Advertisement

நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா
அத்தியாயம் 02
தன் பிரிதுயர் தாங்காது தன் கையணைப்பிற்குள் சிலிர்த்துக் கொண்டிருக்க, மேலும் இறுக அணைத்தவள் அதன் பிடரி முடிகளை அளந்து ஆறுதலாய் தடவிக் கொடுத்து கொண்டிருந்தாள் ஜனனி. 
“ம்ம், போதும் போதும் மிச்சத்தை ஈவினிங் வந்து கொஞ்சிக்கலாம்” எனக் கேட்ட, அன்னை வேணியின் குரலில் மெல்ல அதனிடமிருந்து பிரிந்தவள் இறுதியாய் அதன் நெற்றியில் இதழ் பதித்துவிட்டு விலகினாள். 
வேணி அவளின் மதிய உணவுப்பையை நீட்டியபடி இருக்க, நிமிர்ந்தவள் அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “உன்னை கொஞ்சலைன்னு பொறாமையா?” என அன்னையைச் சீண்டினாள். 
அவள் கைகளைப் பிரித்துவிட்டு, செல்லமாக முதுகில் ஒரு அடி வைத்தவர், “எத்தனை முறை சொல்வது வேலைக்குக் கிளம்பும் நேரத்தில் அதோட விளையாடி ட்ரெஸ் அழுக்காக்கிக்காதேன்னு,  நேரமாகுது பார் கிளம்புடி” என்றார்  அதட்டலாக. 
அவளோ முகத்தைச் சுருக்கிக் கொண்டு குனிந்துப் பார்க்க, அவள் காலருகே பாவமான முகத்தோடு பதில் பார்வை பார்த்தது அவளின் செல்ல பொமேரியன், ஜீனோ. மீண்டும் அவன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று அவள் ஹோண்டா டியோவை கிளப்ப, அவள் துப்பட்டாவைப் பிடிக்க முயன்று தவறவிட்டு அவளைப் பார்த்தது ஜீனோ. 
வண்டியை இயக்கியவள் வெளி வாசலின் இருப்புக் கதவருகே சென்றதும் நின்று திரும்பி, அன்னைக்கும் ஜீனோவிற்கும் கையசைத்து விட்டுச் சென்றாள். அவள் சென்ற பின்னும் கூட அதே பாதையை வெறித்திருந்தார் வேணி. அத்தனை உயிர்களிடத்திலும் பேதமின்றி அன்பு காட்டும் மகளை எண்ணி எப்போதும் போலே நெஞ்சம் பூரிக்க நின்றார். 
“அம்மாஆஆ… என் லன்ச் எங்கே..?” என வீட்டிற்குள்ளிருந்து கேட்ட இளையமகளின் குரலில் களைந்தவர் வேகவேகமாக உள்ளே சென்றார். 
டிஃபன் பாக்ஸை மூடி வைத்து அனைத்தையும் அவர் பைக்குள் அடுக்க, “சீக்கிரம்மா.. காலேஜ் பஸ் வந்திடும்” எனக்  கைப்பை, புத்தகங்கள் சகிதம் பரபரப்போடு சமையலறை நோக்கி ஓடி வந்தாள் ரோகிணி. 
அதே நேரம் வாசலுக்கு வெளியே வண்டியின் அழைப்பொலி கேட்க, “ஒன்பது மணிக்கு காலேஜ் போக வேண்டிய என்னை விட்டுட்டு பத்துமணிக்கு ஆபிஸ் போக வேண்டிய அவளை கிளப்பி விட்டுட்டு இருக்கே..” எனக் கடிந்து கொண்டபடி வாசல் நோக்கி அவள் ஓட, “என்னை ஏன்டிச் சொல்லுறே, நீ சீக்கிரம் விழிக்கணும்” என அவள் பின்னே ஓடி வந்து பையை கொடுத்தார். 
வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்து பின்னே அவளும் கையசைத்துச் சென்றாள். பள்ளி செல்லத் துவங்கிய நாளிலிருந்து பிள்ளைகளின் பழக்கம் அது, வேணியும் கண் மறையும் வரை நின்று வழியனுப்பிவிட்ட பின் தான் உள்ளே செல்வார். 
மூத்தவள் ஜனனி தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்க்க, இளையவள் ரோகிணி எம்.பி.எ இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தாள்.
அடுத்த ஐந்தே நிமிடத்தில் இரு தெரு தள்ளி இருக்கும் அந்த நீல நிற வண்ணம்  பூசிய வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு ஹாரனை அழுத்தினாள் ஜனனி. 
சுற்றுச்சுவருக்கு உட்புறம், நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சிவநாதன் எழுந்து பார்த்தார். 
“அடடேய்! உள்ள வாம்மா ஜனனி” என்றவர் வரவேற்க, “இருக்கட்டும் மாமா..” என்றவள் மீண்டும் விடாது ஹாரனை அழுத்த உள்ளிருந்தது ஓடி வந்தார் திலகவதி. 
“ஏன்டி மாமா தான் கூப்பிடுகிறாரே, உள்ள வந்தால் என்னவாம்?” என உரிமையோடு கோபித்தபடி அவள் கையில் காபி டம்ளரைக் கொடுத்தார் அத்தை திலகவதி. 
“ம்ம், நேரமாகிற்று.. ஈவினிங்..” என பாதி பதிலோடு அத்தையின் காபியையும் உறிஞ்சி உள்ளே தள்ளினாள். 
“இந்தா, மளிகை பொருட்கள் லிஸ்ட்ல இருக்கிற எல்லாமே சரியா இருக்கான்னு சரி பார்த்து வாங்கிட்டு வா. போன மாச பில்லுல அவன் தான் நமக்கு நூற்று இருபது ரூபாய் தரணும். அதைக் குறைத்துவிட்டுக் கொடு” என்ற திலகாவிற்கு தலையாட்டி விட்டு அவர் கையிலிருந்த பையையும் பட்டியலையும் வாங்கிக் கொண்டாள். 
வண்டியை இயக்கியவள், “தண்டச்சோத்துக்கு தடிமாடு மாதிரி ஒன்னை பெத்து வைத்துக்கொண்டு என்னையே வேலை செல்லுறீங்க..” எனச் சலிப்பு போலே கேலியுரைத்தவள், அவர் கையோங்கும் முன் சிட்டாய் பறந்திருந்தாள். 
“அடி வாங்குவடி கழுதை! என் பிள்ளை வேலைக்குப் போக ஆரம்பித்து ஒரு வருஷமாகிற்று” என்றவரின் குரல் அவள் செவி சேராது. 
திலகவதி அவள் தந்தை முத்துக்குமாரின் இளய அக்கா.
பிள்ளைகள் சென்ற பின் கணவர் முத்துக்குமாரைக் கவனித்து, உணவு பரிமாறி உண்டு முடிக்க, மணி பத்து. அதன் பின் கிளம்பி அதே வீதியின் கடைசியில் இருக்கும் ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு வந்தார் வேணி.
அவருக்கு முன்பே ஆறு பெண்கள் வந்து வேலையைத் துவங்கி இருக்க, அவர்களோடு இவரும் சேர்ந்து கொண்டார். சிறிய அளவிலான அரவை இயந்திரங்கள் இருக்க, மூலப்பொருள்களை வாங்கி, அப்பளம், மசாலா பொடிகள், இட்லி பொடிகள், காபி பொடிகள், மாவு வகைகள், அரைத்து பாக்கெட் செய்வது அவர்கள் தொழில். ஏஜெண்டுகள் வந்து மொத்தமாக வாங்கிச் செல்வர், இது போக, மாலை நேரங்களில் தோசை மாவு விற்பனை என சில்லறை விற்பனைகளும் உண்டு. 
அத்தனையும் வேணியின் கடின உழைப்பு தான் என்றாலும் இந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மகள் ஜனனி தான் என்பார் பெருமையாக. அத்தனையும் அமைத்துத் தருவதற்கும் வங்கிக்கடன் பெறுவதற்கும் அவள் அலைந்த நாட்கள் ஏராளம்! அவருக்கு எப்போதும் நினைவில் உண்டு! 
இருள் மங்கும் மாலை நேரம் வீடு திரும்பிய ஜனனி, கடைக்குச் சென்று பின் பொருட்களை வாங்கிக் கொண்டு, கணக்கு முடித்து அத்தை வீட்டிற்குச் சென்றாள். வாசலில் வண்டியை நிறுத்தியவள், பெரிய பெரிய பைகள் இரண்டையும் தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, எதிரே வந்த சிவநாதன், “ஏம்மா என்னைக் கூப்பிட்டு இருக்க வேண்டிய தானே?” என்றபடி பையை வாங்க வர, மறுத்தவள் அவளே சென்று அடுப்பறையில் வைத்தாள். 
“இருக்கட்டும் மாமா, ரொம்ப வெய்ட்! உங்க பெஞ்சில் பாடி பார்ட் பார்ட்டா கழண்டு விழுத்துடாதா?” என  கேலியாகக் கேட்க, கலகலவென சிரித்தவர், “ஏங்க, அந்த கிரெண்டர் தான் எனக்கும் சேர்த்து அதுவே முழுங்கிக்கிடுதே.. என்னையும் கொஞ்சம் கவனித்தால் தானே..?” என்றார் பரிதாபமாக. 
இப்போது அவளும் உடன் சிரிக்க, “என்ன மாமா தைரியமா சவுண்ட் வருது! அத்தை வீட்டில் இல்லையோ?” என்றாள். 
“ஆமாம்மா உங்க வீட்டுக்குத் தான் போயிருக்காள். நீ உக்காரு, நான் காபி வைத்து எடுத்து வருகிறேன்” என்க, “இருக்கட்டும் மாமா, நானும் வீட்டுக்குத் தானே போறேன். அங்கேயே குடித்துக்கொள்கிறேன்” என்றாள். 
“ஒரே நிமிடம் தான்! எங்களுக்கு வைப்பதில் உனக்கும் ஒரு கப். அவ்வளவு தானே?” என்றவர் அடுப்பறை நோக்கிச் சென்றிருந்தார். 
அத்தனையும் அறிந்தவளுக்கு அறியாத ஒரு விஷயம் சமையல் மட்டும் தான்! பழகிக்கொள்வதற்கான நேரம் வாய்க்கப்பெறவில்லை ஆகையால் தான். விரைவில் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மனதில் நினைத்துக் கொண்டாள். என்ன தான் தந்தைக்கு இளவரசியாக இருந்தாலும் தெரியாது என்பதில் பெருமை என்ன? தெரியும் என்பது தானே திறமை! 
நினைத்த நொடியே சமையலறைக்குள் சென்றவள், “நானே செய்கிறேனே மாமா..” என்றாள் செல்ல வேண்டுதலாக. 
சரி என்றவர் ஒவ்வொன்றையும் அருகில் நின்று கற்றுத் தர, சில நிமிடங்களிலே ஆவி பறக்கும் காபியை மூன்று கோப்பைகளில் ஊற்றினாள். அதில் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு ஒரு மிடுரு குடித்தவர், வார்த்தையல்லாது அருமை என கைகளால் சைகை செய்தார். எதையோ பெரிதாய் சாதித்துவிட்ட சந்தோஷம் ஜனனியின் முகத்தில் மின்னியது! 
“இனி தினமும் மாலை நானே வந்து வைத்துத் தருகிறேன் மாமா..” என்றவள் உல்லாசமாக உரைக்க, “அது என் பாக்கியம்மா..” என்றவர் சிரிப்போடு வெளியேறினார். 
“கார்த்திக்கும் ஒன்றுக் கொடுத்திடும்மா..” எனக் குரல் கொடுத்தவர், நீண்ட மூச்சோடு சோபாவில் அமர்ந்தார். 
மகள் இல்லாத ஏக்கம் அவருக்கு. திவ்யா இருந்தவரை இவ்வாறு தான் கேட்டுக் கேட்டு செய்வாள், என்ன செய்தாலும் ருசி பார்க்கத் தந்தையிடம் தான் வந்து நிற்பாள். அது போல் நேரத்திற்குத் தேவையறிந்து கவனித்துக்கொள்வாள். 
மற்றொரு கோப்பையோடு  கார்த்திக்கின் அறைக்குள் சென்றாள் ஜனனி.  சரியாக அப்போது தான் இடையில் கட்டிய துண்டோடு குளியலறையிலிருந்து வெளியே வந்தவன், ஒரு நொடி திடுக்கிட்டுப் போனான்.  
“ஆளு வளர்ந்த அளவிற்கு அறிவு வளர்ந்திருக்கா எருமை? கதவை தட்டிட்டு வரணும்னு மேனர்ஸ் தெரியாதா?” 
“க்கூம், ஏதோ பாவமேன்னு உனக்குப் போய் காபி கொண்டு வந்தேன் பார், எனக்கு இது தேவை தான்! அப்படியே அமூல் பேபியை அள்ளிக் கொஞ்ச வந்த மாதிரி பேசாதே” 
அவளோ முகத்தைச் சிலுப்பிக் கொண்டு டங்கென மேசையில் டம்ளரை வைக்க, அதற்குள் திரும்பி நின்று, உடை மாற்றியிருந்தவன் அருகே வந்தான். 
“இனியொரு தடவை அமூல் பேபின்னு சொன்ன பல்லைத் தட்டிடுவேன்” 
“ஹான், நீ ஒரு தடவை எருமைன்னு சொல்லிப்பாரு, மூச்சு முகரையை பேர்த்திடுவேன்” 
பதிலுக்குப் பதிலாக வீர வசனம் பேசியவள் களத்தில் நில்லாது அறையிலிருந்து ஓடியிருந்தாள். அதில் சிரித்துக் கொண்டவன், எப்படி இருந்தாலும் வருவாள் தானே அப்போது கவனித்துக்கொள்கிறேன் என நினைத்தான். 
எப்போதும் அவள் மட்டுமே அவனைச் சீண்டிக் கொண்டிருப்பாள். அவனிடம் பிடிபட்டாள் என்றால் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைப்பான்.
இங்கு அவள் வீட்டில் ரோகிணி மாடியில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியபடி தோழியோடு அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அதே நேரம் வரவேற்பறையில், அமர்ந்திருந்த திலகவதி, “என்ன விஷயம் குமாரு? போன் போட்டு அழைத்தாய்?” என்றார். 
அவருக்கான தேநீரை பரிமாறியபடி வேணி அருகே அமர, “என் மாமனார் வழி  சொந்தத்திலிருந்து ஒரு ஜாதகம் வந்திருக்குக்கா. நல்ல இடம், ஜனனிக்கு பார்க்கலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்லுற?” என்றார் எதிரே இருந்த முத்துக்குமார்.
இதை எதிர்பாராத திலகவதி, “என்னடா திடீர்னு..?” என்க, “திவ்யா வயசு தானே ஜனனிக்கும். இது தானே அக்கா கல்யாண வயசு! பெரிய அக்காவுக்கும் போன் செய்து பேசிட்டேன். இனி உன் முடிவு தான்!” என்றார் தன்மையாக. 
இருவர் முகத்தையும் ஒரு முறைப் பார்த்தவர், “என் மகன் கார்த்திக் இருக்கும் போது நீ ஜனனிக்கு வெளியே வரன் பார்க்கிறத்தில எனக்குக் கொஞ்சமும் உடன் பாடில்லை” என்றார் நேரடியாக. 
அக்காளின் மனம் அறிந்தவர், “கார்த்திக்கு இப்போது என்ன வயசாகுது? நீ இப்போவே அவனுக்குக் கல்யாணம் பண்ற ஐடியால இருக்கேங்கிறது எனக்கு தெரியாதுக்கா..” என்றார் தன் பக்க நியமாக. 
“அதான் மகளுக்குக் கல்யாணம் முடிச்சிட்டேனே, அவனும் வேலையில இருக்கான் இன்னும் என்ன?” 
“சரிக்கா, கார்த்திக் நான் தூக்கி வளர்த்த பையன் அவனுக்கு இல்லைன்னு சொல்ல மாட்டேன். எல்லாம் என் மகள் விருப்பம் தான், அவளிடம் ஒரு வார்த்தை கேட்கிறேன்”  என்க, அவரும் அவர் வீட்டில் பேசுவதாகச் சொல்லிச் சென்றார். 
அதே நேரம் கீழே இறங்கி வந்த ரோகிணி, “என்னப்பா? அத்தை இந்த நேரம் வந்திட்டுப் போறாங்க?” என்றாள். 
ஆனால் பதிலோ வேணியிடமிருந்து, “ஜனனிக்கு மாப்பிள்ளை வந்திருப்பதாகச் சொல்லவும், உங்க அத்தை கார்த்திக்கு கேட்டுட்டுப் போறாங்க” என வந்தது. 
இதை எதிர்பாராது அதிர்ந்த ரோகிணிக்கு நெஞ்சில் சுருக்கென்ற வலி! 
“கார்த்திக்…” அவள் உதடுகள் மென்மையாக அசைவிட்டுக் கொள்ள, தொண்டையில் ஏதோ அடைக்கும் உணர்வு, விழி கலங்க, எதிரே பிம்பம் மறைந்தது!

Advertisement