Advertisement

அத்தியாயம் 13 
அறைக்குள் ஜனனி இரவு உடைக்கு மாற்றிக் கொண்டிருக்க, கதவு திறக்கும் ஓசையும் உடன் உள்ளே வருபவரின் காலடிச் சத்தமும் கேட்டது. ரோகிணி என்றெண்ணியே அவள் அப்படியே வெளியே வர, கட்டிலில் ஒய்யாரமாக கார்த்திக் தான் அமர்ந்திருந்தான். 
சுகந்தியின் பிரச்சனையும் அறிவுரையையும் கேட்டதில் அவன் மனம் மாறியிருந்தது. குடும்ப வாழ்வில் மனைவியின் முக்கியத்துவமும் கடைமையும் என்ன என்ற புரிதல் வந்திருந்தது. தன் பிடிவாதம் விடுத்து கொஞ்சம் பக்குவமாக யோசித்திருந்தான். 
நாமென்று ஆனதும், நமக்கான குடும்பம் என வடிவமைப்பதிலும் ஆனா ஆரம்பச் சிக்கல்! பெரும்பாலும் புதிதாக மணமான தம்பதியினர் காணுவது தான், அறிமுகமாகதவர்கள் எனில் சற்று தாமதமாக வரும் சச்சரவு தங்களுக்கு ஆரம்பத்திலே என்ற புரிதல் ஜனனியிடமும்! 
“நீ என்ன இங்க..?” என ஆரம்பித்தவள் பாதியிலே வார்த்தையை விட, “அதை நான் கேட்கணும், நீ ஏன் வீட்டிற்கு வராமல் இங்கே இருக்கிறாய்?” என்றவன் எழுந்து வந்தான். 
அவன் கேட்கும் தொனியிலே அழுத்தம் கூடியிருக்க, “என் மீது கோபமா..?” என்றவள் வினவ, “இல்லை கொஞ்ச வந்தேன்..” என்றான் நக்கலாக. 
இவ்வளவு நேரமாக அனைவரின் முன் நன்றாகத் தானே பேசினான், அவள் யோசனையில் இருக்க, “நான் உன்னைச் சந்தோஷமா வைத்துக்கொள்ளவில்லைன்னு உன் தங்கச்சி சொன்னதை உண்மைன்னு நிரூபிக்கத் தான் நீ இங்க இருக்கீயா?” என்றான் பெரும் குறையாக. 
அவள் ஒன்றும் அப்படி நினைக்கவில்லையே! இல்லாததை எடுத்து வைத்துப் பேச, ஜனனிக்குத் தாங்கவில்லை. 
“நீ தானே என்னை இங்கு அழைத்து வைத்தாய்? நீ தானே என்னை விட்டுவிட்டும் சென்றாய்?” என்றாள் நினைவுபடுத்தும் விதமாக. 
மூக்கு விடைக்க, “நீ மட்டும் சின்ன பையன் கிட்ட என்னை தவறான உதாரணமாகச் சொல்லலாமா?” என்றான். 
“என் தவறு தான், நீ மட்டும் அன்று ரோகி, தர்ஷி போலே தான் ஜனனியும்னு சொல்லலாமா? நானும் அவங்களும் ஒன்றா?” என்றவள் சிலுப்ப, யோசனையோடு முகம் சுருக்கினான். 
எதார்த்தமான வார்த்தை அவளைப் பாதித்திருக்குதே! இப்போது தான் உணர்ந்தான்! 
“அது ஒன்னும் மனசுல இருந்து சொல்லலை, எதார்த்தமா, பழக்க தோஷத்துல வாய் தவறுதலா வைத்துவிட்டது..” என்றவன் இறங்கி சமாதானம் சொல்ல, “அது போல தான் நான் சொல்லியதும்..” என்றாள் மிடுக்காக. 
சரிக்கு சரி! என நினைத்துக் கொண்டான் கார்த்திக். 
அது வரைக்கும் முறைத்திருந்தவனின் பார்வை தளர, “நான் ஏதோ கோபத்தில் சென்றேன், அதற்காக உன்னை வர வேண்டாம் என்றேனா?” என்க, அவன் முகம் பாராது, “அழைத்தால் இன்றி வரும் எண்ணம் எனக்கில்லை..” என்றவள் நில்லாது சென்றாள். 
திலகவதி அவ்வளவு பேசிய பின் தன்மானம் விடுத்து எப்படிச் செல்ல! 
தன் வீட்டிலிருந்த போதெல்லாம் இப்படி எடுத்து எறிந்து பேசியதில்லையே, அவள் வீட்டில் மட்டும் சலுகைகள் கொண்டாடுகிறாளோ! அவன் நினைக்க, அவளோ பெட்டியில் தன் உடைகளை அடுக்கத் துவங்கியிருந்தாள். சென்னை கிளம்புகிறாள். 
“ஜனனி..” என்ற அழைப்போடு அவள் முன் வந்து நிற்க, கலங்கிய விழியோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
காலையிலிருந்து அவளைக் காண ஏங்கி, அலைந்து திரிந்து வந்தால், அவளோ தன்னை காண்பதே பாவம் என்பது போல் பாராமுகம் காட்டி, அழுது கரைகிறாளே என நினைக்க, மனதின் கொதிப்புக் கூடியது. 
அவள் செயலை கவனிக்க, தன்னை விட்டுச் செல்லவும் அவள் தயார் என காட்டுவதாகத் தோன்றியது. கொதிப்போடு கோபமும் கூடியது. 
அவள் கலங்கிய விழி நெஞ்சை அறுக்க, “ஏன் என்னை இப்படிப் படுத்துற..?” பொறுக்கமாட்டாமல் கத்தினான். 
உடல் நடுநடுங்க அதிர்ந்தவள், “நான் என்ன செய்தேன்..?” என்றாள் முனங்கலாக. 
“நீ தான்! எல்லாம் உன் செயல் தான் என்னைக் கீழிறக்கிக் காட்டுது! உன்னை நான் சந்தோஷமா வைத்துக் கொள்ளவில்லையா? அப்படியே இருந்தாலும் அதை என்னிடம் தானே சொல்ல வேண்டும், ஏன் உன் தங்கையிடம் சொன்னாய்?” 
“என் செயல் உன்னை கீழிறக்கிக் காட்டுதா? இல்லை நீயாக கற்பனை செய்து கொண்டாயா? நீயே என்னோடு உன்னை ஒப்பிட்டுத் தாழ்வாக நினைத்துக்கொள்கிறாய்! உன்னிடம் தான் தாழ்வுமனப்பான்மை! அதனால் தான் என்னிடம் ஈகோ பார்க்கிறாய்..!” என்றவள் வெடித்து அழுதாள். 
உண்மை தானே, அதுவும் முகத்தில் அடித்தது போன்று உரைத்த பின் எங்கே மறுப்பது? அவன் வார்த்தையற்று நின்றான். 
“எவ்வளவு ஆசையாசையாக நாம் கல்யாணத்திற்கு முன்பே உனக்காக வாங்கி வைத்த பரிசு தெரியுமா? அதை வாங்கிக் கொள்வதற்குக் கூட என்னிடம் கெளரவம் பார்க்கிறாய்? என் பரிசை மறுத்தது என் அன்பை மறுப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது..” என்றவள் வழியும் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு மீண்டும் தன் வேலையில் கவனமானாள். 
தன் சிறு நிராகரிப்பு அவள் மனதில் இவ்வளவு பெரிய காயத்தை தோற்றுவித்திருக்கும் என்பதே இப்போது தான் அவனுக்குப் புரிந்தது. மனமோ அவளை வருந்த வைக்க வேண்டுமென்றே தானே அவ்வாறு செய்தாய் என இடித்துரைத்தது!
“சரி, இப்போது கொடு வாங்கிக் கொள்கிறேன்..” என்றவன் கை நீட்ட, “அதெல்லாம் தர முடியாது போ..” எனக் கரத்தைத் தட்டிவிட்டவள் வேலையைத் தொடர்ந்தாள். 
அவள் செயலைத் தடுத்தவன், “எங்க போற என்னை விட்டு?” என்க, “சென்னைக்கு, ட்ரைனிங்.. என் விருப்பம் போல போறேன்..” என்றவள் அவ்வளவு தான் விவாதங்கள் முடிந்தது என்பது போல் படுக்க ஆயத்தமாகினாள். 
இதிலும் அவளைக் காயப்படுத்தியிருக்கிறேனா? ஆயாசமாக உணர்ந்தான்.
அவளோ பிடிகொடுத்தே பேசாது நழுவ, பற்களைக் கடுத்தபடி கடுப்பில் பெருமூச்சு விட்டவன், அவளருகே சென்று சரிந்தான். உண்மையில் கோபமாக வந்தவன் தான் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
ஜனனிக்கு சத்தமிட்டு, சண்டையிடவோ பிறர் வாடும்படிப் பேசவோ வராது. தன்னையும் மீறி தன் வருத்தத்தை வெளிப்படுத்தினாளே இன்றி அவனைக் குறை கூற வேண்டுமென்று எதுவும் சொல்லவில்லை. 
உடும்புப்பிடியாக அவள் இடை வளைத்து இறுக்கியவன், “அதெல்லாம் எங்கும் போகக் கூடாது..” என்றான் மெல்லிய குரலில். 
அவனை விலக்காது, “உன் விருப்பத்துக்கு விட்டுட்டு போற உரிமை உனக்கு மட்டும் தான் இருக்கா?” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி. 
அவன் சென்றதிலிருந்து வெகுவாக ஏங்கிப்போயிருந்தாள். அதிலும் உறவே அவ்வளவு தானோ என்னும் அளவிற்குப் பயத்திலிருந்தாள். 
சரி தான், இதிலும் தன் தவறா! மீண்டும் நொந்தவன், “இப்போது என்ன? நான் வந்ததே தவறுன்னு சொல்லுறீயா?” என்றான் வீம்பாக. 
“இல்லை, ஒரு சின்ன விஷயம். அதுவும் மனசுல இருந்துக் கூட சொல்லலை, வேறும் வார்த்தைக்குத் தான் கார்த்திக் மாதிரின்னு சொல்லிட்டேன். அதுக்கும் அப்போவே சாரியும் கேட்குறேன். அதை ஏற்காமல் விட்டுட்டு நீ ஏன் அதை இவ்வளவு பெரிய பிரச்சனை ஆக்கின? அப்படியென்ன உனக்கு என்னோட விரோதம்..?”
“ஈகோ தான், நீ என்னை விட எல்லா விதத்திலும் பெஸ்ட்டா, பெர்பெக்ட்டா இருக்கிறதை என்னால ஏற்றுக்க முடியலை..” என்றவன் சொல்லும் போதே அவனிடமிருந்து விலக,  முயன்றாள். 
அவளுக்கு இப்படியும் இருக்குமோ என்ற சந்தேகம் தான், அது உண்மை என்றதும் தான் சுருக்கென்று குத்தியது. 
அதை உணர்ந்தவன் துளியும் விலக விடாது, மீண்டும் இழுத்து அணைத்து, “சராசரி புதுமணத்தம்பதிகளுக்குள்ள இருக்கும் ஈகோ பிரச்சனை தான்! சட்டென மாத்திக்க முடியலை, கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்கிறேன்..” என்றான் உள்ளார்ந்த குரலில். 
அவளிடம் பெரும் மௌனம் மட்டுமே, பதில் இல்லை. அவள் முகம் நிமிர்த்தி விழி பார்த்தவன், “நான் உன்னைச் சந்தோஷமா வைத்துக்கொள்ளவில்லையா ஜனனி..?” என்றான் விடையறியும் ஏக்கத்தில். 
கார்த்திக்கை அவளுக்கு மிகவும் பிடிக்கும்! அவனோடு இருந்த சுகப்பொழுதுகளை எல்லாம் ரசித்திருக்கிறாள். நினைவுகளில் பொக்கிஷமாகச் சேமித்திருக்கிறாள். இப்போதும் அவன் தந்த ஏமாற்றாங்களைத் தாங்கி, அவனுக்காக ஏங்கி இருந்தாள் தானே! பின் இல்லை என சொல்லிவிட இயலாதே!
விழி தாழ்த்தியவள், “இல்லையென்றால் என்ன செய்வாய்?” என்க, நொடியும் தாமதிக்காது, “இனி சந்தோஷமாக வைத்துக் கொள்ள முயல்வேன்..” என்றவன் இதழ் ஈரம் பதிய, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.   
அதில் உருகித்தான் போனாள். மேலும் நெருங்கி அணைத்து, சின்ன சின்ன முத்தத்தில் முன்னேறி, மெல்லிதாய் மெய் தீண்டி, இன்பமாய் இழைய, அவளும் சுகமாய் அணைத்தாள். 
தன்னையும், தன்னிலை மாறாது ஏற்றவள் என்றெண்ணியே பூரித்தான். மழைத் துளிகள் தாங்கிய செழிப்பான நிலம் போலே மனம் நிறைய, குழைந்திருந்தான். 
அவனின் மென்மையான தலை கோதலில், விழி மூடி நெஞ்சில் சுகமாக இளைப்பாறினாள். அந்த நெருக்கத்தில், “இத்தனை நாளிலில்லாது இப்போது தான் இந்த நினைவு வந்ததோ?” என்றவள் குறைபட, “உண்மையை சொன்னால் வார்த்தைக்கு வார்த்தை பேசி மனசை காயப்படுத்தினேனே தவிர, உன்னைக் காயப்படுத்த நினைக்கலை. என்னை மீறி காயப்படுத்தக் கூடாதுன்னு கவனமா இருந்தேன். உன்னை விட எல்லாத்துலையும் மேல இருக்க நினைச்சேனே தவிர, இதுல இல்லை. தாம்பாத்தையத்துல இருவரும் சமம்..” என்றான்.
உருகிக் கரைந்தவள், “எங்கே நீ வரவே மாட்டியோன்னு பயந்திருந்தேன்..” என்றாள் தன்னிலை மறந்து! 
“அட லூசே! எங்க போயிருவேன் உன்னை விட்டு? ஒருநாள்ல முடியுறதில்லையே நம்ம உறவு..!” என்றபடி இதமாய் அணைத்தான். நிலைத்த உறவிது என்றெண்ணம் அவன் மனதில் ஆழமாக எப்போதுமுண்டு! 
“எங்கிட்ட எவ்வளவு மனஸ்தாபம் இருந்தாலும், நமக்குள்ள எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் நம்ம உறவு எப்பவும் மாறாது ஜனனி..” என்க, இந்த அளவிற்கு அவன் உறுதியாக இருப்பதிலே, அவள் நிறைவும் நம்பிக்கையும் கொண்டாள். 
முகம் பிரகாஷிக்க, தேன்குரலில், “சரி, நான் உன்னை சந்தோஷமா வைத்துள்ளேனா கார்த்திக்?” என்றாள், விடையறியும் அவளோடு! 
“ம்ம்..! என்னை விட எல்லாத்துலையும் பெஸ்ட்! இதுலையும் தான்! கூடவே கொஞ்சம்.. கஞ்சமா.. ஒரு மில்லி லிட்டர் போதையும் தார, தெளிய முடியலை..!” என கிறக்கமாக உரைத்தவன் விரல்களையும் அளவிட்டுக் காட்டினான். 
முகம் சிவந்தவள் சட்டென அவன் கைகளை தட்டிவிட்டு சாய்ந்து கொண்டாள்.  
நினைவு வர, “ரோகிணியின் மீதும் கோபமில்லையே..?” என்றவள் அடுத்ததாகக் கேட்க, “ம்கூம், இல்லை.. சிறு பிள்ளை தானே.. விடு, அதுவும் போக, இரு தினங்கள் முன் என்னை நேரில் சந்தித்து மன்னிப்பும் கேட்டுவிட்டாள். அதுவும் அவள் குற்றச்சாட்டிற்காக அல்லவாம், நம் பிரச்சனைக்கு இடையில் வந்ததற்காகவும், பொதுவில் பேசியதற்காகவும் தானாம். எவ்வளவு விவரம் பார்..” என்றான். 
தான் வேண்டாமென்று சொல்லிய பிறகும் தனக்காகத் தான் சந்தித்துப் பேசியிருப்பாள் எனப் புரிந்தது ஜனனிக்கு. தன் மகிழ்வாக உள்ளதை அவளுக்குப் புரியும்படி உணர்த்திட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டாள். 
“என் மேல உள்ள பாசத்தில் அம்மாவும் பெரியம்மாவும் ஏதாவது சொல்லியிருப்பாங்க, அது போலத் தான் ரோகியும் உன் மேல உள்ள பாசத்தில் பேசிவிட்டாள், யார் மீதும் தவறில்லை.. விட்டுவிடு..” என்க, தலையசைத்தாள். 
கார்த்திக் தன்னை ஸ்பெஷலாக கவனிப்பதில்லை என்ற குறையும் இப்போது அவளுக்கு நீங்கியிருந்தது. இலகுவான மன நிம்மதியிலும் அவன் கையணைப்பின் கதகதப்பிலும் கண்ணயர்ந்தாள். 
மறுநாள் பிள்ளைகள் அனைவரையும் ஹோட்டல் அழைத்துச் சென்று, ஜனனிக்கு வேலைக்கிடைத்தற்கு விழா வைத்துக் கொண்டாடிவிட்டான். அவன் அகமகிழக் கொண்டாடியதில் அவளுக்கும் அளவில்லா மகிழ்ச்சி!
நம் வெற்றியோ சாதனையோ நம் விருப்பத்திற்குரியவர்கள் கொண்டாடுகையில் சந்தோஷம் இரட்டிப்பாகும்! 
“வாழ்த்துகள் ஜனனி..” என நிரஞ்சன் தெரிவிக்க, “நீ ரொம்பவும் திறமைசாலி ஜனனி, கோச்சிங் கிளாஸ் போகாம, வேலைக்குப் போய்கிட்டே மெட்டிரியல்ஸ் வாங்கிப் படித்து, பரீட்சைகள் எழுதி, அதன் பின் நேர்முகத்தேர்வு என அத்தனையும் கடந்து வந்து விட்டாய்..” என வியந்தாள் தர்ஷினி. 
சின்ன சிரிப்போடு ஏற்றவள், “அது மட்டுமில்லை.. எல்லாம் கார்த்திக் என் வாழ்கையில வந்த அதிர்ஷ்டம் தான்..” என்றாள் அவனையும் விட்டுக் கொடுக்காது. 
“ஹோஹோ..” என்ற கூவலோடு அவர்கள் ஆர்ப்பரிக்க, தழும்பாத புன்னைகையோடு கார்த்திக் பார்த்திருந்தான். 
அவனுக்குத் தெரியும், தான் கீழாக நினைக்கக் கூடாதென, அவள் வெற்றியில் தனக்கும் பங்கீடு அளிக்கிறாள் என! ஆனால் உண்மை, முழுவதும் அவள் கடின உழைப்பும் திறமையும் தான் என்ற புரிதல் இருந்தது. 
ஒருவேளை அவன் மனைவியான பின் அவன் துணையோடு பயிற்சி வகுப்புகள் சென்று படித்து வேலைப் பெற்றிருந்தால் இன்னும் மகிழ்வாய் கொண்டாடி இருப்பாய் தானே? அவ்வாறு நினைத்துக் கொள் எனத் துவண்ட மனதைத் தேற்றியிருந்தான். 
ஆகையாலே தன்னைச் சாராத அவள் வெற்றியாயினும் அவள் திறமைகளையும் உழைப்பையும் கொண்டாட வேண்டும் ஊக்கமளிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்திருந்தது! அதனாலே அவன் ஈகோ மட்டுபட்டிருந்தது. முழுதும் மாறினான் என்றில்ல, மாற முயற்சித்தான்! 
அன்று காலையிலே சிவகாமியும் திலகவதியும் அலைபேசியில் சில மணி நேரம் அவளிடம் பேசினர், ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தனர். என்னவாகினும் தங்கள் மருமகள் என்ற பெருமை இருவருக்குமிருந்தது. அதுபோக, பிரச்சனை ரோகிணியோடு இருக்க, சிவநாதன் எடுத்துக் கூறியதில் அவர்கள் பக்கத் தவறும் புரிந்திருந்தது. 
இரவு சென்னை செல்லும் பேருந்தில் ஜனனியை அனுப்பி வைக்க, அவனும் உடன் கிளம்பினான். இது வரையிலும் யாரையும் எதிர்பார்த்து அவளிருந்ததில்லை, ஆனால் இப்போது அவனாகச் செய்கையில் இதமாக உணர்ந்தாள்.
பேருந்து கிளம்ப நேரமிருக்க, காரில் அமர்ந்திருந்தவள் மீண்டும் ஒரு முறை தன் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தாள். 
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தவன், மெல்லிய விசில் சத்தம் எழுப்பியவாறு, “ஓய்..! இத்தனைக்குப் பிறகும் என்னை விட்டு போறல..?” என்றான் சீண்டலாக. 
இத்தனை நாட்களாக படுத்தினாயே அத்தனைக்கும் சில நாட்களாவது அனுபவிக்கட்டுமே என்ற எண்ணம் தான்! 
அனுப்பி வைக்கவும் வந்துவிட்டு கேள்வியைப் பார்! மனதில் நினைத்தவள், நிமிராமலே, “எங்க நான் சந்தோஷமா இருப்பேனோ அங்க போறேன்..” என்றாள்.
அவள் வார்த்தை அவனைத் தான் சீண்டியிருந்தது, சட்டென அவள் கரம் பற்றி இழுத்து மார்போடு இறுக அணைத்தான். கிறக்கமான கீழ் குரலில், “என் நெஞ்சில நிறைச்சி இருக்க, என்னை ஆளுற ஜனனி! நீயும் என் நெஞ்சுல தான் சந்தோஷமா இருப்பேன்னு சொல்லு.. யார் கேட்டாலும் சொல்லு, இப்போ சொல்லு..” என்றான் பிடிவாதமாக. 
இஷ்டமோ கஷ்டமோ உரிமை கொண்டாடு, விலகி ஓடாதே என அறிவுறுத்தினான். 
ஜனனிக்கு இதழோரம் சிரிப்புத் தான். “இருந்தாலும் உனக்கு இவ்வளவு.. இவ்வளவு ஆசை ஆகாது! நானா சொல்லணும், நீயா கேட்கக் கூடாது..” என்ற கேலியோடு விலகியவள் மீண்டும் தன் வேலைகளை தொடர்ந்தாள். 
இப்போதும் அவன் முகம் பாராமலே, “போதும் என் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்! இப்போ சந்தோஷமா இருக்கும். அப்புறம் ஈகோ பார்ப்ப, அப்புறம் குறை கண்டுபிடிப்ப, குற்றம் சொல்லுவ, என்னை அழ வைப்ப, ஏங்க வைப்ப, கடைசியில அதுக்கும் காரணம் நான் தான்னு சொல்லுவ, இதெல்லாம் சரிப்படாது. நான் சென்னை போறேன், அங்க தான் என் ப்ரண்ட்ஸ் இருக்காங்க, அங்க தான் நானும் சந்தோஷமா இருப்பேன்..” என்றாள். 
அந்த பைக்குள் என்ன தான் குடைவாளோ என்ற கடுப்பில் பார்த்திருந்தவனை அவள் வார்த்தை மேலும் ஏற்றி விட்டிருந்தது. சரி தான் போ… என சொல்லத் தான் வார்த்தை வந்தது, ஆனாலும் அவள் எதிர்பார்ப்பை அந்த நொடி சரியாகக் கண்டுகொண்டான். 
“நீ போ.. ஆனாலும் சந்தோஷமா இருக்க முடியாது. சீக்கிரமே வேலையை மாற்றி வாங்கிக்கொண்டு அங்கே வாரேன் பார்..!” என்றான் சவாலாக. 
அவளோ உள்ளம் துள்ள, சட்டென நிமிர்ந்தவள், “நிஜமாவா..?” என்றாள் ஆசை வழியும் குரலில். 
இருக்கையில் தளர்வாய் தலை சாய்த்து, சரிந்து அமர்ந்திருந்தவன், வார்த்தையின்றி தலையை மட்டும் அசைத்தான். இனி சில வருடங்களுக்கு, நாம் மட்டும் தான், நம் வாழ்க்கையை வாழ்வோம்! என்ற எண்ணம் அவனிடம். 
சட்டென தாவி அணைத்தவள், சந்தோஷ மிகுதியில் முகமெங்கும் முத்தமிட்டு, “எனக்காகவா..?” என்றாள் பேராசையுடன்! 
சட்டென அவள் முகம் மலர, நொடிக்கு நொடி உணர்வுகளை வர்ணமாய் பூசிக்காட்டும் அந்த முகம் அவனை மயக்கியது. 
ஆனாலும் சீண்டும் நோக்கிலே, “இல்லை, ரோகி, தர்ஷிக்காக..” என்றது தான் தாமதம், வெளுக்கத் தொடங்கியிருந்தாள். கன்னங்கள், தோள்களிலும் அடித்தவள், அத்தனை வருடமும் அவனிடம் வாங்கியதற்குச் சேர்த்து உச்சந்தலையிலும் நங் நங்கென்று கொட்டினாள்.
சுகமாக தாங்கிய போதும், வலியோடு அவள் கரம் பற்றியவன், “ரோகி, தர்ஷி இம்சை தாங்க முடியாமன்னு சொல்ல வந்தேன்..” என்றதும் சிணுங்கலோடு அவனிடமிருந்து விலக முயன்றவளை மீண்டுமாய் நெஞ்சம் நிறைய அணைத்துக் கொண்டான்.  
*சுபம்*

Advertisement