்தை, தங்கள் இருவரும் பெண்பிள்ளைகள்! ரோகிணிக்கு எங்கு வரன் அமைகிறதோ? எப்படி அமைகிறதோ? தான் உறவாக அருகிலிருந்தால் கடைசிக் காலங்களில் பெற்றோர்களை கவனித்துக் கொள்ள இயலும். கார்த்திக்கும் சரி, அவன் வீட்டினரும் சரி எதுவும் சொல்லப்போவதில்லை. பெற்றோர்களுக்காக யோசித்து சம்மதம் சொல்லிருந்தாள்! 
தன் இரண்டு அக்காக்களையும் பெரிய மாமா பழனிவேலையும் தன் அறைக்குள் அழைத்திருந்த முத்துக்குமார், தன் விருப்பத்தையும் மகள் சம்மதத்தையும் தெரிவித்தார். 
வரவேற்பறையில் அனைவரும் மெத்தை விரித்து அமர்ந்திருக்க, நிரஞ்சனின் தங்கை தர்ஷினி அப்போது வந்த புதுப்படம் ஒன்றைத் தொலைக்காட்சியில் ஒளிரவிட்டாள். ஜனனியும் அப்போது தான் குளித்து முடித்து வந்து அமர்ந்தாள். 
அவள் ஈரம் சொட்டும் குழலைக் கண்ட, சிவகாமியின் மகள் சுகந்தி, அமர வைத்து தலை துவட்டினாள். மருமகள் காயத்திரி, வேணியோடு சமையலறையிலிருந்தாள். 
சுகந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலைப்பார்க்க, கணவர் ராஜன் மாநகராட்சி அலுவலகத்தில் கணக்காளராக இருக்கிறான். அவர்கள் பிள்ளைகள் நிரஞ்சன் இரண்டாமாண்டு விஷ்யூவல் கமினிகேஷன் படிக்க, தர்ஷினியும் அப்போது தான் முதலாமாண்டு கல்லூரியில் சேர்ந்திருந்தாள். 
காயத்திரி தனியார்ப் பள்ளியில் ஆசிரியையாக இருக்க, கணவர் சுரேஷ் பெற்றோர்களோடு அவர்கள் உணவகத்தில் உதவிய இருந்தான். அவர்கள் பிள்ளைகள் கிஷோர் பத்தாம் வகுப்பும் அஜய் ஏழாம் வகுப்பும் பயில்கின்றனர். 
சமையலறையிலிருந்து வந்த காயத்திரி, “என்ன கவனிப்பெல்லாம் புதுசா இருக்கு..?” எனக் கேலியாகக் கேட்பது போல் கேட்க, “சும்மாவா பின்ன? எங்க வீட்டு மருமகளாகப் போறாள்ல..” என்றாள் சுகந்தி. 
“பாருடா..! அப்போ கவனிப்பெல்லாம் புதுசா வர மருமகளுக்கு மட்டும் தானோ..?” என்க, “ஆமாம், மருமகளா வர வரைக்கும் தான், வந்த பின்ன நீங்க தான் எங்களை கவனிக்கணும்” என்றாள்.  
என்ன தான் ஜனனியை வைத்து கேலி, கிண்டல் போல் பேசிக் கொண்டாலும் தன்னை மதிப்பதில்லை என்ற மனக்குறை காயத்திரிக்கும் தன் அன்னையோடு ஒத்துப்போவதில்லை என்ற மனக்குறை சுகந்திக்குமிருந்தது. 
படம் ஆரம்பிக்க, அனைவரும் அமைதியோடு வரிசையாக அமர, வாங்கி வந்திருந்த பெரிய பெரிய பாப்கார்ன், சிப்ஸ் பாக்கெட்களைப் பிரித்து வைத்தான் கார்த்திக். 
அதில் ஜனனியிடம் மட்டும், “இந்தா உனக்குப் பிடிக்குமே..” என வெஜ் பப்ஸ்ஸை நீட்ட, ஒரு பார்வை பார்த்தவள் மெல்லிய சிரிப்போடு வாங்கிக் கொண்டாள். 
“ஓஹோ..! ஜனனிக்கு பிடிக்குமாமம்..!”
“இந்த ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் ஜனனிக்கு மட்டும் தானா கார்த்திக்..?”
சுகந்தியும் காயத்திரியும் மாறி மாறி கிண்டல் செய்ய, குனிந்த தலை நிமிரவில்லை ஜனனி. 
ரோகிணியும் அவள் பங்கிற்கு, “இனி அப்படித் தான் கார்த்திக் கண்ணுக்கு ஜனனி மட்டும் தான் தெரிவாள்..” என்க, சரி தான் எனப் பெண்கள் அனைவரும் சிரித்தனர். 
தங்கையைக் கிள்ளிய ஜனனி, அடக்க, புதிதாக அவர்கள் பேசிக் கொள்வது புரியாது முழித்தான் கார்த்திக். கடந்த முறை ரோகிணிக்கும் தர்ஷினிக்கும் ஸ்பெஷலாக வாங்கித் தந்திருக்கிறானே! அவனுக்கு அவள் அனைவரையும் போலவே!
பின் தொலைக்காட்சியில் பார்வை பதிய, கவனமும் அதில் சென்றது. 
மதிய உணவு வேணி பரிமாற, உண்டு முடியவும் திவ்யாவுடன் அனைவரும் காணொளி அழைப்பில் பேச, நேரம் சுகமாகக் கழிந்தது. அதன் பின் இருளும் நேரம் அனைவரும் விடைப்பெற்றுக் கிளம்பினர். 

Advertisement